திங்கள், 29 ஜூலை, 2024

சொற்கள் பேசும் அரசியலும் அழகியலும் - கவிஞர் கோ.கலியமூர்த்தி


ஏர் மகாராசன் அற்புதமான ஆய்வாளர். ஆக்கபூர்வமான சமூக இலக்கியப் பண்பாட்டுச் செயல்பாட்டாளர். அவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’.

நிலம், நிலம் கைவிட்டுப்போதலின் வலி, நிலம் வளமிழந்த கதை எனப் பாடுபொருட்கள் விரியும் வலிமிகுந்த உலகம் மகாராசனின் கவிதை உலகம்.

இது கற்பனை உலகம் அல்ல. கண்ணீரின் அமிலத்தில் ஊறும் எதார்த்த உலகம். கதறலாகக் கண்ணீராக ஒப்பாரியாகப் பெருகி வழியும் சொற்கள் பேசும் அரசியல் அழகியலும் செழிக்கிற களமாகியிருக்கிறது.
     “துளைகள் ஏதுமின்றி
     வேர்கள் இசைத்ததில்
     கிளைகள் தலையாட்டி
     பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
     காட்டுச்செடிகள்”
என அபூர்வமான அழகியல் மிளிர்கிறது தொகுப்பில்.
   “வெளிறிய வானத்தில்
    திசைகள் தேடிய பறவைகள்
    கூடுதிரும்பிய நாட்களில்
    மனிதர்கள் யாருமேயில்லை”
என்றெழுதுகிறார் மகாராசன்.

ஏன் மனிதர்கள் யாருமில்லை? எங்கே போனார்கள் அவர்கள்? என்ன நேர்ந்தது அவர்களுக்கு? ஏன்? எப்படி? கேட்டுக்கொண்டே பின்தொடரும் போது ஒரு வலிமிகுந்த வரலாறு விரியும்.

இப்படிக் காட்சிகள் ஊடே நம்மை வேறுவேறு தளங்களுக்கு அழைத்துப்போகும் மகாராசனின் தொகுப்பை யாப்பு வெளியீடு கொண்டுவந்திருக்கிறது.

வாழ்த்துகள் மகாராசன் ...

கட்டுரையாளர்:
கவிஞர் கோ.கலியமூர்த்தி
திருச்சி.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



ஞாயிறு, 28 ஜூலை, 2024

மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்களில் வேர்களின் இசை ஒலிக்கிறது - கண்ணன் விசுவகாந்தி

நடிகர் ஓவியர் பொன்வண்ணன் அவர்களின் சிறப்பான முன்னட்டை ஓவியம். கந்தையா ரமணிதரனின் அழகான பின்னட்டை ஒளிப்படம். தொகுப்பெங்கும் பித்தனின் சிறப்பான கோட்டோவியங்கள். தளுகையிலும் கவிதை. மகாராசனின் பிற நூல்கள் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.

அழகான தலைப்புகளுடன், கவிஞர் யுகபாரதியின் சிறப்பான அணிந்துரை (ஒளிரும் ஒத்தடச் சொற்கள்) மற்றும் முனைவர் அரங்க மல்லிகா (மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலம்) அவர்களின் விரிவான மதிப்புரை. நன்றியில் மகன் (அகரன் தமிழீழன்), மகள் (அங்கவை யாழிசை) ஆகியோரின் அற்புதமான தமிழ்ப் பெயர்கள்.

பெரும்பாலான கவிதைகள் நிலம் பற்றிய கவிதைகள், ஈழத்து நிலம் உட்பட.

படிம அழகு :

நீர்மையாய் வழிந்தோடும் 
சொற்களால் நனைந்து நனைந்து 
பசப்படித்தது நிலம், வழிந்தோடும் சொற்கள், பசப்படிக்கும் நிலம். அருமையான கற்பனை.

நஞ்சையும் புஞ்சையும் கைவிட்டுப் போய், உழவர்கள் ஊர் விட்டுப் போன ஊரின் சிதிலமடைந்த கோவிலைப் பற்றிய கவிதை இப்படி முடிகிறது:

‘எழுதப்படாமலே போனது
எனதூர்த் தலபுராணம்’

நிலமற்றுப் போவது, எவ்வளவு வேதனை.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று, அழகான கற்பனையில்:

‘துளைகள் ஏதுமின்றி 
வேர்கள் இசைத்ததில் 
கிளைகள் தலையாட்டி 
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன 
காட்டுச் செடிகள்.
மண்மீட்டிய வேர்களின் இசை
காடெல்லாம் மணத்துப் பரவியது.

மண்மீட்டிய இசை, காடெல்லாம் மணக்கிறது – எவ்வளவு அழகு.

மற்றுமொரு சிறந்த கற்பனை, கவிதையும் எழுதும் தாள்களும் பற்றிய ஒன்று:

‘மைத் தூவலின் 
அழுகைத் தேய்ப்பில்
கசிந்து வழிந்த சொற்கள்’.

‘குவிந்து கிடக்கும் 
ஒத்தடச் சொற்களால் 
தணிந்து போகின்றன வலிகள்’.

மீன்களைப் பற்றிய கவிதை, மீன்களை மட்டுமா பேசுகிறது? நிலத்தையும் மனிதர்களையும் அல்லவா பேசுகிறது.

பாலச்சந்திரன் பற்றிய கவிதை இப்படி வேதனையுடன் முடிகிறது:

‘பசித்த கண்கள் 
பழி தீர்க்காமலே மூடிக்கொண்டன’.

கைவிடப் பட்ட நிலம் தொகுப்பெங்கும் வருகிறது:

‘நாதியற்றுக் கிடந்தாள் 
நிலத்தாள் மட்டும்’.

மலைவாசத் தலங்களெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட, கோபத்தில் எரிக்கிறாள் வனத்தாய்:

‘காலில் விழுந்து மன்றாட 
பிஞ்சுகளின் ஆத்மாக்களைத் தேடி
பித்துப்பிடித்து அலைகிறாள் 
வனத்தாய்ச்சி’.

நாமெல்லாம் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய ஒன்று.

நிலம் பற்றிய மற்றும் ஒரு அழகான படிமம்:

‘உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் 
நிலமெனும் ஆத்மாக்களின் 
அழுகைத் துளிகள்’.

காதலின் நினைவுகளிலும் நிலம் சார்ந்த படிமங்கள்:

‘மிச்சமிருந்த கனவின் எச்சங்கள் 
நாயுருவி முள்ளாய் ஒட்டிக்கொண்டன’.

தாய்மடிகள் இரண்டு இருந்த இனம் ஒன்று அழிந்த கதையொன்று நெடுங்கவிதையாய் விரிகிறது.

சம்சாரிகளின் வலியைச் சொல்லும் கவிதை:

‘சம்சாரிகளாய்ப் பிறந்ததின் வலி
சாவிலும் கொடிது’.

மழையாலும், மழையின்றியும் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், நிலத்தை விட்டுப் பிரிய முடியாத சம்சாரித் தலைமுறையின் கதறல்:

‘ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு 
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை
அறுத்தெறிய மனசில்லையே மக்கா;
அறுத்தெறியவும் முடியலையே மக்கா’.

ஆறுகளை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் கவிஞர்:

நீர்ச் சேலைத் துணிகள்,
உமிழ்நீர்ச் சுரப்பிகள்,
நீர்முலைத் தாய்ச்சிகள்.

குடுகுடுப்பைக்காரனும் குடியானச்சியும் கவிதை ஒரு காவியம்.

கண்ணீர் கசிய, இறகுகளை உதிர்க்கும் மனப்பறவையை, மென்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் ஊழிப்பெருங்காலம் என்கிறார் ஒரு கவிதையில்.

கரிக்கும் எரிநெய்க்கும், நிலத்தை பாழ்படுத்தும் நவீன முறையை சாபமிடும் கவிஞன்:

‘வயலைப் பாழ்படுத்தி 
பயிர்களைச் சாகடித்துதான் 
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில் 
எல்லாம் எரிந்து சாம்பலாகி நாசமாய்ப் போகட்டும்’.

கைக்கிளை, பெருந்திணையின் தவிப்பு இக்கவிதை:

‘வெறுமை மண்டியிருக்கும் 
வாழ்நிலத்தில் 
கூந்தல் சூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்.
பறவையின் வரவுக்காய் 
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன 
பெருந்திணைக் கனிகள்.

நீர், நிலம், கடல் எல்லாவற்றையும் தாயாய்ப் பார்க்கிறது கவி மனம்: நீர்த்தாய்ச்சி, நிலத்தாய்ச்சி, கடல் தாய்ச்சி.

விதைகள் முளைத்ததும் நிலத்தின் மகிழ்ச்சியை இவ்வாறு பாடுகிறார் கவிஞர்:

‘வாழ்தலின் பேரின்பத்தை 
மணக்க மணக்கப் பாடியது
பூப்பெய்திய காடு’

தாயின் ஞாபகம் ஊரின் ஞாபகத்தை இழுத்து வர, இன்று யாருமே இல்லாத சோகம்:

‘நினைக்கவும் நீயில்லை;
தலை தட்டவும் ஆத்தாளுமில்லை.
நம் கால்கள் பதிய நடந்த ஊருமில்லை’.

அழகான கற்பனையில் மற்றும் ஒரு கவிதை:

‘ஆறுகளின் ஈர நாவுத் தழுவலில் 
கருக்கொண்டன வயல்கள்’.

காதல் கவிதைகளும் நிலத்தின் மண்மணத்தோடு:

‘நீயற்ற வெறுமையை
நத்தைக் கூடாய்ச் சுமந்து திரிகின்றது
எனது வெறும்பாடல்’.
….
‘கக்கத்தில் சுமந்திருக்கும் 
நிறைகுடத்து நீருக்குள் 
முழுதாய் மூழ்கிடத் தவித்தது 
மந்தையின் ஓரத்தில் கிடந்த 
இளவட்டக்கல்’.

‘வாடாமலும் கசங்காமலும் 
நம்மிருவருக்கு மட்டுமே 
மணத்துக் காட்டுகிறது 
மறைகாலத்தின் களவுப் பூ’.

‘முழுநிலவு வெளிச்சத்தின் 
யாமத்துப் பொழுதுகளில் 
முளைத்த நினைவுகள் 
பாதைகள் முழுக்க 
பூத்திருக்கின்றன’. நிலத்தில் முளைத்த இந்த சொற்களில் வேர்களின் இசை ஒலிக்கிறது.

வேறுவேறு வார்த்தைகளில், திரும்பத் திரும்ப கவிதைகள், ஒரே பாடுபொருளாய் இருப்பதால் சற்றே சலிப்பைத் தருகிறது. சில கவிதைகள் வெறும் காட்சி வர்ணனையாக நின்று விடுகிறது.

சிறப்பான வாசிப்பு அனுபவம்.

கட்டுரையாளர் :
கவிஞர் கண்ணன் விசுவகாந்தி,
மென்பொறியாளர், சேலம்.
*

நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


ஞாயிறு, 21 ஜூலை, 2024

மண் கடத்திய வேர்களின் வலி நூலெங்கும் பரவியிருக்கிறது - பாவலர் வையவன்


ஒருவரின் காதல் எதன்மீதாக இருக்கவேண்டும்? என்னவாக இருக்கவேண்டும்? ஆண் அல்லது பெண்ணின்மீது கொள்ளும் காதல் மட்டும்தான் காதலா? நிலத்தின்மீதும் இனத்தின்மீதும் மொழியின்மீதும் கொள்ளும் காதல் காதலாகதா? 

இம் மூன்றின்மீது கொள்ளும் காதலே மற்ற காதல்களை முழுமையாக்கும் என்பது என் கருத்து. அதற்கு தமிழினத்தின் வரலாறு நெடுக சான்று உள்ளது. அப்படி அம்மூன்றின் மீதும் காதல் இல்லையாயின் அடிமைக் காதலும் அடமான வாழ்வுமே வாய்க்கும். வாழ்வின் இலக்கணமே நிலமும் பொழுதும்தானே! 

நிலத்தையும் இனத்தையும் தீராது நேசிக்கும் ‘தமிழ்த்தோழர்’ மகாராசன் அண்மையில் அவரது படைப்பான ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பினை எனக்கு அனுப்பிவைத்தார். நூலிலுள்ள ஐம்பத்தைந்து கவிதையிலும் பஃறுளியும் குமரிக்கோடுமாய் பரவியிருந்த ஆதி தமிழ்நிலத்தின் மண் அப்படியே ஒட்டியிருக்கிறது. அத்தோடு அந்நிலத்தில் தாய்ப் பாலாய் ஓடிய ஆறுகள் இன்று கண்ணீராய்ச் சிந்திக்கொண்டிருக்கிற கவலையும் அப்பியிருக்கிறது. மண் கடத்திய வேர்களின் வலி மகாராசன் தூரிகை வழியே நூலெங்கும் பரவியிருக்கிறது.

குவிந்து கிடக்கும் ஒத்தடச் சொற்களால் தணிவதல்ல அவ் வலிகள். கடந்த அரை நூற்றாண்டின் பெருந்தாகம் நிலமெங்கும் விக்கலாய் வெளிப்படுகிறது. பசித்த கண்கள் பழிதீர்க்க முடியாமல் பரிதவிக்கிறது. 

இன்னும் மிச்சமிருக்கும் புழுதிக் காடுகளின் பனையோலை தூர் இடுக்குகளில் எச்சங்களை விதைத்துச் செல்லும் பறவைகள் மட்டுமே நிலத்தின் நம்பிக்கையாக இருக்கின்றன. 

கரும்பச்சைக் கூடாரமாய் நீண்டு படுத்திருந்த மலைத் தாய்ச்சியின் மனிதப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழிறக்கப்பட்டார்கள்; நிலத்திற்கு வந்தேறியவர்கள் வனத்தைச் சொந்தமாக்கி மெல்ல மெல்ல மேலேறினார்கள். பழுப்பேறிய உழைப்பும் வெள்ளந்தி வாழ்க்கையும் பச்சையம் இழந்த நிலமும் கந்தல் துணியாய் நைந்து நைந்து இத்துப் போயிருக்கின்றன. 

வியர்வை மணக்கும் நெல்லினை அள்ளி அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் இன்று பருக்கைகளுக்காகக் கையேந்திக் காத்துக் கிடக்கின்றன. கூடிழந்த பறவைகளாய் வீடிழந்து நிற்கிறது இனம். சோற்றுக்கு வாலாட்டிய நாய்கள் போக தப்பிய புலிகளின் கால்தடம் பதியக் காத்திருக்கிறது ஒரு நிலம். அதற்கு வாய்க்கும் பொழுது.

வாங்கிப் படியுங்கள்; வட்டம் போடுங்கள் !

கட்டுரையாளர்:
பாவலர் வையவன்
திருவண்ணாமலை.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வியாழன், 18 ஜூலை, 2024

புழுதி மண் தடவிய காலத்தை நினைப்பூட்டும் கவிதைகள்.


நிலத்தை, 'இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்' என்றது வள்ளுவம்.


'வண்ணச்சீரடி.. மென் பாதம்
மண்மகளும் அறிந்திலாள்'
என்றது கம்பராமாயணம்.
இன்னும் பிற கவிஞர்கள் நிலமடந்தை என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆக, மண்சார்ந்த நிலம் ஒரு ஆக்க சக்தியாக விளங்குவதற்கும் பிரபஞ்ச உற்பத்தியின் மூலப் பொருளே நிலம், நிலம், நிலமே என்பதே. 

ஒரு செடியைப் பிடிங்கினாலும் அதனுடன் மண் ஒட்டிக்கொண்டு வருவது போல, ஒரு மரம் வேருடன் சாயும்போதும் அதனுடன் தான் இருந்த இடத்தின் மண்ணையும் எடுத்தபடி வருவது போல 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பில் எந்தக் கவிதையை எடுத்தாலும் தான் வாழ்ந்த - சார்ந்திருந்த தன் மூதாதையர்கள் வாழ்வியலில் படிந்திருந்த உழவையும், மண்ணையும், உழவுக்கான தளவாடங்களையும், பாடுகளையும் தவிர்த்தவிட்டு எழுதவில்லை. தன் உழுகுடி நிலத்தில் முளைத்த சொற்களை வைத்து நேர்த்தியாகக் கவிதைகளாக்கியிருப்பது மாபெரும் வெற்றியே.

தொல் குடியில் நிலம், நிலம் சார்ந்த பொழுதுகள்தான் வாழ்வியல் பயன்பாடுகளில் மரபுவழியாக வந்திருக்கிறது. அதன் நீட்சியாக இக்கவிதைத் தொகுப்பு நம்மைச் சங்க காலத்திற்கும் நவீன காலத்தின் இடைப்பட்ட காலத்திற்கும் அழைத்துச் சென்று, அலுப்பு தட்டாது நீள் கவிதையாகத் தந்திருப்பது தனிச்சிறப்பு. 

புழக்கத்தில் நம்மால் கைவிடப்பட்டு நிற்கதியாக இருக்கும் சொற்களைத் தேடி எடுத்து, தேவையான இடத்தில் கையாண்டு இருப்பது ஆச்சரியப்பட வைக்கிகிறது.

அவரின் நிலத்தில் காதல், வீரம், மண்ணின் வயனம், நெகிழ்ந்த வயல்வெளிகள், நம்மால் வங்கொலை செய்யப்பட்ட தாவரம், புழு, பூச்சிகள், கால்நடைகள், சிறுபொழுது, பெரும்பொழுதுகளை அழகியலுடன் தமக்கே உரிய மொழிநடையில் கவிதையாக்கியிருப்பது பிரமிப்பே.

'தெப்பென்று நிரம்பியிருக்கும் கண்மாய் மடைத் தூம்புக் கண்களின் நீர்ப் பாய்ச்சலில் தாவி 
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய் வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்'
காட்சியலுடன் அழகியலும் கலந்து நம்மை வாமடைப் பக்கம் சற்றுநேரம் உட்காரவைத்து விடுகின்றன வரிகள். இங்கு தெப்பென்ற சொல்லே தெப்பத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் புதிய கேள்வி ஒன்றையும் வைக்கிறார் கவிஞர்.
'காலத்தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர் முட்ட கசிந்த 
வாழ்வின் தனிப்பொழுதுகள் மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு பாடாத மனத்தொட்டிலும் நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.
கண்களில் வழிந்த சுடுநீரும்
அவள் ஆழ்மனத் தீயை அணைக்கவில்லை'. 
இக்கவிதை ஒன்றுபோதும் நம்மை விசனப்பட வைக்க. 
நிலத்தில் முளைத்த சொற்கள் யாவற்றையும் வீரியத்துடன் தந்திருக்கிறார் கவிஞர். உள்ளது தேடி அகழ்ந்து எடுத்து, இறுதியாகவும் சூட்சுமத்துடனும் ஒரு நம்பிக்கை விதையைத் தந்திருக்கிறார். 
'தப்பிய புலிகளின் 
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது 
ஒரு நிலம்'.
நாம் அனைவரும் இந்த நம்பிக்கை விதையைப் பாதுகாப்போம்.

இது அவர் நிலத்தில் முளைத்த சொற்கள் அல்ல; நம் யாவரின் நிலத்திலும் உருண்டு புரண்ட சிராய்புப் காயத்தில் புழுதி மண்ணைத் தடவிய காலத்தை நினைப்பூட்டிச் செல்கிறது. வாசிக்க வேண்டிய கவிதை நூல்.

நூல் வெற்றி பெறட்டும். வாழ்க.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



வெள்ளி, 12 ஜூலை, 2024

சொற்களில் முளைத்த நிலம் - கவிஞர் கூடல் தாரிக்


'முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே' என்பார் தொல்காப்பியர். அந்தவகையில், நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன ஏர் மகாராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பு. தொகுப்பெங்கும் அபூர்வமான சொல்லாடல்கள் இத்தொகுப்பின் கூடுதல் பலம்.

இயற்கைச் சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என, நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது. நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத்தொகுப்பினை உயிர்ப்பு மிக்கதாக்குகின்றது.

ஊரில் விளைச்சல் இல்லாத தருணத்திலும் குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளந்து கொடுத்து, 
"சொல்லளந்து போட்டவனுக்கு
 நெல்லளந்து போடுவதுதான்
 சம்சாரிகள் வாழ்க்கை" 
எனச் சொல்லுகிறாள் குடியானப்பெண். இது அவளின் குரல் மட்டுமல்ல, உழுகுடி மக்களின் குரலும் ஆகும்.
இப்படியான ஈகைக்குணம் பொருந்திய மக்கள் நிலமிழந்து போனபிறகு, பிறரிடம் கையேந்தும் நிலையைச் சொல்பவர்,
"உக்கிப்போனது நிலம்" 
என்றே சொல்கின்றார். மற்றுமொரு கவிதையில் மனிதர்கள் இல்லாத நிலத்தை,
"நாதியற்றுக் கிடந்தாள் நிலத்தாள்"
என்னும் சொற்றொடரில்
குறிப்பிடுகின்றார்.

நிலத்தை உயிர்ப்பு மிக்க ஒன்றாகவும் தாயாகவும் பார்க்கும் மனநிலை நிலத்தோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு வரும்.

அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரான சுகுவாமிஷ் பழங்குடியினர் தங்களின் நிலத்தை வெள்ளையர்களுக்கு விற்ற சமயத்தில், அந்த இனத்தின் தலைவன் சியாட்டல், 'இந்த நிலம் எனது தாய். இந்த நிலத்தின் மீது நீங்கள் உமிழாதீர்கள். அது என் தாயின் மீது உமிழ்வதற்குச் சமம்' எனக்கடிதம் எழுதினான். நிலத்தோடு தன்னை இரண்டறப் பிணைத்துக்கொண்ட வாழ்வுதானே அவனை அவ்வாறு எழுத வைத்தது.

தொகுப்பின் மற்றுமொரு கவிதையில் நீரைவிட்டு துள்ளிக்குதித்து வெளியேறும் மீன்கள் வாய் திறந்து மாண்டுபோயின என்கின்றார். 

இந்த நீள்கவிதையை ஆழ்ந்து வாசித்தால், நீர் என்பது நிலம் என்பதும், மீன்கள் என்பது நிலம் விட்டு வெளியேறிய மக்கள் என்பதையும் உணர இயல்கின்றது.

சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பெருமரத்திலிருந்த கூடும் நாசமாகிப்போனதால் துயரம் அடைந்த பெண்பறவை துவண்டு போனதாக இன்னொரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.

சூறைக்காற்றுதான் அதிகார வர்க்கம். கூடுதான் நிலம். பெண் பறவை என்பது நிலத்தின் பலவீனமான மனிதனின் குறியீடாகத்தானே இருக்க முடியும்!

நிலத்தையே முதன்மையாகக்கொண்ட தொகுப்பு என்பதால் என்னவோ ''வெளிச்சப்பூவை அப்பிக்கொண்டு
ஒயில் முகம் காட்டுகிறது 
நஞ்சை நிலம்''
என்கின்றார்.
"உயிர்த்தலை 
அடைகாத்துப் படுத்திருக்கிறது 
நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம்"
எனவும் சொல்கின்றார்.

முளைகட்டிய விதைச்சொற்கள் கூட உழவு நிலத்தின் ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்தவையாகத்தான் அவருக்குத் தோன்றுகிறது.

தொகுப்பில் காணப்படும் மழைக்கவிதைகள் மழையைக் கொண்டாடுகின்றன. நிலத்தைச் செழிப்பு மிக்கதாக மாற்றிய காரணத்தினாலேயே மழையைப் போற்றுகின்றன. 

விசும்பின் துளிவீழாவிட்டால் பசும்புல் தலைகாண்பது அரிது என வள்ளுவரின் வழிநின்று மழையைக் கொண்டாடக்கூடியவை அவை. 

'நீர் முலைத்தாய்ச்சி' எனவும் 'நிலத்துக்கு அணிவிக்கப்பட்ட நீர் மாலை' என்றும் மழைகுறித்த அவரின் வர்ணனைகள் நீள்கின்றன. நிலத்தையும் அதன் விளைச்சலையும் நேசிக்கத் தெரிந்தவர்களால் மழையை நேசிக்காமல் இருக்கமுடியாதுதானே!

வெறும் வலியை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நல்ல படைப்புக்குரிய தன்மை அல்ல. வாசிக்கும் வாசகனுக்கு நம்பிக்கையையும் அது விதைக்க வேண்டும் என்பர். அந்த வகையில் நிலத்திலிருந்தே நம்பிக்கையை விதைக்கின்றார். மண் தனது உதடுகளால் துளைகள் இல்லாத வேர்ப்புல்லாங்குழலை இசைக்கின்றது. அதிலிருந்து வெளிவரும் இசை, பூக்களாக உருமாறிப் பூத்துச் சிரிக்கின்றன என்கின்றார். அந்தப்பூக்கள் வெறும் பூக்கள் மட்டுமல்ல; மகாராசன் தனது படைப்பின்வழி மலர்த்தித் தரும் நம்பிக்கை என்றால் அது மிகையில்லை.

கட்டுரையாளர்:
கவிஞர் கூடல் தாரிக்
கம்பம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


செவ்வாய், 9 ஜூலை, 2024

சேறு மணக்கும் கவித் தொகுப்பு - எழுத்தாளர் அகரன்


கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பான 'சொல் நிலம்' அடுத்து, பெரிய இடைவெளியில் வெளிவந்திருக்கிறது இந்த இரண்டாம் கவிதைத் தொகுப்பு.


புத்தகம் முழுமையும் மணத்திடுது மண்வாசம். நிலத்தாள்... வனத்தாள்.. முலைத்தாய்ச்சி.. எனக் கவிதை தோறும் மண்ணைப் பற்றிய வேராய்ப் பின்னிப் பிணைகிறார். வழக்கொழிந்து போன சில சொற்களை நமக்கு ஞாபகமூட்டுகிறார். வயலில் சேற்றில் உழவனுக்கு நண்பனாய் இருக்கும் மண்புழுக் கண்களால் இந்தக் கவிதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார். மும்முலைத் தாயவள் எனக் குறள் ஈன்ற தமிழைக் குறிப்பிடும் இடம் வெகு சிறப்பு.  

கேரளத்தில் உணவு திருடியமைக்காக அடித்தே கொல்லப்பட்ட மது பற்றியொரு கவிதை; அது நமது மனிதத்தை அசைத்துப் பார்க்கிறது. 

ஈழப் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை எனக் கவிஞர் தனது மண் மீதும், சமூகத்தின் மீதும் இருக்கும் அக்கறையை, கேள்விகளைக் கவிப்படுத்தி இருக்கிறார். 

சேறு மணக்கும் கவித்தொகுப்பின் நடுவில் அரசியல் வாசமும் தெளித்திருப்பது, ஒரு படைப்பாளனின் அடிநாதப் பண்பு. 

முற்றிலும் மண், வயல், வேர், மழை, நீர் என ஆக்கிரமித்திருக்கும் கவிதைகள் மேலோட்டமாய் வாசிப்போருக்கு இரண்டு மூன்று முறை வாசிக்கச் செய்யும். இதுவே இத்தொகுப்பின் நிறையும் குறையும்.

திரைக்கலைஞர் பொன்வண்ணனின் அட்டைப்பட வடிவமைப்பு சிறப்பு. உள்ளடக்கத்தை ஓவியமாய்த் தீட்டியமை அருமை. களையிழந்த பெண்ணொருத்தி, இலையிழந்த கிளை, அதிலமர்ந்த குருவி என நூறுபக்க விடயங்களுக்கு ஆகப்பொருத்தம்.  

வாழ்த்துக்கள் தோழர் ஏர் மகாராசன் 

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அகரன்,
கம்பம்.
***
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வெள்ளி, 5 ஜூலை, 2024

சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச் செய்யும் தொகுப்பு.



கவிதை வடிவம் நுட்பமும் அழகியலும் நிறைந்த இலக்கிய வடிவம். படைப்பாளனின் கருத்தியலை, சார்புத் தன்மையை வெளிப்படுத்தக் கவிதை வடிவத்தை விட வேறு இலக்கிய வடிவம் எதுவும் இருக்கவியலாது என்பதைச் சமகால இலக்கியப் படைப்பாக்கங்களை நோக்கி முடிவு கூறலாம். 

இத்தகைய கவிதை வடிவம் படைப்பாளனின் அகவுணர்வுகளையும், சமூகம் சார்ந்தெழும் புறவுணர்வுகளையும் வெகுநேர்த்தியாக வாசகருக்குக் கடத்துவதில் வெற்றிபெறுகிறது. 

இப்பின்னணியில் இந்தத் தொகுப்புள் இடம் பெற்றுள்ள கவிதைகள் தேர்ந்த சொற்களில் அடர்த்தியான உள்ளடக்கங்களைக் கொண்டு யாக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 55 கவிதைகள் இத்தொகுப்புள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு கவிதையும் சொற்கள், எடுத்துரைப்பு, உள்ளடக்கம் எனும் அடிப்படைகளில் வெகு நுட்பமாகக் கருத்துப் புலப்படுத்தம் செய்கின்றது. ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போதும் சொற்களின் ஊடாகக் கொள்ளும் பிணைப்பு அறுபடாத கன்னியாய்த் தொடர்கிறது. 

தொகுப்பின் தலைப்பைப் போலவே, ஒவ்வொரு கவிதையும் நிலத்தின் வாசனையை நாசிக்குள் செலுத்தி நாபிக் கமலத்தில் நங்கூரமிடச் செய்கிறது. ஓரிடத்தில், மண்மீட்டிய வேர்களின் இசை / காடெல்லாம் மணத்துப் பரவியது என்கிறார் கவிஞர். இந்த வரிகளில் மனம் தோய்ந்து போகிறது. இப்படி நூல் முழுதும் நுட்பமான கருத்தியல், அழகியல் நிரம்பி, சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச்செய்கிறது இந்தத் தொகுப்பு.

நிலத்தில் முளைத்த சொற்கள், மகாராசன் / மே 2024 / கவிதை / /பக்112 / விலை ரூ100- /யாப்பு வெளியீடு எண்.5, ஏரிக்கரைச் சாலை, 2ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர், சென்னை. தொடர்புக்கு: 9080514506.

நன்றி: பேசும் புதிய சக்தி மாத இதழ், சூலை 2024.