வெள்ளி, 21 ஜூன், 2024

கார்காலத்துப் பசுங்கனவு - விசாகன்


மானுட அறத்தை வீழ்த்தும் குணாம்சம் கொண்ட மதவாதம் பீடிக்கத் தொடங்கிய கடந்த பத்தாண்டுகளில் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்து வருகின்ற அரசியல் மாற்றம், செழுமைமிகு சமூக மாற்றம், சூழலியல் மேம்மாடு, மொழியழிப்பு முயற்சியிலிருந்து தற்காத்தல் போன்றவற்றிற்கான சவால்மிகுந்த செயல்பாடுகளில் படைப்பிலக்கியவாதிகளின் பங்குபணி மகத்தானது. அவர்கள் தங்களுடைய எழுத்துகளால் வெளியெங்கும் நிரப்பிய அமைதிப் புரட்சியின் வீச்சு அடர்த்தியானது மாத்திரமல்ல, அலாதியானது. தமிழில் குறிப்பிடத்தக்க வகையில் சமீபத்திய ஆண்டுகளில் வெளிவந்த நாவல்கள், கதைகள், கவிதைகள் என பல படைப்புகள், சில கருங்காலிகளின் இருப்பைத் தகர்த்து வலதுசாரிகளின் அரசியல் வீழ்ச்சியைப் பறைசாற்றின. 

அந்தவகையில், மொழிசார்ந்தும் நிலம் சார்ந்தும் உருக்கொள்கின்ற தனது படைப்புகளின் வழியாக வலதுசாரிகளின் வீணாய்ப்போன கனவுகளில் பேருடைப்பைச் செய்து வருகின்ற சின்னஉடைப்பைச் சேர்ந்த தோழர் மகாராசன் பெரும் கவனங்கொள்ளத்தக்கவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கின்ற அவரின் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு இதற்கு மேலும் அணி சேர்க்கிறது.

நிலம், மனிதம், மொழி இந்த மூன்றுக்குமிடையேயான தனித்த இணைப்பின் விழுமியங்களை உணர்ந்துகொண்டவர்களின் சமூகம் உலக அளவில் மேம்பட்டதாக இருக்கிறது. எனவே வெகுமக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இது ஒரு தேர்ந்த அரசியல் செயல்பாடாகும். 

இவ்வாறான விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற வலதுசாரிகளின் பணிகளைவிட இடதுசாரிகளின் செயலூக்கம் பின்தங்கியிருக்கின்றது என்பது நமக்கான கெடுவாய்ப்பு. இதுபோன்ற தொய்வுகளை ஈடுகட்டுகின்ற இலக்கியப் பணிகளிலும் மகாராசனின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது. 

‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பு 55 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. கவிஞர் யுகபாரதியின் அணிந்துரை மற்றும் முனைவர் அரங்கமல்லிகாவின் மதிப்புரையோடு வந்திருக்கின்ற இந்த நூலை ‘யாப்பு’ வெளியிட்டிருக்கிறது. பக்கங்கள் 112, விலை 100. 

தனது கவிதைகளில் தோழர் மகாராசன் கையாண்டிருக்கின்ற சொற்களை இன்றைய தலைமுறையினர் வாசிக்கின்ற வாய்ப்பு அமையுமானால் தமிழின் உன்னதத்தைப் புரிந்துகொள்ளும் நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். “மகாராசன், தன்னுடைய கவிதைகளின் வெளியைச் சொற்சேர்க்கைகளின் வழியே கட்டமைக்கிறார்” என்கிற கவிஞர் யுகபாரதியின் கூற்றை மேற்கண்ட எனது கருத்துக்குச் சான்றாக வைக்கின்றேன். 

சரி, இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகளின் மையப் பாடுபொருள் என்னவென்று நாம் கவனித்தோமானால், நிலம், மனிதம், மொழி இவைகளின் விழுமியங்களே கவிதைகளின் ஒவ்வொரு சொற்களிலும் தோய்ந்து கிடக்கின்றன. நிலமிழந்தவர்கள் மற்றும் நிலமற்றவர்களின் வலியின் பிரதியாக இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் இருக்கின்ற நிலையில், மொழி தேய்ந்த கதையும், மனிதம் அற்றுப்போன கையறு நிலையையும் நிலமிழந்தவர்களின் வலியின் வழியே கடத்தப்படுகின்ற கதைகள் நம் மனக்கண் முன்னே விரிகின்றது. 

“புயலடித்துக் கூடிழந்த குஞ்சுகளும்
வீடிழந்த சம்சாரிப் பிஞ்சுகளும்
குளிரில் ஒடுங்கி நடுங்கித் தவித்தன.
ஊருக்குச் சோறு போட
உழைத்த சனமெல்லாம்
ஒரு வாய் சோற்றுக்கும்
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கித்துப் போனது நிலம்.

பச்சிளம் பிள்ளைகளைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளாய்
அரற்றித் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி.
சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி
சாவிலும் கொடிது” .
தொகுப்பில் உள்ள இந்த 20 வது கவிதை ஒரு சோற்றுப்பதம்.

சமீபத்தில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் ஒரு உரையில், வைரமுத்து பாடல்களில் பல்லவி வரிகளில் விரிகின்ற காட்சிகள் குறித்து சிலாகித்திருந்தார். உதாரத்திற்கு ‘பனிவிழும் மலர்வனம்’ என்று தொடங்கும் பாடலைச் சுட்டிக்காட்டினார். அதைப்போல மகாராசன் கவிதைகளில் வைத்திருக்கின்ற காட்சிப் படிமங்கள் அபாரமானவை, மட்டுமல்ல சமகாலச் சூழலில் அபூர்வமானவை.

 ‘பனையோலைத் தூர் இடுக்கு’ ‘கல்லடுக்குகளின் செதில்கள்’ ‘கோபுர நிழல் மறைப்பு’ ‘பசப்பூறிய பூசனத்தின் ஈரம்’ ‘குலையோடு சரிந்த வாழை’ ‘தான்தோன்றிப் புற்களின் வாசம்’ …….. என தொகுப்பு முழுமைக்குமே உயிர் உருக்கும் காட்சிப் படிமங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

‘ஆறுகளின் நாவுகள் ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன’ என்ற வரிகள் உள்ள 52 வது கவிதை இத்தொகுப்பின் உச்சமாக இருக்கிறது என்பது எனது கணிப்பு. 

மனிதத்தின் பாடுகளையும், நிலம் படுகின்ற அவஸ்தைகளும் சொல்லிச்செல்கின்ற ஒரு படைப்பாளர் அதனூடாக எப்போதும் நம்பிக்கை விதைகளையும் எதிர்காலக் கனவுகளையும் விதைத்து வருவார் என்பது இயல்பு. மகாராசன் சொல்கிறார்…

“பூஞ்செடிகளின்
இலைகளைத் தைத்து
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பெருமரத்து வேர்களின்
நுனி முடிச்சுகளோடு
கிளையில் துளிர்க்கும் இலைகளின்
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும்
அரும்பிடும் வாழ்க்கை
இனிதுதான்.

எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பிற்கென சாகித்திய அகாடமி பெற்ற விருதாளர், சற்றேறக்குறைய 75 வயதைக் கடந்த சா.தேவதாஸ் அவர்களைக் காண நான் அவருடைய ஊருக்குச் சென்றிருந்தபோது, அவருடைய வீடு விசாரிக்கையில் அக்கம் பக்கத்து குடியிருப்போருக்குக்கூட அவர் பெயர் தெரியவில்லை என்கின்றபோது அவரின் எழுத்தின் வீரியம் எப்படித் தெரியக்கூடும்! அதுபோன்றதொரு அவலநிலை சமகால எழுத்தாளருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். 

ஒரு நடுத்தர வயது மக்கள் படைப்பாளர், புனைவு, அபுனைவு என சுமார் 20 நூல்கள் எழுதிய, தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர் மகாராசன் இதோ கூப்பிடு தொலைவில்தான் இருக்கின்றார். அவருடைய படைப்புகள் தமிழக பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை இலக்கிய அமைப்புகளுக்கு இதன் மூலமாக வைக்கின்றேன். 

அதோடு, சமகாலத்தில் வந்த கவிதைத் தொகுப்புகளில் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ கவிதைகளில் கையாளப்பட்டிருக்கின்ற மொழியின் வீச்சு கனமானது என்கின்ற புரிதலின் அடிப்படையில், ஒரு கடைக்கோடி வாசகனாய் மகாராசனின் இந்த ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ தொகுப்பிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பிற்குப் பரிந்துரைக்கின்றேன். 

தோழர் மகாராசனின் படைப்புகள் கோடான கோடி தமிழ் வாசகர்களுக்குச் சென்றடைய எனது வாழ்த்துகள்!

கட்டுரையாளர்:
எழுத்தாளர் விசாகன்,
பதிப்பாளர், பன்முக மேடை,
தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக