செவ்வாய், 21 நவம்பர், 2017

நா.வானமாமலையும் உழவுக் குடிகளைக் குறித்த எழுத்தும்.




தமிழ்ச் சமூக வரலாற்று நிகழ்வுகளையும், தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவமெனும் மெய்யியல் மரபுகளையும் பெருமிதமாகவும் மிகையாகவுமே எடுத்துரைத்த பெரும்போக்கு நிலவிய காலகட்டத்தில், வரலாற்றுப் பொருள்முதல்வாத மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாதங்களை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியச் சிந்தனைக் கண்ணோட்டத்திலான எடுத்துரைப்புகளைத் தமிழியல் ஆய்வுகளின் வாயிலாகப் புலப்படுத்தி, மார்க்சியத் தமிழியல் சிந்தனை மரபை வளப்படுத்திய அறிஞர் நா.வானமாமலை ஆவார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொ.மு.சி.இரகுநாதன், தி.க.சிவசங்கரன், சிந்துபூந்துறை சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து 1947இல் நெல்லை இலக்கியச் சங்கத்தை உருவாக்கி இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை  முன்னின்று நடத்தியவர்.

எவ்விதமான முன் தகுதிகளோ, கல்வித்துறை ஏற்புகளோ, அடையாள வரையறைகளோ இல்லை; அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, ஆய்வு ஈடுபாடு, படிப்பில் ஈடுபாடு, விடாமுயற்சி போன்றவை உடைய யாவரும் உறுப்பினராக ஆகலாம் என்கிற அறிவிப்போடு 1967இல் நெல்லை ஆய்வுக் குழுவை ஏற்படுத்தியவர்.

தமிழ் இலக்கிய மரபில் மார்க்சிய நோக்கிலான சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியில் பல இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள், தொ.மு.சி.இரகுநாதனின் சாந்தி, விசயபாசுகரனின் சரசுவதி ஆகியவை முதன்மையானவை. இவ்வரிசையில், மார்க்சியச் சிந்தனைப்புல நோக்கில் தமிழியல் ஆய்வு முறைமைக்கான நிறுவனமயப்படுத்தும் முயற்சியாக நா.வானமாமலை அவர்களால் 1969இல் ஆராய்ச்சி எனும் இதழ் தொடங்கப்பட்டது. இவரது பொறுப்பில் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சி இதழானது தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் முன்னணி அமைப்புகளிலும் பல பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர். தமிழ் அறிவுச் சூழலில் நிறுவனமயப்படுத்தப்பட்ட  கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து ஆய்வு முறையியலை வளப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அதாவது, நிறுவனமயப்பட்ட கல்விப் புலங்களின் ஆசிரியர்களாலும் பேராசிரியர்களாலும் ஆய்வாளர்களாலும் முன் வைக்கப்படுகிற ஆய்வுகள்தான் ஆய்வுகள் என்றும், அத்தகையக் கல்விப்புலச் சூழலே அறிவுச்சூழல் என்றும் பெருவாரியாய் நம்பிக்கொண்டிருந்த தமிழ்ச்சூழலில், நிறுவனமயப்பட்ட கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து தமது ஆய்வுகள் வாயிலாகத் தமிழ் அறிவுச்சூழலை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் காட்டியவர் நா.வானமாமலைதான். பல்கலைக் கழகத்திலோ கல்லூரியிலோ பேராசிரியராக இவர் பணிபுரியவில்லை என்றாலும்கூட, பேராசிரியர் எனும் அடைமொழி நா.வானமாமலை எனும் பெயருடன் மதிப்பாய்ந்த பொருண்மையோடுதான் இணைந்து நிற்கிறது.

தமிழ்ச் சமூக ஆய்வுகளில் மேற்கத்திய முன்மாதிரிகளையோ கருத்தாக்கங்களையோ அப்படியே வறட்டுத்தனமாகப் பயன்படுத்த இயலாது; கூடாது என்பதைத் தமது ஆய்வுகளின் வழியே புலப்படுத்தியவர். மேலும், எழுத்து மரபின் வழியாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் அடையாளங்களைச் சமூக அடித்தளங்கள் நோக்கி நகர்த்தியதில் நா.வாவிற்குப் பெரும் பங்குண்டு.


நா.வாவின் ஆய்வுத் தடத்தில் முதன்மைத்துவம் பெறுபவை நாட்டுப்புற மக்கள் வழக்காறுகள் குறித்தானவை. களத்தரவுகள், பாடல்கள், கதைப்பாடல்கள், வாய்மொழி வழக்காறுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், பதிப்பு, ஆய்வு எனத் தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலை வளப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டுப்புறப் பண்பாட்டு அலகுகளில் காணப்படுகிற நிலம், உடல், உணர்ச்சிகள், உழைப்பு, சுரண்டல், ஒடுக்குமுறை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை அடையாளப்படுத்தியதில் இவரின் எழுத்துக்கள் தனித்துவம் நிறைந்தவை. குறிப்பாக, உழைக்கும் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை முன்வைப்பதாகவே இவரது எழுத்துகள் அமைந்திருந்தன.

தமிழ்ச் சமூகத்தின் மொழி, இலக்கியம், கலை, வரலாறு, சமயம், பண்பாடு, மெய்யியல், அறிவியல், மொழிபெயர்ப்பு, ஆய்வு, பதிப்பு, ஆவணப்படுத்தல் போன்ற பல தளங்களிலும் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் நா.வா. இவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல; இப்போதும்கூட முன்மாதிரியாகவே தெரிகிறார்.

தமிழ்ச் சமூக வரைவியலில் நா.வாவின் பங்களிப்பும் உழைப்பும் பெரும்பங்கு வகித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் உழவுக்குடிகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் தனித்துவம் வாய்ந்தவை.

பொதுவாக, உழவுத் தொழிலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சமூகப் பிரிவினரைக் குறித்த பதிவுகள் தமிழில் ஏராளம் உண்டு. பல்வேறு தொழில் மரபினரின் பங்கேற்புகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவி இருந்தாலும், உழவுத் தொழில் மரபினரின் பங்கேற்புகள்தான் தமிழ்ச் சமூகத்தின் உணவு உற்பத்தியைத் திறம்பட இயங்கச் செய்திருக்கிறது. அதனால்தான்,
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை 
என்கிறார் வள்ளுவர். அதேபோல, உணவளிப்பவரே உயிர் கொடுப்பவர் எனும் பொருளில்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிறது புறநானூறு. 

உயிர் வாழ்வுக்கான உணவை அளிப்பதுதான் அறம் எனக் குறிக்கும் வகையில்,
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
எனச் சுட்டுகிறது மணிமேகலை.

மனித வாழ்வின் அடிப்படைக்குப் பல பொருட்கள் தேவைப்பட்டாலும்கூட, உணவுப் பொருள் ஒன்றே முதன்மையானதும் தலையாயதுமாகும். சமூகத்தில் பல்வேறு தொழில் மரபினர் இருந்தாலும், எல்லாத் தொழில் மரபினருக்குமான உணவுத் தேவையையும் நிறைவு செய்கிறவர்கள் உழவர்கள்தான். இதனை,
உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதுஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
என்கிறார் வள்ளுவர். அதாவது, பலவகைப்பட்ட தொழில் புரிகின்றவர்களுக்கும் உயிர் தாங்கிடப் பசி போக்கும் தொழிலாக இருப்பது உழவுத் தொழிலே. அதனால்தான், உழவர்கள் உலக மக்களின் அச்சாணி எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். உழவுத் தொழில் என்பதே, அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது; அத்தொழில் சாராத மற்றவர்களின் உணவுத் தேவைக்கும் உதவுகிறது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
எனும் குறள் ஒப்புரவு என்னும் உதவி செய்தலைக் குறித்துப் பேசுகிறது. ஒரு பொருள் தமக்கும் பயன்பட வேண்டும்; மற்றவர்க்கும் பயன்பட வேண்டும். அதாவது,  வேளாண்மைத் தொழில் போலப் பயன்பட வேண்டும் என்கிறது அக்குறள். 

வேளாண்மை உழவர்களின் மற்றொரு குணவியல்பு, மற்றவர்களின் பசி வலி அறிதல்தான். அதனால்தான்,
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
என்கிறார் நல்லாதனார்.

உணவை உற்பத்தி செய்யும் உழவரே, இல்லாதோருக்கும் இருப்பவர்க்கும், ஒத்தாருக்கும் உயர்த்திக்கொண்டோருக்கும், ஊர் உலகை ஆள்வோருக்கும்கூட  உணவைக் கொடுக்கும் தன்மை நிறைந்தவர். அதனால்தான் இரப்போர் சுற்றத்தார்; புரப்போர் கொற்றத்தார் என்றெல்லாம் குறிக்கப்படுகிறார். 

இத்தகைய உழவுத் தொழில் மரபினரை உழவர், களமர், கம்பளர், காராளர், கடைசியர், கடைஞர், வினைஞர், கிளைஞர், தொழுவர், கருங்களமர், மேழியர், மள்ளர், வேளாளர் எனப் பல பெயர்களில் குறிக்கிறது தமிழ் இலக்கிய மரபு.

அஞ்சுவண்ணன், அணியர், அளவன், அதிகாரி, ஆற்றுக்காலாடி,  இந்திர சாதி, உழவர், ஊரன், ஒண்டிப்புலி, ஒளியர், கடம்பர், கணக்கன், கடையர், கடைசியர், களமர், கருங்களமர், காலாடி, குடும்பர், கூத்தாடி, கூத்தர், தொண்டைமான், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், நாட்டார், நீராணியம் (மடையர்), நீர்கட்டி, படையாட்சி, பண்ணாடி, பணிக்கன், பலகான், பழையர், பள்ளர், பள்ளி, பளியர், பாண்டியர், பாவாணர், பூசி, மகிழ்நன், மண்ணாடி, மல்லர், மழவர், மள்ளர், மன்றாடி, முதலி, மூப்பன், செட்டி மூப்பன், நாட்டு மூப்பன், புள்ளி மூப்பன், வலவன், வாதிரியார், வாய்க்காரர், வாரியன், வெண்களமர், வெள்ளாளர், வேந்தர், வேள் போன்ற குலப் பிரிவுகளால் அடையாளப்பட்ட அல்லது அடையாளப்படுகிற சமூகப் பிரிவினர் உழவுத் தொழில் மரபைச் சார்ந்தவர்கள் எனப் பதிகிறது வழக்காற்று மரபு.

வாய்மொழி மரபிலும், எழுத்து மரபிலும், வரலாற்றுத் தரவுகளிலும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்த விவரிப்புகள் நிரம்பக் கிடைக்கின்றன. எனினும், இவ் உழவுக்குடியினர் பள்ளர் எனும் பொதுவழக்குச் சொல்லாடலாலும், மள்ளர் எனும் இலக்கிய வழக்குச் சொல்லாடலாலும், தேவேந்திர குல வேளாளர் எனும் அரசியல் சொல்லாடலாலும் பெருவழக்காய்க் குறிக்கப்படுகின்றனர்.

தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் பள்ளு எனும் இலக்கிய வகையாக அடையாளப்படுத்தப்பட்ட பெருவாரியான பள்ளு இலக்கியங்கள் பள்ளர் எனும் உழவுக் குடிகளைக் கதை மாந்தர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. ஏர் மங்கலம், உழத்திப் பாட்டு போன்ற இலக்கிய மரபின் நீட்சியாகப் பள்ளு இலக்கியங்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்பட்டாலும், உழவுக் குடிகளின் வரலாற்றுப் படிமங்களையும், வாழ்வியல் இருப்புகளையும், நிலத்தோடு கொண்டிருந்த உறவுகளையும், பண்பாட்டுக் கோலங்களையும் தரவிறக்கம் செய்யும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டன என்கிற கருத்தும் உண்டு.

உழவுத் தொழிலின் அடிப்படை ஆதாரம் நிலம் தான். நிலத்தில் தமக்கான உரிமை இருந்த காரணத்தாலேயே, காலங்காலமாக நிலத்தில் உழைப்பைச் செலுத்தி வந்துள்ளனர் உழவுக்குடிகள். நிலத்தின் மீதான உரிமைதான் நிலத்தின் மீதும், உழைப்பின் மீதும், உழவின் மீதும் ஓர் உயிர்ப்பான உறவை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், உழவுத் தொழில் மரபு பெருமித அடையாளமாக உழவுக்குடிகளால் கருதப்பட்டிருக்கிறது. 

நிலத்தோடு உழவுக் குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் ஆள்வோர்களும் அதிகாரச் சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், கொடைகளின் பேராலும், மடங்களின் பேராலும், மெல்ல மெல்லத் தம்வயப்படுத்திக் கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

நிலத்தின் மீதான குறைந்தளவு உரிமைகளையும் பறிக்க முயன்றதின் பண்பாட்டு ஏமாற்றுதல்கள்தான் – பண்பாட்டு ஒடுக்குமுறையின் வடிவங்கள்தான் பள்ளு இலக்கிய உருவாக்கங்கள். நிலத்தோடு உரிமையும் உணர்வுநிலைப்பட்ட உறவும் கொண்டிருந்த உழவுக் குடிகளைப் பண்ணை அடிமைகள் போலக் கதையாடல்களைப் புனைவாக்கம் செய்துள்ளன பள்ளு இலக்கியங்கள். 

பிற்காலங்களில், இத்தகையப் பள்ளு இலக்கியங்கள் வாயிலாகவே – அவை உருவாக்கிய படிமங்கள் வாயிலாகவே உழவுக்குடிகள் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், தற்சார்புடனும் தன்மானத்துடனும் வேளாண் தொழிலை மேற்கொண்டு வந்த உழவுக் குடிகள், நிலத்தின் மீதான உரிமையை இழக்க நேர்ந்தாலும், வேளாண் உழவுத் தொழில் மரபையும் உறவையும் இழந்திடவில்லை. வேளாண் உழவுத் தொழில் சார்ந்த அறிவும் திறமும் உழைப்பும் பண்பாடும் வாழ்வும் என யாவுமே உழவுக் குடிகளின் கையிருப்பாக இருந்து வந்திருப்பதைப் பள்ளு இலக்கியங்களுமேகூடப் புலப்படுத்தி வைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திய இலக்கியப் படைப்புகளும் அவ்வக்காலத்தியச் சமூக ஆவணங்கள்தான். அவ்வகையில், பள்ளு இலக்கியங்களை உழவுக்குடிகளின் எதிர் இலக்கியங்களாகப் பாவிக்க வேண்டியதில்லை. ஏனெனில், பள்ளு இலக்கியங்கள்தான் உழவுக்குடிகளின் நில உரிமையைத் தவிர்த்து, நிலத்தோடு தொடர்புடைய ஏனைய மரபுகளைக் குறித்து விரிவான தரவுகளை முன் வைத்துள்ளன. ஆகவேதான், உழவுக்குடிகளைக் குறித்த சான்றாவணங்களாகப் பள்ளு இலக்கியங்கள் கருதப்படுகின்றன.

பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத்தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தி உள்ளார். 

உழவுக் குடிகளைக் குறித்த உரையாடல்களுக்கும் மீளாய்வுகளுக்கும் இவரது கட்டுரைகள் துணை செய்யக்கூடியவை. எனினும், 1956-57 காலகட்டத்தில் சரசுவதி இதழில் பள்ளுப் பாட்டு குறித்தும் உழவுக்குடிகளைக் குறித்தும் நா.வானமாமலை எழுதிய  கட்டுரைகள் இதுவரையிலும் தனி நூலாக்கம் பெறாமலே  கிடப்பிலே கிடந்திருக்கின்றன. 

நா.வானமாமலை அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் இந்தச் சூழலிலாவது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தனி நூலாக வெளிவருவது, அவரது நூற்றாண்டு விழாவை மட்டுமல்ல, உழவுக் குடிகளையுமே சிறப்பிக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக