திங்கள், 20 மே, 2024

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசரைக் குறித்த உரையாடல் நூல்: டி.ஏ.பி.சங்கர்


தமிழர் சமூக அரசியலைப் பேசுபொருளாக்கும் முயற்சி மூலமாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் எனும் நூலை இயற்றி இருக்கிறார் முனைவர் ஏர் மகாராசன். 

நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பவுத்த ஆராய்ச்சியாளர் திரு.டி.தருமராஜ் அவர்கள் இயற்றிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' என்ற நூலின் மதிப்புரையாகவும், அதன் நீட்சியாகவும் அமைந்ததே இந்தக் கட்டுரை நூல். 

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபின் நீண்ட வரலாற்றையும், அது, மையமும் விளிம்பும் கலந்த பன்முகத்தன்மையின் தொகுப்பு என்றும் சொல்லும் ஆசிரியர், அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலுக்கும், திராவிட இயக்க அடையாள அரசியலுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிடுகிறார். 

முனைவர் மகாராசன் அவர்கள் மொழி, பண்பாடு, அரசியல், நாட்டார் வழக்கியல் எனப் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு நூல்கள், கட்டுரைகள், கவிதை, உரை நூல்கள் போன்றவற்றை இயற்றியுள்ளார்.

ஆரியர்களாக நுழைந்து, இங்கு வந்து பிராமணர்களாகத் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர்களது ஆதிக்க நிலையை எதிர்த்துக் குரல் கொடுத்த வரலாறு; தமிழ்ச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் அரசியல் வடிவம் பெற்றது; அவ்வாறு, திராவிடர் இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் தோற்றம், அவர்கள் முன்னெடுத்த பார்ப்பனர் எதிர்ப்பு தொடங்கி, திராவிடக் கட்சிகளின் தற்போதைய நிலை வரை பட்டியலிடுகிறார்.

பிராமண ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்ததில், பிராமணர் அல்லாத இயக்கங்களின் நிலையையும், அயோத்திதாசர் அளித்த பங்களிப்பையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். அயோத்திதாசரின் பின்புலம் தொடங்கி, அவர் நிறுவிய அத்வைதானந்த சபை, திராவிட மகாஜன சபை, தமிழ்ப் பவுத்த சமய அடையாளத்தை முன்வைத்து - சாக்கிய பவுத்த சங்கம், மற்றும் அவரது இதழியல் பங்காக அமைந்த திராவிடப் பாண்டியன் இதழ், ஒரு பைசாத் தமிழன் இதழ் போன்றவற்றையும், அவற்றின் மூலம் அவர் நிறுவிய ஆதித் தமிழர் என்ற அடையாள முழக்கம் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஆசிரியர். 

1881ஆம் ஆண்டு - ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை 'இந்துத்துவம்' என்ற வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த காலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிறிஸ்தவர், சமணர், பவுத்தர், இசுலாமியர், சீக்கியர் அல்லாத பிற அனைவரையும் 'இந்துக்கள்' என்ற ஒற்றை அடையாளத்திற்குள் வலிந்து திணிக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. இப்படி ஒரு நெருக்கடியான காலத்தில், அயோத்திதாசர் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்தை முன் வைக்கிறார். இதற்குக் காரணமாக அவர் கூறியது, இந்து மதம் ஆரிய பிராமணிய, வைதீக மரபுகளை அடிப்படையாகவும், அதன் வழியாகச் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருப்பதையும் எடுத்துரைக்கிறார். 

மேலும், அதிகாரத்தில் சம உரிமை கோரியது முதல், பிரதிநிதித்துவ அரசியலைத் தனது காலத்திலேயே முன்னெடுத்த அயோத்திதாசர், அப்போதே மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, இவ்வளவு ஏன், இந்திமொழி மேலாதிக்க எதிர்ப்பு எனப் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றியும் தனது எண்ணற்ற நூல்களில் எழுதியும் பேசியும் உள்ளார். இத்தகைய செயல்பாடுகளால் பகுத்தறிவு, இடஒதுக்கீடு, சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் தமிழக அளவில் பெரியாருக்கும், இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்திதாசர் என்று சொல்லலாம்.

ஆனாலும், பின்னாட்களில் வந்த அரசியல் தளங்களில் திராவிடர் கழகமோ, திராவிடர் இயக்கமோ, மற்ற திராவிடக் கட்சிகளோ, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகளைப் பற்றி மறந்தும் மறைத்தும் செயல்படுவது ஏன்.? எனக் கேள்வி எழுப்பும் ஆசிரியர், அதற்கான காரணமாக, அவருடைய அடையாள அரசியலையே சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்ததாக, அயோத்திதாசர் நால்வர்ண பேதத்தினைக் குறித்தும், அதனுள் குறிப்பிட்ட அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் வரிசையை மாற்றி, சூத்திரர், வைசியர், சத்திரியர், அந்தணர் என்ற வரிசையில் உழவினை முதல் நிலையில் வைத்துப் போற்றுகிறார். இந்த நான்கு தொழில் முறைக் குலங்களுக்கு இடையில் எந்தவொரு ஏற்றத் தாழ்வும் இருந்ததில்லை எனவும் வலியுறுத்துகிறார். பிறப்பினால் எந்த மனிதரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பாவிக்காமல், அவரவர் செய்த தொழிலின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் எனக் கூறும் தமிழ் மரபுகளை உதாரணமாகக் காட்டுகிறார் ஆசிரியர். 

அயோத்திதாசர், "அந்தணர்" என்ற சொல், கல்வி கற்பிக்கும் தொழில்முறைப் பெயர்தான் என்றும், தமிழ் மரபில் வகுக்கப்பட்ட குணங்கள் உடைய யார் வேண்டுமானாலும் அந்தணர் என்ற அடையாளத்தை அடைய முடியும் என்றும் விளக்குகிறார். இது ஒரு தொழில் முறைப் பெயர் மட்டுமே அல்லாமல், ஆரிய பிராமணர்கள் சொல்வது போல, பிறப்பால் உயர்ந்த நிலை எதுவும் இல்லை என்றும் பறைசாற்றுகிறார். அதே போல, ஒவ்வொரு வர்ணத்திற்கும், அதன் தமிழ் மரபு - ஆரிய பிராமணிய மரபு குறிக்கும் பொருள் வேறுபாடுகளை விரிவாக விளக்கியுள்ளார். இந்த நூலின் அடிப்படையாக இதைத் தான் பார்க்கிறேன்.

மேலும், தமிழ் மரபில் உள்ள தொழில் முறைப் பெயர்களை எடுத்துக்கொண்டு, அதற்கு, தங்களுக்கு ஏற்றார் போல பொருளை மாற்றியமைத்து, ' மநு ' என்ற பெயரில் மற்ற குலங்களை அதிகாரம் செய்த பிராமண மரபினையும், அயோத்திதாசர் வழியில் சான்றுகளுடன் தோலுறித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் வழியாக, அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் சுருக்கமாக அறிந்து கொண்டாலும், அவரைப் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது.

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசர் பற்றியும், அவருடைய தமிழர் அடையாள அரசியல் பற்றியும் மீண்டும் மீட்டெடுத்து வாசிக்கவும், மேலும் மேலும் உரையாடவும், ஒரு அறிமுக நூலாக அமைந்திருக்கிறது இந்த மதிப்புரை. அடுத்ததாக, 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூலையும் வாசிக்க வேண்டும்.

நூல்: அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
ஆசிரியர்: முனைவர் மகாராசன்,
பக்கங்கள்: 112,
வெளியீடு: 
ஆதி பதிப்பகம்,
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி. சங்கர்,
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக