வியாழன், 27 ஜூன், 2019

ஏறு தழுவுதல்: பண்பாட்டு அடையாளங்களின் எதிர்காலம் குறித்து வெளிச்சம் காட்டும் நூல் : தேவா, பொறியாளர், அறிஞர் தொ.பரமசிவன் வாசகர் வட்டம்



தோழர் நீங்க ஏறு தழுவுதல் புத்தகம் படிச்சிட்டீங்களா ?

" தோழர் இப்போ பண்பாடு நிகழ்த்து கலை இல்ல விளையாட்டுன்னு வர்றப்போ அதுல ஏறு தழுவுதலும் வருது .. ஆனா ஏறு தழுவுதல் சுத்தி நெறைய கேள்வி எழுதே தோழர். முன்ன காளை உழுதது அதனால இந்த விளையாட்டும் இருந்தது ஆனா இப்போ காளைகள் உழுகிறது இல்லை ஆனா இந்த பண்பாடு மட்டும் எதுக்கு இன்னும் இருக்கு ? "

"எது ஒன்று பிற்போக்கானதோ அது காலப்போக்கில் அழிந்து போகும். எது ஒன்று முற்போக்கானதோ அம்முற்போக்கு பிற்போக்கு ஆகும் வரை நிலைத்து நிற்கும். ஆமா நீங்க என்னுடைய ஏறு தழுவுதல் புத்தகம் படிச்சிட்டீங்களா தோழர் ?"

"இல்லையே தோழர் இனிதான் படிக்கணும்"

"அதுலயே இருக்கும் தோழர் இதெல்லாம்"

"இல்ல தோழர் இப்போ விவசாயத்திடம் இருந்து மாடு பிரிக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சாதியினருக்கான ஓர் அதிகார நிலைநாட்டலா இந்த விளையாட்டு இருக்குற மாதிரி தெரியுதே தோழர். அப்போ தலித்துகளுக்கு என்ன பிரயோஜனம்"

"ஹ்ம்ம் அப்டிலாம் இல்ல தோழர் அந்த புத்தகம் படிச்சா உங்களுக்கு இது இன்னும் தெளிவா புரியும்."

(சிறிதுநேரம் கழித்து)

"தோழர். ஏறு தழுவுதல் பத்தி பேசுனோம்ல .. எப்படி பாத்தாலும் அது ஒரு ஆணாதிக்க நிகழ்வு  மாதிரி தானே வரும் .. நிலம் பூத்து மலர்ந்த நாள் கதையில் கூட ஒரு சின்ன பகுதி வரும்ல"

"தோழர் அதுல பெண்களுக்கு தான் உரிமையே .. அது உற்பத்தி சார்ந்த ஓர் நிகழ்வு தோழர். அந்த புத்தகம் படிச்சிட்டா உங்களுக்கு தெளிவாயிடும் "

"ஹ்ம்ம் இருக்கலாம் தோழர்... "

(சிறிதுநேரம் கழித்து)

"தோழர் ஏறு தழுவுதல் போராட்டம் அப்போ மதிமாறன் பேசுன பேச்சு கேட்டீங்களா...
மாடு கூட உறவாடி உறவாடி மாடுபோல மூர்க்கமாக ஒரு சமூகம் உருவாகுதுன்னும், சென்னையில ஏசி ல இருந்துட்டு மக்கள் பேசுற கருத்து எல்லாம் அந்த சமூக மக்கள் வளர விடாமல் பண்ணுற வேலை மட்டும் தான்னும் சொன்னாப்ல"

"அப்டிலாம் சொல்லிற முடியாது தோழர். நீங்க அதை படிக்கலைல ..  அட இருங்க இந்தா வந்துடறேன். யாழிசை.... அப்பாவோட ஏறு தழுவுதல் புத்தகம் 3 எடுத்துட்டு வாம்மா .. "

புத்தகத்தை வாங்கி கையில் குடுத்து "தோழர் நீங்க சென்னைக்கு போனதும் சோறு சாப்புடுறீங்களோ இல்லையோ இந்த புத்தகத்த படிச்சிருங்க" ன்னு சொல்லிட்டார்.

//அட என்னடா எதை கேட்டாலும் இதுல இருக்கு இதுல இருக்குன்னு சொல்றாரு அப்படி என்ன தான் இருக்கு இதுல ன்னு ஒரு வகை உத்வேகத்துடன் தான் படிக்கத் துவங்கினேன்.//

தோழர் கூறியது போலவே ஒரே அமர்வில் முடிக்க கூடிய சிறிய கட்டுரையாகத்தான் அந்த புத்தகம் இருந்தது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த மனுசன் பதில் சொல்லியிருக்காரா என்றால், சத்தியமாக இல்லை. மாறாக கேள்விகளையே இல்லாமல் செய்துவிட்டார்.

ஒன்றின் பொருட்டு ஒரு தெளிவான பார்வை அமையும் நேரம் அதன் மீதிருந்த கேள்விகள் தானாய் மாயமாகும் என்கிறவாறு, ஏறு தழுவுதல் குறித்த கேள்விகளுக்கு பதில் கூறுவதை விடுத்து. மனிதகுலத் தோன்றலில் இருந்து, இனக்குழுக்கலாக இருந்து, ஐந்தினைகளாக குடியமர்ந்தது, சாதிகளாக அமைந்தது, பார்ப்பனிய மேலாதிக்கம் சேர்த்து பயணித்து இந்திய ஒன்றியமானது, என உலகமயமாக்கல் நோக்கி பயணிக்கும் தற்கால சூழல் வரை நிலத்தோடு மனிதன் கொண்ட உரிமையையும், மாட்டோடு மனிதன் கொண்ட உறவையும், பண்பாட்டோடு மாடு கொண்ட பிணைப்பையும், வரலாற்று பொருண்மிய நோக்கில் ஆராய்ந்து விவரித்து, ஏறு தழுவுதல் விளையாட்டின் நீள அகலங்களை அதன் வரலாற்றோடு கண்முன் விரித்திருக்கிறார்.

ஏறு தழுவல் குறித்த ஒரு தெளிவான பார்வையை தரும் சிறந்த கட்டுரை.

~
ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானம் என்பது அரசியல், நீதி, கலை, தத்துவம் ஆகியவை பற்றிய சமூகத்தின் நோக்கங்களும், அவை தொடர்பான நீதிகளும், குடும்பம், சாதி, பண்பாடு, நாகரீகம், கல்வி, சட்டம் போன்ற நிர்வாக அமைப்புகளும் ஆகும். பொருளாதார உற்பத்தி என்பது தான் சமூகத்தின் அடிக்கட்டுமானம்.

சமூகத்தின் உற்பத்தி சார்ந்த அடிக்கட்டுமானத்தின் வெளிப்பாடாகவே மேல்கட்டுமானம் அமையும் எனினும், மேல்கட்டுமானத்தில் நிகழும் மாற்றங்கள் அடிக்கட்டுமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

எனும் மார்க்சிய கோட்பாட்டின் வழி ஏறு தழுவுதலை அணுகும் இந்த பாங்கு, வரலாற்று பொருண்மியத்தையும், அதன் இயங்கியலையும் விளக்கி அதன் வாயிலாக குமுகமை சமூகத்திற்கான வெளிச்சம் காட்டுவது போல, ஏறு தழுவுதலின் வரலாற்று, அதன் நிகழ்த்துதல் காரணம், முறை, இயல்பு மற்றும் அதில் உள்ள சிக்கல்களையும் விவரித்து அது போன்ற பண்பாட்டு அடையாளங்களின் எதிர்காலம் குறித்து ஒரு வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.

உலகமயமாக்களுக்கு எதிராக ஓங்கும் கரங்கள் அனைத்தும், பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராக கோர்க்கப்படட்டும் ஒவ்வொருமுறையும்.