வெள்ளி, 28 ஜூன், 2024

சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் உணர்வுகளைத் தந்திருக்கும் கவிதைகள் - கவிஞர் ஆர்.எஸ்.லட்சுமி


ஏர் மகாராசன் என்பது இவருக்குப் பொருத்தமான பெயர். சொல் எனும் ஏர் கொண்டு கவிதை எனும் நிலம் அகழ்ந்து, நிலத்தில் முளைத்த சொற்கள் எனும் நூலின் வழியாக அழகான கவிதைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

இவருடைய பாடல்கள் முழுக்க இந்தத் தொகுப்பிலே நிலத்தைப் பற்றிப் பேசுவதாய்த்தான் இருக்கின்றன.
ஒரு மலையை சொல்கிறார்…
ஒரு வயலைச் சொல்கிறார்…
ஒரு குளத்தைச் சொல்கிறார்…
ஒரு மரத்தைச் சொல்கிறார்..
குளத்தின் கரைகளில் படர்ந்திருக்கும் பாசிகளைச் சொல்கிறார்…
அதில் ஓடக்கூடிய மீனைச் சொல்கிறார்…
தூண்டிலுக்குத் தப்பித்த மீனைப் பற்றிப் பேசுகிறார்..
சின்னச் சின்ன குருவிகளைப் பற்றிப் பேசுகிறார்…
சின்னச் சின்ன செடிகளை, கொடிகளைப் பேசுகிறார்..
இப்படி, முழுக்க முழுக்க நிலம் சார்ந்த கவிதைகளைப் பற்றித்தான் பேசியிருக்கிறார்.

சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவி காதலைப் பற்றிப் பேசியிருப்பார்கள். மண்ணின் பெருமைகளைப் பற்றிப் பேசியிருப்பார்கள். நட்பைப் பற்றிக் கவிதைகள் இருக்கும். வள்ளல்களின் வள்ளல் தன்மையைச் சொல்லக்கூடிய கவிதைகள் இருக்கும். இதற்கு ஊடாக இயற்கையையும் வர்ணித்து இருப்பார்கள். அந்திப் பொழுது, எப்படியான அந்திப் பொழுது, எந்த நட்சத்திரம் அங்கிருந்தது, என்ன மாதம் அது, அந்த விவரிப்பு (Narration) அந்தக் காட்சிப்படுத்துதல், மன்னன், அவன் இருக்கக் கூடிய நாடு எப்படிப்பட்ட நாடு, அந்த நாட்டின் அமைவிடம், காடு, மலை, புவியியல் தன்மை, இப்படி இயற்கையின் எல்லாக் கூறுகளையுமே அழகாகப் படம் பிடித்துக் காட்டும் சங்க இலக்கியங்கள்..அதே மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன மகாராசனின் இக்கவிதைகள்.

//செங்குளத்து நீருக்குள் 
நீந்தித் திரிந்து
அலை வளையங்களோடு 
கரை ஒதுங்கி 
செலவுகளில் பொதிந்த நண்டுகளின் 
வழித்தடம் தேடித் தனித்தலைந்து
சுள்ளென்ற வெயில் பொழுதில்
பளிச்சென்று துள்ளிக் குதித்து
கரையின் மேலே
வந்து விழுந்தன மீன்கள்//
திரைப்படம் போலே காட்சிகளை விவரிக்கிறார். கேமராக் கோணங்களோடு இயற்கையைப் பதிவு செய்து அந்த இடங்களுக்கு நம்மைப் பயணப்பட வைக்கிறார்.

குளம் என சாதாரணமாகச் சொல்லாமல் “செங்குளத்து நீர்” என்று அவர் பாடுகையில், அந்தக் குளத்தின் நீர் சிவந்த நீர், அக்குளம் செம்மண் அடர்ந்த குளம் எனக் காட்சிப்படுத்திக் கொள்கிறோம். “அலை வளையங்கள்” என்ற வார்த்தைகளை அவர் உபயோகிக்கையில் சற்றே ஒரு ஒரு முறையேனும் நம் மனக்கண்ணில் அலைகள் திரண்டு வருவதைத் தவிர்க்கவே முடியாது. அதுதான் இக்கவிதையின் வெற்றி.

இங்கு “செலவு” என்ற சொல் மிக முக்கியமான சொல். செலவு என்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம் பயணச் செலவு, வீட்டுச் செலவு போன்றவைகள்தான்.. இங்கே “செலவு” என்பதை ஒதுங்கிடம் மாதிரி, குளத்திலே, கண்மாய்களிலே இருக்கும் சிறு சிறு பொந்துகளைத்தான். நண்டுகள் வாழக்கூடிய இடத்தைத்தான் மகாராசன் குறிப்பிடுவதாக நான் பொருள் கொள்கிறேன்.

“பளிச்சென்று துள்ளிக் குதித்து” மீன்கள் இயல்பாகவே பிரகாசமான மேனி கொண்டவை. மீன்கள் வண்ணமயமானவை. வெள்ளை மீனின் மேனிகூட அத்தனைப் பிரகாசமாய் இருக்கும். அந்தப் பிரகாசமும் சூரிய ஒளியும் இணைகையில் ஓர் பிரதிபலிப்பு ஓர் எதிரொளி இருக்கும். அதைத்தான் மீன் பளிச்சென்று துள்ளிக் குதிக்கிறது எனச் சொல்கிறார். இயற்கையை மகாராசன் எவ்வளவு தூரத்திற்கு ரசித்திருக்கிறார் பாருங்கள். அற்புதமான அவதானிப்பு.

//மூடித் திறந்த செவுள்களில் 
நுழைந்த காற்று
உயிர் தரப் பார்த்து
தவித்துப் போனது//
செவுள்கள் தான் மீனுக்கு மூச்சு விடக்கூடிய பகுதி. கரையில் விழுந்த மீன்களின் செவுள்கள் மூடி மூடித் திறக்கையில் வெளியே உள்ள காற்று உள்ளே போய் அதற்கு உயிர் தரப் பார்த்துத் தவித்துப் போனதாம். எப்படிப்பட்ட கற்பனை…கற்பனையின் உச்சம்…! 

ஒரு சாதாரண கற்பனையாக இதை எடுத்துக்கொள்ள முடியவில்லை. மிகப் பெரிய மனித நேயம்..நேயத்தின் உச்சம்தான் இந்தக் கற்பனை..!!
//உயிர்க் கொலைப் பழியிலிருந்து 
தப்பிப் பிழைத்த நினைப்பில்
தக்கையில் தொங்கிக் கிடந்தது
மண்புழு கோர்த்த தூண்டில் முள்//
மிகப் பெரிய Irony…! தூண்டிலோட வேலை என்ன? மீனைப் பிடிப்பது…
தூண்டில் நினைக்கிறதாம், 
“நல்லவேளை.. நான் மீனைப் பிடிக்கவில்லை..மீனைப் பிடித்திருந்தால் எனக்கொரு கொலைப் பழி வந்திருக்குமே”.
காற்று நினைக்கிறதாம் மீனுக்கு உயிர் தர முடியவில்லையே என. 
தூண்டில் நினைக்கிறதாம், ஒரு கொலைப் பழியிலிருந்து தப்பித்து விட்டோம் என.. இயற்கைக்கும் உயிரற்ற பொருளான தூண்டிலுக்கும் அன்பும் நேயமும் இருப்பதாகப் பார்க்கிறது கவிஞரின் கற்பனை.. மகாராசனின் கற்பனை அழகானது.. மகாராசனின் கற்பனை ஆழமானது..மகாராசனின் கற்பனை அபாரமானது…மகாராசனின் கற்பனை மனித நேயம் மிக்கது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், மே மாதமும் உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போய் ஒவ்வொரு நாளும் அழுதழுது. இனி அழுவதற்குக் கண்ணீர் இல்லை என்று ஒட்டுமொத்த தமிழினமே தவித்துக் கொண்டிருந்தது..

எத்தனையோ சாவுகளைப் பார்த்திருக்கிறோம். எத்தனையோ உயிர்க் கொலைகளைப் பார்த்திருக்கிறோம். நம் குடும்பங்களில் நடந்த இழப்புகளைப் பார்த்திருக்கிறோம். நம் அண்டைகளில் சுற்றங்களில் நிறைய இழப்புகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப் பெரிய இழப்பு நமக்கு மிகப் பக்கத்தில் ஏற்பட்ட நம் பிள்ளையின் இழப்பு.. 

ஒவ்வொரு தமிழ்த்தாயும், அப்பிள்ளையின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு, அது நான் பெற்ற பிள்ளை அல்லவா? இந்தப் பிள்ளையையா கொன்றார்கள் ? என்று கண்ணீர் வடித்தார்கள்..

பலிபீடத்தின் வாயிலில் தலை வைத்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைக்கும் தெரியும், நாம் இன்னும் சற்று நேரத்தில் கொல்லப்படப் போகிறோம் என. 

ஒரு துளி கலக்கம்…ஒரு வருத்தம்…ஒரு கோபம்….கொஞ்சம் பயம்.. ???? நாம் வடித்த அந்தக் கண்ணீரை, அந்த உணர்வுகளை மகாராசன் தன் கவிதையில் அவ்வளவு உணர்வோடு வெளிப்படுத்தி இருக்கிறார்..

அந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்குள் உறங்கிக் கிடந்த, உறைந்து கிடந்த அத்தனை அழுகையும் பீறிட்டு எழ, எனக்குள் புதைந்து கிடந்த தாய்மை உணர்வு மிகப் பெரிதாகப் பல்கிப் பெருகி ஓடியது..

//தன்னைக் கொல்லப் போவது தெரிந்தும்
இனவெறிப் பலிப் பீடத்தின் மீதமர்ந்து
வெள்ளந்தியாய் எதையோ
பார்த்துக் கொண்டிருந்தன
பாலச்சந்திரனின் கண்கள்// 
எரிமலைகள் என்றென்றும் ஓய்வதில்லை. என்றேனும் வெடிக்கக் கூடும். அன்றைக்கு நாம் பாலகன் பார்த்த பார்வைக்குப் பொருள் சொல்லுவோம்..

நம் பிள்ளைக்கு மகாராசன் செலுத்திய உணர்வுப்பூர்வமான அஞ்சலிக் கவிதையாய் இந்தக் கவிதையைப் பார்க்கிறேன்.

மல்லனும் மல்லியும் பழங்குடியினர்; மலை வாழ் சாதியினர். அவர்களுக்குச் சட்டம் தெரியாது. உலக நீதி தெரியாது. பகட்டான உடைகள் தெரியாது. நாள்தோறும் குளிக்க வேண்டும் எனத் தெரியாது. புனுகு பூசத் தெரியாது.. அத்தர் தெளித்துக் கொள்ளத் தெரியாது. காடு அவர்கள் வீடு. விலங்குகள் அவர்களின் பிள்ளைகள். பசித்தால் கிழங்குகளைத் தின்பார்கள்.. தேனைக் குடிப்பார்கள். அப்படித் திரிந்தவன்தான் மது. அவனுக்குப் பசிக்கிறது.. தேடிப் போகிறான். ஒரு சின்ன ரொட்டித் துண்டைத்தானே திருடினான்?

மாட மாளிகை கட்ட திருடவில்லை. கூட கோபுரங்கள் கட்ட திருடவில்லை. ஆடை அணிகலன்களுக்காகத் திருடவில்லை. வயிற்றில் பரவிய கொடும் பசிக்காகத் திருடினான்..

ஆனால், சமூகம் அவனுக்கு என்ன பரிசு கொடுத்தது ? சாவு.

//அவனது கண்கள் 
உயிர்ப்பிச்சை ஏதும் கேட்கவில்லை.
அரண்டு மிரண்டு அழவுமில்லை.
அவமானத்தால் வெட்கிப்போய் 
தலை குனியவுமில்லை.
அவனது கண்களில் 
நிரம்பி வழித்ததெல்லாம் 
பசி வலிதான்..
வலிக்க வலிக்க 
சாவினைத் தந்த போதும்
பசி நிரம்பிய அவனது கண்களில்
அன்பின் ஒளிதான் கசிந்தது//
எத்தனை அற்புதமான வரிகள்!
மகாராசனின் உணர்வுகள் நிரம்பிய வரிகள்! மதுவிற்கு மகாராசன் செலுத்திய அஞ்சலிக் கவிதை இது.

ஒரு பெண்பறவை தன் துணைக்காக ஏங்கிக் காத்திருந்ததாம்.. துரோகப் பருந்துகளும், ஊழிப் பாம்புகளும் அதன் கற்பனைகளைக் கொன்று குவித்தனவாம்.. 

//சூறைக் காற்றில் 
முறிந்து விழுந்த
பெரு மரத்திலிருந்த கூடும்
நாசமாய்ப் போனது.
உக்கிப் போயிருந்த பெண் பறவை
தனித்துப் பறக்க துணிவில்லாது
துவண்டு போனது.
சுள்ளிக் குச்சிகளை 
வாயில் கவ்வியபடி
தூரத்து மரக் கிளையில் 
கவ்வை பார்த்தது ஆண் பறவை.
புதுக் கூட்டை வேய்ந்த பிறகு 
தனித்திருந்த பறவையின்
சிறகைக் கோதி நீவி
ஆண் பறவை அழைத்தது..
பள்ளத்து நீரில் முங்கிக் குளித்து
சிறகை உலர்த்திய பெண் பறவை
புல்லின் தாள்களை 
இணுகிக் கொண்டு
புதுக் கூட்டில் மெத்தை செய்தது.
கூடடையும் பொழுதுகளின் கீச்சொலிகள்
காதலை இசைத்துக் கொண்டிருந்தன.
மெல்ல நகைத்த இரவின்
மவுனத் தாலாட்டில்  
தூங்கிப் போயின பறவைகள்..//
என்ன சொல்லாடல்!! என்ன சொல்லாடல்!!! படித்ததும் ஆற்றங்கரையோரம் இசைஞானியின் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்தது போலிருந்தது..
மகாராசன், தோழர், அய்யா, தம்பி…
கடவுள் படைத்தாராம் ஐம்பெரும் 
பூதத்தை…நீவீர் கடவுள், உங்கள் படைப்புகளில் ஐம்பெரும் பூதம் படைக்கும் கடவுள்..
1) மனிதம்
2)மண்
3)தமிழினம்
4)இயற்கை
5)மொழி
எனும் ஐம்பெரும் பூதம் படைத்த கடவுள் நீங்கள்..

தமிழினமும் தமிழ் மொழியும் வரலாற்றின் பக்கங்களில் உங்கள் பெயரை நிச்சயம் செதுக்கும்…💐

கட்டுரையாளர்
கவிஞர் ஆர்.எஸ்.லட்சுமி,
ஆசிரியர், மதுரை.

***


நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக