நவீன வாழ்வின் மீதான சுய விமர்சனங்களையும், பொது சமூக மனிதர்களால் கண்டு கொள்ளப்படாத நிலம், பொருள்கள், இடங்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள், வாழ்க்கை அனுபவங்கள் எனப் பலபடித்தான உணர்வுத் தடங்கள் யாவற்றையும் கவிதைகளுக்குள் உலவச் செய்திருக்கிறார் பாபுசசிதரன்.
உணர்வுப் பெருக்கும், உள்ளூறும் சமூக அக்கறையும், கசிந்துருகும் கவிதை மனமும் கலந்து, பல்வேறு கருத்துக் கோலங்கள் நிரம்பிய கவிதைகளாய் வந்திருப்பது இத்தொகுப்பின் பெரும் பலம்.
இந்தச் சமூகம் தந்திருக்கும் பல்வேறு அனுபவ அடுக்குகளைக் கவிதைகளின் வழியாக அடையாளப்படுத்தியிருக்கிறார். அவற்றுள் மிக முக்கியமானது நிலம் பற்றியதும் நிலம் சார்ந்த வாழ்வு பற்றியதுமாகும்.
சூழலியல் சார்ந்த அறிவுணர்வுகள் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருக்கும் இச்சூழலில், அவை குறித்த புரிந்துணர்வைக் கவிதையாக்கத்தின் வழியே புலப்படுத்தியுள்ளார்.
கட்டுமான நுட்பங்களை
செய்முறை நேர்த்தியை
பேசி வியக்கிறார்கள்.
கூடிழந்த குருவியின் தவிப்பை யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
இயன்றால் பட்டியலிடுங்கள்
மரம் செடி கொடிகளைத்தான்
உமது சுரண்டல் சூறாவளிகள்; மண்ணை அல்ல.
நாங்கள் வேர்களால் வாழ்கிறோம். பலவந்தமாய் பறித்த நிலங்களை மலிவாக விற்பதாக விளம்பரம் செய்கிறீர்கள்.
கவனம் இருக்கட்டும்,
எங்கள் வேர்கள் ஒருநாள்
என, இருப்பிடம் இழந்தவர்களின் வாழ்வைக் குறித்த துயரச் சித்திரத்தை அக்கவிதை பதிவு செய்திருக்கிறது.
சலசலவெனக் கசியும் நீர்ப்பாறைகளையும்
பார்த்த கடைசித் தலைமுறை நாம். நேற்று வெட்டிய கிணற்றின் நீரை எட்டிப்பார்க்க யாருமில்லை..
இன்று, கிணறுமில்லை நீருமில்லை.. என, கொலையுண்ட நீர்த் தடங்களைக் கவலையோடு காண்பித்துச் செல்கிறது ஒரு கவிதை.
காடுகளும், வனங்களும், மலைகளும், சமவெளி நிலங்களும், ஆறுகளும், கடலும் மனிதர்களின் வாழ்வுக்கானவை; நுகர்வுக்கானவை என்பதாகவே மனித சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கின்றன. அவை யாவும் மனிதர்களுக்கானவை மட்டுமல்ல; எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்துக்குமான உயிர் ஆதாரமாய் அமைந்திருப்பவை. சூழலியல் அங்கத்தின் உயிர்நாடியாய் இருக்கும் கானுயிர் வளத்தை அழித்துச் சீரழிப்பது மனித நுகர்வின் உச்ச வெறியாய் மாறிக் கொண்டிருக்கிறது.
மனித சமூகத்தின் நுகர்வுப் போக்கைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இன்னொரு கவிதை, காட்டின் மூலவர்களாக இருக்கும் யானைகள் பற்றியது.
அது தெரியாமல்
ரூபாய்த் தாளை வைத்துவிட்டு அதன் சாபத்தைப் பெற்று வந்தோம் ஆசையாய்... ஆசியாய்.
பெருங்காட்டையே அளந்த
அதன் கால்களில்
தாலியைப்போல கம்பி வளையம்.
வயல்களை அழித்து விட்டதாக..
வழித்தடங்களை மறித்ததாக..
குடியிருப்பைப் பெயர்த்தெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள்.
காடுகளை உல்லாச விடுதிகளாக்கியதை
பாவம் அவைகள் அறிந்திருக்கவில்லை.
யாரோ பிடிக்கிறார்கள்
யாருக்கோ பழக்குகிறார்கள்
யார் யாரோ தின்னக்கொடுக்கிறார்கள்.
பெயர்கூட வைக்கிறார்கள்.
எப்பொழுது கிடைக்கும்
அதன் காடு...
அங்குசத்தின் காவலில் அடைப்பட்டிருக்கும் அதனிடம் சொல்லி விடாதீர்கள்.
பெரும் மரத்தை வேரோடு பிடுங்கி உண்ட இனம் அதுவென்று..
பிள்ளைப் பிடிப்பவர்களைப்போல் பிடித்துவந்து
பிச்சை எடுக்க வைத்ததைவிட பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை
இந்த மிருகங்கள்...
மன்னிக்கவும் "மனிதர்கள்".
காட்டிலிருந்து நாட்டிற்கு புலம்பெயர்த்தப்பட்டு கடவுளாக்கினாலும் அவை அகதிகள்தான்
என, யானைகளின் ஏதிலி வாழ்வின் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறது அந்நீள் கவிதை. இன்னும் இதுபோன்ற நிறையக் கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன.
இச்சமூகம் விசித்திரமானது. இந்த உலகம் விந்தையானது. இவர்களின் மனம் மோசமானது. இம்மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று இயற்கை கருதலாம். எல்லாவற்றிற்கும் காரணம் ஆறாம் அறிவுதான் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். இப்பூமியை மனிதன் கலங்கடித்தது போன்று வேறு எந்த உயிரினமும் இப்படியொரு அழிவை ஏற்படுத்தியதில்லை. இவர்கள் இதற்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு, காரியங்களைக் கொண்டாடுகிறார்கள்.
இங்கு பூக்களுக்கு இருக்கும் மரியாதை வேர்களுக்கு இருப்பதில்லை. கனிகளை ஆராதிக்கும் இவர்கள் அதனைப் பாதுகாக்கும் தோல்களை அவரோகனங்களாக்கி விடுகிறார்கள். கிரீடங்களைக் கொண்டாடும் இவர்களுக்குச் செருப்புகளின் புனிதம் புரிவதில்லை. அவைகளுக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கூட இவர்கள் கொடுப்பதில்லை.
இங்கு கறுப்பு வண்ணமாகப் பார்க்கப்படுவதில்லை; வர்ணமாகப் பார்க்கப்படுகிறது. இழிவின் குறியீடாக, தாழ்வின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்பதாகத் தன்னுரையில் பதிவு செய்கிறார் பாபுசசிதரன்.
இந்தப் பொருண்மையிலும், அதன் அழகியலிலும், அதன் அரசியலாகவும் கவிதை மூலங்களைப் படைத்திருப்பதும், எளிமையான மொழித் துலங்கலும் படைப்புக்கான பன்முகப் பரிமாணங்களைத் தந்திருக்கின்றன.
கவிஞருக்கு வாழ்த்துகள்.
மக்கள் தமிழ் ஆய்வரண்.
01.08.2024
*
ஆணியை நம்பும் கடவுள் (கவிதைகள்),
கா. பாபுசசிதரன்,
முதல் பதிப்பு, டிச 2023,
விலை - உரூ 150/-
நிமிர் புத்தகப் பட்டறை வெளியீடு,
சென்னை.
தொடர்புக்கு: 9444009730.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக