வெள்ளி, 24 மே, 2024

மூன்று தெலுங்கு நிலப்பரப்பில் வாழ்ந்த திரி வடுகர்களே திராவிடர் ஆவர் - சி.பா.ஆதித்தனார்


கேள்வி: திராவிடர்கள் யார்? 

பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி - வடுகர்களே திராவிடர்கள். 

கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? 

பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார்.

அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால், முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத்தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும்.

தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

கேள்வி: திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா? 

பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்துதான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

கேள்வி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே? 

பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத்தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.

கேள்வி: இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?

பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில்தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது. 

கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன்வழி ஒன்றுபடக் கூடாது?

பதில்: கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழிதான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே, லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பதுதான் உலக நியதி. 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*



தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

திங்கள், 20 மே, 2024

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசரைக் குறித்த உரையாடல் நூல்: டி.ஏ.பி.சங்கர்


தமிழர் சமூக அரசியலைப் பேசுபொருளாக்கும் முயற்சி மூலமாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் எனும் நூலை இயற்றி இருக்கிறார் முனைவர் ஏர் மகாராசன். 

நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பவுத்த ஆராய்ச்சியாளர் திரு.டி.தருமராஜ் அவர்கள் இயற்றிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' என்ற நூலின் மதிப்புரையாகவும், அதன் நீட்சியாகவும் அமைந்ததே இந்தக் கட்டுரை நூல். 

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபின் நீண்ட வரலாற்றையும், அது, மையமும் விளிம்பும் கலந்த பன்முகத்தன்மையின் தொகுப்பு என்றும் சொல்லும் ஆசிரியர், அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலுக்கும், திராவிட இயக்க அடையாள அரசியலுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிடுகிறார். 

முனைவர் மகாராசன் அவர்கள் மொழி, பண்பாடு, அரசியல், நாட்டார் வழக்கியல் எனப் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு நூல்கள், கட்டுரைகள், கவிதை, உரை நூல்கள் போன்றவற்றை இயற்றியுள்ளார்.

ஆரியர்களாக நுழைந்து, இங்கு வந்து பிராமணர்களாகத் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர்களது ஆதிக்க நிலையை எதிர்த்துக் குரல் கொடுத்த வரலாறு; தமிழ்ச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் அரசியல் வடிவம் பெற்றது; அவ்வாறு, திராவிடர் இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் தோற்றம், அவர்கள் முன்னெடுத்த பார்ப்பனர் எதிர்ப்பு தொடங்கி, திராவிடக் கட்சிகளின் தற்போதைய நிலை வரை பட்டியலிடுகிறார்.

பிராமண ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்ததில், பிராமணர் அல்லாத இயக்கங்களின் நிலையையும், அயோத்திதாசர் அளித்த பங்களிப்பையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். அயோத்திதாசரின் பின்புலம் தொடங்கி, அவர் நிறுவிய அத்வைதானந்த சபை, திராவிட மகாஜன சபை, தமிழ்ப் பவுத்த சமய அடையாளத்தை முன்வைத்து - சாக்கிய பவுத்த சங்கம், மற்றும் அவரது இதழியல் பங்காக அமைந்த திராவிடப் பாண்டியன் இதழ், ஒரு பைசாத் தமிழன் இதழ் போன்றவற்றையும், அவற்றின் மூலம் அவர் நிறுவிய ஆதித் தமிழர் என்ற அடையாள முழக்கம் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஆசிரியர். 

1881ஆம் ஆண்டு - ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை 'இந்துத்துவம்' என்ற வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த காலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிறிஸ்தவர், சமணர், பவுத்தர், இசுலாமியர், சீக்கியர் அல்லாத பிற அனைவரையும் 'இந்துக்கள்' என்ற ஒற்றை அடையாளத்திற்குள் வலிந்து திணிக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. இப்படி ஒரு நெருக்கடியான காலத்தில், அயோத்திதாசர் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்தை முன் வைக்கிறார். இதற்குக் காரணமாக அவர் கூறியது, இந்து மதம் ஆரிய பிராமணிய, வைதீக மரபுகளை அடிப்படையாகவும், அதன் வழியாகச் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருப்பதையும் எடுத்துரைக்கிறார். 

மேலும், அதிகாரத்தில் சம உரிமை கோரியது முதல், பிரதிநிதித்துவ அரசியலைத் தனது காலத்திலேயே முன்னெடுத்த அயோத்திதாசர், அப்போதே மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, இவ்வளவு ஏன், இந்திமொழி மேலாதிக்க எதிர்ப்பு எனப் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றியும் தனது எண்ணற்ற நூல்களில் எழுதியும் பேசியும் உள்ளார். இத்தகைய செயல்பாடுகளால் பகுத்தறிவு, இடஒதுக்கீடு, சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் தமிழக அளவில் பெரியாருக்கும், இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்திதாசர் என்று சொல்லலாம்.

ஆனாலும், பின்னாட்களில் வந்த அரசியல் தளங்களில் திராவிடர் கழகமோ, திராவிடர் இயக்கமோ, மற்ற திராவிடக் கட்சிகளோ, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகளைப் பற்றி மறந்தும் மறைத்தும் செயல்படுவது ஏன்.? எனக் கேள்வி எழுப்பும் ஆசிரியர், அதற்கான காரணமாக, அவருடைய அடையாள அரசியலையே சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்ததாக, அயோத்திதாசர் நால்வர்ண பேதத்தினைக் குறித்தும், அதனுள் குறிப்பிட்ட அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் வரிசையை மாற்றி, சூத்திரர், வைசியர், சத்திரியர், அந்தணர் என்ற வரிசையில் உழவினை முதல் நிலையில் வைத்துப் போற்றுகிறார். இந்த நான்கு தொழில் முறைக் குலங்களுக்கு இடையில் எந்தவொரு ஏற்றத் தாழ்வும் இருந்ததில்லை எனவும் வலியுறுத்துகிறார். பிறப்பினால் எந்த மனிதரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பாவிக்காமல், அவரவர் செய்த தொழிலின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் எனக் கூறும் தமிழ் மரபுகளை உதாரணமாகக் காட்டுகிறார் ஆசிரியர். 

அயோத்திதாசர், "அந்தணர்" என்ற சொல், கல்வி கற்பிக்கும் தொழில்முறைப் பெயர்தான் என்றும், தமிழ் மரபில் வகுக்கப்பட்ட குணங்கள் உடைய யார் வேண்டுமானாலும் அந்தணர் என்ற அடையாளத்தை அடைய முடியும் என்றும் விளக்குகிறார். இது ஒரு தொழில் முறைப் பெயர் மட்டுமே அல்லாமல், ஆரிய பிராமணர்கள் சொல்வது போல, பிறப்பால் உயர்ந்த நிலை எதுவும் இல்லை என்றும் பறைசாற்றுகிறார். அதே போல, ஒவ்வொரு வர்ணத்திற்கும், அதன் தமிழ் மரபு - ஆரிய பிராமணிய மரபு குறிக்கும் பொருள் வேறுபாடுகளை விரிவாக விளக்கியுள்ளார். இந்த நூலின் அடிப்படையாக இதைத் தான் பார்க்கிறேன்.

மேலும், தமிழ் மரபில் உள்ள தொழில் முறைப் பெயர்களை எடுத்துக்கொண்டு, அதற்கு, தங்களுக்கு ஏற்றார் போல பொருளை மாற்றியமைத்து, ' மநு ' என்ற பெயரில் மற்ற குலங்களை அதிகாரம் செய்த பிராமண மரபினையும், அயோத்திதாசர் வழியில் சான்றுகளுடன் தோலுறித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் வழியாக, அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் சுருக்கமாக அறிந்து கொண்டாலும், அவரைப் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது.

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசர் பற்றியும், அவருடைய தமிழர் அடையாள அரசியல் பற்றியும் மீண்டும் மீட்டெடுத்து வாசிக்கவும், மேலும் மேலும் உரையாடவும், ஒரு அறிமுக நூலாக அமைந்திருக்கிறது இந்த மதிப்புரை. அடுத்ததாக, 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூலையும் வாசிக்க வேண்டும்.

நூல்: அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
ஆசிரியர்: முனைவர் மகாராசன்,
பக்கங்கள்: 112,
வெளியீடு: 
ஆதி பதிப்பகம்,
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி. சங்கர்,
சென்னை.

வெள்ளி, 17 மே, 2024

மாணவர்களைக் குறித்த சமூக மனிதனின் பார்வை: டி.ஏ.பி.சங்கர்


இன்றைய காலகட்டத்தில் மாணவர்களைப் பற்றிய ஆய்வுகளையும், சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது இச்சிறிய நூல். 

சமூக மாற்றங்களுக்கான உரையாடல்களைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேராசிரியர் ஏர் மகாராசன், இணைய இதழ்களில் எழுதிய இரண்டு முக்கியமான கட்டுரைகளே மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இந்நூல்.

கட்டுரை 1:

மாணவர்கள் கல்வியை விடுத்து இடை நிற்பதற்கான காரணங்கள் என்னென்ன என ஆராய்ந்து, அவற்றைப் பற்றி விரிவாகப் பேசத் தொடங்கும் போது, 2022-23 ஆண்டில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத வராத 50000 மாணவர்களையும், அவர்களைத் தடுக்கும் புற மற்றும் அகச்சூழல்களையும் அடுக்குக்கிறார். இப்போதுள்ள பாடத்திட்டப் பொருன்மையில் உள்ள குறைகளைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அதற்கான காரணமாக:

மீத்திறன் மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் கடினமாக உள்ளது. 

மெல்லக் கற்கும் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கற்க முடியாமல் திணறுவது.

அனைத்து வகையான மாணவர்களையும் உட்படுத்தாத கல்வி முறை

ஆகியனவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் புதிய பாடத்திட்டத்தைக் கண்டு தயங்கி, விலகி, தனிமைப் படுவதையும், அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு வரச் செய்து படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களையும் கண்டு வருந்துகிறார். 

இவ்வாறு பள்ளியைத் துறந்து, தேர்வுகளைத் தவிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட வகையில், மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்படும் இந்தப் பாடத்திட்டம் ஒரு வகையில், நவீனத் தீண்டாமை என்று குறிப்பிடுகிறார். 

இவ்வாறு, தேர்வுகளைத் தவிர்க்கும் மாணவர்கள், அடுத்த கட்டமாக உயர்கல்வி பெற முடியாத சூழலில், வேலை வாய்ப்பின்றி, சமூகத்தில் உதிரிகளாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

கட்டுரை 2:

அடுத்த முக்கியமான கட்டுரை, சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராசெல்வி மீது நடத்தப்பட்ட சாதி வெறியாட்டத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பற்றியது. 

கல்வி கற்க வரும் பள்ளிக்கூடத்தில் சாதிய வேறுபாடுகளை ஏற்படுத்தி, அதன்மூலம் சுயசாதிப் பெருமைகளையும், தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் முதலியவற்றைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். 

இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்திய அந்த மூன்று மாணவர்கள் (16/17 வயதுடையவர்கள்) காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்களுடைய பெற்றோர் யாரும் அங்கு இல்லை. அதுமட்டுமின்றி, இப்படி ஒரு சம்பவம் நடந்ததைக் குறித்த எந்த ஒரு குற்ற உணர்வுமின்றித் தமக்குள் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர். இவர்கள் இப்படி ஒரு மனநிலைக்குச் செல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, இவ்வாறான சாதி அடையாளம் கொண்ட நடவடிக்கைகளுக்குக் காரணம் அதே பகுதிகளில் ஏற்கனவே படித்து முடித்த சாதி இந்து இளைஞர்கள்தான் என்று எடுத்துரைக்கிறார். இவர்கள்தான் இப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சாதிய ரீதியாகத் தூண்டிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கின்றனர்.

இவ்வாறு, அந்த நிகழ்வின் காரணங்கள், அதன் விளைவுகள், அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என, கள நிலவரங்களைத் தெரிவிக்கும் அதேநேரம், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கையாள்வது எப்படி? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சுதந்திரத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

மேலும், அறம் சார்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் பாடங்கள் வெறும் மொழிப்பாடங்களாக, அவையும் குறைந்த அளவிலான மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே உள்ளன என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், மாணவர்கள் மத்தியில் அறம் என்ற ஒன்றை விதைக்கத் தவறி விட்டது என்கிறார் ஆசிரியர்.

லும்பர்கள் எனப்படும் இந்தச் சமூக உதிரிகளாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிப்பருவ வயதுடையவர்கள் மாற்றப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் என:

1. சாதிவெறி

2. போதை வெறி

3. அரசியல் கட்சிகள் பின்புலம்

4. அரசு அதிகார மட்டத்தின் செயல்பாடு

5. அந்நியப்படுத்தப்பட்ட கல்விமுறை

6. பெற்றோரின் வளர்ப்பு மற்றும் குடும்பச் சூழல்

7. சமூக ஊடகப் பயன்பாடு 

போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். 

இவர்கள் இவ்வாறு உதிரிகளாக்கப்படுவது உயர்சாதி என்று தன்னை நினைத்துக் கொள்பவர்கள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களையும்தான் என்னும் நூலாசிரியர், அதற்கான காரணிகளாக, சுயசாதிப் பெருமை பேசவும் பரப்பவும் நடத்தப்படும் சாதிவாரியான மாநாடுகள், திருவிழாக்கள், குருபூஜைகள் மற்றும் சாதியப் பதாகைகள் தாங்கிய திருமண நிகழ்வுகள் என்கிறார்.  

சமூகத்தில் உதிரிகளாக மாற்றப்படுபவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்களே எனக் குறிப்பிடும் மகாராசன், இவர்களை உதிரிகளாக ஆக்குவதில் சில ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார். சாதி அடையாளம் என்பதுவும், சாதி ரீதியான மனப்பான்மை என்பதும் சில ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் இருப்பது வேதனைக்குரியது. அதனால், பாடத்திட்டத்தை உருவாக்குவதில் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும், சமத்துவ மனப்பான்மையும் இன்றைய தேவை என்று வலியுறுத்துகிறார். 

பிறகு, இட ஒதுக்கீடு குறித்த முழுமையான புரிதல் என்பது இங்கு பெரும்பாலோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை என்றும், அதனுடைய நீட்சியே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் விளக்குகிறார். 

இறுதியாக, சாதிய மனநிலையில் பேசிய ஆசிரியரிடம், "எல்லாருமே சமம்தானே டீச்சர்?" எனக் கேட்கும் மாணவன் முனீசுவரனின் சமத்துவக் குரலுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறார்.

மாணவர்களின் வளர்ச்சிக்குச் சமூகம் எவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை புரிந்து கொள்வதாலும், ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுவதாலும், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.. தான் ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி, ஒரு சமூக மனிதனின் வாயிலாக இந்தப் பார்வையை முன்வைத்திருக்கிறார் மகாராசன்.

நூல்: மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து.
ஆசிரியர்: மகாராசன்.
பக்கங்கள்: 72.
வெளியீடு: ஆதி பதிப்பகம்.
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி.சங்கர்,
மண்டல மேலாளர், 
சுசூகி வாகனங்கள்,
சென்னை.