வெள்ளி, 27 நவம்பர், 2015

முன்னத்தி ஏர்

                                                             

சமூகத்தின் பொதுவெளியில் நாமும் ஓர் அங்கமாகிப்போன நிலையில், நாம் இயங்குகிறோமோ இல்லையோ, இந்தச் சமூகம் நம்மை இயக்கிக்கொண்டேதான் இருக்கிறது. இயக்கப்படுவதில் நிரம்பப் படிப்பினைகள் இருக்கப்போவதில்லை. இயங்குவதில் பெறப்படுகிற படிப்பினைகள்தான் நம்மை வளப்படுத்தும் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன்.
  சமூக மாற்றச் செயன்மைப் பங்காளர்களோடு உறவும் தொடர்பும் இருந்தமையாலும் இருக்கின்றமையாலும் சமூக இயங்கியல் குறித்த புரிதல்களை மேலதிகமாக உள்வாங்க முடிந்தது. தோழமை உறவுகள் வாயிலாகவும், சமூகவியல் சார்ந்த நூல்கள் வாயிலாகவும் கற்றுக்கொண்ட சமூகப் பாடங்கள், நாம் புள்ளியாகத் தெரிகின்ற இச்சமூகத்தின் போக்குகள், மேற்குறித்த இரண்டையும் இணைத்தும் பொருத்தியும் பகுத்தும் பார்க்கிற எனது புரிதல்களைப் பகிர்ந்துகொள்கிறபோது படிப்பினைகளும் உரையாடல்களும் கருத்தாடல்களும் நீள்வது தொடரத் தொடங்கியது.
  பேச்சில் கரைகின்ற சொற்களை எழுத்தில் வெளிக்கொணர நினைத்தபோதுதான் ஒரு தளம் தேவைப்பட்டது. அப்போது, சிற்றிதழ்கள் எனப்படுகிற மாற்றுச் சிந்தனைகளைப் புலப்படுத்துகிற சீரிதழ்கள் அதனதன் போக்கிலும் நோக்கிலும் வெளிவந்துகொண்டிருந்ததையும் அறிந்தேன். ஆயினும்,எழுத்துப் பக்குவம் குறித்தத் தன்னாய்வுத் தயக்கத்தால் அவற்றிலெல்லாம் எழுதுவதைத் தவிர்த்தே வந்தேன். ஆனாலும், என்னில் வழிந்த எழுத்துக்களை வெளிக்கொணரவும், இதழ் ஆசிரியராய் ஆகவேண்டும் எனும் பெருவேட்கையை ஈடேற்றம் செய்யவும் எமக்குத் தெரிந்த அப்போதைய முயற்சி ‘ ஏர் ‘ இதழை நடத்தியதுதான்.
  சமூகப் புரிதலோடு, சமூக மாற்றச் செயன்மைகளில் பங்காற்றும் வகையில், எமது மட்டுமல்லாது, மற்றவர்களின் எழுத்துக்களையும் எமது பாணியில் ஏர் இதழ் வாயிலாக வெளிக்கொணர முடிந்தது.
  ஏர் இதழ் ஒவ்வொன்றையும் வெளிக்கொண்டு வருவதற்கு மெனக்கெடுத்தபோதுதான், எமது எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்பட்டும் தீவிரப்பட்டும் வந்ததை நானும் அறிந்தேன்; மற்றவர்களும் அறிந்து சொன்னார்கள்.
  இயங்குதலின் வெளிப்பாடாய் வந்து குவிந்த கருத்தாடல்களை எழுத்தில் புலப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டபோதுதான், எல்லாச் சீரிதழ்களுக்கும் பெருஞ்சாபமாய் வாய்த்துப்போன பொருளியல் நெருக்கடிகள், தன்னந்தனியராய்த் தூக்கிச் சுமந்துகொண்டிருந்த எம்மையும் அழுத்தத் தொடங்கின. வயல்களில் உழுத ஏர்க் கலப்பைகள் உழவர்களின் வீட்டு மூலைகளில் முடங்கிப் போனதைப் போலவே, ஏர் இதழும் எட்டாவது இதழோடு முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுப் போனது.
  ஏர் இதழ் நின்று போனாலும், ஏர் இதழ் தந்திட்ட அடையாளம் எமது எழுத்திற்கும் எமக்கும் தொடர்ந்து இயங்குவதற்கான உந்து சக்தியை இன்னும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றது. ஏர் இதழைத் தொடர்ந்து கொண்டுவர முடியாமல் போனாலும், பதிப்பகத் தோழர்களின் உதவிகளாலும் முயற்சிகளாலும் எமது முன்னெடுப்பில் எமது பல நூல்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடிந்தது.
  வெளிவந்திருக்கிற எமது ஒவ்வொரு நூலும் சமூகத்தோடு ஏதோ ஒரு வகையில் ஊடாடியிருக்கிறது; உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது; கருத்தாடல்களைக் கட்டமைத்திருக்கிறது; தரவுகளை வெளிக்காண்பித்திருக்கிறது; சமூகக் கண்ணோட்டத்தைப் புலப்படுத்த முனைந்திருக்கிறது. அவ்வரிசையில், எமது எழுத்தின் வீரியமும் கதகதப்பும் குறைந்திடாமல் மேலும் மேலும் வலுவுடனும் தீவிரத்துடனும் வெளிக்கொணரும் இன்னொரு முயற்சிதான் ’ மகாராசன் ‘ எனும் பெயரிலான வலைப் பதிவு.
  எம்மிலிருந்து வெளியாகும் எழுத்துக்கள், எமது புரிதல் நிலையிலிருந்து உருவாகின்றவை. எமது கருத்துக்களை வெளியிட எமக்கு உரிமை இருப்பதைப்போல, யாவருடைய கருத்துக்களையும் வெளியிட யாவருக்கும் உரிமை இருக்கிறது. எமது கருத்தாடல்களை ஏற்கவும், எதிர்க்கவும், மறுக்கவும், மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இருக்கிறது. எமதாக இருந்தாலும் யாவரதாக இருந்தாலும், பகிர்ந்து கொள்கிற எவ்வகையான உரையாடல்களும், சமூக அக்கறையோடும் நேர்மையோடும் அமைந்திருக்க வேண்டும் என்பதே எமது பெரு விழைவு.
  சமூகப் பொதுவெளி சார்ந்த, குறிப்பாக, தமிழ்ச் சமூகப் பொதுவெளி சார்ந்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வாழ்வியல்,கல்வி, வரலாறு, தொல்லியல், ஆய்வு, புத்தகங்கள், இதழ்கள், நிகழ்வுகள் போன்ற இன்ன பிறவற்றைக் குறித்த எமது கண்ணோட்டத் தரவுகளைத் தொடர்ந்து எழுத்தில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நீங்களும் பகிருங்கள்.
பயணத்தில் இணைவோம்.
நன்றி.
   தோழமையுடன்,
   மகாராசன்.
     27-11-2015