வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சொல் நிலத்தில் நிலத்தின் சொற்கள் :- தமிழ்ப் பரிதி


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட ஒரு சிறு கவிதை நூல் தோழர் ஏர்மகாராசனுடைய சொல்நிலம்.
நிலத்தின் வலியும் பெத்த ஆத்தாளின் வலியும் ஒன்றெனச் சொல்லி பல தலைப்புகளில் நம் வேர்களைத் தேடும் கவிதைகள் இவருடையது.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."

ஏர்மகாரசனின் சொல் நிலம் கவிதை நூலில் நெஞ்சைக் கவ்விக் கொண்ட ஒரு கவிதை.
கருத்தமேனித் தமிழன் தன் நிறம் வெளுத்துப் போகட்டும் கொஞ்சம் வெள்ளையாவோம் என்றே விரும்புகிறான். நிறம் மட்டுமல்ல நிலமும் போய்க்கொண்டிருக்கிறது அவனைவிட்டு.

செல்லாக் காசுகளின் ஒப்பாரி என்றொரு கவிதை மக்களின் வாழ்வை வழமையை அழகாகக் சொல்லிவிட்டு நச்சென்று ஆள்வோரின் தலையில் குட்டிவிட்டுப் போகுமொரு கவிதை இது.

"சிறுவாட்டுக் காசும்
சுருக்குப்பைக் காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடித்துப் போட்ட காசும்
ஆத்தா அப்பன் நினைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக்கொடுக்க
அடுக்குப் பானைக்குள்ள
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாயல போட
வச்சிருந்த காசும்
செல்லாக் காசாப் போச்சே
சொல்லாக் காசாப் போச்சே.."

நெடுநகர்கள் இன்று கெடு நகர்களாய் மாறிவரும் நிலையில் யாரையும் யாரும் அறியாமல் யாருக்கும் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் எல்லாரும் நண்பர்கள்தாம் மின்னணுத்திரையில் மட்டுமென்று வாழ்கின்ற இச்சூழலில்...
இக்கெடு நகர்கள் விலக்கும் விளிம்புநிலை  மக்களை பற்றிப்பேசுமொரு கவிதை...

"தூசுகள் மண்டிய
நகரங்களில்
அப்பிக் கிடக்கின்றன
வன்மங்கள்.

அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
முகமூடிகள் போர்த்திய
உடல்கள்.

தெருக்களின் மூலையில்
ஒடுங்கிக்கின்றன
தோல் வற்றிய முகங்கள்.

கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ் வெளியாய்
சுருங்கிப் போனது
உலகம்.

எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்."

கவிதைகள் ஆழ உழுத அரசியல் கவிதைகளாய் மண்ணின் விடுதலை மக்களின் விடுதலையைப் பேசி

"வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப்பறி"

என்கிறது சொல் நிலத்தின் கவிதைகள்...

வாழ்த்துகள் தோழர்  ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக