சனி, 1 ஜூன், 2024

மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலம்: முனைவர் அரங்க மல்லிகா



தம்பி 'ஏர்' மகாராசன் மிகச்சிறந்த பண்பாட்டு அடையாள மீட்பர். நிலம், இனம், மொழி என்ற முக்கோணப்பரப்பில் தெளிந்த நல்லறிவோடு ஆய்வு செய்து வருபவர். 'பெண்மொழி', 'ஏறு தழுவுதல்', 'எழுத்துப் பண்பாட்டு மரபு', 'வேளாண் மரபு' போன்றவை குறித்து இவர் எழுதிய ஆய்வு நூல்கள் அதற்குச் சான்றுகளாகும். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் ஒரு பண்பாட்டு விஞ்ஞானியின் வேர்த் தடங்களை அடையாளம் காண முடியும். 

இவர் முன்மொழியும் பண்பாட்டின் அடையாளத்திற்குள் தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் ஈழம் சார்ந்த உணர்வுகள்தான் நிரம்பி வழிகின்றன. அவ்வுணர்வுகள் விடுதலைச் சிந்தனையையும் பாதுகாப்பு விழிப்பையும் கொண்ட ஆழமான புரிதலையும் தந்திருக்கின்றன. மேற்சொன்னவற்றின் நீட்சியாகத்தான், மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைப் பனுவல் அமைந்திருக்கிறது. 

வாழ்வின் புறச்சூழல் தாக்கத்தையும், கவிஞரின் அகவயக் கற்பனையையும் இணைத்துக் கவிதையின் கருத்தியலைக் கட்டமைக்கும் முயற்சிக்கு மொழி அடர்த்தி முதன்மைத் தேவையாகப் படுகிறது. அதனால்தான், இருவருக்கு இடையேயான உரையாடல்களில் 'சூழல்' பிரதிபலிக்கின்றது என்றால், அது மொழியால்தான் சாத்தியம் என்பார் வொலசினோவ். 

சங்க இலக்கியங்களில் காணலாகும் ‘கூற்று’ முறையில் அமைந்த கவிதைகள் பெரும்பாலும் அகச்சூழலையும் புறச்சூழலையும் புலப்படுத்தக்கூடியவை. அவ்வகையில், ஒரு யாழின் நரம்புக்கட்டுபோல சொற்கட்டுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன மகாராசனின் கவிதைகள். மொழி எனும் பத்தாயத்திற்குள் உலவும் இவரது கவிதைகள், தம் நிலத்தின் மீதான காதலையும் தவிப்பையும் ஏக்கத்தையும் கொண்ட அகச்சூழலையும் புறச்சூழலையும் காண்பிக்கின்றன.

ஆதிக் குடிகளின் நிலவாழ்வும், பச்சையம் காத்த உழைப்பின் வியர்வைத் துளியும், மூதாதைகளைத் தேடி அலையும் வேட்கையும் மிக அழகாகச் சொற்களால் ஒரு மாலைபோல கோர்க்கப்பட்டுள்ளன. உழுது போட்ட நிலத்தின் ஈரம் மொழியின் சொற்களாக வடிந்திருக்கின்றன. காலநதியில் நீராடிய தொல்குடிகளின் நீச்சலும் பாய்ச்சலும் நினைவுக் கிடங்கின் வழியாகச் சொற்களாகிக் கவிதைமொழியாகி வழிந்திருக்கின்றன. 

ஒரு நிலம் எப்படி  வளப்பமாய்ச் செழிக்கின்றது என்பதையும், அதே நிலம் எப்படி மெல்ல மெல்ல வாழ்விழக்கிறது என்பதையும் பல்வேறு காட்சிப்படிமங்களாகக் கவிதைகளில் தந்திருக்கிறார் மகாராசன்.

நகர்மயம், தொழில்மயம், வணிகமயத் தாக்குதல்களால் நிலமெல்லாம் பாழ்பட்டுச் சீரழிந்து போயின. பயிர் விளைந்த நிலங்கள், குறுகியகாலப் பயிர்கள், பதறாய்ப்போன விளைச்சல், மழை பொய்த்தல், நிலங்களை நம்பிக் காலங்காலமாய் உழுதவர்கள், கிராமத்து மனித உறவுகள், விலங்குகள், கண்மாய்க் கரைகள், துள்ளி நீந்தும் மீன்கள், சட்டையுரிக்கும் பாம்புகள்,  காளைகளின் திணவு, பசு மாடுகளின் ஈத்துகள், உணவுக் களஞ்சியம் என, கிராமம் சார்ந்த உயிர்ச் சூழல் வளங்கள் யாவற்றையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது நவீனச் சமூகமயம். 

இந்தச் சூழ்நிலையில், நிலத்தை நம்பியிருந்த ஒரு விவசாயியின் பரிதவிப்பும், கண் முன்னே தன் குழந்தையைப் பலி கொடுத்த ஒரு தாயின் அவலமுமாகத்  துயர் நிரம்பிய வாழ்வின் கோலங்களையும் நிலத்தில் முளைத்த சொற்களுக்குள் காண்பித்திருக்கிறார் மகாராசன். 

பூர்வீகத்தை மறைத்துப் பிடுங்கித் தின்னும் வல்லூறுகளின் வலிமைப்பிடியில் சிக்குண்டிருக்கும் ஒவ்வொரு நிலத்தின் விடுதலையும் உயிர்ப்பானவைதான். நிலத்துக்கான போர் எப்பொழுதும் கசப்பானதாகத்தான் இருக்கும்; உயிர்ப்பிச்சை கேட்கும்; காட்டிக்கொடுக்கும்; கயமை சூழும். ஆனாலும், ஒவ்வொரு இருளின் அடர்த்தியையும் மெல்ல மெல்லக் கிழித்து வெளிவரும் கதிர்க்கீற்றைப்போல, நிலத்தில் பெரு வெளிச்சம் பாய்ச்சும் ஒற்றை நம்பிக்கை மகாராசன் கவிதைகளுக்குள் ஓடும் இரத்த நாளத்துடிப்பாக இருக்கின்றது. ஓலங்களால் நிலம் விரிசலடைந்து கிடந்தாலும், தாயகத் தாகத்தில் இன்றும் நம்பிக்கை ஒட்டிக்கிடப்பதைப் பல கவிதைகளில் சுட்டிக் காண்பிக்கிறார் கவிஞர்.

மகாராசன் கவிதைகளில் நிலவியல், சூழலியல் சார்ந்த சிந்தனைகள்தான் நெல் முத்துக்களெனச் சொல் முத்துக்களாய் விரவிக் கிடக்கின்றன. நிலத்தின் கம்பீரம்தான் இவருடைய கவிதைச் சொற்களின் ஈரமாக இருக்கின்றது. நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் குயவர் பிசையும் மண்குழைவுபோலக் கவிதைகளில் ஒட்டிக் கிடக்கின்றன. 

இவரது கவிதைகள் வெவ்வேறு பாடுபொருட்களையும் கருப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒருவகையில் நிலத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலத்தில் முளைத்திருக்கும் சொற்கள், எங்கோ ஒரு மூலையில் ஒளித்து வைத்திருக்கக்கூடிய வாழ்வின் இரகசியங்களை, கடந்து வந்த அனுபவங்களை, இழந்துபோன வாழ்வின் சொர்க்கத்தை மீட்டெடுப்பதற்குத் துடிக்கின்றன.

நிரந்தரமற்ற வாழ்வை உணர்ந்து கொள்ளும் மனவலிமை, வாழ்வின் அன்றாடத் தவிப்பு, தனிமை, காதல், கனவு, வீரம், துரோகம், நேசித்த உறவுகள், இளவயது நினைவுகள் யாவும் கவிதைப் பூக்களாய் மிளிர்கின்றன. இவரது கவிதைகளில் இரசனையும் அவதியும் மட்டுமல்லாமல், தமிழ் நிலத்தைப் பாழ்படுத்தும் சதிவலைப் பின்னலை அறுக்கத் துணியும் கத்தரிக்கோல் சொற்களும் பரவி இருக்கின்றன. 

நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கு உரிய சூழலை உருவாக்கும் சமூக அமைப்பைக் கடுமையாகச் சாடுவதோடு, நிலவியல் சூழலை விட்டுவிட்டு வாழும் அவலத்தையும் சுட்டிக்காட்டி, வளரும் தலைமுறைக்கு நேர்ந்திட இருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்லும் கோடாங்கியாகவும் இருக்கிறார். அம்புகளைத் தொடுக்கும் சூத்திரம் அறிந்த அர்ச்சுணனைப்போல, மொழியின் சொற்களைக் கொண்டு கவிதை அம்புகளைத் தொடுத்திருக்கிறார் மகாராசன். 

நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப்போல நம்பிக்கையும் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்லும் ஆன்ம பலம், மகாராசன் எழுத்துகளின் அடையாளமாக இருக்கின்றது. 

மனித நாகரிகப் பரிணாமத்தில் நிலமும் பொழுதும்தான் முதல்பொருளாய் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக, ஆதிக்குடி உழவர்களின் நில வாழ்வும் பொழுதும் நிலத்தில் முளைத்த சொற்களின் மையப்புள்ளியாக அமைந்திருக்கின்றன. 

நெடுங்காலமாய் அப்பிக்கிடக்கும் மன இருளைக் கிழித்து, ஒரு மின்னல் வெட்டில் ஆதித் துன்பங்கள் மறைந்து பொழியும் மழையில் நிலத்தைப் பண்படுத்தி, பயிர் வளர்த்துச் செழிக்கக்கூடிய அறுவடைக்குக் காத்திருக்கும் அடர் சொற்களின் வேர்கள், மகாராசன் கவிதைகள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன. குறிப்பாக, நிலம் பாடிய தமிழ்க் கவிதை மரபை இவரது கவிதைகள் உயிர்ப்பித்துள்ளன.

மனித உடலின் இயக்கத்திற்குக்  காற்றும் நீரும் எவ்வளவு அவசியமோ அப்படித்தான் இந்த உடலின் தெம்புக்கு நிலமும் நிலம் சார்ந்த பொருட்களும் அடிப்படைத் தேவையாக அமைந்திருக்கின்றன.  நிலத்தின் பண்புகள் பலவும் வளமையான பெண் குறியீடுகளாகவே இருக்கின்றன. ஆதித் தாயின் சமூகப் பண்புகள், மனித வாழ்வின் மலர்ச்சிகள், ஐவகை நிலங்களின் வளமைக் கோலங்கள் போன்றவற்றைப் பெண் குறியீடுகளாய்க் காட்டும் அழகிய சொற்கட்டுகளில் பிணைத்திருக்கிறார் மகாராசன். 

ஒரு நிலத்தில் வாழ்ந்த சூழல் களைந்து தனிமைப்படுத்தப்படுவதையும், தனித்துப் பாடுபட்ட பாடுகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்க்கக்கூடிய பார்வையில், வலிகளுக்கு வலிகளால்  ஒத்தடம்தரும் இலைகளின் முடுச்சுகொண்டு சொற்களால் ஒத்தி எடுத்திருக்கிறார் மகாராசன். தனக்கு நெருக்கமான காடு கழனிகளில் வாழக்கூடிய உயிரினங்கள் பற்றிய மிக நுட்பமான கூர்ப் பார்வை இவரது கவிதைகளின் உயிர்நாடியாக இருக்கிறது. 

இவரது கவிதைகளில் செம்புலப் பெயல் மணம் மழைக்காற்றில் மிதந்து வருகிறது. காதலாகிக் கசிந்து கவிதை பாடுகிறது. காதலியின் பிரியங்கள் சுருக்குப் பைக்குள் முடிந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் பேச்சுக்கள் ஈரம் சொட்டச்சொட்ட பனிக்காலத் தேநீர்க் கோப்பைகளை நினைவுப்படுத்துகின்றன. சில நேரங்களில் நினைவுகள் நத்தைக்கூடாய் நகர்கின்றன. 

ஐவகை நிலங்களின் அழகியல் இழப்பையும், தாயக நிலத்தின் மீதான ஏக்கப் பெருமூச்சுகளையும், தமிழ் மொழியின் அடர்த்தியில் காட்சிப்படிமங்களாகப் பல கவிதைகள் காண்பிக்கின்றன. நிலமும் வாழ்வும் ஒரு தூக்கணாங்குருவியின் கூடுபோல, கவிஞரின் சொற்கள் பல அடுக்கு நினைவுகளாக ஆதித் தொன்மங்களை  மொழிக்கிடங்கில் பத்திரப்படுத்தி வைத்துள்ளன. இந்த மொழிக்கிடங்கில் இருந்து வெளிவரும் மகாராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூலானது, தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலைத்திருக்கப் போகிறது எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 

எதார்த்த வாழ்வின் போக்கைச் சுட்டிக்காட்டும் ஒரு படைப்பு, தனக்கு முன்னால் நிகழக்கூடிய நல்லவை - அல்லவை; ஆதிக்கம் - அடிமை; இன்பம் - துன்பம் என்ற எதிர் எதிர் நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமையும் கொண்டிருப்பது. அது காலத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கக் கூடியது. அந்த வரலாற்றைத் தீர்மானிப்பதில் மகாராசன் எழுத்துகளும் பங்காற்றி வருகின்றன. 

சமூகப் பண்பாட்டு ஆய்வாளராய்த் தனித்து மிளிரும் தம்பி மகாராசன், 'சொல் நிலம்' கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து,  'நிலத்தில் முளைத்த சொற்கள்' வாயிலாகவும் நவீனக் கவிதைப் படைப்பாளியாக ஒளிர்கிறார். 

மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலமாய் அமைந்திருக்கக்கூடிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' எனும் இக்கவிதைப் பனுவல் சிறப்படையவும், தமிழ்ப் படைப்புலகில் மகாராசனின் தனித்துவம் வளர்ந்து சிறந்திடவும் உளமார்ந்த அன்பைக் குவித்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,
முனைவர் அரங்க மல்லிகா,
 பேராசிரியர் & தலைவர் (ப.நி),
தமிழ்த்துறை,
எத்திராஜ் மகளிர் கல்லூரி, 
சென்னை.   
          
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை: உரூ 100/- 
(அஞ்சல் செலவு உட்பட),
வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக