ஒரு காலகட்டத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்து, இன்னொரு காலகட்டத்தில் மீள்வாசிப்புக்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படும். எது தேவையோ அல்லது எது ஒத்துப்போகிறதோ அல்லது எது சரியானதோ, அதனை இந்தச் சமூகம் கையிலெடுத்துக் கொள்ளும். எந்தவொரு சமூகமும் தமது அரசியல் சமூகப் பண்பாட்டு அறிவுத்தளங்களில் வாசிப்பும் மீள்வாசிப்புமாகத்தான் கடந்து வந்திருக்கிறது அல்லது கடந்து கொண்டிருக்கிறது.
ஈ.வெ.ரா பெரியார் இந்தச் சமூகத்தில்- இந்தச் சமூகத்தை முன்வைத்து நிரம்ப உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய கருத்துகளை இந்தச் சமூகம் மீள்வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்றுதான் அவரே வலியுறுத்தி இருக்கிறார்.
“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் என்னுடைய தேவை இருக்கும். அதற்குப் பிறகு ராமசாமின்னு ஒரு மூட கொள்கைக்காரன் இருந்தான் என்றுதான் உலகம் பேசும்.
ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கலாம். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன்”.
“நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக ஒரு கருத்தை அப்படியே நீங்கள் நம்பி விடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் எல்லோரும் அடிமைகள்தான். யார் சொல்வதையும் கேட்டு, வேத வாக்கு என்று நம்பி நடப்பதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே, நான் சொல்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவை உண்மை என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை எனில், தள்ளி விடுங்கள்”.
“எவருடைய கருத்தையும் மறுப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை”.
இதெல்லாம் பெரியார் கூறியிருப்பவைதான்.
எதுவொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதுபோலத்தான், பெரியாரின் கருத்துகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.
வாசிப்புக்கும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகாத அல்லது உள்ளாக்கப்படாத ஒருவரின் கருத்துகள், மத அடிப்படைவாதக் கருத்துகளைப் போலப் புனிதப்படுத்தும் தன்மைக்கு இட்டுச் செல்லும்.
பெரியாரின் கருத்துகளைப் புனிதப்படுத்துவது, பெரியாரின் கருத்துகளுக்கே முரணாகும். பெரியாரை மட்டுமல்ல; எவரையும் எந்தக் கருத்தையும் புனிதப்படுத்துவது பகுத்தறிவும் அல்ல.
பெரியார் குறித்த வாசிப்புக்கும் மீள்வாசிப்புக்கும் இந்தச் சமூகம் நகர வேண்டும் என்பதைத்தான் பெரியாரே விரும்பியிருந்தார்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்;
ஆயிரம் கருத்துகள் மோதட்டும்.
சரியானது எதுவோ, அதுவே வென்று தீரும்.
கருத்தை, கருத்தாக எதிர்கொள்வதுதான் பகுத்தறிவு.
ஏர் மகாராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக