செவ்வாய், 20 டிசம்பர், 2016

அகக்கண் இசைஞர்கள் _ கவிதை

விரல்களால்
நாட்டியம் நிகழ்த்தித்
துளைகளை
மூடி எடுக்கையில்,
பூப்பது போல்  தவழ்ந்து
எழும்புகிற ஒலிகள்
நடை பாதை ஓரத்திலிருந்து
ஒளியைச் சுமந்து திரிகின்றன
இதயங்களைத் தேடி.

காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன.

விழிகளில்
ஒளி இல்லை என்றாலும்,
அகமே விழியாய்
கால் தடங்களே
ஒளியாய் வாய்த்த
அகக் கண்ணர்கள்
இசையாய்க்
காற்றில் கலந்து கிடக்கிறார்கள்.

பகலானாலும்
இரவானாலும்
விழிக் குகைக்குள்
கருமை தான் என்றாலும்,
வெள்ளை பூத்துச்
சிரித்துக் கிடக்கின்றன
மனங்கள்
எப்போதுமே.

விரித்திருக்கும் துணியில்
விழுந்த காசுகள்
சிதறிய கோலங்களாய்க் கிடந்ததில் தெரிந்தன
மனித முகங்கள்.

குழல் தடவிய விரல்கள்
காசு முகங்களைத்
தடவுகையில் தெரிந்தன
மனிதர்களின் நிறங்கள்.

இசை மீட்டலுக்கான
கூலி தரும் மனிதர்கள்
இருக்கவே செய்கிறார்கள் என
விரல்கள் சொல்லச் சொல்ல
அகக் கண்ணர்களின்
முகங்கள்
சிரித்துக் கொண்டன.

வேர் இழந்த குழல்கள்
வாழ்வைத் தந்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக