ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகிறது. ஒன்று இது நா.வா அவர்களின் நூற்றாண்டை நினைவு கூறுமுகமாக வெளிவந்திருப்பது. இரண்டு, அடிப்படைவாத ஆதிக்கச் சுரண்டல் சக்திகள் விளிம்பு நிலைச் சமூகங்களை விழுங்க எத்தனிக்கும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வியலை அவர்களின் இலக்கியப் பதிவுகளை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து வினையாற்றியதற்காக!
தோழர் நா.வா அவர்கள் தமிழ்ச்சூழலில் மார்க்சியத்தை ஆய்வு முறையியலாக ஆக்கியவர். செவ்வியல் இலக்கியங்களைத் தொகுத்த தமிழ்தாத்தா உ.வே.சா.போல நாட்டுப்புற இலக்கியங்களின் தந்தை என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டவர். தமிழக வரலாற்றை மக்கள் வரலாறாக எழுதுதல் என்ற மாற்று வரலாற்றெழுதியல் கண்ணோட்டத்தை உருவாக்கியவர். தமிழகத்தில் செறிவான ஆய்வுப் பரம்பரையை உருவாக்கியவர். அவரின் நினைவை இந்நூற்றாண்டில் விதைத்த தோழர் மகாராசனும் ஆதி பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்.
நா.வா அவர்களால் 1956-57 காலத்தில் சரசுவதி இதழில் எழுதப்பட்ட பள்ளுப்பாட்டு குறித்த ஏழுகட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
*பள்ளுப்பாட்டின் உள்ளடக்கம்; *பள்ளுப்பாட்டின்தோற்றம்; *பள்ளுப்பாட்டு வளர்ச்சி; *பள்ளுப்பாட்டு மாறுதல்கள்; *பள்ளுப்பாட்டின் கதைப்போக்கு;
*பள்ளேசல்,
* பள்ளும் இணைவிழைச்சும் என்ற வரிசையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் இவை. இதில் முதலிரண்டு மற்றும் கடைசி ஆகிய மூன்று கட்டுரைகள் பள்ளுப்பாட்டு பற்றிய நல்ல அறிமுகத்தையும் அதன் தோற்றப் பின்னணியையும், இருபால் கவர்ச்சி இன்பங்குறித்தும் பேசுகின்றன.
அழகர் பெயரிலான கோயில் நிலத்தின் உழவு திணைக்களமே கதை நிகழிடம்.
மலைத்தோட்டத் தொழிலின் கங்காணியை
( கண்காணி ) ஒத்த மருத நிலத்து பண்ணைக் கங்காணியான பண்ணைக்காரன், உழவின் ஆதாரமான குடிகளான பள்ளன், அவரின் இரண்டு மனைவிகளான மூத்த பள்ளி, இளைய பள்ளி, ஆகியோரே மையமான பாத்திரங்கள் .
பண்ணையாரின் கொடுமைகளையும் , சுரண்டலையும் உழவுக்குடிகளின் பாடுகளையும், மனைவிகளின் முரண்களையும், சக்காளத்தி சண்டைகளையும், இளசுகளின் காதலையும், காமத்தையும், பண்ணைக்காரனின் இச்சையையும், பள்ளியர்களின் கிண்டலையும் பெருசுகளின் சில்மிசங்களையும், சேட்டைகளையும், அவற்றினூடாக அவர்களின் உயிர் நிலத்தோடு ஒட்டிக் கொள்வதற்காக அடைந்து கொள்கிற சிற்சில இன்பங்களையும், துன்பங்களையும் ஊடுதலையும் கூடுதலையும் கொண்ட எதிர்பார்ப்பற்ற எளிய வாழ்க்கையை ஆடலுக்கேற்ற இசைப்பாடலாக எளிய மொழியில் பாடுகிற பாடல்தான் பள்ளுப்பாட்டு.
உணவு உற்பத்தி காலம் தொட்டு உருவாகியிருக்கச் சாத்தியமுள்ள உழவுப் பாட்டின் தொடர்ச்சியாக பள்ளுப் பாட்டு இத்தகைய வடிவில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறது. பள்ளுப்பாட்டின் தோற்றம் குறித்துக் கூறும் நா.வா. அவர்கள் "மன்னர்கள் ஆதரவு தமிழ்ப் புலவர்களுக்கு கிட்டாது போன பிறமொழி ஆட்சிக்காலமான நாயக்க, கன்னட , மராத்தி , நவாப் காலத்தில் மக்களின் இப்பாடல் வடிவம் செய்யுள் வழக்குப் பெற்றிருக்கும் என்று கருதுகிறார் .
அன்றைய புலவர்கள் ஆட்சியாளர்களைக் காணச் செல்லும் பொழுது அவர்கள் கண்டும் காணாமல் வேறுவேலை செய்வதுபோல் பாவனை செய்து புலவர்களை அலட்சியம் செய்தது குறித்து பின் இடைக்காலத்து புலவர் இராமச்சந்திர கவிராயர் பாடிய தனிப்பாடல் ஒன்றை நா.வா.வின் கருத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது பாடலுக்கு கூடுதல் புரிதல் கிடைக்கிறது.
*வணக்கம்வரும் சிலநேரம்
*குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம்
*வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம்
*வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம்
*கயவர்க்கெல்லாம் இணக்கம் வரும்படி தமிழைப் பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா!
என்று புலவர்களின் நிலையை நொந்து இறைவனிடம் முறையிடும் வகையில் ராமச்சந்திர கவிராயர் பாடியிருப்பது தெரிகிறது. பள்ளு உருவாகிய இதே காலகட்டத்தில்தான் மக்கள் இலக்கியங்களான குறவஞ்சியும், நொண்டி நாடகமும் தலையெடுத்துள்ளன.
மக்கள் செல்வாக்கு மிக்க பண்பாட்டு கலாச்சார அம்சங்களை ஆளும் வர்க்கம் உட்செறித்து தமக்கானதாக மாற்றி தமது ஆளும் வர்க்கப் பாண்டின் உப கூறாக்கி தம் அடுக்கு வரிசைக் கூம்பில் ஓர் இடத்தை வழங்கி மேலாண்மை செய்யும் தந்திரத்தைக் காலம் முழுவதும் செய்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டார் கடவுளர் பலர் நிறுவன வைதீக , அவைதீக மதங்களின் பரிவாரங்களாக மாற்றப்பட்டது போல் பல கலை இலக்கிய வடிவங்களும் அப்படி உள்ளிழுக்கப் பட்டவைதான்.
மூன்று முதல் ஆறு வரையிலான நான்கு கட்டுரைகளில் இத்தகைய அவதானிப்பு மிகமுக்கியமானது. மக்கள் கலையான முக்கூடற் பள்ளுவின் தாக்கம் பெற்று ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பள்ளு வடிவத்திற்குள் எப்படி திணிக்கிறது என்பதையும் ஒப்பிட்டு வர்க்கப்பார்வையில் விளக்கியிருப்பது சிறப்பு.
பள்ளுப்பாட்டு வடிவம் நாடகவடிவம் பெற்று அதன் தாக்கம் தமிழகம் தாண்டியும் யாழ்ப்பாணம் வரை பரவியுள்ளதோடு ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளுப்பாடல்கள் தோன்றியுள்ளன . பள்ளுப் பாட்டு வடிவம் மக்களிடத்தில் பெற்ற செல்வாக்கால் பல்வேறு நாட்டார் கோவில்களிலும் விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிற வடிவமாகியது. திருநெல்வேலிப் பகுதி வைணவக் கோயில்களில் உற்சவங்களின் போது கோயில் கணிகையர்களால் பள்ளுப்பாட்டு நடனம் ஆடும் வழக்கம் உருவாகிற அளவிற்குச் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோயில்களில் இன்றும் பள்ளு உற்சவம் நடைபெறுகிறது என்றும் ஆனால் பாடல் வரிகள் மௌனிக்கப்பட்டு வெறும் தாள இசைக்கேற்ப அரையர் ஒருவர் ஆடிவருகிற அளவில் உற்சவம் மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் நா.வா.
முக்கூடற்பள்ளுவும் குருகூர்ப் பள்ளுவும் அடிப்படையில் மாறுபடுகிற விதம் குறித்து நா.வா. அவர்களின் ஒப்பீடு இங்கு கருதத்தக்கது.
பள்ளரின் உயிர்ப்பான உழவு வாழ்வை அனுதாபத்தோடு சித்தரித்த உழைக்கும் வர்க்கத்தை கதைப் பொருளாகக் கொண்டது முக்கூடற்பள்ளு. கதைப் பொருளை நீர்த்துப் போகச்செய்து வெறும் கவிதைச் சிறப்பையும் வருணனைச் சிறப்பையும் மட்டும் கொண்டுள்ளதாக மாற்றப்பட்ட அதிகாரவர்க்கத்தின் குரல்தான் குருகூர்ப் பள்ளு.
முக்கூடற்பள்ளிலே தங்கள் உழைப்பைக்குறித்தும் மூத்த குடியில் பிறந்தது பற்றியும் பெருமிதம் கொள்ளும் இயல்பான மாந்தரைப் படைத்திருக்க குருகூர்ப் பள்ளோ சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும் தங்கள் உழவுப் பண்பாட்டையும் குலப் பெருமைகளையும் பேசாமல் பக்திப் பிரவாகத்தில் சூழ்ந்து பழைய புராணக்கதைகளைப் பாராயணம் செய்யும் ; திருமால் பெருமைகளைப் பேசும் பக்தி முத்திய பள்ளன் பள்ளியரைப் படைத்திருக்கிறது. குறிப்பாக
சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும் பள்ளியரைக் காட்டுகிறது.
முக்கூடற்பள்ளுவில் தெய்வ வணக்கத்தில் அவர்களின் தெய்வமான பூலாவுடையார், குமுக்காவுடையார், புலியூருடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகியோரையும் அழகரையும் ஒரு வரிசையில் நிறுத்தி அவர்களுக்கு தேங்காயும், கரும்பும், கிடாயும், சாராயமும், கள்ளும் படைத்து வணங்க ; குருகூர்ப் பள்ளுவோ, பள்ளர்கள் வணங்கும் தெய்வத்தையும் நம்மாழ்வாரையும் ஒரே வரிசையில் வைக்க மனம் கூசி தெய்வ வணக்கத்தை இரண்டு அடியில் முடித்து விடுகிறார்.
முக்கூடற்பள்ளு , மழைபெய்தால் குதித்தோடி வேலைக்குச் செல்வதாக பள்ளர்களைப் படைக்க குருகூர்ப்பள்ளு பள்ளர்கள் சோம்பேறிகள் வேலைக்கு ஒளிப்பவர்கள், அடித்துத்தான் வேலை வாங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்க முயல்கிறது.
அதேபோல முக்கூடற்பள்ளு பள்ளன் உழுதல், விதைத்தல் ,முளைத்தல், நீர்பாய்ச்சுதல் , நாற்று விளைத்தல், முளைத்த நாற்றின் முகங்கண்டு , குழந்தை முகம் கண்டு பிள்ளைப் பேற்றின் வலி மறந்த தாயாய் மகிழ்ச்சி அடைந்தான் என்று உழவனின் மகிழ்ச்சியைப் படம் பிடிக்கிறது. குருகூர்ப் பள்ளு 'விதைத்த விதை வெள்ளி முளை போலரும்பி பசுமையாக மாறிற்று ' என்று ஒட்டாமல் கூறி கடந்து போகிறது. இதுதான் உழுதுண்பானுக்கும் உழுவித்துண்பானுக்கும் உள்ள ஈடுபாடு வேறுபடுமிடம்.
பள்ளேசல் என்ற பகுதி பள்ளுப்பாட்டின் முக்கியமான வடிவம். உழவு அறுவடை முடிந்து பள்ளியர்களுக்கு பங்கு கொடுக்கும் பொழுது இரண்டு பள்ளியர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதும் இறுதியில் சண்டை சமாதானம் ஆவதும் பற்றியது. எப்படிச் சமாதானம் ஆகிறது என்பதுதான் நாம் இங்கே காணவேண்டியது.
முக்கூடற்பள்ளுவில் இரண்டு பள்ளியர்கள் தாமே சமாதானமடைகின்றனர். திருக்கோஷ்டியூர் திருப்பத்தூர் பள்ளுவில் கணவன் சமாதானம் செய்து வைக்கிறான். குருகூர் பள்ளிலோ பண்ணைக்காரன் சமாதானம் செய்து வைக்கிறான். முக்கூடற் பள்ளில் பள்ளியர் தாங்கள் பொறுப்புணர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கருதியும் கிளைஞரது நன்மையைக் கருதியும் ஒன்று சேர்கிற சமாதானமும் சகிப்புத்தன்மையும் மிகுந்த பெண்ணாக படைக்கப்பட்டுள்ளாள்.
திருக்கோட்டியூர் திருப்பத்தூர் பள்ளில் தங்கள் அறிவின் திறத்தினால் சண்டையை நிறுத்தாமல் கணவன் சொல்லை மீறமுடியாமல் கணவன் சொல்லி சமாதானமடைகிற ஆணுக்கடங்கிய பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள். குருகூர்ப் பள்ளோ பள்ளியர் தாழ்ந்தவர்கள்; சண்டை போடுவது அவர்கள் இயற்கை; மாடுகள் சண்டை போட்டால் சொந்தக்காரன் பிரித்துவிடுவது போல பண்ணைக்காரன் பிரித்து வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதி வழங்கும் பொருப்பை பண்ணைக்காரனுக்கு வழங்கி அடிமையாக பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.
இதிலிருந்து கலையைக் கையாள்கிறவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
இனி விவாதக்குறிப்பு:
----------------------------------------
முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் வரும் பள்ளியர்கள் பாத்திர அமைப்பு வெறும் குடும்பச் சண்டை என்று எளிதாகக் கடந்து செல்லக் கூடியதாகத் தெரியவில்லை. அது ஆழமான அரசியல் பேசுவதற்காகவே அமைக்கப்பட்ட பாத்திரங்களோ! என்று கருதவேண்டியுள்ளது. அவை பேசும் இரண்டு விசயங்களை இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒன்று இவர்களின் சமயம் தொடர்பான வர்ணிப்பு மற்றும் சண்டை, இரண்டு உழைப்புக்காகப் பெறுகின்ற கூலி தொடர்பான சண்டை.
இரண்டு பள்ளியர்களில் மூத்தவள் வைணவ சமயம் சார்ந்தவளாகவும், இளையவள் சைவ சமயம் சார்ந்தவளாகவும் இருக்கிறாள்.
மூத்த பள்ளி
" நெற்றியில் இடும் மஞ்சணப் பொட்டும் ; மற்றொரு திருநாமப் பொட்டும் "அணிந்தவளாக இருக்கிறாள்.
இளைய பள்ளி
" மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க ;
சிறியநுதல் பிறை வெண்ணீற்றுக் குறியொளி வீச " வருகிறாள்.
இவர்களுக்குள் நடக்கிற சண்டை தனி நபர் தாக்குதலையும் தாண்டி வணங்குகிற கடவுளர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கத் துவங்குகிறார்கள்.
வைணவ சமயத்தினளான மூத்த பள்ளி
" நரி தான் பரியாகச் சாதித்தானும் சம்பு வல்லோடி ? " என்று இளைய பள்ளி வணங்கும் சிவபெருமான் நரியைக் குதிரையாக்கிய கதையை காட்டி ஜாலவித்தை சிவனுக்கும் அவனடியார்களுக்குமே கைப்பழக்கமானது. என்று இடித்துரைக்கிறாள்.
இளைய பள்ளி " கல்லைப் பெண்ணாகச் சாதித்தான் உங்கள் பொம்மானல் லோடி " என்று திருமாலைக் கிண்டல் செய்கிறாள்.
மீண்டும் மூத்த பள்ளி , " ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில் ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல்லோடி " எனறு கூற பதிலுக்கு இளைய பள்ளி " மாடு தானுமில்லாமல் - பட்சி மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல்லோடி. என்று கூறுகிறாள்.
அடுத்து மூத்த பள்ளி ," சுற்றிக்கட்ட நாலுமுழத் துண்டுமில்லாமல் - புலித் தோலையுடுத் தானுங்கள் சோதியல் லோடி ? " என்று கூற , இளைய பள்ளி ," கற்றைச் சடைகடி மரவுரியுஞ் சேலைதான் - பண்டு கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையனல்லோடி ? " என்று கூறுகிறாள். இவ்வாறு இருவரும் மாறி மாறி சிவனையும், திருமாலையும் புராணக் கதைகளைக் கூறி வம்புக்கிழுக்கிறார்கள்.
இங்கு பள்ளனின் மனைவியாகிய இருவரும் முறையே வைணவ , சைவ சமயச்சார்பானவர்களாக இருப்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. சைவ வைணவச் சண்டையை எப்படிப் புரிந்து கொள்வது.
இரு குழுச் சமூகமுறைச் சாதி அல்லது பழங்குடிகளில் சில பிரிவினரின் இரு குழுக்கள் சைவ கடவுளின் பேரிலும் . மற்றொரு குழு வைணவ கடவுளின் பேரிலும் இருக்கும். அப்படியானால் பள்ளர்கள் இரு குழுச்சமூக முறையினர் தானா? என்பதை காணவேண்டும்.
ஆதி உடைமைச் சமூகத்தில் காணப்பட்ட தொல்குடிகள் பலவற்றில் தொடக்கத்தில் ஒரு சமூகம் இரண்டு பெருங்குழுக்களாக மட்டுமே பிரிந்து அவ்விரு குழுக்களுக்கிடையில் பெண்களைத் திருமணத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இருந்தது என்பதை ஏங்கெல்ஸ் ஆய்வு செய்துள்ளார். இதனை இருகுழுச்சமூகமுறை என்பர்.
இரு குழுச்சமூக முறை கொண்ட சாதி மற்றும் பழங்குடிகளில் குடி வழியைத் தொடர்புபடுத்துவதற்கும் மண உறவை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குழுவை வைணவக் குழுவாகவும் மற்றொரு குழுவை சைவக்குழுவாகவும் கருதப்படுகிற மரபு இருப்பதை இனவரைவியல் தரவுகள் மூலம் அறியலாம்.
மலையாளிப் பழங்குடியினர் பெருமாள் கூட்டம் அண்ணாமலையார் கூட்டம் என இரு குழுக்களாக அழைக்கப்படுகின்றனர்.
மலை வெள்ளாளரிடம் உள்ள இரண்டு கூட்டங்களில் ஒரு குழு அரபுலீஸ்வரரையும் மற்றொரு குழு ரங்கநாதரையும் வழிபடுகின்ற குழுக்களாக உள்ளன. கோட்டைப் பிள்ளைமார் சாதியினர் திருநீர்க்காரர்கள், திருநாமக்காரர்கள் எனும் இரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கே.நல்லூரில் வசிக்கும் வன்னியர்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மஞ்சைக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் வன்னியர்களும் சைவ வைணவப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் மண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அனுப்பர்களிடம் பெரிய ஓலை, சிறிய ஓலை என்னும் இரண்டு அகமணப்பெருங்கூட்டங்கள் உள்ளன. காப்பிலியர்களிடம் தர்மகட்டு, மூனுகட்டு ஆகிய இரண்டு அகமணப் பெருங்குழுவினராகப் பாகுபடுகின்றனர். இவர்களும் சைவ வைணவக் குழுவினராகப் பாகுபடுகின்றனர். ( இவர்களிடம் சைவம் வைணவம் எப்படிப் புகுந்தது என்பது தனித்து விவாதிக்கப்படவேண்டிய அரசியல்.)
சைவ வைணவப் பிரிவுகள் என்னும் நிலையில் அல்லாது இரு குழுச்சமூகமுறை காணிக்காரர், குறும்பர் போன்ற பழங்குடியினரிடமும் வேலமர், செட்டியார் சாதுசெட்டியார் சாதிகளிடமும் உள்ளது.
இப்படியான சமய அடிப்படையிலோ அல்லது சமூக அடிப்படையிலோ இயங்குகிற இருகுழுச் சமூக முறைப் பழங்குடிகளையும் சாதிகளையும் காணலாம்.
ஆனால் பள்ளர் சாதியை சைவ வைணவ இரு குழுச்சமூகமாக வகைப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிப் பொதுவுடைமைச்சமூகம் தொடங்கி வேளாண்மைச் சமூகமாக உருமாறிய நீண்டகாலப் படிமலர்ச்சியில் இரு குழுச்சமூகமுறையில் இருந்து பல்வேறு கால்வழிக்குழுக்கள் கொண்ட சமூகமுறை வரை தோன்றியுள்ளது.
"கள்ளர்களிடமும் பறையர்களிடமும் முறையே 370, 260 க்கும் மேற்பட்ட கால்வழிக் குழுக்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் இவ்விரு குடிகளும் வேளாண்குடிகளாக இருந்ததாலேயே இவர்களிடம் நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன" என்கின்றனர் இன வரைவியலாளர்கள்.
"ஒரு சமூகம் சிறு சிறு வட்டாரங்களின் மீதும் அங்குள்ள நிலங்களின் மீதும் பெறுகின்ற உரிமையாலேயே கால்வழிக் குழுக்களின் பெருக்கம் ஏற்படுகிறது. வேளாண்குடிகளிடமே நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன. "
என்ற இனவரைவியல் உண்மை , உழவுக்குடிகளான பள்ளர்களுக்கும் சேர்த்துத்தான்.
"சிந்திய எள்ளை எண்ணினாலும் பள்ளர் வகையை எண்ண முடியாது." என்ற வழக்கும் பள்ளர்கள் இரு வழிச்சமூக முறையினர் அல்ல எண்ணற்ற கால்வழிக் குழுக்களை உடையவர்கள் என்பதை உணர்த்தும்.
அதேபோல பள்ளர்கள் வணங்கும் தெய்வங்களாக
"பூத்த தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
பூலியுடையார் கொள்ளப் பலிதானிடும்
வாய்த்த சாராய ம் பனையூற்றுக் கள்ளும்
வடக்குவாய்ச் செல்லியுண்ணக் குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே ,
தொழுது தொழுது வேண்டும் மழை பெய்யவே ,
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே
எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே!"
என்ற பாடலில் பூலாவுடையார், குமுக்காவுடையார் , புலி யுடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகிய புலால் உண்ணக்கூடிய , கள்ளும் சாராயமும் அருந்தக்கூடிய குலதெய்வங்களோடு அழகரையும் வழிபடுகிறார்கள். இங்கு பள்ளரை சைவ வைணவக் குழுக்களாகக் கூறவில்லை.
ஆனால் இங்கே குலதெய்வ வழிபாட்டுக்காரனான பள்ளன் சைவ , வைணவ ஆகியவிரு சமயங்களைச் சார்ந்த பெண்களையும் மணம் புரிகிறான் . இதன்படி பார்த்தாள் இருவரும் சகோதரிகளாவர். ஆனால் விசுணுவின் தங்கை பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிற மாமன் மச்சான் உறவுதான் சைவ, வைணவ உறவு.
எனவே இனவரைவியல் அடிப்படையிலும் வழக்கிலும் கால்வழிக் குழுக்களாக உள்ள பள்ளியரை சைவ, வைணவ மதத்தினராகப் படைக்கவேண்டிய தேவை என்ன என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.
முக்கூடற்பள்ளு அழகருக்குச் சொந்தமான நிலம் என்கிறது. அப்படியென்றால் அது வைணவக் கோவிலுக்குச் சொந்தமானது என்று பொருள். சைவ, வைணவ கோவில்களும், மடங்களும் வழிபாட்டு நிறுவனங்களாக மட்டும் அல்லாமல் மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்திருக்கின்றன என்பதை அறிவோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் சொத்துக்களும் உரிமையானவை என்றால் அக்கோவிலை நிருவகிக்கும் உயர்சாதியினரே சொத்துக்களையும் மேலாண்மை செய்யும் உரிமையுடையவர்களாகிறார்கள்.
நிலங்களை கோயிலுக்கும் மடங்களுக்கும் தானமாகக் கொடுத்ததில் சோழர்கள் முன்னணியிலும் அடுத்து விசயநகர அரசும் இருந்தது. உதாரணமாக சில கோய்வில் நிலவரங்களைப் பார்ப்போம்.
திருவாருர் தியாகேசர் கோயிலுக்கு 6000 ஏக்கர் நிலங்களும் சீர்காழி வைத்யநாதசாமி கோவிலுக்கு 6000 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன்செய் நிலமும் வழங்கப்பட்டும் இவற்றின் பராமரிப்பு பிராமண வெள்ளாள நிலப்பிரபுத்திவத்தின் கீழும் இருந்தது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 18 சைவ மடங்கள் இருந்தன. சங்கரமடம் 4000 ஏக்கர் நிலமுடையதாகவும் திருவாவடுதுறை மடத்துக்கு தமிழகம் முழுவதும் 24000 ஏக்கர் நிலங்களும் , தர்மபுரம் மடத்துக்கு 2000 ஏக்கர் நிலங்களும் திருப்பனந்தாள் மடத்துக்கு 3000 ஏக்கர் நிலங்களும் சோழ, நாயக்க அரசுகளால் வழங்கப்பட்டன.
கோவில் நிலங்கள் வாரம்தாரிமுறை நிலப்பிரபுக்களின் கீழ் இருந்ததால் அவை நேரடியாகப் பயிர்த்தொழில் செய்பவர்களுக்கு விடாமல் அரசு அதிகாரிகளுக்கு விடப்படுகின்றன. அவற்றை அவர்கள் மற்றவர்கள் மூலம் பயிரிட்டு உற்பத்தியில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு கோவில் கருவூலத்திற்குப் பெயரளவிற்குக் கொடுத்துவிட்டு பெருமளவில் அனுபவித்து வந்தனர் என்ற செய்தியைக் கரோஷிமா கல்வெட்டுச் சான்றுகள் மூலம் விளக்குகிறார். அதனால்தான் இன்று இந்து அறநிலைத்துறை வசமுள்ள கோயில்களைக் கைப்பற்ற ஒரு கூட்டம் அலைகிறது.
இப்படியான சொத்துடைத்த கோயிலுக்கு மட்டுமல்ல இவ்வுலகுக்கே அதிபதிகளான சிவனையும் , திருமாலையும் வம்புக்கு இழுத்தது. சமயமடாதிபதிகள் அல்ல சாதாரண கூலிக்காரர்கள் , அதுவும் பெண்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாதென்பதற்காக கடவுளின் தனிப்பட்ட முறையில் தாக்கத் துணியமாட்டார்கள். இவ்வுலகை ஆக்கவும், அழிக்கவும் திறம்பெற்ற இரு பெரும் கடவுளர்களை தெருச்சண்டை கோதாவில் நிறுத்தி பக்தர்களின் மனதைப் புண்படுத்திய, அதுவும் பண்ணை அடிமைப் பெண்களை வைத்து ஏச வைக்க பள்ளு இலக்கிய ஆக்கத்தால் எப்படி முடிந்தது.
வைதீக சமயத்தின் பேரால் - கடவுளின் பெயரால் சுரண்டிக் கொழுக்கிற உடைமையாளர்களை , சுரண்டலுக்கு வழி வகுக்கிற கடவுளை , அவற்றை நியாயப்படுத்த புணையப்பட்ட புராணங்களை , சமய நம்பிக்கை கொண்ட அவர்களை வைத்தே கடவுள்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிற கட்டுடைப்பைச் செய்துள்ளது முக்கூடற் பள்ளு இலக்கியம். ஒரு வேளை சமய நம்பிக்கையாளர்களை வைத்து கேள்வி கேட்கச் செய்வது பாதுகாப்பானது என்று கருதி பள்ளியர் பாத்திரம் சைவ, வைணவச் சார்பாளராகப் படைக்கப்பட்டதா?
இல்லை பள்ளியரின் சைவ வைணவச் சண்டை, சைவ உடைமையளர்களுக்கும் வைணவ உடைமையாளர்களுக்கும் உள்ள முரண்பாட்டை குறியீடு செய்து படைக்கப்பட்டதா?
காலம் முழுவதும் சமய முரண்பாடு என்பது உடைமைகளை உரிமையாக்கும் பொருளாதார முரண்பாடே என்பதும் நாமறிந்ததே! மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது தங்களுக்குள் கலகம் செய்து கொண்டாலும் உடைமையாளர்கள் தமக்குள் செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்று கருதுவதா?
எனவே முக்கூடற்பள்ளு இலக்கியம் பள்ளியர்கள் வழியே பேசும் சைவ-வைணவ ஏசல் என்பது உழைக்கும் பெண்களுக்கான சமயச் சண்டையோ குடும்பச் சண்டையோ அல்ல. அதில் குறியீட்டு அரசியல் இருக்குமோ! என்று கருதத்தோன்றுகிறது.
மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது உடைமையாளர்கள் தமது உடைமையைக் காத்துக் கொள்ள செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்றும் கருதலாம்.
அடுத்து கூலிப்பங்கு தொடர்பானது. கோயில் காரியங்களுக்கும் சத்திரதானங்களுக்கும், பெரிய நம்பி திருமாளிகைக்கும், மடங்களுக்கும், கங்காணிக்கும் கொடுத்துவிட்டு விதை நெல்லுக்காக மிஞ்சியதை களஞ்சியத்தில் போட்டுவிட்டதாகக் கூறிகிறான். உடனே தனக்கு கல்லும் மண்ணும் கலந்த நெல்லைக் கொடுத்துவிட்டு இளைய பள்ளிக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதாகச் சண்டையிடுகிறாள் பெரிய பள்ளி.
இங்கு
ஆடித்திருநாளுக்கென்று ஒதுக்கப்பட்ட நெல் ஆறாயிரம் கோட்டை
பங்குனித் திருநாளுக்கு ஆறாயிரம் கோட்டை, அணைக்கட்டுமானச் செலவுக்கு என்று ஆயிரம் கோட்டை, மண்டகப்படிக்கு முறைக்கு ஆறாயிரம் கோட்டை , மறையோர்க்கு நாலாயிரம் கோட்டை, தினப் பூசைக்கு எண்ணாயிரம் கோட்டை நெல் என்று ஆயிரக்கணக்கான நெல்லை கொடுத்து விட்டு உழுதவனுக்கு
வாழ்க்கைக்குப் போதிய நெல் கூடக்கிடைக்கவில்லை என்று சுரண்டல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்.
அவ்வளவு நெல்லையும் அபகரித்த ஆள்பவர்களின் மேல் திரும்ப வேண்டிய கோபம் சிறிதளவு அதிகமாகக் கூலி வாங்கிய இளைய பள்ளியிடம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
காலங்காலமாக சுரண்டும் வர்க்கம் சுரண்டுகிறவர்களின் மீது உழைப்பவர்களின் கவனம் திரும்பிவிடாத அளவிற்கு அவர்களின் சிந்தனையை மடைமாற்றி அவர்களுக்குள்ளான உள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி விடுகிறார்கள். பூசணிக்காய் ஒழித்த இடத்தைத் தேடாமல் சிந்திய கடுகைத் தேடுவது போல மக்களைத் திசை திருப்பிவிடும் தன்மையைத்தான் மூத்தபள்ளி, இளைய பள்ளியின் கூலிப்பங்குச் சண்டையில் படைக்கப்பட்டுள்ளது.
அடுத்து உழைப்பாளிகளின் கோபம் திரும்புகிற இன்னொரு இடம் கங்காணியாக இருக்கிற பண்ணைக்காரன்.கண்ணுக்குத் தெரியாத நிலத்தின் உண்மையான உரிமையாளன் மீது திரும்ப வேண்டிய கோபம் அவனது கூலிக்கு வேலை செய்யும் பிரதிநிதியின் மேல் திரும்புகிறது.
இன்று அம்பானிகளும், அதானிகளும், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும் நம் செல்வத்தைக் கொள்ளையிடுவதிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்பி சக மனிதர்களைக் காட்டி பொறாமை கொள்ளச் செய்வதும் தூரத்திலிருக்கும் அதிகாரத்தை மறைத்து கண்ணுக்குத் தெரிகிற உடனடி நிர்வாகத்தின் மீது கோபத்தைத் திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.
ஆக முக்கூடற் பள்ளு என்பது கோயில் நில உடைமை உற்பத்தி உறவின் தன்மையையும், வைதீகக் கடவுள் கட்டுடைப்பும் உடைமையாளர்களின் அக முரண்பாடையும் உழுவித்துண்போரின் திறமையான சுரண்டலையும் நிலத்தில் உடலுழைப்பைக் கொடுத்தும் சகல பணிகளையும் செய்கிற உழுதுண்போர் சுரண்டப்படுவதை அறிந்தும் திசை திருப்பப் படுவதையும் உழு குடிகளான பள்ளர் பள்ளியரை மையமாக வைத்து மக்கள் மொழியில் நகைச்சுவை ததும்ப உழவுக்குடிகள் படும்பாட்டை குறியீட்டு வடிவில் இயற்றிய மாற்றுக் குரலாக இருக்கிறது.
இத்தொகுப்பு நூல் பள்ளு இலக்கியத்தை முழுவதுமாக வாசிக்கவும் மீளாய்வு செய்யவுமான தேவையை உருவாக்கியிருப்பதில் வெற்றியடைந்துள்ளது.
முன்னோடி ஆய்வுக்காக நா.வா..அவர்கள் தமிழ்ச்சமூகத்தால் நன்றி கூறப்படவேண்டியவர்.
எவரின் கடமையோ! என்றிறாமல் காலத்தே வினையாற்றிய தோழர் மகாராசனும் அதனை அச்சு வாகனமேற்றி அழகுபார்த்த ஆதி பதிப்பகமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஒரு படைப்பு சொல்லியதையல்ல சொல்லாமல் கிசுகிசுப்பதையும் கேட்கும் பொழுதுதான் அல்லது சந்தேகிக்கும் பொழுதுதான் மறைந்திருக்கும் எதிர்வினையை உணர்ந்து கொள்ள முடியும்.