செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

நிலத்தில் தோய்ந்த இளம்பருவத்து ஆத்மாக்களின் வலியும், வாழையடி வாழையும் - ஏர் மகாராசன்


பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காப் போகாம, வாத்தியாரு செத்துப் போனாருனு பல தடவ பொய்கள் சொல்லி ஏமாத்துனதப் பாத்துப்புட்டு, படிப்புக்கே இவன் தோதுப்பட மாட்டான்னு நெனச்சி மனசுக்குள்ள அழுதுக்கிட்டாரு அப்பா.

நாம்பட்ட கருமாயத்த நீயும் படனுமாடான்னு சில நேரங்கள்ல கண்ணீர் பொங்கப் பேசுவார்.

என்னத்தச் சொல்ல, ஓம்பொழப்பு மண்ணோட மண்ணா சீரழியப் போவுதுனு  அழுகாத கொறையாச் சொல்வாரு.

எஞ்சோட்டுப் பய புள்ளைகளெல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டும், மத்த நாள்ள கம்மாய்க்குள்ள நீச்சலடிச்சிக்கிட்டுமா இருந்த ஒரு மழக் காலத்துலதான் , எங் கையில ஒரு மம்பட்டியக் கொடுத்து, வாடா தம்பி பின்னாலன்னு பெரிய காணிக்குக் கூட்டிட்டுப் போனாரு.

உழுது தொளியாக் கெடந்த அந்த வயக்காட்டுச் சனி மூலயில எறங்கி நின்னுக்கிட்டு என்னயவும் எறங்கச் சொல்லி, புல்லும் புளிச்சியுமாக் கெடந்த வரப்புல அரிஞ்சி அரிஞ்சியே வெட்டி, மண்ண இழுத்துத் தொளிக்குள்ள போட்டுக்கிட்டே போனாரு.

நம்மள எதுக்குடா இங்க வரச் சொன்னாருனு தெகச்சி நிக்கும் போதுதான், நாஞ் சும்மா நிக்குறதப் பாத்துப் புட்டு, ங்கோத்தா மவனே வரப்ப வெட்டுடான்னு அமட்டுனாரு. இதென்ன பெருய மசுரான்னு நெனச்சி நானும் வரப்ப வெட்டலாம்னு மம்பட்டியப் புடிச்சி வெட்டுனேன். 

வடக்கத்தி வரப்ப முடிச்சுப்புட்டு மேக்கத்தி வரப்புல பாதிகூடத் தாண்ட முடியல. உள்ளங்கயி ரெண்டுலயும் கொப்புளம் கொப்புளமாய் நீர் கோத்துக்கிச்சு. எம் பக்கமா திரும்பிக் கூடப் பாக்காம அவரு பாட்டுக்கு வரப்ப வெட்டிக்கிட்டே போனாரு அப்பா.

இடுப்பெல்லாங் கடுக்குது, உள்ளங்கையி காந்துது. தொட ரெண்டுமே கிடு கிடுன்னு நடுங்குது. அழுக அழுகயா முட்டிக்கிட்டு வருது. சார சாரயா வேத்து ஊத்துது. குனியவும் முடியல; நிமிரவும் முடியல. வயித்துப் பசியும் அல்லயப் புடுங்குது. மேக்கத்தி வரப்பச் செதுக்கிட்டு தெக்கத்தி வரப்பு மூலயில நின்னுக்கிட்டு, கொறய வெட்டிட்டு வரப் போறீயா என்னான்னு கோவமா கத்துனாரு அப்பா.

என்னால இதுக்கு மேல முடியலப்பான்னு அழுதே புட்டேன். இந்தக் காணிய முடிக்காம வெளியேறப்டாதுன்னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிப்புட்டாரு. வேற வழியே இல்லாம மம்பட்டியப் புடிச்சி வெட்டலாம்னு குனிஞ்சா வின்னுவின்னுன்னு இடுப்புத் தெறிக்குது. ரெண்டு எட்டு வரப்ப வெட்டிப் போக முடியல. உள்ளங்கையி கொப்பளம் ஒவ்வொன்னா ஒடஞ்சு போனதால அந்த எடமெல்லாம் காந்துது. யாராச்சும் நம்மளக் காப்பாத்த வர மாட்டாங்களான்னு தவிச்சுக்கிட்டு நிக்கும் போதுதான் , நாலஞ்சு காணி தள்ளி அம்மா வாரதப் பாத்துப் புட்டேன்.

அப்புடியே மம்பட்டிய தொளிக்குள்ள போட்டுப்புட்டு அம்மாகிட்ட ஓடிப்போனேன். அம்மா என்னயக் காப்பாத்துமான்னு அம்மா காலப் புடிச்சிக்கிட்டு அழுது அழுது கெஞ்சினேன். எங் கைய்யப் பாத்துப்புட்டு அம்மாவும் சன்ன அழுகயா அழுதுச்சு. பதறிப் போயி ரெண்டு பேருமா மாத்தி மாத்தி அழுததுல, கொண்டாந்த சோத்துச் சட்டியும் கொட்டிப் போச்சு.

இத எதயுமே கண்டுக்காத மாதிரியே கெழக்கத்தி வரப்புல முக்காவாசிய வெட்டிக்கிட்டு இருந்தாரு அப்பா. எங் கையப் புடிச்சிக்கிட்டு விங்கு விங்குன்னு அப்பாக்கிட்ட இழுத்து வந்துச்சு அம்மா. அப்பாவ ஏன்டான்னே அம்மா கேட்டது அன்னிக்குத்தான். ஏன்டா ஒனக்குப் புத்தி கித்திப் பேதலிச்சுப் போச்சா? பச்சப்புள்ளய இந்தப் பாடு படுத்திருக்க ? ஒத்தப் புள்ளயச் சாவடிச்சுப்புடுவ போலன்னு கோவந்தாவமா பேசுனா அம்மா.

பேசாமப் போயி கெணத்தடியல இருங்களா. இத அரிக்கிப்பிட்டு வாரேன்னு அப்பா சொன்னாலும், அம்மா விடல. ஏளா பேசாம இருளான்னு அப்பா சொல்லவும், கெணத்தடிக் குடிசக்கிக் கூட்டிட்டுப் போனா அம்மா. அப்பா கொண்டாந்திருந்த தூக்கு வாளியில இருந்த நீச்சத் தண்ணிய எடுத்துக் குடிக்கச் சொல்லித் தவிப்பாத்தினாள்.

பெரிய காணி முழுசயும் வெட்டி முடிச்சுப்புட்டு தம்பாயமில்லாம நடந்து வந்து எங்கிட்ட வந்து ஒக்காந்தார் அப்பா. உள்ளங்கை ரெண்டையும் விரிக்கச் சொல்லிப் பாத்தாரு. ரொம்ப வலிக்குதாப்பான்னு குரல் தழுதழுக்கக் கேட்டாரு. உள்ளங்கையெல்லாம் செவந்து போனதப் பாத்துப் புட்டு ரொம்பவே வேதனப்பட்டாரு.

பாத்துக்கோ தம்பி, நீ பள்ளிக்கோடம் போகலாட்டினா, ஒழுங்காப் படிக்காட்டினா காலம் பூராவும் இப்டித்தான் கருமாயப்படனும்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, இல்லப்பா, நா பள்ளிக் கொடத்துக்குப் போறேனுப்பா, ஒழுங்காப் படிப்பேம்பான்னு சொல்லி முடிக்குங்குள்ள, என்ன அப்புடியே கட்டிப் புடிச்சி அழுதே விட்டார் அப்பா. அப்பாவும் நானும் அழுகுறதப் பாத்துப்புட்டு அம்மாவும் சேந்தழுதுச்சு. 

கொஞ்ச நஞ்ச நெலமும் கெணமும் இருந்ததுனால, காட்டுலயும் வயக்காட்டுலயும் வெள்ளாம செய்யுறதும், கத்தரி, வெண்டி, தக்காளி, சீனியவரை, கம்பு, சோளம், வெங்காயம், கடலை, வாழை, நெல்லுனு வெள்ளாம பாக்குறதும், ஆடு மாடு கோழின்னு வாயத்த சீவன்கள வளக்குறதும், கொஞ்சூண்டு நெலமும் சம்சாரித்தனமும் எங்க ஊருல இருக்கிற அத்தனப் பேத்தோட வாழ்க்கையுமா இருந்துச்சு. 

சம்சாரித்தனமும் அதுக்குண்டான அத்தன வேலப்பாடுகளையும் செய்யுறதையும் சம்சாரிக் குடும்பத்துல இருக்குற எல்லாருமே ஒன்னாச் சேர்ந்து பாத்தாத்தான் நாலு காசு மிச்சத்தப் பாக்க முடியும். ஒருத்தரு வேல செய்யுறதும், இன்னொருத்தரு சும்மா இருக்கிறதும் சம்சாரிக் குடும்பத்துல வெளங்காது. 

என்னதான், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்தாலும், படிப்பச் சாக்குப் போக்குச் சொன்னாலும், சம்சாரி குடும்பத்துல பொறந்ததுனால சம்சாரிக் குடும்பத்துப் பாடுகளோடு பாடா ஒன்னு மண்ணுமா கெடக்க வேண்டியதாப் போச்சு.

காட்டுலயும் வயக்காட்டுலயும் வெளையுறத மதுரைச் சந்தையில கொண்டு போயி வித்துப்புட்டு வரணும். அதுக்கு முன்னாடி, விடியக் கருக்கல்லேயே எந்துருச்சு காட்டுக்கும் வயக்காட்டுக்கும் போயி, காய்களப் புடுங்கி, ரெண்டு மூனு மூட்டையில போட்டு, அம்மா ஒரு தலயிலயும், அப்பா ஒரு தலயிலயும், நா ஒரு தலயிலயுமாச் சுமந்து ரெண்டு கிலோ மீட்டர் தொலவு இருக்குற நிறுத்தத்து வரைக்கும் தலச் சுமயாச் சொமந்து போயி பேருந்து வண்டியில ஏத்தி விடனும்.

கிட்டத்தட்ட முப்பது நாப்பது கிலோ இருக்குற காய் மூட்டையத் தலச் சுமயாச் சொமந்து போகும் போது தலயும் கழுத்தும் காலும் இடுப்பும் வின்னு வின்னுன்னு நோகும். அதுக்கப்புறமாத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போகனும். இப்படித்தான் பத்தாப்பு படிக்கிற வரைக்கும் எம் பாடு இருந்துச்சு. பெரும்பாலான கிராமத்துச் சம்சாரிகளின் பிள்ளைகளும், காடு மேடுன்னு ஒழைக்கிற குடும்பத்துப் பிள்ளைகளும் குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்தாத்தான கஞ்சி தண்ணி குடிக்க முடியும். 

கிராமத்துல மட்டுமல்ல; நகரத்துல வாழ்கிற ஒழைக்கிற குடும்பத்துப் பிள்ளைகளும் ஏதாவது ஒரு வேல வெட்டிகளச் செஞ்சாத்தான் சீவன வளக்க முடியும். ஒழைக்கிற சனங்க எல்லாச் சாதியிலயும் இருக்காக. ஒழைக்கிற சம்சாரிகளும் எல்லாச் சாதியிலயும் இருக்காக. அப்பேற்பட்ட குடும்பத்துல பொறந்து வளர்ந்து படிக்கிற பிஞ்சு வயசுல ஒழைச்சுதான் ஆகனும்னு இருக்கையில ஒழைச்சாத்தான் உசுரு வாழும். இதுல ஒடம்புதான் ஒழைப்புக்கு மூல ஆதாரமா இருக்கும். அந்த ஒழைப்புல ஒன்னு மண்ணுமாக் கெடக்குற பசங்களோட ஒடம்பு வலி நோவும் மனசு வலி நோவும் இந்த நெலம் பூராவும் பரவிக் கெடக்கு.

இப்படியான வலியும் அழுகையும் ஒழைக்கிற சம்சாரிக் குடும்பத்துல பொறந்த எல்லாத்துக்குமே இருக்கும். 

அந்த வலிகள எல்லாத்தையும் எழுத எழுதத் தீராது; பாடுனாலும் கொறையாது. ஆனாலும், அந்த வலிய மத்தவங்களுக்குக் கடத்த முடியும். எனக்குத் தெரிஞ்ச மொழியில, என்னோட படைப்புல, என்னோட எழுத்துலக் கடத்த முடியும்; காட்ட முடியும். 

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கலைத் தன்ம ஊடாடிக் கிடக்கும். அந்தக் கலைப் படைப்பு வழியா அவரவரோட அனுபவத்தக் கடத்தும் போது சமூக அனுபவமா மாறிப்போகுது. சமூகம் பேச வேண்டிய அனுபவமா மாறிப் போகுது. தன்னோட அனுபவத்தையும், தன்னப் போல இருக்கிற மத்தவங்க அனுபவத்தையும் சமூக அனுபவமாகவும் சமூகம் பேச வேண்டிய அனுபவமாகவும் தரும்போது அந்தக் கலைப் படைப்பு வெகுமக்கள் ஏற்புக்கும் பாராட்டுக்கும் உள்ளாகுது. 

இயக்குநர் மாரி செல்வராசு அவர்களின் திரைப் படைப்பாக வெளிவந்திருக்கும் வாழை திரைப்படமானது, நிலம் தோய்ந்த உழைப்பில் உடல் நோகப் பங்கேற்கும் இளம் பருவத்து ஆத்மாக்களின் வலியை உணர்வுப்பூர்வமாகவும் கலைப்பூர்வமாகவும் காட்சி மொழியில் காண்பித்திருக்கிறது. மாரி செல்வராசு உள்ளிட்ட வாழை படக்குழுவினர் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

வாழைத்தார் சுமந்து உழைக்கும் எளிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்திருக்கும் வாழை படத்தைப் போலவே, வாழைத்தார் சுமக்கும் கூலி சம்சாரிகளின் வாழ்வியலை வாழையடி.. எனும் சிறுகதையின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சோ.தர்மன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வாழையடி கதை எழுத்தின் சித்திரம், தற்போது வாழையின் ஒளிச் சித்திரம் வாயிலாகவும் வேறொரு கோணத்தில் பதிவாகி இருக்கிறது. வாழைத்தார் சுமக்கும் உழைக்கும் கூட்டமும், சம்சாரிக் குடும்பங்களும் வாழையடி வாழையாய் வலியைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

படிப்பு வாசனை என்னைத் தொற்றிக் கொண்டாலும், அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்ட தொளி வாசனையும் வியர்வை வாசனையும், அம்மாவிடமிருந்த உழைப்பு வாசனையும் எம்மிடமிருந்து விலகவுமில்லை. அதனால்தான் என் எழுத்துகள் யாவற்றிலும் நிலத்தில் தோய்ந்து வலி நோகும் ஆத்மாக்களின் வலியையும் வாழ்வையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

ஏர் மகாராசன், 
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
27.08.2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக