சனி, 15 செப்டம்பர், 2018

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்ட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

விளிம்புநிலை மக்களின் கலகக் குரல் தாங்கிய விடுதலைக் கருத்தியலை எதிர்மரபாகக் கொண்டு வாசிப்பை நிகழ்த்துகிறது. வன்குடியாதிக்க முதலாளித்துவமும் இந்தியத் தரகு முதலாளித்துவமும் இந்திய தமிழக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது கட்டுரைகளின் உட்கிடக்கை.

இந்திய தேசியம் என்பது ஒரு பெருங்கதையாடல் என்பதனையும் அது எப்படி மொழிவாரித் தேசியங்களை தேக்கநிலைக்கு உட்படுத்தி மீளவிடாதபடி முடக்குகிறது  என்பதையும் தமிழகச் சூழலில் போதிய சன்றாதாரங்களுடன் விவரிக்கிறது.

இந்திய தேசம் என்ற கருத்தியல் இந்து தேசமாகவும் பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற கோணத்தில் அன்றைய அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து பரப்பப்பட்டு அவை புனிதப் படுத்தப்பட்டதையும் தெளிவான சான்றாதாரங்களோடு விளக்க முயல்கிறது. 

பின்னைக் காலனித்துவம் மார்க்சியப் பின்புலத்தில் எளிமையாக விளக்கம் பெற்றுள்ளது. பின்காலனியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக புது வன்குடியாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முல்லைப் பெரியாரணையின் மீதான நூலாசிரியரின் வரலாற்றியல் பார்வையிலான வாசிப்பில் பொதுவுடைமைக் கட்சிகளில் தரகுமுதலாளித்தனப் பாங்கு உள்ளார்ந்து இயக்கம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

கட்டுரைகளில் பேசுபொருளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்த - இந்திய நாட்டின் கூட்டு வல்லாதிக்க நடத்தைகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிற எழுத்துகள் ஊன்றி கவனங்கொள்ளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

ஆசிரியரின் எளிமையனான மொழிநடை வாசிப்பை இலகுவாக்குகிறது. இந்தியச் சூழலில் பின் காலனியத்தை உள்காலனியம் வெளிக்காலனியம் என ந.முத்துமோகனும் ஹெச்.ஜி. ரசூலும்  வகைப்படுத்துவர். இந்தியச் சமூகத்தின் மீதான இந்த இரட்டைக் காலனிய ஒடுக்குமுறைகளையும் பிரதி பேசுபொருளாக்கியிருந்தாலும்  பின்னைக் காலனியக் கோட்பாட்டின் விரிவான பார்வையில் கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட பொருண்மைகள் நோக்கப்படவில்லை.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோபியர் கண்ணனாய்த் திரும்ப வர வேண்டியதாயிற்று. மனதின் சஞ்சலத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. கருத்துப் பட்டறை பரமன் என்னைக் கண்டவுடன் ," உங்கள் ஏர் மகராசன் புத்தகம் ஏறு தழுவுதல் புத்தகம் இருக்கிறது என்று கையில் கொடுத்தார்.

புத்தகத்தின் அட்டைப் படமே திமிறி வரும் காளையாகத் தமிழ்ப் பண்பாடும், அதை ஏறு தழுவும் தமிழ் குடியும், ஏர் மகாராசனும்தான் தெரிந்தார்கள். அணிந்துரையில் நுழைந்த பொழுது முனைவர் முரளி ," ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப்  பாதிக்காதபோது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும் " என, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை ஒரு வரியில் கூறி ஏர் மகாராசனிடம் நம்மை ஒப்படைத்தார் .

மனிதனின் முதல் உணர்வு பசி. முதல் தேடல் உணவுக்கானது . முதல் உற்பத்தி விவசாயம் . முதல் செல்வம் மாடு . முதல் பண்பாடு உழவர் பண்பாடு  எனப் பெருமை பொங்க உழவர் மகன் ஏர் மகாராசன் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும்போது பிரமிப்புடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நூலினுள் நுழைந்தேன் .

வரலாறு ஓரளவு அறிந்தவன் நான் . நான் அறியாதது இன்னும் நிறைய உள்ளது என்பதை எடுத்துரைத்தது இந்தப் புத்தகம் .

வேட்டையாடுதலால் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், விலங்குகளைப் பழக்கி அவன் எடுத்த முயற்சிகள்தான் கால்நடை வளர்ப்பு . முதலில் அவன் யானை, மான்களை வளர்ப்பு விலங்குகளாக எடுத்த முயற்சிகளைச் சங்க காலப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டினார் .

இனக் குழுக்களின் அடையாளமாகக் குறிஞ்சி, முல்லை , நெய்தல் , பாலை மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போது , மருத நிலத்தின் வேளாண் மக்கள் மட்டும்தான் உழவர், உழத்தி என்னும் பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார் .

ஏர் பூட்டி உழுவதே பாவம் என்றார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்தல் பாவம் என்றது மனு சாஸ்திரம் . பசுவை அடையாளமாகக் காண்பார்கள் அவர்கள் . ஆனால் நாமோ காளை மாடுகளைத்தான் பண்பாட்டு அடையாளமாகக் காண்கிறோம் என்கிறார் அவர் . தமிழ் நாட்டு மரபும்  பார்ப்பனியத்தை எதிர்க்கும் , மறுக்கும் பண்பைத்தான்  உள்ளும் புறமும்  கொண்டிருந்தது என்பதை  அழுத்தந் திருத்தமாகப்  பதிவு  செய்திருக்கிறார்.

அறுவடைக் காலம் வரையில் ஓய்விலிருக்கும் காளைகள் தினவுடன் துள்ளலுடன் மிடுக்குடன்தான் இருக்கும் . அந்தத் தினவு வெளிப்பாடுகளை மிக அழகாக விவரித்துள்ள இந்த உழவுப் பேராசிரியர்  அந்தத் தினவையும் துள்ளல்களையும் மனிதர்களின் ஏறு தழுவல்கள் நிறைவு செய்கின்றன என்கிறார் . இதை அவர் மொழியிலேயே கேளுங்களேன்.

" மனிதர்களும் மாடுகளும் மாறி மாறி உழைக்கிறார்கள் .உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன . சோர்ந்து போகின்றன . இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக் கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது . அந்த ஓய்வு என்பது உணவோ உறக்கமோ அல்ல" . உள்ளம் மகிழும்படி , உற்சாகம் ஏற்படும்படியான பொழுது போக்குகள் . அந்தப் பொழுது போக்குகள்தான் மனிதக் காளைகளுக்கும் மிருகக் காளைகளுக்குமான ஏறு தழுவுதல் .

இந்த ஏறு தழுவுதல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்திருக்கிறது என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கல் முத்திரையிலிருந்து தெரிகிறது . கி.மு. 1500 ஆம் காலத்தைச் சேர்ந்த பல்வேறு தடயங்கள் மூலம் ஏறு தழுவுதல்  3000-3500  ஆண்டுக்கான பண்பாடு என்கிறார்.

மாடுகளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் அன்பை ,பரிவை,  பாசத்தை மாட்டுப்பொங்கலில் காணலாம் என்று அதை விவரிக்கும் நிகழ்ச்சிகள் மனம் நெகிழ வைப்பன.

இறுதியாக நிலவுடைமைச் சமூகத்தில் உழவர் மக்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்ட அவலத்தையும், அவர்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இழிவு செய்யும் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார் .

இப்போதெல்லாம் கோயிலைப் பார்க்கும்போது அதன் அஸ்திவாரத்தில் புதையுண்ட உழவர் மக்களின் நிலங்களும் பண்பாடும்தான் தெரிகிறது.

மொத்தத்தில் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் பார்ப்பனியத்தின் வஞ்சகமும் துரோகமும் தன்வசம் ஆதிக்கப்படுத்துதலுமே முன் நிற்கின்றன . அவற்றை எதிர்த்து நிற்கும் வீரனாகத் தமிழர் பண்பாடு மட்டும்தான் நிற்கிறது .

இறுதியாக, முரளியின் அணிந்துரையே இந்தப் புத்தகத்துக்கு முடிவுரையாக ஆகிறது . "ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப் பாதிக்காத போது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும்” . இதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

 உழவருக்காகவும் விவசாயத்திற்காகவும் குரல்கள் அதிகம் ஒலிக்கின்ற இந்த சமயத்தில், தமிழ்ப் பண்பாட்டுக்காகக் குரல் கொடுப்போர் அதை முற்றிலும் அறிந்து குரல் கொடுக்க இந்தப் புத்தகம் உதவும் . ஏனெனில், ஏதும் அறியாமல் ஒன்றுக்குக் குரல் கொடுத்தால்  அது நிலைக்காது என்பதை வரலாறு காட்டி இருக்கிறது .

வாழ்த்துக்கள் மகாராசன்.

திரு ஆசைத்தம்பி அய்யாவின் மதிப்புரை.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் )


மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மகாராசனின் மொழியில் நிமிரும் வரலாறு: மொழியால் நிமிர்ந்தது உணர்வு :- திரு ஆசைத்தம்பி

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை என
ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து
பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட  பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது.

அடுத்து " அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா "  என அப்பாவும் " "ஒழைக்காம உட்க்கார்ந்து சாப்புட்டா ஒடம்புல ஒட்டாது " என அம்மா சொன்னதையும் ஆசிரியர் நினைவு கூறும் போது யாரவது ஒரு பையன் வீட்டில் இருக்கலாம்ல ஏன் கஷ்டப்படுறீங்க என்று கேட்ட என்னிடம் என் ஐயாம்மா சொன்னது என் காதுகளில் ஒலித்தது ," "உண்ணப் பார்த்துக்கிட்டு இருந்தாலும் உழைக்க பார்த்துகிட்டு இருக்க கூடாது "

தனது எழுத்துக்களைப்  பற்றி  ஏர் மகராசன் ( ஏர் என்பது எங்கும் இல்லாத நிலையிலும் தனது பெயரில் அதை சேர்த்து நமக்கெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ) கூறுகிறார் இப்படி .  "பகட்டும் பூடகங்களும் புனைவுகளும் இல்லாத எளிய மக்களின் வாழ்வியல் கோலங்கள் போலத்தான் எமது எழுத்துக்களும் அழகியல் , கோபம் , திடம் , மானுட வாசிப்பு போன்றே எனது எழுத்துக்களும் எளிமையானவை . எளிய மக்களுக்கானவை " . ஆனால் கருத்துப் பட்டறையோ ," நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான் , நிலம் பற்றிய தவிப்பை ஏர் மகராசனால் புலப்படுத்த முடிகிறது அவருடைய பதிவுகளை வாசிக்கும்போது ஒட்டு மொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன " என்று கூறும் போது இந்நூல் வாசிப்பின் அவசியத்தை உணர்த்திக் செல்கிறது

தனது முதல் கட்டுரையில் ( பெண் ஆண் உடல்கள் சொல்லாடல்களும் பொருள் கோடல்களும் ) பெண்ணைக் குறித்த அறங்கள்  ஆண்களால் உருவாக்கப்பட்டவை ஆண் நோக்கிலானவை ஆண்களின் நலனுக்கானவை என்பதை அழகாக கூறுகிறார் . இறுதியில் ஆணுடன் வேறு பெண்ணுடல் வேறு . இந்த வேறுபாட்டை இயல்பாய் இயற்கையாய் அமைந்த ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையை இருக்க முடியும் . இந்த வேறுபாடுகளின் மீது ஏற்றது தாழ்வு காண்பிக்கும் போதுதான் செயற்கையாகவும் பொய்யாகவும் மாறி போகின்றன . பொய்யானவை நிலைப்பதுமில்லை வென்றதும் இல்லை என்கிறார்

பண்டைத் தமிழர்களுக்கான பண்பாடுகளை , இலக்கண மரபுகளை அறிய முடியாமல் நாம் தவிக்கும்போது தொல்காப்பியம் தான் தன்னை தாய் தந்தையாய் நம்மை தோளில் ஏற்றி வேடிக்கை பார்க்க வைக்கிறது என்று கூறும் ஆசிரியர் ஆனால் தொல்காப்பியர் பார்த்தது வேறு ( நம் மரபு ) . அவர்களின் மீதேறி  நாம் பார்ப்பது வேறு ( எதையும் மீளாய்வு செய்து பார்க்கிற புதுப் பார்வைகள் ) என்கிறார் . தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றைய வரையில் பெண்ணாடக்கல் என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது .  எல்லா மதங்களும் பெண்ணுக்கு எதிராக பெண்ணுடலைப் சிறுமைப்படுத்துவதிலும் அடிமைப்படுத்துவதிலும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன  என்று ஆதங்கப்படும் ஆசிரியர்  ,   தொல்காப்பியம் , மனு சாஸ்திரம் , பைபிள் , திருக்குரான் , பௌத்தம் , சமணம் , டார்வின் ,புருத்தோன், சிக்மண்ட் பிராய்டு  ஆகியோர் அமைத்த கட்டுமானங்கள் உண்மையானதுமில்லை : உறுதியானதுமில்லை என்பதை சமூக மாற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன . வலுவானவை வாழும் .வலுவற்றவை வீழும் என்பதை மேற்குறித்த கட்டுமானத்திற்கு பொருத்திப் பார்க்கலாம் என்கிறார்

இரண்டாவது கட்டுரை பெண் கவிஞர் கனிமொழியின் கவிதை பற்றியது
" என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதை தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு "

தேநீர்க்கடை மேசையில்
ஒடுங்கியபடிக் கிடந்த
உன் கைகளை பற்றி
உன்னிடம் ஏதாவது பேசி இருக்கலாம்
ஒரு பிறழ்ந்த தருணத்தின்
தவறிய கணங்களில்
சிதறுண்டு போனது நம் உலகம்
தொலைந்து போன சில கணங்களைத்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கறந்து போன நம் காதலை நியாயப்படுத்த "

இருவர் தலைகளும் சிதைக்கப்பட்டன
தலைகள் இருந்த இடத்தில்
கிரீடங்கள் வைக்கப்பட்டன
பீடத்தில் இருந்தவன் அட்சதை தூவினான்

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

மூன்றாவது கட்டுரை சல்மாவின் கவிதைகளைப் பற்றி

"என்னை மீறித்
தீர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
தீரவே தீராத
தனிமையுடன் நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்"

" என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை

பனி படர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

என்னை எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த எதையுமே "

குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்று தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் அருவருப்பூட்டுவதாய்
சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும்
மாறுவதில்லை

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

அடுத்தது நான்காவது கட்டுரை லதாவின் கவிதைகளைப் பற்றி

"வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே
அணுவைத் துளைக்க
தாங்குமா என் சிறு பூ"

"தீயில் விறைத்து
நின்ற காலம்
நீர் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன"

அடுத்து ஐந்தாவது கட்டுரை உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து

" நான் யார் ? பெரியவளா , சிறியவளா நீயே சொல்
அனு கேட்கையில் மரப்பாச்சி விழிக்கும்
எனக்குன்னு யார் இருக்கா ? நான் தனிதான ?
அனுவின் முறையாடல்களை
அது அக்கறையோடு கேட்கும் "

ஒரேயொரு முறை புரண்டு
விழித்துக் கொள்ளுங்களேன்
உடம்புக்கென்ன என்று
ஒரு வார்த்தை கேளுங்களேன்

ஏகப்பட்ட கவிதைகள் ஆசிரியரின் உரையாடல்களோடு

ஆறாவது பண்பாட்டு மார்க்சிய உரையாடல்

மார்க்சியத்தைப் பற்றி நடந்த ஒரு உரையாடலைப் பற்றி ஒரு உரையாடல்

அடுத்து ஏழாவது தினை மொழி எடுத்துரைப்புகள்

குறுந்தொகை கவிதையுடன் காதலர்களின் சங்கமங்கள் பற்றியது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நிகழ் காலத்திய வாழ்க்கையின் வூடே நகர்ந்து செல்வதை பற்றிய ஒரு உரையாடல்

எட்டாவது முல்லைப் பாட்டு பற்றியது

உரையாடல் முல்லைப்பாட்டு  கவிதைகளைப் பற்றி

ஒன்பது தற்கொலை செய்து கொண்ட உழவுக்குடிகள்

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்க படைகளால் அழிக்கப் பட்டபொழுது
மனிதத்தை நேசிக்கக் கூடிய கலைஞர்களிடையே  பெரும் கொதிப்பு இருந்தது . அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா அக்கா தங்கை  உடுத்திய பழைய சேலை தாவணி பாவாடைத் துணிகளைக் கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவர் முருகபூபதி என்னும் கலைஞர் .அவரின் பெரும்பாலான நாடகங்கள் மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததால் வந்ததாகும் .

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை
எனப் பாடியபடி  ஒருவர்
 முன்  செல்ல  மற்றவர்கள்  அவரைப்  பின்தொடர்கிறார்கள் . வேளாண்மைத்தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் ஒப்பாரியும் தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரி பாடல் உணர்த்தியது

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப் போன சம்சாரிகளின் ஆன்மாக்கள்  அழுது புலம்புகின்றன . உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள்

பத்தாவது கோமாளிக்கூத்து

ஈழம் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடல்

போர் என்றால் வன்முறை . அழிக்கப்படுவது அநேகமாக பெண் உடல்களாக தான் இருக்கும். அதிக விதவைகள் வாழும் இடமாக ஈழம் போனது ஏன் ? விதைகளை விருட்சங்கள்  ஆக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது மிகப் பெரிய சோகம் . எம் தொப்பூள்க் கொடி உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என மரண விளிம்பிலும் நம்பிக்கை வைத்திருந்த அவர்களின் நம்பிக்கையை மண்ணோடு மண்ணாய் ஆக்கியது நாமல்லவா ? நம்மை ஆண்ட அரசுகள் அல்லவா?  ஈழத் தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை மிருக விதூஷகம் நடக்கமாய் ஆக்கியிருக்கிறார் முருக பூபதி .

எங்கள் வூரில் மலர்கள் இல்லை . பறவைகள் இல்லை வண்ணத்துப் பூச்சிகள் இல்லை . வண்டினங்களின் பாடல்கள் இல்லை பாதைகள் குழம்பிய பிரதேசத்திலிருந்து அவை திரும்பவே இல்லை . வூர் வூராய் தேடி வருகிறோம் . என அழுகிறார்கள் . மரணித்தவர்களுக்காகவும் மரணித்தவைகளுக்காகவும் அழுகிறார்கள் .

நாடற்ற மனித வாழ்வை நிலமிழந்த உயினங்களின் வாழ்வை, காடிழந்த மரங்களின் வாழ்வை ,வீடிழந்த மக்கள் வாழ்வை, கூடிழந்த பறவைகள் வாழ்வை, புதர் இழந்த பூச்சிகள் வாழ்வை ,கடல் இழந்த நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள்  அரங்கேற்றுகின்றார்கள்

11 ஆவது கட்டுரை புதைகுழி மேட்டிலிருந்து வேளாண்குடிகளின் ஒப்பாரி

அறமும் அதிகாரமும் ஆதிக்க சக்திகளின் உடைமை  அன்றும் .இன்றும் என்றும் . தலைப்புக்கேற்ப வேளாண்குடிகளின் பாதிப்புகளை விரிவாக பேசுகிறார் ஆசிரியர் . சிந்திக்க வேண்டியவை . வேளாண்குடிகளுக்கான கோரிக்கையையும் வைக்கிறார் . எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விஷயம்
உரைக்க வேண்டிய விஷயம் , உறைக்கும்மா நமக்கு ?
இறுதிக்கு கட்டுரை 12 ஆவது

புதைக்காட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்

பழங்கால பண்பாட்டு அடையாளப் பதிவுகளை மக்கள் தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகராசன் கண்டறிந்து விளக்கி இருக்கிறார் . எல்லோரும் அறிய வேண்டிய விஷயங்கள் இவை

"மொழியில் நிமிரும் வரலாறு" படித்தேன். இவர் மொழியால் நிமிர்ந்தது
 என் உணர்வு . வாழ்த்துக்கள்..... மகாராசனுக்கு..  இல்லை இல்லை ஏர் மகாராசனுக்கு .

வியாழன், 6 செப்டம்பர், 2018

சொல் நிலம் : மண்வாசனை நிறைந்த எழுத்துகள்:- பிரபு தனராஜ்.

மகாராசனின் சொல்நிலம் முழுதும் மண்வாசனை நிறைந்த எழுத்துக்கள். அனைத்து விசயங்களையும் விவசாயியாக / உழவனாக இருந்தே எழுதியுள்ளார்.

ஒரு விவசாயியாகவே கோபப்பட்டிருக்கார்.
ஒரு விவசாயியாகவே ரசிக்கிறார்
ஒரு விவசாயியாகவே காதலித்திருக்கார்.
ஒரு விவசாயியாகவே நொறுங்குகிறார்.
அத்தனை பக்கங்களும் நித்திலங்கள்.

சில முத்துக்கள்……

நகரம் பற்றி…
"கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ்வெளியாய்ச்
சுருங்கிப் போனது" என
ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்கிறார்.

மர நிழல் பற்றி…
மரநிழலில் இருக்கும்
செடிகளை வனமாக பாவிக்கிறார்.

"மனித நிழல்
போர்த்திய நாடு தான்
வெயிலில் வெந்து சாகிறது" என சபிக்கிறார்.

கள்ளிச்செடியைக் கூட
வேறு ஒரு கோணத்தில்
ரசனையாய் பார்க்க முடிகிறது இவரால்.

"வெம்பாலைச் சுமந்து
பசுந்தோல் மேனியில்
பச்சை உடுத்திச்
சிரிக்கிறாள், கள்ளி"
என்கிறார்.

வாழ்த்துக்கள் ஆசிரியரே…!

நண்பர் யாழ் தண்விகா கொடுத்த புத்தகம் ஒரு வழியாக வாசித்தாயிற்று.