திங்கள், 31 அக்டோபர், 2022

மீனாட்சி: சொல்லாடலும் பொருள்கோடலும் - மகாராசன்






மீனாட்சி அம்மனைக் குறிக்கும் சொல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படவில்லை என்கிற குறிப்புரை பற்றிய உரையாடல்கள் அண்மையில், வெளிக் கிளம்பியிருக்கின்றன.

மீனாட்சி எனும் சொல்லாடல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படாமல் இருக்கலாம். ஆனால், மீனாட்சி எனும் சொல்லாடலும் அதற்கான பொருள்கோடலும் தமிழ் மரபில் பொருள் பொதிந்தே காணப்படுகின்றன.

மீனாட்சி என்பதை மீன் + அட்சி = மீன் போன்ற கண்களை உடையவர் என்பதாகப் பொருள் கொள்வர். இதனையே அம்+கயல்+கண்ணி= அங்கையர்க்கண்ணி என மீன் போன்ற கண்களை உடையவள் எனத் தமிழில் பொருள் கொள்வர். மீன் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணைக் குறிக்க மீனாட்சி, அங்கையர்க்கண்ணி எனும் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

அதேவேளை, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் தெய்வப் பெயரையும் மீனாட்சி எனக் குறிக்கும் வழக்கமும் இருக்கிறது. மதுரைத் தெய்வப் பெயராகக் குறிக்கப்படும் மீனாட்சி என்பது மீன் போன்ற கண்களை உடையவள் என்பதாக மட்டும் சுட்டி நிற்கவில்லை. கூடவே, வேறு ஒருவகையிலும் பொருள் கொள்ள வேண்டிய சொல்லாடலாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, மீன் ஆட்சி என்பதன் மரூஉச் சொல்தான் மீனாட்சி. மீன்+ஆட்சி = மீனாட்சி. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதியின்படி மிகச் சரியான சொல். மீன் ஆட்சி எனில், மீன் கொடி ஆட்சி எனப் பொருள். அரச மரபில் கொடி, குடை, கோல், முரசம் என்பவை ஆட்சி அதிகாரக் குறியீடுகள். 

மீன்கொடி பாண்டியர்களுடையது எனில், பாண்டியரின் மீன் கொடிதான் ஆட்சி செய்திருக்கிறது. கோ எனில் மன்னன், அரசன் எனப்பொருள். மீன் கொடி ஆட்சி செய்த கோ இருந்த இல் மீனாட்சி கோயில் என்றாகி இருக்கிறது. 

ஆகவே, மீனாட்சி என்பதை மீன் அக்சி என்றோ அல்லது வேறு புறம்பான சொல் அல்லது பொருள் என்றோ கருத வேண்டியதில்லை. மீன் கொடி ஆட்சியை இழந்தது போல, மீனாட்சி எனும் பெயர் அடையாளத்தையும் இழந்துவிட வேண்டியதில்லை. 

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது போல, ஒரு பொருளுக்குப் பல சொற்களும் தமிழ் மரபில் உண்டு. அதேபோல, மதுரைக் கோயிலில் தெய்வமென உறைந்திருக்கும் மீனாட்சிக்கும் பல பெயர்கள் இருந்திருக்கும். மேலும், ஒன்றைக் குறித்துக் கல்வெட்டுகளில் ஒருவிதமாகவும், இலக்கியங்களில் வேறுவிதமாகவும், மக்களின் அன்றாடப் புழங்கல் மொழியில் வேறுவிதமாகவும் குறிக்கப்படுவதுண்டு. வேறு வேறு காலங்களிலும் வேறுவேறு பெயர்களில் வழங்கப்படுவதுமுண்டு. 

ஆகவே, மீனாட்சி எனும் சொல்லாடலைப் புறக்கணிக்கவோ மறுக்கவோ வேண்டியதில்லை. மீன்கொடி ஆட்சியள் தான் மீனாட்சி எனப் பொருள்கோடல் கொள்வதே நன்றாம்.

*

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

31.10.202

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

சூரியதீபனின் தமிழ்த்தேசியப் பங்களிப்பு - மகாராசன்




தமிழ்த் தேசியக் கருத்தியலின் உரத்த குரலை முன்னெடுத்த தோழர் சூரியதீபன் எனும் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுற்றார். 

*

புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலையும், பண்பாட்டுப் படைப்புச் செயல்பாட்டையும் தம் எழுத்துகளின் வழியாகவும் பேச்சுகளின் வழியாகவும் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வழிநடத்தியும் வந்தவர் தோழர் சூரியதீபன்.

2008-09 காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இக்கட்டான சூழலையும், பேரிழப்புகளையும், இனப்படுகொலை நிகழ்வுகளையும் தாயக மண்ணில் எதிர்கொண்டிருந்தபோது, அவ்விடுதலைப் போராட்டம் குறித்தும், போராளிகள் குறித்தும் பல்வேறு வகையில் அவதூறுகளையும் வன்மங்களையும் இங்குள்ளோர் அறிவுசீவிகள் பலரும் - சில இயக்கங்கள் பலவும் மிகத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருந்தனர். தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் மவுனித்திருந்த காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுக் குரலை வலுவாக முன்னெடுத்துச் செயலாற்றியவர் தோழர் பா.செ. அதோடு மட்டுமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவதூறுகளையும் வன்மங்களையும் மறுத்தும் எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளையும் நூல் வெளியீடுகளையும் கொண்டுவந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் என்கிற நூல் தொகுப்பு முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு வகையில் துணை நின்று வழிகாட்டியதோடு, அத்தொகுப்பிற்காகத் தாம் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் வழங்கினார்.

என் மீதும், என் எழுத்துகளின் மீதும், எனது அரசியல் செயல்பாடுகளின் மீதும் அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கொண்டிருந்த அந்தத் தோழமைமிக்க உறவாடல் எம் எழுத்துச் செயல்பாட்டை வளப்படுத்தி வந்திருக்கிறது.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களது மறைவு, தமிழ்த் தேசியச் சக்திகளுக்கும் - ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுக்கு வீரவணக்கம்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்

23.10.2022