சனி, 23 டிசம்பர், 2017

ஆற்றங்கரை நாகரிகமும் மடைச்சி வாழ்ந்த கீழடி நிலமும் :- மகாராசன்



மலைகளும், காடுகளும், வயல்களும், கடலும் கொண்ட பெரும்பரப்பில் மனித சமூகம் நிலைகொண்டு வாழ்வதற்கு உகந்த சூழலாய் அமைந்தது சமவெளி எனும் நிலப்பகுதிதான்.  மலைகள், காடுகள், கடல் எனும் இயற்கை வெளிகளை வாழ்விடங்களாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களைக் காட்டிலும், சமவெளிப் பகுதிகளை வாழ்விடமாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களே பெருங்குழுக்களாய் உருக்கொண்டு வந்துள்ளன.

இயற்கையின் கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு, உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் – உழைப்பு  போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப் பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரம், பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம், அறிவுப் புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை, சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப் பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு வகிப்பன இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.

மலைகளில் அரும்பி, காடுகளில் நுழைந்து  சமவெளிகளில் முகம் காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில்  சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.

பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக் காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.

சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும், பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன.  இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.

உலகில் தோன்றியிருக்கும் எல்லா நாகரிகங்களுமே ஆற்றங்கரைகளில்தான் தோன்றி இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரிகங்களாகக் கருதப்படுகிற எகிப்து நாகரிகம் நைல் ஆற்றங்கரையிலும் , சுமேரிய நாகரிகம் யூப்ரடீசு டைகரீசு ஆற்றங்கரையிலும் , சீன நாகரிகம் குவாங்கோ ஆற்றங்கரையிலும் தோன்றியவைதான். இவை போலவே , சிந்து என்னும் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகமே சிந்து வெளி நாகரிகம்.

இந்த, 'நாகரிகம்' என்னும் சொல்லே கூட 'நகரம்' என்னும் சொல்லில் இருந்து உருவானது தான். மலை நிலத்தைக் காட்டிலும், காட்டு நிலத்தைக் காட்டிலும், கடல் நிலத்தைக் காட்டிலும், ஆறுகள் வழிந்தோடிய சமநிலைப் பகுதிகளில்தான் நகரங்கள் உருவாகி இருக்கின்றன. அதாவது, நிலையான குடியிருப்புகள், அதிகளவிலான ஊர்ப் பெருக்கம், பலவகைப்பட்ட தொழில் வாய்ப்புகள், பல்வேறு சமூகப் பிரிவினர்களின் கூட்டுறவு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துகள், வணிகம், கலை இலக்கியப் பண்பாட்டு வெளிப்பாடுகள், பல்வேறு சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற கொள்வினை கொடுப்பினை, ஆடை, அணிகலன், உணவு போன்ற வாழ்வியல் புலப்பாடுகள் அனைத்துமே ஒரு திருந்திய நிலையை அடைந்திருப்பதையே நகர வாழ்க்கை என்றழைக்கப்படுகிறது. நகரங்கள் சார்ந்த இத்தகைய திருந்திய வாழ்க்கை முறையைத்தான் நாகரிகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

நகரங்கள் சார்ந்து உருவான இத்தகைய நாகரிக வாழ்க்கை நம் நிலப்பரப்பிலும் செழித்து வளர்ந்திருக்கிறது. இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 4700 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகர நாகரிகம் இருந்திருப்பதை அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நிலப்பரப்பில் நடைபெற்ற அகழாய்வுகள் எடுத்துரைக்கின்றன.

கட்டிட நுணுக்கங்கள் மிகுந்த பெருங்குளம், சுட்ட செங்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட வீடுகள், மண்டபங்கள், விதைக் களஞ்சியம் போன்றவை நகர உருவாக்கம் சிறப்பாக நடைபெற்று இருப்பதை உணர்த்துகின்றன.மேலும், குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியேறுவதற்கான தனிக் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்துள்ளன. வீட்டுக் கழிவுநீரானது மூடப்பட்ட சரிவான சிறு கால்வாய் வழியாகத் தெருவிலுள்ள பொதுக் கால்வாயில் இணைந்திருந்தன. இவையெல்லாம், பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்திருக்கின்றனர். குழந்தைகள் விளையாடும் சுடுமண் பொம்மைகள், கிளிஞ்சல், பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல விளையாட்டுப் பொருட்களும் அணிகலன்களும் சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ளன.

காளைகள், வண்டி, புறா, படகுகள் போன்ற சுடுமண் முத்திரைகளும் சிலைகளும் சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகள், விலங்குகள், பெண் ஆண் உருவங்கள் போன்றவையும், வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் சிலையும் கண்டறியப்பட்டுள்ளன. ஆக, சிந்து வெளியில் நடைபெற்ற அகழாய்வுகள் சிறப்புடன் திகழ்ந்த ஒரு நகர நாகரிகத்தை வெளி உலகத்திற்குக் காட்டியிருக்கின்றன.

சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிட அமைப்பு, அவற்றின் நுணுக்கங்கள், சுடுமண் பொருட்கள், அணிகலன்கள், சிலைகள், எழுத்துப் பொறிப்புகள், தொழில், சிற்பம் போன்ற கலை வெளிப்பாடுகள் யாவுமே திருந்திய நகர நாகரிகத்தின் வெளிப்பாடுகளையே கொண்டிருக்கின்றன. இத்தகைய சிந்து வெளி நாகரிகம்தான் திராவிடர் நாகரிகம் எனப்படுகிற தமிழர் நாகரிகம் என அசுகோ பர்போலோ போன்ற ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது.

சிந்து என்னும் பெயர் குறித்துப் பாவாணர் கூறியிருக்கும் கருத்தும் நோக்கத்தக்கது. ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர்அல்லது திராவிடர் மேலை ஆசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்பராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப் பெயராகவேய இருக்கலாம்.

சிந்துதல் = சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும்.
'தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான்' (குறுந்.120)
என்பது முகில் துளி சிதறுதலையும்,
'அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனை' (குறுந்.121)
என்பது ஆறு துளி சிதறுதலையும் குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.)என்னும் இருபொருளும் ஏற்பட்டன.

இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், ஒருகால் சித் (sidh) என்பது மூலமாயிருக்கலாம் என்று ஐயுறவாகக் குறிப்பர். அச்சொற்குச் செல்லுதல் (togo) என்னும் பொருளே உள்ளது. மேலும், இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதியென்னும் பெயரே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது என, தமிழர் வரலாறு நூலில் விளக்கப்படுத்துகிறார் பாவாணர். ஆக, சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனத் தெளியலாம்.

இந்திய ஒன்றியத்தின் வடமேற்குப் பகுதியில் சீரும் சிறப்புமாய் இருந்திருந்த சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, அதனை ஒத்துப் போகும் ஒரு நகர நாகரிகம்தான் தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது.

மதுரை என்னும் சொல்கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கீழடி எனும்  சிற்றூரில் நடைபெற்று வந்த தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கிறது கீழடி. மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை, பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடக்கின்றன.

பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில்தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.

அரப்பா என்னும் சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதைந்த நகரம் என்று பொருள். அதே போல மண்ணுக்குக் கீழே - மண்ணுக்கு அடியிலே நகரமும் நாகரிகமும் வரலாறும் புதைந்து இருப்பதைத் தான் கீழடி என்னும் ஊரின் பெயரே உணர்த்தி நிற்கிறது.

பொய்யாக் குலக்கொடி எனப் புலவர்களால் புகழப்பட்ட வைகை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள், தமிழர்களின் நகர நாகரிகத்தை உலகறியச் செய்துள்ளன எனச் சொல்வதில் வியப்பில்லை. மதுரை நகர உருவாக்கத்தையும் நாகரிக வாழ்வையும் உருவாக்கியதில் வைகை ஆற்றுக்கும் பெரும் பங்கு இருந்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வருசநாடு மேகமலை தொடங்கி இராமநாதபுரம் அழகன்குளம் வரையிலும் பயணிக்கிற வைகை ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 293 தொல்லியல் அடையாளப் பகுதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டுகள், கோயில்கள், நினைவுச் சின்னங்கள், புதைமேடுகள் எனப் பல்வேறு வகையான தொல்லியல் அடையாளங்கள் கண்டறியப்பட்டாலும், பழங்கால மக்களின் வாழ்விடம் எனும் பகுதியாகக் கண்டறியப்பட்டிருப்பது கீழடிதான்.

திருவிளையாடல் புராணமும், இறையனார் அகப்பொருள் உரையும், சில கல்வெட்டுக் குறிப்புகளும், மதுரை அருகே பெருமணலூர் என்னும் நகரம் பாண்டியர் தலைநகராக இருந்திருப்பதைப் பதிவு செய்திருக்கின்றன. தற்போது, கீழடி பள்ளிச் சந்தைப் புதூரிலும் மணலூர்க் கண்மாய்க் கரையிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் புதைந்து போன மணலூர் நகரத்தை அடையாளப்படுத்தும்படியாகவும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால மக்களின் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் குறிப்பிடுகிற அணிமணிகள் ஏராளமானவை இங்கு கிடைத்திருப்பதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முத்து மணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லுகள், தாயக் கட்டைகள், சதுரங்கக் காய்கள், குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்றவை கிடைத்துள்ளதையும் காண முடிகிறது.

சங்க கால இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறை கேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிகளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டு இருந்ததையும் காண முடிகிறது. வீடுகள், வீடுகள் தோறும் குளியலறைகள், கழிவுநீர்க் குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள் போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.

கீழடியில் சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொள்கிறது.

கீழடியில் கண்டறியப்பட்டிருக்கும் நகரம், மதுரையின் தலைநகராக மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கான பெரு நகரமாகவும் விளங்கி இருப்பதையும் உணர முடியும். சூது பவளமணிகள், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மண்கல ஓடுகள் இங்கு கிடைத்திருப்பதன் மூலம், பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பானை ஓடுகளில் பழங்காலத் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பலவகைப் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆதன், இயனன், திசன், மடைச்சி போன்ற பெயர்கள் பொறித்த பானையோடுகள் அக்காலத்தியக் கல்வி மற்றும் எழுத்தியல் வளர்ச்சியைச் சொல்லி நிற்கின்றன.

புதைந்து போன அந் நகரத்தில் நெசவுத் தொழில் இருந்தமையை அங்கு கிடைத்திருக்கும் தக்களி என்னும் நூற்புக் கருவி மூலம் அறிய முடிகிறது. அதேபோல சிறு சிறு நீர்த்தொட்டிகள், கழிவுநீர்க் கூம்புக் குழாய்கள், மண்பாண்டக் கலன்கள் போன்றவை அங்கு சாயப்பட்டறை இருந்திருப்பதையும் கூறுகின்றன.

கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள் ஆண்பால் பெயர்களைத்தான் குறிக்கின்றன. ஆனால், இதிலிருந்து விலகிய ஒரு பெயர் மடைச்சி என்பது. இது ஒரு பெண்ணின் பெயரைக் குறித்ததாகவும் இருக்கிறது. அதிலும் எளிய குடிமக்களின் பெண் பெயராகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேளாண்மை உழவுக்குடிப் பெண்ணின் பெயராகவும் இருக்கிறது.

மடைச்சி என்னும் பெயர் வேளாண்மையோடு தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பெயர். வேளாண்மைக்கு மிக முக்கியமான ஆதாரம் நீர்தான். இந்த நீர் ஆதாரங்கள்தான் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள், ஆறுகள் போன்றவை. இத்தகைய நீர் ஆதார வளங்களை முறைப்படுத்தியும் பாதுகாத்தும் புனரமைத்தும் வந்தவர்கள்தான் மடையர்கள். நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீர் நிர்வாகத்தைப் புரிகின்றவர்கள் எனும் அடிப்படையில், மடையர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே நீர் மேலாண்மையைச் செய்து வந்தவர்கள் ஆவார்கள். இத்தகைய நீர் மேலாண்மை எனப் பெறும் மடைத் தொழில் மரபினரையே மடையர்கள் என்று சமூகம் குறித்து வைத்திருக்கிறது. அத்தகைய மடையர் என்பதன் பெண்பால் பெயராகத்தான் இந்த மடைச்சி எனும் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர், நீராணிக்கர், நீராணியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர்.  பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.

பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்தபோது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு.  கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான  சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போதுதான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு.

கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கீழடி அகழாய்வில், அந்நிலத்தில் வாழ்ந்த மடைச்சிக்கும், ஆதிச்ச நல்லூர் அகழாய்வில், அங்கு விளைந்திருந்த நெற்கதிருக்கும், இரு நிலத்திலும் வாழ்ந்த வேளாண்மை உழவுக் குடிகளுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் மூன்றுமே வீழ்ச்சியை அல்லது வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் குறியீடுகளாகவே இப்போது இருந்துகொண்டிருக்கின்றன. அதாவது,  புதிய தடயங்கள் நிறைந்த ஆதிச்ச நல்லூர் நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. அதேபோல, கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், கீழடி அகழாய்வை இன்னும் தொடராமல், பெயரளவுக்கு மூன்றாம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது இந்தியத் தொல்லியல் துறை.
எனினும், இதுவரையிலான அகழாய்வின் வழியாக, ஒரு நகரத்தில் புழங்கி இருக்கும் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடுகள், புதைந்து போன பழங்காலத்திய நகரத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்திருப்பதைத் தான் கீழடி நாகரிகம் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஒரு நகரம்
ஒரு நாகரிகம்
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.
கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

வரலாறு மீண்டிருப்பதைப் போலவே, வரலாறு எழுந்து நிற்கவும் செய்யும். அவ்வரலாற்றை நேர் செய்வது தமிழர் கடமை.


திங்கள், 18 டிசம்பர், 2017

சடங்கியல் பின்புலமும் கலை உருவாக்கமும்: ஏறு தழுவுதலை முன்வைத்து...




வடமொழி மரபில் எழுத்தியல் (சிட்சை), சொல்லியல் (வியாகரணம்), பொருளியல் (நிருத்தம்), செயல்முறை (கல்பம்), யாப்பு (சந்தஸ்), கணியம் (ஜ்யோதிஷம்) என்கிற ஆறு (ஷட்) அங்கங்களைக் கொண்டு செய்யும் செயலை ஷட் அங்கங்கள் என்று கூறுவர். இதுவே, நாளடைவில் மருவி சடங்கு என்று ஆகிவிட்டதாகக் கருதுவர். ஆனால், தமிழ் மரபில் சடங்கு என்பதற்கு வேறான பொருண்மையும் பொருள்கோடலும் உண்டு.

சடங்கு என்பதன் வேர்ச்சொல் சட்டம் என்பதாகும். சட்ட + அம் + கு = சடங்கு. அதாவது, சட்ட எனும் சொல்லிற்கு ஒழுங்கு முறையான, செவ்விதான எனப் பொருள் உண்டு. அம் என்பதற்கு அழகியது எனப் பொருளுண்டு. கு என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதியாகும். ஆக, ஒரு செயலைச் செம்மையுடனும் ஒழுங்கு முறையுடனும் அழகாகச் செய்விக்கும் தன்மையைச் சடங்கு எனப் பொருண்மை கொள்ளலாம். 

ஒரு சமூகக் குழுவினரால் புரிந்து கொள்ளப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான ஒன்று, காலங்காலமாகவும் மரபு வழியாகவும் பயிலப்பட்டு, அதன் பயன்பாட்டைக் கருதியும் ஏதோ ஒருவகையில் தக்கவைக்கும் நோக்கத்திலும் அதனைக் குறியீட்டுத் தன்மைகளுடன் புலப்படுத்துகிற ஒரு செயல்பாட்டைச் சடங்கு என வரையறுக்கலாம். ஒரு மனித சமூகக் குழுவினரால் குறியீட்டு நிலையில் நிகழ்த்தப்படுகிற செயன்மைகள், திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படுவதின் வழியாகச்  சடங்கு எனும் நிலைத்த வடிவத்தைப் பெறுகின்றன.

செயல் வடிவம் என்பதுதான் சடங்கின் சிறப்புக் கூறு ஆகும். அதாவது, சடங்கு என்பதே நிகழ்த்தப்படுவதாகும். சடங்கில் நிகழ்த்துதல் என்பதே அதன் அடிப்படைக் கூறாக அமைகிறது. இத்தகைய சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் தன்மை கொண்டவை. சடங்கின் மற்றொரு சிறப்புக் கூறாக அமைவது, அது பலரின் கூட்டு முயற்சியால் நிகழ்த்தப்படுவதாகும். விதிவிலக்காக, சில சூழல்களில் தனி மனிதரால் அவை நிகழ்த்தப்பட்டாலும்கூட, அவை பெரும்பாலும் கூட்டுத் தன்மை உடையவையாக, சமூகம் சார்ந்தவையாகவே நிகழ்த்தப்படுகின்றன.

நிகழ்த்து வடிவமே சடங்கின் வடிவம் எனக் கொள்கிறபோது, நிகழ்ந்தவற்றையே நிகழ்த்திக் காட்டும் தன்மையைச் சடங்கு கொண்டிருக்கிறது எனலாம். அதாவது, வாழ்வியலோடும் உணர்வோடும் நெருக்கமாய்ப் பிணைந்து கிடந்த ஒரு சமூகக் குழுவின் கடந்த காலத்திய அல்லது நிகழ்காலத்திய செயன்மைகளே, போலச் செய்தலாகவோ பாவித்தலாகவோ உணர்வுநிலை சார்ந்தும் நம்பிக்கை சார்ந்தும் நிகழ்த்தப்படுகிறபோது அவை சடங்குகள் எனும் மீவியல் தன்மையையும் நிகழ்த்து வெளிகளையும் கொள்கின்றன.

மனித சமூகக் குழுவின் வாழ்வியல் செயல்பாடுகளின் வழியே பாவனைகளாகவோ போலச்செய்தல்களாகவோ மேற்கொள்ளப்படுகிற இத்தகைய சடங்குகள்தான், அழகியலோடும் உணர்வெழுச்சியோடும் புலப்படுத்தப்படுகிறபோது நிகழ்த்துக்கலை எனும் வடிவத்தைப் பெறுகின்றன. அவ்வகையில், தமிழ்ப் பண்பாட்டு மரபில் நிகழ்த்துக் கலை வடிவமாய்ப் பரிணமித்திருக்கும் ஏறு தழுவுதல், தமிழ்ச் சமூகத்தின் சடங்கு வெளியிலிருந்து உருக்கொண்ட நிகழ்த்துக் கலை என்பதையும், சடங்கியல் பின்புலத்தில் கலைகள் தோற்றம் பெறுவதையும் விளக்கப்படுத்துகிறது இக்கட்டுரை.

தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்துச் சடங்காகப் புலப்படுத்துகின்ற பெரும்பாலான சடங்குகள், வேளாண் உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து பார்க்கும் அல்லது போலச் செய்து காட்டும் சடங்குகளாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு நிகழ்த்துச் சடங்கிற்குப் பின்னாலும் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளின் போலச் செய்தல் நோக்கமும் செயன்மையும் புதைந்து கிடக்கிறது. வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து புலப்படுத்தும் நிகழ்த்துச் சடங்குகள், பெரும்பாலும் உற்பத்தியோடு தொடர்புடைய விலங்குகளோடும் தொடர்பு உடையதாய்த்தான் அமைந்திருக்கின்றன .

உலகில் உள்ள மனித சமூகங்கள் பலவும் விலங்குகளோடு தொடர்புடைய சடங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஆத்திரேலிய ஆதிவாசிகள், புதர்களுள் ஒளிந்திருக்கும் விலங்குகளை வேட்டை ஆடுவது போலக் குழு நடனம் ஆடுவார்கள். புதர்களை விலக்கிச் செல்வது போல முதலில் சைகை செய்து ஆடுவார்கள். புதர்களில் இருந்து ஒலி வருவது போலத் தங்கள் குரலாலும் இசைக் கருவிகளாலும் ஒலி எழுப்புவார்கள். விலங்குகள் ஓடுவதுபோல ஆடுவார்கள். பின்னால் அவற்றை பூமராங் என்ற கருவியை எறிந்து கொல்வதுபோல ஆடுவார்கள். அடிபட்ட விலங்குகள் துடிப்பதுபோல ஆடுவார்கள்.

அதேபோல, ஆப்பிரிக்க இனக்குழு மக்கள், வலையில் மான்களை வீழ்த்துவதுபோல நடனமாடுகிறார்கள். பெண்கள் மான்களாகவும் ஆண்கள் வேட்டைக் குழுவினராகவும் பிரிந்து நின்று ஆடுவார்கள். ஆண்கள் தங்கள் உடலினுள் வெளியிலிருக்கும் ஒரு விலங்கின் சக்தி புகுவது போல நினைத்து, வலை வீசுவது போல் ஆடுவார்கள். பெண்கள் வலையில் அகப்படுவதுபோல் ஆடுவார்கள்.

மெலனீசியாவில் மீன் பிடிக்கும் பருவம் ஆரம்பிக்கும்போது விருந்தும் குழு நடனமும் நடைபெறும். அதில் காற்றடிப்பது, கடல் அலையில் படகு மிதப்பது, வலை வீசுவது, மீன் வலையில் அகப்படுவது, படகு கரை சேருவது, மீன் அதிகம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக ஆடுவது போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள் என்கிற குறிப்புகளைத் தருகிறார் நா.வானமாமலை. மேற்குறித்த நிகழ்த்துக் கலைகளையும் சடங்குகளையும் போலச் செய்தல் சடங்குகள் எனக் குறிக்கின்றனர் மானுட ஆய்வாளர்கள். 

உணவைத் தேடியும் உற்பத்தி செய்தும் வாழ்ந்து வந்திருக்கிற மனித சமூகத்தின் சடங்குகளில், விலங்குகளும் செடிகளும் கொடிகளும் மரங்களும் நிலமும் விதைகளும் முதன்மை பெறுவது தவிர்க்க முடியாது.

வேட்டை வாழ்க்கையை முற்றிலும் கைவிட்டு, உழவுத் தொழிலில் உணவு பெற்று வாழும் மக்கள் இனத்தவரிடையேகூட வேட்டைக்கால நம்பிக்கைகளின் எச்சங்கள் இருக்கின்றன எனும்போது, உழவுத் தொழில் சார்ந்த செயன்மைகளில் பல்லாயிரம் ஆண்டு காலத் தொடர்பை இன்னும் உயிர்ப்போடு தங்களது வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் மக்களது நிகழ்த்துச் சடங்குகளும் விலங்கோடு தொடர்புடையவையாகத்தான் அமைந்திருக்கும். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் நிகழ்த்துச் சடங்குகள் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகவும், மாடுகள் சார்ந்ததாகவும் இருப்பதைக் காண முடியும்.

தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை மதிப்புடனும் மகிழ்வுடனும் கொண்டாடி வந்து கொண்டிருப்பதைப் பல பண்பாட்டுக் கூறுகளின் வழியே அறிய முடியும். இத்தகைய வேளாண் உற்பத்தியின் உயரிய பண்பாட்டுப் புலப்பாடுதான் பொங்கல் சார்ந்த சடங்குகளும் நிகழ்த்துக் கலைகளும்.

தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி உழைப்பும் வாழ்நிலையும் வேளாண்மையோடு தொடர்புடையதாக இருந்ததால், வேளாண் உற்பத்தியின் அறுவடைக்காலமே, உணவுக்கும் செல்வத்திற்கும் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய காலமாகும். அத்தகைய அறுவடையையும் அதற்குத் துணை நின்றவற்றையும் நன்றியோடும் மதிப்போடும் வாழ்த்தவும் வணங்கவும் செய்தனர் தமிழர். அதைத்தான் பொங்கல் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில்தான், தையள் மாதம் என்கிற சுறவம் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் விழாக்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், இன்னும் பிற நிகழ்த்துதல்கள் அந்தச் சமூகத்தின் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமாக சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் சமூகங்கள், அவை சேமித்து வைத்திருக்கும் கூட்டு நினைவுகளைச் சடங்குகள் விழாக்கள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இவற்றிலிருந்தே சமூகத்தின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டெடுக்கவும் முடியும் என்கிறார் பால்கன்னர்டன் எனும் இன வரைவியல் ஆய்வாளர்.

அந்த வகையில், குழுவாகவும் இனக்குழுவாகவும் சாதியாகவும் பன்மை அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டு வளர்ச்சி அடைந்த தமிழ்த் தேசிய இனத்துள், தனி மரபாகவும் கலப்பு மரபாகவும் கூட்டு மரபாகவும் பொது மரபாகவும் முன்னெடுத்துக் கொண்டாடுகிற பண்பாட்டு அடையாளங்களுள் பொங்கல் பண்பாடும் ஒன்று. அதனால்தான் பொங்கல் பண்பாட்டைத் தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்திப் பண்பாடாகக் கருதப்படுகிறது. இதுவே தமிழ் நிலத்தின் உயிர்ப் பண்பாடாகவும் காணப்படுகிறது. 

பொதுவாகவே, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் உற்பத்தி சார்ந்தும் உயிரின வளமை சார்ந்தும் அறம் சார்ந்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியலைக் கொண்டிருக்கும். இத்தகையத் தமிழ் மரபு, சமயச் சார்பற்றவை. அதனால்தான், வைதீகம் எனப்படுகிற பார்ப்பனிய மரபு, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் அனைத்தையும் தமக்குரிய எதிர் அடையாளமாகவே கட்டமைத்தன.

தமிழ்ப் பண்பாட்டு மரபும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் - மறுக்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழ் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது பார்ப்பனியம்.

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது என உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற சமசுக்கிருத மரபில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான். 

பார்ப்பனர்கள்  நிலம் வைத்துக் கொள்ளலாம்; உணவு உட்கொள்ளலாம். ஆனால், வேளாண் தொழிலான உழவுத் தொழிலை மட்டும் அவர்கள் செய்யக் கூடாதாம். பார்ப்பனர்கள் பசு மாட்டைத்தான் தங்களது அடையாளமாகக் கருதுவர். ஆனால், தமிழர்களோ நிலத்தில் இறங்கி சேற்றில் உழைக்கும் வேளாண்மைத் தொழிலைத்தான் தங்களது உற்பத்தி அடையாளமாகக் காண்கின்றனர்.

உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளைத்தான் தங்களது பண்பாட்டு அடையாளமாகக் காண்கின்றனர். அதனால்தான், ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில் பொங்கல் பண்பாட்டை வளப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகையப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சிதான் மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகள். அவைதான், மாட்டுப் பொங்கல் சார்ந்த நிகழ்வுகள்.

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும்.

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, கழுத்துமணி ஆரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது.

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனைப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்று கூடி நடத்தப்பட்டிருக்கிறது.

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும் உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்வதை வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. இந்த நேர்த்திக்கடன் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்டதோடு கால்களில் சலங்கை கட்டிய அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு , தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனே தான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர்.

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும் தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.

மனிதர்களும் மாடுகளும் மாறிமாறி உழைக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன; சோர்ந்து போகின்றன. இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக்கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வுக் காலமும் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த ஓய்வு என்பது, உணவோ உறக்கமோ மட்டுமல்ல. உணவும் உறக்கமும் உடல் சோர்வையும் தேய்வையும் வேண்டுமானால் போக்கும். உள்ளத் தேய்வையும் சோர்வையும் போக்கவேண்டுமானால் உள்ளம் மகிழும்படியான பொழுதுபோக்கும் நடவடிக்கையும் வேண்டியிருந்திருக்கும். அதனாலேயே உள்ளக் கிளர்ச்சியும் எழுச்சியும் மகிழ்ச்சியும் தரும்படியான கலைகளையும் விளையாட்டுகளையும் நிகழ்த்தியும் பங்கேற்றும் வந்துள்ளனர் முன்னோர்.

காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்த இந்நிகழ்த்து முறைகளும் பண்பாடாய் வடிவமைந்து போகின்றன. அவ்வகையில், வாழ்வோடும் தொழிலோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மனிதர்களும் மாடுகளும் பொழுதுபோக்காய் விளையாடி மகிழும் விளையாட்டு மரபாய் உருக்கொண்டதாகத்தான் மாடு தழுவல் பண்பாடு வடிவமைந்திருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இச் சடங்கு நிகழ்வு, வேளாண் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் அதேவேளையில், வேளாண் உற்பத்தி சார்ந்த சந்தைப்  பொருளியலையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒரு சடங்கு பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விழாக்களாகக் கொண்டாடப்படும் போதுதான் அதன் சந்தைப் பொருளாதாரம் விரிவடைந்திருக்க முடியும்.

தொழில் உறவுகள், வணிக உறவுகள், புழங்கு பொருள் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பண்டமாற்று எனப் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகளும் இது போன்ற சடங்குகளுக்குள் மறைந்திருக்கின்றன. அதாவது, வேளாண்மை சார்ந்த தேசிய இனத்தின் தற்சார்புப் பொருளாதாரப் பின்புலம் இதற்குள் உண்டு. ஆதலால் தான், மாடு தழுவல் சடங்கானது பெருமகிழ்வுக்கான விழாவாக மாறிக்கொண்டது. 

மாடுகளுள், குறிப்பாகக் காளை மாடுகளே ஏரில் பூட்டி உழவு செய்திருப்பதால், ஏர் மாடுகள்,  எருதுகள், ஏறுகள் என்றழைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் மாடு தழுவுதல் என்பதுகூட எருது தழுவுதல், ஏறுகோள், ஏறு தழுவுதல் என இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய மாடு தழுவல் நிகழ்வு இன்னும் வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு, காளை விரட்டு, ஏறு விடுதல், வடமாடு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என வட்டாரம் சார்ந்து அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்துமே மாடுகளைத் தழுவிக்கொள்ளும் நிகழ்வைத்தான் குறிக்கின்றன.

மாடு தழுவல் என்னும் நிகழ்வானது சடங்காய் மட்டும் தேங்காமல், தமிழினத்தின் இன்னுமொரு பண்பாட்டு விழாவாகவும் பரிணமித்து வந்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில், மாடு தழுவலைக் குறித்தத் தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கலை சார்ந்த தடயங்களும் நிரம்ப உள்ளன.

சிந்து வெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, அரப்பாவில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சிந்து வெளியில் மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏறு தழுவுதலைக் குறிக்கும் சின்னம் என்கிறார் அய்ராவதம் மகாதேவன்.

வளைந்த கொம்புகளுடைய ஒற்றை எருது, மூர்க்கமான கோபத்துடன் முதுகுப் புறமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு, விரைந்து முன் நகர்ந்து மாடு அணையும் மனிதர்களை முட்டி வீச, அவர்களில் இருவர் காற்றில் மிதப்பது போலவும், ஒருவர் எருதைத் தாவி அணைவது போலவும், மற்ற இருவர் முன் பின்னாகத் தலை குப்பிறக் கீழே விழுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் சிலவும் ஏறு தழுவதலைக் குறித்துப் புலப்படுத்துகின்றன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் கி.மு 2000 முதல் 1500 வரையிலான காலத்தைச் சார்ந்த பாறை ஓவியம் காந்தி ராசன் அவர்களால் கண்டறியப்பட்டது. கூரிய கொம்புகளும் சிலிர்த்த  திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் அவர். மேலும், மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியிலும் ஒரு பாறை ஓவியம் அவராலேயே கண்டறியப்பட்டுள்ளது.

திமிலுடன் கூடிய ஒரு காளையை மனிதர் ஒருவர் அடக்க விரட்டுவது போன்று அமைந்த அவ் ஓவியம் கி.மு 1500 ஆம் காலத்தைச் சார்ந்தது ஆகும். இதேபோல, தேனி மயிலாடும்பாறைக்கு அருகில் அருக வெளியில் உள்ள சித்திரக்கல் புடவில் திமிலுடன் கூடிய காளையின் ஓவியம் பாலமுருகன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இவைகள் போக, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நடுகற்கள் ஏறு தழுவலைக் குறித்த புடைப்புகளையும் குறிப்புகளையும் தருகின்றன. பல்வேறு கல்வெட்டுகளும்கூட ஏறு தழுவல் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

நடுகற்களுள் பல வகை உண்டு. புலியோடு போராடி மாண்டவருக்கு எடுக்கப்பட்ட கல், புலிக் குத்திக் கல் என்று சுட்டுவர். அதே போல, பன்றிக் குத்திக் கல், யானைக் குத்திக் கல் எனப் பல வகையும் உண்டு. அவற்றுள், எருது பொருதார் கல் ஒன்றையும் ஆய்வாளர் சுட்டியுள்ளனர். இதில், காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தகையச் சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன எனக் கூறும் பெருமாள் முருகன், சேலம் மாவட்டத்தில் உள்ள எருது பொருதார் கல் ஒன்றில் காணப்படும் செய்தியைக் குறித்தும் விளக்கப்படுத்தியுள்ளார். கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான். சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு என்கிறது அந் நடுகல் . கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் இது. இதில் எருது விளையாடி என்னும் தொடர் இடம் பெறுவது கவனத்திற்குரியது என்பார் அவர்.

குறிஞ்சி நிலத்து விலங்காகிய மாடுகள் முல்லை, மருதம், பாலை நிலத்து மக்களோடும் தொழிலோடும் வாழ்வோடும் பினைந்து கிடந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறாக விவரித்துள்ளன. அவற்றுள் ஏறு தழுவலைக் குறித்த பதிவுகளும் உண்டு.

சங்க கால முல்லைக்கலியில் ஏறு தழுவல் குறித்த பாடல்கள் பலவுண்டு. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என ஏறு தழுவல் களம் காட்டப்படுகிறது.

மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச் சாடி
கொள இடம் கொளவிடா நிறுத்தன ஏறு –
என, ஏறு தழுவலின் களத்தை விவரிக்கிறது கலித்தொகை. அக் களத்தில் நிற்கும் ஏறுகள், தம்மை அடக்குவதற்காய் வருகின்றவர்களைக் கொம்பினால் குத்திக் கீறி தம் வீரத்தைக் காட்டி நின்றதைக் கூறும் கலித்தொகை ,

கழல உழக்கி, எதிர் சென்று சாடி
அழல்வாய் மருப்பினால் குத்தி
உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்டதம் புண்வார் குருதியால் கைபிசைந்து மெய் திமிறி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந் தாங்கு ஊர்ந்தார் ஏறு.
ஏறு தம் கோலம்செய் மருப்பினால்
தோண்டிய வரிக்குடர் ஞாலம் கொண்டு
எழூஉம் பருந்தின் வாய்வழீஇ 
ஆலும் கடமும் அணி மார் விலங்கிட்ட
மலைபோல் சினை
என்றுரைக்கின்றது. மேலும், கலித்தொகையின் முல்லைத் திணைப் பாடல்களில் (101 முதல் 107) பலவற்றிலும் ஏறு தழுவுதலைக் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.

உழவில் பங்கேற்கும் ஏர் மாடுகளைத் தவிர, அதில் பங்கேற்காத காளை மாடுகளும் உண்டு. இவை பொலி காளைகள் எனப்பட்டன. இக்காளைகளே ஏறு தழுவல் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்கக் கூடியவை. இதைக் குறித்துக் கலித்தொகை ஒரு காட்சிபோல் விவரிக்கிறது.

திமில் பெருத்த  இக்காளைகள், பல நிலத்திலிருந்து நீரைக் கொண்டு வருபவை போல நிலத்தை முட்டித் தோண்டின. சில காளைகள் நிலத்தை நொறுக்கின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துச் சிலைத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இவ்வாறு இந்தக் காளைகள் வீரமுடன் போரிட்டுச் செல்வது, மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்து மள்ளர்களை ஒத்ததாக இருக்கிறது என முல்லை நிலத்தையும் மருத நிலத்தையும் இணைவிக்கும் வகையில்,

நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல –
களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன
எனப் புலப்படுத்தியுள்ளது கலித்தொகை.

ஏறு தழுவல்போல, எருதுக்கட்டு எனும் மாடு தழுவல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்திருக்கிறது.

நாச்சங்காளை வடம் வெட்டிக் கன
பாய்ச்சல் காட்டும் பரையெல்லாம்
சிம்பும் எருது வடம் தொட்டு இழுத்துக்
கொம்பு பிடித்து விளையாடி
என்றும்,
எருது கட்டினர் குடும்பரே
என்றும் அந்நூல் விவரிக்கிறது.

ஏறு தழுவல் என்பது இன்னொரு வகையில் ஒரு பாவனை விளையாட்டுத்தான். மாடும் மனிதரும் இரு வேறு உயிர்ப்பான உறவுகள். மாடுகளைக் குறித்து மனிதரும், மனிதரைக் குறித்து மாடுகளும் இணக்கத்தோடும் பரிவோடும் புரிந்தே வைத்துள்ளனர். அதனால்தான் இரு தரப்பும் தம் வீரத்தை விளையாட்டாகக் காட்டிக் கொள்கின்றன. வெல்வதும் தோற்பதுமான பாவனைகள் தழுவல்களோடு முடிந்து போகின்றன. அதைத்தான் ஏறு தழுவல் நிகழ்வுகள் போலச் செய்து காட்டுகின்றன. இதனை ஏறு கொள் வென்றி எனச் சுட்டுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை. இதுபோன்று விலங்குகளோடு தொடர்புடைய விளையாட்டுகளையும் அந்நூல் தெரிவிக்கின்றது.

கோழி வென்றி , தகர் (கிடாய்) வென்றி , யானை வென்றி, சிவல்(கவுதாரி) வென்றி , கிளி வென்றி , குதிரை வென்றி எனப் பல வகை வென்றிகள் குறித்த விரிவுப் பதிவுகள் அந்நூலில் உண்டு. இவை யாவும் விலங்குகளை விலங்குகளோடு பொருதச்செய்யும் விளையாட்டுக்கள். ஆனால், விலங்கோடு மனிதர் தழுவும் விளையாட்டு மாடு தழுவல் மட்டும் தான்.

வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்காய்த் திகழும் ஏறு தழுவலானது, பயில்முறைத் தேவைக்கான தழுவலாகவும் அமைந்திருப்பதைப் பள்ளு நூல்கள் தெரிவிக்கின்றன .

பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
   பூட்டும் பொழுதிலொரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி
  முடுக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்படங்க மறிப்பன் எனவே
  வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்.
கோட்டு முனையாலது குத்துமளவில் குடும்பன்
  சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்
என உழும் களத்தில் மாடு முட்டுகிற நிகழ்வைக் காட்டுகிறது முக்கூடற் பள்ளு.

காளைகளோடு தழுவிப் பழகியிருந்தால் மட்டுமே - காளைகளைத் தம் வயப்படுத்தும் பயில்முறை தெரிந்திருந்தால் மட்டுமே காளைகளை உழவில் கையாள முடியும். அத்தகைய பயில் முறைகளையும் - பழகு முறைகளையும் நிகழ்த்திப் பார்க்கும் சடங்காகத்தான் மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையத் தழுவல் சடங்கு உழவில் ஈடுபட்ட உழவர்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருப்பதையும் பள்ளு நூல்கள் சொல்கின்றன.

மாடு முட்டியதால் கீழே விழுந்து கிடந்த பள்ளர், மறுபடியும் காளைகளைத் தம் வயப்படுத்தி ஏரில் பூட்டி உழுததை
பள்ளன் எழுந்து நிலை தரித்தான்- நின்ற
பள்ளியர் முகம் பார்த்துச் சிரித்தான்.
மெள்ளப் புருவம் கோட்டி நெரித்தான் - மாட்டை
மீளவும் பூட்டி உழத் தரித்தான்
என்கிறது முக்கூடற் பள்ளு.  இவ்வாறாக, வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கான மாடு தழுவலைக் குறித்த பதிவுகள் அமைந்திருக்கின்றன.

ஏறு தழுவுதல் மனிதர்க்கும் மாடுக்கும் இடையே நிகழ்கிற ஒரு விளையாட்டு மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், இது மனிதர்களின் வீரத்தைக் காட்டும் நிகழ்வு அல்ல. இரு தரப்பு வீரத்தையும் தினவையும் தழுவலின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிற - உணர்வைக் கொடுத்துப் பெற்றுக் கொள்கிற பரிமாற்ற விளையாட்டு அவ்வளவே. மனிதர்களைக் காட்டிலும் மாடுகள்தான் வலிமை மிக்கவை; மூர்க்கம் கொண்டவை; துள்ளல் நிறைந்தவை; தினவு மூண்டவை. ஆதலால், காளைகளுக்கே வீரம் மிகுந்திருக்கும். அதனால்தான் மாடு தழுவுதலைக்கூட மஞ்சு விரட்டு என்கின்றனர். மைந்து என்றால் வீரம் என்று பொருள். மாடுகளின் மைந்து விரட்டலே மஞ்சு விரட்டு என்றாயிற்று என்பார் தொ.பரமசிவம்.

முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்து மக்களின் வேளாண் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவையின் பொருட்டு உருவான தன்னுறு தொழிலோடும் மாடுகள் பிணைந்து கிடக்கின்றன. இவ்வாறு, மூவகைப்பட்ட தொழில்சார் சமூகத்தினரும் மாடுகளைப் பயன்படுத்தி, மாடுகளோடு தொழிற்பட்டு, மாடுகளைச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்ததால் ஏறு தழுவுதலும் இயல்பாகத் தோன்றி வளர்ந்தது என்பார் இ.பேச்சிமுத்து .

ஆக, மாடு தழுவல் என்பதும் - அதன் நோக்கம் என்பதும்  மனித வீரத்தை நிலை நாட்டுவதற்கல்ல; மாறாக, வேளாண் உற்பத்தியின் ஒரு நிகழ்த்துச் சடங்கு  மட்டுமே என வரையறுக்கலாம். அச் சடங்கும் விளையாட்டும்தான் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடாய் நீட்சி அடைந்து வந்திருக்கிறது.

கூடவே, இந்நிகழ்த்துச் சடங்கு, வேளாண்மையோடு நேரடி உழைப்பில் ஈடுபட்டு வந்திருக்கும் உழுதுண்ட உழவுக் குடிகளின் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளம் எனவும் வரையறுக்கலாம்.

குறிப்பாக, சிறு மற்றும் குறு அளவிலான நிலத்தோடு  உழைப்பில் உறவாடிக் கிடந்த உழவுக்குடிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைத் தொழில் குடிகளின் பண்பாட்டுக் கண்ணியாகவும் அது அமைந்திருக்கிறது எனலாம்.

பார்வை நூல்கள் :
1. ஏறு தழுவுதல் : வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் – மகாராசன்.
2. ஏறு தழுவுதல் சல்லிக்கட்டு: தொன்மை பண்பாடு அரசியல் - பாவெல் பாரதி (தொ.ஆ).
3. கலித்தொகை மூலமும் உரையும் – அ.விசுவநாதன்.
4. பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் - பாவாணர்.
5. பண்பாட்டுக் கட்டுரைகள் - பாவாணர்.
6. தமிழியல் கட்டுரைகள் - பாவாணர்.
7. தமிழர் பண்பாடும் தத்துவமும் - நா.வானமாமலை.
8. புறப்பொருள் வெண்பாமாலை - பொ.வெ.சோமசுந்தரனார் உரை.
9. அசல் மனுதர்ம சாஸ்திரம் - கி.வீரமணி ஆய்வுரை .
10. தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டிய மரபினர் - குருசாமி சித்தர்.
11. மானுட வாசிப்பு: தொ.ப தெறிப்புகள் - தயாளன் : சண்முகானந்தம்.
12. முக்கூடற் பள்ளு - ந.சேதுரகுநாதன் உரை.
13. திருவேட்டை அய்யனார் பள்ளு - ப.வே.நாகராசன் (ப.ஆ).
14. தமிழ் விக்கிப்பீடியா


வியாழன், 14 டிசம்பர், 2017

சாதியம் குறித்துப் பேசு பொருளாக்குங்கள்; அதுவே மனித உரிமைக்கான அறம்


சங்கர், சாதிய ஆணவப் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மூன்று வகைப்பட்ட போக்குகள் நிலவுகின்றன.

நிலவுகிற சமூக அமைப்பின் அரசு எந்திரம் வழங்கி இருக்கிற இது போன்ற தீர்ப்புகளே சாதியத்தையும் சாதியப் படுகொலைகளையும் ஒழித்து விடும் என நம்புவது ஒரு போக்கு.

மற்றொன்று , சாதிய ஆணவப் படுகொலைகளை ஆதரித்தும், சாதியத்தின் திமிரோடு காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வெளிப்படுத்தித் தீர்ப்புக்கு எதிரான ஒரு சாதிய உளவியலை உருவாக்கும் அல்லது இறுக்கமாக்கும் போக்கு .

இன்னொன்று, இது போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை கூடாது என வாதிடும் போக்கு.

மேற்குறித்த மூன்று வகைப்பட்ட போக்குகளுமே நிலவுகிற அல்லது நிலவி வந்திருக்கிற சாதியச் சமூக அமைப்பின் இயங்குதலை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் சரிவரப் புரிந்து கொள்ளாமையால் உருவானவை.

சாதிய இறுக்கம் ஒரு புறமும், சாதியத் தளர்வுக்கான வேலைகள் ஒரு புறமும் பல காலமாக நடந்து கொண்டு தான் வருகின்றன. இதில் எதன் பக்கம் நிற்கிறோம் அல்லது நிற்கப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கிற கேள்வி. இதற்கு முன்னால் சாதியம் பற்றிய புரிதலில் தெளிவு தேவை .

மரண தண்டனை தீர்ப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தோழமைகளின் கருத்துகள் குறித்து தான் மறு விமர்சனம் செய்யப்படுகிறது . சாதியம் பற்றிய உரையாடல்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் என்னென்ன அக மற்றும் புறக் காரணிகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி , சாதியத் தகர்ப்புக்கான அணி சேர்க்கைக்கான அறைகூவல் தான் எம் போன்றவர்களின் விமர்சனப் போக்குகள்.

இது போன்ற விமர்சனங்கள் , உயர்த்திக் கொண்ட சாதிய சமூகத்திலிருந்து சமூக சனநாயக ஆற்றல்களாகப் பரிணமித்திருக்கும் தோழமைகளை சாதியவாதிகளாகச் சுருக்கிப் பார்ப்பதாகவோ , ஒடுக்கப்பட்டவர்களின் விரோதியாகப் பார்ப்பதாகவோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  அவர்களது புரிதல் மீதும் கருத்தின் மீதும் தான் விமர்சனமே தவிர, அவர்கள் எதிராளிகள் அல்ல. விமர்சனம் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் யாவரும் எம் தோழரே.

சாதியப் பிரச்சினை குறித்துப் பேச வேண்டியதும், செயலாற்ற வேண்டியது குறித்தும் தோழர் தமிழரசன் அவர்களின் விவரிப்பு பின்வருமாறு:

' சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும் . சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்கு வாதிகளின், வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள்.

பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டு விடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை. சீர்திருத்தவாதிகளோ மதமாற்றம், வகுப்புவாரி ஒதுக்கீடு, சாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று பிரச்சனையை ஓரிரு எலும்புத் துண்டோடு நிறுத்திவிடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிச் சாதிகளையே ஒழிப்பதை நோக்கி இட்டுச் செல்வதில்லை.

சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே, இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும்.

இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியுமென்பதால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களுடனும் அதாவது புதிய சனநாயகப் புரட்சிக்குரிய சனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்படவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்கள் உழவர் விடுதலை, தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்'.'

 -தோழர் தமிழரசன்
(''சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்'' எனும் நூலில் இருந்து)

புதன், 13 டிசம்பர், 2017

சாதிய உளவியலும் பதற்றங்களும்


சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும்.

இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல.  இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே.

மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் அது குறைந்திடப் போவதுமில்லை. ஆனால் சாதியவாதிகளுக்கு ஓர் அச்சத்தையும் பதற்றத்தையும் இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை . இதைப் பலருடைய  பதிவுகள் பதற்றத்தோடு வெளிப்படுத்துவதில் தெரிகின்றன.

இந்தத் தீர்ப்பால் சாதியம் ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை. ஆயினும் சாதிய உளவியல் பதறத் தொடங்கி இருப்பதாகவே கருதுகிறேன்.
முற்போக்கும் புரட்சியும் பேசுகிறவர்களுக்குள்ளிருந்து நிறைய சாதிய முகங்கள் வெளியே வந்து மனித உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு என்ற சாயங்களைப் பூசித்திரிகின்றதைப் பார்க்கும் போது தான் சாதியச் சமூகத்தின் வேர்த் தடங்கள் தெரியத் தொடங்குகின்றன.

சமூக விஞ்ஞானம் பயில்கின்றவர்கள் எனச் சொல்வோரிடமே சாதியம் குடியிருக்கிற போது, சாதிய வட்டத்தோடு நெருங்கி இருக்கிற சாமானியர்களின்  உளவியலை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

இடைநிலைச் சாதிகள் அல்லது உயர்த்திக் கொண்ட சாதிகளில் உள்ள சமூக சனநாயக சக்திகள் இது போன்ற தீர்ப்புக்கு ஆதரவாக நிற்கும் போது தான், சாதியக்கட்டுமானத்தை மெல்ல மெல்ல அவிழ்க்கவும் அதைக் கரைக்கவும் முடியும். மாறாக, எதையோ ஒன்றைக் காரணம் காட்டி எதிர்த்து நின்றால், சாதியவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகவே அமைந்துவிடும்.

நிலவுகிற சமூக அமைப்பில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதுவும் சாதியம் பற்றிய தளத்தில் .

முற்போக்கு புரட்சி பற்றிப் பேசும் மிகப் பலரும்  கவுசல்யாவைப் பாராட்டித்தான் பேசுகிறார்கள். சாதியவாதிகள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மட்டும் எதிர்க்கிறார்கள். மரண தண்டனை மனித உரிமை எனப் பேசி பதற்றமடைகிறார்கள். சாதியம் பற்றிய உரையாடலைத் திசை திருப்புகிறார்கள். இவை யாவும் சாதியத்தை ஏதோ ஒரு வகையில் முட்டுக் கொடுக்கும் வாதங்கள் தான்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் என்றுமே தயார் தான். உயர்த்திக் கொண்ட சாதிகளே இணையத் தயங்குகின்றன .

தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தயக்கத்தை கவுசல்யா உடைத்தெறிந்து புரட்சிகரப்  பெண் அறமாய் முன் நிற்கிறார் . நாம் அவரோடும் அவர் பக்கமும் நிற்பதே சாதிய ஒழிப்புப் போராட்டத்தின் அணி சேர்க்கை ஆகும்.

உயர்த்திக் கொண்ட சாதித் திமிரை ஒழித்துக் கட்டுவோம். உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

மாணவர்கள் உதிரிகளும் அல்லர்; ஆசிரியர்கள் குற்றவாளிகளும் அல்லர்.


தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகுமளவுக்கு இளஞ்சிறார்களை உருவாக்கி இருப்பது பள்ளிகள் மட்டுமல்ல; உதிரிப் பண்பாட்டு நடத்தைகளால் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தாலும் தான்.

மாணவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் இந்தச் சமூகம் எந்தளவுக்கு உற்று நோக்கி இருக்கிறது எனத் தெரியவில்லை. மாணவர்களை மதிப்பெண்களை மட்டுமே எடுக்கக் கூடிய வெறும் எந்திரங்களாகவே இந்தச் சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களை இரு தரப்பினராகப் பாவிக்கும் பார்வை குறித்து நம்மில் பலரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதாவது, பத்தாவது வரை பயிலும் மாணவர்கள் ஒரு ரகம். மற்றொன்று மேல்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பயில்கிறவர்கள் ஒரு ரகம். மேல்நிலை வகுப்புகளில் பயில்கிற மாணவர்கள் பதின்பருவச் சிக்கல்களோடு இருக்கும் நிலையினர். கவனச் சிதறல்களுக்கு ஆளாகும் பருவமும் கூட.

திரைப்பட மோகம், உள்ளூர் சாதிய மதவாத சக்திகளோடு நெருக்கம், கஞ்சா, புகையிலை, மது போன்ற பழக்கங்களோடும் அந்நபர்களோடும் நெருக்கம், கண்ணியக் குறைவான அருவருக்கத்தக்க தோற்றத்தில் கழுத்துப் பாசிகள், கைவளையல்கள், உள்ளாடை தெரிகிற வகையில் உடுப்புகள், அலங்கோலமான தலை முடி வெட்டுகள், பள்ளி வகுப்பறைச் சுவர்களில் சாதியப் பெயர்களோடு எழுதிப் போடுகிற அவன் டா இவன்டா வசனங்கள், புத்தகப் பையே கொண்டு வராமல் இரண்டு ஏனோ தானோ புத்தகங்கள் குறிப்பேடுகள், தாமதமான வருகை, அடிக்கடி விடுப்புகள், பள்ளிக்குள்ளும் வகுப்பறைக்குள்ளும் வெடி போடுதல், பள்ளிப் பொருட்களைச் சேதப்படுத்தல், மது போதையில் வகுப்பிற்குள் இருத்தல், உதட்டுக்குள் புகையிலை வைத்தல், மாணவர்களுக்குள் அடிதடி தகராறு, ஆசிரியரை அவமதித்தல், செல்பேசிப் பயன்பாடுகள், ஆபாசப் படங்கள் பார்த்தல்,  படிப்பில் கவனமின்மை போன்ற இன்னும் பல்வேறு சிக்கல்கள் பதின்பருவ மாணவர்களிடம் இருக்கின்றன.

இதையெல்லாம் களைவதும் அவர்களை நல்வழிப்படுத்துவதும் வேண்டுமானால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சந்தித்துப் பேசியாக வேண்டும். இது மாணவர்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஆசிரியர்களே குற்றவாளிகள் அல்ல. இது சமூகத்தின் பிரச்சினை. சமூகம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உதிரிப் பண்பாட்டு நடத்தைகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் மாணவத் தரப்பைப் பண்படுத்துவது ஆசிரியர் மட்டுமல்ல நம் அனைவரின் கடமையும் கூட.

மாணவத் தரப்பையோ அல்லது ஆசிரியத் தரப்பையோ மாற்றி மாற்றி குற்றம் சுமத்துவதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை. இதைக் குறித்த உரையாடல்களைத் திறந்த மனதுடன் முன்னெடுக்க வேண்டியது உடனடித் தேவையும் கூட.

பனப்பாக்கத்தில்
உயிர் மாய்த்து மறைந்த
எம் பிள்ளைகளுக்கு எம் அஞ்சலி.

செவ்வாய், 21 நவம்பர், 2017

நா.வானமாமலையும் உழவுக் குடிகளைக் குறித்த எழுத்தும்.




தமிழ்ச் சமூக வரலாற்று நிகழ்வுகளையும், தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவமெனும் மெய்யியல் மரபுகளையும் பெருமிதமாகவும் மிகையாகவுமே எடுத்துரைத்த பெரும்போக்கு நிலவிய காலகட்டத்தில், வரலாற்றுப் பொருள்முதல்வாத மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாதங்களை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியச் சிந்தனைக் கண்ணோட்டத்திலான எடுத்துரைப்புகளைத் தமிழியல் ஆய்வுகளின் வாயிலாகப் புலப்படுத்தி, மார்க்சியத் தமிழியல் சிந்தனை மரபை வளப்படுத்திய அறிஞர் நா.வானமாமலை ஆவார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொ.மு.சி.இரகுநாதன், தி.க.சிவசங்கரன், சிந்துபூந்துறை சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து 1947இல் நெல்லை இலக்கியச் சங்கத்தை உருவாக்கி இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை  முன்னின்று நடத்தியவர்.

எவ்விதமான முன் தகுதிகளோ, கல்வித்துறை ஏற்புகளோ, அடையாள வரையறைகளோ இல்லை; அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, ஆய்வு ஈடுபாடு, படிப்பில் ஈடுபாடு, விடாமுயற்சி போன்றவை உடைய யாவரும் உறுப்பினராக ஆகலாம் என்கிற அறிவிப்போடு 1967இல் நெல்லை ஆய்வுக் குழுவை ஏற்படுத்தியவர்.

தமிழ் இலக்கிய மரபில் மார்க்சிய நோக்கிலான சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியில் பல இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள், தொ.மு.சி.இரகுநாதனின் சாந்தி, விசயபாசுகரனின் சரசுவதி ஆகியவை முதன்மையானவை. இவ்வரிசையில், மார்க்சியச் சிந்தனைப்புல நோக்கில் தமிழியல் ஆய்வு முறைமைக்கான நிறுவனமயப்படுத்தும் முயற்சியாக நா.வானமாமலை அவர்களால் 1969இல் ஆராய்ச்சி எனும் இதழ் தொடங்கப்பட்டது. இவரது பொறுப்பில் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சி இதழானது தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் முன்னணி அமைப்புகளிலும் பல பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர். தமிழ் அறிவுச் சூழலில் நிறுவனமயப்படுத்தப்பட்ட  கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து ஆய்வு முறையியலை வளப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அதாவது, நிறுவனமயப்பட்ட கல்விப் புலங்களின் ஆசிரியர்களாலும் பேராசிரியர்களாலும் ஆய்வாளர்களாலும் முன் வைக்கப்படுகிற ஆய்வுகள்தான் ஆய்வுகள் என்றும், அத்தகையக் கல்விப்புலச் சூழலே அறிவுச்சூழல் என்றும் பெருவாரியாய் நம்பிக்கொண்டிருந்த தமிழ்ச்சூழலில், நிறுவனமயப்பட்ட கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து தமது ஆய்வுகள் வாயிலாகத் தமிழ் அறிவுச்சூழலை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் காட்டியவர் நா.வானமாமலைதான். பல்கலைக் கழகத்திலோ கல்லூரியிலோ பேராசிரியராக இவர் பணிபுரியவில்லை என்றாலும்கூட, பேராசிரியர் எனும் அடைமொழி நா.வானமாமலை எனும் பெயருடன் மதிப்பாய்ந்த பொருண்மையோடுதான் இணைந்து நிற்கிறது.

தமிழ்ச் சமூக ஆய்வுகளில் மேற்கத்திய முன்மாதிரிகளையோ கருத்தாக்கங்களையோ அப்படியே வறட்டுத்தனமாகப் பயன்படுத்த இயலாது; கூடாது என்பதைத் தமது ஆய்வுகளின் வழியே புலப்படுத்தியவர். மேலும், எழுத்து மரபின் வழியாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் அடையாளங்களைச் சமூக அடித்தளங்கள் நோக்கி நகர்த்தியதில் நா.வாவிற்குப் பெரும் பங்குண்டு.


நா.வாவின் ஆய்வுத் தடத்தில் முதன்மைத்துவம் பெறுபவை நாட்டுப்புற மக்கள் வழக்காறுகள் குறித்தானவை. களத்தரவுகள், பாடல்கள், கதைப்பாடல்கள், வாய்மொழி வழக்காறுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், பதிப்பு, ஆய்வு எனத் தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலை வளப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டுப்புறப் பண்பாட்டு அலகுகளில் காணப்படுகிற நிலம், உடல், உணர்ச்சிகள், உழைப்பு, சுரண்டல், ஒடுக்குமுறை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை அடையாளப்படுத்தியதில் இவரின் எழுத்துக்கள் தனித்துவம் நிறைந்தவை. குறிப்பாக, உழைக்கும் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை முன்வைப்பதாகவே இவரது எழுத்துகள் அமைந்திருந்தன.

தமிழ்ச் சமூகத்தின் மொழி, இலக்கியம், கலை, வரலாறு, சமயம், பண்பாடு, மெய்யியல், அறிவியல், மொழிபெயர்ப்பு, ஆய்வு, பதிப்பு, ஆவணப்படுத்தல் போன்ற பல தளங்களிலும் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் நா.வா. இவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல; இப்போதும்கூட முன்மாதிரியாகவே தெரிகிறார்.

தமிழ்ச் சமூக வரைவியலில் நா.வாவின் பங்களிப்பும் உழைப்பும் பெரும்பங்கு வகித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் உழவுக்குடிகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் தனித்துவம் வாய்ந்தவை.

பொதுவாக, உழவுத் தொழிலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சமூகப் பிரிவினரைக் குறித்த பதிவுகள் தமிழில் ஏராளம் உண்டு. பல்வேறு தொழில் மரபினரின் பங்கேற்புகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவி இருந்தாலும், உழவுத் தொழில் மரபினரின் பங்கேற்புகள்தான் தமிழ்ச் சமூகத்தின் உணவு உற்பத்தியைத் திறம்பட இயங்கச் செய்திருக்கிறது. அதனால்தான்,
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை 
என்கிறார் வள்ளுவர். அதேபோல, உணவளிப்பவரே உயிர் கொடுப்பவர் எனும் பொருளில்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிறது புறநானூறு. 

உயிர் வாழ்வுக்கான உணவை அளிப்பதுதான் அறம் எனக் குறிக்கும் வகையில்,
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
எனச் சுட்டுகிறது மணிமேகலை.

மனித வாழ்வின் அடிப்படைக்குப் பல பொருட்கள் தேவைப்பட்டாலும்கூட, உணவுப் பொருள் ஒன்றே முதன்மையானதும் தலையாயதுமாகும். சமூகத்தில் பல்வேறு தொழில் மரபினர் இருந்தாலும், எல்லாத் தொழில் மரபினருக்குமான உணவுத் தேவையையும் நிறைவு செய்கிறவர்கள் உழவர்கள்தான். இதனை,
உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதுஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
என்கிறார் வள்ளுவர். அதாவது, பலவகைப்பட்ட தொழில் புரிகின்றவர்களுக்கும் உயிர் தாங்கிடப் பசி போக்கும் தொழிலாக இருப்பது உழவுத் தொழிலே. அதனால்தான், உழவர்கள் உலக மக்களின் அச்சாணி எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். உழவுத் தொழில் என்பதே, அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது; அத்தொழில் சாராத மற்றவர்களின் உணவுத் தேவைக்கும் உதவுகிறது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
எனும் குறள் ஒப்புரவு என்னும் உதவி செய்தலைக் குறித்துப் பேசுகிறது. ஒரு பொருள் தமக்கும் பயன்பட வேண்டும்; மற்றவர்க்கும் பயன்பட வேண்டும். அதாவது,  வேளாண்மைத் தொழில் போலப் பயன்பட வேண்டும் என்கிறது அக்குறள். 

வேளாண்மை உழவர்களின் மற்றொரு குணவியல்பு, மற்றவர்களின் பசி வலி அறிதல்தான். அதனால்தான்,
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
என்கிறார் நல்லாதனார்.

உணவை உற்பத்தி செய்யும் உழவரே, இல்லாதோருக்கும் இருப்பவர்க்கும், ஒத்தாருக்கும் உயர்த்திக்கொண்டோருக்கும், ஊர் உலகை ஆள்வோருக்கும்கூட  உணவைக் கொடுக்கும் தன்மை நிறைந்தவர். அதனால்தான் இரப்போர் சுற்றத்தார்; புரப்போர் கொற்றத்தார் என்றெல்லாம் குறிக்கப்படுகிறார். 

இத்தகைய உழவுத் தொழில் மரபினரை உழவர், களமர், கம்பளர், காராளர், கடைசியர், கடைஞர், வினைஞர், கிளைஞர், தொழுவர், கருங்களமர், மேழியர், மள்ளர், வேளாளர் எனப் பல பெயர்களில் குறிக்கிறது தமிழ் இலக்கிய மரபு.

அஞ்சுவண்ணன், அணியர், அளவன், அதிகாரி, ஆற்றுக்காலாடி,  இந்திர சாதி, உழவர், ஊரன், ஒண்டிப்புலி, ஒளியர், கடம்பர், கணக்கன், கடையர், கடைசியர், களமர், கருங்களமர், காலாடி, குடும்பர், கூத்தாடி, கூத்தர், தொண்டைமான், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், நாட்டார், நீராணியம் (மடையர்), நீர்கட்டி, படையாட்சி, பண்ணாடி, பணிக்கன், பலகான், பழையர், பள்ளர், பள்ளி, பளியர், பாண்டியர், பாவாணர், பூசி, மகிழ்நன், மண்ணாடி, மல்லர், மழவர், மள்ளர், மன்றாடி, முதலி, மூப்பன், செட்டி மூப்பன், நாட்டு மூப்பன், புள்ளி மூப்பன், வலவன், வாதிரியார், வாய்க்காரர், வாரியன், வெண்களமர், வெள்ளாளர், வேந்தர், வேள் போன்ற குலப் பிரிவுகளால் அடையாளப்பட்ட அல்லது அடையாளப்படுகிற சமூகப் பிரிவினர் உழவுத் தொழில் மரபைச் சார்ந்தவர்கள் எனப் பதிகிறது வழக்காற்று மரபு.

வாய்மொழி மரபிலும், எழுத்து மரபிலும், வரலாற்றுத் தரவுகளிலும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்த விவரிப்புகள் நிரம்பக் கிடைக்கின்றன. எனினும், இவ் உழவுக்குடியினர் பள்ளர் எனும் பொதுவழக்குச் சொல்லாடலாலும், மள்ளர் எனும் இலக்கிய வழக்குச் சொல்லாடலாலும், தேவேந்திர குல வேளாளர் எனும் அரசியல் சொல்லாடலாலும் பெருவழக்காய்க் குறிக்கப்படுகின்றனர்.

தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் பள்ளு எனும் இலக்கிய வகையாக அடையாளப்படுத்தப்பட்ட பெருவாரியான பள்ளு இலக்கியங்கள் பள்ளர் எனும் உழவுக் குடிகளைக் கதை மாந்தர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. ஏர் மங்கலம், உழத்திப் பாட்டு போன்ற இலக்கிய மரபின் நீட்சியாகப் பள்ளு இலக்கியங்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்பட்டாலும், உழவுக் குடிகளின் வரலாற்றுப் படிமங்களையும், வாழ்வியல் இருப்புகளையும், நிலத்தோடு கொண்டிருந்த உறவுகளையும், பண்பாட்டுக் கோலங்களையும் தரவிறக்கம் செய்யும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டன என்கிற கருத்தும் உண்டு.

உழவுத் தொழிலின் அடிப்படை ஆதாரம் நிலம் தான். நிலத்தில் தமக்கான உரிமை இருந்த காரணத்தாலேயே, காலங்காலமாக நிலத்தில் உழைப்பைச் செலுத்தி வந்துள்ளனர் உழவுக்குடிகள். நிலத்தின் மீதான உரிமைதான் நிலத்தின் மீதும், உழைப்பின் மீதும், உழவின் மீதும் ஓர் உயிர்ப்பான உறவை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், உழவுத் தொழில் மரபு பெருமித அடையாளமாக உழவுக்குடிகளால் கருதப்பட்டிருக்கிறது. 

நிலத்தோடு உழவுக் குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் ஆள்வோர்களும் அதிகாரச் சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், கொடைகளின் பேராலும், மடங்களின் பேராலும், மெல்ல மெல்லத் தம்வயப்படுத்திக் கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

நிலத்தின் மீதான குறைந்தளவு உரிமைகளையும் பறிக்க முயன்றதின் பண்பாட்டு ஏமாற்றுதல்கள்தான் – பண்பாட்டு ஒடுக்குமுறையின் வடிவங்கள்தான் பள்ளு இலக்கிய உருவாக்கங்கள். நிலத்தோடு உரிமையும் உணர்வுநிலைப்பட்ட உறவும் கொண்டிருந்த உழவுக் குடிகளைப் பண்ணை அடிமைகள் போலக் கதையாடல்களைப் புனைவாக்கம் செய்துள்ளன பள்ளு இலக்கியங்கள். 

பிற்காலங்களில், இத்தகையப் பள்ளு இலக்கியங்கள் வாயிலாகவே – அவை உருவாக்கிய படிமங்கள் வாயிலாகவே உழவுக்குடிகள் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், தற்சார்புடனும் தன்மானத்துடனும் வேளாண் தொழிலை மேற்கொண்டு வந்த உழவுக் குடிகள், நிலத்தின் மீதான உரிமையை இழக்க நேர்ந்தாலும், வேளாண் உழவுத் தொழில் மரபையும் உறவையும் இழந்திடவில்லை. வேளாண் உழவுத் தொழில் சார்ந்த அறிவும் திறமும் உழைப்பும் பண்பாடும் வாழ்வும் என யாவுமே உழவுக் குடிகளின் கையிருப்பாக இருந்து வந்திருப்பதைப் பள்ளு இலக்கியங்களுமேகூடப் புலப்படுத்தி வைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திய இலக்கியப் படைப்புகளும் அவ்வக்காலத்தியச் சமூக ஆவணங்கள்தான். அவ்வகையில், பள்ளு இலக்கியங்களை உழவுக்குடிகளின் எதிர் இலக்கியங்களாகப் பாவிக்க வேண்டியதில்லை. ஏனெனில், பள்ளு இலக்கியங்கள்தான் உழவுக்குடிகளின் நில உரிமையைத் தவிர்த்து, நிலத்தோடு தொடர்புடைய ஏனைய மரபுகளைக் குறித்து விரிவான தரவுகளை முன் வைத்துள்ளன. ஆகவேதான், உழவுக்குடிகளைக் குறித்த சான்றாவணங்களாகப் பள்ளு இலக்கியங்கள் கருதப்படுகின்றன.

பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத்தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தி உள்ளார். 

உழவுக் குடிகளைக் குறித்த உரையாடல்களுக்கும் மீளாய்வுகளுக்கும் இவரது கட்டுரைகள் துணை செய்யக்கூடியவை. எனினும், 1956-57 காலகட்டத்தில் சரசுவதி இதழில் பள்ளுப் பாட்டு குறித்தும் உழவுக்குடிகளைக் குறித்தும் நா.வானமாமலை எழுதிய  கட்டுரைகள் இதுவரையிலும் தனி நூலாக்கம் பெறாமலே  கிடப்பிலே கிடந்திருக்கின்றன. 

நா.வானமாமலை அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் இந்தச் சூழலிலாவது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தனி நூலாக வெளிவருவது, அவரது நூற்றாண்டு விழாவை மட்டுமல்ல, உழவுக் குடிகளையுமே சிறப்பிக்கும்.



ஞாயிறு, 19 நவம்பர், 2017

குறியீடு : ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் காட்சி மொழியில் திருப்பிச் செய்திருக்கும் குறும்படம் '



சமூக அக்கறையோடு அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில வணிகப் படங்கள் வருவதுண்டு. ஒரு முழு நீள வணிகப் படம் ஏற்படுத்தும் உணர்வுப் பறிமாற்றங்களைக் குறும் படங்களாலும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு யூ டியூப்பில் வெளிவந்திருக்கும்  "குறியீடு" கட்டியம் கூறுவதாய் அமைந்திருக்கிறது.

 உரையாடல்கள் எதுவுமின்றி காட்சிகள் வழியாக விரிகின்ற திரை மொழியில் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகளையும் வன்மங்களையும் புலப்படுத்தி இருப்பது கவனிக்க வேண்டியதாகிறது.

கற்களும் கள்ளிகளும் மண்டிக் கிடக்கும் மலைக் காடுகளில் காட்சிகள் நகர்கின்றன. காதல் வயப்பட்ட இரு வேறு சமூக மனிதர்களைச் சாதியம் எப்படிக் கொல்லத் துணிகிறது ? அதன் கோர முகம் எது ? என்பதையெல்லாம் காட்சிகளில் விரித்துக் கிடத்தியிருக்கிறார் இயக்குநர்.

சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழும் நிலப்பரப்பில் , சாதிய ஆணவத்தைப் படுகொலை செய்வதாய்ப் படம் முடிவது, வழக்கமான அழுகையும் ஒப்பாரியுமாய் இப்படம் அல்ல என்பதைச் சொல்லி விடுகிறது.
திருப்பிச் செய்தலின் திரை மொழியாய்க் குறியீட்டுப் பொருளை உணர்த்தி நிற்கிறது குறியீடு எனும் இப்படம் . சாகச் செய்வாரைச்
சாகச் செய்தல் வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதால் குறியீடு என்றாயிற்று எனவும் கூறலாம்

படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது உடல் மொழியால் உணர்வுகளையும் உரையாடல்களையும் கச்சிதமாகப் புலப்படுத்தி இருக்கிறார்கள். வறண்ட நிலப்பரப்பையும் வரட்டுக் குணம் கொண்ட மனிதர்களையும் காதல் அரும்பிய இளசுகளையும், சாகடிக்கப்பட்ட காதலனின் காதலியாகப் பயித்தியமாகித் திரியும் அவலத்தையும், கருப்பனாய் ஆணவம் அழிக்கும் தாண்டவத்தையும் தவிப்போடும் உயிர்ப்போடும் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாராட்டப்பட வேண்டியவர்.

படத்தின் மிகப் பெரிய பலமே பின்னணி இசைதான். படம் நெடுகப் பயணிக்கும் இசைதான் காட்சி மொழிகளை இன்னும் வலுவுடனும் உயிருடனும் நம்மோடு நெருக்கப் படுத்தி விடுகிறது.

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் காட்சி மொழியில் குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத் மிசுரா மற்றும் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

சனி, 18 நவம்பர், 2017

புதியக் கல்விக் கொள்கையில் மறைந்திருக்கும் பார்ப்பனிய ஆணாதிக்க வணிகமயக் குரல்.



கற்றுக் கொள்வதையும் கற்றுக் கொடுப்பதையும் ஒருங்கே கொண்டிருக்கும் உயிர்ப்பான செய்கை தான் கல்வி .

ஒவ்வொரு மனித சமூகமும் தமக்கு உகந்த கல்விச் சூழலைக் காலத்திற்கேற்ற படியும் சமூகத்திற்குப் பயனளிக்கும்படியும் கல்விச் செயன்மைகள் குறித்த வரைவுகளை உருவாக்கியே வந்துள்ளன.

இந்தியச் சமூக அமைப்பில் கடந்த காலத்தில் நிலவிய கல்வி முறைகள் சாதிய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வந்துள்ளன. ஆங்கிலேய   வன்குடியேற்ற அதிகாரம் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறையானது எல்லோருக்குமான கல்வி வாய்ப்புகளைத் தரும்படியாக இருந்திருப்பினும், ஆங்கிலேய அதிகாரத்திற்குச் சேவகம் செய்யும் மங்குனிகளை உருவாக்குவதிலேதான் குறியாய் இருந்தன. குறிப்பாக, மனப்பாடக் கல்வி முறையே நவீனக் கல்வி முறையாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டது.

பெயரளவிலான இந்திய விடுதலைக்குப் பின்பும் மெக்காலே கல்வி முறையே வெகு காலமாக நீடித்து வருகின்றது. அதோடு, தாய் மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது எனும் கருத்து நிலை மேலோங்கச் செய்யப்பட்டுள்ளது.

கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் பண்பையும் அறத்தையும் ஆளுமையையும் உருவாக்கித் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். கல்வி பெறும் ஒரு மனிதர், அக்கல்வியால் இச் சமூகத்திற்கான பங்களிப்பைச் செய்பவராக மாற்றி அமைக்க வேண்டும்.

சமூகப் பயன்மிக்கதாகத்தான் கல்விச் செயல்பாடு அமைய வேண்டும். ஆனால், இதுவரைக்குமான கல்விச் செயல்பாடுகளும் அதன் கொள்கைகளும் சமத்துவத்தையோ அறிவுத் திறப்புகளையோ படைப்பாக்கத்தினையோ வளர்ப்பதற்குப் பதிலாக, ஆளும் அதிகார வர்க்கத்தினருக்கான மிகச்சிறந்த சேவகர்களையே உருவாக்கி வந்திருக்கின்றன. சொல்லப்போனால், தன்னறிவையும் தன்மானத்தையும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தன்னலமும் குறுகிய எண்ணமும் கொண்ட அடிமைகளையே உருவாக்கியிருக்கின்றன.

கடந்த காலத்திய அனைத்துக் கல்வி முறைகளும் அவற்றின் கொள்கைகளும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை உள்ளும் புறமுமாகப் பூடகமாய்க் கொண்டிருந்தன.

இப்போதைய அதிகார மய்யத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத் திமிரையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பதோடு, கல்வியைக் காசாக்கிப் பார்க்கும் வணிகத்திற்கான சந்தைப் பொருளாகவும் ஆக்கியிருக்கிறது. இன்னும் கூடுதலாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கான திறமையான அடிமைகளை உருவாக்குவதில் முனைப்பாய் இருக்கின்றது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான சமசுக்கிருதத்தின் முக்கியத்துவம், இந்தியக் கலாச்சார ஒற்றுமைக்கு அதன் தனித்துவமான பங்களிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை சமசுக்கிருதம் பயில்வதற்கான வசதிகள் தாராளமாகச் செய்து தரப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையின் உள்ளீட்டில் கூறப்பட்டுள்ளது.  

மக்கள் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், அது தேவ பாசை என்ற பார்ப்பனியக் கருத்தாக்கம் தான். இந்தியாவில் 1721 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 122 மொழிகள் வளர்ச்சி அடைந்தவை. மீதமுள்ள 1599 மொழிகளின் வளர்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை.

தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளின் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழி குறித்தும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக, செத்துப் போன ஒரு மொழியை உயிர்ப்பித்து அதனையே இந்திய தேசத்தின் தேவ பாசையாக உருவாக்குவதில் முனைப்பும் வேகமும் காட்டுகிறது. சமக்கிருதம் உயிர்த்தெழ வைக்கச் செய்வதன் நோக்கமே பழைய குருகுலக்கல்வி - பார்ப்பனியக் கல்வி - வேதக்கல்வி முறையை நவீனப்படுத்துவதற்குத்தான்.

சமக்கிருத வளர்ச்சிக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், தமிழ் போல அதுவும் ஒரு மொழி தான். பிரச்சினை எதுவென்றால், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கே சமக்கிருதம் தான் காரணம், அதனால் சமக்கிருத மொழியின் வளர்ச்சி அவசியம் என்பதாகச் சொல்வது தான் பிரச்சினை. அதாவது, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் யாவும் திராவிட மொழிக் குடும்பம் எனும் தனித்த மொழியினத்தைச் சார்ந்தவை. தமிழி மொழிக் குடும்பங்கள் வேறு, சமக்கிருத மொழிக் குடும்பம் வேறு.

தமிழும் சமக்கிருதமும் வேறு வேறு. எதிரும் புதிருமானது. நிலைமை இவ்வாறிருக்க, சமக்கிருதமே தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் தாய் என்கிற பழங்கதையை மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதன் வெளிப்பாடு தான் புதிய கல்விக் கொள்கையில் சமக்கிருத மொழிக்கு முதன்மை அளித்திருப்பதாகும். சமக்கிருத மேலாதிக்கத்தின் வெளிப்பாடு இது.

புதிய கல்விக் கொள்கையின் இன்னொரு ஆபத்து, இட ஒதுக்கீட்டு முறை நீக்கம் என்பதாகும்.
கல்வி மற்றும் பணியிடங்களில் நிலவுகிற சாதி, சமய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமைகளையும் சுரண்டல்களையும் நீக்குவதற்கான எந்த வழிமுறைகளையும் சொல்லவில்லை என்பதோடு, பட்டியல் மற்றும் பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைக் குறித்து மவுனத்தையே வெளிக்காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் ஏதேனும் ஒரு சொல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்றால் அது இட ஒதுக்கீடு எனும் சொல்தான். ஆக, கல்வி வேலைவாய்ப்புகளில் இருந்து வரும் இட ஒதுக்கீடு எனும் முறையே கூட நீக்கப்படுவதற்கான முன்னெடுப்பாகத்தான் இவ் வரைவு அமைந்திருக்கிறது. இட ஒதுக்கீடு நீக்கம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகவே முன்நிறுத்தப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒன்று, இணைப்புப் பள்ளிகளை உருவாக்குதல் என்பதாகும். அதாவது, குறைந்த மாணவர் சேரக்கையும் உள்கட்டமைப்பும் இல்லாத பள்ளிகளை உருவாக்குதல் என்பது திட்டம். இது நல்ல திட்டம் என்பது போலத் தோன்றும். ஆனால், அதன் நோக்கம் வேறு. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருதல், போதிய ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அம்மாதிரியான பள்ளிகளை ஒழித்து ஒரே பள்ளியாக _ இணைப்புப் பள்ளிகளாக உருவாக்குதல் என்பது, ஏழை எளிய அடித்தள மக்கள் வாழிடப் பகுதிகளில் அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் கோட்பாட்டிற்கே நேர் எதிரானது ஆகும். இணைப்புப் பள்ளிகள் எனும் இத்திட்டம், பள்ளிகள் தனியார்மயமாதலை மறைமுகமாக ஆதரிக்கும் திட்டமாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அபத்தங்களுள் ஒன்று, பெண் ஆசிரியர்களைக் குறித்த மதிப்பீடு ஆகும். பள்ளிக் கல்விச் சீரழிவிற்கு, பெண் ஆசிரியர்கள் அதிக அளவுக்குப் பணி அமர்த்தப்பட்டிருப்பது தான் காரணம் எனப் புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாகக் குசராத் அரசின் கருத்துரு  அமைந்திருக்கிறது. அதாவது, அறிவு ஆற்றல் ஆளுமை என யாவுமே ஆண்களால் தான் கற்றுத் தரப்பட வேண்டும். அறிவிலும் ஆற்றலிலும் ஆணே மேலோங்கி இருப்பவர். பெண் என்பவர் குறைவுடைய ஆண் என்கிற ஆண்நோக்கு - ஆணாதிக்கம் வெளிப்படும் களமாகக் கல்வித்துறையையும் வடிவமைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது என அப்பட்டமாகவே தெரிகிறது. இது, தொடக்கக் கல்வி நிலையில் பெண் ஆசிரியர்களே இருப்பது நல்லது என்கிற கருத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

புதிய கல்விக் கொள்கை வரைவானது பிற்போக்கானது மட்டுமல்ல, உலகமயச் சந்தையில் கல்வியும் ஒரு வணிகப் பொருளாக ஆக்கப்பட்டுள்ள பண்டம் எனும் அபத்த நிலையையும் உருவாக்கியுள்ளது.

உயர் கல்வி என்பது படிக்கிற அந்தத் தனிநபருக்குத்தான் பயனளிக்கிறது. சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதற்குச் செலவிடும் தொகைக்கு அந்தத் தனி நபரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால், உயர் கல்வியை ஒரு பொது மக்களுக்கான பொருளாகக் கொள்ள முடியாது. அதை ஒரு திறன் சாராப் பொருள் என்றே கொள்ள வேண்டும் என இந்திய அரசின் முன்னைக் கல்வி அமைச்சர் யுனெசுகோ மாநாட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.  அதன் நீட்சிதான் காட் ஒப்பந்தமும் கூட.

உயர் கல்வி அனைத்தும் சேவைத் துறையிலிருந்து வணிகத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதையே காட் ஒப்பந்தம் சுட்டுகிறது. உலகமயமாக்கலின் ஓர் அங்கம் தான் காட் ஒப்பந்தம் . காட் ஒப்பந்த விதிகளின்படி தான் புதிய கல்விக் கொள்கை.

சேவைக் கட்டணங்கள் செலுத்தி அயல் நாட்டு விற்பனையாளரிடமிருந்து இணையதளம் மூலமாகக் கல்வி பெறுதல்,

 வெளிநாட்டிற்கு நேரடியாகச் சென்று கட்டணங்கள் செலுத்திக் கல்வி பெறுதல்,

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து சேவைக் கட்டணம் வசூலித்துக் கல்வி வழங்குதல்,

வெளிநாட்டு ஆசிரியர்கள் தனியாட்கள் என்ற முறையில் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள நிறுவனங்களில் சேவை வழங்கி கட்டணங்கள் வசூலித்தல்
என்பவை தான் காட் ஒப்பந்த விதிகளின் -புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கின்றன.

அதாவது, கல்வி என்பது பணம் கொடுத்து வாங்கும் ஒரு பண்டம். இந்த வணிகத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. கல்வியை அளிக்கும் பொறுப்பு அரசிடம் கிடையாது, அது தனியார் பொறுப்பு. பணம் இருப்பவர் மட்டுமே கல்வியைப் பெறலாம். பணமில்லாதவர் படிக்கும் கனவைக் கலைத்து விட்டு, குலத்தொழில் என ஏதாவது ஒன்று இருந்தால்  அதைச் செய்யப் போகலாம் என்கிற நிலைமைகளை வழிமொழிவதாகவே புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இது சாமானியர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

ஆக,
சமக்கிருத - பார்ப்பனிய மேலாதிக்கத்தைப் போதிக்கிற, ஆணாதிக்கத் திமிரைக் காட்டுகிற,
இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கு எதிராக இருக்கிற, ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, கல்வியை விற்பனைப் பண்டமாக்கி வணிகப்படுத்துகிற
கல்விக் கொள்கையாகவே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே,
புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்தாக வேண்டியது நாம் வாழும் காலத்தின் கட்டாயம்.

புதிய கல்விக் கொள்கை குறித்துக் கீழ்க்காணும் நூல்கள் மேலும் விளக்கப்படுத்தியுள்ளன.

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும் - அ.மார்க்சு.

தேசிய கல்விக் கொள்கை: மகாராசாவின் புதிய ஆடை - தேனி சுந்தர்.

புதிய கல்விக் கொள்கை:
பற்றி எரியும் ரோம்.. ஊர் சுற்றும் நீரோ - இரா.நடராசன்.

புதிய கல்விக் கொள்கை: மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?- நா.மணி.

திங்கள், 13 நவம்பர், 2017

இலட்சுமி குறும் படமும் பாலியல் குறித்த மேட்டிமையும்..


இரு வேறு வர்க்கக் குணாம்சத்தில் நெளியும் பாலியல் துய்ப்பைப் பேசுகிற சாக்கில், உடல் உழைப்பாளிகளிடம் வெளிப்படுகிற பாலியல் எந்திரமயமானதாகவும், அறிவாளித்தனமான ஆண்களிடம் வெளிப்படுகிற பாலியல் அழகியதாகவும் இருக்கிறது என்பதைத் தான் அந்தப் படம் சொல்ல வருகிறது.
கருப்பு வெள்ளைக் காட்சிகளும், பிறகு வண்ணப் படக்காட்சிகளுமாய் படம் விரிய விரிய ஒன்று இழிவு, மற்றொன்று அழகு என்பதான மேட்டிமைக் கருத்தாக்கத்தையே இந்தப் படமும் வலியுறுத்துகிறது.
வெறும் பாலியல் துய்ப்புக்கு ஏங்கித் திரியும் பெண்ணாகக் காட்டப்பட்டிருப்பதும், அதை நியாயப்படுத்துவதற்கான காட்சி நகர்வுகளாகவும் தான் அந்தப் படம் இருக்கிறது.
அறிவாளித்தனம் இருந்தால் ஒரு பெண்ணை பாலியல் வட்டத்துள் எளிதாய் வீழ்த்தி விட முடியும் என்பதைத் தானே இப்படமும் தெளித்துப் போட்டிருக்கிறது.
இதைப் பேசுவதால் பெண்ணின் பாலியல் தெரிவுக்கும் விடுதலைக்கும் எதிரானவராக அல்லது மரபுவாதியாகச் சுருக்கிப் பார்க்கவும் கூடும். ஆயினும், பெண் நோக்கு எனும் பேரில் உருவான ஆண்நோக்குப் படம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. அதுதான் உண்மையும் கூட.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

மகாராசன் புத்தகங்கள் பற்றிய வெளியீட்டுக் குறிப்புகள்(13 புத்தகங்கள்)


ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின்
நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் (2017).
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 60
வெளியீடு : அடவி பதிப்பகம், சென்னை.
பேச : 9994880005


மொழியில் நிமிரும் வரலாறு(2016)
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 150
வெளியீடு : கருத்து = பட்டறை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


முல்லைப்பாட்டு உரைப்பனுவல்(2012)
உரையாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 30
வெளியீடு : மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
பேச : O452 2345971


தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க
எதிர் மரபும்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 100
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


பெண் மொழி இயங்கியல்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 250
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் (2010)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 90
வெளியீடு : பாலை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சிசினைகளும்( 2009)
ஆசிரியர் : ஸ்டாலின்
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 130
வெளியீடு : தோழமைப் பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


மொழி இயங்கியல்(2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 60
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


தமிழில் பெண் மொழி மரபு (2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துதுவமும் காதலற்ற முத்ததங்களும் (2007)
பெண்விடுதலை குறித்த லெனின் கிளாரா ஜெட்கின் கட்டுரைகள் உரையாடல்கள்.
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 80
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 75
வெளியீடு : கருப்புப் பிரதிகள் பதிப்பகம், சென்னை
பேச : 9444272500


அரவாணிகள்: 
உடலியல் உளவியல் வாழ்வியல் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 210
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


கீழிருந்து எழுகின்ற வரலாறு (2006)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : பரிசல் பதிப்பகம், சென்னை.
பேச : 9382853646