திங்கள், 24 ஜூன், 2024

கருப்பொருட்களோடு சேர்ந்து பயணிக்கும் நிறைவைத் தரும் நிலத்தில் முளைத்த சொற்கள் - செ.தமிழ்நேயன்.


பொத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும் பழக்கம் அருகி விட்டது. படித்தல் பழக்கம் அருகிவிட்ட சூழலில் படைப்புகள் வெளிவருவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்தப் போராட்டச்சூழலுக்கு நடுவேதான் இன்றைய படைப்பாளர்கள் உள்ளனர். இந்தப் போராட்டக் களத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் ஏர் மகாராசன். 


ஆய்வுகள், கட்டுரைகள், தொகுப்பு என இவரது எழுத்துச் சிறகு பரந்து விரிந்துள்ளது. எழுத்துக்களில் பேசப்படாதவர்கள்,பேசப்பட வேண்டியவர்கள் பாகுபாடுநிலை இல்லாமல் அனைவருக்குமான படைப்புகளைத்தான் இதுவரை ஆக்கியுள்ளார். 

தற்போது, நிலத்தில் முளைத்த சொற்கள் என்னும் கவிக்கொத்துகள் வழியாக நெஞ்சில் தைத்த நினைவுகள் ஒவ்வொன்றையும் மிக அழகாக வடித்துள்ளார். பல்லுயிர் முளைக்கும் நிலத்தில் சொற்களும் முளைத்திருக்கின்றெனச் சொல்லேர் உழவராய் மகாராசன் பாவிசைத்துள்ளார்.

ஐம்பத்தி ஐந்து பாக்களில் நிலம், அரசியல், விடுதலை, உழவு, மக்கள், காதல், இயற்கை, இன்னல் என அனைத்துச் சூழலையும் சொல்லாக விதைத்துள்ளார்.சில பாக்களில் குமுகத்தின் தட்டிக்கழிப்புகள் பற்றியும் பதிவு செய்துள்ளார். தமிழ், தமிழர் அரசியல், வாழ்வு இடப்பெயர்வு குறித்த யாவற்றையும் பேசுகிறார்.

வறண்ட நிலத்தை முத்தமிடும் மழையைப் போல் வறண்டு போன தமிழர் நெஞ்சங்களை முத்தமிடும் சொற்கள் இந்நூலில் நிறைந்திருக்கின்றன. எளிய மக்களின் வழக்காறுகளைப் பதிவு செய்வது இழிவெனக் கருதியது தமிழ் இலக்கிய உலகம். அந்தக் கூற்றைச் சுக்குநூறாக நொறுக்கியதில் மகாராசனுக்கு தனித்த இடம் இருக்கின்றது.

"ஐந்திணைகளின் 
காமம் சுவைத்து
வழியெங்கும் கால்த்தடம் பதித்து
நீர்மையாய் வழிந்தோடும்
சொற்களால் நனைந்து நனைந்து
பசப்படித்தது நிலம்" எனத் தொடங்கி, அதிகாரச் செருக்கில் அடையாளம் இழந்து சிறைப்பட்டு இருக்கும் நிலம், மக்களின் ஏக்கம், வலி, பாடுகள் குறித்த அரசியல் நிகழ்வை நினைவுப்படுத்தி நகர்ந்து,
"கருவறைக்குள்
ஒளிந்திருக்கும் தெய்வம்
எப்போதும் போலவே
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும் …" என்கிறது.

நிலமிழந்த வலியைப் பாலசந்திரன் விழி வழியே கடத்தும் போக்கு நெஞ்சை இறுக்கம் கொள்ளச் செய்கிறது. அவனின் இறுதிப்பொழுதை மனதில் நிறுத்தி விழியை ஈரமாக்கி நின்றது. 

"பயமறியாது நிலைக்குத்தி நின்ற
அவனது கண்களில்
இனத்தின் பசியும்
நிலத்தின் வலியும்
நிரம்பி வழிந்தன'' என்கிறது நூல்.
"இன்னும் மிச்சமிருக்கும்
புழுதிக் காடுகளின்
பனையோலைத் தூர் இடுக்களில்
எச்சங்களை விதைத்துச்சென்ற
ஒரு பறவையின் நம்பிக்கை…." நகர் மய்ய விரிவாக்கத்தின் பெயரில் காவு வாங்கப்பட்டு அறுத்தொழித்த காடுகளின் கண்ணீர் மொழிகள் வழிகின்றன.

உழவர் பெருமக்கள் நேர்கொண்ட இன்னல்கள், கொடுங்கோலர்கள் நிகழ்த்திய வன்முறைக் காட்சிகளை நினைவூட்டும் சொல்லாட்சிகள் நூலில் நிரம்பியுள்ளன.

"வயிற்றுக்குச் சோறிடும்
உழவரையெல்லாம் சாகடித்து
கையளவு காணியவும் பறித்துக்கொண்டு" என, வேளாண் நிலங்கள் பறிக்கப்பட்டு, வறுமை நிலைக்குத் தள்ளிய அரசியல் குறித்தும் பேசுகிறார் ஆசிரியர்.
"குடும்பச்சிகளின் நடுகையில்
தூர் கட்டிப் பொதியாகும்
கரும்பச்சைத் தாள்களுக்குள்
வயிற்றுப் பிள்ளையாய் உள்ளிருக்கும்
வெங்கதிர்களைப் பரியச் செய்து
ஈன்று நிற்கும் நெற்பயிர் வாசம்"
என, நெல்லின் மக்கள் வாழ்வியல் சூழல், நெல் நடவு, மழை நீர் விழா குறித்து விவரிக்கும் குறிப்புகள் நெஞ்சை நெருக்கம் கொள்ளச் செய்கின்றன.
"வெறுமை ததும்பிய
வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில்
ஒருக்களித்துப் படுத்திருந்தது
யாருமற்ற தனிமை"... நுகர்வுப் பண்பாட்டில் ஊறிப்போன குமுகம், தனிமை தரும் வலியும், பாடுகள் குறித்தும் சிந்திப்பதில்லை. தனிமையின் நிழல் சுடும் என்னும் தவிப்பைத் தடம் காட்டி நிற்கிறது.

பெரும் இறுக்கத்தோடும் வெற்றுப் பெருமிதத்தோடும் இருந்த தமிழினத்தை நேர் செய்தது இயற்கைப் பேரிடரும் போரும் என்ற புறநிலைக் கூறுகிறார். 

"பலப்பல சாதி முகங்களின்
நிழல்களை ஒன்றாக்கியது
அந்நிலத்துப் போர் ..
ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த 
குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டிக் கொண்டு
ஒன்றாக்கிவிட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்து புயல்…"

பேரிடரும் பெரும் துன்பமும் தமிழர்களை ஒன்றாக்கி, காழ்ப்புணர்வை வீழ்த்தி, இடைக்காலச் சமநிலை நிறுத்தம் செய்த நினைவுகளின் வலிகள் இவை. தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டிய தேவைகளையும் அதன் வழிச் சொல்கிறார்.

"கரி தோண்டவும் 
எரிநெய் உறிஞ்சவும்
பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப்பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்தி பாழ்படுத்தும்"….
வேளாண் நிலங்கள் அரம்பர்களால் வேட்டையாடப்பட்டு, நிலமகள் பொழிவிழந்து அலங்கோலமாக நின்ற காட்சிகளை நினைவூட்டி நெஞ்சத்தைக் கணக்கச் செய்கிறார்.
"இறகின் கனமும்
பூவின் மணமும்
அரும்பிடும் வாழ்க்கை".
நெருக்கடி நிறைந்த வாழ்வியல் சூழலை இனிமையாக்குவது இயற்கையும் பூவுலகும் என மெல்லிய இறகுத் தூவல் கொண்டு வருடுகிறார்.

துவக்கம் முதல் முடிவு வரை சலிப்பு தட்டாமல் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போது பாக்களின் கருப்பொருள்களோடு சேர்ந்து பயணிக்கும் நிறைவைத் தருகிறது நிலத்தில் முளைத்த சொற்கள்.

வாழ்த்துகள் மகாராசன் அவர்களுக்கு.

அன்பு நிறைந்த வாழ்த்துகளோடு
செ.தமிழ்நேயன்
தமிழ் நாடு
மே 26 2024
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை:₹100
வெளியீடு: யாப்பு பதிப்பகம் 
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக