வெள்ளி, 3 செப்டம்பர், 2021

திரை மீளர் என்பதன் திரிந்த நிலையே திராவிடர் என்பதாகும் : மகாராசன்


திரை மீளர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்பதாகும்; திரிந்துபோன பால் நிலையே திராவிடர் என்பதுமாகும்.

*

தமிழர் என்பதே திராவிடர் என்று திரிந்ததாக மொழியியல் ஆய்வின் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். தமிழர் எனும் சொற்பதம் ஆதிகாலத்திலிருந்து இப்போதுவரையிலும் புழக்கத்திலும் வழக்கத்திலும் இருந்து கொண்டிருக்கையில், தமிழர் என்பதன் திரிபு வடிவமான திராவிடர் எனும் பதத்தை வலிந்து திணிப்பதும் அல்லது ஏற்கச் செய்வதும், தமிழர் பண்பாட்டு அடையாள அழித்தொழிப்பின் நீட்சியாகும்.

திராவிடர் எனும் சொற்பதமானது, தமிழர் என்பதைக் குறிக்கும் சமக்கிருத வடிவமாகும் என்கிறார் அறிவர் அம்பேத்கர். 

ஆரிய எதிர்ப்பு, சமக்கிருத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று பேசுவோரெல்லாம், தமிழரைக் குறிப்பதற்குத் திராவிடர் எனும் சமக்கிருதச் சொல்லையேதான் பயன்படுத்துவோம் என்கிறார்கள். அவர்களது ஆரிய எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்பதெல்லாம் உண்மைதான் எனில், ஆரிய பிராமணியப் பண்பாட்டு அடையாளமான சமக்கிருதச் சொல்வடிவத்தைப் புறக்கணிப்பதே சரியாகும். மாறாக, திராவிடர் எனும் சொல்லால்தான் தமிழரைக் குறிப்போம் எனில், ஆரியத்தை-பிராமணியத்தை-சமக்கிருதத்தை அவர்கள் உள்ளூர மோகிக்கிறார்கள் என்றே பொருள்.

தமிழர் என்பதே திராவிடர் என்றாயிற்று எனும் கருதுகோள்கள் ஒருபுறம் இருக்கையில், திராவிடர் எனும் சொற்பதமானது, திரை மீளர் எனும் சொற்பதத்தின் திரிபு வடிவம் என்பார் கடலியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலசுப்பிரமணியம் அவர்கள்.

பழங்காலத் தமிழர்கள் கடலியல் சார்ந்த அறிவையும், தொழிலையும், வாழ்வையும், வணிகத்தையும், பண்பாட்டையும் கொண்டிருந்தவர்கள்; இன்றுவரையிலும் கொண்டிருப்பவர்கள். திரை என்றால் கடல் என்பது பொருளாகும். மீளல் என்றால் மீண்டு வருதல் என்பது பொருளாகும். கடலுக்குள் சென்று மீண்டு வருவோரை திரை மீளர் என்று தமிழில் அழைக்கும் மரபு அக்காலத்தில் பெருவழக்காய் இருந்திருக்கிறது. அவ்வகையில், திரைகடலோடி திரவியம் தேடி மீள்வோரை திரை மீளர் என்று அழைத்திருக்கின்றனர். 

கடலியல் சார்ந்த வாழ்வையும் தொழிலையும் வணிகத்தையும் உலகம் முழுவதற்குமான முன்னோடிகளாக அடையாளப்படுத்திய தமிழர்கள் திரை மீளர் என்று குறிக்கப்பட்டிருக்கின்றனர். 

திரை மீளர் என்பதே திர மிளர் என்றாகி, திரவிடர்; திராவிடர் என்று திரிபடைந்திருக்க வேண்டும். திரை மீளர் என்னும் சொற்பதத்தையே திரமிளா என்று வேற்றுநாட்டவர்கள் குறித்திருப்பதாகவும் சான்று காட்டுவது உண்டு.

பால் என்பது தயிராகாமல் கெட்டுப்போனால், பால் திரிந்து போனது என்பர். அதைப் பாலாகவும் பயன்படுத்த இயலாது; தயிராகவும் பயன்படுத்த இயலாது. தமிழர் எனும் ஒரு மூலச்சொல் இன்றளவிலும் திரிபடையாமல் இருந்து கொண்டிருக்கையில், திரிபடைந்த திராவிடர் எனும் திரிசொல்லைப் பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை.

தமிழரையோ அல்லது திரை மீளர் என்பதையோ குறிக்கும் திரிபடைந்த சொல்லான திராவிடர் எனும் சொல்லைப் பாலாகவும் கருதமுடியாது; தயிராகவும் கருதமுடியாது. அது திரிந்துபோன பால் நிலையாகும்.

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

03.09.2021