ஞாயிறு, 2 ஜூன், 2024

மகாராசனின் எல்லாக் கவிதைகளிலும் நிலமே பிரதானம் - எழுத்தாளர் சோ.தர்மன்


தம்பி ஏர் மகாராசன் தனது "நிலத்தில் முளைத்த சொற்கள்" எனும் கவிதைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ஐம்பத்தைந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்தியா எவ்வளவோ முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் சிகரங்களைத் தொட்டு, சந்திரனில் கால் பதித்திருந்தாலும், இந்தியா இன்னும் விவசாயத்தை முதன்மையாகக்கொண்ட நாடுதான்.

விவசாயத்தில் போதுமான லாபமில்லை. உற்பத்திச்செலவுகள் அதிகரித்து விட்டன. விளை பொருட்களுக்குப் போதுமான விலையில்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு. பருவ மழை பருவம் தவறி, புயல் மழையாகப் பெய்வதால் ஏற்படும் நட்டம் ஆகிய காரணங்களால் விவசாயிகள் ஏராளமானோர் தங்கள் நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு, பிழைப்புத் தேடி நகரங்களில் குடியேறிவிட்டதால் விவசாயம் நசிந்து விட்டது உண்மைதான். 

ஆனாலும், இன்னும் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் பேர் விவசாயத்தில் நட்டம் வந்தாலும் இன்னும் அதை விடாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எழுபது எண்பது காலகட்டங்களில் விவசாயம், கிராமம் சார்ந்த ஏராளமான படைப்புக்கள் வந்தன. அம்மாதிரியான எழுத்துக்களில் கிராமங்கள், கிராம மக்கள் சார்ந்த கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளம் பதிவாகின.

இப்போது கிராமங்கள் பற்றியும், விவசாயத் தொழில் பற்றியும், கிராமக் கலாச்சாரப் பண்பாடுகள் பற்றியும் எழுதுவதற்குப் படைப்பளிகளே இல்லை. எனக்குப் பிறகு கரிசல் பிரதேச மக்களின் வாழ்வியலை எழுதுவதற்கு எழுத்தாளர்கள் உருவாகவில்லை. அதன் விளைவு, கிராமங்களில் பயன்படுத்தும் அசலான தமிழ் வார்த்தைகள், சொலவடைகள், பேச்சு மொழி எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான் தம்பி மகாராசன் தன்னுடைய "நிலத்தில் முளைத்த சொற்கள்" நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இதில் தொழில்படும் வார்த்தைகள் அனைத்துமே அனேகமாக நிலத்தோடும், அந்நில மக்களோடும், இயற்கையோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் வார்த்தைகளே. எல்லாக் கவிதைகளிலும் நிலமே பிரதானம்.

ஏதோ ஒரு புது உலகத்திற்குள் பிரவேசிப்பது மாதிரியான அனுபவம் நம்மை வந்து பாடாய்ப் படுத்துகிறது. கவிஞர் யுகபாரதி அவர்களும், முனைவர் அரங்க மல்லிகா அவர்களும் அருமையான ஒரு முன்னுரையைத் தங்களுக்கே உரிய முறையில் எழுதியிருக்கிறார்கள். 

உரைநடை எழுத்தாளர்கள் நாவலாக எழுத வேண்டிய ஒரு தளத்தை, நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் தன்னுடைய கவிதைகள் மூலமாக. தம்பி மகாராசனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சோ.தர்மன்,

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.


*

நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

முதல் பதிப்பு, மே 2024,

பக்கங்கள்: 112,

விலை: உரூ 100/- 

(அஞ்சல் செலவு உட்பட),

வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக