வெள்ளி, 10 ஜனவரி, 2020

மழைக்கோலம்: மகாராசன்

ஏறுவெயிலின்
வெக்கைப் பொழுது
அவரை துவரையின்
நிழல் கோதியபடி
பூஞ்சிரிப்புச் சிந்தல்களை
எண்ணிக் கொண்டிருக்கிறது.

ஓலைகளில் முளைகட்டிய
வெண்பாக்கள் பரவிய
கழனி வரப்பில் வேர்பிடித்த
அருகம்புல் நுனிகளில்
நுரைப் பூக்களை
யாமத்தில் சொருகிப்போகிறது
வெம்பா.

கொடாப்புத் தொழுவில்
தாய்மடு ஏங்கும்
இளங்குட்டிகளை நினைத்தபடியே
மேய்ச்சல் முடித்துப்
பொழுதுசாயத் திரும்பும் வெள்ளாடுகளின்
புழுக்கை விதைகளில்
தரைக் காட்டின் தான்தோன்றிப் புற்களின் வாசம்
கம்மென்று மணத்துக் கிடக்கிறது.

தொளி வயலின்
சனிமூலையில் குலவையிட்டு
பிள்ளைமுடி வணங்கிய
குடும்பச்சிகளின் நடுகையில்
தூர்கட்டிப் பொதியாடும்
கரும்பச்சைத் தாள்களுக்குள்
வயிற்றுப் பிள்ளையாய் உள்ளிருக்கும் வெங்கதிர்களைப்
பரியச் செய்து ஈன்று கொண்டிருக்கும் நெற்பயிர் வாசம்
சம்சாரிகளின் பாடுகளாய்
மணத்துக் கிடக்கிறது.

தெப்பென்று நிரம்பியிருக்கும்
கண்மாய் மடைத்தூம்புக் கண்களின் நீர்ப்பாய்ச்சலில் தாவி
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய்
வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்.

பூப்பெய்திக் கிடக்கின்றன துரவுகளெல்லாம்.

நெடுநாள் ஊடல் முடித்துக் கொஞ்சும் கிளிகள் போல
நிலத்தாள் உடம்பில்
பசப்பேறிய கோலங்களை வரைந்திருக்கிறது கார்காலத்தில் பெய்த பெருமழை.

வெள்ளந்தி மக்களின்
வயிற்றுப்பாட்டுக்கும்
வாழும் பாட்டுக்கும்
கசிந்துருகும் இந்த மழை
இந்திரர் அமிழ்தமே தான்;
தெய்வமும் இதுவேதான்.

ஏர் மகாராசன்
10.01.2020

ஒளிப்படம்
ஓவியர் நித்யன்