ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுப்போம்! திரு சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்





கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுப்போம்! வழிபாட்டு நெடும்பயணத்தில் பங்கேற்க, திரு சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு, வணக்கம்.

நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் தாங்களும் தங்களது கட்சியினரும் மிக மிக அதிகமான உழைப்பைச் செலவழித்துத் தீவிரமான பரப்புரையை மேற்கொண்டு வந்தீர்கள். தாங்கள் முன் வைத்த அரசியல் செயல்பாடுகளுக்குப் பெருவாரியான ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து உருவாகி வந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எம்மைப் போன்ற பலரும் அதை அறிந்திருக்கிறோம்.

தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவுகள் என்னவாக இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலாய் இருப்பீர்கள். தேர்தல் பரப்புரைப் பணிகளை மேற்கொண்டிருந்த மாற்றுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள். 

தங்களது உடல், குரல், மனம் என அனைத்தும் சலிப்பில்லாமல் பரப்புரைப் பயணத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. தங்களது உடலும் மனமும் ஓய்வைக் கெஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஓய்வெடுக்க விடாமல் இடையீடு செய்வதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல்வேறு செய்திகள் தங்களது ஆட்சிச் செயல்பாட்டு வரைவில் கூறப்பட்டிருந்தன. அவற்றுள், கண்ணகி வழிபாட்டு நெடும்பயணம் குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. 

“அறம் காத்து மறம் போற்றிய மானத்தமிழ் மறத்தி கண்ணகியின் கோயில் இன்று கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்து கிடக்கின்றது. அந்த கோயிலுக்குத் தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும், தமிழக அரசு அந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாகச் செல்லும் பாதையில் கேரளா வனச்சரகக் காவல்துறையும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. எனவே, நாம் தமிழர் அரசு கண்ணகிக்குத் தனிக்கோட்டம் அமைத்துத் தமிழக வனப்பகுதி வழியாகவே பாதையை அமைத்துத் தரும். மேலும் பெரும்பாட்டி கண்ணகியின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் கண்ணகி கோயிலை நோக்கிப் பெரும் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பைத் தரும். இது அரசு விழாவாகவும் அறிவிக்கப்படும்”. (நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026, பக்கம் 300) எனும் வரைவை, மக்கள் தமிழ் ஆய்வரண் வரவேற்றது; ஆதரித்தது.

எதிர்வரும் சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக் கோயில் வழிபடு நாளாகும். இந்த ஒரு நாள் மட்டும்தான் அதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இந்நிலையில், தமிழரின் வழிபாட்டு உரிமைகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் மீட்பதற்கான பெருங்குரலைக் கண்ணகி மண்ணில் தாங்கள் எழுப்ப வேண்டும்; கண்ணகி வழிபாட்டு நெடும்பயணத்தில் தாங்கள் பங்கேற்க வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறோம். 

பறிபோகும் தமிழர் வழிபாட்டு உரிமைகள் குறித்தும், கேரள அரசின் அத்துமீறலைக் குறித்தும், தமிழக அரசு எந்திரத்தின் பாராமுகத்தைக் குறித்தும் மற்ற அரசியல் கட்சியினர் யாரும் இதுவரை பேசியதில்லை; இனியும் யாரும் பேசப் போவதில்லை. தாங்கள் மட்டும்தான் இதைக் குறித்து உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுவீர்கள் எனும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது. அதற்கான களமும் காலமும், அதனை உரத்துப் பேசுவதற்கான வாய்ப்பும் இப்போது நம் முன் கிடைத்திருக்கிறது. 

கடந்த ஆண்டு, கண்ணகிக் கோயில் வழிபாட்டு நெடும்பயணத்தில் நானும் பங்கேற்றேன். அதன் அனுபவங்கள் மிகுந்த மன வேதனையைத் தந்தன. 

கண்ணகிக் கோயில் வழிபாட்டுத் தளம் முழுவதுமாகக் கேரள அரசு எந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெற்ற தாயை, சொந்த நாட்டிற்குள் பார்ப்பதற்குக்கூட ஓர் அகதி அல்லல்படும் உணர்வுகளே அன்று எமக்கும் இருந்தது. 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாறும், வழிபாட்டு உரிமையும் முழுவதுமாகக் காவு கொடுத்திருக்கிறோம் என்பதாகவே உணர்கிறேன். தமிழர் நிலமும், வழிபாட்டு அடையாளமும், சடங்குகளும் கேரளமயமாகி இருப்பதோடு, அவை தமிழர்களிடமிருந்து முழுவதுமாகப் பறிபோயிருக்கிறது என்றே தெரிகிறது.  

கேரள அரசு எந்திரங்களின் அதிகாரத்திற்குள் தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் மவுனித்துக் கிடக்கின்றன. தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் எதுவும் செய்திட முடியாத அளவுக்குக் கேரள அரசு எந்திரங்களின் அதிகாரப் பலமும் வாய்ப்பும் உரிமையும் மேலோங்கியேதான் இருக்கின்றன.

இந்நிலையில், கண்ணகிக் கோட்டத்தைத் தமிழர்க்குச் சொந்தமாக்குவதே தமிழர் அடையாள மீட்பின் முதல் வேலையாகக் கருதி, எதிர்வரும் சித்திரை முழு நிலவு நாளில், கண்ணகிக் கோவில் வழிபாட்டு நெடும்பயணத்தில் தாங்களும் பங்கேற்று, நெடும்பயணத்தின் ஊடாகவே கள ஆய்வும் மேற்கொண்டு, பண்பாட்டுப் பெருந்திரள் கூட்டத்தின் உணர்வுகளை உள்வாங்கியபடி, கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமை மீட்புக்கான பெருங்குரலைக் கண்ணகி மண்ணில் நின்று ஓங்கி உரத்து ஒலிக்க வேண்டும்; உலகமெலாம் இந்தக் குரலையும் உணர்வையும் பரவச் செய்திட வேண்டும்; தமிழரின் பண்பாட்டு அடையாளங்களையும் வழிபாட்டு உரிமைகளையும் தன்வயப்படுத்தும் கேரள அரசைத் தட்டிக் கேட்க வேண்டும் எனும் வேண்டுகோளை மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாக முன்வைக்கிறோம். 

தாங்களும் கட்சியினரும் கலந்து பேசி ஆவன செய்திடுங்கள். நன்றி. 

அன்புடன்

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

26.04.2026


முட்டு மரங்களின் நவீனப் புரட்சி - மகாராசன்


அதிகாரத்தின் வேர்களால்
நிலத்தின் வளத்தையும்
இனத்தின் வாழ்வையும்
உறிஞ்சிக் குடித்து மிதந்து
பணக் குலைகளைத் தள்ளின
அரசியல் கட்சி மரங்கள்.

காற்றில் அல்லாடாமலும்,
தார்க் கனம் தாங்காமல்
முறிந்து விடாமலும் இருக்க,
வாழையடி வாழையாய்
தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன
சில முட்டு மரங்கள்.

பழுத்து உதிர்ந்த
எச்சில் பழங்களின் சுவைக்காக
முட்டுக் கொடுப்பதில்
மாற்றி மாற்றிப்
பீத்திக் கொண்டன
முரட்டு மரங்கள்.

சனநாயகத்தைப் போர்த்திக்கொண்டு 
கடைக்கோடிக் கிராமங்களின்
கடைசி மனிதரின் கைகளுக்கும்
ஆயிரம் ரூபாய்களை 
அள்ளிக் கொடுத்து,
ஒற்றை விரல்களில் 
மை தடவிப் பூசிக்கொண்டு
தேர்தல் பெருங்கூத்தை
நடித்து முடித்திருக்கிறது
பண நாயகம்.

எங்கேயோ யாரிடமோ
கட்டுக் கட்டாய் முடங்கிக் கிடந்து,
கோடி கோடி கோடியென
பல்லாயிரம் கோடிகளாய்
ஊர்கள் முழுக்க 
இரண்டொரு நாள்களில்
அள்ளிச் சிதறிய தாள்களில்
பொக்கைவாய்ச் சிரிப்புடன்
தென்பட்டார் காந்தி.

அவ்வப்போது விழுகின்ற
சில எச்சில் பழங்களோடு
ஆயிரம் ரூபாய்த் தாள்களையும்
தொட்டுக் கொள்ளும்போது
இன்னும் அதீதச் சுவை
கூடிக்கொண்டதால்
முட்டு மரங்களும்
இப்போது
மெல்லத் துளிர்க்கத் தொடங்கின.

தளிர் விடும் 
முட்டு மரங்களின் பேரழகையும்,
சமூக நீதி 
சாதி ஒழிப்பு 
பாசிச எதிர்ப்பு என
இன்னபிற புரட்சிப் பூக்கள்
முட்டு மரத்தில்
பூத்துச் சிரிப்பதையும்
முட்டு மரங்களின் புரட்சியென
அல்லக்கைகள்
இனி எழுதத் தொடங்கும்.

பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி,
வாக்களிக்கும் சாமானியரை
ஆயிரம் ரூபாய்க்கு விலைபேசி,
சுரண்டலில் பங்குதாரர்களாய் 
ஆக்கி வைத்துத்தான் 
பாசிச எதிர்ப்பையும்
இடதுசாரி அரசியலையும்
ஒடுக்கப்பட்டோர் அரசியலையும்
முன்னெடுக்க வேண்டுமா?
அவ்வாறுதான் முன்னெடுக்க முடியுமா?

இந்தக் குரலை
இனி
எந்தக் கைகள்
எழுதப் போகின்றன?

செந்நிறத்துக் கொடியேந்தி
உயிர்நீத்த ஆத்மாக்களின் அழுகை
இனி
எவர் காதில் விழப்போகின்றன?

- மகாராசன்

சனி, 4 ஏப்ரல், 2026

ஏர் இதழ்: மாற்றத்திற்கான எழுத்துழவு - முன்னத்தி ஏர் (தலையங்கம்)

வில்லேர் உழவரினும் சொல்லேர் உழவர் வலிமை மிக்கவர் என்கிறார் வள்ளுவர். அத்தகையச் சொல்லேர் உழவின் நீட்சியாகத்தான் ஏர் இதழ் வெளிவந்தது. தமிழர் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாகவும் அச்சு இதழாகவும் வெளிவந்த 'ஏர்' இதழ், ‘மாற்றத்திற்கான எழுத்துழவு’ எனும் நோக்கிலிருந்தும் இலக்கிலிருந்தும் விலகிடாமல், தொடர்ந்து தமது பன்முக உரையாடல்களை இந்த இதழ் வழியாகவும் முன்னெடுத்திருக்கிறது. 

முந்தைய ஏர் இதழைப் பெரும் நம்பிக்கையோடு தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்தோம். எமது நம்பிக்கை வீண் போகவில்லை. ஆழப் பெருங்கடலில் எழுந்து வரும் அலைகளைப்போலப் பல்வேறு உரையாடல்களைப் பேசுபொருட்களாக ஏர் இதழ் எழுப்பியிருந்தது. ஒற்றைத் தன்மையான - ஒரு போக்குத் தன்மையான உரையாடல் அல்லது கருத்தாடல் தொனியை ஏர் இதழ் நிராகரித்திருந்தது. பன்மைத் தன்மையிலான பன்முக உரையாடல்களை உருவாக்குவதும் பரவலாக்குவதும் பகிர்வதுமான அறிவு மரபைத்தான் ஏர் இதழ் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

இதழ் வெளியான மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய வரவேற்பை ஏர் இதழ் பெற்றிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஏர் இதழுக்கான ஆதரவைத் தந்துகொண்டிருக்கிறார்கள். இதழ் குறித்து வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் ஏர் மீதான நம்பிக்கைப் பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, புதிய வாசகப் பரப்பை ஏர் இதழ் உருவாக்கியிருக்கிறது. மாற்று இதழ் வரலாற்றில் இத்தகைய முன்னெடுப்பு பெரிய சாதனைதான். இதழ் குறித்து நேர்மையோடும் அக்கறையோடும் முன் வைத்த நிறை குறை சார்ந்த விமர்சனங்கள் இதழைப் பக்குவப்படுத்தவும் செய்திருக்கின்றன.

அதேவேளையில், தமிழ்ச் சூழலில் முற்போக்கு முகங்கள் என்பதாக அறியப்படும் பல தரப்பினரும் ஏர் இதழ் குறித்து மௌனம் காத்தார்கள். மௌனம்தான் அவர்களது மொழியெனில், அவர்களோடு உரையாட ஏதுமில்லை. அவர்களைப் பற்றிய எண்ணங்களும் எமக்கில்லை. ஏனெனில், அவர்கள் எமது இலக்கில்லை; அவர்களுக்கான உரையாடலும் எம்மிடமில்லை. ஆயினும், ஏர் இதழ் முன்வைக்கும் உரையாடல்களைக் கவனிக்காமல் கடந்துபோக அவர்களுக்கு வாய்ப்பில்லை.

இது ஒருபுறமிருக்க, 'ஏர்' இதழ் குறித்து விமர்சனம் எனும் பெயரிலான அவதூறுகளும் வசைபாடல்களும் வக்கிர உணர்வோடு வெளிப்படவும் செய்தன. இத்தகைய அவதூறு விமர்சனங்கள் யாவும் சாதி அடிப்படையிலான காழ்ப்பும் வன்மமும் நிரம்பியவை. ஏர் இதழ் முன்னெடுக்கும் அறிவுச் செயல்பாட்டு மரபின் மீதான ஒவ்வாமை உணர்வும் எதிர்ப்புணர்வும்தான் அவர்களை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. 

சாதி, அதிகாரம் போன்றவற்றின் அருகிலிருப்பவர்கள் அல்லது அவற்றை அண்டிப் பிழைப்பவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கூரான - சரியான - நேரான எதுவொன்றையும் எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள், அவற்றுக்கெல்லாம் பொதுவெளியில் சாதி அடையாளத்தைப் பூசி, தனிமைப்படுத்தும் உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். அப்படியான அவதூறுகளையும் ஒதுக்கல்களையும் ஏர் இதழும் நேர்கொள்ள நேரிட்டது. ஏர் இதழ் மீதான வக்கிர வசைமொழிப் பதிவுகளைக் குறித்துப் பெரும்பாலோர் மவுனம்தான் காத்தார்கள்.  

உண்மையும் நேர்மையும் இல்லாத இம்மாதிரியான அவதூறுகளுக்கான எமது எதிர்வினைப் பதில் என்பது, ஏர் இதழை அடுத்தடுத்து இன்னும் செறிவாக - இன்னும் கூடுதலாக - இன்னும் வலிமையாகக் கொண்டுவருவதில்தான் இருக்கிறது. அப்படித்தான் இந்த இதழும் வந்திருக்கிறது. வயல் காடுகளில் ஏர் உழும் காளை மாடுகளைப் பார்த்து, பொதி சுமக்கும் கழுதைகள் கத்துகின்றன. பொதி கழுதைகள் கத்தட்டும் என, ஏர் மாடுகள் கொம்புகளைச் சிலுப்பியபடி அதன் போக்கில் உழுதுகொண்டிருக்கும்; கடந்து கொண்டிருக்கும். அதுபோலத்தான், ஏர் இதழும் அதன் எழுத்துழவைத் தொடர்ந்திருக்கிறது. ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது அதற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஏர் இதழுக்கு வந்ததையும் அப்படித்தான் எடுத்துக்கொண்டு பயணிக்கிறோம். 

அதேவேளையில், ஏர் இதழுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவும் பாராட்டும் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். நேர்மையோடும் அறத்தோடும் பங்காற்றும் பெரும்பாலோர் ஏர் இதழுக்குப் பெருந்துணையாய் இருக்கிறார்கள். எமது பொறுப்பையும் பேருழைப்பையும் புரிந்துகொண்டு தோள் கொடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதழ் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பேருதவியினால்தான், தமிழர் அறிவுச் செயல்பாட்டு மரபில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பும் பெரும் பணியை ஏர் இதழால் செய்திட முடிந்திருக்கிறது.

ஏர் இதழின் நோக்கமும் இலக்கும் மிகத்தெளிவானவை. தமிழ் நிலத்திலிருந்து - தமிழ் நிலத்திற்கான - தமிழ் அறிவு மரபின் பூர்வத்திற்கும் நவீனத்திற்குமான பன்முக உரையாடல் வெளியை உருவாக்குவதும் வளப்படுத்துவதுமான எழுத்துழவுதான் ஏர் இதழ். 

தமிழ் நிலத்தின் இனம், வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், கல்வி, இயற்கைவளம், இறையாண்மை போன்றவை குறித்துப் பரந்துபட்ட பன்முகப் பார்வையிலான உரையாடல்களை உரக்கப் பேச வேண்டும்; பேச வைக்க வேண்டும் என்பதே ஏர் இதழின் நிலைப்பாடு ஆகும். அவ்வகையான பேசுபொருட்களைத்தான் இவ்விதழில் வெளிவந்திருக்கும் நேர்காணல், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், ஓவியங்கள் புலப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், இந்த இதழை இன்னும் கூடுதலான பொறுப்புணர்வோடு தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்திருக்கிறோம்.

ஏர் இதழ் ஆழ அகல நீளவும் உழுதிடும். மாற்றத்திற்கான எழுத்துழவில் இணைந்திருங்கள்; அறிவு விளைச்சல் அறுவடை செய்து நுகருங்கள். கடந்த இதழைப் போலவே - இன்னும் கூடுதலாகவே இந்த இதழ் பேசும் என்று நம்புகிறோம்.

தோழமையுடன்

மகாராசன்.


ஏர் இதழ்.
மாற்றத்திற்கான எழுத்துழவாக.. அறுவடைப் பருவத்தில் அரையாண்டு இதழாக வெளிவருகிறது.
தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் சனவரி - சூலை, 2026 பருவத்தின் இதழாக வெளிவருகிறது ஏர் இதழ். 

நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.

இதழ் உள்ளடக்கம்:

முன்னத்தி ஏர்.
மகாராசன்

வாழ்த்துச் சொற்கள்.
பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.

மனிதம் மறுக்கப்படும்போது, அதை உரக்கப் பேச வேண்டும்: எழுத்தாளர் ச.பாலமுருகன் நேர்காணல்.
 பா.ச.அரிபாபு

வரலாற்று நோக்கில் தமிழ்நாடு ஐக்கிய அரசு.
 வேல்கடம்பன் 

தமிழர்கள் இறையாண்மை இழந்த ஏதிலிகளாக மாற்றப்பட்டதன் வரலாறு. 
கருத்துரையாடல்: ஓவியர் இராமச்சந்திரன், 
கேளுரையாடல்: தயாளன் சண்முகா

பாவ மன்னிப்பு குறித்த உளவியல் சித்திரங்கள்.
மணி செந்தில் 

கீழடி: தொல்லியல் அகழாய்வு அரசியல். 
 நாக.இளங்கோவன் 

சாம்பல் - சிறுகதை. 
  சோ.தர்மன் 

சிலப்பதிகாரத்தின் முடிவுறாத பக்கங்கள்: கொற்றவையை முன் வைத்து. 
 சு.வேணுகோபால் 

நீர் மேலாண்மையின் பொற்காலம்: சோழர் கால நீரியல் கட்டமைப்பு. 
  மா.மாரிராஜன் 

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் - மொழிபெயர்ப்பு. 
 தமிழாக்கம்: தங்கேஸ் 

ஈழத் திரைப்படங்கள்:  மக்களைத் திரளாக்குவதற்குரிய  மகத்தான ஆயுதம். 
  ஞானதாஸ்

தவலியாட்டம் - சிறுகதை. 
 நாக.சரவணன் 

சித்த  மருத்துவம்: தத்துவம் - இலக்கியம் - அறிவியல் - அரசியல். 
ரேவதி சுயம்புலிங்கம் 

மெய்ப்பொருள் - புனைவு அத்தியாயம். 
  ரமேஷ் பிரேதன் 

சரண்குமார் லிம்பாலே கவிதைகள் - மொழிபெயர்ப்பு. 
 தமிழாக்கம்: வசந்த தீபன் 

உயிரியல் பன்மைத்துவமும் சமூகச் சூழலியல் பண்பாடும்: அகநானூறு சுரக்கும் கவித்துவம்.
 ஆ.தனஞ்செயன் 

வரிப்பணம் - சிறுகதை. 
  வசந்தி முனீஸ் 

நினைவுகளில் இசைக்கும் வகுப்பறைச் சத்தங்கள். 
  இளையவன் சிவா 

அம்மணி அம்மாள்: கோவில் கோபுரம் எழுப்புவித்த பெண்  ஆளுமை. 
  ம.இலட்சுமி 

சீனு ராமசாமி கவிதைகளில் உயிர்மநேயப் படிமங்கள். 
  அய்யனார் ஈடாடி 

ரமேஷ் பிரேதன்: எழுத்தின் மூலம் உயிர்ப்பை வைத்துக்கொண்டிருந்த  மகத்தான படைப்பாளி.  
  இளங்கோ 

சிதைந்த மனம் - சிறுகதை. 
  முகிலன் பாரதி 

முதுவான்கள்: கேரளத்தில் வாழும் ஆதித் தமிழ்க் குடிகள். 
  ச.பென்னிகுயிக் பாலசிங்கம் 

இந்தியக் காவல் வன்முறையின் வேர்களைத் தேடிய பயணம். 
  விசாகன் 

ஈழப் போராட்டமும் இஸ்லாமியர்களும். 
  பரணி கிருஷ்ணரஜனி

சிலை செய்: வரலாற்றை உயிர்ப்பிக்கும் சிற்பக் கலை. 
 பா.அசோக் 

புழங்குபொருள்   பண்பாட்டின் உயர்நிலையும் இழிநிலையும்.                 
  பே.சக்திவேல் 

மகமை: சொல்லாக்கமும் பொருளாக்கமும். 
 மா.ச.இளங்கோமணி 

வெடிமலர்க் காதல் - சிறுகதை. 
  வ.கீரா 

தொண்டை மண்டல நாணயவியல் கழகம்,  புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் - அறிமுகம். 
 மாலதி  இராமலிங்கம் 

மேய்ச்சலியம்: சமூகக் கோட்பாட்டு முன்வரைவு. 
 கதிர்நம்பி 

மீட்பர் - புனைவுப் பத்தி.
  ரமேஷ் பிரேதன் 

கவிதைகள்:
இளையவன் சிவா I  சீனு ராமசாமி I மனோஜ்குமார் I வி.அம்பிகா  | இ.கேசுதன் I  ம.நிவேதா I அ.ம.அகரன் தமிழீழன் I பெரணமல்லூர் சேகரன் | ராணி கணேஷ் I பாலா சயந்தன்  | மாலதி இராமலிங்கம் I மகாராசன் | இயற்கை  I நெகிழன் I
கு.தமிழ்வேந்தன் | தீபச்செல்வன்  I சி.மோகன்.

ஓவியங்கள்:
இராமச்சந்திரன், தமிழ்ப்பித்தன், மருது, முகிலன், புகழேந்தி, கார்த்திகேயன், வீரசந்தானம், பொன்வண்ணன், அமுதன் பச்சைமுத்து, சுந்தரன் முருகேசன், தமிழ்ச்செழியன், ம.இராமமூர்த்தி, இரவி பேலட், வேல்கடம்பன், நெகிழன்.

முதன்மை ஆசிரியர்:
மகாராசன்,

ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு, அய்யனார் ஈடாடி, மு.மகேந்திர பாபு, அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன், தமிழ்ப்பரிதி மாரி.

பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை,

வடிவமைப்பு:
நெகிழன்.

முகப்போவியம்:
இராமச்சந்திரன்

ஏர் இதழ்,
அளவு 18X24 (டபுள் கிரவுன்),
பக்கங்கள் 292,

விலை உரூ 300/-
இதழ் விற்பனை:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506.