ஓர் அருமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது தோழர் ஏர் மகாராசன் அவர்களின் 'பண்பாட்டு அழகியலும் அரசியலும்' என்கிற நூல். அதுவும் விவசாயிகளின் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இத்தருணத்தில் இந்நூலை வாசிக்க வாசிக்கப் பிரமிப்பாக இருந்தது.
மூன்று கட்டுரைகள் தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னிட்டு எழுதியவை. ஏன் சல்லிக்கட்டு வேண்டும்...? என்பதற்கான விரிவான பதிலாக மட்டுமல்லாது, சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் தமிழரின் குறிப்பாக, நிலத்தோடு நெருங்கிய தொடர்புடைய விவசாயிகளின் பண்பாட்டு உரிமையும்கூட என்பதைப் பல்வேறு தொல்தரவுகள் மூலமும் சங்க இலக்கியங்களின் ஆதாரங்கள் மூலமாகவும், சல்லிக்கட்டுத் தடை என்பதற்குப் பின்னுள்ள பார்ப்பனிய அரசியல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளது சிறப்பு.
ஆய்வாக மட்டுமல்லாது நேரடியாக மதுரையில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற பட்டறிவையும், போராட்ட வழியெங்கும் நிறைந்து ததும்பிய உழைக்கும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.
பேராசான் நா. வானமாமலையின் உழவுக்குடிகள் தொடர்பான ஆய்வுகள் பற்றிய கட்டுரையொன்றும், கீழடி ஆய்வுக்கட்டுரையும், கார்த்திகை எனப்படும் மா ஒளித் திருநாள் பற்றிய ஆழமான கட்டுரையும் உள்ளன.
ஏனைய கட்டுரைகள் சாதி... காட்சிமொழி... கவிதையின் அழகியல் அரசியல்... புதிய கல்விக் கொள்கை.. பெண் அரசியல் எனப் பேசுகின்றன.
எடுத்துக்கொண்ட விசயத்தை மிகுந்த ஆழமான தேடுதலோடு.. ஆனால், எளிதாகப் புரியும் வண்ணம் விளக்குகிற ஆசிரியரின் எழுத்து அபாரம்.
எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்விலும் உழைக்கும் மக்களின் மீதும், தமிழ் மண்ணின் மீதும்
தீராத காதல் கொண்ட
ஏர் மகாராசன் தோழருக்கு அன்பும் நன்றியும்.
அவரின் பிறநூல்கள்:
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு...
நா. வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி...
ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும்... காதலற்ற முத்தங்களும்...
(பெண்விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்)
சொல்நிலம்... கவிதை நூல்
உட்பட பல நூல்களின் ஆசிரியர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கண்மணி ராசா அவர்களது அறிமுக மதிப்புரை.
*
பண்பாட்டு அழகியலும் அரசியலும்...
ஆதி பதிப்பகம்.
ரூ. 120.
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
அடவி முரளி
9994880005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக