திங்கள், 26 ஜூன், 2023

சாதிய மேட்டிமையும் தாட்டியமும்: கலைப் படைப்புகளைத் தன்வயப்படுத்தியதின் சமூக விளைவுகள் - மகாராசன்


தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்டிலும், அத்திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், பாதிப்புகள், மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் குறித்துப் பல்வேறு கோணங்களில் கவனிக்கத்தக்கவை; விவாதிக்கத்தக்கவை. 

சாதிப் பின்புலங்களை முன்வைத்து வெளிவந்த கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த உள்ளீடான அரசியல் ஒருபுறமிருந்தாலும், அந்த மாதிரியான படங்களை முன்வைத்து அல்லது அந்த மாதிரியான படங்களால் மேலெழுப்பப்பட்ட புறவயமான அரசியல் வேறுவேறாக வார்ப்பாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஒரு சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு, அந்தச் சமூகத்திற்குள்ளான நிகழ்வுகளையோ நடத்தைகளையோ விமர்சனப்பூர்வமாக ஒரு திரைப்படமோ அல்லது வேறு ஒரு கலைப்படைப்போ பேசியிருந்தாலும்கூட, அது பேசியிருக்கும் அல்லது முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் என்பதையெல்லாம் தாண்டி, குறிப்பிட்ட அந்தத் திரைப்படம் அல்லது அந்தக் கலைப் படைப்பு, தங்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவாய் - அடையாளப்படுத்துவதாய் - பெருமைப்படுத்துவதாய்த்தான் அந்தந்த சமூகங்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, தங்கள் சமூகத்தின் மேட்டிமையையும் பகட்டையும் தாட்டியத்தையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்காகப் பெருந்தீணியாக அது போன்ற படங்கள் அல்லது படைப்புகள் தெரிந்தோ தெரியாமலோ செயலாற்றியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, சாதியப் பகட்டும் மேட்டிமையும் தாட்டியமும் கொம்புசீவி விடப்பட்டதில் அத்தகையத் திரைப்படங்களைத் தமதாக்கிக் கொண்டனர் உயர்த்திக்கொண்ட பல தரப்பினரும். 

உண்மையிலேயே, அந்தத் திரைப்படங்கள் தங்கள் மீதான விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக அந்தத் தரப்பினர் உணர்ந்திருந்தாலோ அல்லது உள்வாங்கியிருந்தாலோ, அந்தத் திரைப்படங்களைப் பகட்டாகவும் தாட்டியமாகவும் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதையெல்லாம் - அந்த விமர்சனங்களையெல்லாம் விளங்கிக்கொள்ளாமல்தான் இன்னும்கூட அதைப் போன்ற படங்களைத் தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அடையாளப் படமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மேட்டிமைப் பகட்டும் தாட்டியத் திமிரோடும் அந்தந்தத் திரைப்படங்களைத் தூக்கிக்கொண்டாடியபோது ஏற்பட்ட சமூகப் பதற்றங்கள், பாதிப்புகள் யாவும் மற்ற சமூகங்களுக்குத்தான் ஏற்பட்டன. அந்தத் திரைப்படங்களைப் பெருமைப்படத் தூக்கிக்கொண்டாடிய சமூகங்களைக் காட்டிலும், மற்ற சமூகங்கள் அடைந்த சமூகத் துயரங்களும் அனுபவங்களும் வேறுவேறானவை; முற்றிலும் தலைகீழானவை. 

இந்நிலையில், அகவயமாகவும் புறவயமாகவும், நல்லபடியாகவும் கெட்டபடியாகவும் ஒரு படம் தமக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து, படைப்பாளி எனும் நிலையிலிருந்தும், பாதிக்கப்பட்டதான தரப்பிலிருந்துமாய் ஒருவர் பேசுகிறார் எனில், அதில் உள்ள நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியதாகப் புரிந்து கொண்டு, அதை எதிர்ப்பதும் மறுப்பதுமான விவாதங்கள்தான் மிக அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பிலும் மறுப்பிலும் சாதிய மேட்டிமைக் காழ்ப்பும் வன்மங்களும்தான் அதே தாட்டியத்தோடு தாண்டவமாடுகின்றன.

நாம் விவாதிக்க வேண்டியதும், மறு பரிசீலனை செய்ய வேண்டியதும், சுயவிமர்சனமாய்ப் பார்க்க வேண்டியதும் யாதெனில், ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்துதான். ஆனால், அந்தக் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தும் சமூக விளைவுகளை நேர்மையோடும் சுய விமர்சனத்தோடும் அணுகுவதே சமூக சனநாயக மாண்பு. மாறாக, சாதிய மேட்டிமையின் மீதும் பகட்டின் மீதும் தாட்டியத்தின் மீதும் அடுத்தவர் அல்லது மற்றவர் கைவைத்துவிட்டதாய்ப் பதற்றமடைவதும், தங்கள் சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகப் புரிந்துகொண்டும், அதே மேட்டிமைத்தனத்தோடும் தாட்டியத்தோடும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சுயசாதி விமர்சனத்தோடு இது குறித்துப் பேசுபவர்கள் அரிதாகிப் போனார்கள். 

மற்றவர்களின் மேட்டிமையாலும் தாட்டியத்தாலும் பாதிக்கப்பட்டவர்களும், அந்த மேட்டிமையையும் தாட்டியத்தையும் எதிர்கொண்டு எதிர்ப்பவர்களும் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகளின் அனுபவங்களைத்தான் பேசமுடியும்; பேசுவார்கள். சமத்துவ வேண்டலுக்கான பேச்சுகள் யாவும் அனுபவங்களின் துயரையும் கசப்பான காயங்களையும் காலம் பல கடந்தாலும் சுமந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பேச்சுகளில் நிறைகுறை பல இருக்கலாம். சரி தவறுகள் இருக்கலாம். ஆயினும், பகையுணர்ச்சியோ அல்லது பழிவாங்கலோ ஏதுமற்றவை. அதேவேளை, அத்தகையப் பேச்சுகளை மறுப்பதும் எதிர்ப்பதும் நிராகரிப்பதும் மேட்டிமையும் தாட்டியமும் கொண்டதாகும். பெரும்பாலான கலைப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் தன்வயப்படுத்திக்கொண்டன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவக் குரலைக் காதுகொடுத்துக் கேளாமல், வெறுமனே கலைப் படைப்புகளின் புனிதப் பூச்சுகளைச் சமூகப் பூச்சாக முன்வைக்கும் பலரின் பேச்சுகளில் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் எச்சமாய் இன்னும் ஒட்டிக்கிடப்பதுதான் சமூகத்தின் பேரவலம். 

இன்னும் சாதியம் குறித்துப் புரிந்துகொள்ளாமல் தான் சமூகம் குறித்த விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. 

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்,
26.06.2023.




செவ்வாய், 20 ஜூன், 2023

பாவாணரியல்: நூல்கள் வெளியீடும் பாராட்டும்.



மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீள் பதிப்பாக்கம் செய்து, பாவாணரியல் எனும் கோட்பாடாய் முன்வைக்கும் பெருமுயற்சியை உலகத் தமிழ்க் கழகம் முன்னெடுத்தது. பாவாணரியல் நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டத்தையும் அறிவித்திருந்தது. 

தமிழ்ச் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு, பாவாணரியமே கோட்பாட்டு அறிவாயுதம் என்பதை உணர்ந்திருந்த யாம், அத்திட்டத்திற்குப் பலரின் பங்களிப்பைப் பெற்று, உரூ மூன்று இலட்சம் தொகையை நூல் பதிப்பாக்கத்திற்கு வழங்கினேன். கிட்டத்தட்ட 50 பேர் வரையிலும் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைத்திருந்தேன். பதிப்பாக்கத்தின் போது சில பல காரணங்களால் நூல்கள் வெளிவருவது காலத்தாழ்வானது. எனினும், காலத்தாழ்வைப் பொறுத்துக்கொண்டனர் அன்பர்கள். கடந்த ஒரு மாதமாக, முன்வெளியீட்டுத் திட்டத்தில் தொகை செலுத்தியவர்கள் அனைவருக்கும் நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

உலகத் தமிழ்க் கழகம் பதிப்பித்த பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா, மதுரையில் பாவாணர் மணிமண்டபத்தில் 18.06.2023இல் நடைபெற்றது. நிகழ்வில், நூல் பதிப்பாக்கத்தில் பெருந்துணை புரிந்தமைக்காக எம்மைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கியது உலகத் தமிழ்க் கழகம். சூலூர் பாவேந்தர் பேரவைத் தலைவர், புலவர் செந்தலை கவுதமன் அய்யா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.  பாவாணரியல் நூல்களை அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து வெளியிடும் வாய்ப்பையும் உலகத் தமிழ்க் கழகம் தந்தது. 

இவ்வாய்ப்பை வழங்கிய உலகத் தமிழ்க் கழகத் தலைவர் அய்யா நிலவழகன், பொதுச்செயலர் அய்யா இளந்திரையன் மற்றும் உதக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். பாவாணரியல் நூலாக்கப் பணியில் துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. பாவாணரியல் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பேரன்பு நன்றி.

பாவாணரியல் கற்போம்.

ஏர் மகாராசன்

*

இணைப்பு: நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ்