புதன், 27 நவம்பர், 2024

காத்திருக்கும் நிலம்


கடல்சூழ் வனத்தைப் போர்த்தி 
விரிந்து கிடந்த நிலப்புழுதியில் 
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி 
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு 
முளைத்துக் கிளைத்திருந்தது 
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த  மண்ணை 
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள் 
ஆழஆழப் பதிந்ததில் 
நிறைந்து செழித்து 
வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய் 
மூதாதை நிலம் 
செழித்துப் பரவியிருந்தது.
காலமும் கடல்கோளுமான ஊழ்வினை 
உப்புநீர் தெளித்து 
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  

பரிணாமக் காலங்களை 
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில் 
இங்கொன்றும் அங்கொன்றுமாய் 
விழுந்த வித்துகள் 
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்து
சிரித்திருந்த பேரினத்திற்கு 
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக 
காலம் இசைத்த நெடும்பாடல் 
உலகத்தின் காதுகளில் 
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள் 
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.

விழுந்த திசையின் மண்ணின் வாகும் 
பருவ நேக்கும் சுழல் காலமும் 
உயிர்ப் படிமலர்ச்சியாய் 
வேறு வேறு முகங்களை 
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து 
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில் 
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து 
குஞ்சுகளைக் காக்க 
மூர்க்கமாய்ப் போராடின 
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூள்க்கொடியிலிருந்து 
உயிர்க்கொடிச் சிம்புகள் 
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும் 
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும் 
முப்புரி நூலாலும் 
இறுகக் கட்டிய தொரட்டிகளால் 
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு 
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய 
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின் 
உயிர்ச்சத்தை உறிஞ்சி 
பெருவனத்தை வரைந்திருந்தது. 

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள் 
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை 
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த 
சிங்கக் கூர்வாளை 
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிய புலிகளின் 
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது 
ஒரு நிலம்.

மகாராசன்.

Across the sea, 
on a vast stretch of land,  
the forest lay thick with dampness,  
shows its face, resembling our own,  
staying close and surrounded,  
slowly sprouted, branching out- 
our clan’s off shoot.

Roots dug deep,  
clutching the soaked dripping earth,  
grounding and etching our mark
filling lustrous growth and prosperity-
human eco-beeing thriving.

The Pahruli river once flowed 
from the Kumari mountains,  
through the wide expanse 
of our ancestral land, 
that lay fertile and boundless.

Until time's ill fate 
and tsunami's spree
that sprinkled its salted water 
and scattered lives far  and wide.

The sway of evolution
absorbed by the seeds of life's cycle
had fallen hither and tither,
now sprout anew on branches with vigor.

A race that spread its branches
stands laughing, thrilled and tall,
had twin mothers' laps now, to cradle. 

Though separated by two lands,  
they stood as one race,  
time sings its grand song,  
and the earth listens,  
ears filled and overflowing 
with echoes of this story.

Seeds of this mighty race tree  
flew through the air, filling the land.  

Where they fall, the soil and season,  
guided by the call of time,  
shaped their bloom  
with unique faces,  
a reflection of nature’s hidden wonders.

With the fragrance of ancient roots,  
smeared with the soil of the motherland,  
and holding grand symbols,  
this old race stood, sparkling bright.  

Against foreign kites that pecked,  
to protect their young hatchlings,  
both the mother hens  
fiercely fought and defended.  
From the severed umbilical cords,  
flakes of vitality
unbroken and unworn,  
continued to bring forth life.  

The sickle, tightly knotted with  
the tricolour flag  
and triple thread strands,  
cut the branches of this land.  

Now, with weariness 
and a sense of loss,  
the roots shrink where they dwell.  

Tap roots and fibrous roots  
belonging to this land,
drew life’s essence  
from the ancient red soil,  
forming a grand forest all around.  

The Tigers, masters of fierce leaps,  
roamed the Vanni land,  
singing their moral codes.  

While black snakes of treachery
are hidden beneath the armpit,  
Buddha stands laughing,  
holding the Lion's sword,  
stained with the blood of tigers.  

To imprint the foot prints
of the escaped tigers
awaits the motherland, with hopeful grace.   
Poem in Tamil by: 
Maharasan.

Translate from Tamil by: 
Padma Amarnaath 

செவ்வாய், 19 நவம்பர், 2024

அதிகாரத்தால் களவாடப்படும் எனதூர் சின்ன உடைப்பு கிராமத்தின் தலபுராணம் : முனைவர் ஏர் மகாராசன்

எவ்விதக் கைமாறுகளையும் எதிர்பார்க்காமல் நிலத்தில் பாடுபடுவதின் வழியாகத் தானும் உண்டு, இந்த ஊா் உலக மக்களும் உண்டு வாழத் தம்மையே அா்ப்பணித்துக் கொண்டிருக்கும் வேளாண் மக்களின் துயரங்களைக் கண்டுகொள்வதற்கோ அவா்களின் கண்ணீரைத் துடைப்பதற்கோ இன்றைக்கு எவருமில்லை.  வேளாண்தொழிலும் வேளாண் மக்களின் வாழ்வியலும் ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கப்பட்டுவிட்டன. மேலும் இன்றையச் சூழலில் புகுத்தப்பட்டுள்ள உலகமயமாக்கல் சார்ந்த நடைமுறைகளுக்கும் வேளாண்மை சார்ந்த மக்களும் தொழிலும் நிலங்களுமே முதல் பலிகடாக்களாக ஆக்கப்பட்டுள்ளனா்.

       தொழில் வளா்ச்சி எனும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள். முதலாளிகள், ஏகாதிபத்தியங்களால் நிறுவப்படுகிற தொழிற்ச்சாலை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கே இந்திய அதிகார மய்யம் முன்னுரிமை அளிக்கின்றன. அவற்றுக்கே ஊக்கமளிக்கின்றன. இவை போன்ற தொழிற்சாலைகளுக்கான இடங்கள், தொழி்ற்பேட்டைகள், வளாகங்கள், குடியிருப்புக்கள், சாலை, தொடா்வண்டி, வான்வழிப் போக்குவரத்து, நகரவிரிவாக்கம், தொலைத் தொடா்பு, உல்லாசக் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் நிரம்பிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற பல்வேறு தொழில் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்குத் தேவைப்படும் பெருவாரியான நிலங்களை அரசாங்கம் எனக் கருதப்படுகிற அதிகார மய்யங்களே தாராளமாய் கையகப்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. 

      வேளாண்தொழிலில் ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளைத் தாங்கமுடியாத ஒருபகுதி வேளாண்மக்களிடம் இருந்த பெருவாரி விளைநிலங்களை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் சொற்ப விலைக்கு வாங்கி வளைத்துப் போட்டுவருகின்றனா்.  ரியல் எஸ்டேட் எனப்பெறும் விளைநிலத்தை விலை கொடுத்து வாங்கும் நில விற்பனைத் தரகுத் தொழில் குக்கிராமங்கள்வரை நீண்டுகிடக்கிறது.

       காலங்காலமாய் நிலத்தை மட்டுமே நம்பியிருக்கிற, வேளாண்தொழில் மட்டுமே தெரிந்திருக்கிற, வேளாண்தொழிலையே ஆதாரமாகக் கொண்டிருக்கிற, வேளாண்மையோடு ஒட்டி உறவாடுகிற ஆன்மாவைக் கொண்டிருக்கிற, வேளாண் தொழிலையே தமது பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருக்கிற, வேளாண் மக்கள் என்றும் நெல்லின் மக்கள் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்கிற, காலங்காலமாய் குடிவழிமரபாய் வேளாண்தொழிலில் உழன்று வரும் வேளாண்குடிகளின் கனவும் வாழ்வும் மகிழ்வும் அமைதியும் சிதைந்துகொண்டிருக்கின்றன.  வேளாண்குடிகளின் கையளவு நிலம்கூட அவா்களிடமிருந்து அரசாங்கத்தாலேயே பறிக்கப்படுகின்றன.

       மலைகள், காடுகள், சமவெளிகள், கடல்சார்ந்த தொல்குடிகளின் - பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்து நிற்கவேண்டிய சூழல் இறுக்கம் பெற்று வருகின்றது.

       நகரமயம், தொழில்மயம், வணிகமயம், நவீனமயம், உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என அத்தனை மயங்களும் தானாய் உருவானவை அல்ல.  திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. மேற்குறித்த மயங்கள் பெருந்திரள் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல.  மாறாக பொருளியல் வளத்தைப் பெருக்கிக்கொண்ட - பிறா் உழைப்பைச் சுரண்டி உயா்த்திக்கொண்ட உடைமை வா்க்கத்தினரின் நலன் சார்ந்தவை.  குறிப்பாக பன்னாட்டு முதலாளிகள்- ஏகாதிபத்தியங்களின் நலன் சார்ந்தவை. இவற்றின் நலன்களைக் காக்கவே, நலன்களுக்காகவே தொல்குடி மக்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களும், வாழ்விடங்களும்  தொழில்வளா்ச்சிப் பயன்பாடு எனும் பெயரில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

       வேளாண் மக்களைக் குறித்தும் வேளாண் தொழிலைப் பற்றியும் எவ்விதக் கவலையும் அக்கறையும் கொள்ளாமல் வேளாண் நிலங்களையும் வாழ்விடங்களையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பிடுங்கிக் கொண்டு வருகின்றன இந்திய அதிகார மய்யங்கள். 

       மன்னா்கள் அதிகாரம் புரிந்த பேரரசுக் காலங்களில்கூட நிலங்கள் பறிக்கப்பட்டாலும், அந்நிலங்களிலேயே உழவடை என்னும் பெயரில் வேளாண் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள்  இருந்தன. நிலத்திற்கான உரிமை வேண்டுமானால் பறிக்கப்பட்டிருக்கலாமே ஒழிய, நிலத்தோடு கொண்டிருந்த உறவு முற்றிலுமாகப் பறிக்கப்பட்டிருக்கவில்லை.

      இக்காலத்திய அதிகாரச் சூழலில்,  நிலத்திற்கும் உறவுக்கும் வாய்ப்பில்லை என்பதான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.  ஒட்டுமொத்த வேளாண்குடிகளின் எதிர்கால வாழ்வு  புதைகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மலை, காடு, சமவெளி, கடல்வாழ் தொல்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்விடங்கள் பறிக்கப்படுவது கண்முன்னே நிகழ்கிறது.  மக்களையும் மண்ணையும் நேசித்த -  இயற்கை வளங்களைப் பாதுகாத்த - உலக மக்கள் உண்டு வாழத் தம் வாழ்வையே கரைத்துக் கொண்ட வேளாண் குடிகளின் ஒப்பாரிக் குரல்கள் புதைகுழி மேட்டிலிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

       ”இரவார் இரப்பார்க்கு ஒன்றுஈவா் கரவாது

        கைசெய்தான் மாலை யவா்”

என்பார் வள்ளுவா்.

      உண்டு வாழ்வதற்காக யாரையும் சார்ந்திருப்பதுமில்லை.  யாரிடமும் இரந்து நிற்பதில்லை. அதேவேளையில், பசியென்று தம்மிடம் வந்தவா்க்கு வயிறாறச் சோறு போடுதலைப் பண்பாட்டு ஒழுகலாய்க் கொண்டிருந்த வேளாண்குடிகளின் இயல்பை மேற்குறித்த குறளில் எடுத்துரைத்தார் வள்ளுவா்.  ஆனால் இக்காலத்தில் உழன்று தவிக்கும் வேளாண்குடிகளின் பாடுகளில் தவிப்பும் துயரமும் வலியும் அழுகையும் நிரம்பிக்கிடக்கின்றன.

      மரணித்தவா்கள் முன்பாகப் பாடப்பட்டுவந்த ஒப்பாரி, மரணிக்கப் போகும் தங்களுக்கே தாங்களாகவே பாடப்படுவதாக மாறியிருக்கிறது. எண்ணற்ற ஒப்பாரிக் குரல்களோடு கலந்துவிட்ட கிராமங்களுள் ஒன்றுதான் சின்னஉடைப்பு எனும் அழகிய கிராமம்.

       தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த மதுரையைச் செழிப்பான மாநகராய் உருவாக்கியதில் அதனைச் சுற்றியுள்ள வேளாண் கிராமங்களின் பங்களிப்பு நிரம்ப உண்டு. அதனால்தான் மற்ற நகரங்களைக் காட்டிலும் மதுரை மட்டும் கிராமியத் தன்மையை மாற்றாமல் வைத்திருக்கின்றது. இத்தகைய மதுரையின் வரலாறும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. 

       மருத மரங்கள் செழித்து நின்ற நிலப்பரப்பின் வயல்வெளி சூழ்ந்த பெரும்பகுதியே மருதம் எனப்பட்டிருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை உற்பத்தி மருத நிலத்தை வனப்பும் வளமும் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.  மருதம் என்பது வேளாண்மை சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கை, பண்பாடு, ஒழுக்கம்,கலை, இலக்கியம், வழக்காறுகள் போன்றவற்றின் குறியீடு.  மருதம் என்பதுதான் நாளடைவில் மருதை -  மதுரை என்பதாக மாறியிருக்கிறது.

       நெடுங்காலமாய் நிலைத்திருக்கும் மதுரையின் வரலாற்றில் வேளாண் குடிகளின் வரலாறும் இரண்டறக் கலந்திருக்கிறது.  அதாவது மருதநில வேளாண் குடிகளின் உழைப்பும் வியா்வையும் குருதியும் கனவும் சோ்ந்த உருவாக்கம்தான் மதுரை.  வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் சார்ந்த இதரக்குடிகளின் உருவாக்கத்தில் செழித்ததுதான் மதுரை.

       மல்லன்மூதுார் எனக் குறிக்கப்படும் மதுரையின் வரலாற்றோடு வேளாண்குடிகளின் குருதி தோய்ந்த வரலாறும் புதையுண்டு கிடக்கிறது.  மல்லன் மூதுாராம் மதுரையின் வரலாற்றின் கொடிய துயரங்கள் நேற்றோடு முடிந்துவிடவில்லை.  இன்னும் தொடரத்தான் செய்கின்றது. துயரங்கள் சுமக்கும் எண்ணற்ற கிராமங்களுள் ”சின்ன உடைப்பு” எனும் கிராமமும் ஒன்று.

       மதுரையின் தெற்கு நுழைவாயில் எல்கையில் அமைந்த முதல் கிராமம்தான் சின்ன உடைப்பு. இக்கிராமம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையின் மய்யப்பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.  வேளாண்தொழில் சார்ந்த குடிகளோடும் இதரக் குடிகளோடும் காலங்காலமாய் நல்லுறவைப்பேணிவரும் இக்கிராமம் மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அயன் பாப்பாகுடி பெருங்கிராமத்தைச் சார்ந்த உட்கடைக் கிராமம் ஆகும்.  தற்பொது மதுரை மாநகராட்சியின் எல்லை இக்கிராமத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. 

இக்கிராமத்தில் வாழ்கிற மக்கள் யாவரும் வேளாண்தொல்குடிமரபு சார்ந்தவா்கள். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்குள்ளன. மரபார்ந்த வேளாண்தொழில்தான் பெரும்பாலோரின் முதன்மைத் தொழில்.

       இக்கிராமத்தில் வாழும் இளம் தலைமுறையினா் யாவரும் பள்ளி, கல்லுாரிகளில் பயின்று வருகின்றனா். இளங்கலை, முதுகலை, முனைவா் பட்டதாரிகளும், பொறியியல், தொழில் நுட்பம் சார்ந்த பட்டதாரிகளும், வழக்குரைஞா். ஆசிரியா், பேராசிரியா்கள், அரசு ஊழியா்கள் என நிறையப்போ் கல்வி மற்றும்அரசுப்பணிகளில் பங்கெடுத்துள்ளனா். 

இதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களிலும், சுயமாகவும் தொழில் மேற்கொண்டும் வருகின்றனா்.  மேலும் அதிகளவிலான கொத்தனார்கள் இவ்வூரில் இருக்கின்றார்கள்.  பெண்களும் ஆண்களுமாய்ப் படித்துக்கொண்டும் வருகின்றார்கள். 

ஒரு நடுநிலைப்பள்ளி, கூட்டுறவுப் பயிற்சிக் கல்லுாரி, கிராமிய இறையியல் நிறுவனம் போன்ற கல்வி நிலையங்களும் இங்கு அமைந்துள்ளன.  பெரும்பகுதிப் பெண்களும் ஆண்களும் வேளாண்சார்ந்த தொழிலையே மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கிராமத்தின் மீது மட்டுமில்லாமல் சமூகத்தின் மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டவா்களாக இக்கிராமத்தினா் இருக்கிறார்கள். அதனால்தான் சமூக நீதிக்காகப் போராடிய அம்பேத்கார் மற்றும் இம்மானுவேல் சேகரனார் ஆகியோரின் முழுஉருவச்சிலைகள் இக்கிராமத்தின் நுழைவாயிலில் அமைத்திருக்கின்றனா். 

யாருக்கும் அடிமைப்படாத - யாரையும் அடிமைப்படுத்தாத வகையில் தம்மைச் சுற்றியுள் அனைத்துக் குடிகளோடும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனா் இக்கிராமத்தினா்.  இங்குள்ள பெருவாரியான இளைஞா்கள் சமூகச் செயல்பாட்டோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனா்.  அம்பேத்காரிய – பெரியாரிய – மார்க்சிய – தமிழியச் சிந்தனைகளின் தாக்கம் இவா்களிடம் அதிகம் காணப்படுகிறது.

       சின்ன உடைப்பு கிராமம் மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள பா்பானோடை, பெருங்குடி, பரம்புப்பட்டி, சம்பக்குளம், வலையபட்டி, கொம்பாடி, தொட்டியபட்டி, வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, கூடக்கோவில், பாரப்பத்தி, சோளங்குருணி, பிள்ளையார்பட்டி, குதிரைபத்தி, குசவன்குண்டு, கோனார்பட்டி, தின்னாநேரி, இலந்தைக்குளம், செங்குளம், ஈச்சநேரி, இராமன்குளம்,பெத்தேல்கிராமம், அவனியாபுரம், நிலையூர், பறையன்பாறை, கூத்தியார்குண்டு, மண்டேலாநகா் எனப் பல்வேறு ஊா்கள் சூழ்ந்த இப்பகுதியின் நிலப்பரப்பில் செம்மண்ணும் கரிசல்மண்ணும் விரவிக்கிடக்கிறது. 

       சின்ன உடைப்பு உள்ளிட்ட மேற்குறித்த கிராமங்களின் வாழ்வாதாரம் நிலத்தோடு தொடா்புடைய வேளாண்தொழில்தான். இக்கிராமப் புறங்களில் நெல், கரும்பு, வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை, பப்பாளி, முருங்கை, வெண்டை, தக்காளி, கத்தரி, மிளகாய், வோ்க்கடலை, கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, அவரை, துவரை, தட்டை, சீனிஅவரை, புடலை, பூசணி,  பீர்க்கு, கறிவேப்பிலை, கீரைகள் உள்ளிட்ட உணவுப் பயிர்களும் தானியப் பயிர்களும் பணப்பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. 

      பூக்களில் மனமிக்கதாய் உலகெங்கிலும் புகழ்பெற்றிருக்கும் தற்போது புவிசார் குறியீடு பெற்றுத் திகழும் மதுரை மல்லிகை இப்பகுதியில் பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இத்தனைக்கும் வைகையின் ஆற்றுப் பாசனம் முழுமையாகக் கிடையாது. அண்மையில் நிலையூர்க் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது.  ஆயினும் அதில் தண்ணீா் வருவதில்லை.  கிணற்றுப் பாசனமும் கண்மாய்ப் பாசனமும்தான் இப்பகுதியின் பாசனமுறை. மானாவாரியாய்ப் பெரும்பகுதி நிலங்களும் இப்பகுதியைச் சுற்றியுள்ளன.  வேளாண்தொழிலுக்கு உகந்த வாகுவை இவ்வட்டார நிலங்கள் கொண்டிருக்கின்றன. 

அதனால்தான் நிலத்தை விட்டுப் பிரியாமலும், நிலத்தைவிட்டுப் பிரிய முடியாமலும் நிலத்தோடே இன்னும் மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

        நிலத்தோடு தொப்பூள்க்கொடி உறவாய்க் கொண்டிருக்கிற இப்பகுதி வேளாண்குடிகளை நிலத்திலிருந்து அறுத்தெறிந்து அந்நியப்படுத்தும் வேலைகளைத்தான் இந்திய அதிகார மய்யங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பலியாகிப்போன கிராமம்தான் சின்உடைப்பு.  பலியாகும் - பலியாகப்போகும் கிராமங்களின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்லவும் கூடும்.

       தொழில்துறை வளா்ச்சி எனும் பெயரில் பெரும்பாலான விளைநிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வருவதால் எண்ணற்ற வேளாண் கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதன் இன்னொரு தொடா்ச்சிதான் மதுரை வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகப் பெரும்பகுதி விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதுமாகும்.

       ஒரு பறவையைப் போன்ற இறக்கைகள் கொண்ட ஒரு பெரிய ஊா்தி வானில் பறந்து வந்து சின்னஉடைப்பு கிராமத்தின் மானாவாரி நிலப்பரப்பில் இறங்கும்; ஆட்களை ஏற்றிக்கொண்டு மேலே பறக்கும்; வேறெங்கோ ஆட்களை ஏற்றிவந்து இங்கிறக்கும் என்றவுடன் இவ்வூர்ப்பாட்டிகளும் பாட்டன்களும் வியந்திருக்கிறார்கள். நம்ம ஊருக்கு வானுார்தி வந்து செல்லப்போகிறது; நம்ம ஊருக்குத்தான் பேரும் பெருமையும் வரப்போகிறது.  இதனால் நம்ம ஊரு வளா்ச்சி அடையப் போகுது என நினைத்து இருப்பார்கள்.  இதனாலேயே 1940-களுக்கு  முன்பே மதுரை வானுார்தி நிலைய உருவாக்கத்திற்காகத் தமது பெரும்பகுதி வேளாண் புஞ்சை நிலங்களைச் சின்னஉடைப்புக் கிராமத்தினா் விட்டுக் கொடுத்தார்கள்.  அதற்கடுத்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கங்களின் போதும் நிலங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மதுரை வானுார்தி நிலையத்திற்குச் சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை வைக்கச் சொல்லிப் பலவாறும் போராடி வந்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேதான் கிடப்பில் வைத்திருக்கிறது இந்திய அதிகார மய்யம்.

       தம் ஊரின் நிலப்பரப்பில் பறந்து வந்து செல்லும் வானுார்தியைப் பார்த்துப் பெருமையும் வியப்பும் பட்டுக்கொண்ட இக்கிராமத்து மக்களுக்கு அவ்வானுார்திகளே குஞ்சுகளைத் தூக்கும் பருந்துகளாய் மாறியிருக்கின்றன.

       உள்ளூர், வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகள், பணக்காரா்கள் போன்ற உடைமை வா்க்கத்தினரும் நடுத்தர வா்க்கத்தினரும் வரவும் போகவுமான வான்வழிப் போக்குவரத்து வசதிகளுக்காக உருவாக்கப்படுபவைதான் வானுார்தி நிலையங்கள்.  மதுரை வானுார்தி நிலையமும் சின்னஉடைப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேளாண்மக்களோ அல்லது உழைக்கும் ஏழை எளிய மக்களோ பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை இப்பகுதி மக்கள் புரிந்துகொள்வதற்கு அரை நுாற்றாண்டுக்கும் மேலாகிப்போனது.

       தற்போது மதுரை வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக ஆக்கிட வேண்டுமென்று உள்ளுா், வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளும் வணிக நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் பேரார்வம் காட்டுகின்றன.  இவா்களின் வணிக மற்றும் சுரண்டல் சந்தைக் களத்தை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவுமான வான்வழிப்போக்குவரத்து மதுரைக்கும் தேவைப்படுவதாய் இவா்கள் கருதுகிறார்கள். 

      உள்ளாட்சி தொடங்கி சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் வரையிலும் நீண்டு கிடக்கிற அதிகார அமைப்பானது முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவகம் செய்யக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டு உள்ளது. அத்தகைய சேவகத்தின் ஒரு நிகழ்வுதான் மதுரை வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக மாற்றும் திட்டம்.  இத்தகைய வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகத்தான் கிட்டத்தட்ட 610 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வேளாண்குடிகளின் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.  ஏற்கனவே வானுார்தி நிலைய உருவாக்கத்தின்போதும் அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போதும் சின்னஉடைப்பு மற்றும் பரம்புப்பட்டி கிராமங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 1000 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையும் போதாதென்று பன்னாட்டு வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் எனும் பெயரில் பெருவாரியான விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன.

       வேளாண்தொழிலில் ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளால் பல்லாயிரம் ஏக்கா் பரப்பிலான வேளாண் விளைநிலங்கள் வணிக நிறுவனங்களிடமும், முதலாளிகளிடமும், நகரவாசிகளிடமும் மிகக் குறைந்தளவு விலைக்கு விற்கப்பட்டு விட்டன.  நிலங்களை விற்றுவிட்ட பெரும்பாலோர் நகரங்கள் நோக்கிப் புலம் பெயா்ந்து கொண்டிருக்கிறார்கள்.  உதிரித்தொழிலாளா்களாய் மாறிப்போன அவா்களால் வாழவும் முடியவில்லை, சாகவும்முடியவில்லை. 

நகரவாழ்க்கை நரகவாழ்க்கையாய் மாறிப்போயிருக்கிறது.   இந்நிலையில்தான் சின்னஉடைப்பு, பாப்பானோடை. பாம்புப்பட்டி, இராமன்குளம், செங்குளம், குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.  விளைநிலங்கள் மட்டும் அல்லாமல் காலங்காலமாய் வாழ்ந்து வந்த வாழ்விடங்களும் கையகப்படுத்தும் பகுதிக்குள் வருகின்றன.

       கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும் வரலாறும் கொண்டது சின்னஉடைப்பு கிராமம்.  தற்போது சின்ன உடைப்பு மற்றும் செங்குளம் கிராமங்களைச் சார்ந்த குடிமக்கள் தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  ஊாராய் உறவுகளாய் குடும்பங்களாய் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த அவா்களின் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிதைந்துபோவதைக் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

       மனுக்கள் போட்டு நிர்வாகத்திடம் மன்றாடி; ஆர்ப்பாட்டம் நடத்தி, மறியல் செய்தெல்லாம் பார்த்தாயிற்று.  குலசாமிகளிடமும் வேண்டிப்பார்த்தாயிற்று.  நிலத்தை எடுக்க மாட்டார்கள்; ஊரை எடுக்க மாட்டார்கள் என அரசை நம்பினார்கள். நிலத்தை எடுக்கக் கூடாது; ஊரை எடுக்கக் கூடாது என சாமிகளையும் கும்பிட்டுப் பார்த்தார்கள்.   எல்லாம் எங்கள் சாமிபார்த்துக் கொள்ளும் என்று  நம்பிக் கிடந்தார்கள்.  ஆட்சி மாறினால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று மாற்றி மாற்றி வாக்களித்துப் பார்த்தார்கள்.  ஆனாலும் நிலத்தை எடுப்பது உறுதியாகிப்போனது.  ஊரை எடுப்பது உறுதியாகிப்போனது.  சாமிகள் மீதும் அரசுகள்மீதும் ஆட்சிகள்மீதும் வைத்திருந்த நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயின.

       மதுரை வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்கள் குடியிருப்பு மனைகள்,  காலிமனையிடங்கள் போன்றவை உள்ளடக்கிய 610 ஏக்கா் பரப்பளவிலான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டங்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல ஆண்டுகளாய் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா கருத்துக் கேட்புக் கூட்டங்களிலும் சின்ன உடைப்பு மற்றும் சுற்று வட்டார வேளாண்மக்கள் தங்களுக்கு நேரப்போகிற நெருக்கடிகளையும், இழக்கப்போகும் வாழ்வாதாரங்கள் குறித்தும் தங்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதைப் பற்றியும் பலவாறாக எடுத்துரைத்து வந்துள்ளனா்.  ஆனாலும் அவா்களின் கோரிக்கைகள் குறித்துச் சிறிதளவும் பரிசீலிக்கவில்லை; பரிசீலிக்கத் தயாராகவும் இல்லை.  ஏனெனில் வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் உள்ளுர் நிர்வாகம் எடுத்த முடிவல்ல. மாறாக இந்திய அதிகாரம் எடுத்த முடிவு.   இந்திய அதிகாரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் எடுத்தமுடிவு. இதில் உள்ளூர் நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ  என்ன செய்துவிட முடியும். தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள்  வேகமாக நடைபெற்று வருகின்றன.  அதன்படி  ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் எனும் பெயரில் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை அறிவித்தது. இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட சேதிகள்தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவனவாக இருந்தன.

       கடந்த 18.04.2013-ஆம் நாளில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.  இதில் சின்னஉடைப்பு, பரம்புப்பட்டி, பாப்பானோடை, பெருங்குடி, மண்டேலாநகா், செங்குளம், இரான்குளம், குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த பெரம்பாலோர் கலந்து கொண்டனா்.  இக்கூட்டத்தில்தான் கையகப்படுத்தப்போகிற வேளாண்நிலங்கள்,  தரிசு நிலங்கள், குடியிருப்பு மனைகள், காலிமனையிடங்கள் போன்றவற்றிற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட இருக்கிற இழப்பீட்டுத்தொகை குறித்த அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டது.  அதன்படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு சுற்றுவட்டாரம் சார்ந்த குடியிருப்பு மற்றும் காலிமனையிடங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒருசெண்டு பரப்பிலான இடத்திற்கு ரூ.78.0000/- (ரூபாய் எழுபத்தி எட்டாயிரம்) எனவும், வேளாண் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒரு செண்டு பரப்பிற்கு வெறும் ரூ.2,000/-(ரூபாய் இரண்டாயிரம்) எனவும் அறிவிக்கப்பட்டபோது எண்ணற்ற வேளாண் மக்களுக்கு நெஞ்சாங்குழை வெடித்துச் சிதறியது போன்ற துயரநிலையே ஏற்பட்டது. பலருக்கும் உடம்பெல்லாம் நடுங்கிப்போனது. எல்லோரது கண்களிலும் கண்ணீா் முட்டிக்கொண்டு வந்தது.  மனதுக்குள் ஏதோ ஒரு வகையான வலி நிரந்தரமாய்க் குடி கொண்டது.

       ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலைமுறை தலைமுறையாய் கையளவு நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த வேளாண்குடிகளின் வாழ்வுக்கும் வாழ்விடத்திற்கும் வாழ்வாதாரமான நிலத்திற்குமான இழப்பீட்டுத்தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான் எனும்போது வலியும் அழுகையும் வராமலா இருக்கும்?  இந்த இழப்பின் வலிகளை எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் கோடிகள் கொடுத்தாலும் துடைத்திட இயலுமா ?  

       உயிரோடு உயிராய்,  உறவோடு உறவாய், உணா்வோடு உணா்வாய், நிலத்தோடும் வாழ்விடத்தோடும் இரண்டறகலந்துவிட்ட வேளாண்மக்கள் தங்கள் நிலத்தை இழக்கும்போது தங்கள் உடம்பில் ஓடுகிற உயிரின் சரிபாதியை உறுவி எடுப்பதைப்போன்றே உணா்கிறார்கள்.  தங்கள் உடலையும் உயிரையும் வெட்டி எடுப்பதைப்போன்றே துடிக்கிறார்கள்.

       ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் 

         தொழுதுண்டு பின்செல் பவர்.”  

       ” சுழன்றும் ஏர்பின்னது உலகம்  அதனால்

         ஊழந்தும்  உழவே தலை.”  

என்றெல்லாம் வள்ளுவா் பாடினார்.  வேளாண்குடிகளின் உழைப்பிலும் வேளாண்தொழிலாலும் மட்டுமே இந்த உலகமக்கள் இன்னும் உயிரோடு இருந்துகொண்டு வருகிறார்கள்.   அதனால்தான் வேளாண்தொழிலும் வேளாண்குடிகளும் தலையாய ஒன்றாகக் கருதப்பட்டன.  

வேளாண்குடிகள் தொழவேண்டிய குடிகளாக மதிக்கப்பட்டன.  ஆனால் நிகழ்கால சமூகமும் சமூக நிகழ்வுகளும், அதிகார மய்யங்களும் தொழில்வளா்ச்சித் திட்டங்களும் வேளாண்குடிகளின் வாழ்வாதாரம் குறித்தோ வேளாண்தொழிலைக் குறித்தோ கண்டுகொள்வதுமில்லை; கவலைப்படுவதுமில்லை.  புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் வேளாண்குடிகளைக் காப்பாற்ற யாரும் முன்வரவுமில்லை.

சொற்பமான இழப்பீட்டுத்தொகை வழங்கி வேளாண்குடிகளை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.   தங்கள் நிலங்களையும் தங்கள் ஊரையும் இழந்து உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து வேறுவேறு ஊா்களுக்கும் நகரங்களுக்கும் பிழைப்புத்தேடிச்சென்று உதிரிகளாகவும் அனாதைகளாகவும் அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆகிப்போகிற நிலைமைதான் எஞ்சி இருக்கிறது.  வழங்கப்போகிற சொற்பமான தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் ? எப்படி வாழமுடியும்?

சின்னஉடைப்பு கிராமத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான காலிமனையிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள், நகரவாசிகள் நடுத்தரவா்க்கத்தினா், வணிக நிறுவனங்கள் போன்றவற்றால் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட விளைநிலங்களே காலிமனையிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில் வேளாண் விளைநிலங்களுக்கும் காலிமனையிடங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி ஒருசாண் அளவுள்ள வரப்புகள் மட்டும்தான்.

காலிமனையிடங்களில் ஊன்றப்பட்ட நான்கு நடுகற்களைத்தவிர வேறு எந்தச்செடி கொடிகளும் அந்தப் பகுதிகளில் முளைக்கவில்லை;  முளைக்கப்போவதுமில்லை.  ஆனால், தண்ணீா், வியா்வை, குருதி, உழைப்பு, மூலதனம் என அத்தனையையும் நிலத்தில் கொட்டி நிலத்தை மட்டுமே நம்பி வாழ்கிற வேளாண்குடிகளின் கையிருப்பாக எஞ்சியிருக்கிற விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான். 

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசெண்டு பரப்பிலான நிலத்தின் சந்தை மதிப்பு குறைந்த அளவு மூன்று முதல் நான்கு லட்சம் வரை நிலவிக்கொண்டிருக்கிறது. அரசுத் துறைப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே இத்தகைய நிலவரம்தான். நிலமை இவ்வாறு இருக்கும்போது நிலத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட வேளாண்குடிகளின் ஆன்மாவாகத் திகழ்கிற விளைநிலங்கள் வெறும் இரண்டாயிரம் ரூபாய்தானாம்.  

காலிமனையிடங்களின் இழப்பீட்டுத்தொகையைக் காட்டிலும் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை மிகமிகக்குறைவு. 

காலிமனையிடங்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைக் காட்டிலும் விளைநிலங்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களோ அதிகம். இதர தொழில் பிரிவினரைக் காட்டிலும் வேளாண்குடிகள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்களே அதிகம். 

  புதைகுழி மேட்டிற்குத் தள்ளப்பட்டிருக்கும் வேளாண்குடிகளின் வாழ்வைக் காப்பாற்ற வேண்டுமானால் போராடும் பயணத்தைத் தொடா்ந்தாக வேண்டும்.

       மனித வரலாற்றில் போராடிய சமூகங்களே வாழ்ந்திருக்கின்றன. போராடாத, போராடத்தயங்குகிற சமூகங்கள் புதைகுழியில் வீழ்ந்திருக்கின்றன. பிறக்கின்ற எவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான்.  ஆனால் அந்த மரணத்தைப் பிறா் தருதல் கூடாது.  மரணம் ஒருமுறைதான்.  போராடி மரணித்தவா்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.


முனைவர் ஏர் மகாராசன்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.

நன்றி: தமிழர் பெருவெளி இதழ்,சனவரி-மார்ச் 2015

சனி, 16 நவம்பர், 2024

எல்லாச் சொல்லும் நிலம் குறித்தனவே - பேரா ம.கருணாநிதி

மகாராசனின் ‘நிலத்தில் முளைத்த சொற்களை’ மொழிதல்..

மகாராசன் ‘சொல் நிலம்’ (ஏர் வெளியீடு, 2017) கவிதைத் தொகுப்பினை அடுத்து ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ (யாப்பு வெளியீடு, 2024) எனும் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். கருத்துலகிற்குப் பல நூல்களைத் தந்தவர், இதன்வழியாகப் படைப்புலகத்திற்குள் தன்னைத் தடம் பதித்துள்ளார். இவரின் இரு வேறு தொகுப்புகளின் பொருண்மை ஒன்றாக இருப்பினும் கவிதைகளின் மொழிதல் மாற்றம் பெற்றிருக்கிறது என்றே கூறவேண்டும். 

நிலமும் நிலம்சார்ந்த நிமித்தமும் என்று கூறுமளவிற்கு இவ்விரு தொகுப்புகளும் ஐந்து திணை உரிப்பொருள்களுக்கு அப்பால் நிலம் சார்ந்த புது உரிப்பொருளில் அமைந்துள்ளது. நிலமும் நிலத்தைச் சுற்றிச் சுழலும் வாழ்வியலை மட்டுமே தனக்கான படைப்பு வெளியாகக் கொண்டிருப்பதை இவரின் இவ்விரு படைப்பாக்கங்களின் வழி அவதானிக்கலாம். 

தமிழில் புதுக்கவிதை மரபில் வானம்பாடிக்கவிஞர்களின் கவிதை மரபு எல்லோருக்கும் புரியக் கூடிய எளிமையான தன்மையைப் பெற்று இருப்பதோடு கவிதைகள் முற்போக்குச் சிந்தனையைத் தாங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான நவீன கவிதை மரபு எல்லோருக்கும் புரியாத பூடகத் தன்மையைக் கொண்டிருப்பதோடு மாற்று மொழிதலை கொண்டிருக்கிறது. 

நவீன கவிதை மரபில் இருண்மை எனும் குணநிலையைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் பல வாசிப்பிற்குட்படுத்தும் போது தான் அதன் பொருள்கொள்ளல் சாத்தியமாகிறது. அவ்வகையில் இருந்து மகாராசனின் கவிதைத்தளம் வேறுபடுகிறது. நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகள் யாவும் மரபிலிருந்து உருவாகி இருண்மைகளற்று மொழிதலைக் கொண்டிருக்கின்றன. ஓர் இலக்கியப் படைப்பாளி தம் படைப்பில் கலை நுணுக்கங்களையும், ரசனைகளையும் வெளிப்படுத்துவதோடு சமூக வாழ்வியலையும் தம் படைப்பில் வெளிப்படுத்த வேண்டும். 

அந்தவகையில், மகாராசன் நவீனக் கவிதை மரபில் நிலம், நிலம் சார்ந்த பருப்பொருளைக் கவிதையாக்கம் செய்ததில் புதுச்செல்நெறியில் பயணிக்க முனைகிறார். 

தொன்மை, பழமை என்று கூறப்படும் தொன்மத்தைக் கட்டவிழ்ப்பதும், கட்டுடைப்பதும், கட்டியெழுப்புவதுமான நிலையைத் தமிழ்க் கவிதைகளில் காணமுடியும். 

வானம்பாடிக் கவிஞர்கள் பெரும்பாலோர்த் தொன்மத்தை மறுவிசாரணை செய்தார்கள். எழுத்து இதழ் காலக் கவிஞர்கள் தொன்மத்தோடு பயணித்துத் தொன்மத்தைக் கட்டுடைப்பும் கட்டவிழ்ப்பும் செய்தார்கள். நவீன கவிஞர்கள் தொன்மத்தைக் கட்டுடைத்து மறு உருவாக்கம் செய்ததோடு புதுத் தொன்மத்தைத் தேடினார்கள்; பூர்வாங்கத்தைக் கவிதை வழி மொழிந்தார்கள்; தமக்கான தொன்மம் இவையெனக் கவிதைகளில் முன்வைத்தார்கள். 

ஆதித்தாயின் தொன்மத்தைத் தேடுவதாய் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகளாய் வெளிப்பட்டுள்ளன. தாயிக்கும், நிலத்திற்கும், மொழிக்கும், மக்களுக்கும் தொடர்பிருப்பதைக் கவிதைகளில் காணலாம்.

"உயிர்த்தலைச் சுமக்கின்றன / நிலம் கோதிய சொற்கள்' (ப.23) தொன்மங்களின் பூச்சுகள் கரைய /உயிர் வழியும் கண்களால் / கதைகள் ஒட்டி நிற்கின்றன" (ப.26) எனும் வரிகள் வளமைக்கானதாக அமைந்துள்ளன. “ஆழப் புதைந்திருக்கும் வேர்களை/ இறுகப் பற்றியது ஈரமண் / மண் மீட்டிய வேர்கள் இசை” (ப.28), பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில் (ப.25), பச்சையம் போர்த்திய நிலமும் கந்தல் துணியாய் போயின (ப.49) வெறுமை மண்டி இருக்கும் வாழ்நிலத்தில்(ப.86) /ஈரமாய் பூத்து சிரிக்கின்றன/ நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம் (ப.87)/ காடும் மலையும் மேவிய நிலத்தில் (ப.29). / கசிந்து வழிந்த சொற்கள்/ உள் காயங்களின் வலியில்/ அணத்திக் கொண்டிருக்கிறது. (ப.31) தேர்ந்த வடிவ மொழிதலைக் கொண்டுள்ளன இக்கவிதைகள். 

கவிதைச்செல்நெறியில் மரபிலிருந்து விடுபடுதலும் மரபிலிருந்து புதுப்பித்துக் கொள்ளலும் மரபினை உடைத்தலும் நிகழ்கின்றது. இவை வடிவ, கருத்து ரீதியாக நிகழ்கின்றன. 

வேளாண்மைச் சடங்குகளின் தொடர்பாட்டினையும் சடங்கிற்கும் நிலத்திற்குமான உறவு நிலையில் கவிதை நிகழ்த்துதல்களின் பரிணாமங்களை விவரிக்கிறது. சடங்கில் இருந்து நிகழ்த்தலுக்கும், சடங்கிலிருந்து வேளாண்மைக்கும், சடங்கிலிருந்து வேளாண் உற்பத்திக்கும், உற்பத்தியிருந்து மனித உறவிற்குமானத் தொடர்பாட்டினைப் பல கவிதைள் காட்சிகளாக விரிகின்றன. 

வேளாண் சடங்கிலிருந்து வளமை வழியாக இன்பமும், இயற்தைச்சீற்றத்தின் வழி ஏற்படும் துன்பமும், துன்பவலியில் இருந்து உருவான படைப்பின் சொற்கள் ஆழ வேரூன்றி வெளிப்பட்டுள்ளன. நீரின்றித் தவிக்கும் திணைமாறியப் பறவைகளின் யாருமற்ற தனிமையில் முளைத்த சொற்களாய்ப் பதியம் இடுகிறார் மகாராசன்.

மனப்பறவை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் பூமியின் வறட்சியை ஆள் அரவமற்ற தனிமையில் வலசை தடங்களின் கதைகள் யாவும் கண்ணீர்கள் தூவிய பாதையாய் காட்சிப்படுத்தும் சொற்கள் என்றும் ஒரு பறவையின்வெளி வானத்தில் வலிகளோடு சிறகடித்துப் பறந்து, திரிவதைப் போல் துயரமொழி கவிதையில் வெளிப்பட்டுள்ளது.

ஓர் இலக்கியப் படைப்பாளி படைப்பின் வழியாக சமூகத்திற்கு ஏதோ ஒன்றை, சொல்ல நினைக்கும் தன்மை, படைப்பாளியின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. ஒரு படைப்பாளி மொழிதல் வழியாக இலக்கண மரபினைக் காட்டுவதோடு தொன்மையின் பருப்பொருளை உருவாக்குவது மட்டுமல்லாது கலை, இலக்கிய கொள்கைகளையும், உலகியலை நன்கு தெரிந்திருக்க வேண்டும். படைப்பாளியின் அழகியல், அனுபவம், விருப்பம், நுண்மை இவை படைப்பில் வெளிபடுவதன் மூலம் அப்படைப்பை வாசிக்கும் வாசகர் படைப்பாளியின் ரசனையோடும், அனுபவத்தோடும், வாழ்வியலோடும் தன் நினைவைப் பொருத்திப் பார்க்கிறார். 

அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் தமிழ் நில அடையாளத்தை முன்வைக்கிறது. பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு, தமிழ் ஈழநிலம் மீண்டெழ முடியாமல் போன கதைபேசி, நம்பிக்கைக்கான விதைப்பினை சொற்களாக, குறியீடாக, தொன்மமாக விதைத்துள்ளது நிலத்தில் முளைத்த சொற்கள் தொகுப்பு. 

“ பூர்வத்தின் வேர் நுனி மணத்து / தாய் நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு / பேருரு அடையாளத்தில் / மினுத்திருந்தது இவ்வினம்./அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து/குஞ்சுகளைக் காக்க/மூர்க்கமாய்ப் போராடின/ இரு தாய்க்கோழிகள். “தப்பிய புலிகளின்/ கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது/ ஒரு நிலம்”(பக்.51-52) பேரினவாத்தின் அழிவிலிருந்து தனக்கான தமிழ் ஈழம் புத்துயிர் பெற்றிருக்கிறது என மொழிகிறது கவிதை.

காலம், களம் 

எல்லா நிகழ்வியத்திற்கும் காலம், களம் (Time, Space) முக்கியத்துவம் பெறும் என்பதே தொல்காப்பியம் வழிப்பெற்ற கவிதைக் கொள்கையாகும். காலம், களம் கூறுமிடத்து அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடைய கருத்துகளாகும். அவ்வவ்காலமே படைப்பின் வழிக் களத்தைத்தேர்வு செய்துகொள்வது நியதியாகும். கவிதையின் பொருள் சார்ந்து அணுகும் போது களம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் கவிதைக்கான களம் என்பது ஒரு படைப்பாளி உருவாக்கிய படைப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டினை அணுகுவதும், கவிதையின் மேல்நிலை, கீழ்நிலை, கிடைநிலை, புதைநிலை என்கிற தன்மையில் அணுகுவதும் கவிதையைப் புரிந்து கொள்ளுதல் சார்ந்ததாக அமைகிறது. 

வாசகரின் புரிதல் கொள்கை எனும் சிந்தனையும் இலக்கியக் கொள்கையாக உருவான பின்னணியில் தான் கவிதைக்களம், கவிதை அர்த்த தளம் என்பது முற்றிலும் வாசகர் சார்ந்ததாக அமைகின்றது. கவிதை வாசிப்பவரே கவிதைக்கான முழுபொருளைப் பெறுகிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியாகக் கவிதையில் அமைந்த தொனிப்பொருளை இனங்காணமுடிகிறது. 

அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பு, வாசகரின் மனவெளியில் எளிமையாகப் பயணிக்கிறது. இக்கவிதைகள் யாவும் வேளாண் பண்பாட்டின் நீட்சியைப் பதிவுசெய்துள்ளன.

ஒவ்வொரு சொல்லுடனும் வாழ்வின் ஆதார உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சிகளை உருவாக்கும் நினைவுகளில் காலவிரிவும் கலந்துள்ளது. அவற்றைக் கவிதைகளில் திறனுடன் பயன்படுத்தமுடியும். சரியாக அமைந்த ஒரு சொல் உணர்வுகளைப் பற்றியெரியச் செய்யமுடியும். மகாராசன் அதைக் கவிதைகளில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

தமிழ்க் கவிதை மரபின் மைய ஓட்டத்தில் இருந்து முற்றிலும் விலகிய தனித்துவம் கொண்ட கவிஞர்கள் அடையாளம் காணலாம். நகுலன், அபி, பசுவய்யா, கலாப்ரியா, சுகுமாறன், மனுஷ்யபுத்தின், கல்யாண்ஜி, தேவதேவன், பிரம்மராசன், விக்ரமாதித்யன் முதலானவர்களின் கவிதை மொழியும் , வாழ்வின் இருத்தலும், உவமை அமைப்பும், பேசுபொருளும், தமிழின் மொத்தப் புதுக்கவிதைப் பரப்பிற்குள் புதுப்புதுக் கோணங்களைக் கொண்டவைகளாகும். இவர்களின் கவிதைகள் வடிவழகியல் சார்ந்த தத்துவப் பின்புலத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்குலாப், தணிகைச்செல்வன், பழமலய், அறிவுமதி முதலானவர்களின் கவிதைகள் கருத்தழகியலில் மையங்கொண்டிருக்கின்றன. 

மகாராசனின் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ தொகுப்பு, நிலம் குறித்த அழகியலாக வெளிப்பட்டுள்ளது. மேலும் நிலமற்ற தினக்கூலிகளின் துன்பக்கதையைப் பேசி விரிகிறது. நிலமிழந்த விவசாயிகளின் வலிகள் நிறைந்த வார்த்தைகள் கவிதைகளில் காணலாம். வாழ்வதற்காகப் போராடுவதும், போராடுவதற்காக வாழ்வதுமான வாழ்வியலை நிலம் என்பது அடையாளமாகக் கவிதைகளில் இடம்பெறுகிறது. கவிதையில் செம்புலப் பெயல் நீராகிப்போன செவல்காடு அன்போடு கலந்திருக்கிறது.

(நிலத்தில் முளைத்த சொற்கள், யாப்பு வெளியீடு, மே2024, விலை : ரூ.100)

கட்டுரையாளர் : 
முனைவர் ம.கருணாநிதி
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) 
திருப்பத்தூர் - 635601, 
திருப்பத்தூர் மாவட்டம்
பேச 9500643148
karunanidhi@shctpt.edu 


திங்கள், 2 செப்டம்பர், 2024

மொழியில் வழியும் நிலத்தாயின் பசுங்கரங்கள் - கவிஞர் இளையவன் சிவா


நிறைய ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், உரைநூல், தொகுப்பு நூல்கள்  எனத் தமிழின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மகாராசன் அவர்கள், ஏர் இதழை நடத்தியவர். பெண்மொழி குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையில் நாடகக் கலைச்சொல் களஞ்சிய அகராதி உருவாக்கத்தில் திட்டத் தகைமையராகப் பணியாற்றியவர்.

தமிழ்ச் சமூகம், மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கல்வி தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி இருக்கிறார். 


அறிவுச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் செம்பச்சை நூலகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். மக்கள் தமிழ் ஆய்வரண் மற்றும் வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம் வழியாகச் சமூகப் பண்பாட்டியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’.


‘அவரவர் ஆதி 

அவரவர் உயிருக்குள் 

அவரவர் வழித்துணை 

அவரவர் எண்ணத்தில் 

அவரவர் தாயும் 

அவரவர் நிலமும் 

ஒன்றென எண்ணும் 

உள்ளம் வாய்த்திடில் 

அவரவர் பண்பாடு 

அடுத்தடுத்துச் சிறப்பாகும்’

என்பதையே ஆதாரமாக்கும் கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த நூல். 


‘நிலமிலந்து போனால் 

பலமிழந்து போகும் 

பலமிழந்து போனால் 

இனம் அழிந்து போகும் 

ஆதலால் மானுடனே 

தாய் நிலத்தைக்

காதலிக்கக் கற்றுக்கொள்.’

நிலமும், நிலத்தின் வழியே நீளும் உறவும், உறவுகளின் நகருதலில் விளையும் சொற்களுமே எல்லாவற்றின் ஆதி என எழுந்து நிற்கிறது.  


மனிதன் தனித்துவமானவன் அல்ல. கூட்டு வாழ்க்கையில் எல்லா நிலையிலும் அவன் சார்ந்து வாழ்வது நிலத்தையும் நிலத்தில் முளைத்திடும் நம்பிக்கையையும் அல்லவா.  தன்னை நிறைத்துக் காற்றின் வெளியில் மண்ணைச் சுவாசிக்கும் ஆதிக் குடிகளின் பண்புகளைத் தனக்குள் வைத்திருக்கும் மனிதன் நாகரீகத்தை ஏந்தத் தொடங்கிய போதும் தொன்மங்களின் தன்மைகள் வழிகாட்ட வந்து நிற்பதை உணர முடிந்தவனாகி விடுகிறான். 


உழன்றும் உழவே தலை என்ற ஐயனின் வாய்ப்பாட்டில் இன்றைக்கு நிறையப் பேருக்கு ஐயம் நிறைந்து விடுகிறது. இதுவே அவரவர் மண்ணை வெற்று நிலம் என்று நம்ப வைத்து விடுகிறது. நிலம் நம்மைத் தாங்கும் உயிர்ப் பை என்பதை உணராத தலைமுறையினருக்கு மண்ணும் கல்லுமே நிலம் ஆகி விடுகிறது.


ஆதிமனிதன் தன்னையே ஒப்படைத்து நிலத்தைச் சீராக்கி அதிலேயே தன் ஆயுளையும் வளர்த்துக் கொண்டு சந்ததிகளை நீட்டித்தல் என்பது நிலம் அவனுக்கு வழங்கிய கொடை என்பதை இன்றைய மனிதர்களுக்கு உணர்த்துதல் காலத்தின் கட்டாயம் ஆகி விடுகிறது. 


உழுதவனின் பாடுகள் உரைக்க முடியாத சூழலில் வானம் பொய்த்துப் பயிரைக் கருக்குகிறது. ஆளும் அதிகார வர்க்கமும் வாழ்வை நகர விடாமல் இருட்டுக்குள் தள்ளுகிறது. இயற்கையின் சீற்றமும் புயலும் மழையும்  மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிகிறது. காடுகளும் மேடுகளும் தரிசுகளாகத் திரிவதை எந்த உழவனாலும் சகித்துக் கொள்ள முடியாமல் சவலைப் பிள்ளையின் மீது கரிசனம் காட்டும் தாய்மையைப் போல நிலத்திலேயே கதி எனக் கிடக்கிறான் உழவன்.  


இயற்கையை ரசித்து அதன் வாழ்வியலை வழிகாட்டுதலையே உழவுக்கான வழி என்று ஏந்தி நடந்திடும் உழவனின் பாடுகளைச் சொற்கள் எங்கும் எடுத்துச் சென்று மனங்களுக்குள் விதைக்கத் தொடங்குகின்றன. அதுவே 

"கருப்பம் கொண்ட 

பிள்ளைத் தாய்ச்சியாய் 

உயிர்த்தலைச் சுமக்கின்றன 

நிலம் கோதிய சொற்கள்" 

என நிலத்தையே தனக்கான ஆதித் தாயாகக் கவிஞரை வணங்க வைக்கிறது. 


தமிழ் மொழி, தமிழின் பண்பாட்டுச் சித்திரங்கள், அதன் வழியான நாகரீக அசைவுகள், தமிழ் ஈழம் எனத் தன்னை முழுமைக்கும் தமிழுக்குள் ஒப்புக்கொண்டு, சமுதாயத்தில் பண்பாட்டின் அடுத்த நகர்தலைத் தமிழுக்கானதாக மாற்றிக்கொள்ளத் துடிக்கின்றன இதில் முளைத்திருக்கும் எழுத்துப் பயிர்களும், அவை விளைத்திடும் கருத்துக் கதிர்களும்.


இறை வழிபாடுகள் தொடங்கியதன் வரலாற்றை ஆய்வு செய்கையில், மனிதனின் பயமும் அச்சமும் அவநம்பிக்கையும் புற வாழ்வின் நெருக்குதல்களில் இருந்து அவனைப் பாதுகாத்துக்கொள்ள ஏதோ ஒன்றை நாடிச் செல்லத் தூண்டுகின்றன. அதுவே அவர்களுக்கு ஒற்றைக் கல்லையும் தெய்வமென வணங்கும் உயிர்த்தன்மையைக் கொடுத்தன. 


நதிகளும் நாகரீகங்களும் வளர்த்துவிட்ட நற்பொழுதில்தான், குடிசைகளில் இருப்பினும் கடவுளை கட்டடம் கட்டி, கோபுரத்தில் அமர்த்தி, கருவறைக்குள் வைத்து வணங்கிடத் துடித்திட்ட கரங்களின் முயற்சியில் நம்பிக்கைகள் பலித்தன. ஆயினும், மண்ணும் மண்ணைச் சார்ந்த மனிதர்களும் தங்களுக்கான வாழ்வை வாழ முடியாது. 


இயற்கையோ இடர்பாடுகளோ இடையூறுகள் தந்து நிலத்தை நஞ்சாக்கி விட்டபின், ஆலயங்கள் கவனிப்பாரற்று இருண்டு போகின்றன. புஞ்சையும் நஞ்சையும் புழுதியும் பறிபோன பின்னே எல்லாத் திசைகளையும் வெறித்துப் பார்க்க மட்டுமே முடிகிறது இழந்தவன் பாடு. வழக்கம் போலவே கண்களை மூடி இன்னும் தியானிக்கும் கடவுளுக்கு எப்போதுதான் இளைத்தவன் பாடு தென்படக்கூடும் என உரத்துக் கேட்கிறது எழுதப்படாத எனதூர்த் தல புராண வரலாறு.

"கருவறைக்குள் 

ஒளிந்திருக்கும் தெய்வம் 

எப்போதும் போலவே 

வெளிவருவதாய்த் திட்டம் இல்லை இப்போதும்.

எழுதப்படாமலே போனது 

எனதூர்த் தல புராணம்.""


நிலம் தன்னை உயிர்பிக்க மேனியில் முளைத்திடும் மரங்களின் பசுமையை நீட்டித்து விடுகிறது. வானத்தின் கருணை தலை நீட்டாத போதும் மேகத்தின் பார்வை நிலத்தைக் கவனிக்காது போயினும், வேர்களை நீட்டி வெறுமையைப் புறந்தள்ளும் செடிகளின் உயிர்த்தல் இயற்கையின் தனிச்சிறப்பான பின், உழவனின் மனதிலும் இறுகப்பற்றி இருக்கும் ஈரத்தை எடுத்துக் கொள்ளும் நிலமே உயிர்களின் இசையை மீட்டெடுக்கிறது. 


தன்னை உயிர்பிக்கும் நிலத்தில் இருந்தே தனக்கான சொற்களை ஏற்றுக் கொண்ட கவிஞரின் சிந்தனைகளிலும் மண்ணும் மண்ணைச் சார்ந்த மக்களின் பாடுகளுமே பூத்து நிற்கின்றன.


தன்னிடமிருந்து நிலம் பறிக்கப்பட்ட நாளில் மிச்சமிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டவனுக்கு யாசிப்பதில் மனமில்லை. நிலத்தைக் கடவுளாக்கி தன்னைத் தந்து உயிர்ப்பித்தவனுக்குப் பறிபோனது நிலம் மட்டுமல்ல; கொஞ்சம் மிச்சம் இருக்கும் நிலத்தின் மீதான கருணையுமே.


ஆயினும், மேன்மக்களாகவே இருந்தவனிடத்தில் இன்னும் மிச்சம் இருக்கிறது அன்பின் ஒளி.  இரக்கமற்றவனையும் தன்னைத் துரத்தி விட்டவனையும் கருணையால் பார்த்திட சூழலையும் நேசிக்கும் ஒருவனால் மட்டுமே முடிகிறது. 


நிலத்தை நேசித்து வாழும் பறவைகளின் அசைவுகளுக்குள் மனதை ஒட்ட வைத்துக்கொண்டு தனிமைப் பொழுதுகளைத் தாவிப் பறந்திடும் கவிதை வானத்தில் வழிநடத்தும் மூதாதையர்களது கால் தடங்களையும் தேடிப் போகிறது கவிஞரின் சொற்கள்.

‘வலிக்க வலிக்க 

சாவினைத் தந்த போதும் 

பசி நிரப்பிய அவளது கண்களில் 

அன்பின் ஒளிதான் கசிந்தது’


அகவெளியில் மருண்டு கிடக்கும் மனதின் ஆற்றாமைகளைத் தன்னை நீட்டி வாங்கிக்கொண்டு இளைப்பாறவிடும் சொற்களுக்குத் தாயின் தாலாட்டைப் போல், தென்றலின் தீண்டலைப் போல், பால் பொழியும் நிலவின் குளிர்ச்சியைப் போல், பொக்கை வாயால் புன்னகைக்கும் மழலையைப் போல பெருமனது வாய்த்து விடுகிறது.    


நின்று நிதானித்து வினவிப் போகாத மனித  மனங்கள் பெருகிவிட்ட விரைவுச் சூழலில் அவரவர் வலிகளை ஆற்றிடும் வல்லமை சொற்களுக்கு உண்டு என ஆறுதல் கூறுகிறது பின்வரும் வரிகள். 

‘தனித்திருந்த பாடுகளை அணைத்துக்கொண்டு 

இளைப்பாற இடம் கொடுத்தன 

பால் நிறத் தாள்கள்.

மடியில் கிடத்தி 

நீவிக் கொடுத்த ஆத்தாளாய் 

ஒத்தடம் கொடுத்து 

சொற்கோடுகளை வரையவிட்டு 

வேடிக்கை பார்க்கின்றன 

அச்சேறிய பழுப்புத் தாள்கள்.

குவிந்து கிடக்கும் 

ஒத்தடச் சொற்களால் 

தணிந்து போகின்றன வலிகள்.’


தூண்டிலில் சிக்கிக்கொண்ட மண்புழுவைப் போலவே ஆசைகளில் சிக்கிக் கொண்டு தன்னைத்தானே மாட்டிக் கொண்ட மனிதனின் வாழ்வு கரையில் துடிக்கும் மீனின் பாட்டை ஒத்திருக்கிறது. முட்டி மோதி உயிர் மூச்சைத் தேடும் வாழ்வின் மீதான தீராத ஏக்கமும் மனிதனை ஓட வைக்கிறது; துடிக்க வைக்கிறது; இயங்க வைக்கிறது. 


ஆசைப் புழுக்களின் அசைவுகள் இல்லை என்றால் மனிதனும் மாண்டு போன மீனின் மனநிலைக்கு மாறி விடுவான்.

"நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து 

ஈர வாழ்வில் துடிப்பசைத்து 

மிதந்த மீன்கள்,

கரை மணலில் புரண்டு புரண்டு 

நிலத்தைப் பூசிக்கொண்டு 

மீத வாழ்வின் பேறு பெற்று 

வாய் திறந்து மாண்டு போயின.

உயிர்க்கொலைப் பழியிலிருந்து 

தப்பிப் பிழைத்த நினைப்பில் 

தக்கையில் தொங்கிக் கிடந்தது 

மண்புழு கோர்த்த தூண்டில் முள்."


வாசிக்க மறந்து நேசிக்க மறந்து இனத்தின் பெயரால் காவு கொடுக்கப்பட்டு இனத்தாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு மொழியின் வலிமையைப் பறைசாற்றாமல் மௌனத்தின் மீது மக்களுக்குக் கல்லறையில் எழுப்பி விட்ட இனத்தின் மிச்சத்தையும் கொன்றுவிட்ட ஆதிக்கத்தை என்ன செய்து அடக்கி விட முடியும்? இனத்தின் பசியும் நிலத்தின் வலியும் நிரப்பி வழியும் பெருந்தாகத்தில் பாலச்சந்திரனின் கண்களைப் போலக் காத்திருக்கும் எல்லோரது விழிகளும் மூடித்தானே கிடந்தன. பசித்த கண்களை அப்படியே கல்லறைக்கு அனுப்பி விட்ட மனப்பாங்கை கேள்வி எனச் சாட்டை வீசுகிறது பாலச்சந்திரனின் கண்கள்.


மனிதக் காலடிகள் படாத பூமியின் எத்தனையோ நிலங்கள் இன்னும் இயற்கையைச் சுமந்தபடி உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆணவமும் பொறாமையும் வன்முறையின் வடிவமும் பழிவாங்குதலின் வெறியும் விளைந்து கிடக்கும் மனிதனின் கால் தடங்கள் நிலத்தை முட்டுகையில் அசைந்து கொண்டது இயற்கை. 


இயற்கையின் மேனி நரம்புகளை அதிரடியாக அறுத்து எறிந்து விட்டு இசையைத் தேடிய பயணத்தில் இளைப்பாறத் திணறும் மனிதனை நில மங்கை எண்ணி எண்ணி வருந்துகிறாள். 


பெருநகரத்தின் வியப்புக்குள் தனக்கான வாழ்வை மீட்ட முடியாத கண்ணகியின் அவலத்தை வார்த்தைகளின் வலி சுமந்து விடுவதில்லை. கணவருடன் நடத்திடாத இல்லறத்தை எண்ணி தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலுக்குள் தன்னையே ஆட்டிக் கொண்டவளுக்கு அணையாத தீ எழுந்தபின் எதைக் கொண்டும் ஆற்ற முடியவில்லை அவளது நெருப்பை  என்பதை 'காலத்தடங்களின் கங்குகள்' இன்னும் சுமந்து அலைகின்றன என முடியும் கவிஞரின் எண்ணத்தில் மேடை போடுகிறது பிறரின் மீதான பேரன்பு. 


மனிதனை நேராக்கி வாழ்ந்திடவும் வளர்த்திடவும் விதைகள் தூவிய வனத்தின் அடிமடியில் கை வைக்கும் பேராசை வளர்ந்த பின்னே, இயற்கையும் செழிப்பும் பசுமையும்  பண்பாடுகளும் காணாமல் போய்விடுகின்றன. 


தன் தலையில் தானே மணலை அல்ல; சேற்றை வாரி இறைத்துக்கொண்ட மனிதனின் கொடுமைக்கு இயற்கையும் வனமுமே முற்றுப்புள்ளி வைக்கத் துவங்கி விட்டன. ஆயினும் தவறைத் திருத்திட தன் மகனைக் காவு கொண்ட இயற்கைக்குள்ளும் முளைத்து விடுகிறது தாய்மையின் பேரன்பு என்பதையே  "பித்துப் பிடித்து அலையும் வனத்தாய்ச்சி" கவிதை உரக்கச் சொல்கிறது.


வாழ்தல் என்பதன் அர்த்தம் என்ன? கனவுகளை ஈடேற்றலா?

காலத்தின் நகர்தலா? 

பிள்ளைகள் வளர்ச்சியா? 

பெருஞ்செல்வம் ஈட்டலா? 

திட்டமிடுதலின் தேவைகளில் நொடிக்கொருதரம் திசை மாறும் மனப் பறவையின்  வாழ்க்கை 

காலத்தில் கரைதல் அன்றி வேறென்ன?


காதலைச் சொல்லும் சொற்களிலும் மண்ணில் புரண்டு எழுந்து ஒட்டிக்கொண்ட புழுதியின் வாசம் நிரம்பி விடுகிறது. இயற்கையின் மீதான நேசம் உயிர்களின் மீதான பாசமுமே  காதலென மலர்ந்து, சொற்களுக்குள் சுக ராகம் மீட்டிக் கொள்கின்றன.  பூக்களும் பூக்கள் நிமித்தமும் மழையும் மழை நிமித்தமும் நினைவுத்த தடங்களில் அலையென மோதிக் கொண்டிருக்கும் காதலை மீள் உருவாக்கம் செய்து விடுகின்றன கவிஞரின் காதல் சொற்கள்.


உழவனை வணங்காத வாழ்வை உயிர் எனச் செப்புதல் கூடாது என்ற வள்ளுவனின் வாக்கியம், வேகமான அவசர யுகத்தில் இன்றைக்கு யாருக்கும் நினைவில் வருவதில்லை. உயிர்ச்சாமிகளென உலவும் உழுகுடிப் பாதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் நிம்மதி அடையப் போவதில்லை. 


காலச்சக்கரத்தின் சுழற்சிச் சமநிலை சரியாகும் போது செம்பாதங்களை வெண்பாதங்களின் கைகள் தொழும் என்பதை விளக்கும் கவிஞரின் உழைப்பு உழைப்பின் உயிரோட்டத்தை அறிவுறுத்திச் செல்கிறது. 

"நிலத்தில் இந்தப் பாதங்கள் 

நாளை இறங்கவும் மறுக்கும்போது 

வெண் பாதங்களின் கைகளும் தொழும்"

என்று முடிகிறது.


கவிதைத் தொகுப்பின் மொத்த வரிகளையும் உள்ளடக்கி ஆகச்சிறந்த கவிதை என ஓடிக் கிடக்கும் பேரன்பை இக்கவிதை முழுவதும் பரப்பி நிற்கிறது.

"சொல்லளந்து  போட்டவனுக்கும் 

நெல்லளந்து போடுறது தானப்பா சம்சாரிக வாழ்க்க".

என்ற உலகத்திற்கான பெருங்கருணையை விதைத்து நிற்கும் பெண்ணின் மனசு தான் நூல் முழுக்க அலை பாய்கிறது.


உயிரின் அடிப்படை வாழ்வை நாசமாக்கி, உயர் குடும்பத்தை உலாவ விடும் அதிகாரத்தின் கரங்கள் இன்னும் நீளுமானால், உணவுக்கும் உடைக்கும் நீருக்கும் காற்றுக்கும் தேடியலைந்தே செத்துப் போகும் உலகம் என்பதை இக்கவிதையின் வழி அறச்சீற்றமெனச் சாபமிடுகிறது கவிஞரின் ஆற்றாமை.

"வயலைப் பாழ்படுத்தி 

பயிர்களைச் சாகடித்துதான் 

விளக்கெரிய வேண்டுமெனில் 

வயிறு எரிந்து சாபமிடும் 

உழவர்கள் தூற்றிய மண்ணில் 

எல்லாம் எரிந்து சாம்பலாகி 

நாசமாய்ப் போகட்டும்".


அன்பில்லாத வாழ்வும் புரிதல் இல்லாத இல்லறமும் நம்பிக்கை துறந்த நட்பும் எப்போதும் இழப்புகளையே பிரசவிக்கின்றன. 

"உதடுகள் குவித்துப் பருகிய 

காதலற்ற முத்தங்களால் 

கசங்கிக் கிடக்கின்றன 

எச்சில் கோப்பைகள்".



உழவின் வரலாற்றை, உழவனின் ஓயாத உழைப்பை, வியர்வைத் துளிகளின் விளைச்சலை  கலப்பையில் கைப்பிடித்த காய்ப்புகளுடனும் கழனியில் வேரூன்றிப் போன கால்களுடனும் உணவை விளைவிக்கிறது நிலத்தின் பொறுமை என்பதை ஒளிக்காட்டி என இறைத்துச் செல்கிறது இந்த வரிகள்.


"கிழக்கத்தி மூலையில் 

ஒளித் துகள்களை 

விதையாய்ப் பாவிக்கொண்டு 

வெளிர் வானத்தில் நடந்து வரும் 

சூரிய மேனியின் மினுப்பில் 

வெளிச்சப் பூச்சை அப்பிக் கொண்டு 

ஒயில் முகம் காட்டுகிறது 

நஞ்சை நிலம்"

மனிதர்களின் மீதான நிலத்தின் தாய்மையை விதைத்துச் செல்லும் இந்த வரிகளே போதும் மனிதர்களை எல்லா துன்பத்திலிருந்தும் விட்டு விடுதலை ஆக்கிட.


"உழவு நிலத்தின் 

ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்து முளைகட்டிய விதைச் சொற்கள் வெண்முகம் காட்டிச் சிரித்தன.

வாழ்தலின் பேரின்பத்தை 

மணக்க மணக்கப் பாடியது 

பூப்பெய்திய காடு".


நூலின் அட்டைப்பட ஓவியம் வெகு அருமை. மிகச் சிறப்பானதொரு கட்டமைப்பில் ஓவியம் நூலின் முழுப்பாட்டையும் எடுத்துக் கூறுகிறது. அதேபோல் உள்பக்கங்களில் உள்ள கோட்டோவியங்களும் கவிஞரின் பாடுபொருட்களைப் பறைசாற்றி நிற்கின்றன.


உயிர்த்தலைச் சுமக்கும் நிலம் கோதிய சொற்கள்,

நெய் கசிந்த மாடக்குழிகள், 

மண் மீட்டிய வேர்களின் இசை, பாலச்சந்திரனின் கண்கள், 

இருட்டில் பெய்த சிறு மழை, காலத்தடங்களின் கங்குகள், 

மன்றாட அலையும் வனத்தாய்ச்சி, தன்னைத் தொலைத்த மனப்பறவை, பழுப்பேறிய நாட்குறிப்பின் நினைவுகள், உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள், கசப்பாய் முளைத்த கனவுகள், உக்கிப் போனது நிலம்,

சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி சாவிலும் கொடிது, நீர் முலைத் தாய்ச்சிகள், 

வழக்குச் சொல்லிலை, 

பெரு முதலைகளின் வைப்பாள்கள், 

வானம்  பாவிய துளி விதைகள்,

துரோகப் பருந்து, ஊழிப் பாம்பு,

கடல் தாய்ச்சி,  முளைகட்டிய விதைச்சொற்கள், 

களவு பூ  என்ற சொற்சித்திரங்களில் பூத்திருக்கும் இந்த கிராமத்து பசும்பூ நம் நினைவுகளில் எப்போதும் ஈரத்தையும் மண்ணின் பிசுபிசுப்பையும் ஒட்ட வைத்துக் கொண்டே இருக்கின்றது. 


தனது படைப்புகளை உருவாக்கும் அழகியலிலும் அரசியலிலும் மிகத் தெளிவான சொற்களையும் பொருத்தமான கருத்துக்களையும் பிணைத்திடும் கவிஞரின் பாங்கில் கலை மீதான பெருமதிப்பும் பேரின்பமும் விளைந்து நிற்கிறது. 


தமிழ்ச் சமூகம் மறந்து போன கால வெள்ளத்தின் ஓட்டத்தில் மறைந்து போன வேளாண் மரபைப் பற்றிய தரவுகளையும் பண்பாட்டு அசைவுகளையும் மீளுருவாக்கம் செய்து, இலக்கியத்தின் வழி தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கும் போராளியாக தனது கடுமையான உழைப்பாலும் தொடர்ச்சியான செயல்பாடுகளாலும் முன்னிற்பவரின் எழுத்தும் அவற்றையே எதிரொலிக்கின்றன.   


உழுகுடிக்குள் நம்மை உட்புகுத்தி, வயல் பாத்திக்குள் நம்மை உழைக்க வைத்து, சொற்கதிர்களால் மனப் பசிக்கு உணவிட்டு, நகரச் சந்துகளுக்குள் கிராமத்தின் புழுதியைப் பரப்பி இருக்கிறது நிலம் உருவாக்கிய சொற்களின் தொகுப்பு.

*

கட்டுரையாளர் :

கவிஞர் இளையவன் சிவா,

ஆசிரியர்,

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.

*


நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு,

பக்கங்கள் - 112, 

விலை: ரூ100/- 

(அஞ்சல் செலவு உட்பட).

புத்தகம் தேவைக்கு 

பேச : 9080514506

*
நன்றி:
நடுகல் இதழ், செப்டம்பர் 2024.