கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த பார்வை உண்டு; கொள்கை உண்டு. கொள்கையின் அடிப்படையிலேயே கவிதை எழுதி வருகின்றனர். நிலம் சார்ந்து கவிதைகளை படைத்து வருபவர் மகாராசன். 'சொல் நிலம்' கவிஞரின் முதல் தொகுப்பு. இரண்டாம் தொகுப்பாக வந்துள்ளது 'நிலத்தில் முளைத்த சொற்கள்'. இரண்டுமே நிலம் சார்ந்தது. நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள் எனப் பல நூல்களைத் தந்துள்ளார் அவர்.
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்!
பலமிழந்து போனால்
இனம் அழிந்து போகும்!
ஆதலால் மானுடனே
தாய்நிலத்தை
காதலிக்கக் கற்றுக்கொள்!
எனப்பாடிய
தமிழீழப் பாவலர்
புதுவை இரத்தினதுரை
அவர்களுக்கு நிலத்தில் முளைத்த சொற்களை சமர்ப்பித்து, நிலம் மீதான தன் மதிப்பைத் தெரிவித்துள்ளார். நிலத்தின் மீது எதை வேண்டுமானாலும் இழக்கலாம். மனிதன் ஒருபோதும் நிலத்தை இழக்கக் கூடாது.
'அண்டத்தின் ஆதியை உணர்ந்து
மூதாதைகளின்
தொன்மங்களைத் தேடி
தொல் நிலத்தில் வேர்கள் பாய்ச்சி
உறவுக் கிளைகள் சேர்த்து
பேரிசைப் பண்கள் பாடி
மூச்சுக் காற்றை நிறைத்து
ஐந்திணைகளின் காமம் சுவைத்து
வழியெங்கும் கால்த்தடம் பதித்து
நீர்மையாய் வழிந்தோடும்
சொற்களால் நனைந்து நனைந்து
பசுப்படித்தது நிலம்'
எனத் தொடங்கும் கவிதை,
'கருப்பம் கொண்ட
பிள்ளைத் தாய்ச்சியாய்
உயிர்த்தலைச் சுமக்கின்றன
நிலம் கோதிய சொற்கள் '
என முடிகிறது.
சொற்களால் நனைந்து நனைந்து பசப்படித்த நிலம் என்றவர், உயிர்த்லைச் சுமக்கின்றன
நிலம் கோதிய சொற்கள் என்கிறார். நிலமே முக்கியம்.
ஒவ்வோர் ஊருக்கும் ஒரு வரலாறு உள்ளது போல், ஒவ்வோர் ஊரிலுள்ள ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. வரலாறு என்பது முக்கியம்.
'எழுதப்படாமலே போனது
எனதூர்த் தலப்புராணம்'
என்று வருந்தியுள்ளார். தலப்புராணங்கள் எழுதி வைக்கப்பட்டாலே தலைமுறையினர் வழிபட உதவும். தெரிந்து கொள்ள முடியும். மேலும்,
'கருவறைக்குள்
ஒளிந்திருக்கும் தெய்வம்
எப்போதும் போலவே
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும் '
என , தெய்வத்தையும் குற்றம் சொல்கிறார். தெய்வங்கள் ஒளிந்திருப்பது போல உண்மைகளும் ஒளிந்திருக்கும்.
'வெறுமை நிரம்பிய
மவுனத்தின் குளக்கரையில்
புல்லாங்குழலாய்
ஆழப் புதைந்திருக்கும் வேர்களை
இறுகப் பற்றியது ஈரமண்.
துளைகள் ஏதுமின்றி
வேர்கள் இசைத்ததில்
கிளைகள் தலையாட்டி
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
காட்டுச் செடிகள்.
மண்மீட்டிய வேர்களின் இசை
காடெல்லாம் மணத்துப் பரவியது '
என்னும் கவிதை காட்சியாக மனத்துள் விரிகிறது. மணமும் வீசுகிறது. வேர்கள் இசைத்ததில் கிளைகள் தலையாட்டி பூக்களைத் தூவி சிரிக்கின்றன என்பது மண்ணின் மகிழ்ச்சியைக் காட்டுகிறது. வசந்த காலம் என்பதைக் குறிக்கிறது. நிலம் எப்போதும் ஒரு கொண்டாட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்கிறார்.
மனித வாழ்வு என்பது வலிகளால் நிறைந்தது. வலிகள் பல வழிகளில் வந்தடைந்து விடுகின்றன. வலிகளைத் தடுக்க வழிகள் இல்லை. இன்றைய தேவை ஒத்தடங்கள்தான்.
'குவிந்து கிடக்கும்
ஒத்தடச் சொற்களால்
தணிந்து போகின்றன வலிகள் '
என்னும் வரிகள் மூலம் ஒத்தடங்கள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். இதுவொரு ஆறுதலாக உள்ளது. ஒத்தடங்கள் இருக்கும் வரையில் வலிகள் குறித்த கவலை கிடையாது.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இதயத்தில் சிறிதும் ஈரமின்றி கொன்றழித்தது. பெண்களையும் விடவில்லை. இறுதியாக இளம் பாலகன் பாலச்சந்திரனையும் விடவில்லை. இனவெறிக்கு இரையாக்கிக் கொண்டார்கள். கோபம் கொண்ட கவிஞரின் கவிதை,
'அரை நூற்றாண்டு பெருந்தாகம்
நிலமெங்கும் புதைக்கப்பட்டது.
பசித்த கண்கள்
பழி தீர்க்காமலே மூடிக்கொண்டன'
என முடிகிறது.
பெருந்தாகம் புதைக்கப்பட்டது என்பதும், பழி தீர்க்காமலே மூடிக்கொண்டன என்பதும் ஈழப்பிரச்சனையை ஈரமின்றி தமிழர்களைக் கொன்றே முடிவிற்குக் கொண்டு வந்த கொடுமையைக் கூறியுள்ளார். எனினும்,
'தப்பிய புலிகளின்
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்'
எனவும் ஒரு கவிதையில் எழுதி நம்பிக்கையூட்டியுள்ளார்.
'ஐநிலத்தின் வனமெங்கும்
பறவையின் எச்சங்கள்.
பேரினத்தின் விழுதுகள்
எச்சங்களின் விதைகளில்
துளிர்விட்டு முளைத்தன.
பச்சைய வனப்பேறி
செந்நிறத்தில் பூத்துக் காய்த்திருக்கிறது
செம்மூதாய்த் தொல்நிலம்.'
என்பதிலும் ஓர் எதிர்காலத்தைப் பசுமையாகக் காட்டியுள்ளார்.
நிலம் என்பது வெறும் நிலம் மட்டுமல்ல. மனிதர்கள் வாழுமிடமாக இருக்க வேண்டும். மனிதர் இல்லாத பூமி மயானத்திற்குச் சமம்.
'பறவைகள் திரும்பிய போது
நாதியற்றுக் கிடந்தாள்
நிலத்தாள் மட்டும் '
என, நிலம் தனிமையில் ஒரு பாலைவனமாய் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். நிலத்தை நிலத்தாள் எனப் பெண்ணாக்கி எழுதியுள்ளார்.
'பச்சிளம் பிள்ளையைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது
ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளாய்
அரற்றித் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி '
என்னும் கவிதையில் நிலத்தாய்ச்சி என்கிறார்.
வாழ்க்கை என்பது கூட்டலா கழித்தலா என்று ஒரு விவாதம் உண்டு. வாழ்க்கை கூடிக்கொண்டே போகிறது என்பாரும் உண்டு. கழிந்து கொண்டே செல்கிறது என்பாரும் உண்டு. எப்படியோ காலத்தில் கரைந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
'காலத்தில் கரைதலும்
வாழ்வின் நிமித்தம் ஆனது.'
என்கிறார். காலத்தில் கரையாதார் வாழ்க்கை இல்லை.
நிலங்கள் என்றால் விவசாயம்தான் நினைவிற்கு வரும். நிலத்தில் இறங்கி உழும் விவசாயிகளின் பாதங்கள் கல், முள்ளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்; புண்ணும் உண்டாகியிருக்கும். நிலத்தில் இறங்கி உழைக்கும் பாதங்கள் தொழுதலுக்குரியவை.
'நிலத்தோடு தோய்ந்தும் தேய்ந்தும்
உழைப்புத் தடங்களால்
புடம்போட்ட பாதங்கள்
வெறும் பாதங்கள் அல்ல.
உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள்
நிலமெனும் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள் '
என , விவசாயிகளின் பாதங்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்வதால் கொப்புளங்கள் பட்டு விடுகின்றன என்கிறார். விவசாயிகள் நிலையை எடுத்துக்காட்டியுள்ளார்.
'சொற்களில் நனைந்து
மனதை உலர்த்திக்கொண்டு
நெருஞ்சிப் பூவாய்க்
கண் சிமிட்டுகிறது
நம்மைப் பற்றிய கவிதையொன்று,'
என்றொரு கவிதை. நம்மைப் பற்றிய கவிதை ஒன்றுள்ள இத்தொகுப்பில், மற்றவை நிலத்தைப் பற்றிய கவிதைகள்.
நிலம் நிறைந்திருக்கும் இத்தொகுப்பில் பறவை பறந்திருப்பதை, பரந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு கவிதை முழுக்க பறவையைப் பற்றியே பேசுகிறது. துரோகப் பருந்துகளாலும் ஊழிப்பாம்புகளாலும் கூடழிக்கப்பட்டு குடும்பம் சிதைக்கப்பட்ட பறவைகளின் வாழ்வை எழுதியுள்ளார்.
'புதுக்கூட்டை வேய்ந்த பிறகு
தனித்திருந்த பறவையின்
சிறகைக் கோதி நீவி
ஆண் பறவை அழைத்தது.
பள்ளத்து நீரில் முங்கிக் குளித்து
சிறகை உலர்த்திய பெண் பறவை
புல்லின் தாள்களை இணுகிக்கொண்டு
புதுக் கூட்டில் மெத்தை செய்தது.
கூடடையும் பொழுதுகளின் கீச்சொலிகள்
காதலை இசைத்துக் கொண்டிருந்தன.
மெல்ல நகைத்த இரவின்
மவுனத் தாலாட்டில்
தூங்கிப் போயின பறவைகள் '
என முடிவு சுபமாயுள்ளது. பறவையைப் பற்றியதானாலும் குறியீடாக உள்ளது. நிலத்தின் மீதான மனிதர் வாழ்வும் மகிழ்வாயிருக்க வேண்டும் என்பது கவிஞரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
'வாழ்தலின் பேரின்பத்தை
மணக்க மணக்கப் பாடியது
பூப்பெய்திய காடு'
என்னும் வரிகள் மனத்திற்குள் பூப்பூக்கச் செய்கிறது. வாழ்தலின் பேரின்பத்தைக் கவிஞர் மணக்க மணக்கப் பாடியுள்ளார். பூப்பெய்திய காடு பூரிப்பை உண்டாக்குகிறது.
நிலம் பரந்து விரிந்து நீண்டு கிடந்தாலும், நிலத்தின் மீதான மனிதர்கள் சாதிவாரியாகப் பிரிந்து கிடக்கிறார்கள். மேல் சாதியான் கீழ்ச் சாதியானை எப்போதும் அடக்கவே பார்க்கிறான். அடிமையாக வைத்திருக்கவே வெறிகொண்டலைகிறான்.
'கீ காட்டுப் பூக்களும்
மேகாட்டுப் பூக்களும்
அணைத்து மணத்துக் கூடிக்கிடந்தன.
வனப்பேறிய வாஞ்சையோடு
பிஞ்சுகளை ஈனுகின்றன
நிறைசூலிப் பூக்கள்.
விதை நெத்துகளின் காலடியில்
மக்கிக் குவிந்திருக்கிறது
மனித வாழ்வின் சாதி ஆணவம்'
என்னும் கவிதையில் சாதி ஆணவத்தைத் தகர்த்துள்ளார். இயற்கை வேறுபாடு பார்ப்பதில்லை, மனிதர்களே சாதியால் பிரிந்திருக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். எனினும் சாதி ஆணவம் நிலைக்காது என்கிறார்.
'பூஞ்செடிகளின்
இலைகளைத் தைத்து
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பெருமரத்து வேர்களின்
நுனி முடிச்சுகளோடு
கிளையில் துளிர்க்கும் இலைகளின்
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.
இறகின் கனமும்
பூவின் மணமும்
அரும்பிடும் வாழ்க்கை
இனிதுதான் '
என , தொகுப்பு நிறைவடைகிறது. நெஞ்சமும் நிறைகிறது. அரும்பிடும் வாழ்க்கை இனிதுதான் என்கிறார். இனிதே வாழ்க்கை அரும்பிடவே விரும்புகின்றது மனம்.
நிலத்தில் முளைத்த சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளாக இத்தொகுப்பு உள்ளது. சொல் நிலத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது நிலத்தில் முளைத்த சொற்கள்.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை என்பது போல், நிலமும் நிலம் சார்ந்த கவிதைகளாக உள்ளது நிலத்தில் முளைத்த சொற்கள்.
நிலத்தைப் பெண்ணாக, நிலத்தைத் தாயாக, நிலத்தைத் தெய்வமாக, மொத்தத்தில் நிலத்தை ஓர் உயிருள்ள ஜீவனாகப் பார்த்துள்ளார். நிலத்தை மையமாகக்கொண்டு, நிலத்தையே கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை உருவாக்கியுள்ளார்.
கவிதைகளுக்கேற்ப ஒரு கவிதை மொழியைக் கவிஞரிடம் காணமுடிகிறது. சொற்சேர்க்கைகளின் மூலம் ஒரு புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்கியுள்ளார். நிலத்தைத் தமிழர் உடைமை என்கிறார். நிலம் பறிபோவதை, பறிக்கப்படுவதைக் கவிஞர் எதிர்க்கிறார். இழந்ததையும் மீட்கவேண்டும் என்கிறார்.
வேளாண் மக்களுக்கானதாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான குரலாக உள்ளது. கவிதைகளினூடாக தமிழ் நிலம், தமிழ் இனம் பேசியவர், தமிழ் ஈழம் வரை சென்றுள்ளார்.
பறவை குறித்த பதிவுகள் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஒரு பண்பாடு உண்டு. அந்தப் பண்பாட்டை அழியாமல் காக்க வேண்டும் என்பதே மகாராசனின் முக்கிய நோக்கம். தன் நோக்கத்தை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்த முயன்றுள்ளார் கவிஞர் மகாராசன்.
நெஞ்சத்தில் பதியமாகின்றன
நிலத்தில் முளைத்த சொற்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர் பொன்.குமார்
சேலம்.
***
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் 112,
விலை ரூபாய் 100/-
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
90805 14506.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக