சனி, 1 ஜூன், 2024

ஒளிரும் ஒத்தடச் சொற்கள்: கவிஞர் யுகபாரதி




பண்பாட்டுத் தளத்தில் கவனமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றிவரும் ஏர் மகாராசன், என் நேசத்துக்குரியவர். அவருடைய எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். கடந்து இருபது ஆண்டுகளில் வேளாண் மரபின் வேர்க்கால்கள் எவையென்னும் புள்ளியைத் தன்னுடைய இடையறாதத் தேடல்களால் அவர் தொட்டிருக்கிறார். 

கட்சி கட்டும் நோக்கத்துடன் செயல்படும் ஆய்வாளர்களுக்கு மத்தியில், தன்னியல்பாக அவர் செய்துவரும் ஆக்கப்பூர்வமான அவதானிப்புகள் பாராட்டுக்குரியவை. அவருடைய ஆய்வுப் பார்வைகள் ஒவ்வொன்றும் என்னைப் பல்வேறு சமயங்களில் ஆச்சரியப்பட வைத்துள்ளன.

தற்போது `நிலத்தில் முளைத்த சொற்கள்’ எனும் கவிதை நூலுடன் வந்திருக்கிறார். ஏற்கெனவே வெளிவந்த அவருடைய `சொல் நிலம்’ கவிதைகளே இன்னுமே என் நினைவில் இருந்து அகலவில்லை. அப்படியிருக்கையில் அடுத்தொரு நூலை வாசிக்கத் தந்து, அதற்கு அணிந்துரையும் கோரியிருக்கிறார். 

ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். முதல் வாசிப்பில் பிடிபடாத பலவும் அடுத்தடுத்த வாசிப்பில் என்னை அதீதமாக ஆட்கொண்டன. சொற்களைக் கட்டியாளும் மகாராசனாகவே இத்தொகுப்பு நெடுகிலும் அவர் தென்படுகிறார். 

`வெறுமை நிரம்பிய / மவுனத்தின் குளக்கரையில் / புல்லாங்குழலாய் / ஆழப் புதைத்திருக்கும் வேர்களை / இறுகப் பற்றிய ஈரமண்’ என்றொரு கவிதையில் எழுதியிருக்கிறார். அவ்வரிகள் என்னை என்னவோ செய்தன. 

மண்ணிசை என்று ஒற்றை வார்த்தையில் கடந்துவிடுவதை உள்நுழைந்து விளக்கியிருக்கிறார். அவருடைய ஆய்வுமனம், கவிதைகளின் ஊடேயும் பயணிக்கிறது. சொற்களின் சுருதியில் இசைமீட்டும் அவர், அக்கவிதையின் இறுதியை, `மண்மீட்டிய வேர்களின் இசை / காடெல்லாம் மணத்துப் பரவியது’ என அமைத்திருக்கிறார். `மண்மீட்டிய வேர்களின் இசை’ என்ற அவருடைய ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். 

திரையிசையில் எப்படியாவது மண்ணையும், வேரையும் சொல்லிவிட மாட்டோமா என ஏங்கித் திரியும் எனக்கு, அவ்வரிகள் எவ்வகையான உணர்வுகளை வழங்கியிருக்கும் என்பதை ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். 'காடெல்லாம் பூ மணக்க’ என்று `ஜிப்ஸி’ திரைப்படத்தில் நானெழுதிய ஒரு பல்லவி, அந்த நாளை அழகாக்கியதை மறுப்பதற்கில்லை. ஒரு நல்ல கவிதை, மேலும் சில வரிகளையும் நினைவுகளையும் மீட்டும் என்பது பொய்யில்லை.

மகாராசனின் அக்கவிதை கொடுத்த உந்துதலில் பாரதி இசை குறித்து என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என தேடத் தொடங்கினேன். இசை எங்கிருந்து வருகிறது அல்லது தோன்றுகிறது என்பது பற்றி பாரதியும் ஒரு கவிதையில் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியே இசை எனும் தெளிவில் இருந்தே அவர் அக்கவிதையை எழுதியிருக்கிறார். எனினும், அவர் காதில் விழும் ஒலி, கண்ணனின் காதலே என்பார். 

`எங்கிருந்து வருகுவதோ / ஒலி / எங்கிருந்து வருகுவதோ’ எனத் தொடங்கும் அந்தக்கவிதை, குன்று, கொம்பு, அலை, இலை, ஆறு, காடு, பறவை, வாத்தியம் எனச் சகலத்தையும் வட்டமிட்டுச் செல்லும். அந்த வட்டத்திற்குள் அடங்காத ஒன்றுதான் இசையென்னும் முடிவிற்கு வருகையில் கவிதை நிறைந்துவிடும். `கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடி’ என ஒலிக்கு உரையெழுதியவர், `காதிலே அமுது / உள்ளத்திலே நஞ்சு’ என்பார். 

அத்துடன் முடித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், அவரோ அதற்கு மேலேயும் போய், `பண்ணென்றாமடி பாவையர் வாடப் / பாடி எய்திடும் அம்படித் தோழி’ என்றிருப்பார். பாடலென்பது பாவையர் வாட, கண்ணன் எய்திடும் அம்பாம். ஆனால், மகாராசனுக்கோ இசையென்பது ஈரமண்ணின் வாசனையாகத் தோன்றுகிறது. 

மகாராசன், தன்னுடைய கவிதைகளின் வெளியைச் சொற்சேர்க்கைகளின் வழியே கட்டமைக்கிறார். ஒரு கவிதையில், `துரோகப் பருந்து, ஊழிப் பாம்பு’ என்று யோசித்திருக்கிறார். கொத்திச்செல்லும் குணமுடையதே பருந்து. அதை, ஏன் துரோகத்துடன் இணைத்திருக்கிறார் என்பதுதான் விசேஷம். 

குஞ்சுகளைத் தூக்கிச்செல்லும் கிருஷ்ணப் பருந்துகளை மனதில் வைத்தே அவர் அச்சொல்லை ஆக்கியிருக்கிறாரோ எனத் தோன்றிற்று. இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் பறவையியலாளர்கள் புதிய மாற்றமொன்றை நிகழ்த்தினர். அதுவரை, `பறைப்பருந்து’ என்றழைக்கப்பட்ட ஊர்ப் பருந்துக்குக் `கரும்பருந்து’ என்று பெயரிட்டனர். பறவையில்கூட பறைப்பருந்து, பாப்பாரப் பருந்து என்னும் பேதமையைக் களையும் முயற்சியே அது. ஆனாலும், என்ன பிரச்சனையென்றால் பறைப்பருந்திற்குப் பெயரை மாற்றியவர்கள், பாப்பாரப் பருந்தான கிருஷ்ணப் பருந்தை அப்படியே பறக்கவிட்டதுதான். கிருஷ்ணப்பருந்து என்பதால் அது, அசைவத்தை உண்ணாமல் இருக்கிறதா என எழுத்தாளர் நக்கீரன் ஒரு கட்டுரையில் கேட்டிருக்கிறார். 

பெயர்களும் சொற்களும் மிக முக்கியமானவை. ஒரு சொல்லோ பெயரோ எப்படி உருவாகிறது என்பதுதான் அரசியல். மகராசன், அந்த அரசியலை மிகத் துல்லியமாக விளங்கிக்கொண்டவர். எனவே அவர் சொற்களையும் பெயர்களையும் கவனமில்லாமல் எங்கேயும் கையாளுவதில்லை. அதேபோல `ஊழிப்பாம்பு’ என்பதிலும் ஒரு குறியீட்டைக் கொண்டுவருகிறார். நிலம் சார்ந்தும், களம் சார்ந்தும் சிந்திக்கும் மகாராசன், ஒவ்வொரு கவிதையிலும் வைதீக எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார். அவர் எழுத்தில் வெளிவந்த `பண்பாட்டு அழகியலும் அரசியலும்’ என்னும் நூலில், மேலதிகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

ஒரு கவிதையோ கலையோ அதன் அழகியலும் அரசியலும் எங்கிருந்து உருவாகின்றன என்னும் தெளிவு அவருக்குண்டு என்பதால் சொற்களை அவர் பொருத்தமாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்துகிறார்.

தொடர்ச்சியாக வேளாண் மரபின் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அவர், இலக்கியத் தரவுகளின் மூலமும், இன்னபிற ஆதாரங்களைக் கொண்டும் தமிழ் அடையாளத்தின் மீட்புப் போராளியாகத் திகழ்ந்து வருகிறார். காலத்தின் தேவை உணர்ந்தும், வரலாற்றின் அவசியம் கருதியும் உழைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்றுகூடச் சொல்லிவிடலாம். 

அவருடைய அறிதலில் மிக முக்கியமானதாக எனக்குப் படுவது, வேளாண் மரபை எத்தகைய ஒவ்வாமையுடன் ஆரியம் அணுகியது என்னும் ஆய்வு. பலரும் கவனிக்கத் தவறிய திரிகடுகத்தின் `கழகத்தால் வந்த பொருள் காமுறாமை / பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்’ என்னும் வரியிலிருந்து தன்னுடைய ஆய்வை மேலெடுத்துச் சென்றிருக்கிறார். 

அதுமட்டுமல்ல, ஆசீவகம், பெளத்தம் போன்றவற்றுக்கும் வேளாண் மரபிற்கும் உள்ள தொடர்ப்பையும் துலக்கப்படுத்தியுள்ளார். ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனின் அடையாளத்தோடும் சாயலோடும் எவ்விதத்திலும் வேளாண் மரபிற்குத் தொடர்ப்பில்லை என்பதையும் நிறுவி இருக்கிறார். 

மகாராசனின் கவிதைகளை வாசிக்கும்பொழுது அவர் ஏற்கெனவே ஆய்ந்து தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முன் வந்து நிற்கின்றன. அவை அவருக்கு நல்லதா, கெட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், வெறும் அனுபவத்திற்காகக் கவிதைகளை வாசிப்பவர்களையும் உத்தேசித்து அவர் எழுதியிருக்கிறார். 

ஆழ்ந்து வாசிப்பவருக்குக் கருத்தியலைக் கடத்தும் இக்கவிதைகள், இரண்டாம் தரப்பினரையும் ஏமாற்றுவதில்லை. `உழவு நிலத்தின் / ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்து / முளைகட்டிய விதைச் சொற்கள் / வெண்முகம் காட்டிச் சிரித்தன’ என ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். உண்மையில், அவர் கவிதைகளுக்கு அவரே எழுதிக்கொண்ட அணிந்துரையாகவும் அவ்வரிகளைக் கருதலாம். 

நூல் முழுவதிலும் வயல்வாடை வீசுகிறது. உழவுக்குடியின் உக்கிரங்களும், ஓலங்களும் வேகத்துடன் வெளிப்படுகிறது. கசிந்துருகும் காதலைக்கூட மண்ணில் புரட்டி எடுத்த சொற்களைக் கொண்டே தீட்டியிருக்கிறார். நேரடித் தன்மையுடன் கவிதைகள் அமைந்திருந்தாலும், தோண்டத் தோண்ட வெவ்வேறு பொக்கிஷங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. மகாராசனின் கவிதைகளில்தான் மறுபடியும் தட்டானையும் முக்குளிப்பானையும் தரிசிக்க முடிகிறது. 

நவீனக் கவிதைகள் எனும் பெயரில் இன்று வந்துகொண்டிருக்கும் தட்டையான சொல்முறையை மகாராசன் அறவே தவிர்த்திருக்கிறார். கண்ணையும் மண்ணையும் விரிக்கும் இடத்திலெல்லாம் அவருக்குக் கவிதைகள் கிடைத்திருக்கின்றன.

எனக்குமே ஐந்திணை மரபை அடியொற்றி இன்றைய கவிதைகளை எழுத இயலுமா என்னும் கேள்வி, அவ்வப்போது எழுவதுண்டு. நுகர்வும் வணிகமும் பெருத்துவிட்டச் சூழலில் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்றுகூட எண்ணியிருக்கிறேன். ஆனால், மகாராசனோ என் எண்ணங்களைப் பொய்யாக்கும் விதமாக, `வெறுமை மண்டியிருக்கும் / வாழ்நிலத்தில் / கூந்தல் சூடத் தவிக்கின்றன / கைக்கிளைப் பூக்கள்’ என ஒரு கவிதையைத் தொடங்கியிருக்கிறார். அக்கவிதையில், `கிளைக் காம்பில் காத்திருக்கின்றன / பெருந்திணைக் கனிகள்' எனவும் எழுதி, என்னுடைய எல்லா மனத்தடையையும் மாற்றியிருக்கிறார். அனுபவங்களைப் பகிர்வதே கவிதைகள் எனப் பலரும் சொல்லி வருகையில், கவிதைகளையே அனுபவங்களாக ஆக்கிவிடுபவராக மகாராசன் தென்படுகிறார். 

தமிழிலக்கியப் பரப்பிலும், ஆய்வுப் புலத்திலும் மகாராசனுக்குத் தனியிடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், கவிதையிலும் தனக்கான இடத்தைப் பெற கைக்குட்டையைப் போல் இக்கவிதை நூலைப் போட்டிருக்கிறார். முதல் தொகுப்பிற்கும், இரண்டாம் தொகுப்பிற்கும் இடையே காலத்தின் இடைவெளி அதிகமென்றாலும், ஆக்கி அளித்துள்ள கவிதைகளின் அடர்த்தி குறையவில்லை.

விட்ட இடத்திலிருந்து கனவுகளையும் கவிதைகளையும் தொடங்க முடியாது என்பர். ஆனால், மகாராசன் தன்னுடைய மொத்தக் கனவுகளையும் நிலத்தில் முளைத்த சொற்களில் நிரப்பியிருக்கிறார். அவர் தொடர்ந்து கவிதைகளை எழுத வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை. 

சொற்களின் உச்ச பட்ச பயன் என்ன? அவரே ஒரு கவிதையில், `குவிந்து கிடக்கும் / ஒத்தடச் சொற்களால் / தணிந்து போகின்றன வலிகள்’ என்றிருக்கிறார். கவிதைகளை வாசிப்பதன் மூலம் ஆகக்கடைசியாக நமக்குக் கிடைப்பதும் அதுதானே?   

வாழ்த்துகள் மகாராசன்.

அன்புடன்
கவிஞர் யுகபாரதி,

*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை: உரூ 100/- 
(அஞ்சல் செலவு உட்பட),
வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.




1 கருத்து:

  1. 👌 மண் மீட்டிய வேர்களின் இசை- வரி மிக அருமை. நயமும் செறிவும் மிக்க கற்பனை

    பதிலளிநீக்கு