திங்கள், 29 ஜூலை, 2024

சொற்கள் பேசும் அரசியலும் அழகியலும் - கவிஞர் கோ.கலியமூர்த்தி


ஏர் மகாராசன் அற்புதமான ஆய்வாளர். ஆக்கபூர்வமான சமூக இலக்கியப் பண்பாட்டுச் செயல்பாட்டாளர். அவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’.

நிலம், நிலம் கைவிட்டுப்போதலின் வலி, நிலம் வளமிழந்த கதை எனப் பாடுபொருட்கள் விரியும் வலிமிகுந்த உலகம் மகாராசனின் கவிதை உலகம்.

இது கற்பனை உலகம் அல்ல. கண்ணீரின் அமிலத்தில் ஊறும் எதார்த்த உலகம். கதறலாகக் கண்ணீராக ஒப்பாரியாகப் பெருகி வழியும் சொற்கள் பேசும் அரசியல் அழகியலும் செழிக்கிற களமாகியிருக்கிறது.
     “துளைகள் ஏதுமின்றி
     வேர்கள் இசைத்ததில்
     கிளைகள் தலையாட்டி
     பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
     காட்டுச்செடிகள்”
என அபூர்வமான அழகியல் மிளிர்கிறது தொகுப்பில்.
   “வெளிறிய வானத்தில்
    திசைகள் தேடிய பறவைகள்
    கூடுதிரும்பிய நாட்களில்
    மனிதர்கள் யாருமேயில்லை”
என்றெழுதுகிறார் மகாராசன்.

ஏன் மனிதர்கள் யாருமில்லை? எங்கே போனார்கள் அவர்கள்? என்ன நேர்ந்தது அவர்களுக்கு? ஏன்? எப்படி? கேட்டுக்கொண்டே பின்தொடரும் போது ஒரு வலிமிகுந்த வரலாறு விரியும்.

இப்படிக் காட்சிகள் ஊடே நம்மை வேறுவேறு தளங்களுக்கு அழைத்துப்போகும் மகாராசனின் தொகுப்பை யாப்பு வெளியீடு கொண்டுவந்திருக்கிறது.

வாழ்த்துகள் மகாராசன் ...

கட்டுரையாளர்:
கவிஞர் கோ.கலியமூர்த்தி
திருச்சி.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



ஞாயிறு, 28 ஜூலை, 2024

மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்களில் வேர்களின் இசை ஒலிக்கிறது - கண்ணன் விசுவகாந்தி

நடிகர் ஓவியர் பொன்வண்ணன் அவர்களின் சிறப்பான முன்னட்டை ஓவியம். கந்தையா ரமணிதரனின் அழகான பின்னட்டை ஒளிப்படம். தொகுப்பெங்கும் பித்தனின் சிறப்பான கோட்டோவியங்கள். தளுகையிலும் கவிதை. மகாராசனின் பிற நூல்கள் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.

அழகான தலைப்புகளுடன், கவிஞர் யுகபாரதியின் சிறப்பான அணிந்துரை (ஒளிரும் ஒத்தடச் சொற்கள்) மற்றும் முனைவர் அரங்க மல்லிகா (மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலம்) அவர்களின் விரிவான மதிப்புரை. நன்றியில் மகன் (அகரன் தமிழீழன்), மகள் (அங்கவை யாழிசை) ஆகியோரின் அற்புதமான தமிழ்ப் பெயர்கள்.

பெரும்பாலான கவிதைகள் நிலம் பற்றிய கவிதைகள், ஈழத்து நிலம் உட்பட.

படிம அழகு :

நீர்மையாய் வழிந்தோடும் 
சொற்களால் நனைந்து நனைந்து 
பசப்படித்தது நிலம், வழிந்தோடும் சொற்கள், பசப்படிக்கும் நிலம். அருமையான கற்பனை.

நஞ்சையும் புஞ்சையும் கைவிட்டுப் போய், உழவர்கள் ஊர் விட்டுப் போன ஊரின் சிதிலமடைந்த கோவிலைப் பற்றிய கவிதை இப்படி முடிகிறது:

‘எழுதப்படாமலே போனது
எனதூர்த் தலபுராணம்’

நிலமற்றுப் போவது, எவ்வளவு வேதனை.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று, அழகான கற்பனையில்:

‘துளைகள் ஏதுமின்றி 
வேர்கள் இசைத்ததில் 
கிளைகள் தலையாட்டி 
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன 
காட்டுச் செடிகள்.
மண்மீட்டிய வேர்களின் இசை
காடெல்லாம் மணத்துப் பரவியது.

மண்மீட்டிய இசை, காடெல்லாம் மணக்கிறது – எவ்வளவு அழகு.

மற்றுமொரு சிறந்த கற்பனை, கவிதையும் எழுதும் தாள்களும் பற்றிய ஒன்று:

‘மைத் தூவலின் 
அழுகைத் தேய்ப்பில்
கசிந்து வழிந்த சொற்கள்’.

‘குவிந்து கிடக்கும் 
ஒத்தடச் சொற்களால் 
தணிந்து போகின்றன வலிகள்’.

மீன்களைப் பற்றிய கவிதை, மீன்களை மட்டுமா பேசுகிறது? நிலத்தையும் மனிதர்களையும் அல்லவா பேசுகிறது.

பாலச்சந்திரன் பற்றிய கவிதை இப்படி வேதனையுடன் முடிகிறது:

‘பசித்த கண்கள் 
பழி தீர்க்காமலே மூடிக்கொண்டன’.

கைவிடப் பட்ட நிலம் தொகுப்பெங்கும் வருகிறது:

‘நாதியற்றுக் கிடந்தாள் 
நிலத்தாள் மட்டும்’.

மலைவாசத் தலங்களெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட, கோபத்தில் எரிக்கிறாள் வனத்தாய்:

‘காலில் விழுந்து மன்றாட 
பிஞ்சுகளின் ஆத்மாக்களைத் தேடி
பித்துப்பிடித்து அலைகிறாள் 
வனத்தாய்ச்சி’.

நாமெல்லாம் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய ஒன்று.

நிலம் பற்றிய மற்றும் ஒரு அழகான படிமம்:

‘உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் 
நிலமெனும் ஆத்மாக்களின் 
அழுகைத் துளிகள்’.

காதலின் நினைவுகளிலும் நிலம் சார்ந்த படிமங்கள்:

‘மிச்சமிருந்த கனவின் எச்சங்கள் 
நாயுருவி முள்ளாய் ஒட்டிக்கொண்டன’.

தாய்மடிகள் இரண்டு இருந்த இனம் ஒன்று அழிந்த கதையொன்று நெடுங்கவிதையாய் விரிகிறது.

சம்சாரிகளின் வலியைச் சொல்லும் கவிதை:

‘சம்சாரிகளாய்ப் பிறந்ததின் வலி
சாவிலும் கொடிது’.

மழையாலும், மழையின்றியும் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், நிலத்தை விட்டுப் பிரிய முடியாத சம்சாரித் தலைமுறையின் கதறல்:

‘ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு 
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை
அறுத்தெறிய மனசில்லையே மக்கா;
அறுத்தெறியவும் முடியலையே மக்கா’.

ஆறுகளை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் கவிஞர்:

நீர்ச் சேலைத் துணிகள்,
உமிழ்நீர்ச் சுரப்பிகள்,
நீர்முலைத் தாய்ச்சிகள்.

குடுகுடுப்பைக்காரனும் குடியானச்சியும் கவிதை ஒரு காவியம்.

கண்ணீர் கசிய, இறகுகளை உதிர்க்கும் மனப்பறவையை, மென்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் ஊழிப்பெருங்காலம் என்கிறார் ஒரு கவிதையில்.

கரிக்கும் எரிநெய்க்கும், நிலத்தை பாழ்படுத்தும் நவீன முறையை சாபமிடும் கவிஞன்:

‘வயலைப் பாழ்படுத்தி 
பயிர்களைச் சாகடித்துதான் 
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில் 
எல்லாம் எரிந்து சாம்பலாகி நாசமாய்ப் போகட்டும்’.

கைக்கிளை, பெருந்திணையின் தவிப்பு இக்கவிதை:

‘வெறுமை மண்டியிருக்கும் 
வாழ்நிலத்தில் 
கூந்தல் சூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்.
பறவையின் வரவுக்காய் 
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன 
பெருந்திணைக் கனிகள்.

நீர், நிலம், கடல் எல்லாவற்றையும் தாயாய்ப் பார்க்கிறது கவி மனம்: நீர்த்தாய்ச்சி, நிலத்தாய்ச்சி, கடல் தாய்ச்சி.

விதைகள் முளைத்ததும் நிலத்தின் மகிழ்ச்சியை இவ்வாறு பாடுகிறார் கவிஞர்:

‘வாழ்தலின் பேரின்பத்தை 
மணக்க மணக்கப் பாடியது
பூப்பெய்திய காடு’

தாயின் ஞாபகம் ஊரின் ஞாபகத்தை இழுத்து வர, இன்று யாருமே இல்லாத சோகம்:

‘நினைக்கவும் நீயில்லை;
தலை தட்டவும் ஆத்தாளுமில்லை.
நம் கால்கள் பதிய நடந்த ஊருமில்லை’.

அழகான கற்பனையில் மற்றும் ஒரு கவிதை:

‘ஆறுகளின் ஈர நாவுத் தழுவலில் 
கருக்கொண்டன வயல்கள்’.

காதல் கவிதைகளும் நிலத்தின் மண்மணத்தோடு:

‘நீயற்ற வெறுமையை
நத்தைக் கூடாய்ச் சுமந்து திரிகின்றது
எனது வெறும்பாடல்’.
….
‘கக்கத்தில் சுமந்திருக்கும் 
நிறைகுடத்து நீருக்குள் 
முழுதாய் மூழ்கிடத் தவித்தது 
மந்தையின் ஓரத்தில் கிடந்த 
இளவட்டக்கல்’.

‘வாடாமலும் கசங்காமலும் 
நம்மிருவருக்கு மட்டுமே 
மணத்துக் காட்டுகிறது 
மறைகாலத்தின் களவுப் பூ’.

‘முழுநிலவு வெளிச்சத்தின் 
யாமத்துப் பொழுதுகளில் 
முளைத்த நினைவுகள் 
பாதைகள் முழுக்க 
பூத்திருக்கின்றன’. நிலத்தில் முளைத்த இந்த சொற்களில் வேர்களின் இசை ஒலிக்கிறது.

வேறுவேறு வார்த்தைகளில், திரும்பத் திரும்ப கவிதைகள், ஒரே பாடுபொருளாய் இருப்பதால் சற்றே சலிப்பைத் தருகிறது. சில கவிதைகள் வெறும் காட்சி வர்ணனையாக நின்று விடுகிறது.

சிறப்பான வாசிப்பு அனுபவம்.

கட்டுரையாளர் :
கவிஞர் கண்ணன் விசுவகாந்தி,
மென்பொறியாளர், சேலம்.
*

நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


ஞாயிறு, 21 ஜூலை, 2024

மண் கடத்திய வேர்களின் வலி நூலெங்கும் பரவியிருக்கிறது - பாவலர் வையவன்


ஒருவரின் காதல் எதன்மீதாக இருக்கவேண்டும்? என்னவாக இருக்கவேண்டும்? ஆண் அல்லது பெண்ணின்மீது கொள்ளும் காதல் மட்டும்தான் காதலா? நிலத்தின்மீதும் இனத்தின்மீதும் மொழியின்மீதும் கொள்ளும் காதல் காதலாகதா? 

இம் மூன்றின்மீது கொள்ளும் காதலே மற்ற காதல்களை முழுமையாக்கும் என்பது என் கருத்து. அதற்கு தமிழினத்தின் வரலாறு நெடுக சான்று உள்ளது. அப்படி அம்மூன்றின் மீதும் காதல் இல்லையாயின் அடிமைக் காதலும் அடமான வாழ்வுமே வாய்க்கும். வாழ்வின் இலக்கணமே நிலமும் பொழுதும்தானே! 

நிலத்தையும் இனத்தையும் தீராது நேசிக்கும் ‘தமிழ்த்தோழர்’ மகாராசன் அண்மையில் அவரது படைப்பான ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பினை எனக்கு அனுப்பிவைத்தார். நூலிலுள்ள ஐம்பத்தைந்து கவிதையிலும் பஃறுளியும் குமரிக்கோடுமாய் பரவியிருந்த ஆதி தமிழ்நிலத்தின் மண் அப்படியே ஒட்டியிருக்கிறது. அத்தோடு அந்நிலத்தில் தாய்ப் பாலாய் ஓடிய ஆறுகள் இன்று கண்ணீராய்ச் சிந்திக்கொண்டிருக்கிற கவலையும் அப்பியிருக்கிறது. மண் கடத்திய வேர்களின் வலி மகாராசன் தூரிகை வழியே நூலெங்கும் பரவியிருக்கிறது.

குவிந்து கிடக்கும் ஒத்தடச் சொற்களால் தணிவதல்ல அவ் வலிகள். கடந்த அரை நூற்றாண்டின் பெருந்தாகம் நிலமெங்கும் விக்கலாய் வெளிப்படுகிறது. பசித்த கண்கள் பழிதீர்க்க முடியாமல் பரிதவிக்கிறது. 

இன்னும் மிச்சமிருக்கும் புழுதிக் காடுகளின் பனையோலை தூர் இடுக்குகளில் எச்சங்களை விதைத்துச் செல்லும் பறவைகள் மட்டுமே நிலத்தின் நம்பிக்கையாக இருக்கின்றன. 

கரும்பச்சைக் கூடாரமாய் நீண்டு படுத்திருந்த மலைத் தாய்ச்சியின் மனிதப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழிறக்கப்பட்டார்கள்; நிலத்திற்கு வந்தேறியவர்கள் வனத்தைச் சொந்தமாக்கி மெல்ல மெல்ல மேலேறினார்கள். பழுப்பேறிய உழைப்பும் வெள்ளந்தி வாழ்க்கையும் பச்சையம் இழந்த நிலமும் கந்தல் துணியாய் நைந்து நைந்து இத்துப் போயிருக்கின்றன. 

வியர்வை மணக்கும் நெல்லினை அள்ளி அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் இன்று பருக்கைகளுக்காகக் கையேந்திக் காத்துக் கிடக்கின்றன. கூடிழந்த பறவைகளாய் வீடிழந்து நிற்கிறது இனம். சோற்றுக்கு வாலாட்டிய நாய்கள் போக தப்பிய புலிகளின் கால்தடம் பதியக் காத்திருக்கிறது ஒரு நிலம். அதற்கு வாய்க்கும் பொழுது.

வாங்கிப் படியுங்கள்; வட்டம் போடுங்கள் !

கட்டுரையாளர்:
பாவலர் வையவன்
திருவண்ணாமலை.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வியாழன், 18 ஜூலை, 2024

புழுதி மண் தடவிய காலத்தை நினைப்பூட்டும் கவிதைகள்.


நிலத்தை, 'இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்' என்றது வள்ளுவம்.


'வண்ணச்சீரடி.. மென் பாதம்
மண்மகளும் அறிந்திலாள்'
என்றது கம்பராமாயணம்.
இன்னும் பிற கவிஞர்கள் நிலமடந்தை என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆக, மண்சார்ந்த நிலம் ஒரு ஆக்க சக்தியாக விளங்குவதற்கும் பிரபஞ்ச உற்பத்தியின் மூலப் பொருளே நிலம், நிலம், நிலமே என்பதே. 

ஒரு செடியைப் பிடிங்கினாலும் அதனுடன் மண் ஒட்டிக்கொண்டு வருவது போல, ஒரு மரம் வேருடன் சாயும்போதும் அதனுடன் தான் இருந்த இடத்தின் மண்ணையும் எடுத்தபடி வருவது போல 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பில் எந்தக் கவிதையை எடுத்தாலும் தான் வாழ்ந்த - சார்ந்திருந்த தன் மூதாதையர்கள் வாழ்வியலில் படிந்திருந்த உழவையும், மண்ணையும், உழவுக்கான தளவாடங்களையும், பாடுகளையும் தவிர்த்தவிட்டு எழுதவில்லை. தன் உழுகுடி நிலத்தில் முளைத்த சொற்களை வைத்து நேர்த்தியாகக் கவிதைகளாக்கியிருப்பது மாபெரும் வெற்றியே.

தொல் குடியில் நிலம், நிலம் சார்ந்த பொழுதுகள்தான் வாழ்வியல் பயன்பாடுகளில் மரபுவழியாக வந்திருக்கிறது. அதன் நீட்சியாக இக்கவிதைத் தொகுப்பு நம்மைச் சங்க காலத்திற்கும் நவீன காலத்தின் இடைப்பட்ட காலத்திற்கும் அழைத்துச் சென்று, அலுப்பு தட்டாது நீள் கவிதையாகத் தந்திருப்பது தனிச்சிறப்பு. 

புழக்கத்தில் நம்மால் கைவிடப்பட்டு நிற்கதியாக இருக்கும் சொற்களைத் தேடி எடுத்து, தேவையான இடத்தில் கையாண்டு இருப்பது ஆச்சரியப்பட வைக்கிகிறது.

அவரின் நிலத்தில் காதல், வீரம், மண்ணின் வயனம், நெகிழ்ந்த வயல்வெளிகள், நம்மால் வங்கொலை செய்யப்பட்ட தாவரம், புழு, பூச்சிகள், கால்நடைகள், சிறுபொழுது, பெரும்பொழுதுகளை அழகியலுடன் தமக்கே உரிய மொழிநடையில் கவிதையாக்கியிருப்பது பிரமிப்பே.

'தெப்பென்று நிரம்பியிருக்கும் கண்மாய் மடைத் தூம்புக் கண்களின் நீர்ப் பாய்ச்சலில் தாவி 
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய் வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்'
காட்சியலுடன் அழகியலும் கலந்து நம்மை வாமடைப் பக்கம் சற்றுநேரம் உட்காரவைத்து விடுகின்றன வரிகள். இங்கு தெப்பென்ற சொல்லே தெப்பத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் புதிய கேள்வி ஒன்றையும் வைக்கிறார் கவிஞர்.
'காலத்தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர் முட்ட கசிந்த 
வாழ்வின் தனிப்பொழுதுகள் மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு பாடாத மனத்தொட்டிலும் நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.
கண்களில் வழிந்த சுடுநீரும்
அவள் ஆழ்மனத் தீயை அணைக்கவில்லை'. 
இக்கவிதை ஒன்றுபோதும் நம்மை விசனப்பட வைக்க. 
நிலத்தில் முளைத்த சொற்கள் யாவற்றையும் வீரியத்துடன் தந்திருக்கிறார் கவிஞர். உள்ளது தேடி அகழ்ந்து எடுத்து, இறுதியாகவும் சூட்சுமத்துடனும் ஒரு நம்பிக்கை விதையைத் தந்திருக்கிறார். 
'தப்பிய புலிகளின் 
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது 
ஒரு நிலம்'.
நாம் அனைவரும் இந்த நம்பிக்கை விதையைப் பாதுகாப்போம்.

இது அவர் நிலத்தில் முளைத்த சொற்கள் அல்ல; நம் யாவரின் நிலத்திலும் உருண்டு புரண்ட சிராய்புப் காயத்தில் புழுதி மண்ணைத் தடவிய காலத்தை நினைப்பூட்டிச் செல்கிறது. வாசிக்க வேண்டிய கவிதை நூல்.

நூல் வெற்றி பெறட்டும். வாழ்க.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



வெள்ளி, 12 ஜூலை, 2024

சொற்களில் முளைத்த நிலம் - கவிஞர் கூடல் தாரிக்


'முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே' என்பார் தொல்காப்பியர். அந்தவகையில், நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன ஏர் மகாராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பு. தொகுப்பெங்கும் அபூர்வமான சொல்லாடல்கள் இத்தொகுப்பின் கூடுதல் பலம்.

இயற்கைச் சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என, நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது. நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத்தொகுப்பினை உயிர்ப்பு மிக்கதாக்குகின்றது.

ஊரில் விளைச்சல் இல்லாத தருணத்திலும் குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளந்து கொடுத்து, 
"சொல்லளந்து போட்டவனுக்கு
 நெல்லளந்து போடுவதுதான்
 சம்சாரிகள் வாழ்க்கை" 
எனச் சொல்லுகிறாள் குடியானப்பெண். இது அவளின் குரல் மட்டுமல்ல, உழுகுடி மக்களின் குரலும் ஆகும்.
இப்படியான ஈகைக்குணம் பொருந்திய மக்கள் நிலமிழந்து போனபிறகு, பிறரிடம் கையேந்தும் நிலையைச் சொல்பவர்,
"உக்கிப்போனது நிலம்" 
என்றே சொல்கின்றார். மற்றுமொரு கவிதையில் மனிதர்கள் இல்லாத நிலத்தை,
"நாதியற்றுக் கிடந்தாள் நிலத்தாள்"
என்னும் சொற்றொடரில்
குறிப்பிடுகின்றார்.

நிலத்தை உயிர்ப்பு மிக்க ஒன்றாகவும் தாயாகவும் பார்க்கும் மனநிலை நிலத்தோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு வரும்.

அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரான சுகுவாமிஷ் பழங்குடியினர் தங்களின் நிலத்தை வெள்ளையர்களுக்கு விற்ற சமயத்தில், அந்த இனத்தின் தலைவன் சியாட்டல், 'இந்த நிலம் எனது தாய். இந்த நிலத்தின் மீது நீங்கள் உமிழாதீர்கள். அது என் தாயின் மீது உமிழ்வதற்குச் சமம்' எனக்கடிதம் எழுதினான். நிலத்தோடு தன்னை இரண்டறப் பிணைத்துக்கொண்ட வாழ்வுதானே அவனை அவ்வாறு எழுத வைத்தது.

தொகுப்பின் மற்றுமொரு கவிதையில் நீரைவிட்டு துள்ளிக்குதித்து வெளியேறும் மீன்கள் வாய் திறந்து மாண்டுபோயின என்கின்றார். 

இந்த நீள்கவிதையை ஆழ்ந்து வாசித்தால், நீர் என்பது நிலம் என்பதும், மீன்கள் என்பது நிலம் விட்டு வெளியேறிய மக்கள் என்பதையும் உணர இயல்கின்றது.

சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பெருமரத்திலிருந்த கூடும் நாசமாகிப்போனதால் துயரம் அடைந்த பெண்பறவை துவண்டு போனதாக இன்னொரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.

சூறைக்காற்றுதான் அதிகார வர்க்கம். கூடுதான் நிலம். பெண் பறவை என்பது நிலத்தின் பலவீனமான மனிதனின் குறியீடாகத்தானே இருக்க முடியும்!

நிலத்தையே முதன்மையாகக்கொண்ட தொகுப்பு என்பதால் என்னவோ ''வெளிச்சப்பூவை அப்பிக்கொண்டு
ஒயில் முகம் காட்டுகிறது 
நஞ்சை நிலம்''
என்கின்றார்.
"உயிர்த்தலை 
அடைகாத்துப் படுத்திருக்கிறது 
நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம்"
எனவும் சொல்கின்றார்.

முளைகட்டிய விதைச்சொற்கள் கூட உழவு நிலத்தின் ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்தவையாகத்தான் அவருக்குத் தோன்றுகிறது.

தொகுப்பில் காணப்படும் மழைக்கவிதைகள் மழையைக் கொண்டாடுகின்றன. நிலத்தைச் செழிப்பு மிக்கதாக மாற்றிய காரணத்தினாலேயே மழையைப் போற்றுகின்றன. 

விசும்பின் துளிவீழாவிட்டால் பசும்புல் தலைகாண்பது அரிது என வள்ளுவரின் வழிநின்று மழையைக் கொண்டாடக்கூடியவை அவை. 

'நீர் முலைத்தாய்ச்சி' எனவும் 'நிலத்துக்கு அணிவிக்கப்பட்ட நீர் மாலை' என்றும் மழைகுறித்த அவரின் வர்ணனைகள் நீள்கின்றன. நிலத்தையும் அதன் விளைச்சலையும் நேசிக்கத் தெரிந்தவர்களால் மழையை நேசிக்காமல் இருக்கமுடியாதுதானே!

வெறும் வலியை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நல்ல படைப்புக்குரிய தன்மை அல்ல. வாசிக்கும் வாசகனுக்கு நம்பிக்கையையும் அது விதைக்க வேண்டும் என்பர். அந்த வகையில் நிலத்திலிருந்தே நம்பிக்கையை விதைக்கின்றார். மண் தனது உதடுகளால் துளைகள் இல்லாத வேர்ப்புல்லாங்குழலை இசைக்கின்றது. அதிலிருந்து வெளிவரும் இசை, பூக்களாக உருமாறிப் பூத்துச் சிரிக்கின்றன என்கின்றார். அந்தப்பூக்கள் வெறும் பூக்கள் மட்டுமல்ல; மகாராசன் தனது படைப்பின்வழி மலர்த்தித் தரும் நம்பிக்கை என்றால் அது மிகையில்லை.

கட்டுரையாளர்:
கவிஞர் கூடல் தாரிக்
கம்பம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


செவ்வாய், 9 ஜூலை, 2024

சேறு மணக்கும் கவித் தொகுப்பு - எழுத்தாளர் அகரன்


கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பான 'சொல் நிலம்' அடுத்து, பெரிய இடைவெளியில் வெளிவந்திருக்கிறது இந்த இரண்டாம் கவிதைத் தொகுப்பு.


புத்தகம் முழுமையும் மணத்திடுது மண்வாசம். நிலத்தாள்... வனத்தாள்.. முலைத்தாய்ச்சி.. எனக் கவிதை தோறும் மண்ணைப் பற்றிய வேராய்ப் பின்னிப் பிணைகிறார். வழக்கொழிந்து போன சில சொற்களை நமக்கு ஞாபகமூட்டுகிறார். வயலில் சேற்றில் உழவனுக்கு நண்பனாய் இருக்கும் மண்புழுக் கண்களால் இந்தக் கவிதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார். மும்முலைத் தாயவள் எனக் குறள் ஈன்ற தமிழைக் குறிப்பிடும் இடம் வெகு சிறப்பு.  

கேரளத்தில் உணவு திருடியமைக்காக அடித்தே கொல்லப்பட்ட மது பற்றியொரு கவிதை; அது நமது மனிதத்தை அசைத்துப் பார்க்கிறது. 

ஈழப் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை எனக் கவிஞர் தனது மண் மீதும், சமூகத்தின் மீதும் இருக்கும் அக்கறையை, கேள்விகளைக் கவிப்படுத்தி இருக்கிறார். 

சேறு மணக்கும் கவித்தொகுப்பின் நடுவில் அரசியல் வாசமும் தெளித்திருப்பது, ஒரு படைப்பாளனின் அடிநாதப் பண்பு. 

முற்றிலும் மண், வயல், வேர், மழை, நீர் என ஆக்கிரமித்திருக்கும் கவிதைகள் மேலோட்டமாய் வாசிப்போருக்கு இரண்டு மூன்று முறை வாசிக்கச் செய்யும். இதுவே இத்தொகுப்பின் நிறையும் குறையும்.

திரைக்கலைஞர் பொன்வண்ணனின் அட்டைப்பட வடிவமைப்பு சிறப்பு. உள்ளடக்கத்தை ஓவியமாய்த் தீட்டியமை அருமை. களையிழந்த பெண்ணொருத்தி, இலையிழந்த கிளை, அதிலமர்ந்த குருவி என நூறுபக்க விடயங்களுக்கு ஆகப்பொருத்தம்.  

வாழ்த்துக்கள் தோழர் ஏர் மகாராசன் 

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அகரன்,
கம்பம்.
***
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வெள்ளி, 5 ஜூலை, 2024

சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச் செய்யும் தொகுப்பு.



கவிதை வடிவம் நுட்பமும் அழகியலும் நிறைந்த இலக்கிய வடிவம். படைப்பாளனின் கருத்தியலை, சார்புத் தன்மையை வெளிப்படுத்தக் கவிதை வடிவத்தை விட வேறு இலக்கிய வடிவம் எதுவும் இருக்கவியலாது என்பதைச் சமகால இலக்கியப் படைப்பாக்கங்களை நோக்கி முடிவு கூறலாம். 

இத்தகைய கவிதை வடிவம் படைப்பாளனின் அகவுணர்வுகளையும், சமூகம் சார்ந்தெழும் புறவுணர்வுகளையும் வெகுநேர்த்தியாக வாசகருக்குக் கடத்துவதில் வெற்றிபெறுகிறது. 

இப்பின்னணியில் இந்தத் தொகுப்புள் இடம் பெற்றுள்ள கவிதைகள் தேர்ந்த சொற்களில் அடர்த்தியான உள்ளடக்கங்களைக் கொண்டு யாக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 55 கவிதைகள் இத்தொகுப்புள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு கவிதையும் சொற்கள், எடுத்துரைப்பு, உள்ளடக்கம் எனும் அடிப்படைகளில் வெகு நுட்பமாகக் கருத்துப் புலப்படுத்தம் செய்கின்றது. ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போதும் சொற்களின் ஊடாகக் கொள்ளும் பிணைப்பு அறுபடாத கன்னியாய்த் தொடர்கிறது. 

தொகுப்பின் தலைப்பைப் போலவே, ஒவ்வொரு கவிதையும் நிலத்தின் வாசனையை நாசிக்குள் செலுத்தி நாபிக் கமலத்தில் நங்கூரமிடச் செய்கிறது. ஓரிடத்தில், மண்மீட்டிய வேர்களின் இசை / காடெல்லாம் மணத்துப் பரவியது என்கிறார் கவிஞர். இந்த வரிகளில் மனம் தோய்ந்து போகிறது. இப்படி நூல் முழுதும் நுட்பமான கருத்தியல், அழகியல் நிரம்பி, சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச்செய்கிறது இந்தத் தொகுப்பு.

நிலத்தில் முளைத்த சொற்கள், மகாராசன் / மே 2024 / கவிதை / /பக்112 / விலை ரூ100- /யாப்பு வெளியீடு எண்.5, ஏரிக்கரைச் சாலை, 2ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர், சென்னை. தொடர்புக்கு: 9080514506.

நன்றி: பேசும் புதிய சக்தி மாத இதழ், சூலை 2024.

சனி, 29 ஜூன், 2024

மண்ணில் முளைகட்டிய விதைச்சொற்கள் - கவிஞர் தங்கேஸ்வரன்


முனைவர் மகாராசன் கவிதைகளுக்குள் நாம் பயணிப்பதென்பது, சங்க இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் ஐந்தினைகளுக்குள் ஓர் இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கு ஒப்பானதாக இருக்கிறது. தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசித்து முடித்ததும், ஓர் அற்புதமான பரவச உணர்வு நம்மை வந்து தொற்றிக் கொள்கிறது.  

கவிதையின் பாடுபொருள் எதுவாக இருந்த போதிலும், அவருக்கான சொல் இந்த நிலத்தில் இருந்துதான் முளைத்தெழுந்து வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவிஞர். 

இந்த மண்ணையும் மரபையும் அதில் முளைத்தெழுந்து வந்த தொல்குடிகளையும் பாடுவதற்கே இந்தக் கவிதை நூலை இவர் இயற்றியிருப்பார் போலும்.

ஐந்தினைகளின் முதற் பொருளான நிலமும் பொழுதும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிர்த்துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் உணர முடிகிறது. கருப்பொருள்கள் நம்மோடு வந்து அளவளாவி விட்டுச் செல்கின்றன. உரிப்பொருள்களான உணர்வுகள் நம்மை வந்து எட்டுகின்றன.

கவிஞர் மகாராசனின் கவிதைகள் நேரடியாக விவரிக்கும் தன்மை கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ, குறியீடுகளோ, உத்திகளோ இல்லை. ஆனால், உள்ளே உயிர்ப்பு இருக்கிறது. அவரே கூறுவது போல

"கருப்பம் கொண்ட
 பிள்ளைத் தாய்ச்சியாய்
 உயிர்த்தலைச் சுமக்கின்றன
 நிலம் கோதிய சொற்கள்".

நிலம் கோதிய சொற்கள்தான் அவருடையவை. வாழ்வினின் வலியைச் சொல்லும்போதும் மனிதர்களின் பாடுகளைச் சொல்லும் போதும், அவர்களின் காதலைச் சொல்லும்போதும், களிப்பை, துக்கத்தை இப்படி எதைப்பற்றிப் பாடும்போதும் மண்ணில் முளைத்தெழுந்த சொற்கள்தான் அவரிடம் வருகின்றன.

இம் மண்ணின் மைந்தர்களை, தொல்குடிகளை நாகரிக மனிதர்கள் வஞ்சிக்கிறார்கள்; சமூகம் வஞ்சிக்கிறது. கடைசியில் தெய்வமும் அவர்களைக் கைவிட்டு விடுகிறது. மண்ணுக்கும் மனிதர்களுக்குமான தொப்புள் கொடி உறவு தந்திரமாகத் துண்டிக்கப்பட்டு விட்டது.

"கருவறைக்குள் 
ஒளிந்திருக்கும் தெய்வம்
எப்போதும் போலவே வெளிவருவதாய் திட்டம் இல்லை
இப்போதும்"

என்ற வரிகளில் ஒளிந்திருக்கும் ஆதங்கமும், இந்தச் சமூகத்தின் அவலமும் நம் மனதைக் கனக்கச் செய்கின்றன.

சில நல்ல வளமான கற்பனைகள் இந்தக் கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. இயற்கையை மீறிய ஒரு இன்னிசைக் கலைஞன் இப்புவியில் இல்லை என்பதைக் கீழே கொடுத்திருக்கும் வரிகள் அற்புதமாகப் பதிவு செய்கின்றன.

"துளைகள் ஏதுமின்றி  
வேர்கள் இசைத்ததில்
கிளைகள் தலையாட்டி 
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
காட்டுச் செடிகள்".

நமக்கு முந்தைய மனிதர்களும் ஒரு காலத்தில் இப்படி காட்டுச் செடிகளாகத்தான் இருந்திருப்பார்கள் என்ற ஏக்கத்தை இவ்வரிகள் நம் இதயத்தில் விதைக்கின்றன. அது உண்மைதான்.

இப்போதுள்ள மனிதன்தான் முற்றிலும் இயற்கையுடனான அவனது உறவைத் துண்டித்துக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான்.

"காடும் மலையும் 
மேவிய நிலத்தில் 
சுற்றித்திரிந்த அவனுக்கு
கையூண்டு பிடிமண்கூடச் சொந்தமில்லை".

இவ்வாறுதான் இந்த மண்ணின் மூத்த குடிகளை இந்த அரசாங்கமும், பெரு முதலாளிகளும் வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவி மனிதனோ பதிலுக்கு எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்க முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு இயற்கை அன்னை அதைக் கற்றுக் கொடுக்கவில்லை.

"வலிக்க வலிக்க 
சாவினைத் தந்த போதும்
பசி நிரம்பிய அவனது கண்களில்
அன்பின் ஒளிதான் கசிந்தது"

என்று சொல்லும்போது, இயற்கை தான் அவனுக்கு உயிரைத் திருப்பிக் கொடுக்கிறது என்பது தெரிகிறது.

"குவிந்து கிடக்கும் 
ஒத்தடச் சொற்களால்
தணிந்து போகின்றன வலிகள்".

இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் அதிமேதாவித்தனமான அறிவியல் நமக்குத் தந்ததா என்று நினைக்கும்போது கோபம் வருகிறது.

"நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து
 ஈரவாழ்வில் துடுப்பசைத்து 
 மிதந்த மீன்கள் 
 கரை மணலில் புரண்டு புரண்டு 
 நிலத்தைப்பூசிக்கொண்டு 
 மீத வாழ்வின் பேறு பெற்று 
 வாய்திறந்து மாண்டு போயின".

இப்படித்தான் மனிதனும் ஆத்மார்த்த வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டு கரையில் துடி துடிக்கும் மீனைப்போலவே மாண்டு போய்க் கொண்டிருக்கிறான்.

கவித்துவம் நிரம்பிய வரிகள் இந்த நூலில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

"பற்றிப் படர்ந்த பெருநெருப்பை
அணைக்கும் வித்தைகளை
மெதுவாய் சொல்லிக்கொண்டிருந்தது
இருட்டில் பெய்த சிறுமழை".

இயற்கையின் வழக்கமான சிறுநிகழ்வை இவர் படம் பிடித்த விதமே அலாதியானது. அதுவே இதை மிகப் பெரிய படிமமாக மாற்றியிருக்கிறது எனலாம். எத்தனை எத்தனை உணர்வுகளைத் தருகின்றன இவ்வரிகள் என்று பாருங்கள்.

அரூபத்தை ரூபமாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

"வெறுமை ததும்பிய 
வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில் 
ஒருக்களித்துப் படுத்திருந்தது
யாருமற்ற தனிமை".

இவ்வாறு இந்தக் கவிதைத் தொகுப்பின் நெடுகவும் ஆங்காங்கே உணர்வும் உயிர்ப்பும் கொண்ட கவிதைகளை எடுத்துக் காட்டிக் கொண்டே செல்லலாம்.

அழகியல் என்பது கண நேரக் காட்சிகளாக விரிந்து போகின்றவை என்று நினைத்து நிலத்தை மறந்த மனிதர்களுக்கு மத்தியில், இவருக்கோ நிலம் என்பது ஆதி அந்தமாக விளங்குகிறது. வார்த்தைகள் யாவும் மண்ணோடும் மரங்களோடும் ஒட்டி உறவாடியேதான் கவிதைக்குள் வருகின்றன.

"வாழ்வுப் பசப்பின் 
பூ மணத்தில் மயங்கி முயங்கி
நிழலை அள்ளிப் 
பருகிக் கொண்டது 
உச்சி வெயில்".

இப்படி இவரால் வெயிலைக்கூடப் பாட முடிகிறது. அதனால்தான் 

"சொற்களில் நனைந்து 
மனதை உலர்த்திக்கொண்டு
நெருஞ்சிப்பூவாய் 
கண் சிமிட்டுகிறது 
நம்மைப்பற்றிய கவிதையொன்று" என்று எழுதுகிறார். 

நிலத்தை இழந்த இனத்தின் வலியும், நிலத்திலிருந்து துண்டித்து விடப்பட்ட சம்சாரியின் வலியும் அளவிட முடியாத வேதனையுடன் இந்தத் தொகுப்பு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

"கிளை பரப்பிச் சிலிர்த்து
 சிரித்திருந்த பேரினத்திற்கு
 தாய்மடிகள் இரண்டிருந்தன"

என்ற கவிதை, ஆரம்பத்திலேயே எந்த நிலத்தைப் பற்றி பாடுகிறது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளலாம். முடிவில் முத்தாய்ப்பாக 

"தப்பிய புலிகளின் 
கால்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்" 
என்று முடிகிறது. 

மண்ணை இழந்தவர்களின் வலி ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளே காணக்கிடைக்கிறது உண்மைதான்.

"நாடிழந்த 
அகதி வாழ்வின் வலியை 
இங்குள்ள சனங்களெல்லாம்
கூடும் வீடும் இழந்து
இப்போதுதான் உணர்ந்து பார்க்கிறது"
என்ற விரக்தி ஒரு புறம்,
"தாயகக் கனவு சுமந்த இனத்தை
கொத்துக் கொத்தாய் பறிகொடுத்த
நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்"
என்ற வேதனை மறுபுறம்,
"சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி சாவிலும் கொடியது"

என்ற அவலம் ஒரு புறம் என, ஆசிரியர் வழி நெடுகிலும் ஒரு இனம் எப்படி மண்ணிலிருந்து அதிகார வர்க்கத்தாலும், அரசியல்வாதிகளாலும், கார்ப்பரேட்டுகளாலும் துண்டிக்கப்பட்டது என்பதை வலியோடு பதிவு செய்திருக்கிறார்.

"வியர்வை மணக்கும் நெல்லை 
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் 
பருக்கைகளுக்காக் கையேந்தி நிற்கிறது"

என்ற தாளாத சோகம் இப்போது இந்த இனத்தின் வீழ்ச்சியாய்க் கண்முன்னே சித்தரிக்கப்படுகிறது.

இப்படித்தான் இந்தக் கவிதைத் தொகுதி முழுக்க மண்ணில் முளைத்தெழுந்த கவிதைகள் வயலில் விளைந்த நாற்றுக்களாக எங்கும் பரவி நிற்கின்றன.

எடுத்தியம்புவது என்றால், ஏறத்தாழ எல்லா வரிகளையும் பேச வேண்டும். அதை கவிஞரின் வரிகளிலேயே சொல்வதானால் 

"உழவு நிலத்தின் ஈரப்பாலை உறிஞ்சிக்குடித்து
முளைகட்டிய விதைச் சொற்கள்
வெண்முகம் காட்டிச் சிரித்தன"
என்று சொல்லலாம்.

இந்தக் கவிதைத் தொகுப்பை முழுவதும் வாசித்து முடிக்கும் போது இப்படி ஏராளமான முளை கட்டிய விதைச் சொற்கள் நம் இதயத்திற்குள்ளும் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன.

கவிஞருக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                              

அன்புடன்
கவிஞர் தங்கேஸ்வரன்,
தலைமை ஆசிரியர், 
அரசு மேல்நிலைப்பள்ளி,
தேனி மாவட்டம்
***

நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன் 

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வெள்ளி, 28 ஜூன், 2024

சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் உணர்வுகளைத் தந்திருக்கும் கவிதைகள் - கவிஞர் ஆர்.எஸ்.லட்சுமி


ஏர் மகாராசன் என்பது இவருக்குப் பொருத்தமான பெயர். சொல் எனும் ஏர் கொண்டு கவிதை எனும் நிலம் அகழ்ந்து, நிலத்தில் முளைத்த சொற்கள் எனும் நூலின் வழியாக அழகான கவிதைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

இவருடைய பாடல்கள் முழுக்க இந்தத் தொகுப்பிலே நிலத்தைப் பற்றிப் பேசுவதாய்த்தான் இருக்கின்றன.
ஒரு மலையை சொல்கிறார்…
ஒரு வயலைச் சொல்கிறார்…
ஒரு குளத்தைச் சொல்கிறார்…
ஒரு மரத்தைச் சொல்கிறார்..
குளத்தின் கரைகளில் படர்ந்திருக்கும் பாசிகளைச் சொல்கிறார்…
அதில் ஓடக்கூடிய மீனைச் சொல்கிறார்…
தூண்டிலுக்குத் தப்பித்த மீனைப் பற்றிப் பேசுகிறார்..
சின்னச் சின்ன குருவிகளைப் பற்றிப் பேசுகிறார்…
சின்னச் சின்ன செடிகளை, கொடிகளைப் பேசுகிறார்..
இப்படி, முழுக்க முழுக்க நிலம் சார்ந்த கவிதைகளைப் பற்றித்தான் பேசியிருக்கிறார்.

சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவி காதலைப் பற்றிப் பேசியிருப்பார்கள். மண்ணின் பெருமைகளைப் பற்றிப் பேசியிருப்பார்கள். நட்பைப் பற்றிக் கவிதைகள் இருக்கும். வள்ளல்களின் வள்ளல் தன்மையைச் சொல்லக்கூடிய கவிதைகள் இருக்கும். இதற்கு ஊடாக இயற்கையையும் வர்ணித்து இருப்பார்கள். அந்திப் பொழுது, எப்படியான அந்திப் பொழுது, எந்த நட்சத்திரம் அங்கிருந்தது, என்ன மாதம் அது, அந்த விவரிப்பு (Narration) அந்தக் காட்சிப்படுத்துதல், மன்னன், அவன் இருக்கக் கூடிய நாடு எப்படிப்பட்ட நாடு, அந்த நாட்டின் அமைவிடம், காடு, மலை, புவியியல் தன்மை, இப்படி இயற்கையின் எல்லாக் கூறுகளையுமே அழகாகப் படம் பிடித்துக் காட்டும் சங்க இலக்கியங்கள்..அதே மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன மகாராசனின் இக்கவிதைகள்.

//செங்குளத்து நீருக்குள் 
நீந்தித் திரிந்து
அலை வளையங்களோடு 
கரை ஒதுங்கி 
செலவுகளில் பொதிந்த நண்டுகளின் 
வழித்தடம் தேடித் தனித்தலைந்து
சுள்ளென்ற வெயில் பொழுதில்
பளிச்சென்று துள்ளிக் குதித்து
கரையின் மேலே
வந்து விழுந்தன மீன்கள்//
திரைப்படம் போலே காட்சிகளை விவரிக்கிறார். கேமராக் கோணங்களோடு இயற்கையைப் பதிவு செய்து அந்த இடங்களுக்கு நம்மைப் பயணப்பட வைக்கிறார்.

குளம் என சாதாரணமாகச் சொல்லாமல் “செங்குளத்து நீர்” என்று அவர் பாடுகையில், அந்தக் குளத்தின் நீர் சிவந்த நீர், அக்குளம் செம்மண் அடர்ந்த குளம் எனக் காட்சிப்படுத்திக் கொள்கிறோம். “அலை வளையங்கள்” என்ற வார்த்தைகளை அவர் உபயோகிக்கையில் சற்றே ஒரு ஒரு முறையேனும் நம் மனக்கண்ணில் அலைகள் திரண்டு வருவதைத் தவிர்க்கவே முடியாது. அதுதான் இக்கவிதையின் வெற்றி.

இங்கு “செலவு” என்ற சொல் மிக முக்கியமான சொல். செலவு என்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம் பயணச் செலவு, வீட்டுச் செலவு போன்றவைகள்தான்.. இங்கே “செலவு” என்பதை ஒதுங்கிடம் மாதிரி, குளத்திலே, கண்மாய்களிலே இருக்கும் சிறு சிறு பொந்துகளைத்தான். நண்டுகள் வாழக்கூடிய இடத்தைத்தான் மகாராசன் குறிப்பிடுவதாக நான் பொருள் கொள்கிறேன்.

“பளிச்சென்று துள்ளிக் குதித்து” மீன்கள் இயல்பாகவே பிரகாசமான மேனி கொண்டவை. மீன்கள் வண்ணமயமானவை. வெள்ளை மீனின் மேனிகூட அத்தனைப் பிரகாசமாய் இருக்கும். அந்தப் பிரகாசமும் சூரிய ஒளியும் இணைகையில் ஓர் பிரதிபலிப்பு ஓர் எதிரொளி இருக்கும். அதைத்தான் மீன் பளிச்சென்று துள்ளிக் குதிக்கிறது எனச் சொல்கிறார். இயற்கையை மகாராசன் எவ்வளவு தூரத்திற்கு ரசித்திருக்கிறார் பாருங்கள். அற்புதமான அவதானிப்பு.

//மூடித் திறந்த செவுள்களில் 
நுழைந்த காற்று
உயிர் தரப் பார்த்து
தவித்துப் போனது//
செவுள்கள் தான் மீனுக்கு மூச்சு விடக்கூடிய பகுதி. கரையில் விழுந்த மீன்களின் செவுள்கள் மூடி மூடித் திறக்கையில் வெளியே உள்ள காற்று உள்ளே போய் அதற்கு உயிர் தரப் பார்த்துத் தவித்துப் போனதாம். எப்படிப்பட்ட கற்பனை…கற்பனையின் உச்சம்…! 

ஒரு சாதாரண கற்பனையாக இதை எடுத்துக்கொள்ள முடியவில்லை. மிகப் பெரிய மனித நேயம்..நேயத்தின் உச்சம்தான் இந்தக் கற்பனை..!!
//உயிர்க் கொலைப் பழியிலிருந்து 
தப்பிப் பிழைத்த நினைப்பில்
தக்கையில் தொங்கிக் கிடந்தது
மண்புழு கோர்த்த தூண்டில் முள்//
மிகப் பெரிய Irony…! தூண்டிலோட வேலை என்ன? மீனைப் பிடிப்பது…
தூண்டில் நினைக்கிறதாம், 
“நல்லவேளை.. நான் மீனைப் பிடிக்கவில்லை..மீனைப் பிடித்திருந்தால் எனக்கொரு கொலைப் பழி வந்திருக்குமே”.
காற்று நினைக்கிறதாம் மீனுக்கு உயிர் தர முடியவில்லையே என. 
தூண்டில் நினைக்கிறதாம், ஒரு கொலைப் பழியிலிருந்து தப்பித்து விட்டோம் என.. இயற்கைக்கும் உயிரற்ற பொருளான தூண்டிலுக்கும் அன்பும் நேயமும் இருப்பதாகப் பார்க்கிறது கவிஞரின் கற்பனை.. மகாராசனின் கற்பனை அழகானது.. மகாராசனின் கற்பனை ஆழமானது..மகாராசனின் கற்பனை அபாரமானது…மகாராசனின் கற்பனை மனித நேயம் மிக்கது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், மே மாதமும் உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போய் ஒவ்வொரு நாளும் அழுதழுது. இனி அழுவதற்குக் கண்ணீர் இல்லை என்று ஒட்டுமொத்த தமிழினமே தவித்துக் கொண்டிருந்தது..

எத்தனையோ சாவுகளைப் பார்த்திருக்கிறோம். எத்தனையோ உயிர்க் கொலைகளைப் பார்த்திருக்கிறோம். நம் குடும்பங்களில் நடந்த இழப்புகளைப் பார்த்திருக்கிறோம். நம் அண்டைகளில் சுற்றங்களில் நிறைய இழப்புகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப் பெரிய இழப்பு நமக்கு மிகப் பக்கத்தில் ஏற்பட்ட நம் பிள்ளையின் இழப்பு.. 

ஒவ்வொரு தமிழ்த்தாயும், அப்பிள்ளையின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு, அது நான் பெற்ற பிள்ளை அல்லவா? இந்தப் பிள்ளையையா கொன்றார்கள் ? என்று கண்ணீர் வடித்தார்கள்..

பலிபீடத்தின் வாயிலில் தலை வைத்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைக்கும் தெரியும், நாம் இன்னும் சற்று நேரத்தில் கொல்லப்படப் போகிறோம் என. 

ஒரு துளி கலக்கம்…ஒரு வருத்தம்…ஒரு கோபம்….கொஞ்சம் பயம்.. ???? நாம் வடித்த அந்தக் கண்ணீரை, அந்த உணர்வுகளை மகாராசன் தன் கவிதையில் அவ்வளவு உணர்வோடு வெளிப்படுத்தி இருக்கிறார்..

அந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்குள் உறங்கிக் கிடந்த, உறைந்து கிடந்த அத்தனை அழுகையும் பீறிட்டு எழ, எனக்குள் புதைந்து கிடந்த தாய்மை உணர்வு மிகப் பெரிதாகப் பல்கிப் பெருகி ஓடியது..

//தன்னைக் கொல்லப் போவது தெரிந்தும்
இனவெறிப் பலிப் பீடத்தின் மீதமர்ந்து
வெள்ளந்தியாய் எதையோ
பார்த்துக் கொண்டிருந்தன
பாலச்சந்திரனின் கண்கள்// 
எரிமலைகள் என்றென்றும் ஓய்வதில்லை. என்றேனும் வெடிக்கக் கூடும். அன்றைக்கு நாம் பாலகன் பார்த்த பார்வைக்குப் பொருள் சொல்லுவோம்..

நம் பிள்ளைக்கு மகாராசன் செலுத்திய உணர்வுப்பூர்வமான அஞ்சலிக் கவிதையாய் இந்தக் கவிதையைப் பார்க்கிறேன்.

மல்லனும் மல்லியும் பழங்குடியினர்; மலை வாழ் சாதியினர். அவர்களுக்குச் சட்டம் தெரியாது. உலக நீதி தெரியாது. பகட்டான உடைகள் தெரியாது. நாள்தோறும் குளிக்க வேண்டும் எனத் தெரியாது. புனுகு பூசத் தெரியாது.. அத்தர் தெளித்துக் கொள்ளத் தெரியாது. காடு அவர்கள் வீடு. விலங்குகள் அவர்களின் பிள்ளைகள். பசித்தால் கிழங்குகளைத் தின்பார்கள்.. தேனைக் குடிப்பார்கள். அப்படித் திரிந்தவன்தான் மது. அவனுக்குப் பசிக்கிறது.. தேடிப் போகிறான். ஒரு சின்ன ரொட்டித் துண்டைத்தானே திருடினான்?

மாட மாளிகை கட்ட திருடவில்லை. கூட கோபுரங்கள் கட்ட திருடவில்லை. ஆடை அணிகலன்களுக்காகத் திருடவில்லை. வயிற்றில் பரவிய கொடும் பசிக்காகத் திருடினான்..

ஆனால், சமூகம் அவனுக்கு என்ன பரிசு கொடுத்தது ? சாவு.

//அவனது கண்கள் 
உயிர்ப்பிச்சை ஏதும் கேட்கவில்லை.
அரண்டு மிரண்டு அழவுமில்லை.
அவமானத்தால் வெட்கிப்போய் 
தலை குனியவுமில்லை.
அவனது கண்களில் 
நிரம்பி வழித்ததெல்லாம் 
பசி வலிதான்..
வலிக்க வலிக்க 
சாவினைத் தந்த போதும்
பசி நிரம்பிய அவனது கண்களில்
அன்பின் ஒளிதான் கசிந்தது//
எத்தனை அற்புதமான வரிகள்!
மகாராசனின் உணர்வுகள் நிரம்பிய வரிகள்! மதுவிற்கு மகாராசன் செலுத்திய அஞ்சலிக் கவிதை இது.

ஒரு பெண்பறவை தன் துணைக்காக ஏங்கிக் காத்திருந்ததாம்.. துரோகப் பருந்துகளும், ஊழிப் பாம்புகளும் அதன் கற்பனைகளைக் கொன்று குவித்தனவாம்.. 

//சூறைக் காற்றில் 
முறிந்து விழுந்த
பெரு மரத்திலிருந்த கூடும்
நாசமாய்ப் போனது.
உக்கிப் போயிருந்த பெண் பறவை
தனித்துப் பறக்க துணிவில்லாது
துவண்டு போனது.
சுள்ளிக் குச்சிகளை 
வாயில் கவ்வியபடி
தூரத்து மரக் கிளையில் 
கவ்வை பார்த்தது ஆண் பறவை.
புதுக் கூட்டை வேய்ந்த பிறகு 
தனித்திருந்த பறவையின்
சிறகைக் கோதி நீவி
ஆண் பறவை அழைத்தது..
பள்ளத்து நீரில் முங்கிக் குளித்து
சிறகை உலர்த்திய பெண் பறவை
புல்லின் தாள்களை 
இணுகிக் கொண்டு
புதுக் கூட்டில் மெத்தை செய்தது.
கூடடையும் பொழுதுகளின் கீச்சொலிகள்
காதலை இசைத்துக் கொண்டிருந்தன.
மெல்ல நகைத்த இரவின்
மவுனத் தாலாட்டில்  
தூங்கிப் போயின பறவைகள்..//
என்ன சொல்லாடல்!! என்ன சொல்லாடல்!!! படித்ததும் ஆற்றங்கரையோரம் இசைஞானியின் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்தது போலிருந்தது..
மகாராசன், தோழர், அய்யா, தம்பி…
கடவுள் படைத்தாராம் ஐம்பெரும் 
பூதத்தை…நீவீர் கடவுள், உங்கள் படைப்புகளில் ஐம்பெரும் பூதம் படைக்கும் கடவுள்..
1) மனிதம்
2)மண்
3)தமிழினம்
4)இயற்கை
5)மொழி
எனும் ஐம்பெரும் பூதம் படைத்த கடவுள் நீங்கள்..

தமிழினமும் தமிழ் மொழியும் வரலாற்றின் பக்கங்களில் உங்கள் பெயரை நிச்சயம் செதுக்கும்…💐

கட்டுரையாளர்
கவிஞர் ஆர்.எஸ்.லட்சுமி,
ஆசிரியர், மதுரை.

***


நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வியாழன், 27 ஜூன், 2024

சொற்களை விளைவிக்கும் கவிதை சம்சாரி - மு. மகேந்திர பாபு


பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமான 'ஏர்' மகாராசன் அவர்களின் சமீபத்திய படைப்பு 'நிலத்தில் முளைத்த சொற்கள்' என்ற தலைப்பிலான புதுக்கவிதை நூல். 

கடந்தாண்டில் வெளியான அவரது 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்ற ஆய்வு நூல் பலராலும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இவ்வாண்டில் அவரது மனவயலில் விளைந்து மிகச்சிறந்த அறுவடையைத் தந்து கொண்டிருக்கிறது 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூல். மொத்தம் 55 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.


ஒவ்வொரு கவிதையும் மண்ணையும், மக்களையும் பாடுபொருளாகக் கொண்டு, நம் பண்பாட்டினைப் பறைசாற்றுகின்றன. பல புதுமையான சொல்லாடல்கள் நம் சிந்தைக்கு விருந்தாக அமைகின்றன. 


'மண்மீட்டிய வேர்களின் இசை' என்ற அவருடைய ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன் என அணிந்துரையில் அகமகிழ்ந்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.


இவரது கவிதைகள் வெவ்வேறு பாடுபொருட்களையும் கருப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் நிலத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன என்கிறார் பேரா.முனைவர்.அரங்க மல்லிகா அவர்கள்.


இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதைகளும் நம் மனதை அசைத்துப் பார்க்கின்றன. ஆறாவது கவிதையாக இடம்பெற்றுள்ள கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மை வசப்படுத்துகின்றன.


"நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து

ஈர வாழ்வில் துடுப்பசைத்து

மிதந்த மீன்கள்

கரை மணலில் புரண்டு புரண்டு

நிலத்தைப் பூசிக்கொண்டு

மீத வாழ்வின் பேறு பெற்று

வாய் திறந்து மாண்டு போயின."


"செங்குளத்து நீரில் 

நீந்தித் திரிந்த மீன்கள் 

சுள்ளென்ற வெயில் பொழுதினில் கரையில் துள்ளி விழுந்து, நிலத்தைப் பூசிக்கொண்டு 

மீத வாழ்வின் பேறுபெற்று வாய்திறந்து மாண்டு போயின" என்ற வார்த்தைகளில் கவிஞர் நம்மைத் தம் வசமாக்குகிறார். கரையில் விழுந்த மீன் சுவாசிக்க இயலாது இறப்பதைத் தற்குறிப்பேற்றமாக்கிப் படைத்திருப்பது பாராட்டிற்குரியது.


வேளாண்குடிகளின் அவல நிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது ஒரு கவிதை.

"நிலத்தோடு 

தோய்ந்தும் தேய்ந்தும்

உழைப்புத் தடங்களால்

புடம்போட்ட பாதங்கள்

வெறும் பாதங்கள் அல்ல.


உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள்

நிலமெனும் ஆத்மாக்களின்

அழுகைத் துளிகள்".

வேளாண் தொழில் செய்து உலகைக் காக்கும் கடவுளாக உள்ள மக்களின் பாதங்களை இந்தளவிற்கு எந்தக் கவிஞனும் படைத்திருப்பானா எனத்தெரியவில்லை. அவர்களின் அவலங்களை உணர்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். மகாராசன் அதை அனுபவித்தவர் என்பதால், கவிதை முழுவதும் விவசாயிகளின் வேதனையைப் படரவிட்டிருக்கிறார்.


"நிழலடியில் 

சிந்திப் பரவிக் கிடந்தன 

புங்கையின் பூக்கோலங்கள்".

வார்த்தைகளின் அணிவகுப்பு அவ்வளவு நேர்த்தியாக, காட்சிப்படுத்துகிறது நம் மனதில் கவிதையை.


சம்சாரி வாழ்க்கையைச் சொல்லும் இக்கவிதை  கண்களை ஈரமாக்குகிறது.

"ஊருக்குச் சோறு போட

உழைத்த சனமெல்லாம்

ஒரு வாய்ச்சோற்றுக்கும்

ஊரிடம் கையேந்தி நின்றபோது

உக்கிப் போனது நிலம்.


சம்சாரிகளாய்ப் பிறந்ததின் வலி

சாவிலும் கொடிது"

இயற்கையின் அற்புதப் படைப்புகளான மலையை,பறவைகளை, ஆறுகளை, புயல் மழையின் சேதத்தைப் பாடுபொருளாக்கிச் செல்கின்றன சில கவிதைகள். தமிழ்க்குடியை, காப்பியத்தைத் தொட்டுச் செல்கின்றன சில கவிதைகள். கவிதை நெடுகிலும் வேளாண்குடிகளின் வாழ்க்கை விரிந்து கிடந்து வலியை நமக்கு உணர்த்துகின்றது.


இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கவிதை ஒன்று. அதன் சொல்லாடல்களில் சொக்கிப்போனேன். குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனின் பேச்சை இம்மியளவும் மாறாது அப்படியே படைத்துள்ளார் கவிஞர். தன் இளம்பருவத்தில் கண்ட அந்தக் காட்சியும் வார்த்தைகளும் அவரது மனதில் பசுமரத்தாணியாக அமர்ந்துள்ளது. இதோ அவரின் வார்த்தைகள்...


"காடு வெளஞ்சிருக்கு;

வீடு நெறஞ்சிருக்கு.

மக்களப் பெத்த மகராசிக்கு

மனசுல கொறயில்ல.

சாமி காக்காட்டியும்

பூமி காப்பாத்தும்.

செத்துப்போன பெண்புள்ள

சாமியாட்டம் துணையிருக்கா.

மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்

ஒன்னோட மருவாதய விட்டுத்தரமாட்ட.

ஆக்கித்தான் போடுவ

அடுத்த வசுறு பசியாத்த.

ஒன்னோட கை நனைக்க

ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.

ஒக்காந்து சோறு திங்க

ஓம்புள்ள அழைச்சாலும்

ஒரு போதும் போகமாட்ட... "

என நீளும் இந்தக் கவிதையின் சொல்லாடல்கள் நம்மை யாமத்துக்கே அழைத்துச் செல்கிறது. நாய்களின் குரைப்பொலிகளுடன் ஊடாக குறிகாரனின் குடுகுடுப்பைச் சத்தமும் செவிப்பறையில் ஒலிக்கிறது.


கவிதைகளும் அதற்கான ஓவியங்களும், முன்னட்டை ஓவியமும் புத்தகத்தை நம் நெஞ்சோடு சேர்த்தணைக்கச் செய்கின்றன. 'நிலத்தில் முளைத்த சொற்கள்' ஒவ்வொன்றும் நம் நெஞ்சில் மாற்றத்தைத் தூண்டச் செய்கின்றன. அதுதானே படைப்பாளனின் வெற்றி. அந்த வகையில் கவிஞர் மகராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதை நூல் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. சொற்களை விளைவிக்கும் கவிதை சம்சாரி இன்னும் பல படைப்புகள் தர வாழ்த்துகள்.


கட்டுரையாளர்

மு.மகேந்திர பாபு, 

தமிழாசிரியர், மதுரை.

மண்ணின் மீதான தீராக் காதலைப் பேசும் கவிதைகள் - பேரா ம.பெ.சீனிவாசன்


சிற்பியின் "ஒரு கிராமத்து நதி" படித்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இன்று நான் படித்த கவிதைப் பனுவல், மகாராசனின் "நிலத்தில் முளைத்த சொற்கள்". 

தான் பிறந்து வளர்ந்து காலூன்றி நிற்கும் மண்ணின் மீதான தீராக்காதலே இக்கவிதைகளுக்கான பேசுபொருள். 

கிராமத்து மக்களின் "பழுப்பேறிய உழைப்பையும் வெள்ளந்திவாழ்க்கையையும் பற்றிய கவிதைகள் இவை." நிலத்தில் இந்தப் பாதங்கள் (அதாவது உழவரின் பாதங்கள்)/ நாளை இறங்கவும் மறுக்கும்போது/ வெண்பாதங்களின் கைகளும் தொழும்" என்பதும் இவர் கவிதைகளுள் ஒன்று. 

இந்த சனம் வாங்கி வந்த தலையெழுத்தைப் பற்றியும், தம்முடைய "நிலத்தாள்" பற்றியும் நூல்நெடுகிலும் பேசும் இந்த மக்கள் கவிஞர், தங்கள் ஊருக்கு ஒரு தலபுராணம் இல்லையே என்று வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. மகாராசன்! இந்தக்கவிதை நூலும் உங்கள் ஊர்த் தலபுராணம் தானே!.

சாகித்திய அகாதமியின் கண் படக்கூடிய பலகவிதைகள் இதில் தென்படுகின்றன. 

வாழ்த்துகள் மகாராசன். 

பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

***



நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை:₹100
வெளியீடு: யாப்பு பதிப்பகம் 
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


செவ்வாய், 25 ஜூன், 2024

நீதியரசர் சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள் - கவனிக்க வேண்டியதும் விவாதிக்க வேண்டியதும்: மகாராசன்


தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் வரவேற்கக்கூடிய அம்சங்களும், இன்னும் விவாதிக்க வேண்டிய அம்சங்களும் நிறைய இருக்கின்றன.


நாங்குநேரி சம்பவத்தை மையமாகக்கொண்டும், அது போன்ற சம்பவங்களின் சமூகப் பின்புலத்தைக் கொண்டும் நான் எழுதிய மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலிலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நிறையப் பேசப்பட்டுள்ளன. இந்நிலையில், நீதியரசர் சந்துரு அவர்களும் பல்வேறு பரிந்துரைகளை அரசின் கவனத்திற்கு முன் வைத்திருக்கிறார். அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருத வேண்டியது, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சாதி அடையாளப் பெயர் ஒட்டுகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதாகும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் உள்ள கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பழங்குடியினர் நலப்பள்ளிகள் என, அனைத்து வகைப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகள் என்பதாகக் கொண்டு, பள்ளிக் கல்வித்துறையின்கீழ் உடனடியாகக் கொண்டுவர வேண்டும். 

அதேபோல, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சாதிப் பெயர் ஒட்டுகள் இடம்பெறுவதற்கு அனுமதி அளித்தல் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை.

அதாவது, எந்த ஒரு கல்வி நிறுவனமும் ஒரு புதிய பள்ளியை அல்லது கல்லூரியை நிறுவ முற்படுகையில், அவற்றைத் தொடங்குவதற்கான அனுமதியளிக்கும்போது, சாதி அடையாளப் பெயர்கள் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையை உள்ளடக்கியிருக்க வேண்டும். அதேபோல, ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டு நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களும் சாதி அடையாளப் பெயர்களை நீக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நீக்கத் தயங்கும் கல்வி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை. மேற்குறித்த பரிந்துரைகள் வரவேற்கக்கூடியவைதான். ஏனெனில், சமூக நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் மானுட அறத்தையும் அறிவையும் பொது சமூக அமைப்பில் போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் சாதி அடையாளங்களைத் தாங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சாதி அடையாளங்கள் கல்விப் போதனைகளுக்குப் பயன்படப் போவதுமில்லை.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி அடையாளக் குறிகளை வெளிப்படுத்தும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அவர்கள் அணியும் கயிறுகள், வளையங்கள், பாசிகள் மற்றும் சங்கிலிகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றில் சாதி அடையாளக் குறிகள் வெளிப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது எனவும், பள்ளி கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கான ஒழுக்கக் குறியீடு அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும். 

மாணவர்கள் எந்த வகையான வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் குறிகள் இடுவதையும் தடை செய்ய வேண்டும் என்கிறது அவ்வறிக்கை. 

இது வரவேற்கக்கூடிய பரிந்துரைகளில் ஒன்றுதான். எனினும், இதில் மத அடையாளக் குறிகளும் உள்ளடங்கி இருக்கின்றன. சாதி அடையாளங்களை மட்டுமல்ல; மதங்களை அடையாளப்படுத்தும் குறிகளும் பாரபட்சமற்ற முறையில் சுட்டிக் காட்டப்பட வேண்டும். சாதிகள் மற்றும் மதங்களின் குறியீடுகள் எதுவும் இடம் பெறாத வகையில் மாணவர்களின் பொது அடையாளச் சீர்மை ஒழுங்கை வரையறுப்பது மிகவும் சிக்கலானது. ஏனெனில், அது சாதி மற்றும் மத உணர்வுகளோடு தொடர்புடையது. ஆயினும், சாதி மத அடையாளமற்ற மாணவர் பொது அடையாள ஒழுங்கை வலியுறுத்துவதும், அதை நோக்கிய சமூக விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும். 

மாணவர்களிடம் சாதி மதப் பாகுபாடு இல்லாத வகையில், அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் மற்றும் அமைவுகள் கண்டிப்பாக அகர வரிசைப்படி இருக்க வேண்டும் என்பதும் ஒரு பரிந்துரையாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைவுகள் குறித்த பரிந்துரை, வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் சார்ந்த பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியதாகும். 

அதாவது, ஒரு வகுப்பறையில் பயிலும் மாணவர்கள் ஒரே மாதிரியான உயரங்கள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அ/A எனும் எழுத்தில் பெயர் தொடங்கும் ஒரு மாணவர் நெட்டையான உயரமுடையவராக இருக்கலாம். யோ/Y எனும் எழுத்தில் பெயர் தொடங்கும் ஒரு மாணவர் உயரம் குட்டையானவராக இருக்கக்கூடும். அகர வரிசைப்படி மாணவர் இருக்கைகள் அமைய நேரிட்டால், குட்டையான மாணவர்கள் பின் வரிசையிலும், நெட்டையான மாணவர்கள் முன் வரிசையிலும் அமர வேண்டி இருக்கும். பாடம் கவனித்தல், கரும்பலகைக் கவனிப்பு, ஆசிரியரின் கற்பித்தல் அணுகலைப் பார்த்தல் போன்றவற்றைப் பின் வரிசையில் அமரும் குட்டையான மாணவர்கள் கவனித்தலில் பின்னடைவுகளும் நடைமுறைச் சிக்கல்களையும் உருவாக்கும். மாணவர்களின் உயரப்படி அமர வைக்கப்படுவதே கற்றல் கற்பித்தலுக்கு உகந்தது ஆகும்.

பி.எட் உள்ளிட்ட கல்விசார் படிப்புகளின் பாடத்திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதையும், கற்பித்தல் சார்ந்து பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய நிபுணத்துவம் பெற்ற ஒரு நபருடன் கல்வியாளர்களின் நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும், தவறான பார்வைகள் நீக்குதல் மற்றும் சமூக நீதி மதிப்புகளை மேம்படுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்ட பாரபட்சமற்ற அணுகுமுறைகளையும் மற்றும் சமத்துவம் பற்றிய கருத்துக்களையும் பரிந்துரைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. 

அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களிலும் சமூக நீதியின் அடிப்படையில் பாடத் தலைப்புகளைச் சேர்ப்பது, சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாமல் சமத்துவ நோக்கிலான பாடப் பொருண்மைகள் அமைப்பது உட்பட பாடத்திட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மாணவர்களின் பாடத்திட்டம் மற்றும் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கிட கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மிகவும் கவனிக்கத்தக்க பரிந்துரைகளுள் ஒன்றாகும். 

பாடத்திட்ட உருவாக்கக் குழுக்களில் சமூக நீதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், சமூக சமத்துவம் சார்ந்த கண்ணோட்டங்களைப் பாடத்திட்ட உருவாக்கத்தில் கொண்டுவர முடியும். (இத்தகைய வலியுறுத்தலை மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலில் மிக விரிவாக முன்வைத்திருக்கிறேன்).

பாடத்திட்டம் மற்றும் வகுப்பறைச் செயல்பாடு சார்ந்து, நீதியரசர் சந்துரு அவர்களின் பரிந்துரைகளில் மிக முக்கியமான ஒன்று, அறநெறி வகுப்புகள் தொடர்பானது.  அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வாரந்தோறும் அறநெறி வழங்குவதற்கு ஒரு காலம் ஒதுக்க வேண்டும்.  மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம் போன்றவை உள்ளடக்கிய அறநெறி வழங்கப்பட வேண்டும் என்கிறது. இத்தகைய அறநெறி வகுப்புகள் பள்ளிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவைதான் என்றாலும், அவை பெயரளவுக்கான பாட வேளை ஒதுக்கீடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

அறநெறி சார்ந்த பொருண்மைகள் பெரும்பாலும் மொழிப் பாடம் சார்ந்தவை. அறநெறி சார்ந்த பாடக் கூறுகள் மாணவர்களுக்கு முழுமையாகப் போதிக்கப்பட வேண்டுமானால், அறநெறி மற்றும் மொழிப் பாடங்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும். ஆனால், அவை நடைமுறையில் வலியுறுத்தப்படுவது இல்லை. மற்ற முதன்மைப் பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அறநெறிப் பாடங்களுக்கோ மொழிப் பாடங்களுக்கோ வழங்கப்படுவதில்லை. 

உயர்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான மதிப்பெண்களில் மொழிப்பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயர்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான மதிப்பெண்களில் மொழிப்பாடங்களின் மதிப்பெண்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் நிலையில்தான், அறநெறி உள்ளிட்ட மொழிப் பாடங்களையும் மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவர். இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆகையால், அறநெறி சார்ந்த மொழிப் பாட மதிப்பெண்களையும் உயர்கல்விப் படிப்புக்கான சேர்க்கைக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதையும் அப்பரிந்துரையில் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம்.

நீதியரசர் சந்துரு அவர்கள் முன்வைத்திருக்கும் பரிந்துரைகளில் இன்னொன்று, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றத்தையும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுமாகும். அதாவது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம் மாற்றம் செய்திட வேண்டும் என்கிறது. அதேபோல,  சிஇஓக்கள், டிஇஓக்கள், பிஇஓக்கள் போன்ற உயர் பொறுப்பில் நியமிக்கப்படும் அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த சாதிப் பெரும்பான்மை இருக்கும் ஊர்களில் நியமிக்கக் கூடாது எனவும் என்கிறது. இத்தகையப் பரிந்துரையானது, மாணவர்களிடம் சாதிப் பாகுபாடுகள் உருவாவதற்கு ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும்தான் மூல காரணம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.  ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர்களிடையே சாதிப் பாகுபாடுகளை ஏற்படுத்தக் கூடியவர்கள் அல்ல. அத்தகைய நோக்கமோ அல்லது அதற்கான பணி முறைகளோ அவர்களுக்கு இருப்பதில்லை. கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு அத்தகைய நோக்கம் இருக்கவும் கூடாது. 

ஒரு சில ஆசிரியர்கள் அல்லது ஒரு சில கல்வி அதிகாரிகள்  அப்படி பாகுபாடு காட்டக் கூடியவர்களாய் இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே அவர்கள் இடம் மாற்றம் செய்யப்படவோ சட்ட ரீதியாகத் தண்டிக்கப்படவோ செய்திட வேண்டும். மாறாக, ஒட்டுமொத்த ஆசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் கண்டிப்பாக காலமுறையில் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது மறு பரிசீலனை செய்திட வேண்டிய பரிந்துரையாகும். 

இது போன்று, இருபது வகையான தலைப்புகளின் கீழ் பல்வேறு வகையான உடனடிப் பிரிந்துரைகளையும், மூன்று வகையான தொலைநோக்குத் திட்டங்களின் கீழ் வேறு சில பரிந்துரைகளையும் நீதியரசர் சந்துரு அவர்களின் அறிக்கை உள்ளடக்கி இருக்கிறது. இவ்வாறான பரிந்துரைகளின் சாராம்சங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் அரசு அதிகாரிகளும் கூட்டாக விவாதிக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டியது கடமையும் பொறுப்பும் ஆகும்.

கட்டுரையாளர்:

முனைவர் ஏர் மகாராசன்,

சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

திங்கள், 24 ஜூன், 2024

கருப்பொருட்களோடு சேர்ந்து பயணிக்கும் நிறைவைத் தரும் நிலத்தில் முளைத்த சொற்கள் - செ.தமிழ்நேயன்.


பொத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும் பழக்கம் அருகி விட்டது. படித்தல் பழக்கம் அருகிவிட்ட சூழலில் படைப்புகள் வெளிவருவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்தப் போராட்டச்சூழலுக்கு நடுவேதான் இன்றைய படைப்பாளர்கள் உள்ளனர். இந்தப் போராட்டக் களத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் ஏர் மகாராசன். 


ஆய்வுகள், கட்டுரைகள், தொகுப்பு என இவரது எழுத்துச் சிறகு பரந்து விரிந்துள்ளது. எழுத்துக்களில் பேசப்படாதவர்கள்,பேசப்பட வேண்டியவர்கள் பாகுபாடுநிலை இல்லாமல் அனைவருக்குமான படைப்புகளைத்தான் இதுவரை ஆக்கியுள்ளார். 

தற்போது, நிலத்தில் முளைத்த சொற்கள் என்னும் கவிக்கொத்துகள் வழியாக நெஞ்சில் தைத்த நினைவுகள் ஒவ்வொன்றையும் மிக அழகாக வடித்துள்ளார். பல்லுயிர் முளைக்கும் நிலத்தில் சொற்களும் முளைத்திருக்கின்றெனச் சொல்லேர் உழவராய் மகாராசன் பாவிசைத்துள்ளார்.

ஐம்பத்தி ஐந்து பாக்களில் நிலம், அரசியல், விடுதலை, உழவு, மக்கள், காதல், இயற்கை, இன்னல் என அனைத்துச் சூழலையும் சொல்லாக விதைத்துள்ளார்.சில பாக்களில் குமுகத்தின் தட்டிக்கழிப்புகள் பற்றியும் பதிவு செய்துள்ளார். தமிழ், தமிழர் அரசியல், வாழ்வு இடப்பெயர்வு குறித்த யாவற்றையும் பேசுகிறார்.

வறண்ட நிலத்தை முத்தமிடும் மழையைப் போல் வறண்டு போன தமிழர் நெஞ்சங்களை முத்தமிடும் சொற்கள் இந்நூலில் நிறைந்திருக்கின்றன. எளிய மக்களின் வழக்காறுகளைப் பதிவு செய்வது இழிவெனக் கருதியது தமிழ் இலக்கிய உலகம். அந்தக் கூற்றைச் சுக்குநூறாக நொறுக்கியதில் மகாராசனுக்கு தனித்த இடம் இருக்கின்றது.

"ஐந்திணைகளின் 
காமம் சுவைத்து
வழியெங்கும் கால்த்தடம் பதித்து
நீர்மையாய் வழிந்தோடும்
சொற்களால் நனைந்து நனைந்து
பசப்படித்தது நிலம்" எனத் தொடங்கி, அதிகாரச் செருக்கில் அடையாளம் இழந்து சிறைப்பட்டு இருக்கும் நிலம், மக்களின் ஏக்கம், வலி, பாடுகள் குறித்த அரசியல் நிகழ்வை நினைவுப்படுத்தி நகர்ந்து,
"கருவறைக்குள்
ஒளிந்திருக்கும் தெய்வம்
எப்போதும் போலவே
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும் …" என்கிறது.

நிலமிழந்த வலியைப் பாலசந்திரன் விழி வழியே கடத்தும் போக்கு நெஞ்சை இறுக்கம் கொள்ளச் செய்கிறது. அவனின் இறுதிப்பொழுதை மனதில் நிறுத்தி விழியை ஈரமாக்கி நின்றது. 

"பயமறியாது நிலைக்குத்தி நின்ற
அவனது கண்களில்
இனத்தின் பசியும்
நிலத்தின் வலியும்
நிரம்பி வழிந்தன'' என்கிறது நூல்.
"இன்னும் மிச்சமிருக்கும்
புழுதிக் காடுகளின்
பனையோலைத் தூர் இடுக்களில்
எச்சங்களை விதைத்துச்சென்ற
ஒரு பறவையின் நம்பிக்கை…." நகர் மய்ய விரிவாக்கத்தின் பெயரில் காவு வாங்கப்பட்டு அறுத்தொழித்த காடுகளின் கண்ணீர் மொழிகள் வழிகின்றன.

உழவர் பெருமக்கள் நேர்கொண்ட இன்னல்கள், கொடுங்கோலர்கள் நிகழ்த்திய வன்முறைக் காட்சிகளை நினைவூட்டும் சொல்லாட்சிகள் நூலில் நிரம்பியுள்ளன.

"வயிற்றுக்குச் சோறிடும்
உழவரையெல்லாம் சாகடித்து
கையளவு காணியவும் பறித்துக்கொண்டு" என, வேளாண் நிலங்கள் பறிக்கப்பட்டு, வறுமை நிலைக்குத் தள்ளிய அரசியல் குறித்தும் பேசுகிறார் ஆசிரியர்.
"குடும்பச்சிகளின் நடுகையில்
தூர் கட்டிப் பொதியாகும்
கரும்பச்சைத் தாள்களுக்குள்
வயிற்றுப் பிள்ளையாய் உள்ளிருக்கும்
வெங்கதிர்களைப் பரியச் செய்து
ஈன்று நிற்கும் நெற்பயிர் வாசம்"
என, நெல்லின் மக்கள் வாழ்வியல் சூழல், நெல் நடவு, மழை நீர் விழா குறித்து விவரிக்கும் குறிப்புகள் நெஞ்சை நெருக்கம் கொள்ளச் செய்கின்றன.
"வெறுமை ததும்பிய
வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில்
ஒருக்களித்துப் படுத்திருந்தது
யாருமற்ற தனிமை"... நுகர்வுப் பண்பாட்டில் ஊறிப்போன குமுகம், தனிமை தரும் வலியும், பாடுகள் குறித்தும் சிந்திப்பதில்லை. தனிமையின் நிழல் சுடும் என்னும் தவிப்பைத் தடம் காட்டி நிற்கிறது.

பெரும் இறுக்கத்தோடும் வெற்றுப் பெருமிதத்தோடும் இருந்த தமிழினத்தை நேர் செய்தது இயற்கைப் பேரிடரும் போரும் என்ற புறநிலைக் கூறுகிறார். 

"பலப்பல சாதி முகங்களின்
நிழல்களை ஒன்றாக்கியது
அந்நிலத்துப் போர் ..
ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த 
குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டிக் கொண்டு
ஒன்றாக்கிவிட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்து புயல்…"

பேரிடரும் பெரும் துன்பமும் தமிழர்களை ஒன்றாக்கி, காழ்ப்புணர்வை வீழ்த்தி, இடைக்காலச் சமநிலை நிறுத்தம் செய்த நினைவுகளின் வலிகள் இவை. தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டிய தேவைகளையும் அதன் வழிச் சொல்கிறார்.

"கரி தோண்டவும் 
எரிநெய் உறிஞ்சவும்
பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப்பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்தி பாழ்படுத்தும்"….
வேளாண் நிலங்கள் அரம்பர்களால் வேட்டையாடப்பட்டு, நிலமகள் பொழிவிழந்து அலங்கோலமாக நின்ற காட்சிகளை நினைவூட்டி நெஞ்சத்தைக் கணக்கச் செய்கிறார்.
"இறகின் கனமும்
பூவின் மணமும்
அரும்பிடும் வாழ்க்கை".
நெருக்கடி நிறைந்த வாழ்வியல் சூழலை இனிமையாக்குவது இயற்கையும் பூவுலகும் என மெல்லிய இறகுத் தூவல் கொண்டு வருடுகிறார்.

துவக்கம் முதல் முடிவு வரை சலிப்பு தட்டாமல் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போது பாக்களின் கருப்பொருள்களோடு சேர்ந்து பயணிக்கும் நிறைவைத் தருகிறது நிலத்தில் முளைத்த சொற்கள்.

வாழ்த்துகள் மகாராசன் அவர்களுக்கு.

அன்பு நிறைந்த வாழ்த்துகளோடு
செ.தமிழ்நேயன்
தமிழ் நாடு
மே 26 2024
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை:₹100
வெளியீடு: யாப்பு பதிப்பகம் 
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.