திங்கள், 25 மே, 2020

அறிவுச் செயல்பாடு என்பது யாதெனில் : மகாராசன்


அறிவு என்பது பொதுவானது. நமக்கும் இருக்கிறது. நம்மை எதிர்க்க நினைக்கும் அல்லது கீழ்மைப்படுத்த நினைக்கும் அல்லது ஒடுக்க நினைக்கும் அல்லது சுரண்ட நினைக்கும் எதிராளிக்கும் இருக்கிறது.
*
அறிவு சார்ந்த ஒரு செயல்பாடு நமக்கு வாய்க்கிறது எனில், எதிராளிக்கும் அவர் சார்ந்த அறிவுச்செயல்பாடு இருக்கத்தானே செய்யும்.
*
ஆக, அறிவுச்செயல்பாடு நமக்கும் இருக்கும்; எதிராளிக்கும் இருக்கும். இருவரின் அறிவுச் செயல்பாடு களில் எது சரியானது? எது தவறானது? எது குறைவுடையது? எது உண்மையானது? எது நேர்மையானது? எது நிரூபிக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக முக்கியமானவை.
*
இதையெல்லாம் அளவீடுகளாக வைத்துத்தான் எத்தகைய அறிவுச்செயல்பாட்டை முன்னெடுப்பது அல்லது எத்தகைய அறிவுச்செயல்பாட்டின் பக்கம் நிற்பது என்கிற முடிவுக்கு வர முடியும்.
*
வர்க்கம் என்பது பொதுச்சொல். அதில் சுரண்டும் வர்க்கம் X உழைக்கும் வர்க்கம் என முரண்நிலை உண்டு. அதேபோல் அறிவுச்செயல்பாடு என்பதும் பொதுச்சொல். அதில் சுரண்டும் வர்க்க அறிவுச்செயல் X உழைக்கும் வர்க்க அறிவுச்செயல் என்ற இரண்டு முரண்நிலைகள் இருக்கின்றன.
*
பிராமணியம் என்பதும் அறிவுச் செயல்பாட்டால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களால், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அதற்கு உகந்த சமூகக் கட்டமைப்பைக் கட்டமைக்க முயன்றிருக்கிறது.
*
அத்தகைய பிராமணிய அறிவுச்செயல்பாட்டை எதிர்த்தும் மறுத்தும் இடைநிறுத்தியும்தான் பிராமணியத்திற்கு எதிரான ஓர் அறிவுச்செயல்பாட்டை இந்தியாவின் பலபகுதிகளிலும், தமிழ் மரபின் நெடுகிலும் காணமுடியும்.
*
பிராமணியம் என்பது ஆதிக்கக் கருத்தியல்; பாகுபாட்டைக் கட்டமைக்கும் கருத்தியல். கருத்தியல் உருவாக்கம் என்பது அறிவுச்செயல்பாட்டின் ஓர் அங்கம். அத்தகைய பிராமணியக் கருத்தியலை எதிர்த்தும் மறுத்தும்தானே தமிழ்மரபின் கருத்தியல் உருவாக்கமும் நிகழ்ந்து வந்திருக்கிறது.
தமிழ்மரபின் பிராமணிய எதிர்ப்புக் கருத்தியல் உருவாக்கம் என்பதும் ஓர் அறிவுச்செயல்பாட்டின் அங்கம்தான். அறிவு, கருத்தியல் என்பதெல்லாம் பொதுவாகக் குறிக்கும் சொல்லாடல்கள்.
*
முதலில், பிராமணியம் என்பது ஆதிக்கக் கருத்தியலை உருவாக்கி வைத்திருக்கும் அறிவுச்செயல்பாடுதான் என்று புரிந்துகொண்டால்தான், பிராமணியத்திற்கு எதிரான - மறுப்பான கருத்தியலை உருவாக்கும் அல்லது மீட்டெடுக்கும் அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்க முடியும்.
*
பிராமணியத்தை எதிர்ப்பதான திராவிடக் கருத்தியல் என்பது பிராமணியக் கருத்தியலின் எதிர் வடிவம்தானே. அப்படிப் பார்த்தால், திராவிடக் கருத்தியல் எனும் அறிவுச்செயல்பாடு இன்னொரு அறிவுச்செயல்பாட்டை எதிர்ப்பது/மறுப்பது என்றுதானே பொருள்.
*
பிராமணியம் என்பதும் ஓர் அறிவுச்செயல்பாட்டின் விளைவுதான் என்பதை விளங்கிக்கொண்டால் மட்டுமே, பிராமணியத்தை எதிர்க்கிற, மறுக்கிற அறிவுச்செயல்பாட்டை முன்னெடுக்கவும் தீவிரப்படுத்தவும் முடியும்.
*
அறிவுச்செயல்பாடு என்பதில் இரு வகைப் போக்குகள் இருக்கின்றன. ஆளுவோர் / சுரண்டல் தரப்பு அறிவுச்செயல்பாடு ஒருபுறம்; அதை எதிர்க்கும்/மறுக்கும் புரட்சிகர அறிவுச்செயல்பாடு இன்னொருபுறமுமாக இருக்கின்றது.
*
அதாவது, அறிவுச்செயல்பாடு என்பது எப்போதும் இரு முகாம்களைக் கொண்டதாகவே இருக்கின்றது. அந்தவகையில், பிராமணியம் நமக்கு எதிரான அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்கிறது. நாம் இதற்கு எதிரான அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்க வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல், பிராமணியம் ஓர் அறிவுச்செயல்பாடு என்று சொன்னவுடன் பொங்கி எழுதுவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
*
மாறாக, பிராமணியம் எனும் அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராக வள்ளுவரும் வள்ளலாரும் சித்தர்களும் அயோத்திதாசரும் புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் எழுதியவையும் பேசியவை யாவும் பிராமணியத்திற்கு எதிரான அறிவுச்செயல்பாடுதான் என அடையாளப்படுத்த வேண்டும்.
*
பிராமணிய அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராகத்தான் தமிழ் மரபின் / இந்திய நாத்திக மரபின் அறிவுச்செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என உரத்துச் சொல்ல வேண்டும். அறிவுச் செயல்பாடு என்பதற்குள் நிலவும் அரசியலைப் புரிந்துகொண்டால் மட்டுமே, நாம் எந்த அறிவுச்செயல்பாட்டின் பக்கம் நிற்கப்போகிறோம் என்பது தெளிவாகும்.
*
தமிழ் மரபின் அறிவுச்செயல்பாடு, பிராமணிய அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராகத்தான் கருத்தியலைக் கட்டமைத்திருக்கிறது.
*
ஆகவே, பிராமணிய அறிவுச்செயல்பாட்டை எதிர்க்கிற, தமிழ் மரபின் அறிவுச்செயல்பாட்டின் பக்கமே நாம் என்பதையும் தெளிவுறச் சொல்வோம்.
*
ஏர் மகாராசன்
23.05.2020

சனி, 23 மே, 2020

தமிழ்மொழி, தமிழர் பண்பாடு குறித்து அறிய உதவும் பழுதில்லாத ஆய்வு நூல்: திரு பெ.அந்தோணிராஜ்



தமிழ் எழுத்துக்களைப் படைத்தவர் யாரெனத் தெரியுமா? எழுத்துக்கள் எத்தனை கதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனத்தெரியுமா? எழுத்துக்களில் உள்ள பால்பேதம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? எழுத்துக்களின் சாதி தெரியுமா உங்களுக்கு? எழுத்துக்களில் எது நல்லவை, எது தீயவை எனப் பகுத்துப் பார்க்கத் தெரியுமா? நட்பு எழுத்துக்கள், உதாசீன எழுத்துக்கள், பகையெழுத்துக்கள் என உள்ளன. அவை பற்றி நீங்கள் எப்போதேனும் அறிந்துள்ளீர்களா? இல்லைதானே. அப்படியென்றால் வாருங்கள், தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு எனும் இந்தப் புத்தகத்தினுள் சென்று தேடுவோம். நிற்க, முதலில் இந்நூல் ஆசிரியரைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.

இந்நூல் ஆசிரியர் முனைவர் ஏர் மகாராசன் அவர்கள், மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு என்ற ஊரில் பிறந்து வளர்ந்து, தற்போது தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ் மீது மாறாப் பற்றுக் கொண்டிருப்பதினாலே ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும், மொழியில் நிமிரும் வரலாறு, பெண்மொழி இயங்கியல், தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர்மரபும், முல்லைப்பாட்டு உரைப்பனுவல், தமிழில் பெண்மொழி மரபு போன்ற ஆய்வு நூல்களும், சொல்நிலம் என்ற கவிதை நூலும் ஆக்கியுள்ளார். இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், இவர் பணிபுரிகின்ற பெரியகுளம் வி. நி. அரசு மேனிலைப்பள்ளியில் மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையாகத் "தமிழ்க் கழனி "என்ற மாணவ இதழ்த் தொகுப்பாளராகப் பணியாற்றி, அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் முன்னத்தி ஏர் ஆக விளங்குகிறார். சரி புத்தகத்திற்குள் செல்வோம்.

*மனித வரலாற்றின் முதல் நிபந்தனையாக உயிருள்ள தனிமனிதர்கள் இருக்கவேண்டும் என்று மார்க்ஸும் ஏங்கல்சும் கூறுகின்றனர்.

*பூமி உருண்டையானது; அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது என்று கோபர் நிக்கஸ் கூறியபோது, இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செயத்தக்கதாக ஏங்கல்ஸ் கூறுகிறார்.

*டார்வினின் பரிணாமக் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

*மனித இன வளர்ச்சியில், முன்னங்கால்கள் கைகளாகவும், குரல்வளை பேசும் உறுப்பாகவும் மாறியதுதான் மனிதப்படிநிலை மலர்ச்சியில் ஏற்பட்ட முதல்புரட்சி என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.

*பேச்சு என்பது மனிதனின் தேவையினால் உண்டாக்கப்படுகிறது.

*மனிதர் வெளிப்படுத்தும் பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்தும்போது உடன்பிறக்கும் சிந்தனையும்தான் மனிதரை மற்ற உயிர்களிடமிருந்து திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டுகிறது.

*சமூகமாக மாறும் வளர்ச்சிக் காலகட்டங்களில் மனிதனால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும் சைகைகளும் அர்த்தம் கொள்ளத்தொடங்கின.

*அந்த அர்த்தப் புலப்படுதான் "மொழி "எனப்படுகிறது.

*தன் இனத்தவருடன் கருத்துப் பரிமாற்றத்திற்காக மனிதன், முதலில் உருவத்தைச் சித்தரித்தான். குறுக்கெழுத்துபோல ஒருபொருளுக்கு ஒரு எழுத்து இட்டு வழங்கினான். அடுத்து பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இவ்வாறுதான் ஒரு மொழி உருப்பெற்றிருக்க முடியும் என்று எஸ்பிரசன் கூறுகிறார்.

*எழுத்தானது கையால் எழுதப்படுவதாலும், வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து எனப் பெயர்பெற்றது என தொல்லெழுத்தியல் அறிஞர் பவானி குறிப்பிடுகிறார்.

* பாவாணர் எழுத்தை 1.படவெழுத்து, 2.கருத்தெழுத்து, 3.அசையெழுத்து, 4.ஒலியெழுத்து என நான்கு வகைப்படுத்துகிறார்.

*சங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒரு வகை எழுத்து வழக்கில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சரக்குப் பொதிகளின் மேல் எழுதப்பட்ட எழுத்து கண்ணெழுத்து எனப்பட்டது.

*அகநானூறு குயின்ற (குயில் )என்றொரு எழுத்தைக் குறிப்பிடுகிறது. மேலும் இதே அகநானூறு "கோடு மாய்ந்த எழுத்து " என்றொரு எழுத்தையும் குறிப்பிடுகிறது.

*சீவக சிந்தாமணி "கரந்த எழுத்து " என்றொரு எழுத்தைக் குறிப்பிடுகிறது.

*நடுகல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை எழுத்துடை நடுகல் என அகநானூறு குறிப்பிடுகிறது.

*எழுத்துக்களின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பது ஓவியங்களே ஆகும்.

*தமிழகத்தில் இதுவரை சுமார் 80க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

*கருத்து எழுத்து, ஓவிய எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாகப் பரிணமித்தது என்கிறார் நாகசாமி.

*இவ்வாறாக, ஓவியத்திலிருந்து கருத்துருக்கள் குறியீடுகளாக மாறும்போது எழுத்துக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருக்கவேண்டும். இதுபோன்றே கருத்திலிருந்து அசை, அசையிலிருந்து ஒலி எழுத்துக்கள் பரிணமிக்கும்போது எழுத்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, நெடுங்கணக்கு என்னும் அகரநிரல் தோன்றிய பின்னர் எழுத்துக்கள் மிகவும் குறைந்திருக்கவேண்டும்.

*வளர்ச்சியடைந்த நிலையாகக் கருதப்படுவது ஒலியன் எழுத்து நிலையாகும். அவை உணர்வொலி, ஒப்பொலி, குறியொலி, வாய்ச் செய்கையொலி, குளவி வளர்ப்பொலி, சுட்டொலி என ஆறு வகையாக ஒலி எழுத்துக்களாகப் பிரிக்கிறார் பாவாணர்.

*மொழி பிறந்ததில் 1.பவ் வவ் கோட்பாடு, 2.பூ பூ கோட்பாடு, 3.டிங் டாங் கோட்பாடு, 4.யோ கி கோட்பாடு, 5.தானனனக் கோட்பாடு என ஐந்து வகையாக எழுத்து வளர்ந்துள்ளது.

*எழுத்து என்பது ஒரு மொழியின் தனித்துவமான அடிப்படைக் கூறாகும். மொழிக்கு நிலை பேறு அளிப்பது எழுத்தே.

*அசோகர் காலத்துப் பிராமி எழுத்தை விட, தமிழி எழுத்துக்கள் காலத்தால் முந்தியது என, இந்நூலைப் பல்வேறு சான்றுகளைத் தந்து நிறுவுகிறார். அசோகரின் காலத்தைவிட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழியின் காலமாக நிரூபிக்கிறார் ஆசிரியர்.

*பாண்டிய நாட்டில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள கோபாலேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளது.

*தமிழ் வட்டெழுத்தும் பல்லவ கிரந்த எழுத்துக்களும் ஒரே கால கட்டத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

*ஓலைச்சுவடிகளே தமிழின் பயன்பாட்டு வடிவமாக அதிகளவு கையாளப்பட்டு வந்துள்ளன.

*ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களுக்கும், கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

*தமிழ் எழுத்துக்களுக்கு அடிப்படையான ஒலிகளின் பிறப்பைக் குறித்து தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன. உரம், கண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் ஆகியவை எழுத்தின் பிறப்பிடங்களாக அறிகிறோம்.

*பேச்சு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒலிவடிவத்தையும், எழுத்து என்பது செவிக்குப் புலனாகாத வரி வடிவத்தையும் கொண்டிருப்பதாகும்.

**ஓரெழுத்து ஒரு மொழியென தமிழில் 42 எழுத்துக்கள் உள்ளன. உ -ம்: சோ -மதில்; து -உண்; ஐ -அழகு; ஓ -மதகு நீர் தாங்கும் பலகை இவ்வாறாக.

*வெண்பாப் பாட்டியலும், பன்னிரு பாட்டியலும் எழுத்துக்களில் பேதங்களை ஏற்படுத்துகிறது.

*உயிர் எழுத்துக்களைப் பிரம்மன் படைத்தார். சிவன் க் ங்; திருமால் ச் ஞ்; முருகன் ட் ண்; இந்திரன் த் ந்; சூரியன் ப் ம்; சந்திரன் ய் ர்; குபேரன் ல் வ்; கூற்றுவன் ழ் ள்; வருணன் ற் ன் யும் படைத்தனர். பாதகமில்லாமல் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சாமிகள் இருப்பதும் ஒருவிதத்தில் வசதியே!

*தெய்வகதி எழுத்துக்கள் -அ, இ, உ, எ, க ச ட த ப ;
மக்கள் கதி --ஆ ஈ ஊ ஏ ங் ஞ் ண் ந் ம்;
விலங்கு கதி --ஒ ஓ ய ர ல ழ ற;
நரகர் கதி --ஐ ஒள வ் ள் ண் .

*ஆண் எழுத்துக்கள் : அ இ உ எ ஒ எனும் குறிலும் இவற்றோடு18 மெய்யெழுத்துக்கள் இணைந்து உருவாகும் 90எழுத்துக்கள்.

*பெண் எழுத்துக்கள்: மீதமுள்ள நெடிலும், மீதமுள்ள உயிர்மெய்யெழுத்தும்.

*அலி எழுத்துக்கள்: அனைத்து மெயெழுத்துக்களும்.

எப்பூடி !!!

* சாதியெழுத்துக்கள்:
அந்தண எழுத்துக்கள் - உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண்.
சத்திரிய எழுத்துக்கள் - த் ந் ப் ம் ய் ர்.
வைசிய எழுத்துக்கள் --ல் வ் ற் ன்.
சூத்திர எழுத்துக்கள் ழ் ள்.

மக்களே இப்படியெல்லாம் இருக்குமா? அப்படிச் சொல்லப்பட்டு இருக்கிறது.

*நல்ல எழுத்துக்கள்: உயிர்க் குறில் எழுத்துக்களோடு க் ச் த் ந் ப் ம் வ்.
நஞ்செழுத்துக்கள் : ய் ர் ல் யா யோ ரா ரோ லோ ஆய்தம் அளபெடைகள், குறுக்கங்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தக்குறுக்கம் போன்றவை.

*அடுத்து, பிள்ளையார் சுழியான "உ " பற்றி ஆசிரியர் ஏறக்குறைய முப்பது பக்கத்திற்கு எழுதியுள்ளார்.

*தமிழ்நாட்டிற்குப் பிள்ளையார் வருவதே கிபி 600க்கு மேல்தான். ஆனால், தமிழகத்தில் அதற்கு முன்பாகவே இந்த "உ "போட்டு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. இந்த " உ "என்பது தமிழர்களின் உலகளாவிய பார்வைதான் காரணம் என்று, பல்வேறு சான்றுகளுடன் நிறுவுகிறார்.

*இந்நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூல் மாதிரி சிறப்பாக ஆக்கியுள்ளார் முனைவர் ஏர் மகாராசன்.

*இந்நூல் தமிழைப் பற்றியும், தமிழர் தம் பண்பாட்டைப் பற்றியும் அறிந்துகொள்ள அவசியமான நூலாகும்.

*பழுதில்லாத ஆய்வு நூலாக இருந்தாலும் ஒரு வரலாற்று நூல் படிப்பது போன்றே உள்ளது. வாசித்து இன்பம் பெருக.

நூல்:
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு.
ஆசிரியர்:
ஏர் மகாராசன்.
வெளியீடு:
ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை
விலை: ரூ. 120/-
*
அன்புடன்
பெ. அந்தோணிராஜ்
தேனி.

வியாழன், 21 மே, 2020

சொல் நிலக் கவிதைகளின் பேசுபொருள் நிலமே ஆகும்: திரு பெ.அந்தோணிராஜ், சமூகச் செயல்பாட்டாளர்.



இந்நூலின் ஆசிரியர் திரு. கவிஞர் ஏர் மகாராசன் அவர்கள் மதுரை மாவட்ட சின்ன உடைப்பு எனும் ஊரில் பிறந்து தற்போது தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் வாழ்ந்துவருகிறார். முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் நிலத்தின் மீதும் மிகுந்த பற்றினை கொண்டவர். இவருடைய கட்டுரை நூல்கள் ஏறு தழுவுதல், கீழிருந்து எழுகிற வரலாறு, பெண்மொழி இயங்கியல், தமிழ்நிலமும் புது வன்குடியாதிக்க எதிர்மரபும் மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு போன்றவைகளாகும்.

இவரின் கவிதைகளில் அதிகம் பேசப்பட்டுள்ள பொருள் நிலமேயாகும். நிலத்தின் மீது தான் கொண்டுள்ள பற்று கவிதைகளாக வெளியாகும்போது அது உயிர்த்துடிப்பு மிக்குள்ளதாக இருக்கிறது. தன்னுடைய நூலின் முதல் கவிதையே அம்மாவை பற்றி எழுதுகிறார்.
"அன்பின் உயிர் முடிச்சை
மொழியின் உயர்திறளை
விதைத்தவள் "
என்று அம்மாவை பலவாறு சிறப்பித்துள்ளார். கவிஞர் தன் அம்மாவின் மீது கொண்டுள்ள பாசத்தை மற்றொரு கவிதையிலும் காட்டியுள்ளார்.
"என்னதான்
வாங்கியாந்தாலும்
வெத்தல பாக்கும்
போயல பொட்டலமும்
அப்பனுக்குத் தெரியாம
நான்தருகையில்
உசிரையே
அள்ளிக்கொடுத்தாப்போல
முகமெல்லாம் சிரிச்சு நிக்கும்". இந்த வரிகளை வாசித்து முடிக்கும்போது இப்படி ஒருநாளும் என்தாயை நான் சிரிச்சு நிக்க வைக்கலையே என என் மனது பாவமன்னிப்பு கோருகிறது. நிச்சயம் அவள் என்னை மன்னிப்பாள். ஏனெனில், அவள் தாய். கண்கள் நீர் பனிக்க அக்கவிதையை மேலும் வாசித்தேன்.
"வரும்போதே
சிறுவாட்டுக் காசெடுத்து
கைபிடித்து உள் நுழைப்பாய்
அந்த காசெல்லாம் சுருக்குப் பை வாசம் வீசும்
அதுதானம்மா
உன் உயிர் வாசம் " இந்த வரிகளைப் படிக்கும் யாவரும் ஒரு நிமிடம் தன் அம்மாவை மனதில் இருத்திதான் நகரமுடியும். இத்தோடு இந்த நூல் பற்றிய அறிமுகம் போதுமென்றே எனக்குத் தோணுகிறது. இருந்தும் மேலும் என்னை ஆட்கொண்ட கவிதைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் நண்பர்களே.

இவர் ஒரு ஆய்வுக்கட்டுரையாளர். அப்படியிருந்தும் கவித்துவமிக்க இவரின் எழுத்துக்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. பெருமரத்தின் கீழே முளைத்துள்ள சின்னஞ்சிறிய செடிகளை பெரு மரம் துப்பிய எச்சில் என்கிறார். அடுத்து
"உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித்தின்று
முனை கட்டின
புற்கள்" என்றும், அந்த மரத்தைத் தேடி வரும் வண்டினங்கள், கூடு கட்டும் பறவைகள் இப்படி ஒரு மரம் மனிதனின் காலடிபடாத இடமெல்லாம் பச்சைப்பசேல் என்றுள்ளது. ஆனால், மனிதனின் நாடுமட்டும் வெயிலால் வெந்து சாகிறது என்று மனிதனின் தவறுகளை மறைமுகமாகக் சுட்டிக்காட்டிச் செல்கிறார் கவிஞர்.

துயர்ப் படலம் என்ற கவிதையில் உழவர்களின் துயரத்தை மிக உருக்கமாகச் சுருக்கமாக உணர்த்துகிறார்.
"செங்காட்டில்
ஏரோட்டி உழுகிற
கருத்த மேனிகண்களில்
முளைகட்டிக் கிடக்கிறது
பசி ஒளி.
அழுது கொண்டிருந்தாலும்
உழுதுகொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்".
எத்தகைய சோகம் பாருங்கள். உழுது உழுது ஒன்றுமில்லாமல் போய், பசியினால் தவித்தாலும் என்னை உழுதுஉழுது வைத்திரு. இல்லையெனில், நான் மலடாகப் போய்விடுவேன் என்று நிலம் உழவனிடம் கெஞ்சுகிறது. வேறுவழியற்றுப் பசி வந்து இறந்தாலும் பரவாயில்லை; தனைக்காப்பாற்றிய நிலத்தைக் கைவிட்டு விடாமல் அவனும் நிலமும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உள்ளனர் என்று உணர வைக்கிறார்.

கீழ வெண்மணிக் கொலை நிகழ்ச்சியைக் கண்முன் கொண்டுவருகிறார். அவர்கள் என்ன நிலத்தையா கேட்டார்கள். இல்லையே, அரைப்படி நெல் கூலி அதிகமாகக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அந்த நிலஉடைமையாளன் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை மிகக்கொடியது. ஏறக்குறைய முப்பது உயிர்களை நெருப்பிட்டுப் பொசுக்கியது அந்த ஆண்டை அதிகாரம். வாழ்நாளெல்லாம் உழைத்து உழைத்துக் கைகளும் உடலும் களைத்துப் போயிருந்த அந்த அப்பாவிக் குடியானவர்களுக்காகச் செந்நெல் மனிதர்கள் என்றொரு கவிதை. அதன் இறுதியில் இப்படி முடிக்கிறார் கவிஞர்.
"வடுக்களோடும் வலிகளோடும்
வயிற்றுப்பாட்டோடும்
நெருப்பையும் சுமந்து
சாம்பலாகிப்போனார்கள்
வெண்மணி வயலில்
செந்நெல் மனிதர்கள்."

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட ஏழைகளின் துயரத்தினைப் பாடுகிறார்.
"சிறுவாட்டுக்காசும்,
சுருக்குபை காசும்,
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடிந்து போட்ட காசும்,
ஆத்தா அப்பன் நினைப்பாலே
எடுத்துவச்சக்காசும்,
மூத்த பிள்ளையைக்
காட்டிக்கொடுக்க
அடுக்குபானைக்குள்ள
போட்டு வச்ச காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாய்ப் போட
வச்சிருந்த காசும்
செல்லாமப் போச்சே
செல்லாமப் போச்சே ".

"செல்லாமல் போனது
இத்துப்போன வாழ்வைப்
போர்த்திக்கிடக்கும்
சீவன்களும்தான் ".

பணமதிப்பிழப்பில் மிகவும் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான் என்று கவிஞர் கூறும்போது, தற்போது புலம்கடந்து நடந்து செல்லும் லட்சக்கணக்கான அந்த ஏழைத்தொழிலாளர்களை நினைக்கும்போது மனம் கலங்கத்தான் செய்கிறது. செய்திகளை கேட்கும்போது ஏற்படும் உணர்வுகளை விட கவிதைகள் அதிகமாகவே நம் உணர்வுகளை அதிகமாக்குகிறது.

ராம்குமார் கொலைவழக்கு பற்றி ஒரு கவிதை. "இதுவும் ஒரு ஆணவ படுகொலை "என்ற தலைப்பு. சிறையில் இருக்கும் போது மின்சாரத்தால் தாக்குண்டு இறந்துபோனது இன்றுவரை சந்தேகப்படும்படியே உள்ளது.
"மறைந்திருந்து கொல்லும்
ராமன் காலத்து
மநுநீதியே,
கழுத்தறுத்தும்
அடைத்து வைத்தும்
கொன்று போட்டது ".

கார்காலம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நியதி இப்போது மாறிப்போனது பற்றி "கார்காலச் சொற்கள் "என்ற கவிதையில் கவிஞர்,
"எத்தனை நாள் தாகமோ
விழ விழக் குடித்தது
மானாவரிக்காடு ".

"மழையைத் தேக்கிய
அணைக்கட்டுகளாய்
இலைகளில் துளிகள் ".

மண் கவ்வி ஆட்டுவிக்க
மயிர்கள் விரித்து நின்றன
ஆலங்கள் ".

"கார் காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தேதான் கிடக்கின்றன.

அப்துல் ரகுமானின் துளிப்பாக்கள் போல அருமையாக இருந்தது இக்கவிதை. அழகு.

இறுதியாக எனக்கு ரொம்பப் பிடித்த கவிதை. இதன் அழகில் சொக்கிபோனேன். இப்படியெல்லாம் எழுதமுடியுமா என்றால், முடியும் என்பவர்கள் அவர்களின் பால்யத்தை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். கவிதையின் தலைப்பே மிகச்சிறப்பாக நம்மை ஈர்க்கிறது.
"உலர்நிலச் சிறுக்கி "இதுதான் தலைப்பு.

"வெம்பாலைச் சுரந்து
தாய்மையை வடித்து
உயிர்ப்பைக் கொப்பளிக்கும்
உலர் நிலத்துச் சிறுக்கியின்
பசுந்தோல் மேனியில்,
காக்கா முள்ளின்
கூர் நுனியால்
நம் பெயர் எழுத எழுத,
பால் ஈரம் சுரந்த
அம்மாவின் மனசு போலவே
பச்சை உடுத்திச்
சிரித்து நிற்கிறாள்
கள்ளி ".
என்ன அழகு. சங்கப்பாடலுக்கு இணையாக இக்கவிதையைக் கூறமுடியும். இக்கவிதையைப் படித்து முடிக்கவும், என் மனதுள் வந்த வருத்தத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வருங்காலச் சிறுவர்களுக்கு இந்தக் கள்ளிச்செடி தெரியுமா? தெரிந்தாலும் இப்படிப் பெயர் எழுதி ரசிக்கப்போகிறார்களா? அப்படியொரு சூழ்நிலையில் தற்காலக் குழந்தைகள் இல்லையே. இயற்கையை ரசிக்கும் ஒரு மனத்தை உருவாக்கினால் எதிர்காலச் சந்ததியினர் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காப்பாற்றும் இளகிய மனத்துடையவர்களாக தாவரங்களும் நம்மை போன்ற உயிர்களே என்று உணரும் நாள் வரவேண்டும். அந்தக்கள்ளி என் மனதை விட்டு நீங்கலயே.
*
நூல்: சொல் நிலம் (கவிதைகள் )
ஆசிரியர்: ஏர் மகாராசன்
வெளியீடு: ஏர்
விற்பனை உரிமை: ஆதி பதிப்பகம்
விலை =ரூ 100/
*
அன்புடன்
பெ. அந்தோணிராஜ்
தேனி.

வெள்ளி, 15 மே, 2020

தாழ்த்தப்பட்டோர் எனும் அடையாளப்படுத்தலும், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையும்: மகாராசன்

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? எனக் கோபம் கொப்பளிக்கும் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார் தயாநிதி மாறன்.
ஆணவத்தோடு சிரித்துக்கொண்டே இருக்கிறார் டி.ஆர்.பாலு.
கூடவே, தலையசைத்துக் கொண்டிருக்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

மூவருமே இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள். சமூக நீதி பேசும் திராவிட இயக்கத்தின் அங்கத்தினர்கள்கூட.

ஓர் அரசுத்துறை அதிகாரியோடு நிகழ்ந்த சந்திப்பில் ஏற்பட்ட அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் முடியாமல், குமுறி அழும் உணர்வோடு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? என அவர்கள் கொட்டித் தீர்த்தவை வெறும் சொற்கள் அல்ல. இந்திய/தமிழகச் சாதியச் சமூகத்தின் ஒட்டுமொத்த உளவியலின் வெளிப்பாடு அது.

இழிவானவர்கள்; மூன்றாம் தர மக்கள் என்போரே அவமானத்திற்கும் அசிங்கப்படுத்துவதற்கும் உரியவர்கள். அந்த இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் வெகுகாலமாகவே அவமானத்திற்கு உள்ளாகிக் கிடப்பவர்கள். அந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டே இன்னும் அதற்குள் முடங்கிக் கிடப்பார்கள். இடஒதுக்கீடே அந்த இழிவான தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் எனும் தோற்ற மாயப் போர்வை அவர்கள் மீது போர்த்தப்பட்டிருக்கிறது. ஆகையால், தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இழிவுபடுத்த வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும். இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் இப்போது எஸ்.சி எனப்படுகிறார்கள். அரிசன், தலித், தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், பட்டியல் சமூகத்தினர், அட்டவணைச் சாதியினர், பூர்வக்குடியினர் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனாலும், சமூகத்தின் பார்வையில் அவர்கள் எஸ்.சிக்கள்தான்; தாழ்த்தப்பட்ட மக்கள்தான்; அவமானத்திற்கு உரிய சாதியினர்தான் என்கின்றவை போன்ற சாதியாதிக்க உளவியல்தான், சாதியச் சமூகத்தின் பொதுப்புத்தியாய் உறைந்து கிடக்கிறது. அதைத்தான் தயாநிதி மாறன்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதியாதிக்க உளவியலின் இந்தக் கூற்றானது, சமூக நீதி பேசுகிற திராவிட இயக்கத்தின் குரலாகவும், இந்திய நாடாளுமன்றத்தின் குரலாகவும்தான் அமைந்திருக்கிறது. அதாவது, இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எனும் கருத்துப்பொருள் தொனியே அக்கூற்றின் சாரம்.

ஒரு அதிகாரியோடு, ஒரு சிறு நிகழ்வில், சில மணிப் பொழுதில், சிறிதான அவமதிப்பைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? எனக் கொதிக்கிறார்கள்.

ஆனால், காலங் காலமாக அவமானத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும், சுரண்டலையும், வறுமையையும், ஏமாற்றத்தையும், வன்முறைகளையும், இழப்புகளையும், விரட்டியடிப்புகளையும், நிலப் பறிப்புகளையும், உடைமைப் பறிப்புகளையும், அடையாள இழப்புகளையும், பூர்வக் குடி வரலாற்று அழிப்புகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், சனநாயக மறுப்புகளையும், கல்வி வேலை வாய்ப்பு இழப்புகளையும் தாங்கிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களாய் அடையாளப்படுத்தப்பட்டு எஸ்.சி எனும் பிரிவிலே எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களும் முன்னேற்றங்களும் வளர்ச்சியும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சமூக நீதிக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னொரு புறம் இருந்தாலும், கல்வி, வேலை வாய்ப்புகளால் முன்னேறிய பல்வேறு சமூகப் பிரிவினர் நவீனப்பட்ட வாழ்க்கைச் சூழலைத் தகவமைத்துக் கொண்டது ஒருபுறம் இருந்தாலும், அறிவியல், தொழில்நுட்பம், நகரமயம், தொழில் உற்பத்தி, ஊடகம், உலகத் தொடர்புகள் போன்ற உலகமயமாக்கல் சூழல் இன்னொருபுறம் இருந்தாலும், சாதியம் குறித்தும், ஒவ்வொரு சாதியினர் குறித்தும் நிலவுகிற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுப்புத்தி என்பதெல்லாம், உயர்த்திக்கொண்ட சாதியினரால் அவமானத்திற்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படும் சாதியினர் என்போர் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்கிற சாதியாதிக்கக் கருத்தாக்கம் இந்தச் சமூகத்தின் அடி ஆழம் வரை பரவிக் கிடக்கிறது.

என்னதான், கல்வி, வேலைவாய்ப்புகள், நவீன வாழ்க்கை வசதிகள், அறிவு, திறமை, தொழில் முனைப்பு எனப் பொதுச் சமூகவெளியில் தமது இருப்பை அடையாளம் காண முற்பட்டாலும், தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவான எஸ்.சியாக அதை எதிர்கொள்ளும்போது, தயாநிதி மாறன்களுக்கு நேர்ந்த கொஞ்ச நேர அவமானமும், அவமதிப்பும், இழிநடத்தையும், புறக்கணிப்பும்தான் வாழ்நாள் முழுக்கவும் தலைமுறை தலைமுறையாகவும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

எஸ்.சி எனும் இடஒதுக்கீட்டுப் பிரிவு அவமானமானது இல்லை; அது அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதும் அல்ல என்பது, அந்தப் பிரிவில் இருக்கும் எல்லாச் சாதியினருக்கும் தெரிகின்ற ஒரு புரிதல்தான். ஆனால், பிற சமூகங்களின் புரிதல் வேறாக இருக்கிறது. அதாவது, காலங்காலமாக அவமானத்திற்கும் இழிவுக்கும் தீண்டாமைக்கும் உள்ளான சாதியினர்தான் எஸ்.சி பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றுதான் பிற சாதியினர் புரிந்து வைத்திருக்கின்றனர்.

சாதியச் சமூகத்தில் பெருமாற்றங்கள் நிகழ்ந்திராத சமூகச்சூழலில், எஸ்.சி பிரிவில் இருக்கும் சாதியினரையே இழிவுக்கும் அவமானத்திற்கும் தீண்டாமைக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன சாதியாதிக்க உணர்வுடைய உயர்த்திக் கொண்ட சாதிகள்.

இந்நிலையில்தான், எஸ்.சி பிரிவில் இருக்கும் சாதிகளை, அவமதிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படும் சாதிகளாகக் கருதும் சாதியாதிக்கவாதிகளின் ஆளும்வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் எதிராகத் திரளத் தொடங்கியுள்ளன எஸ்.சி பிரிவில் இருக்கும் சில சாதிகள்.

எஸ்.சி பிரிவில் இருப்பதை, அந்தப் பிரிவில் இருக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்; அவமானத்திற்கு உரியவர்; இழிவுக்குரியவர் என நவீன வகைப்பட்ட தீண்டாமையால், சாதியாதிக்க ஒடுக்குமுறையால், இடஒதுக்கீடு ஏமாற்றுமுறைகளால் பல காலமாக வஞ்சிக்கப்பட்டதாக/ அவமானப்படுவதாக அந்தப் பிரிவில் இருக்கும் பல சாதியினர் உணர்ந்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்டோரை இழிவாகக் கருதுகிற இதுபோன்ற நவீனப்பட்ட தீண்டாமை ஒடுக்குமுறையைப் பல சாதியினர் எதிர்கொண்டு வரும் சூழலில், அத்தகைய அவமானத்திற்கு எதிராகவும், சாதியாதிக்கத்திற்கு எதிராகவும், நவீனத் தீண்டாமைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து, எஸ்.சி எனும் பட்டியலை விட்டே வெளியேற முனைந்து கொண்டிருக்கிறது ஒரு சமூகம். குறிப்பாக, பள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சாதியினர், எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது, அவர்களது சுயமரியாதை தொடர்பானது. எஸ்.சியில் இருப்பதாலேயே அந்தச் சமூகத்தினர் இழிவுக்கும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாவதாகக் கருதுகின்றனர். இதனால், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, பொதுப் புழங்கல்களில் அந்நியப்படுவதாகவும் அந்நியப்படுத்துவதாகவும் உணர்கின்றனர். ஆகையினாலேதான், எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி அல்லது வெளியேறி, தங்கள் சாதியினரின் மக்கள்தொகை அடிப்படையில் பி.சி பிரிவிலோ அல்லது எம்.பி.சி பிரிவிலோ அல்லது தனி அடையாளத்துடன் கூடிய பிரிவிலோ இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்டோரை அவமானமாகக் கருதும் இந்தச் சமூக அமைப்பிலிருந்து, தாழ்த்தப்பட்டோர் என எஸ்.சி பிரிவில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியினர், இனியும் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் அந்த அடையாளத்துடன் இருப்பதில் உடன்படாமல், அந்தப் பிரிவில் இருந்தே வெளியேற்றக் கோரும் அல்லது வெளியேற நினைக்கும் இந்தக் கோரிக்கை, சாதியாதிக்க உளவியலுக்கு எதிரான சமத்துவம் மற்றும் சுயமரியாதை சார்ந்த கோரிக்கைதான்.

இட ஒதுக்கீடு எல்லாச் சாதியினருக்கும் இருக்கின்ற ஒன்றுதான். ஆனால், எஸ்.சி பிரிவினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடும் சலுகைகளும் இருப்பதுபோல மற்றவர்கள் கருதுகிறார்கள். பி.சி, எம்.பி.சி போன்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளும் இருக்கின்றன. இங்குள்ள பெரும்பாலான சாதியினர் பி.சி; எம்.பி.சி போன்ற இடஒதுக்கீடுகளைப் பயன்படுத்தித்தான் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். ஆனால், எஸ்.சி இடஒதுக்கீடு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகையாகப் பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகைகளில் அவமானப்பட்டு அவமானப்பட்டு தாழ்த்தப்பட்டோர் எனும் இடஒதுக்கீட்டைப் பெறுவதில் இனியும் விருப்பம் இல்லை; சுயமரியாதையே முக்கியம் என்பதே அச்சாதியினரின் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கின்றது.

அவர்களின் இந்தக் கோரிக்கை இடஒதுக்கீட்டு முறைக்கே எதிரான கோரிக்கை போலத் தோன்றும். உண்மை அதுவல்ல. எஸ்.சி எனும் பிரிவிலான இடஒதுக்கீட்டைத்தான் அவர்கள் வேண்டாம் என்கிறார்கள். அதேவேளையில், மற்ற பிரிவுகளில்தான் தங்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். மற்ற பிரிவுகளில் இவர்களுக்கான இடம் கோருவதால், பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினர் தங்களது உரிமைகளும் வாய்ப்புகளும் பறிபோகும்; தங்களுக்குப் போட்டியாக வேறு ஒரு சாதியினர் தங்களது இடஒதுக்கீட்டை அபகரிக்க முயல்வதாகத் தோன்றும். அவர்களது எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது, பி.சி மற்றும் எம்.பி.சி இடஒதுக்கீடுகளை அபகரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவ்வாறு நினைப்பதும் சரியானதும் அல்ல. தாழ்த்தப்பட்ட சாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு சாதியினரின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே எஸ்.சி பிரிவுக்கான இடஒதுக்கீட்டு சதவீதங்கள் வரையறுக்கப்பட்டன. இப்போது அந்தப் பிரிவிலிருந்து வெளியேற்றம் நிகழும்போது, அந்தச் சாதியினரின் இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதங்கள் எஸ்.சி பிரிவிலிருந்தும் வெளியேறுவது நிகழத்தானே செய்யும். அதாவது, எஸ்.சி பிரிவில் உள்ள இடஒதுக்கீட்டு சதவீதங்கள் குறைக்கப்படும்போது, மீதமாகும் அந்த இடஒதுக்கீட்டு சதவீதங்களை பி.சி பிரிவிலோ அல்லது எம்.பி.சி பிரிவிலோ சேர்த்துவிட்டால் பி.சி அல்லது எம்.பி.சி இடஒதுக்கீட்டு சதவீதங்கள் கூடத்தான் போகிறது. இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு இந்தியாவில்/ தமிழகத்தில் உள்ள பல சாதிகள் இடம்பெயர்ந்திருக்கின்றன. இதுபோன்ற இடஒதுக்கீட்டுப் பிரிவு மாற்றங்களின் முன்நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டியும்தான் தங்களது கோரிக்கையை அவர்கள் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

பி.சி என்றும், எம்.பி.சி என்றும், எஸ்.சி என்றும் வரையறை செய்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளை உருவாக்கி, அதே பிரிவுக்குள் காலங்காலமாக அத்தனை சாதிகளும் அடைக்கப்பட்டு இருப்பது என்பது, இடஒதுக்கீட்டு அடிப்படையில் சாதியக் கட்டுமானத்தை மேலும் மேலும் இறுக்கமாக்கிக்கொண்டேதான் போகும். இடஒதுக்கீட்டுப் பிரிவுகள் மற்றும் அதற்குள் இருத்திவைக்கப்பட்டுள்ள சாதிகள் நிரந்தரமாக்கப்படாமல், அந்தப் பிரிவுகள் மற்றும் சாதிகள் போன்றவை சமூகப் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் மறுவரையறையும் மறுசீரமைப்பும் செய்யப்படும்போதுதான் சாதியக் கட்டுமானம் மற்றும் சாதி சார்ந்த பொதுப்புத்தியில் மாற்றங்கள் நிகழும்.

அந்தவகையில், சாதியக் கட்டுமானத்திற்கு எதிராகவும், சாதிய அவமானத்திற்கு எதிராகவும், சாதியத் தளர்வுக்கான முன்நகர்வாகவும்தான் எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறி, வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்குச் செல்லவேண்டும் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் என இழிவாகவும் அவமானமாகவும் மற்றவர்கள் கருதுவதும்,
எஸ்.சி பிரிவிலேயே தாழ்த்தப்பட்டோராகவே ஒரு சாதியினரை இருத்தி வைக்க வேண்டுமென நினைப்பதும் சாதியாதிக்க உளவியல்தான்.

சாதியாதிக்க உளவியலுக்கு எதிராக, எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோருவது, நேற்று இன்றல்ல; கால் நூற்றாண்டாகவே இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை அந்த மக்களே பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருப்பதை, நாங்குநேரி இடைத்தேர்தல் நிலவரங்களும் உணர்த்திக் காட்டியிருப்பதும், எந்த அரசியல் ஆளுமைகளின் தலையீடும் இன்றி, அந்தக் கோரிக்கையை அந்த மக்கள் தன்னெழுச்சியாய் வெளிப்படுத்தி இருந்தனர் என்பதும், அந்தக் கோரிக்கைக்கு அச்சமூகத்தினரின் பெரும்பான்மை ஆதரவு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையைப் போலவேதான், பெயர் மாற்றக் கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். குடும்பன், பள்ளன், காலாடி, மூப்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான்,வாதிரியார் உள்ளிட்ட சாதியினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மாற்ற அரசாணை வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் அவ்வாறு குறிக்கப்பட்டிருப்பதற்கான வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கோயில் வழக்காறுகள், அரசாணைகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள், சொத்துரிமை ஆவணங்கள் போன்ற பலவற்றுள்ளும் தேவேந்திரகுல வேளாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அவர்களது பழைய பெயர் அடையாளத்தையே இப்போது கேட்கிறார்கள். புதியதான பெயர் எதுவொன்றையும் அவர்கள் கேட்கவில்லை.

குறிப்பிட்ட சொல்லாடல்களால் ஒரு தரப்பினரைக் குறிக்கும்போது, இழிவு தருவதாகவும் அவமதிப்பதாகவும் அவர்கள் உணரும்போது, அவர்களை மதிப்புமிக்க சொல்லாடல்களால் மாற்றிக் குறிப்பதான அரசாணைகள் நிறைய வந்திருக்கின்றன.

ஊனமுற்றோர் என்போரை மாற்றுத் திறனாளி என்றும், அரவானிகளைத் திருநங்கை என்றும், துப்புரவுப் பணியாளர்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்றும் மதிப்புமிக்க சொல்லாடல்களால் குறித்திருப்பதைப் போன்றே, பல சாதியினருக்கும் மதிப்புமிக்க சொல்லாடல்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோலத்தான், தாங்களும் மதிப்புமிக்க சொல்லாடலால்/பெயரால் குறிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களது சுயமரியாதை தொடர்பான கோரிக்கைதான்.

தாழ்த்தப்பட்டோர் எனும் எஸ்.சி பிரிவிலிருந்து வெளியேற்றி, வேறு மாற்றுப் பிரிவுகளில் சேர்க்க வேண்டும் எனவும், பெயர் மாற்ற அரசாணை வேண்டும் எனவும் கால் நூற்றாண்டாகப் போராடிவரும் அவர்களது இந்தக் கோரிக்கையானது நியாயமான சனநாயகக் கோரிகை மட்டுமல்ல; சமூகநீதிக் கோரிக்கையும் கூட.

சனநாயகத்தின் மீதும் சமூகநீதியின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள், அவர்களின் இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதே சமூகக் கடமையாகும்.

இதுதொடர்பான உரையாடல்களைச் சமூக அக்கறையுடனும் நேர்மையுடனும் முன்வைக்க வேண்டுகிறேன்.

ஏர் மகாராசன்
15.05.2020.

திங்கள், 11 மே, 2020

இடதுசாரிகள் - வலதுசாரித்தனம் - சந்தர்ப்பவாதம் : மகாராசன்

புத்தரின் ஆண்குறியில் அறிவைத் தேடும் அம்பேத்கர் என, அவரைக் குறித்த சொல்லாடல்கள் முன்வைக்கப்பட்டிருப்பதைக் குறித்தும், சாதிய நிலைமைகள் குறித்தும் இடதுசாரிகள்கூட விவாதிப்பதில்லை. அவற்றைக் குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயங்குகின்றனர்.

ஒருவரைக் குறித்தும், அவரது சமூகப் பங்களிப்புகள் குறித்தும், அவரது எழுத்துக்களைக் குறித்தும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விமர்சன ரீதியாக எது ஒன்றையும் முன்வைப்பதில் தவறில்லை. மீளாய்வுக் கருத்துகள் வருவதும் சமூகத் தேவைதான்.

ஆனால், ஒருவரைக் கண்ணியக் குறைவான சொற்களால் மதிப்பீடுகளை முன்வைப்பதில் அறம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒருவரைக் குறித்து எழுதவும் பேசவும்கூடிய சுதந்திரத்தை இந்தச் சமூகத்தின் சட்ட வாய்ப்புகளே வழங்கியிருக்கின்றன. அதேபோல ஒருவர் மீதானஅவதூறு கருத்துக்கு வழக்குத் தொடுப்பதற்கும் இந்தச் சமூக அமைப்பின் சட்ட வாய்ப்புகளே இடம் தந்திருக்கின்றன.

இந்நிலையில், அம்பேத்கர் குறித்த குறிப்பான சொல்லாடல்களைத் திரும்பப் பெறுவதற்கான எந்த அறிவுறுத்தல்களும் இல்லாமல், வழக்கை மட்டும் திரும்பப்பெற வேண்டுமென இடதுசாரிகள் அறிவுறுத்துவது அறம்சார்ந்த நிலைப்பாடாகத் தோன்றவில்லை.

புத்தரின் ஆண்குறியில் அறிவைத் தேடும் அம்பேத்கர் என்கிற மதிப்பீட்டுச் சொல்லாடல்கள் குறித்துதான் வழக்கும் விவாதமும் அமைந்திருக்கிறது. இந்த மதிப்பீட்டுச் சொல்லாடல்கள் குறித்துக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் இருப்பதும், வழக்கை மட்டும் திரும்பப்பெற வலியுறுத்துவதும், அம்பேத்கரைக் கண்ணியக் குறைவாய் மதிப்பீடு செய்யும் போக்கிற்கே துணை செய்யும்.

ஒருவரை அவதூறு செய்யும்போது மான நட்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படுவதற்கான சட்ட வாய்ப்பும் உரிமையும் இருப்பதைப் போலத்தான், இந்த வழக்கும் அதற்குரிய வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கி இருக்கிறது.

வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் எனும் குரலையே இடதுசாரிகள் பலரும் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், அந்த வழக்கையே பயன்படுத்தக்கூடாது; அந்தச் சட்டப்பிரிவையே நீக்க வேண்டும் என்று இன்னொரு புறமிருந்தும் வலதுசாரிகளின் எதிர்ப்புக் குரல் இருந்து கொண்டே இருக்கிறது.

இடதுசாரிகளின் இந்தக் குரலுக்கும், வலதுசாரிகளின் அந்தக் குரலுக்கும் இடைவெளி அதிகமிருப்பதாய்த் தோன்றவில்லை.

அம்பேத்கரை மட்டுமல்ல; பிரபாகரன், பெரியார், அயோத்திதாசர், நா.வானமாமலை உள்ளிட்ட எந்தவோர் ஆளுமைப் பண்புகளையும் கண்ணியக் குறைவான சொற்களால் மதிப்பீடுகளை முன்வைப்பதும் அதை ஆதரிப்பதும் மனித அறப்பண்பல்ல. இதைக் கண்டும் காணாது கடந்துபோவதும் இடதுசாரிப் பண்பும் அல்ல.

பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பிரபாகரனைக் கொண்டாடுவதிலும், பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அம்பேத்கரைக் கொண்டாடுவதிலும், நா.வானமாமலையைக் கொச்சைப்படுத்தி அம்பேத்கரைக் கொண்டாடுவதிலும் இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் எனப் பலவகைப்பட்ட அரசியல் முகாம்களைச் சார்ந்தவர்களிடமிருந்தும் சந்தர்ப்பவாதப் போக்குகளும் வெளிப்படவே செய்கின்றன. இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்குகளையும் மறைப்பதும் மறப்பதும் அரசியல் அறமல்ல.

எவருடைய கருத்தையும்  வெளிப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லைதான். அதேவேளை, எவரையும் யாரும் அவமதிப்பதற்கும் உரிமை இல்லைதான்.

கருத்து சுதந்திரத்தின் பக்கம் நிற்பதாய்க் கருதி, அவமதிப்பின் பக்கம் நின்று கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள் பலரும்.

ஏர் மகாராசன்
11.05.2020

திங்கள், 4 மே, 2020

தமிழர் அரசியல்: ஆரிய எதிர்ப்பும் ஆரிய ஒத்தூதும் :- மகாராசன்

ஈழ ஆதரவு என்பதையும், திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் மீதான விமர்சனம் என்பதையும், அதிமுக, பாசக உள்ளிட்ட ஆரியக் கூட்டணிக்கான ஆதரவு என்பதாகத்தான் திராவிட இயக்கத்தினரும் அதன் ஆதரவாளர்களும் அறிவுசீவிகளும் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

அவர்களைப் பொருத்தளவில், ஒன்று, காங்கிரசு உள்ளிட்ட திமுக தலைமையிலான திராவிடக் கூட்டணி அரசியல், மற்றொன்று, அதிமுக உள்ளிட்ட பாசக தலைமையிலான ஆரியக் கூட்டணி அரசியல் என்ற இரண்டே அரசியல் தளங்கள்தான் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

திராவிட அரசியல், ஆரிய அரசியல் அல்லாத மாற்று அரசியல் களமாகத் தமிழ்த் தேசிய அரசியல் களம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை, அவர்கள் கருத்தில் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

வாக்கு அரசியலில் பங்கேற்று, அதிகாரத்தில் பங்குபோடும் அவர்கள் நினைப்பதைப்போல, தமிழ்த் தேசிய அரசியல் என்பது இப்போதைய வாக்கு வங்கி அரசியல் அல்ல. ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான அரசியல் அது.

இந்தியாவில், காசுமீர் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலை அரசியல் போன்றே தமிழ்த் தேசிய அரசியலும் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான அரசியலே ஆகும். அவ்வகையில், நிகழ்காலச் சமூக அரசியல் கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கருத்தியல் எழுச்சியாக வடிவம் கொண்டு வருகிறது.

ஒரு தேசிய இனத்தின் வீறு கொண்ட எழுச்சி, அதன் அரை நூற்றாண்டுகாலப் போராட்டம், அதன் வலி, அதற்குக் கிடைத்த ஆதரவு, அதற்கு நிகழ்ந்த துரோகம், அதன் வெற்றி தோல்விகள், அதன் படிப்பினை, இனப் படுகொலைக்கான நீதி கோருதல், போன்றவற்றைப் பேசுவதும் ஆதரவாக நிற்பதும் என்பதெல்லாம், தமிழ்த் தேசிய அரசியலுக்கான படிப்பினை போன்றவற்றோடு உந்துதல் தரும் காரணிகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தை, ஈழப்போராட்டத்தை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான முன்மாதிரியாகவே பார்க்கிறது தமிழ்த் தேசிய அரசியல் களம்.

வெறுமனே, ஈழ ஆதரவை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலாக முன் வைக்கவும் முடியாது; முன்வைக்கவும் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓர் அங்கம்தான் ஈழ விடுதலை ஆதரவு என்பதும்.

இந்நிலையில், தமிழர் அடையாளம் என்று சொல்வதையெல்லாம் திராவிட அடையாளம் எனக் கட்டமைப்பதிலும், தமிழ்த்தேசியம், ஈழ ஆதரவு, திராவிட விமர்சனம் என்று சொல்வதையெல்லாம் ஆரிய ஆதரவுக்கான அடையாளம் என்பதாகக் கட்டமைப்பதற்குப் பின்னாலும் இருக்கும் நுண் அரசியல் என்பதெல்லாம், தமிழர் அடையாள அரசியலை, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் கருத்தியலை, தமிழ்த் தேசிய இனத்தின் சனநாயகக் கோரிக்கையை, தமிழ்த் தேசிய இன விடுதலையை, தமிழினம் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலையை மறுப்பதும் எதிர்ப்பதுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

ஆரிய வைதீக மரபுகளும் அதன் அதிகாரங்களும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நிலம், தமிழர் அடையாளம், தமிழர் பண்பாடு, தமிழர் உரிமை, தமிழர் அரசியல், தமிழர் விடுதலை போன்றவற்றை வன்மத்தோடும் பகையோடும்தான் பன்னெடுங்காலமாக அணுகி வருகின்றன. ஆரிய மரபுக்கும் தமிழர் மரபுக்குமான முரணும் மோதலும்தான் தமிழ்த் தேசிய அரசியலின் உள்ளீடு.

தமிழ்த் தேசிய அரசியல் கருத்தியல் உள்ளிட்ட தமிழ் மரபுகளை/ தமிழ்த் தேசிய எழுச்சியை / தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை ஆரியத்திற்கு எதிரான ஒன்றாகவே ஆரிய வைதீக அதிகார மரபுகள் கருதிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஆரிய வைதீக மரபின் அதிகாரக் கட்டமைப்பு என்பதெல்லாம் இந்திய வடிவிலான வல்லாதிக்கக் கட்டமைப்புதான். இந்திய வல்லாதிக்கக் கட்டமைப்பைப் பாதுகாக்கும்படியான அரசியல் வேலைகளைத்தான் காங்கிரசு, பாசக உள்ளிட்ட தேசியக்கட்சிகள் அதனதன் பாணியில் அதனதன் வேலைத்திட்டங்களோடு செய்துகொண்டிருக்கின்றன. அவைகளைப் பொருத்தளவில், இந்திய வல்லாதிக்கம் பரவலாக்கப்பட வேண்டும்; அது பாதுகாக்கப்பட வேண்டும் அவ்வளவுதான். இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக இருக்கும் எதனையும் அழித்தொழிப்பதையே அதன் அரசியல் அதிகார அறமாகப் பாவிக்கின்றன. அதனால்தான், ஈழம், காசுமீர தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை அழித்தொழிப்பதில் குறியாய் இருக்கின்றன.

இந்நிலையில், ஆரிய வைதீக எதிர்ப்பு என்பது, இந்திய வல்லாதிக்க எதிர்ப்பு என்பதாகத்தான் அமைந்திருக்கிறது. இந்திய வல்லாதிக்க எதிர்ப்பு என்பது, தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலையில்தான் அடங்கி இருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கை,
ஆரிய வைதீக அதிகார மரபுகளுக்கு எதிரானது; இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரானது.

இந்நிலையில், ஆரிய எதிர்ப்பு பேசும் திராவிடக் கருத்தியலாளர்கள், ஆதரவாளர்கள், அறிவுசீவிகள் போன்றோர், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கையை, அதன் அரசியலை, அதன் நிலைப்பாடுகளை ஆரியச் சார்பானது எனக் கட்டமைக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலை ஆரிய வைதீக அதிகார மரபுகளும் எதிர்க்கின்றன. அதேவேளையில், ஆரிய எதிர்ப்பு எனக் கூறிக்கொள்வோரும் எதிர்க்கின்றனர் எனில், இவர்களின் ஆரிய எதிர்ப்பு என்பதெல்லாம் போலியானது மட்டுமல்ல; தமிழ்த் தேசிய அரசியலை மறுக்கும் அல்லது மறைக்கும் நோக்கத்தையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலை மறுக்கும் அல்லது மறைக்கும் இந்த உள்ளீடுதான் ஆரியத்திற்குச் சார்பானது; ஆரியத்திற்குத் துணை நிற்பது என்பதாகும்.

தமிழ்த் தேசிய அரசியலை எதிர்ப்பதுதான், ஆரிய எதிர்ப்பு எனக் கட்டமைப்பதெல்லாம், ஆரிய வைதீக அதிகார மரபுகளுக்குப் பின் மறைந்திருக்கும் முற்போக்கு முகமூடிகளின் கருத்தியல் கட்டமைப்புதான்.

ஆரிய எதிர்ப்பு எனும் பேரில், தமிழ்த் தேசிய அரசியலை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆரிய மரபுக்குப் பின்னாலிருக்கும் முற்போக்கு முகமூடிகளின் ஆரிய ஒத்தூதுக் கருத்தியலையும் தமிழ்த் தேசிய அரசியல் களம் அம்பலப்படுத்தியே தீரும்.

தமிழ்த் தேசிய அரசியலையும், ஈழ விடுதலை அரசியலையும் ஆதரிப்பதே உண்மையான ஆரிய எதிர்ப்பு என்பதாகும். மாறாக, தமிழ்த் தேசிய அரசியலையும், ஈழவிடுதலை ஆதரவையும் எதிர்ப்பது என்பதெல்லாம் ஆரிய ஒத்தூது ஆகும்.

ஏர் மகாராசன்
04.05.2020

வெள்ளி, 1 மே, 2020

அன்பான தமிழக இடதுசாரிகளுக்கு... மகாராசன்


கேரளத்தில், இடதுசாரி அரசியல் அமைப்பால் அரசாளும் நிலத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவே, அவர்களின் சந்தர்ப்பவாதங்களுக்கும் திரிபுவாதங்களுக்கும் வன்மங்களுக்கும் எள்ளல் பகடிகளுக்கும் துணை நிற்காதீர்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொற்கள், ஒருவரைக் கூட காயப்படுத்துவதாகவோ அவமதிப்பதாகவோ இருந்தால் அதைக் கண்டியுங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளச் சொல்லுங்கள். புரிதலை ஏற்படுத்துங்கள். மன்னிப்புக் கோரச் சொல்லுங்கள். இது எதுவுமே நடக்காத பட்சத்தில் அவர்களின் சார்பாக நீங்கள்கூட மன்னிப்புக் கோருங்கள்.

ஓர் இனத்தின் பெரும்பான்மைத் திரளால் மதிக்கப்படும் ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவரை அவமதிப்பது என்பது, அவ்வினத்தை அவமதிப்பது என்பதை உணருங்கள். அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் சுயவிமர்சனத்தோடு அணுகுங்கள். அவர்கள் மீதான விமர்சனத்தை உங்கள் மீதான விமர்சனமாகத் தரித்துக் கொள்ளாதீர்கள்.

தமிழ் நிலத்தின் நியாயமான கோரிக்கைகளையும், தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகளையும் செவிமெடுத்துக் கேளுங்கள். தமிழர்களின் உணர்வுப்பூர்வமானவற்றுக்கு மதிப்பளியுங்கள். தமிழர் தரப்பில் நின்று ஆதரவுக் குரல் கொடுங்கள். தமிழ்நாட்டில்தான் தமிழ் மக்களிடம்தான் அரசியல் களப்பணி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையேனும் ஒத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தமிழக இடதுசாரிகள்.
தமிழர்களின் குரலைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும். மாறாக, அவர்களது குரலையே உயர்த்திப் பிடிப்பதே உங்களது நிலைப்பாடு என்றால், இனி கேரள இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளுங்கள். தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என்று புறக்கணியுங்கள்.

ஒரு இனத்தை, இயக்கத்தை, அரசியலை விமர்சிக்கலாம்; மறுக்கலாம்; எதிர்க்கலாம். தமிழர் அரசியல் மீது விமர்சிக்கவும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் அத்தனை உரிமைகளும் இடதுசாரிகளாகிய உங்களுக்கும் உண்டு. ஆனால், அவமதிப்பது என்பது வன்மம் நிரம்பியவர்களின் நோய்க்கூறு.
ஒரு மனிதரை அவமதிப்பது இடதுசாரிகளின் பண்பும் அல்ல என்பதைத் தெளியுங்கள்.

ஒரு வீட்டு நாய்க்குட்டிக்கு பினராயி விஜயன், நம்பூதிரிபாட், சேகுவேரா, மார்க்சு, லெனின், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி என எவரது பெயர் வைத்தாலும் அல்லது சாதியின் பெயர் வைத்தாலும் கோபம் வர வேண்டும். அந்தக் கோபம்தான் உண்மையானது. இந்தக் கோபம்தான் பிரபாகரன் எனப் பெயர் வைக்கும்போதும் வந்திருக்கிறது. இந்தக் கோபத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழர்களின் இந்த நியாயமான கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் அனைவரையும் இடதுசாரிகளின் எதிரிகளாகப் பாவிக்காதீர்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக நிற்காவிட்டாலும் பரவாயில்லை; தமிழர்களின் உணர்வுகளை வஞ்சிக்காதீர்கள்.

இன்னும், தமிழக இடதுசாரிகளை நட்பு சக்திகளாகவேதான் தமிழர்கள் கருதுகிறார்கள். தமிழர்களின் இந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடாதீர்கள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
27.04.2020.

கதிர் அரிவாளும் சுத்தியலும்: பாட்டாளி வர்க்கத்தின் குறியீடு:- மகாராசன்

கதிர் அரிவாள் என்பது உழவர்களை அடையாளப்படுத்தும் குறியீடு.
சுத்தியல் என்பது தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் குறியீடு.
அவை, பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றிணைவை அடையாளப்படுத்தும் புரட்சிகரக் குறியீடுகள்.

உழவர் தொழிலாளர் ஒற்றுமையாலும் ஒருங்கிணைந்த போராட்டங்களாலும்தான் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகள் நடந்திருக்கின்றன. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர நாள்தான் மே முதல்நாள்.

மார்க்சியம் முன்வைத்திருக்கும் புரட்சிகரக் கோட்பாடுகளை திரிபுவாதம் இல்லாது, திருத்தல் வாதம் இல்லாது, சந்தர்ப்பவாதம் இல்லாது முன்னெடுக்க வேண்டிய தேவைதான், உலகம் முழுவதும் இருக்கின்ற தேசிய இனங்களின் பெருங்கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

மார்க்சியம் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது; உலகில் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறது. ஆனால், மார்க்சியத்தின் பெயரால் இயங்கும் பல இடதுசாரிக் கட்சிகளும் அமைப்புகளும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை இனவாதம் என்று பொத்தாம் பொதுவாகச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய உலக வல்லாதிக்கத்தை வீழ்த்த வேண்டுமானால், உலகில் உள்ள தேசிய இனங்கள் யாவும் தங்களது தேசிய இன விடுதலைப் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். அந்தவகையில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதும், புரட்சிகரத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் திசைவழியில் பயணிப்பதுமே தமிழர்களின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, உயர்த்திக்கொண்ட சாதித் திமிரை ஒதுக்கி வைப்போம்; உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என மே நாளில் சூளுரைப்போம்.

உழவர் தொழிலாளர் அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்.

புதன், 15 ஏப்ரல், 2020

சித்திரையும் ஆடியும் தையும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே! : மகாராசன்




தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை முதல் நாள் எனவும்,
தை முதல்நாள் எனவும்
இருவகைக் கதையாடல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில்,
சித்திரை முதல் நாளையும், தை முதல் நாளையும் கொண்டாடும் சடங்கு மரபு தமிழர் வழக்காற்றில் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது.

தமிழர் நாட்டுப்புற வழக்காற்றில் சித்திரை முதல் நாளையும் தை முதல் நாளையும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுவதைக் காட்டிலும், மாதப் பிறப்பு என்பதாகவே கொண்டாடும் மரபு இன்றளவிலும் இருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களின் முதல் நாள்களைக் கொண்டாடுகிற அல்லது உவப்பாய் வரவேற்கிற நாள்களாகக் கருதப்பட்டதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் சடங்கு மரபுகளும் வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் வளமைக் குறியீடுகளாகவே பயிலப்பட்டு வந்துள்ளன. உழவுத்தொழில் மரபின் அங்கமாய் எவையெல்லாம் இருந்ததோ, அவையெல்லாம் குறியீடுகளாகவும், போலச் செய்தலாகவும், வழிபடு வாழ்த்துச் சடங்குகளாகவும் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

'உழந்தும் உழவே தலை'யாக இருந்த அல்லது தலையாக இருக்கிற ஒரு சமூக அமைப்பில், உழவுத்தொழில் உற்பத்திச் செயல்பாடுகளின் பண்பாட்டுப் புலப்பாடுகளும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பதும் அல்லது பெறுவதும், பெருவாரி மக்களின் பண்பாட்டு நடத்தைகளில் அது செல்வாக்கு செலுத்துவதும் இயல்பு. தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் உழவுத்தொழில் மரபினர் மற்றும் உழவுத்தொழில் துணை மரபினர் பின்பற்றி வந்த புலப்பாடுகளே ஆகும். உழவுக்குடிகள் உள்ளிட்ட பதினெட்டு குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பதும்.

அந்தவகையில், சித்திரை, ஆடி, தை போன்ற மாதங்கள் தமிழர்களின் பண்பாட்டுப் புழங்கலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் உழவுத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சடங்கு வடிவங்கள்தான்.

ஆடி மாதப் பெருக்கு என்பது, ஆற்றுநீர்ப் பெருக்கை பதினெண் குடிகளும் ஒன்றாகச் சேர்ந்து வரவேற்கும் நீரியல் சடங்கு ஆகும். உழவுக்கும் வேளாண்மைக்கும் பெரும்பங்காற்றும் நீர்த் தடங்களைத் தூர்வாரி ஆற்றுநீரை மேலாண்மை செய்யும் இன்னொரு சடங்கு வடிவம்தான் அது. அதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் நிகழ்வு அந்த மாதத்தில் நடந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் சொல்லாடல், உழவுக்கு அடிப்படையான நீரை அடிப்படையாகக் கொண்டது.

இதேபோல, தை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. உழவர்களுக்கும் கால்நடைகள், சூரியன் போன்றவற்றுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடை தான். இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான்.

சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடை காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கி காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடை காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைகாலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது.

இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர்.
கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும் ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்துசேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி,வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். இத்தகைய கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நாளேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகையக் கோடை உழவுச் சடங்கை சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் பொன்னேர் பூட்டுதல், ஏர் மங்கலம் எனும் பெயர்களால் குறிக்கின்றன. ஆக, கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும் நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீக பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். ஆரிய வைதீக மரபு தன்வயப்படுத்திக் கொண்ட சித்திரை முதல்நாள் விழாவை அதனிடமிருந்து மீட்டெடுத்து கோடை உழவுத் திருநாளாக / நாளேர் பூட்டுத் திருநாளாக/பொன்னேர் பூட்டுத் திருநாளாக/ ஏர்பூட்டுத் திருநாளாக முன்னெடுத்து உழவுப்பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது தமிழரின் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

சித்திரையும் தையும் ஆடியும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே.
இதற்கும் ஆரிய வைதீக மரபுகளுக்கும் துளியும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஏர் மகாராசன்
14.04.2020.

திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: முக்கியமானதோர் ஆய்வு நூல் :- அறிவியலாளர் பிரபாகரன்.




முனைவர் மகாராசன் அவர்களுடைய தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்ற முக்கியமானதொரு ஆய்வு நூலை நேற்று தான் முழுவதுமாக வாசிக்க நேர்ந்தது. இதை முக்கியமான புத்தகம் என்று சொல்வதற்கு என்னிடம் நான்கு காரணங்கள் உள்ளன. 1) பேச்சும் எழுத்தும் சேர்ந்த மொழியின் அடிப்படைக் கூறான பேச்சு தோன்றிய விதத்தை, அதன் தேவையை டார்வினின் பரிணாமக் கொள்கையின் வழி நின்று விளக்கிய விதம். “முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தியதாலும், குரல் வளையை பேசுவதற்கு உபயோகப்படுத்தியதாலுமே” குரங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான் எனவும் இந்த இரண்டிற்கும் அடிப்படை, உழைப்பு மட்டுமே என்ற அறிவியலை மிகத் தெளிவாக, பேச்சின் தோற்றம் குறித்த விளக்கத்திற்கு பயன்படுத்தியதற்கு. 2) “தமிழி” எழுத்துகளின் காலம் (தோராயமாக கி.மு 5-6 ஆம் நூற்றாண்டு) பிராமி எழுத்துகளுக்கும் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தியது என்பதை “கொற்கை, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகங்குளம்” போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் முடிவுகளுடன் ஒப்பிட்டு வாதிட்டிருப்பது. மேலும் “தமிழி” எழுத்து அரசதிகார எழுத்தாகவோ, கடவுளின் எழுத்தாகவோ இல்லாமல் அது மக்களின் எழுத்தாக இருந்ததை ஆதாரத்துடன் குறிப்பிட்டதற்கு. 3) ‘பாட்டியல்’ உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்கள் “தமிழ்” எழுத்துக்களின் மீது சாதிய- மத- வர்க்க- பாலின பாகுபாட்டை ஏற்றிருந்ததையும் அப்படி அத்தகைய அடையாளங்கள் இருந்தாலும் அதனால் “தமிழ்” எழுத்துகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பல இலக்கண நூல்களின் வழி கொடுத்த விரிவான விளக்கத்திற்கு. 4) இதுதான் மிக மிக முக்கியமானது. நீண்ட நெடும் வருடங்களாக தமிழ் எழுத்து முறையில் இருந்து வரும் “உ” என்ற எழுத்துக் குறியீட்டுடன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை மறு ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்ததற்கும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பரந்த ஆய்வும். தமிழ் எழுத்து மரபில் “உ” என்ற எழுத்தைக் கொண்டு ஒரு விஷயத்தை எழுத ஆரம்பிக்கும் பழக்கத்திற்கு உண்மையான காரணம் பிள்ளையார் சுழிக்காக அல்ல. மாறாக “உலகம்” என்ற ஒரு பொதுமைப்படுத்தலைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதை இலக்கியம், மக்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் மற்றும் குல தெய்வ பெயர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டிருப்பது. இந்த நான்கு முக்கிய விளக்கத்திற்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட ஆய்விற்கும் வாழ்த்துகள். தமிழின் மீதான உங்களின் ஆய்வு மேலும் தொடரட்டும்.

பகடி மனப்போக்கும் மடைமாற்ற நுண் அரசியலும்: மகாராசன்.




பெரும்பாலான பெருந்திரள் மக்கள் கூட்டம், அதிகாரத்தின் கோரப்பசிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி அரசு எனப் படர்ந்திருக்கும் அதிகாரத்தின் துணையோடு மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கிற அத்தனை நடவடிக்கையாலும் உடலும் உள்ளமும் நொந்துபோய் வெந்து சாகிறார்கள்.

புரட்சியும் போராட்டமும் கசிந்து பெருகாதா? என ஏங்கிக் கிடக்கிறார்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கூட்டத்தினர். புரட்சிகர உணர்வும், அதிகாரத்திற்கு எதிரான கோபமும், போராட்டங்களோடு பங்கேற்பும் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கும் இயல்பு.

அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் தேவை. புரட்சிக்கும் போராட்டத்திற்குமான அரசியல் சூழலை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இதைச் செய்யவேண்டிய மக்கள் திரள் இயக்கங்களின் வாக்கு அரசியல் பங்கேற்பாலும், அதைச் சார்ந்த தொழிற்சங்கங்களின் பலவீனங்களாலும் புரட்சிகர அரசியல் சூழல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. புரட்சிகர இயக்கங்களின் போதாமைகளும் பலவீனங்களும் கூட இதற்குக் காரணம்.

தமிழகச் சூழலில், ஆரியத்துக்கும் தமிழுக்குமான நெடும்பகையும் முரணும் எல்லாத் தளங்களிலும் பரவிக் கிடக்கின்றன. மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், பண்பாட்டியல், அறிவியல், கலைகள், அறிவு, நடத்தை, வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், வாழ்வியல், தொழில், சமூக உறவுகள், கல்வி என அனைத்திலும் ஆரியத்திற்கு எதிரான அடையாளமும் மரபும் ஏகத்துக்கும் இருக்கின்றன.

இவற்றின் ஒவ்வொரு இண்டு இனுக்கிலும் காணப்படுகிற ஆரியத்திற்கு எதிரான அடையாளங்களை இனம் காண்பதை விட்டுவிட்டு, அதன் வேர்களையும் வரலாற்றையும் மீட்டெடுப்பதை விட்டுவிட்டு, ஆரியத்திற்கு எதிரான தமிழர் மரபுகளை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, வெறுமனே ஆரியத்தைப் பகடி செய்யும் கேளிக்கை மனிதர்களாக மட்டுமே இருக்கும் சூழலைப் புறந்தள்ள வேண்டியதைக் குறித்துத் தமிழர்கள் பரிசீலிக்கவேண்டியது அவசியம் ஆகும்.

அரசதிகாரத்தின் அறிவிப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், அட்டூழியங்கள், அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், பயங்கரவாதப் போக்குகள், மத அடையாளங்கள், சாதியக்கூறுகள், அரசதிகாரத்தின் முகங்கள், அதன் அடிவருடிகள் பற்றியெல்லாம் வெறுமனே கேலியும் கிண்டலுமான பகடி செய்வதால் மட்டுமே அவற்றை வீழ்த்திவிட முடியும்; அவை வீழ்ந்திடும் என நினைப்பதும், அத்தகைய பகடிகளே அரசதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாகப் பாவிப்பதும் இன்னொரு வகையில் மூடநம்பிக்கைதான்.

அண்டா திருடர்கள், பிரியாணித் திருடர்கள், டவுசர் சங்கிகள் எனப் பகடி செய்துகொண்டிருந்த காலத்தில்தான், யாரைப் பகடி செய்தார்களோ, அவர்களேதான் அரசதிகாரத்தை இன்னொருமுறையும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

கொரானா தீநுண்மி நோய்த்தொற்று பரவலாகப் பரவி வரும் சூழலில், அரசதிகாரம் முன்மொழிந்த ஊரடங்கு, தனித்திருத்தல், கைதட்டுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றையெல்லாம் பகடி செய்யும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் பரவி வருகின்றன.

வெறுமனே பகடி செய்துவிட்டுக் கடந்துபோய் விடுவதே அரசதிகாரத்தினை எதிர்ப்பதாகக் கொள்ள முடியாது. அரசதிகாரத்தின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிரான கோப உணர்வுகளுக்குப் பதிலாக, பகடி செய்து மகிழும் இந்த மனப்போக்கையே அரசதிகாரமும் விரும்புகின்றது.

கோப உணர்வும் புரட்சிகர உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவேதான் பகடியான-கேளிக்கையான பதிவுகளை அரசதிகாரத்தின் ஊடக நிறுவனங்களே உருவாக்கிக் கொடுக்கின்றன. இந்தப் பகடிச் செய்திகளை, காட்சிகளை, பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலமே அரசதிகாரத்தை எதிர்த்து நின்றவர்கள் என்கிற தகுதிப்பாட்டை அடைந்துவிடச் செய்து விடுகிறார்கள்.

அதிகாரத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தி, அதன் அட்டூழியங்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை உருவாக்கும் கலைப் படைப்புகளையும், காட்சிப் படங்களையும், கட்டுரைகளையும் அதிகமாக உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உழைக்கும் மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. அந்த வேலைகளையெல்லாம் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மறந்துவிட்டு, அரசதிகாரத்தைப் பகடி செய்வதில் மட்டுமே நிறைவடையும் மனப்போக்கானது, அரசதிகாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, நம்மை மடைமாற்றம் செய்து, அரசதிகாரத்திற்குத் துணையாகவே இருக்கும் என்பதை உணரும் காலமும் இதுதான்.

ஆயினும், மிகச் சில ஓவியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தோழர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களது படைப்புகள், பதிவுகளின் வாயிலாக அரசதிகாரத்தின் மீதான எதிர்ப்பைப் புலப்படுத்தியும் வருகின்றனர். இதுவே இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று,
அதிகாரத்தின் நிழலில் அண்டி வாழப் பழகிவிட்ட ஒரு சமூகம்தான், பகடியால் மட்டுமே தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும்.

ஏர் மகாராசன்
06.04.2020

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழின் தொன்மையான வரலாற்றுக்காலம் பற்றி அறிய உதவும் நூல்: செல்வா தமிழ், சமூகச் செயல்பாட்டாளர்.






முனைவர் மகாராசன் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' என்னும் ஆய்வு நூலானது, ஒரு மொழி என்பது எவ்வாறு தோன்றியது? எப்போது எழுத்து வடிவம் எடுத்தது? மொழியைச் செழுமைப்படுத்த இலக்கண நூல்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அது எவ்வாறு ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாய் உள்ளது? என்பன பற்றி விரிவாக ஆய்வு செய்து தரவுகளுடன் தரப்பட்டுள்ளது.

மொழியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலை நான் படிப்பது இதுதான் முதல் முறை. தோழர் மகாராசனின் எழுத்துநடை ஒரு ஆய்வு நூலைப் படிப்பதற்குச் சிரமமின்றி எளிமையாக இருந்தது.

இந்நூலில் உள்ள சில கருத்துக்கள்...

மனித சமூகத்தின் உழைப்பில் விளைந்ததே மொழி. எனவே, சமூகம் இல்லாமல் மொழி இல்லை; மொழி இல்லாமல் சமூகத்தின் வளர்ச்சி இல்லை. எனவே, இரண்டும் இணைந்தே இயங்குகிறது.

மொழிக்கு நிலைபேறு என்கிற தகுதிநிலை அளிப்பது எழுத்தாகும். மொழியின் ஒலி வடிவத்திற்கு வரி வடிவம் கொடுப்பதே எழுத்துதான். எழுத்து என்னும் சொல்லை நோக்கும் போது உண்மையில் எழு என்னும் சொல்லே வேர்ச் சொல்லாக இருப்பது புலனாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவமான பிராமி என்னும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும் தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகும் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் இதனை மறுத்து, கி.மு .15 ஆம் நூற்றாண்டு வரை வழமையான எழுத்து வடிவத்தைக் கொண்டதாகத் தமிழ்மொழி உள்ளதாக நிறுவுகின்றன. தமிழில் உள்ள எழுத்து வடிவத்திற்குத் தமிழி எனக் குறிக்கலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எ.கா. 1970ம் ஆண்டு கொற்கைத் துறைமுகக் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த பானை ஓடு ஒன்றில் தமிழ் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதனைக் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதன் காலம் கி.மு. 550 முதல் கி.மு. 660 இருக்கலாம் என்பதை நிறுவுகிறது.

அதேமாதிரி, தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்து வடிவத்தின் பழமையை நிறுவுகிறது. எனவே, பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து தமிழ் எழுத்து உருவாகவில்லை. மாறாக, அதற்கு முன்பே தமிழ் எழுத்து வடிவம் இருந்திருக்கின்றது; அது தமிழி எழுத்து வடிவம் ஆகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

தமிழி எழுத்து வடிவம் கிடைக்கப்பெற்ற பொருட்களில் எல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்தியவை ஆகும். மற்றும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்திய பொருள்களில் எழுதப்பட்டுள்ளது. இது சமூகத்தில் அடித்தட்டு மக்கள் வரை கல்வி அறிவு பெற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளதை நிறுவியுள்ளது.
ஏனென்றால், பெரும்பாலும் வட இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் செப்பேடுகள் போன்றவற்றில்தான் முதன்முதலாகப் பிராமி எழுத்து வடிவத்தில் பிராகிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது . ஆனால், அதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சாதாரண மக்கள் பயன்படுத்திய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஒரு மொழியின் வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால் மொழி எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பாகப் பல நூறு வருடங்கள் பேச்சு மொழியாக இருக்கும். எனவே, தமிழ்மொழியின் வரலாறு என்பது கிடைக்கப்பட்ட தரவுகள் ஆதாரங்கள் அடிப்படையில் தோராயமாக கி.மு. 2000ஆம் ஆண்டுகள் என மதிப்பிடலாம்.
இது போன்ற பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.

தமிழ்மொழியின் தொன்மையான வரலாற்றுக் காலம் பற்றியும், சிறப்பைப் பற்றியும் அதை பயன்படுத்திய மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இவ்வாய்வு நூலைத் தோழர்கள் அவசியம் வாசிக்கவும்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம்: திராவிடமயமாக்கலின் தோல்வியும் வெற்றியும்:- மகாராசன்.



தமிழ்மொழியைத்
'திராவிட மொழி'என்றும்,
தமிழ் இனத்தைத்
'திராவிடர்' என்றும்,
தமிழ்நாட்டைத்
'திராவிட நாடு' என்றும்,
தமிழ்ப் பண்பாட்டு நாகரிகத்தைத்
'திராவிடப்
பண்பாட்டு நாகரிகம்' என்றும்,
தமிழர் திருநாளைத்
'திராவிடத் திருநாள்' என்றும்
தெரிந்தோ தெரியாமலோ 'திராவிடமயமாக்கம்' நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.

இச்சூழலில், தமிழர் மரபு அறிவின் நீட்சியாக - அனுபவ அறிவின் பயனாக - இயற்கை உறவின் கொடையாக - தமிழர் நிலத்திற்கே உரித்தான இயற்கை மருத்துவமாக- பயில்முறைக் கல்வியாகப் பரிணமித்த மருத்துவ முறையாகச் 'சித்த மருத்துவம்' தோன்றி வளர்ந்திருக்கிறது. தமிழ்மொழிக்கும் சித்த மருத்துவத்திற்குமான பிணைப்பு இணைபிரியாதது. சித்த மருத்துவம் என்பது, 'தமிழ் மருத்துவம்' என்று சொல்லுமளவிற்குத் தமிழின் மருத்துவ அடையாளமாகத் திகழக்கூடிய ஒன்று.

தமிழின் அடையாளங்கள் அனைத்தையும் திராவிடமயமாக்கி வந்த சூழலில், தமிழ் அடையாளங்களுள் ஒன்றான சித்த மருத்துவத்தை - தமிழ் மருத்துவத்தை மட்டும் திராவிடமயமாக ஆக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தைத் 'திராவிட மருத்துவம்' என்பதாகத் திராவிட மயமாக்கவில்லை. திராவிட மருத்துவம் என்பதாகக்கூட, சித்த மருத்துவத்தை முன்னிறுத்தவோ அல்லது முன்மொழியவோ செய்திடவில்லை.

தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ சித்த மருத்துவம் எந்த வகையிலும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சதியும், ஏமாற்றும், மாயத்தோற்றமும், அச்சுறுத்தலும், கட்டுப்பாடும், சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் அழிப்பும், குல நீக்கமும், அதிகாரத் துணைகொண்ட ஒடுக்குமுறையும், படுகொலையும் 16ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்றுவரையிலும் நீடிக்கின்றன. ஏனெனில், அறிவியல் தொழில்நுட்பத் தோற்றத்தில் - வணிகமயக் கண்ணோட்டத்தில் உள்நுழைக்கப் பார்த்த அலோபதி மருத்துவ நுழைவுக்குப் பெருந்தடையாக இருந்தது சித்த மருத்துவ முறைதான்.

இன்றும் கூட அலோபதியின் வணிக நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் அதுதான். அதனால்தான், சித்த மருத்துவத்தைத் திராவிட மருத்துவமாகவோ அல்லது தமிழ் மருத்துவமாகவோ பரவலாக்கம் செய்திடவில்லை அதிகாரத் தரப்பினர்.

அலோபதி மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள், உள்கட்டமைப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை போல, சித்த மருத்துவத்தையும் நவீனப்படுத்தவும் பரவலாக்கவும் செய்கின்ற முயற்சிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவுதான். இந்த மண்ணில்-இந்த மக்களால்-இந்த மரபில் தோன்றி பன்னெடுங்காலமாக மக்கள் மருத்துவமாகத் திகழ்ந்துவந்த சித்த மருத்துவமானது, அலோபதி மருத்துவ நுழைவுக்காகவே இரண்டாம்தர மருத்துவமாகத் திட்டமிட்டுத் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இது அறிவியல் அற்றது; நவீனப்படாதது; நிரூபிக்கப்படாதது; அனைத்து நோய்க்கும் மருந்தில்லாதது என்கிற புனைவுகள் அக்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் முன்வைக்கப்படுகிற கொச்சை வாதங்கள்தான்.

இவர்களது நோக்கமெல்லாம், சித்த மருத்துவமானது தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ நவீனமாக மாறிவிடக்கூடாது என்கிற எண்ணம்தான். கூடவே, அலோபதியின் வணிக நோக்கில் கைகோர்ப்பதும்தான்.

சித்த மருத்துவம் என்பதைப் பொருத்தளவில், அதனைத் திராவிட மருத்துவம் என்று சொல்லும்படியாகவும் அதை ஆக்க முடியவில்லை; அப்படியாக அதை ஆக்கவும் விரும்பவில்லை. இதில்தான் திராவிடமயமாக்கலின் தோல்வி அடங்கி இருக்கிறது; கூடவே வெற்றியும் மிதமிஞ்சி இருக்கின்றது.

பிற்குறிப்புகள்:

1. சித்த மருத்துவத்திற்கும் தமிழகத்தில் இருந்த மடங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தமிழக மடங்கள் சமயக் கல்வியை வலுப்படுத்தும் விதமாக கட்டடக் கலை, ஓவியம், இசை, நாட்டியம், மருத்துவம், மெய்ப்பொருள் அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், அடிப்படையான மொழி, மொழியைச் செம்மைப்படுத்தும் இலக்கணம், கோவில் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தோத்திர நூல்கள் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தன.

தமிழர்களின் பொது அறமாக வழிவகுக்கப்பட்ட 32 பொது அறங்களில் பசிக்கு உணவளித்தல், ஆதுலர்க்குச் சாலை அமைத்தல், கல்விச் சாலை அமைத்தல் மூன்றும் தலையாயன. ஆன்மா எனும் மனதைச் சுத்தப்படுத்த யோக ஞானப் பயிற்சியும், உடம்பை வலுவாக்க அன்னம் அளித்தும், உடம்பை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவப் பயிற்சியும் மடங்கள் மூலமாக அளிக்கப்பட்டு வந்தன.

அனைத்துத் தமிழக மடங்களும் சமய நூல்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான தமிழ் அனுபவச் சித்த மருத்துவச் சுவடிகளைப் பாதுகாத்தும் வந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதிகைச் சித்தர் மரபு, திருமூலர் மரபு, வள்ளலார் மரபு போன்ற பல்வேறு அமைப்புகள் மடங்கள் மூலமாக வந்த வழித் தோன்றல்கள்தான். இவர்கள் தொண்டை மண்டலம் முழுமையும் ஞானக்கல்வியும், சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து வந்தனர். மேலும், இலவச அன்னம் அளித்து, சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து, இலவச தர்ம வைத்திய சாலைகளை நடத்தி வந்துள்ளனர். இதில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அன்றைய காலத்தில் கைவிடப்பட்ட ஏழைப் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மடங்கள் யாவும் கோயிலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. இந்த மடங்களுக்குக் கோயில்கள் மூலமாகவே மானியம் அளிக்கப்பட்டு வந்தன. இந்த மானியங்களைக் கொண்டுதான் பல்வேறு வகையில் அறப்பணிகளைச் செய்துவந்தன. பொதுவாக, கோயில்கள் அனைத்தும் அதிகார அமைப்புகளின் மிக முக்கியமான நிறுவனமாகச் செயலாற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டன் அரசாங்கம்கூட கோயில்களுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அதிகப்படியாகத் தலையிட்டுக்கொள்ளவில்லை.

பிரிட்டன் அரசுக்கு முன்பான காலங்களில் அரசுகளின் நிர்வாகத் தளங்களாக இருந்தவை
கோயில்களும்அதன் துணை அமைப்பான மடங்களுமே ஆகும். இங்குதான் வானியல், சிற்பம், ஓவியம், கட்டிடம், பண்டுவம், கூவகம், நாடகம், பாடல், நடனம், இசை, கல்வி போன்ற சாத்திரத் துறைகளும் அதன் கலைஞர்களும் இயங்கினார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அரசு சார்ந்து மட்டும் இருந்தன. இதனால் மக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி அதிகமாக இருந்தது. இந்தக் காலத்தில் ஆட்சிக்கு வந்த பிரிட்டன் அரசு 'கோயிலில் ஊழல்; எளிய சூத்திர மக்கள் நுழையத் தடை' இருப்பதாக் கணக்கில் கொண்டு முடக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கோயில் மற்றும் மடங்களின் மானியத்தால் மட்டும் பிழைத்துக்கொண்டிருந்த இக்கலைஞர்கள் தெருக்கூத்தாடிகளாக மாறினர் என்பதே வரலாறு.

பண்டுவர்கள் கிராமங்களை நோக்கி வேளாண்குடிகளைச் சார்ந்து தனித்தனியாகப் பிரிந்து போயினர். இதனால், அவர்களிடையே பண்டுவம் தொடர்பாக இருந்து வந்த விவாதக் கருத்துப் பரிமாற்றங்களும் செத்துப்போயின. இதையும் தாண்டி "இவர்களால் நமக்குப் பெரும் தொல்லை இல்லை" என சில வேதாந்த மடங்களைப் பிரிட்டன் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டதால், தொண்டை மண்டலத்திலும் தென்தமிழகத்திலும் சித்தமருத்துவப் பண்டுவம் சாமனிய மக்களைக் காக்கவும் செய்தது.

கோவில் நிறுவனங்கள் அனைத்தும் நீதிக்கட்சி ஆட்சியில் (Endowment Bord) அறநிலையத்துறை என்ற துறையின்கீழ் கொண்டுவரப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, 1947 காலத்திற்குப் பிந்தைய எல்லா வகைப்பட்ட ஆட்சிக் காலங்களிலும் கோயில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, கோயில்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்பட்டன. மானியங்களை நம்பியே செயல்பட்டு வந்த மடங்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. மடங்களில் செயலாற்றி வந்த சித்த மருத்துவப் பண்டுவமும் பண்டுவர்களும் அரசின் ஆதரவின்றிப் போனதாலும், அரசின் நெருக்கடி மிகுதியாலும் மடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், மடங்களில் இருந்த பல லட்சக்கணக்கான மருத்துவச் சுவடிகள்/ ஆவணங்கள் மறைந்தும் அழிந்தும் போயின.

இத்தகைய அறமடங்களை வெறும் ஆன்மீக மடங்களாகவே பார்த்துக் கருதியதும், அதைச் சமய அடையாளங்களாக ஒதுக்கியதும் நீதிக்கட்சி தொடங்கி திராவிட ஆட்சிக்காலங்கள் வரையிலும் அதிகம் நடந்தேறியுள்ளன.

2. ஆந்திரம் கர்நாடகம் கேரளத்தில் ஆயுர்வேதமே அம்மக்களின் மருத்துவமாக உள்ளதற்குக் காரணம், அங்கு சமற்கிருதக் கலப்பு என்பதைவிடவும் சமற்கிருதத்தில் அது அரசு மாயமானதே. இங்கு சமற்கிருதத்திற்குள் போகாதது திராவிடக் கட்டமைப்பு என்பதும் பொய். திராவிடக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே சித்த மருத்துவப் பண்டுவமானது கொரோனா தனிமைப்படுதல் போல் தன்னைச் சுற்றித் தானே வளப்படுத்தி வந்திருக்கிறது. இதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதே ஆய்வுப்பூர்வமானது.

3. பிரிட்டன் அரசு இந்திய ஒன்றியப் பகுதிகளில் மருத்துவங்களுக்காகப் பள்ளி / கல்லூரி தொடங்கியபோது சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பிரிட்டன் அரசுக்கு எடுத்து வைக்க வேண்டிய நீதிக்கட்சியும் முனைப்பு காட்டவில்லை. அதேவேளை, மக்களிடம் சித்த மருத்துவப் பண்படுவம் பரவலாக இருந்தது. இதை நிராகரித்தால் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். இதே சூழலில், தமிழகத்தில் ஆயுர்வேதப் பள்ளியைத் தெலுங்கு பிராமணர்கள் துவக்கியபோதும், நீதிக்கட்சிக்காரர்கள் சித்த மருத்துவப் பண்டுவப் பள்ளி தொடங்க உதவவில்லை என்பதே வரலாறு.

4. உடல் உள்ளுறுப்பு அறுவை சிகிச்சை தொடங்கிய காலத்தில், ஆங்கில மற்றும் உலகளவில் உள்ள மருத்துவக் கூட்டுக் குழுவே செய்திடத் தொடங்கியது என்பதைப் பிரிட்டன் குறிப்புகளே சொல்கின்றன (குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ் நூலில்).

இதைத்தொடர்ந்தே, ஆட்சி அதிகாரத்திலிருந்த கிழக்கு இந்தியப் பிரிட்டன் கம்பெனியானது, அரசைத் தனக்குரியதாக்கியதுடன் தான் ஆண்ட நாடுகளில் எல்லாம் அதைப் பரப்பிப் பணம் ஈட்டியது.


5. சித்த மருத்துவப் பண்டுவத்தில் 4446 நோய்கள் மட்டுமே உள்ளது. புதிய நோய்களுக்கு மருந்தில்லை என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பூமிப்பந்தில் மரபணு திடீர்மாற்றம் (Genetical change and mutation) அடைவது பல கோடி ஆண்டுகள் என ஆய்வு அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். இதன்படி எந்த உருமாற்றமும் மனித குலத்தில் நிகழாதபோது, எப்படி புதிய கண்டுபிடிப்பு மருந்துகள் உருவாகி இருக்கும்?

உடற் கூறுகளில் உள்ள (body mechanism and metabolism) உட்கூறுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேபோல் நுண் கிருமிகள் மூட்டேசன் நடக்கவில்லை. நடந்தது என நாம் நம்புவது கலப்பு; ஒட்டு. இதனாலும் பெரும் மாற்றம் நிகழவில்லை.

எச்அய்வி, காலரா, பிளேக் போன்ற நோய்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை புதிய நோய்கள் இல்லை. எச்அய்வி தீநுண்மி கண்டறியப்பட்டதால் அன்று முதலே அந்நோய் உருவானதல்ல. அதற்கு முன்பே மேக வெட்டை என்ற பெயரில் முன்பே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

6. உள் உறுப்புகள் தொடர்பான கணிப்புக் கருவிகள் எக்ஸ்ரேயில் தொடங்கி இன்றுவரையிலும் பலவகையான நுண் நுட்பமான கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இதற்கு ஏற்றால்போல் சித்த மருத்துவப் பண்டுவத்தில் இல்லையென்பதால் சமற்கிருதம் போல் அழிந்து விடும் என எழுதுவது, சித்த மருத்துவப் பண்டுவ அறிவை நாம் இழக்க வைத்தன் விளைவாகும்.

நாடி பார்ப்பதற்கு இன்று அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியப் பெருமக்களே குறைவு என்பதைவிட, அதன் அடி நாளத்தைத் தொடவில்லை. காரணம், அரசு நிறுவனமாக்கிய கல்வியைக் கொடுத்தவுடன் இவர்கள் சித்த மருத்துவப் பண்டுவர்களைப் போலியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரத்தில், சித்த மருத்துவப் பண்டுவர்களிடமிருந்த அறிவைப் பெற மறுத்ததுடன், அந்தப் பட்டறிவைத் தள்ளுபடியும் செய்தனர்.

நாடி பார்ப்பது நூலில் இருந்தாலும், நாடி பார்ப்பது என்பது அனுபவத்தின் நுட்பமான அறிவாகும். இதைப் படிப்பதால் மட்டுமே பயன்படுத்திட இயலாது என்பதை அவர்கள் அறிந்ததால்தான், டெத்தஸ்கோப் வேண்டும் எனப் போராடிப் பெற்று ஆங்கில மருத்துவர்களைப்போல் கல்வி நிறுவனங்களில் பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் வலம் வருகிறார்கள். அதேபோல், சித்த மருத்துவப் பண்டுவத்தில் உள்ள செந்தூரம், அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடமாகவே உள்ளது. இதில் அனுபவ அறிவைப் (practical) பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதே உண்மை.

7. பிரிட்டன் அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரியாவே எடுத்தது. இதை இன்று வரை சாதிவாரிக் கணக்கெடுப்பு எனச் சொல்லுவதற்குப் பதிலாக, மக்கள் தொகைக் கணக்கு எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். இதைப்போலவே, அன்றைய காலத்தில் இறப்பு விகிதம் அதிகம் என்றும், குறைந்த வயதில் மட்டுமே இறந்தார்கள் என்றும் சொல்வது, தமிழ் மொழியின் சித்த மருத்துவப் பண்டுவ அறிவை எதிர்க்கும் இலக்கை நோக்கியதாகும்.

'ஆங்கில மருத்துவக் கண்டுபிடிப்பால் மட்டுமே ஆயுள் கூடியது' என்ற பரப்புரையும் முன்வைக்கப்படுகிறது. அதேவேளையில்,
இன்றும் எவ்விதமான மருந்து மாத்திரை மட்டுமல்ல; மருத்துவப் பண்டுவமே பார்க்காத கிழடு கட்டைகளை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

1730 முதல் கிழக்கு இந்தியன் கம்பெனியான இங்கிலாந்தோடு மன்னர் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் போட்ட காலமான 1857 வரை எத்தனையோ போர்கள்; எத்தனையோ கலவரங்கள். இந்தக் காலகட்டத்தில் அரசு என்பது எங்கு இருந்தது?. இக்காலகட்டத்தில் என்ன விதமான மருத்துவம் இருந்திருக்கும்?. மக்கள் பட்டினியால் செத்ததைவிட, பண்டுவம் இல்லாமலே செத்தார்கள்.

நோயால் சாகக்கிடந்த மக்களுக்குப் பிரிட்டன் அரசு என்ன செய்தது? உள்ளூரில் சித்த மருத்துவப் பண்டுவம் பார்த்தவர்களைப் போலி மருத்துவர்கள் என்றும், புட்லெக் கன்ரி மெடிசனிஸ்ட் என்றும் சொல்லி, கைது செய்து உள்ளே தள்ளியது. இதனால், போர்க் கலவரங்களில் செத்தவர்களைவிட, பண்டுவம் இல்லாமல் செத்தவர்களே அதிகம் என்ற வரலாற்றை மறைப்பது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல; நேர்மையற்றதுமாகும்.

8. பிரிட்டன் அரசு ஆங்கில மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுவரவில்லை. அவர்களது மிலிட்டரி கண்டோமெண்ட்டில் மட்டுமே மருத்துவம் செய்தனர் என்ற வரலாற்றை மறைப்பதன் நோக்கம் என்ன?

பேராயக் கட்சியில் ( Indian National Congress party) தீவிரவாதப் பிரிவு தொடங்கிய பின்னர், இந்திய ஒன்றிய மொழிகளில் அவர்களின் மருத்துவத்தைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். அதன் பின்னரே இந்த மருத்துவம் மக்களுக்கு லேசுவாசாக, அதுவும் 36 நகராட்சிகளில் பெயரளவிற்குக் கொண்டு வந்தனர். இந்தக் காலகட்டத்தில் சித்த மருத்துவப் பண்டுவர்கள் கொத்துக்கொத்தாகக் கைது செய்த வரலாறு உள்ளதையும் பார்க்க மறுப்பதேன்?

இதே காலகட்டத்தில், ஆங்கில மருத்துவம் பார்க்க மக்கள் வர மறுத்தனர். இதற்குக் காரணம், உயிர் பயம் மட்டுமல்ல; அந்த மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையின்மையைப் பிரிட்டன் பரப்பிய ''இந்திய ஒன்றிய மக்கள் கடவுள் சொல்படி நடப்பவர்கள்' என்ற பிரச்சாரத்தை இன்றும் இங்குள்ளவர்கள் பரப்பி வருகிறார்கள்.

சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பிரிட்டன் அரசு 1921 படிப்பாகத் தொடங்கினாலும், 1932 வரை பதிவு செய்திடாமல் வைத்து, போலி மருத்துவர் என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, சித்த மருத்துவப் பண்டுவம் பார்க்கும் மருத்துவர்களிடம் மக்கள் நம்பிக்கையோடு செல்லக் காரணம், சித்த மருத்துவப் பண்டுவ அறிவு மக்களுக்கு இருப்பதாலும், ஏற்கனவே நம் மக்களிடம் சித்த மருத்துவப் பண்டுவர்கள் இருப்பதாலும்தான்.

மருத்துவர்கள் மீதும், சித்த மருத்துவப் பண்டுவத்தின் மீதும் உள்ள நம்பிக்கை இன்னும் சாகாமல் இருக்கிறது என்பது படித்துப் பட்டம் பெற்ற பெரும்பாலான சித்த மருத்துவப் பண்டுவ மருத்துவர்கள் உணர மறுக்கிறார்கள்.

இந்த சித்த மருத்துவப் பண்டுவர்களிடம் இருக்கும் அறிவைப் பெற மறுப்பதும், மருத்துவ செடி கொடிகளை அடையாளப்படுத்தவும் அவர்களைப் பயன்படுத்தவும் மறுப்பதும் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களின் பெரும் போக்காக மாறி இருப்பதற்குக் காரணம், ஆங்கில மருத்துவர்களைப்போல் இவர்களும் உந்தப்பட்டிருப்பதே ஆகும்.

9. பிரிட்டன் அரசுக் காலத்தில் அமைக்கப்பட்ட கோமான் மற்றும் உஸ்மான் விசாரணைக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஆங்கில மருத்துவத்துடனே சித்த மருத்துவமும் பிற இந்திய ஒன்றிய மருத்துவமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆங்கில மருத்துவர்களாகவே மேல்நிலையாக்க உணர்வை அடைந்து, மரபு அறிவுக்கான சித்த மருத்துவப் பண்டுவப் பாட நூல்களைத் தயாரிக்கவும் முன்வரவில்லை. இதன் நீட்சியாகவே பெரும்பாலான பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

10. மருந்து மட்டுமே உள்ள சித்த மருத்துவப் பண்டுவத்தில், மய்ய மருந்தான செந்தூரம், கந்தகம் பூதம் (பாதரசம்), வெடிப்புத் துத்தம், துருசு போன்றவை இன்றும் சீனத்தில் கிடப்பவை. சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பில்லாமல் அவை இங்கு வந்திருக்காது.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகள் சுத்தி செய்திடும் முறை வேறு. அதேவேளை, சித்த மருத்துவப் பண்டுவத்தில் இங்கு உள்ள மூலிகைகளில் மட்டுமே சுத்தி செய்தனர். பாதரசம் போன்ற திரவ உலோகத்தைத் திடமாக்கி குண்டுமணியாகவும் செந்தூரமாகவும் செய்த அறிவியல் முறை, சித்த மருத்துவப் பண்டுவத்திற்குரியது.

சித்த மருத்துவத்தில் குல்லைப் பூ, அபினி பாசனங்கள், வெடிமருந்தாகப் பயன்படும் இதர மருத்துவப் பொருள்கள் பிரிட்டன் காலம் முதல் இன்று வரையிலும் தடை செய்யப்பட்டிருப்பதும், சித்த மருத்துவத்தில் உள்ள பெரும்பகுதி மருந்துகள், ஆங்கில மருந்துக் கலவையாக எப்படி மாறியது? என்ற வரலாற்றைத் தேடினால், ஆதிக்க அதிகார இருப்பால் அதனைத் தன்வயப்படுத்தியிருப்பதும் புலப்படும்.

ஏர் மகாராசன்
02. 04. 2020.

பிற்குறிப்புத் தரவுகள்:
சுளுந்தீ நூலாசிரியர்
இரா. முத்துநாகு,
ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

நூல் சான்றுகள்:
1. Evolution of medical education in India.
2. Physicians of colonial India (1757–1900).
3. நவீன சித்த மருத்துவச் சிற்பிகள்.
4. காலனி ஆட்சியில் நம் வாழ்வும் நலவாழ்வும்.
5. Understanding of Human Genetic study and Variation.
6. Human Evolution.
7. வியக்க வைக்கும் தமிழர் அறிவு.
8. காலனி ஆட்சியில் வேளாண்குடிகள்.
9. Growth of medical in Raj.
10. Social economic history (1500 to 1960).
11. சுளுந்தீ - தமிழ்ப்புதினம்.

எழுத்தோவியம்
ஓவியர் நித்யன்.

சனி, 28 மார்ச், 2020

தமிழர் மரபின் அறிவையும் அறத்தையும் மீட்டெடுப்போம்: மகாராசன்




தமிழரின் மரபு மருத்துவமான
'சித்த மருத்துவம்',
தமிழரின் உலகு தழுவிய வாழ்வொழுக்கமான 'அற இயல்' ஆகிய இரண்டு அறிவுப்புலங்களும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் 1983 காலகட்டம் வரையிலும் இருந்துள்ளன.
தமிழரின் மரபு அறிவும்,
தமிழரின் மரபு ஒழுக்கமும் தமிழ்நாட்டுக் கல்விப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
மரபறிவை விட்டொழிக்கச் செய்தல் அல்லது மறக்கச் செய்தல், மரபொழுக்கத்தை மழுங்கடிக்கச் செய்தல் அல்லது நுகர் வெறிச் சீரழிவில் பயணிக்கச் செய்தல் என்பதாகவே நவீனக் கல்விமுறையும் அதன் பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
மரபின் அறிவைப் புறந்தள்ளிவிட்டும், மரபொழுக்கத்தின் அறத்தை அறுத்தெரிந்துவிட்டும் உருவாகிற அல்லது உருவாக்கப்படுகிற அறிவு என்பதெல்லாம், இன்னபிறவற்றின் இரவலாகவும், கடன் வாங்கலாகவும், கையேந்தலாகத்தான்இருக்கும்.
எந்தவொரு சமூகம் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறதோ, அந்த சமூகம் தமது மரபறிவை ஆழமாகப் பெற்றிருக்கிறது என்று பொருள். தமிழ்ச் சமூகமும் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் தகவமைத்துக் கொள்வதற்கும் இழந்துவிட்ட அல்லது கைவிட்ட மரபறிவுப் புலங்களை மீட்டெடுத்து நவீனப்படுத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே இருந்த சித்த மருத்துவம், அற இயல் போன்ற பாடப்பிரிவுகளை வருகின்ற கல்வி ஆண்டில் மீண்டும் கொண்டுவர தமிழ்நாடு அரசாங்கமும் பள்ளிக்கல்வித் துறையும் முன்வர வேண்டும்.
ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் தமிழ்நாடு அரசாங்கமானது, தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் புதிய சித்த மருத்துவக் கல்லூரிகளையும், ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கு முன்வரவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழர்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்த்தொற்றுகளுக்கு தமிழர் மரபு மருத்துவமான நிலவேம்புக் குடிநீர் மருத்துவப் பயனை அளித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மரபு மருத்துவத்தின் முக்கியத்துவம் கருதுவதால், ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தை முற்றிலும் புறக்கணித்தல் என்பது பொருள் அல்ல. நமக்கான மருத்துவத்தை நமது மரபிலும் தேடலாம் என்பதே பொருள்.
பழமை என்கிற ஒன்றுக்காகவே மரபு அறிவைப் புறந்தள்ளுகிற ஒரு சமூகம், ஒருபோதும் எழுந்திருக்கப் போவதில்லை.
அறிவைத் தமிழர் மரபிலும் தேடுவோம்.
ஏர் மகாராசன்
28.03.2020.

வெள்ளி, 27 மார்ச், 2020

வேம்பு மரத்தாய்ச்சி: மகாராசன்.

வேனில் காலத்து வெயில் சுட்டெரித்த பொழுதுகளில்
தகித்துக் கொதிக்கிறது பொட்டல்காடு.

காற்றின் வற்றிய மார்புகளில் முட்டிமோதி ஏமாந்தலைந்து
பசியில் நா வறண்டு கிடக்கிறது ஒற்றையடிப் பாதை.

அரவமற்று வெறிச்சோடும்
மறுகால் தலவில்
நிறை சூலியாய் மாண்டுபோன மறத்தியாளின் புதைமேட்டில்
நிழல்பால் கசிந்தபடி
பசுந்தளிர் வெம்பூக்களாய்
மடி விரித்து,
பிள்ளைத் தாய்ச்சித் தவிப்போடு ஒண்டியாய் நின்றசைந்து
உயிர்ப் பாதங்கள் நீவிட
ஈரத் தாலாட்டை இசைக்கிறது
வேம்பு மரத்தாய்ச்சி.

வெம்மையென உயிர் நோகும் கொப்புள வலிகளை
அம்மையாய் வந்திறங்கி மஞ்சளோடு முந்நாள் நீராடி
கூடவே அழைத்துப் போகும் மருத்துவத் தாய்ச்சி.

இப்போதெல்லாம்,
தீண்டுவதற்கும் தொடுவதற்கும் பயந்து நெளிந்து
அடைபட்டு முடங்கி
முக்கி முனங்கி
கண்ணீரும் இன்றி அழுது கிடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தாய்ச்சிகளை மறந்துபோன
மனிதப் பேரினம்.

ஏர் மகாராசன்
27.03.2020