சனி, 14 மார்ச், 2026

மொழியின் இயங்குதலும் சேவைத் தளங்களும்: மொழியைப் பழித்ததற்கான மறுப்புரையாடல் - மகாராசன்


மனித சமூகம் தோன்றியதிலிருந்து மொழியும் சமூகத்தினுாடாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மொழியைப் பற்றிய குறிப்புகள் சமூகத்தைப் பற்றியதாகவும் அமைந்து விடுகின்றன. மொழியின் துணையின்றி எந்தவொரு சமூகமும் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. சமூகத்தின் எண்ணப் பதிவுகளையும், வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டு நடத்தைகளையும் மொழியில் பதிவுறுத்துவதன் வாயிலாகச் சமூகத்தினுடைய வரலாற்றுப் பதிவு நிகழ்ந்துவிடுகின்றது. அதேபோல, சமூகக் கட்டுமானத்திற்கு இணங்கிச் செல்லும் மனிதர்களைத் தயாரிக்கும் வகையில் கருத்தியல்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில், மனிதர்களை எழுதிச் செல்லும் மொழியானது, மனிதர்களுக்கும் எழுதி வைத்துக்கொள்ளப் பயன்படுகின்றது. மேலும், கடந்த காலச் சமூகத்தின் எச்சமாகவும் நிகழ்காலச் சமூகத்தின் இருப்பாகவும் அமைந்து மொழி இயக்கம் கொள்ளும் கருவியாகவும் இருக்கிறது.

இன்றைய சமூகம், பல்வேறு காலகட்டங்களை - பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை - பல்வேறு சமூக அமைப்புகளைக் கடந்து வந்திருக்கிறது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தை இச்சமூகம் கொண்டிருக்கிறது. அதேபோல மொழிக்கும் இத்தகைய நெடிய வரலாறு உண்டு. சமூகமானது உயிர் வாழ்கிற எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். என்றாலும், சமூகத்தை நிர்வகிக்கும் அதிகாரமும் ஆளுகையும் எல்லோருக்கும் உரித்தானவையாக அமைந்திருக்கவில்லை. உடைமை வர்க்கமும் உயர்த்திக்கொண்ட சாதிப்பிரிவினரும், ஆண்களுமே சமூக அதிகாரமும் ஆதிக்கமும் நிரம்பியவர்களாக உள்ளனர். சமூக நிறுவனங்கள் யாவும் இப்பிரிவினருக்குச் சேவகம் செய்வதையே நோக்கமாகக் கொண்டவை; சேவகம் செய்வதற்காக அமைக்கப்பட்டவை. 

இந்நிலையில், மொழியும் ஒரு நிறுவன அமைப்பைப் போன்று செயல்படும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே எல்லோருக்கும் பயன்படும் மொழியை அதிகாரப் பிரிவினர் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். பிற சமூக நிறுவனங்களைப் போலவே மொழியையும் அதிகாரப் பிரிவினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவாகவே, அதிகாரப் பிரிவினரின் சிந்தனைகளையும், அதிகார நிறுவனங்களின் கருத்தியல்களையும் மொழி தன்னகத்தே கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. அதனாலேயே, பயன்பாட்டளவில் அதிகாரப் பிரிவினருக்கே மொழியின் சேவை அமைந்திருக்கிறது என்பதாகத் தோற்றம் கொள்கிறது. அதிகாரப் பிரிவினரின் அதிகாரமானது அல்லது அதிகார வழிப்பட்ட கருத்தியலானது மொழி வழியாகச் சமூகம் முழுமைக்கும் உட்செலுத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில், அதிகாரம் செலுத்தும் உடைமை வர்க்கம் போல - உயர்த்திக்கொண்ட சாதிகளைப்போல - ஆதிக்க மனநிலை கொண்ட ஆண்களைப் போல மொழியும் அமைந்திருக்கிறது என்ற கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனால், மொழியை உடைமை வர்க்க மொழி / உயர் சாதிய மொழி / ஆண்மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்திச் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

மொழியை இவ்வாறு குறிப்பிடுவது சரிதானா? உண்மையிலேயே மொழி அவ்வாறுதான் அமைந்திருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. மொழியை உடைமை வர்க்க மொழி / உயர்சாதிய மொழி / ஆண்மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்திச் சொல்லும் இந்நிலையானது சமூக விமர்சனத்தோடு தொடர்புடையதாகும். 

சமூகத்தில் காணலாகும் ஒழுங்கு முறைகள், பண்பாட்டு நடத்தை முறைகள், வாழ்வியல் நிலைகள், கலைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், குடும்ப முறைகள், தத்துவங்கள், கல்வி, சமூகக் கட்டுதிட்டங்கள், நீதி, நிர்வாகம், சமயம், சாதி போன்ற அனைத்தும் ஆளும் அதிகாரப் பிரிவினருக்கானவையாக ஆக்கி வைத்திருக்கின்றன. அவை அனைத்தும் ஆளும் அதிகாரப் பிரிவினரின் கருவிகளாக அமைந்திருக்கின்றன. 

ஆகவே, இந்தப் பின்புலங்களில் பங்காற்றும் மொழியும் ஆளும் அதிகாரப் பிரிவினரைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. ஒரு மொழியில் உடைமை வர்க்கத்தின் அதிகாரக் கருத்துகளும், சாதியாதிக்கக் கருத்துகளும், ஆணாதிக்கக் கருத்துகளும், மதவாதக் கருத்துகளும், பிற்போக்கான மூட நம்பிக்கைக் கருத்துகளும், பழமைவாதக் கருத்துகளும் உள் பொதிந்து கிடக்கின்றன. இதன் காரணமாகவே மொழியானது உடைமை வர்க்க மொழியாக / உயர்த்திக்கொண்ட சாதிய மொழியாக / ஆண்மொழியாக / மதவாத மொழியாக / மூட நம்பிக்கை மொழியாக / காட்டுமிராண்டி மொழியாக அமைந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே மொழியைப் பழிக்கும் போக்கும் - மொழியை நிராகரிக்கும் போக்கும் - மொழியை இழிவுபடுத்தும் போக்கும் - மொழியைப் பகடி செய்யும் போக்கும் பல தரப்பினரால் முன் வைக்கப்படுகின்றன. 

சமூகத்தில் காணலாகும் பெரும்பாலான பண்பாட்டுக் கூறுகளும் நிறுவனங்களும் ஆளும் அதிகாரப் பிரிவினைச் சார்ந்தவையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவை ஆதிக்கத்தை / சாதி ஆதிக்கத்தனத்தை / ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடியவைதான். ஆனால், மொழியின் பயன்பாடு என்பது பண்பாட்டு நிறுவனக் கூறுகளிலிருந்து வேறுபட்டு அமைந்திருக்கக் கூடிய ஒன்றாகும். பண்பாட்டு நிறுவனக் கூறுகளுக்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டு நிலையைப் பார்க்காமல், மற்ற பண்பாட்டு நிறுவனக் கூறுகளைப் போலவே மொழியையும் உயர் வர்க்க மொழியாக /உயர்த்திக்கொண்ட சாதிய மொழியாக / ஆண் மொழித்தன்மை கொண்டதாக / பழமைவாத மொழியாக / மூட நம்பிக்கை மொழியாக / பிற்போக்கு மொழியாக / காட்டுமிராண்டி மொழியாகப் பார்ப்பது, மொழியின் சேவைத் தளங்கள் குறித்தப் புரிதல் குறைபாட்டால் வருவதாகும். 

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகத்தில் நிலவுகிற பொருளாதார உற்பத்தி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளே பண்பாட்டு நிறுவனக் கூறுகளாக அமைகின்றன. இப்பண்பாட்டு நிறுவனக் கூறுகள் உற்பத்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரப் பிரிவினருக்கே சேவகம் செய்யும். இப்பண்பாட்டு நிறுவனக் கூறுகளைப் போன்று மொழியும் அதிகாரப் பிரிவினருக்குச் சேவகம் செய்யும் தன்மை கொண்டதாக இருப்பினும், பண்பாட்டு நிறுவனக் கூறுகளிலிருந்து மொழியானது வேறுபட்டு நிற்கக் கூடியதாகும். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் பண்பாட்டு நிறுவனக் கூறுகளாக அமைந்திருப்பவை காலங்காலமாகத் தொடர்ந்து வரக்கூடியவை அல்ல. வேறொரு உற்பத்தி முறை சார்ந்த புதிய சமூக அமைப்பு தோன்றும்போது, ஏற்கனவே இருந்த பழைய பண்பாட்டு நிறுவனக் கூறுகள் மறைந்தோ மாற்றம் பெற்றோ அல்லது முற்றிலும் புதியதாகவோ அமையும் தன்மை கொண்டவை. ஆனால், மொழியானது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பழைய சமூக அமைப்பில் இருந்த மொழியானது புதிய சமூக அமைப்பிற்கும் வந்துகொண்டிருக்கிறது. அதாவது,"சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு புதிய படியிலும் கலாச்சாரம் உள்ளடக்கத்தில் மாறுகிறது. அதே நேரத்தில் மொழியானது பல்வேறு காலகட்டங்களிலும் அடிப்படையில் எவ்வித மாற்றமுமின்றிப் பழைய கலாச்சாரத்தைப் போலவே புதிய கலாச்சாரத்திற்கும் சேவை செய்கிறது"1 அதாவது, மொழியானது குறிப்பிட்ட வர்க்கத்தாலோ / உயர்த்திக் கொண்ட சாதிப் பிரிவினராலோ / ஆண்களாலோ மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மொழியானது ஆளும் அதிகாரப் பிரிவினரால் மட்டுமே உருவாக்கப்படவுமில்லை. மாறாக, மொழியானது சமூகத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருகிற ஒட்டுமொத்த மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும். 

ஒட்டுமொத்த மனிதர் என்பதற்குள் உடைமை மற்றும் உழைக்கும் வர்க்க மனிதர்களும், உயர்த்திக் கொண்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் சார்ந்த மனிதர்களும், பல்வேறு வட்டார மனிதர்களும், பெண்களும் ஆண்களும், எல்லா வகைப்பட்ட மதத்தவர்களும், பிற்போக்குவாதிகளும், முற்போக்குவாதிகளும் என எல்லாத் தரப்பினரும் உள்ளடங்குவர். அவ்வகையில், ஆளும் அதிகாரப் பிரிவினர் மட்டுமே மொழியைப் பயன்படுத்துவதில்லை. உடைமை இழந்தவர்களும், ஒடுக்குண்ட சாதி மக்களும், பெண்களும், சீர்திருத்தம் மற்றும் புரட்சிகர சக்திகளும் மொழியைப் பயன்படுத்தவே செய்கின்றனர். அவர்களிடமும் மொழி புழக்கத்தில் இருக்கின்றது. இருப்பினும் பொது சமூக வெளியில் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், அவர்களுக்கும் மொழி பயன்படவே செய்கின்றது. அவர்களும் மொழியின் மூலமாகவே தமது கருத்தியில் மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்புச் செயல்பாடுகளை முன்னெடுக்கவும் செய்கின்றனர். 

இந்நிலையில், "மொழி என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, சமூகம் முழுவதின், சமூகத்திலுள்ள வர்க்கங்கள் அனைத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே மொழி சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக - சமூகத்தின் பொது மொழியாக - அனைத்து மக்களுக்கும் பொது மொழியாக - தனி மொழியாக உருவாக்கப்பட்டது. எனவே மக்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தும் கருவி என்ற வகையில் மொழியின் செயல்பாடானது, ஒரு வர்க்கத்திற்குச் சேவை செய்து மற்ற வர்க்கங்களை ஒதுக்கி வைக்காமல், அச்சமூகம் முழுமைக்கும் சமமாக, சமூகத்திலுள்ள அனைத்து வர்க்கங்களுக்கும் சமமாகவே பயன்படுகிறது. 

ஒரு மொழி அழுகிப்போன பழைய அமைப்பிற்கும், அதே நேரத்தில் உருவாகிவரும் புதிய அமைப்பிற்கும், பழைய புதிய அடிப்படை அமைப்பிற்கும், சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சமமாகவே சேவை செய்கிறது"2 எனும் ஜே.வி. ஸ்டாலின் முன்வைத்திருக்கும் கருத்து நோக்கத்தக்கது ஆகும். 

இவ்விடத்தில்தான், மொழிக்கும் பண்பாட்டு நிறுவனக் கூறுகளுக்கும் இடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது எனலாம். சமூகத்தில் காணலாகும் பண்பாட்டு நிறுவனக் கூறுகள் அதிகாரப் பிரிவினருக்கு வெளிப்படையாகவே சேவை செய்வன. மொழியானது அப்படிப்பட்டதல்ல. அதிகாரப் பிரிவினருக்கும் சேவை செய்யும்; அதிகாரம் இழந்தவர்களுக்கும் சேவை செய்யும். ஆண்களுக்கும் சேவை செய்யும்; பெண்களுக்கும் சேவை செய்யும். பிற்போக்குவாதிகளுக்கும் சேவை செய்யும்; முற்போக்குவாதிகளுக்கும் சேவை செய்யும். 

இவ்வாறான நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் சேவையாற்றும் தன்மையை மொழி கொண்டிருப்பதால், மொழியை அதிகாரப் பிரிவினர் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது, அதிகாரப் பிரிவினரின் சிறப்பு வழக்காறுகளையும், நடத்தை முறைகளையும், ஒழுங்கு முறைகளையும், கருத்தியல்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், தங்களுக்கேயுரிய முறைகளையும், தங்களது சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்த சொல்லாடல்களையும், அர்த்தங்களையும் மொழியின் மீது திணிக்கின்றனர். இத்திணிப்பின் மூலம் உருவான மொழியின் துணையோடு கலை இலக்கிய இலக்கணங்களை உருவாக்குகிறார்கள். இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எழுத்து மரபையே பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். எழுத்து மரபில் வெளிவரும் அனைத்துமே ஆவணமாகின்றன. அதிகாரப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட இத்தகைய ஆவணங்கள் ஒட்டுமொத்தச் சமூக ஆவணமாக முன்னிருத்தப்படுகின்றன. இவ்வகையில்தான் அதிகாரப் பிரிவினர் சமூகக் கட்டுமானத்திற்கு உகந்தவாறு மொழியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மொழியானது அதிகாரப் பிரிவினரின் மொழியாகத் தோன்றுகிறது. 

மேலும், மொழியானது உடைமை வர்க்க மொழி / உயர் சாதிய மொழி / ஆணாதிக்க மொழி என அடையாளப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவுகிற சமூகச் சூழல் அமைவுகளைப் பொறுத்தே - அதன் தேவைகளைப் பொறுத்தே மொழியின் இயக்கமும் அமைந்திருக்கிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதிகாரப் பிரிவினரின் ஆளுகை இருப்பதனால், மொழித் தளத்திலும் அவ்வாளுகையின் பாதிப்புகள் இருக்கின்றன. அதனால் மொழிக்கூறுகளும் அதிகாரப் பிரிவினரை நோக்கியதாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில் உடைமை வர்க்கம் - உயர்த்திக் கொண்ட சாதிகள் - ஆண்கள் என்ற முக்கூட்டுத் தன்மையில் அமைந்த அதிகாரப் பிரிவினருக்குச் சார்பான வகையில் மொழிக் கூறுகள் அமைந்திருக்கின்றன. 

எனினும், மொழியின் எல்லாக் கூறுகளுமே அதிகாரப் பிரிவினரின் சார்பாக அமைந்திருக்கவில்லை. அதிகாரம் சார்ந்த தரப்பினர் அல்லது அவ்வகைப்பட்ட மனிதர்கள் பொதுவாய்ப் பயன்படுத்தும் சொற்களோ அவற்றின் பொருண்மைகளோ மட்டுமே ஒரு மொழியில் சேகரமாய்ப் பதிவாகியிருக்கவில்லை. அவ்வாறான “குறிப்பிட்ட சொற்களும், வெளிப்பாடுகளும், சொற்பொருள் வேறுபாடுகளும் மொழியில் மிகச் சிலவேயாகும். அவை ஒட்டு மொத்த மொழியியல் கூறுகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதேயாகும். எனவே மீதமுள்ள ஏராளமான சொற்களும், வெளிப்பாடுகளும், அவற்றின் சொற்பொருள்களும் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானவை"3 என்ற நிலையில் அமைந்திருக்கின்றன. அந்தவகையில், மொழியானது வர்க்கம் கடந்து, சாதி கடந்து, பாலினம் கடந்து, வட்டாரம் கடந்து பயன்படும் இயல்பு கொண்டதாக அமைந்திருக்கிறது எனலாம். 

காலங்காலமாய் உழைத்துப் போடுதலையே தலைவிதியாகக் கொள்ளுமாறு வலியுறுத்திய ஒரு பண்பாட்டுக் கருத்தியல் மொழியிலே வெளிப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுக் கருத்தியல் மொழியாலேதான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது. ஆணுக்குப் பெண் அடிமை எனும் பாலின ஒடுக்குமுறை மொழி வழியே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான அதிகாரப் பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்பவும் இசைந்தும் மொழி உதவுவதைப் போலவே, உழைக்கும் வர்க்கத்தினர்க்கும், ஒடுக்குண்ட சாதி மக்களுக்கும், பெண்களுக்கும் பயன்படும் வகையிலும் அவர்களுக்கான விடுதலைக் கருத்தியலையும் - உரிமை மீட்புக் கருத்தியலையும் - அதிகார எதிர்ப்புக் கருத்தியலையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பண்பாட்டு ஆயுதமாகவும் மொழி அமைந்திருக்கிறது. 

அதாவது, உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்குண்ட சாதி மக்களின் - பெண்களின் வாழ்வியலும் சிந்தனைகளும் நடத்தைகளும் மொழித் துணையோடு நிகழக்கூடியவைதான். மேலும், அம்மக்களின் விடுதலைச் சிந்தனைகள், செயல்பாடுகள், போராட்டங்கள், அவற்றுக்கான தத்துவங்கள், திட்டங்கள், வழிமுறைகள், அனுபவப் பகிர்வுகள் போன்றவையும் மொழி வழியாகவே வெளிப்படுகின்றன. இந்நிலையில், மொழியானது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமின்றி எல்லாப் பிரிவினருக்கும் சேவை செய்யக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. சமூகத்தின் அக மற்றும் புறவயத் தேவையை ஒட்டியே மொழியின் இயக்கம் அமைந்திருக்கிறது. ஆகவே, மொழியை உடைமை வர்க்க மொழி / ஆண்மொழி | உயர்சாதிய மொழி / பிற்போக்கு மொழி / காட்டுமிராண்டி மொழி என அடையாளப்படுத்தி ஒதுக்க முடியாது. 

மொழியின் சில கூறுகள் உடைமை வர்க்கம் சார்ந்த - சாதி ஆதிக்கம் சார்ந்த / ஆணாதிக்கம் சார்ந்த - பிற்போக்கு சார்ந்த - பழமைவாதம் சார்ந்ததாக இருக்கின்றன என்பதற்காகவே ஒட்டுமொத்த மொழியினையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது; புறந்தள்ளவும் கூடாது. மொழியை எந்தப் பிரிவினர் கருவியாகக் கொள்கின்றனரோ, அந்தப் பிரிவினரை நோக்கியதாகவும் மொழியின் இயக்கம் நகரும். சமூகத்தில் வர்க்க விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். சாதி ஆதிக்க ஒழிப்பு இயக்கங்கள் தீவிரமடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். பெண் விடுதலை இயக்கங்கள் கூர்மையடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். அறிவியல் தொழில்நுட்ப மாறுதல்கள் ஏற்படும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். 

ஆக, ஆதிக்கம் செலுத்தவும் மொழி பயன்படுகிறது. விடுதலை பெறுவதற்குக்கும் மொழி பயன்படுகிறது. மூடத்தனத்தை வலியுறுத்தவும் மொழி பயன்படுகிறது; அறிவியலைப் பரவலாக்கவும் மொழி பயன்படுகிறது. சமூகத்தில் எவை தீவிரம் கொள்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் மொழி பயன்படவே செய்யும். அவ்வகையில், மொழியானது எல்லா மட்டங்களிலும் எல்லாக் காலங்களிலும் சேவை செய்யக் கூடியதாக அமைந்திருக்கிறது. 

அதாவது, சமூகத்தின் தேவையை ஒட்டித்தான் மொழியானது தன் பங்களிப்பை நிறைவாகச் செய்யும் தன்மையை இயல்பாகக் கொண்டு அதன் சேவைத் தளத்தைப் பரந்து விரிந்தளவிலே அமைத்துக் கொண்டுள்ளது எனலாம். சமூகம் அகத்திலும் புறத்திலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. அந்தவகையில், சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது. சமூகத்தின் தேவைகளைப் பொருத்துப் பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் எல்லா வகை மாற்றங்களையும் உள்ளிழுத்துக் கொள்வதன் வாயிலாகச் சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. 

சமூகத்தோடு பிணைந்துள்ள மொழியும் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கிறது. அவ்வகையில், "மொழியில் சமூக மாற்றங்களுக்கு ஏற்பத் தோன்றும் மாற்றங்களைப் புதுமையாக்கம் எனலாம்"4. இப்புதுமையாக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்படுகின்ற மாற்றமாகவே அமைந்திருக்கின்றது. 

கால மாற்றத்தினாலும், சமூகம் தந்திட்ட படிப்பினைகளாலும், சமூகம் குறித்த ஆய்வுகள் அதனதன் ஆழம் தேடிச் செல்கின்றன. கடந்து வந்த சமூக நிலைமைகள் குறித்தும், அமையப் போகிற சமூக அமைப்பு குறித்தும் பலவகைச் சிந்தனைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. மய்யம் நோக்கிய விளிம்புகளின் நகர்வு வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. ஆண் - சாதிய வர்க்க முக்கூட்டு ஆதிக்கக் கூறுகளைத் தகர்த்து, அதிகார மய்யத்திலிருந்து விடுதலை பெறுவதை இலக்காகக்கொண்ட சமூக மாற்றுச் சிந்தனைகள் எல்லாக் காலத்திலும் உரத்து எழும்பியிருக்கின்றன; இப்போதும் எழும்புகின்றன. அதாவது, ஒரு சமூகப் புரட்சி இச்சமூகத்திற்குள்ளேயிருந்து இயக்கம் கொள்வதும், சமூக மாற்றச் செயல்பாடுகளின் தொடக்கமாக, சமூகத்தில் நிலவுகிற அனைத்துப் பண்பாட்டு நிறுவனக் கூறுகளின் மீதும் கட்டவிழ்த்துப் பார்ப்பதும், அதேவேளையில், தேவைப்படும் தருவாயில் மறைந்து போனவற்றைத் தேடிக் கண்டடைந்து மீட்டுருவாக்கம் செய்தோ அல்லது புதியனவற்றைக் கட்டமைத்தோ மாற்றத்தை முன் வைக்கிற சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய கட்டவிழ்ப்பும் கட்டமைப்பும் சார்ந்த செயல்பாடுகள் மொழித் தளத்திலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன. சமூகத்தில் மாற்றமோ புரட்சியோ நிகழும்போது மொழியிலும் மாற்றமோ புரட்சியோ நிகழும். மேலும், "ஒரு சமூகப் புரட்சி என்பது, சில மொழி நியதிகளுக்கு எதிரான புரட்சியுமாகவே அமைந்து விடுகிறது"5. மொழிக்கு எதிரான புரட்சியாக அது அமைவதில்லை. அதாவது, ஒரு சமூகப் புரட்சியில் அச்சமூக அமைப்பின் அடிக்கட்டுமானம் எனப்பெறும் பொருளியல் உற்பத்திமுறையும் அதன் மேல் கட்டுமானக் கூறுகளும் தூக்கியெறியப்பட்டு, புதியதோர் உற்பத்தி முறையும் அதன் மேல்கட்டுமானக் கூறுகளும் அமையும். ஆனால், மொழியானது முழுவதுமாகத் தூக்கியெறியப்பட்டு புதிய மொழி என்ற ஒன்று உருவாவதில்லை. மாறாக, பழைய சமூக அமைப்பில் இருந்த மொழியே புதிய சமூக அமைப்பிலும் தொடர்கின்றது. 

ஒரு மொழி இன்னொரு மொழியாக மாறுவதில்லை. ஆனால், புதிய சமூக அமைப்பிற்கு ஏற்ப மொழியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. மொழியின் சொற்தொகுதியிலும் அமைப்பிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. "தொழில், விவசாயம், வாணிபம், போக்குவரத்து, தொழில் நுட்பம், விஞ்ஞானம் போன்றவற்றின் தொடர்ந்த வளர்ச்சியானது, அதன் சொற்தொகுதியை அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவையான புதிய சொற்களுடனும் வெளிப்பாடுகளுடனும் புதுப்பித்துக்கொள்ளும்படி மொழியை நிர்ப்பந்திக்கிறது. எனவே, மொழியானது இந்தத் தேவைகளை நேரடியாகப் பிரிதிபலித்து அதன் சொற்தொகுதியைப் புதிய சொற்களால் புதுப்பித்துக் கொள்வதுடன் அதன் இலக்கண அமைப்பையும் சீரமைத்துக் கொள்கிறது"6. இவ்வாறு மொழியானது காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தகவமைப்பைப் பெற்றிருக்கிறது எனலாம். 

மொழியானது சமூக மனிதர்களுக்கிடையில் உறவாடவும் உற்பத்தி செய்யவுமான ஒரு கருவியாகக் கொள்ளும்போது, மொழியைக் கையாள்பவர்களின் திறமைகளைப் பொறுத்துப் புதியனவற்றையும் உற்பத்தி செய்யும். இன்றைய சூழலில் மாற்றுச் சிந்தனை ஆய்வுகள் மொழியின் மீதும் மாற்றங்களை முன் வைக்கின்றன. அவ்வகையில், அதிகாரப் பிரிவினரான உடைமை வர்க்க - சாதி ஆதிக்க - ஆண் மய்யமிட்ட மொழிக் கூறுகளை மாற்றி நிகர் மொழியாக மாற்றும் நடவடிக்கைகள் காலந்தோறும் தொடர்ந்திருக்கின்றன. 

இன்றைய நிலையில், தேசிய இன விடுதலைச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சிந்தனைகளும், பெண் விடுதலைச் சிந்தனைகளும், மண் விடுதலைச் சிந்தனைகளும் மொழி வழியிலான கருத்தியல் மாற்றத்தைக் கோருகின்றன; மொழியிலும் மாற்றத்தைக் கோருகின்றன. எனினும், "இருக்கின்ற மொழிகளை அழித்துப் புதிய ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் மொழிகள் வளர்வதில்லை. மாறாக, இருக்கும் மொழிகளின் அடிப்படை அம்சங்களைத் திருத்துவதன் மூலமும் விரிவுபடுத்துவதன் மூலமுமே மொழிகள் வளர்க்கப்படுகின்றன. 

ஒரு குறிப்பிட்ட தன்மையிலிருந்து மற்றொன்றுக்கு மொழி மாறிச் செல்வதென்பது, திடீரென்று குண்டுவெடிப்பது போல் ஒரே அடியில் பழையதை அழித்துப் புதியதை உருவாக்குவதாக அமைவதில்லை. மாறாக, புதிய தன்மையின், புதிய மொழியியல் அமைப்பின் கூறுகளைப் படிப்படியாக - தொடர்ச்சியாக நீண்ட காலப்போக்கில் பெற்றுக்கொண்டு, பழைய தன்மையின் கூறுகளைப் படிப்படியாக அழிய விடுவதன் மூலமே இந்த மாற்றம் நிகழ்கிறது"7. அவ்வகையில், மொழியின் மாற்றம் என்பது திடீர்ப் பாய்ச்சலாகவோ, வழக்கிலுள்ள மொழி திடீரென்று மறைந்து ஒரு புதிய மொழி திடீரென்று தோன்றுவதோ இல்லை. மாறாக, காலப்போக்கில் மொழியில் மாற்றம்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஒரு சமூகம் நிலைத்திருக்கும் வரையிலும் மொழியும் நிலைத்து நின்று, சமூகத் தோற்றப்பாடுகளுள் ஒன்றாக விளங்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. "சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாக உள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தால் வளர்த்து வருவது மொழி என்கிறார் பிரதர் கூட் எனும் மொழி அறிஞர்”8. அவ்வகையில், சமூக வளர்ச்சிக்கேற்றவாறும் தேவைக்கேற்றவாறும்தான் மொழியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனலாம். 

மொழியானது வர்க்க - சாதி - பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பிரிவினருக்கும் சேவை செய்யக்கூடியதாக அமைந்துள்ள நிலையில், புதிய சமூக அமைப்புகளுக்கு ஏற்பவும் மொழியில் புதுமையாக்கம் நிகழ்கிறது. எத்தகையச் சமூக மாற்றத்திற்கும் மொழியானது எப்போதும் தயார் நிலையிலே இருந்துகொண்டிருக்கும். அதனால்தான், "மொழி புரட்சிகர சமூகத்தின் ஒரு பகுதி, அது புரட்சியைப் பிரிதிபலிக்க மட்டும் செய்யவில்லை. அதனுடன் உறவாடக் கூடியதாகவும் உள்ளது"9 என்றார் மார்க்ஸ். இந்நிலையில், மொழியின் வகிபாகத்தையும், அதன் சேவைத் தளங்களையும் வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அணுகும்போது, மொழியைப் பழித்தல் எனும் போக்குகள் தவறானவை என்பதும், மொழியைப் பழித்தல் எனும் கருத்தாடல்கள் கொச்சைப் பொருள்முதல்வாதங்கள் என்பதும் தெளிவாகும். 

சமூகத்தில் மொழியின் வகிபாகம் குறித்தும், அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்தும், அதன் இயங்குதளம் மற்றும் சேவைத் தளங்கள் குறித்தும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் வெளிவந்த கருத்தாடல்களும் உரையாடல்களும் மிக முக்கியமானவை. இரசியப் புரட்சியாளர் ஜே.வி.ஸ்டாலின் எழுதிய ‘மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்’ எனும் நூலும், ‘மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினைகளும்’ எனும் நூலும் அத்தகையக் கண்ணோட்டத்தில் முன்வைத்த நூல்களாகும். 

புரட்சிகரத் தத்துவத்தை முன்வைத்திருக்கும் மார்க்சியக் கோட்பாடானது, மொழியைப் புரட்சிகர ஆயுதமாகவே கருதுகிறது; அவ்வாறே கையாண்டிருக்கிறது. தேசிய இன விடுதலை எனும் கோட்பாட்டையும் போராட்டத்தையும் முன்மொழியும் மார்க்சியமானது, மொழி என்பதைத் தவிர்க்க முடியாத - தவிர்க்கக் கூடாத அங்கமாகவே கருதியிருக்கிறது. மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு தேசம் என்பது, 1. ஒரு பொதுவான மொழி, 2. அம்மொழி வழங்கும் நிலவியல் எல்லைகள், 3. அந்நிலப் பரப்பில் நடைபெறக் கூடிய உற்பத்தி முறைகளால் ஏற்படும் பொருளியல் வாழ்வு, 4. அப்பொருளியல் வாழ்வில் காணப்படும் பொதுமைப் பண்பாட்டுக் கூறுகள், 5. அப்பண்பாட்டுக் கூறுகளை வழக்கப்படுத்திக்கொள்கிற மன இயல்பைக் கொண்ட மக்கள் சமூகம் என இவை அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகும். 

மேற்குறித்த வரையறையின்படி நோக்கும்போது, வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலக நிலப்பரப்பில் நிலையான மக்கள் சமூகம் என்பதாகத் தமிழ் இனம் வாழ்ந்திருக்கிறது. அவ்வகையில், நிலையான மக்கள் சமூகத்தின் பொதுவான மொழியாகத் தமிழ் மொழி அமைந்திருக்கிறது. ஆதி காலம் முதற்கொண்டு இப்போது வரையிலும் வாழ்ந்து வந்த நிலையான மக்கள் சமூகத்தின் வாழ்நிலப் பரப்பு சிற்சில மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், நிலையான மக்கள் சமூகத்தின் பெருநிலப்பரப்பாகத் தமிழ்நாடு அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு நிலப்பரப்பில் மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் உற்பத்திச் செயல்பாடுகள் ஐந்திணை வகைப்பாடாய் நடைபெற்று வந்திருக்கிறது. 

ஐந்திணைத் தொழில்பாடுகளும் வாழ்க்கை முறைகளும் தமிழ் நிலத்தின் பொருளாதார உற்பத்திச் செயல்பாட்டிற்கான இணைவைக் கொண்டிருக்கின்றன. ஐந்திணைச் சூழலில் - தமிழ் நிலப்பரப்பில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் ஒத்திசைவான மன இயல்பையும் பண்பாட்டு ஒருங்கிணைப்பையும் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். 

ஒரு தேசிய இனத்திற்கான - ஒரு தேசத்திற்கான அத்தனை வரையறைகளும் ஒருங்காகவும் முழுமையாகவும் பெற்றதாகப் பன்னெடுங்காலமாக வரலாற்றுவழியில் நிலைத்திருக்கக் கூடிய வல்லமையைத் தமிழ்த் தேசிய இனம் பெற்றிருக்கிறது; தமிழ்த் தேசமும் பெற்றிருக்கிறது. தேசிய இனம் - தேசம் என்பதற்கான இத்தகையத் தகுதிப்பாட்டிற்கு மொழியின் வகிபாகம்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அவ்வகையில், தமிழ்த் தேசிய இனத்தின் அக அடையாளமாகவும் புறக் கருவியாகவும் திகழும் தமிழ் மொழியின் அமைப்பு, தோற்றம், வளர்ச்சி, வகிபாகம், இலக்கிய இலக்கண உருவாக்கம், வாய்மொழி மற்றும் எழுத்து மொழி மரபுகள், பாடுபொருள்கள், கருத்தியல் உருவாக்கம் எனப் பல நிலைகளில் உறவாடிக் கிடக்கிறது. இத்தகையத் தமிழ் மொழியானது மரபின் அடையாளங்கள் அழிந்து போகாமலும், காலம் மற்றும் சமூக மாற்றத்திற்கு ஏற்பப் புதியதை ஏற்றும் வடிவமைந்து வந்து கொண்டிருப்பதாகும். 

தமிழின் வரலாற்றுச் சிறப்பையும், மொழியியல் கட்டமைப்பையும், பொருண்மைச் செறிவையும் பல்வேறு தரப்பினர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றனர். ஆனாலும், தமிழ் நீச பாஷை என்றும், தமிழ் ஐந்தெழுந்தால் ஆன ஒரு பாடை என்றும், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்ச் சனியன் என்றும் தமிழைத் தாழ்த்தியும் பழித்தும் பகடி செய்தும் பல்வேறு வகைப்பட்ட உரையாடல் முன்வைப்புகளும் வந்திருக்கின்றன. தமிழைப் பழித்தும் இழித்தும் முன் வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கருத்தாடல்கள், தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை அவமதிப்பதாகும்; இழிவுபடுத்துவதாகும். 

தமிழ்த் தேசிய இனத்தின் பேரடையாளமான தமிழ் மொழியைப் பழித்தும் இழித்தும் வெளிவந்த கருத்தாடல்களை எதிர்த்தும் மறுத்தும் பல்வேறு எதிர்வினைகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் காட்டுமிராண்டி மொழி எனும் கருத்தைப் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்தபோது, அவரது கருத்துக்குப் பல்வேறு எதிர்வினைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எதிர்வினையாகும். 

1967ஆம் ஆண்டில் வெளிவந்த தென்மொழி இதழ்களில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி’ எனும் கட்டுரையும், ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியே!’ எனும் கட்டுரையும், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்த கருத்துகளுக்கு எதிர்வினையாக வந்திருப்பவை ஆகும். 

பெரியார் ஈ.வெ.ரா அவர்களைச் சமூகச் சீர்திருத்தவாதியாக ஏற்றுக்கொள்ளும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், மொழி குறித்து - தமிழைக் குறித்துப் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்த கருத்துகளை எதிர்த்திருக்கிறார்; மறுத்திருக்கிறார்; நிராகரித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று, பெரியார் ஈ.வெ.ரா எனும் தனி மனிதரைத் தாக்குவதோ எதிர்ப்பதோ மறுப்பதோ பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நோக்கமும் அல்ல. மாறாக, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்திருந்த மொழி குறித்த அந்தக் கருத்தையே மறுத்திருந்தார். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தமது இரண்டு கட்டுரைகளின் வாயிலாக முன்வைத்திருந்த மறுப்புரையாடல்கள் இன்றைய காலகட்டத்தின் மொழி குறித்த உரையாடல்களுக்குத் தேவையானவை; இன்னும் பக்குவமான புரிதல்களை ஏற்படுத்தக் கூடியவை. இந்நிலையில்தான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய அவ்விரு கட்டுரைகளும் குறுநூல் வடிவில் மீள வெளிவருகின்றன. 

இந்நூல் வெளிவருவதன் நோக்கம், மொழி குறித்தத் தப்பெண்ணங்களை நீக்குவதும், மொழியைப் பழித்ததற்கான மறுப்பும்தான். அவ்வகையில், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், மொழி குறித்து முன் வைத்திருந்த அந்தக் கருத்திற்கான மறுப்புரையாடல்தான் இந்நூல். 

குறிப்புகள்:
ஜே.வி.ஸ்டாலின், மார்க்கியமும் மொழியியல் பிரச்சினைகளும், ப.25.
மேலது, பக்.4,5.
மேலது, ப.52.
எல்.இராமமூர்த்தி (க.ஆ), பெண்ணியமும் மொழி நிரணயவாதமும், பக்தவத்சல பாரதி, இரா.சம்பத் (ப.ஆ), பெண்ணிய ஆய்வுகள், பக்.19,20.
கா.சிவத்தம்பி, இலக்கணமும் சமூக உறவுகளும், ப. xi
ஜே.வி.ஸ்டாலின், மு.கூ.நூ., பக்.9.10.
மேலது, பக். 32,33
மு.வரதராசன், மொழி வரலாறு, ப.1.
ஜமாலன், மொழியும் நிலமும், ப.194.

பார்வை நூல்கள்:
ஜே.வி.ஸ்டாலின், மார்க்கியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும், மகாராசன் (தொ.ஆ), முதல் பதிப்பு, 2022, யாப்பு வெளியீடு, சென்னை.
மகாராசன், மொழி இயங்கியல், முதல் பதிப்பு, 2008, தோழமை வெளியீடு, சென்னை.
மகாராசன், தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு, முதல் பதிப்பு, 2025, யாப்பு வெளியீடு, சென்னை.

(முன்னுரை, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியும் பெரியாரின் தமிழ் ஆராய்ச்சியும் :மொழியைப் பழித்ததற்கான மறுப்புரையாடல், பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் : மகாராசன், முதல் பதிப்பு: சனவரி 2026, யாப்பு வெளியீடு, சென்னை.)



ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

குலசாமி வழிபாட்டு வழக்காறுகள் - மகாராசன்


குலசாமி வழிபாட்டு வழக்காறுகள்: பூர்வீக நிலத்தோடு பூர்வீக மக்களுக்கிருக்கும் உயிர்ப்பான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வகைச் சடங்குமுறை.

தமிழ்ச் சமூகத்தின் நாட்டுப்புறங்களில் நிலவும் குலசாமி வழிபாடுகள், நிறுவனப்படுத்தப்பட்ட ஆரிய வழிபாட்டு மரபுகளைப் போன்றதல்ல. அதாவது,ஆரிய பிராமணிய வைதீக வழிபாட்டு மரபுகளில் இருந்து வேறுபட்ட எதிர்மரபையும் மாற்று மரபையும் கொண்டிருக்கக் கூடியவை.

பெரும்பாலும், குலசாமி வழிபாட்டு மரபுகளைத் தெய்வ வழிபாடு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. குலசாமிகள் என்பவைதான் இந்த உலகத்தையும் உயிரினங்களையும் படைத்ததாகக் குலசாமி வழிபாட்டினர் கருதுவதில்லை. மாறாக, முன்னொரு காலத்தில் தம் குழுவுக்கோ கூட்டத்திற்கோ குலத்திற்கோ அல்லது இந்தச் சமூகத்திற்கோ ஏதாவது ஒரு வகையில் சமூகப் பங்களிப்பை வழங்கியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

அவர்களது சமூகப் பங்களிப்பை மதித்து நினைவஞ்சலி செலுத்தும் எளிய வழிபாட்டுச் சடங்குதான் குலசாமி வழிபாட்டு மரபில் பொதிந்து கிடக்கிறது. சமூகப் பங்களிப்பு செய்த முன்னோர், மூத்தோர், நீத்தார் என்போரைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட நடுகல் வழிபாட்டு மரபின் நீட்சிதான் குலசாமி வழிபாட்டு மரபும்.

குலசாமி வழிபாட்டு மரபில் பல குலங்களின் கூட்டிணைவு உள்ளடங்கி இருக்கிறது என்பதையும் காண முடியும். குலசாமி வழிபாடு தெய்வ வழிபாடு என்பதைக் காட்டிலும், பூர்வீக நிலத்தோடு பூர்வீக மக்களுக்கிருக்கும் உயிர்ப்பான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வகைச் சடங்குமுறை அதற்குள் இருக்கிறது. இன்னும் குறிப்பாக உற்று நோக்கினால், ஒவ்வொரு குலசாமி வழிபாட்டு வழக்காற்றுக்குள்ளும் அந்தந்த வட்டாரத்தின் - குலத்தின் வரலாறும் சடங்கு மரபாய் மாறிக் கிடக்கிறது. இந்த வரலாற்றையும் வழக்காறுகளையும் போகிற போக்கில் உதறித் தள்ளிவிட முடியாது; தள்ளிவிடவும் கூடாது.

குலசாமி வழிபாட்டு மரபைக் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுவதை விடுத்து, வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் பண்பாட்டு நடத்தைகளை ஆராய்வதுதான் இப்போதைய தேவை. குலசாமி வழிபாட்டு மரபு ஒன்றும் பிற்போக்கானது - தீங்கானது என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வருதல் என்பதும் ஆரியத்திற்குத் துணை செய்யும் கருதுகோளே ஆகும். ஏனெனில், குலசாமி வழிபாட்டு மரபை ஆரியமும் இழிவானது என்றே முன்மொழிகிறது. ஆரியத்தின் இதே கண்ணோட்டத்தைத்தான் பகுத்தறிவு பேசும் கொச்சைப் பொருள்முதல்வாதிகளும் வழிமொழிகின்றனர்.

பகுத்தறிவுவாதம் எனும் பேரில் குலசாமி வழிபாட்டு மரபுகளைக் கொச்சைப்படுத்துவதும் ஆரியத்தை வலுப்படுத்தவே துணை செய்யும். அதுமட்டுமல்ல, குலசாமி வழிபாட்டு மரபு போன்ற மக்களின் வழக்காற்று மரபுகளைப் பிற்போக்கானது என ஒதுக்கி வைத்ததன் - வைப்பதன் விளைவாகவே, அவற்றையெல்லாம் ஆரிய மரபு தமதாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் வழக்காறுகள் உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் உருவாகி நிற்பவை. குலசாமி வழிபாட்டு மரபில் இருக்கும் மக்கள் வழக்காற்றுக்குள் இருக்கும் வரலாற்றையும் சமூகப் பண்பாட்டியலையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.

தமிழ்ச் சமூகப் பண்பாட்டு நடத்தைகளையும் வழிபாட்டு மரபுகளையும் ஆரிய வைதீக மரபுகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பதில் பல தரப்பினருக்கும் இன்னும் போதாமைகள் இருக்கின்றன. அதேபோல, பண்பாட்டியல் சார்ந்த புரிதலிலும் அத்தகையப் போதாமைகளே நீடிக்கின்றன. இந்நிலையில், மக்களையும் சமூகத்தையும் இன்னும் படிப்பதின் மூலமே இதைச் சரி செய்திட முடியும்.

மகாராசன் எழுதிய 'தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு' எனும் நூலில் இருந்து...

தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு (கட்டுரைகள்),

மகாராசன்,

பக்கங்கள் 192,

முதல் பதிப்பு, திசம்பர் 2025,

விலை: உரூ 200/-

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாறு - கு.தமிழ்வேந்தன்




பூமி என்ற ஒரு கோளில் மலைகள், காடுகள், கடல்கள் ஆகியன மூன்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்று உருமாற்றம் பெற்றதும், ஒரு செல் உயிரியிலிருந்து பரிணாம வளர்ச்சி நிலைகளை அடைந்து அடைந்து,  ஆறறிவு பெற்ற வளர்ச்சியுடைய முழுமையை அடைந்தது மனித இனம். தம்மைச் சூழ்ந்திருக்கும் புற உலகையும் வாழ்வையும் ஆளுமை செய்கிற சமூக உயிரியாகவும் பரிணமித்தது மனித இனம்தான். அதனால்தான், உயர்ந்த பண்புள்ள விலங்கு என மனித இனம் குறிக்கப்படுகிறது.

இயற்கையானது மூன்று நிலங்களை உருவாக்கி வைத்திருந்தது. அந்நிலங்களில் வாழ்ந்த தாவரங்களையும் விலங்குகளையும் மட்டுமல்லாது, சூழல், பொழுது போன்ற இன்னும் பிறவற்றையும் கையாளப் பழகிக்கொள்கிறது மனித இனம். இந்தப் பழக்கத்திலும் உழைப்பிலும்தான் வேளாண்மை செய்வதைக் கற்றுக் கொள்கிறது. அந்த வேளாண்மைக்கு உகந்த புதிய நிலத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது, அடர்ந்த மலை மற்றும் வன நிலப் பகுதிகளை வேளாண்மைக்கான நிலமாக மாற்றி, உழவு நிலத்திற்கேற்ற மண்ணாக மாற்றி, வேள் எனும் நிலத்தை ஆளும் தொழிலால் வேளாண்மை செய்து தன்னிறைவு காண்கின்றது. 

ஒரு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றதான நிலமாக மாற்றுவதைப் ‘பண்படுத்துதல்’ என்பர். நிலத்தைப் பண்படுத்தினால் மட்டுமே வேளாண்மை செழித்தோங்கும். ஒரு நிலத்தை ஆழ அகல உழுது, விதை விதைத்து, நடவு செய்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து,  அறுவடை செய்து, கதிர் அடித்து, நெல் குவித்து, அவித்து, அரிசியாக மாற்றுவர். இத்தகைய நெல் உற்பத்தியில் நீண்ட கால உழைப்பு மட்டுமே பொதிந்திருக்கவில்லை. இது தனி மனிதர் மட்டும் சார்ந்ததில்லை. தொழில்சார் குழு மனிதர்களின் பங்கேற்பும் கூட்டுழைப்பும் மட்டுமல்ல; பழக்கத்தாலும் உழைப்பாலும் பயில்முறை அனுபவங்களாலும் பெற்றிருந்த தொழில்நுட்ப நுணுக்கங்களின் அறிவும்தான் அதைச் சாத்தியமாக்கியது. நெல் மட்டுமல்ல; வேளாண்மை உற்பத்தியின் - இதர உணவுப் பயிர் உற்பத்தியின் அனைத்து நிலைகளும் நிலத்தைப் பண்படுத்துவதால் உருவாகி நின்றவை ஆகும். 

நிலத்தைப் பக்குவப்படுத்திப் பண்படுத்தும் - ஒழுங்கமைக்கும் பண்பால் வேளாண்மை வளர்ந்தோங்கி வந்திருக்கிறது. அதேபோல, மனித வாழ்வில் பக்குவப்பட்டும் பண்பட்டும் ஒழுங்கமைந்தும் வந்திருக்கும் பண்பைப் ‘பண்பாடு’ எனக் குறிப்பர். இந்தப் பண்பாடு, மனிதப் புலன்களினாலும், மனித உழைப்பினாலும், மனிதக் கூட்டிணைவினாலும் பண்பட்டும் பக்குவப்பட்டும் ஒழுங்கமைந்தும் வடிவமைந்து வந்திருப்பதாகும். அதனால்தான், சங்க காலக் கலித்தொகைப் பாடலானது, ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்கிறது. 

பாடு எனில், பாடுபடுதல் - உழைத்தல் - உற்பத்தி செய்தல் - உருவாக்குதல் என்பது பொருள். மனித வாழ்வின் அடிப்படை நியதியும் இதுதான். அவ்வகையில், மனிதர்களின் பாடறிந்து ஒழுகிய - பாடறிந்து ஒழுகும் மனிதப் பண்பே பண்பாடாக மலர்ந்திருக்கிறது. இத்தகையப் பண்பாட்டுப் புலப்பாடுதான் பண்பாட்டறிவு, பட்டறிவு ஆகும். இவ்வாறமைந்த ‘பண்பாட்டறிவு’ மொழி, கலை, இலக்கியம், நடத்தை, தொழில், வழக்காறு, வழிபாடு, சடங்குகள் போன்ற யாவற்றிலும் படிந்திருக்கிறது. 

ஒழுங்கு வடிவமைக்கப்பட்ட நிலத்தோடு இயைந்த மனித வாழ்வின் கூறாக இருந்தது வேளாண்மை மட்டுமல்ல; மனித சமூகப் பண்பாடும்தான். இந்நிலையில், பண்பட்டு வந்திருக்கும் மனித சமூகம், தமது பண்பாட்டறிவைத் தொடர்ந்து புழங்குவதாலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பகிர்ந்தளிப்பதாலும் சமூக மதிப்பளிக்கப்பட்டுப் பேணப்படுகின்றன. அதாவது, மனித இன உயிரியல் பண்பறிவும், மனித சமூகப் பண்பாட்டறிவும் காலம், தலைமுறை கடந்தும் தொடர்ந்து வருவது அல்லது தொடரச் செய்யும் நோக்கில் பின்பற்றப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான மரபார்ந்த நியதிகள் ‘மரபு’களாய் முகம் கொள்கின்றன. 

ஒழுங்கமைந்த இசை வடிவத்தைப் ‘பண்’ எனும் சொல்லால் சுட்டுவது வழக்கம். பண்பட்டிருக்கும் அல்லது பண்படுத்தும் இசைமைத் தன்மையின் வடிவம்தான் பண் என்பதாகும். இந்தப் பொருண்மையில் நோக்கும்போது, மனித வாழ்வியலின் ஒழுங்கமைந்த நியதிகள் பண்பாட்டு இசைமைத் தன்மையும் அறிவும் ஒருங்கே கொண்டிருப்பதாகும்.

மரபார்ந்த உயிரியல் பண்புகளும், மரபார்ந்த சமூகப் பண்புகளும் பண்பாட்டு மரபுகளாய்ச் சமூகத்தில் தம் இருப்பைக் காட்டியிருக்கின்றன; காட்டிக்கொண்டிருக்கின்றன. அதாவது, மரபு என்பது பண்பட்ட சமூகம் தொடர்ந்து புழக்கத்தில் பயன்படுத்தி வரும் அறிவாகும். இத்தகையப் பண்பாட்டறிவு மனித சமூகத்தோடு தொடர்புடையதாகும். 

மனிதர்கள் கண்டுபிடித்ததில் ஆகச் சிறந்தது மொழிதான். மொழிதான் மனிதரின் சமூக வாழ்வுக்கு முதலில் தேவைப்பட்டது. சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு அணுகும்போது மொழி என்பது மனித வாழ்வியலில் முதன்மையான கருவியாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தகைய மொழியின் மூலமாகவே மனித வாழ்வியலின் பொருண்மைகள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தொல்காப்பியம். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது, ஒவ்வொரு பண்பாட்டு அசைவுக்குப் பின்பும் ஒரு பொருண்மை இருக்கிறது என்பதையும் அறிய முடியும். 

இந்தப் பண்பாட்டுப் பொருண்மைகள் மரபார்ந்து நின்று மரபாய் நிலைத்திருக்கின்றன. கால மாற்றத்தில் மரபுகள் பல மறைந்திருக்கின்றன. வாழ்வு மாற்றத்திற்கு ஏற்ப மரபுகளும் மாற்று மரபாய் மாறியிருக்கின்றன. மனித வாழ்வின் இருப்பையும் அடையாளத்தையும் தற்காத்துக்கொள்ளும்போதும், ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும்போதும் உருவாக்கப்படும் எதிர்நிலை அல்லது எதிர்ப்பு நிலை வடிவங்களைப் போல, பண்பாட்டு வடிவங்களும் எதிர் மரபுகளாய் உருவாகி நின்றிருக்கின்றன. மனித சமூக வாழ்வு பன்முகம் கொண்டது. அவ்வகையில், பண்பாடு என்பதும் பன்முகத்தைக் கொண்டிருப்பதாகும். மனித சமூக வாழ்வின் அனைத்துப் புலப்பாடுகளிலும் பண்பாட்டுத் தன்மை உள்ளடங்கி இருக்கிறது. 

தமிழ்ச் சமூகமானது தமது மொழி, கலை, இலக்கியம், இலக்கணம், வழக்காறுகள், பொருட்கள் போன்ற யாவற்றிலும் பண்பாட்டுத் தன்மையை வெளிப்படுத்தி வந்திருப்பதை அறிய முடியும். இந்நிலையில், தமிழ்ச் சமூகத்தின் புலப்பாடுகளுக்குப் பண்பாட்டு நோக்கிலான எடுத்துரைப்புகளைத் தமது எழுத்துகளின் மூலமாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருப்பவர் மகாராசன் ஆவார். 

மகாராசன் அவர்களது எழுத்துகளின் மையமே நிலம்தான். நிலம்தான் எல்லாவற்றுக்குமான உறவுப் பாலாமாகத் திகழ்கிறது. நிலமும், நிலம் சார்ந்த மனித வாழ்வும், மொழியும், கலையும், இலக்கியமும், பண்பாடும்தான் அவரது எழுத்துகளில் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வுரையாடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றின் பண்பாட்டு அசைவியக்கங்கள் மீதான புதிய பொருண்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ்ப் பண்பாட்டியலின் மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் புரிந்துகொள்வதற்குத் துணை நிற்கின்றன. அவ்வரிசையில், மகாராசனின் மற்றுமொரு நூல்தான் ‘தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு’ எனும் இந்நூலாகும்.

இந்த நூலிலுள்ள இருபத்தியொரு கட்டுரைகள் மொழி, வேளாண்மை,  இலக்கியம், கலைகள், கல்வி, மருத்துவம், வழிபாடுகள், வழக்காறுகள், அரசியல் போக்குகள், மனித ஆளுமைகள், நூல்கள், பெயர் அடையாளங்கள் மற்றும் இதழ் சார்ந்து வெவ்வேறு பொருண்மைகளில் எழுதப்பட்டுள்ளன. எனினும், எல்லாக் கட்டுரைகளும் தமிழ்ப் பண்பாட்டியலின் வெவ்வேறு பொருண்மை முகங்களை அடையாளப்படுத்துவதில் ஒன்றிணைகின்றன. தமிழ்ப் பண்பாட்டியல் பொருண்மைகளில் காணப்படுகிற மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் எல்லாக் கட்டுரைகளும் அதனதன் தளத்தில் எடுத்துரைக்கின்றன. 

தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாற்றுக்கான தரவுகளை இந்நூல் வழியாகத் தந்திருப்பதோடு, தமிழ்ப் பண்பாட்டியல் சார்ந்த புதிய கண்ணோட்டங்களையும் பொருள்கோடல்களையும் முன்வைத்திருக்கும் ஆய்வாளர் மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தோழமையுடன்
கு. தமிழ் வேந்தன்,
கவிஞர் மற்றும் ஆய்வாளர்.


*

தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு (கட்டுரைகள்),
மகாராசன்,
பக்கங்கள் 192,
முதல் பதிப்பு, திசம்பர் 2025,
விலை: உரூ 200/-
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.



ஏர் இதழ் நோக்கமும் இலக்கும்: முன்னத்தி ஏர் - தலையங்கம் - மகாராசன்




அறமும் மறமும் நிறைவாகக் கொண்டிருந்த தமிழ்ப் பேரினத்தின் வாழ்வுப் பாடுகளும், வரலாற்றுத் தடங்களும், பண்பாட்டு நடத்தைகளும்,  இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட மொழிவழிப் புலப்பாடுகளும், இசை, கூத்து உள்ளிட்ட நிகழ்த்துக் கலை வடிவங்களும், ஓவியம், சிலை, கட்டடம் உள்ளிட்ட நுண்கலை வடிவங்களும், இன்னபிற ஆக்கங்கள் பலவும் தொன்மையும் அழகியலும் பட்டறிவும் சார்ந்த உயிர்ப்பைக் கொண்டிருந்தவை. இத்தகைய மரபுத் தொடர்ச்சியைத்தான் அறிவுச் செயல்பாடாகக் கருதி, பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கிறது தமிழ் இனம். 

தமிழ் நிலத்தின் சூழலியல் அமைவுகள் பன்முகம் கொண்டிருப்பதைப் போலவே, பல்வேறு நிலச் சூழல்களில் வாழ்ந்த தமிழ் இனத்தின் வாழ்வியல் கோலங்கள், உற்பத்தித் தொழிற்பாடுகள், பட்டறிவுப் புலப்பாடுகள், பண்பாட்டு வழக்காறுகள் யாவும் பன்மைத் தன்மை கொண்டிருக்கக் கூடியவை. திணை நிலங்கள் வேறுவேறாக இருந்தாலும், வாழ்க்கைப்பாடுகளும் தொழிற்பாடுகளும் பண்பாட்டு வழக்காறுகளும் வேறு வேறாக இருந்தாலும், வேறு வேறு தொழிற் குலங்களாக - தொழிற்குடிகளாக இருந்தாலும், எல்லோரையும் - எல்லாவற்றையும் இணைத்த - இணைக்கும் ஆறாவது புலனாக இருந்ததும் இருப்பதும் மொழிதான்; அது தமிழ்தான். 

அதனால்தான், தமிழ் இனத்தின் அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவ அழகியலும் அறமும் அரசியலும் கொண்டதாய் வடிவமைந்து வந்திருக்கின்றன. அதாவது, பன்மைத்துவ அறிவு மரபுதான் தமிழினத்தின் தனித்துவ மரபாகக் காலந்தோறும் நீட்சி அடைந்து வந்திருக்கிறது. அத்தகையத் தனித்துவ மரபுதான் பன்முகத் திணை மரபாகத் தமிழில் முகம் காட்டியிருக்கிறது. அவ்வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் பன்முக அறிவு மரபின் பன்முகக் குறியீடுகளாகும். 

பல்வேறு திணை நிலங்களுக்குள்ளும், திணைசார்ந்த தொழில் குலங்களுக்குள்ளும் அறிவுச் செயல்பாட்டுப் பகிர்வுகள், உரையாடல்கள், அரங்கேற்றங்கள், வெளியீடுகள், ஆவணப்படுத்தல்கள், நிகழ்த்தல்கள், ஆக்கங்கள் போன்றவை காலந்தோறும் நடந்திருக்கின்றன. இத்தகையப் பகிர்தலும் ஆவணப்படுத்தலும்தான் தமிழ் மரபைச் செழுமைப்படுத்தியிருக்கின்றன.

இலக்கியங்கள், இலக்கணங்கள், கலை வடிவங்கள், புழங்கு பொருட்கள், வாய்மொழி வழக்காறுகள், பண்பாட்டு நடத்தைகள் போன்றவற்றின் மூலமாக வெளிப்பட்டிருந்த அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவங்களை அடையாளப்படுத்தியிருப்பதோடு, பன்மைத்துவ உரையாடல் வெளிகளையும் அதற்கான வாய்ப்புகளையும் உள்ளீடாகக் கொண்டிருந்தன. அதேவேளையில், பன்முக உரையாடல்களாக இருப்பினும் - பன்முகக் குரல்களாய் வெளிப்பட்டிருந்தாலும், தமிழ் எனும் அடையாள வேர்களில் இருந்தே எழும்பியிருக்கின்றன; தமிழ் என்னும் பேரடையாளத்தையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றன. அவ்வகையில், பன்மைத்துவ மரபுகளின் கூட்டிணைவாகத் தமிழ் மரபின் தனித்துவம் உயிர்ப்படைந்து வந்திருக்கிறது. அதுதான், தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபாய்ப் பரிணமித்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தின் தனித்துவ வேர்களும், தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் மரபுத் தொடர்ச்சியும் கால மாற்றத்திற்கு ஏற்பப் புதுமையும் நீட்சியும் பெற்றிருந்த நெடிய வரலாற்றையும் இருப்பையும் தக்க வைத்திருந்தன. இத்தகையத் தமிழ் அடையாள வேர்களின் - தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் தனித்துவ மரபானது, மானுடம் முழுமைக்குமான - மானுடம் வாழும் நிலப்பரப்பு முழுமைக்குமான - உலக உயிரினங்கள் முழுமைக்குமான வாழ்வறத்தையே பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருந்தது. தமிழின் இத்தகையத் தனித்துவ மரபின் வேர்களும் விதைகளும் பல்கிப் பெருகி வளர்ந்திருக்க வேண்டியவை; இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவை. ஆனால், அப்படியான சூழல் தமிழ் நிலத்திற்குள் நெடுங்காலமாய் வாய்த்திருக்கவில்லை.

அயலகத்தாரின் படையெடுப்புகளாலும், ஆட்சி அதிகாரப் பறிப்புகளாலும், நிலப் பறிமுதல்களாலும், அயலினக் குடியேற்றங்களாலும், அயலகப் பண்பாட்டுத் திணிப்புகளாலும் தமிழ் இனமும் நிலமும் வளமும், ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகளும், மொழி உள்ளிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு அடையாள மரபுகள் யாவும் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிட்டிருக்கின்றன. ஆயினும், தமிழ் அடையாள வேர்கள் தமது தனித்துவத்தை இழந்து விடாமல் ஓர் எதிர் மரபைத் தம்மகத்தே வைத்துக்கொண்டு செயலாற்றிக் கொண்டேதான் வந்திருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் இத்தகைய எதிர் மரபு, பன்னெடுங்காலமாய் நீடித்து வந்திருக்கின்றது. தமிழ் அடையாளங்களைச் சிதைப்பதிலும், திரிப்பதிலும், தன்வயப்படுத்துவதிலும், அழிப்பதிலும், மறைப்பதிலும், மறப்பதிலும் பல்வேறு அயலக மரபுகள் மற்றும் அதிகார அமைப்புகள் தீவிரமாய்ச் செயல்பட்டிருப்பது, நிகழ்காலம் வரையிலும் நீண்டிருக்கிறது. ஆயினும், தமிழ் அடையாள வேர்களின் தனித்துவத்தைப் பேணும் எதிர் மரபுச் செயல்பாடுகள், எல்லாக் காலத்திலும் மட்டுமல்லாது நிகழ்காலம் வரையிலும் உடனிருந்தே வந்து கொண்டிருக்கிறது. கூடவே, கால மாற்றங்களுக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் ஏற்ப மாற்று மரபுகளை உருவாக்கிக்கொண்டும், நிகழ்காலப் புதுமைகளை ஏற்றுக்கொண்டும் செழுமைப்பட்டு வந்திருக்கிறது தமிழ் அடையாளம். அவ்வகையில், மரபும், எதிர் மரபும், மாற்று மரபும், புது மரபும் உள்ளடக்கிய செயல்பாட்டு மரபுதான் தமிழ் அடையாளத்தின் அறிவுச் செயல்பாட்டு மரபாகும்.

இத்தகையத் தமிழ் அடையாள அறிவுச் செயல்பாட்டு மரபை உள்ளார்ந்த உயிர்ப்போடும் உண்மையான வேட்கையோடும் உயரிய நோக்கத்தோடும் புலப்படுத்தும் அறிவுச் செயல்பாடுகளுள் இதழ்வழி உரையாடல்களை முன்னெடுப்பதும் ஒன்றாகும். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏர் இதழும் அத்தகைய முன்னெடுப்பைத் தொடங்கி, சிறிது காலம் ஆக்கப்பூர்வமாக வெளிவந்திருந்தது. ஆனாலும், பல்வேறு அக மற்றும் புறக்காரணிகளால் தொடர்ச்சியாக ஏர் இதழைக் கொண்டுவர முடியாமல் போயிற்று.

நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் போக்குகள் நவீனத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நவீன வகைப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வசதிகள், மெய்நிகர் சமூக ஊடகங்களின் பெருக்கங்கள் போன்றவை சமூக உரையாடல் வெளிகளைப் பரவலாக்கிக் கொண்டிருந்தாலும், சிற்றிதழ்கள் எனும் மாற்று இதழ்கள் முன்னெடுத்திருந்த உரையாடல் மரபும், அச்சு இதழ் வடிவத்திலான செயல்பாட்டு மரபும் நிகழ்காலத்திற்கும் உரிய தேவையாக இருந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் குரலை, இருப்பை, வாழ்வை, தொன்மையை, நிலத்தை, வளத்தை, வரலாற்றை, அரசியலை, அதிகாரத்தை, வாதத்தை, உரிமையை, அறிவு மரபை, இன்னும் இது போன்ற பிறவற்றைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் இதழ்கள் வழியான தேவைகள் நிறைய இருக்கின்றன. கலை, இலக்கியம் மட்டுமல்லாமல், சமூகத்தின் மீதான வாசிப்பும் விவாதமுமான கருத்தாடல் பகிர்வுகள் மாற்று இதழ்களின் வழியாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, சமூகப் பொது நீரோட்டத்தில் மாற்று உரையாடல்களையும் விரிவான மதிப்பாய்வுகளையும் முன்வைக்க வேண்டிய தேவை இன்னும் இருக்கவேதான் செய்கிறது. ஆயினும், இதழ்கள் வழியிலான அத்தகைய முன்னெடுப்புகள் குறைவாக உள்ள நிகழ்காலச் சூழலில், குறிப்பாக, அச்சு இதழ்கள் வழியிலான முயற்சிகள் மிகமிகக் குறைவாக இருக்கும் சூழலில், ஓர் இதழ் வழியாகச் சமூக உரையாடல்களையும் ஆய்வுகளையும் படைப்பாக்கங்களையும் முன்னெடுக்கும்  வகையில்தான் ஏர் இதழ் மீளவும் வெளிவருகிறது. 

நவீனகாலப் பயணத்தில்  வாசிப்பதற்கும் காண்பதற்கும் மின்னிதழ்கள், மெய்நிகர் மற்றும் சமூக ஊடக வடிவங்கள் முன்வந்துவிட்ட போதிலும், அச்சு இதழுக்கான தேவைகள் இன்னும் குறைந்துவிடவில்லை. அதனாலேயே, அச்சு இதழ் வடிவத்திலேயே பன்முக உரையாடல் முன்னெடுப்புகளை உள்ளடக்கமாகக்கொண்டு புதுப் பொலிவுடன் அரையாண்டு இதழாக  வெளிவருகிறது ஏர் இதழ். 

தமிழ் அடையாளத்  தடத்திலிருந்து ஏர் இதழ் சற்றும் விலகியதில்லை. தீவிர இலக்கிய மரபை மட்டுமே பேசும் இதழாக என்றுமே  முகம் காட்டியதுமில்லை.   தமிழ் நிலத்தின் - தமிழ் இனத்தின் பண்பாட்டு அரசியலைத்தான் உள்ளீடாகக்கொண்டு வெளிவந்திருந்தது. பல்லாண்டுகள் கழித்து மீளவும் புதியதாய் வெளிவரும் ஏர் இதழானது, தொடர்ந்து அந்தத் தடத்திலேயும் களத்திலேயும்தான் எழுத்துழவை மேற்கொண்டு வெளிவருகிறது.  

அகமாகவும் புறமாகவும் தமிழ்ச் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சாதிய மேலாதிக்கமும் ஆரிய மதவாத மேலாதிக்கமும் மட்டுப்படாமல் மேலெழுந்து கொண்டிருப்பதோடு, அலை அலையாகப் பரவி மிகப்பெரும் சமூகத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஆரிய மதவாத மேலாதிக்க அரசியல் போக்கைத் தமிழகத்தில் நிலைநிறுத்தவும், அதற்குத் துணை நிற்கும் சாதிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்கவுமான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதேவேளையில், ஒடுக்குண்ட உழைக்கும் சமூகங்கள் சாதிய வன்மத்திற்குப் பலியாகி உருக்குலைந்து கிடக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் சமூக நிறுவனக் கொலைகளும், கூலிப்படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், சாதி ஆணவப் படுகொலைகளுமாய்த் தலைவிரித்தாடுகின்றன. மேலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வரை மாணவத் தலைமுறைகளிடம் நுழைந்திருக்கும் குடி மற்றும் போதைக் கலாச்சார நடத்தைகள், அவர்களைச் சமூக உதிரிகளாய் மாற்றிக் கொண்டிருக்கின்றன.  

இவை ஒருபுறம் இருக்க, தமிழ் நிலத்தின் அடையாள அழிப்பு திட்டமிட்டு நிறைவேற்றப்படுவதையும் கவலையோடு முன்வைக்க வேண்டியிருக்கிறது. வட இந்தியப் பகுதியிலிருந்து பெருவாரியான மக்கள் உதிரித் தொழிலாளர்களாகப் பல இலட்சக்கணக்கில் தமிழ்நாட்டிற்குள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருப்பதைப் போன்ற உள்நுழைவு அனுமதிச் சீட்டு ஏதுமின்றி தமிழ்நாட்டிற்குள் பெருவாரியாக உள்நுழைந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பெரு மற்றும் சிறு நகரங்கள் வட இந்தியத் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் நகரங்களாக  மாறிக்கொண்டிருக்கின்றன. பிழைப்புரிமை மற்றும் வாழ்வுரிமையோடு வாக்குரிமை நோக்கியும் அவர்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையப் போக்குகள் தொடருமானால், இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ் நிலப்பரப்பின் ஆட்சி அதிகாரத்தைத் தன்வயமாக்கும் பேராபத்து நிகழத் தொடங்கும்.  தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலம் மற்றும் பண்பாட்டுப் பரப்புகளை இந்தியமயமாக்கும் வெளிப்பாடுதான் இத்தகைய வடவர் குடியேற்றங்களாகும்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நிலவிய - நிலவுகிற ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகள் யாவும் தமிழ் நிலத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், தமிழ் இனத்தின் உரிமைகள் பறிபோதல், தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படுதல், தமிழரின் தொன்மை அடையாளங்கள் மறைக்கப்படுதல் குறித்தெல்லாம் அக்கறைப்பட்டதாக - அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.  மாறாக, தமிழ் நிலத்தின் மீதும் இனத்தின் மீதும், பண்பாட்டு அடையாளங்கள் மீதும் திணிக்கப்பட்ட ஆரியமயமாக்கலைப் போல - இந்தியமயமாக்கலைப் போல,  திராவிடமயமாக்கமும் இங்கு தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில்தான், மாற்றத்திற்கான எழுத்துழவு எனும் நோக்கக் குரலை உள்ளீடாகக்கொண்டு, தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக ஏர் இதழ் வெளிவருகிறது. குறிப்பாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் வெளிவருகிறது ஏர் இதழ். நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடலை - எழுத்துழவை இந்த இதழ் வழியாக முன்வைத்திருக்கிறது ஏர். 

ஏர் இதழை மீண்டும் அச்சு வடிவில் கொண்டுவருவதற்கான அறிவிப்பையும் வேண்டுகோளையும் மனதார வரவேற்றனர் தமிழ்ச் சமூக உறவுகள். அவ்வகையில், பல தரப்பினரின் பங்களிப்போடுதான் ஏர் இதழ் உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழ் நெடுங்கணக்கு எனும் எழுத்தியல் மரபில் அகரம் எனும் எழுத்தே முதல் எழுத்தாகும். னகரம் எனும் எழுத்தே இறுதி எழுத்தாகும். இதனை, ‘எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய்’ என்கிறது தொல்காப்பியம். தமிழ் மறையாம் திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் எனும் சொற்பதம் இடம்பெற்றிருக்கவில்லை. ஆயினும், திருக்குறள் தமிழ் மரபின் பின்புலத்திலிருந்து உருவான நூல் என்பதை உள்ளார்ந்து முன்வைத்திருக்கிறார் வள்ளுவர்.  

திருக்குறளின் முதற் குறள் அகரத்தில்தான் தொடங்குகிறது. இறுதிக்குறள் னகரத்தில்தான் முடிகிறது. அவ்வகையில், அகர முதலாய் னகர இறுவாய் என்பதே தமிழ் மரபின் உள்ளீடு ஆகும். தமிழ் மரபின் உள்ளீட்டின் வாயிலாகப் புலப்படும் எழுத்து மரபை - அறிவு மரபை - உரையாடல் மரபை - படைப்பாக்க மரபை இதழ் வழியாகப் புலப்படுத்த முனைந்திருக்கும் ஏர் இதழ், அகரத்தையும் னகரத்தையும் உள்ளீடாகக் கொண்ட ஓவியத்தை முகப்பாகக் கொண்டு வெளிவருவதில் பெருமை கொள்கிறது. 

படைப்புகளை வழங்கியும், ஒப்புதல் கொடுத்தும், உதவிகள் செய்தும் ஏர் இதழ் வெளிவருவதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள். தமிழ் மரபின் தனித்துவ இதழாய் வெளிவந்திருக்கும் ஏர் இதழுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்தான் கைம்மாறு ஆகும். 

தமிழ் உறவுகளின் வரவேற்பும் வழிகாட்டலும் பங்கேற்பும்தான் ஏர் இதழை இன்னும் வளப்படுத்தும் என நம்புகிறேன்.  

தோழமையுடன்                                                                                      

மகாராசன்

 

**

ஏர் இதழ்.

மாற்றத்திற்கான எழுத்துழவாக..

அரையாண்டு இதழாக இப்போது வெளிவருகிறது..

தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் தற்போது முதல் பருவத்தின் இதழாக (சூலை- திசம்பர் 2025) வெளிவருகிறது ஏர் இதழ். 

நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.

இதழ் உள்ளடக்கம்:

முன்னத்தி ஏர்.

- மகாராசன்

வாழ்த்துச் சொற்கள்.

- பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.


படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்: சோ.தர்மன் நேர்காணல்.

- பா.ச.அரிபாபு.


தமிழகப் பள்ளிக்கூடங்கள்: அதிகாரம் - கண்டிப்பு - தண்டனை.

- பூவிதழ் உமேஷ்.


தமிழ் ஓலைச்சுவடிகள்: திட்டமிட்ட அழிப்பு எதற்காக?

- நாக.இளங்கோவன்.


கள்: தடை நீக்குவதற்கான போராட்டங்களும் அதன் மீதான விமர்சனங்களும்.

- லிங்கம் தேவா.


‌தமிழரின் பூர்வீகப் பகுதிகளைத் தன்னாட்சி (யூனியன்) பிரதேசமாக

மாற்ற வேண்டும்.

- ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.


கல்வியில் போதாமைகள்: பெற்றோர்கள்-குழந்தைகள்- பள்ளிகள்-ஆசிரியர்கள்.

- சு.உமா மகேஸ்வரி.


பஞ்சமி நிலம்: 

ஒரு வரலாற்றுப் பார்வை.

- குணா


வெள்ளாமை - சிறுகதை

- மு.மகேந்திர பாபு.


மரபுவழி உற்பத்தியும் மேய்ச்சல் தொழிலும்.

- கதிர்நம்பி.


ஈழ நிலமும் தாய்மன நினைவுகளும்.

- மகாராசன்.


சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாகக் குரல் உயர்த்துவோம்.

- அருண் முத்துநாயகம்.


நாவிதர் சமூக வாழ்வும் ஆற்றுநீர்ப் போக்கும்.

- மு.அம்சம்.


கங்கும் நெருப்பும்: வழக்காறுகளும் பதிவுகளும்.

- மா.ச.இளங்கோமணி.


கிடை இதழ் - அறிமுகம்.

- வெற்றிச்செல்வன்.


கண்ணாமூச்சி - சிறுகதை

- தங்கேஸ்.


அபூர்வமான நிலவியலும் அதிசயமான மானுடரும்.

- சா.தேவதாஸ்.


செம்பச்சை நூலகம் - அறிமுகம்.

- மகாராசன் - அம்சம்.


சில்லறைக் காசுகள் - சிறுகதை.

- அய்யனார் ஈடாடி.


குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு.

- மு.களஞ்சியம்.


‌‌ஓ மேற்குக் காற்றே உனக்கொரு பாடல் - ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு.

- தங்கேஸ்.


‌எங்கள் ஊர்த் தோட்டங்களில் வேலிகள் இருந்தன: சூழலியல் பண்பாடும் வாழ்வியல் பின்புலமும்.

- சு.வேணுகோபால்.


தமிழ்த் திரைப்படங்களில் நிலக் காட்சிகள்.

- ச.தயாளன்.


‌ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே.

- அமரந்த்தா.


குமார் அம்பாயிரம்: திணை நிலத்தின் மேய்ச்சல்காரன்.

- யவனிகா ஸ்ரீராம்.


கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்.

- ந.இரத்தினக்குமார்.


பண்பாடுகளை மறுவாசிப்புச் செய்யும் பெண் தொன்மங்கள்.

- இரா.வெங்கடேசன்.


தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதியின் எதிர்காலவியல்.

- தமிழ்ப்பரிதி மாரி.


வர்மப் பொன்னூசி: சித்த மருத்துவத் தொன்மையும் மடைமாற்றமும்.

- அருள் அமுதன்.


பழங்குடிகளின் நாளை மற்றுமொரு நாளே!

- டி.தருமராஜ்.


தஞ்சைப் பெரியகோவில்: நுட்பமும் மொழியும்.

- மா.மாரிராஜன்.


திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் - நூல் பரிந்துரை.

- சீமான்.

‌கவிதைகள்:

சி.மோகன் | தீபச்செல்வன் |  வெய்யில் | கூடல்தாரிக் | பித்தன் கனவன் | செ.தமிழ்நேயன் ‌| கோமதி | இளையவன் சிவா | அரங்க மல்லிகா | மகாராசன் | சாத்தன் குன்றன் | நெகிழன் | இராசரத்தினம் கேசுதன்.


முதன்மை ஆசிரியர்:
மகாராசன்.

ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு, 
தமிழப்பரிதி மாரி, 
அய்யனார் ஈடாடி, 
மு.மகேந்திர பாபு, 
அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன்.

பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை.

வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இயல்.
இதழ் அளவு 18X24 செ.மீ
(டபுள் கிரவுன்),
பக்கங்கள் 224,
விலை உரூ 300/-
இதழ் பெற :
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506