வியாழன், 28 டிசம்பர், 2023

மடைச்சி வாழ்ந்த கீழடி நிலத்தில் - மகாராசன்




கீழடியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வின்போது அங்கு போய் வந்திருந்தேன். அங்கு கிடைத்திருந்த பல்வேறு தொல்லியல் பொருட்கள் எம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. அங்கு கிடைத்த பானையோடுகளில் பல்வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிக முக்கியமானது 'மடைச்சி' எனும் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுதான். 

இந்த மடைச்சி எனும் பெயர் குறித்து அப்போது நான் எழுதிய கட்டுரைதான் 'ஆற்றங்கரை நாகரிகமும் மடைச்சி வாழ்ந்த கீழடி நிலமும்' எனும் கட்டுரை. 

மடைச்சி குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் வெளிவந்த முதல் கட்டுரை அது. 

https://maharasan.blogspot.com/2017/12/blog-post_23.html

அதே அகழாய்வில் கிடைத்த பானையோட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதும் கிடைத்திருந்தது. மீன் சின்னம் பொறித்த அந்தப் பானையோட்டின் முகப்பைத்தான் நான் எழுதிய 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' எனும் நூலின் அட்டைப் படமாகவும் வந்தது.

கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று குடும்பத்தாருடனும் நண்பர் அய்யனாருடனும் திரும்பவும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி.

திங்கள், 25 டிசம்பர், 2023

தீயில் மடிந்த செந்நெல் மனிதர்கள் - மகாராசன்


வயல் நீர் வற்றி 
பசுந்தாளெல்லாம் 
பழுத்து நின்ற 
நெற்கதிர் அறுத்து களம் சேர்த்த 
கருத்த மனிதர்களின் கவலைகள், 
ஊமணி எழுப்பிய ஓசை போல் ஊருக்குக் கேட்காமலே 
ஒட்டிக் கிடந்தன வாழ்வில்.

வியர்வையில் கலந்த 
கரிப்புச் சுவையாய் 
நிலமும் உழைப்புமாய்க் கிடந்தாலும், 
விதை நெல் பாவும் காலம் முளைக்குமெனக் 
காத்துக் கிடந்தன சீவன்கள்.

வம்பாடு சுமந்த இடுப்பிலும் 
காய்த்துப்போன கைகளின் 
கக்கத்திலும் கசங்கிக் கிடந்த 
துண்டுத் துணியைத் 
தூக்கி எறிந்து, 
செந்நிறத்திலொரு துண்டை எடுத்துத் தோளில் போட்டன 
உழைத்துக் காய்த்த கைகள். 
நிலத்தில் கிடந்த
அதிகாரத்தின் வேர் முடிச்சுகள் 
அவிழத் தொடங்கின.

சாதிய வெறியும் 
நிலவுடைமைச் சதியும் 
சகதி மனிதர்களைச் 
சாவடிக்கக் காத்துக் கிடந்தன.
அய்யா சாமீ ஆண்டே எனக் 
கால் பிடித்துக் கதறி அழுது, 
வயிற்றுப் பாட்டுக்காய்க் 
கூடக் கொஞ்சம் கொடுங்களேன் 
எனக் கேட்டிருந்தால், 
போதுமடா போ போவென்றே 
பதக்கு நெல்லைக் கொடுத்திருக்கலாம் 
பழைய தோரணையோடு.

நெல்லை விதைத்தவர்கள் 
சொல்லை விதைத்தார்கள் 
கூடவே தன்மானம் சேர்த்து.

அரைப்படி நெல்மணி 
கூடக் கேட்டாரென, 
நெருப்பின் ஒரு துளி விதையைக் 
குடிசைக்குள் எரிந்து விட்டுப் போனார்கள்.

அகலின் நெய் குடித்துத் தூண்டிய சுடர் 
இருளைக் கிழித்து 
வெளிச்சம் தெளித்துக் கொண்டிருந்த 
இரவுப் பொழுதில், 
பெருந்தீ எழும்பியது குடிசையில்.

பொங்கிடும் 
எரிமலைக் குழம்பின் எச்சத்தை 
எச்சிலைத் துப்பியதுபோல 
உமிழ்ந்து போனது 
ஆண்டை அதிகாரம்.

வடுக்களோடும் வலிகளோடும் வயிற்றுப்பாட்டோடும் 
நெருப்பையும் சுமந்து 
சாம்பலாகிப் போனார்கள் 
வெண்மணி வயலின் 
செந்நெல் மனிதர்கள்.

வெண்மணி ஈகியருக்கு
வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

வியாழன், 21 டிசம்பர், 2023

மழை வெள்ளமும் வதை நிலமும் - மகாராசன்



விதை நிலமெல்லாம் 
வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம் 
வயிறு காய்ந்து கிடக்கிறது.

வியர்வை மணக்கும் நெல்லை 
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் பருக்கைகளுக்காகக் கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளாய் 
மிச்ச வாழ்வும் முதுகொடிந்து போனது. குலையோடு சரிந்த வாழைகளாய் 
குலம் நொடிந்து போயிருக்கிறது.

கூடிழந்த பறவைகளாய் 
வீடிழந்து நிற்கிறது.
கருப்பம் கலைந்த நெல் பயிராய் உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும் 
கண்ணீர் தேங்கி நிற்கும் 
வதை நிலமாகிப் போச்சே மக்கா.

நிலத்தை விட்டு விடுவோமா? 
நிலம்தான் எம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி அறுத்தெறிஞ்ச நமக்கு, 
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை அறுத்தெறிய மனசில்லயே மக்கா; அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

புதன், 20 டிசம்பர், 2023

வலியெழுத்து - மகாராசன்


அப்பன் ஆத்தாள் செத்துப்போனால் இடுகாட்டில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது 
கூடச்சேர்ந்து நாமும் செத்திருக்கலாமென 
வீடுவரை வந்துகொண்டே இருக்கும் 
அந்த நினைப்பு.

காடும் வயலும் தோப்பும் துரவும் 
ஆடும் மாடும் வீடும் என 
அத்தனையவும் வாரிச் சுருட்டிக்கொண்டு 
உயிரை மட்டும் விட்டு வைத்து நாசமாக்கிவிட்டுப் போயின 
புயலும் மழையும்.

உயிரைக் கொடுத்த 
அத்தனையும் போன பின்னால் 
இந்த உயிரும் போயிருக்கலாம். இப்போதும் அந்த நினைப்பு அழுகையோடு வந்து வந்து போகிறது.

நிலம் நிலமென்று நம்பியிருந்த 
சாதி சனமெல்லாம் 
நிலத்தில் அழுது மடிகிறது.

இந்தச் சனம் வாங்கிவந்த தலையெழுத்து இதுதான்.

ஏர் மகாராசன்

சனி, 16 டிசம்பர், 2023

கல்வித்துறைக்குள் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்: மகாராசன்


அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறது. மாணவத் தலைமுறையைச் சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்கும் மிக முக்கியமான தளமாக அமைந்திருப்பது பள்ளிகள்தான். அந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களுக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கின்றன. 

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள், தேர்வுகள், நிர்வாகக் கட்டமைப்புகள் எனப் பலவகைத் தளங்களில் தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்தாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் இருந்து இருவேறு தளங்களிலும் வழிநடத்தும் மிக முக்கியமான பணிச் சூழல்தான் தலைமை ஆசிரியர்களுடையதாகும்.

இன்றைய கல்வி மற்றும் சமூகச் சூழலில், தலைமை ஆசிரியர்களின் நிர்வாகத் திறன்களையும், கல்விசார் அடைவுத்திறன்களையும் வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டவுமான தலைமைத்துவப் பயிற்சி முகாமாக வடிவமைத்து நடத்திக் கொண்டிருக்கிறது கல்வித்துறை. இதைத் திறம்பட வடிவமைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரும் எனது நண்பரும் வகுப்புத்தோழருமான திரு ஜெயக்குமார் அவர்கள். 

மதுரை பில்லர் மையத்தில் மூன்றுநாள் நடைபெறும் உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் பல்வேறு பொருண்மைகளில் ஆளுமைப் பண்பு வளர்ச்சி குறித்த வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறுகின்றன. அம்முகாமில் குறிப்பிடத்தக்க ஒரு பண்பை வளர்த்தெடுக்கும் நோக்கில், ஒவ்வொரு முகாமிலும் ஓர் அமர்வாக அமைந்திருப்பது புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டல் தொடர்பானதாகும். 

தலைமை ஆசிரியர்களுக்கு வெறுமனே நிர்வாக ஆளுமைத் திறன்களை மட்டும் கற்பித்திடாமல், தலைமை ஆசிரியர்களையும் வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, தமிழில் வெளிவந்திருக்கும் கல்விசார் புத்தகங்கள், சமூகம், சூழல், மொழி, இலக்கியம் சார்ந்த மிக முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும், புத்தகங்கள் குறித்தும் புத்தக வாசிப்பு குறித்தும் தூண்டல் உணர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முகாம் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலைமை ஆசிரியர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக ஆக்கும் முயற்சியில் பல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களோடு உரையாட வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 

இம்மாதிரியான திட்டமிடலைப் பெருங்கனவோடும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஈடுபாட்டோடும் அக்கறையோடு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் திரு ஜெயக்குமார். 

தொடர்ந்து நடைபெற்று வரும் அம்முகாம்களில் நூல்கள் வாசிப்பு குறித்த உரையாடலை வழங்கிக்கொண்டிருக்கும் தோழர் கண்மணிராசா அவர்கள் இன்று உரையாற்றுவதாய் இருந்தமையாலும், தலைமை ஆசிரியர் நட்புகளைச் சந்திக்க வேண்டியமையாலும், இணை இயக்குநர் நண்பரைச் சந்திக்க இருந்தமையாலும் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு நானும் துணைவியாரும் சென்றிருந்தோம்.

தலைமை ஆசிரியர்கள் அனைவரிடமும் எமது கல்வி மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் குறித்து அறிமுகப்படுத்தியதோடு, அவர்கள் மத்தியில் உரையாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இணை இயக்குநர் அவர்களிடம் இன்றைய கல்விச்சூழல் குறித்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் மிக விரிவாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. 

அண்மையில், நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலையும் இணை இயக்குநரிடம் வழங்கி, இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் சமூகச் சூழல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தமக்குக் கிடைத்திருக்கும் பணி வாய்ப்பை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்படச் செயலாற்றிக்கொண்டிருக்கும் இணை இயக்குநரின் செயல்பாடுகள் தொலைநோக்கும் கனவும் நிரம்பியிருப்பவை. அந்த இலக்கும் கனவும் நிறைவேறும்; நிறைவேற வேண்டும் என்பதைத்தான் அவரது செயல்பாடுகள் கோடிட்டுக் காண்பித்திருக்கின்றன. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

முனைவர் ஏர் மகாராசன்

16.12.2023.


வியாழன், 14 டிசம்பர், 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: அறிவுக் களத்தின் ஆய்தம். - திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்.

கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின் அருகிருந்து மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பானைப்பொறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு 'இதில் திசன் என்று தமிழ்ப்பிராமியில் எழுதியிருக்கிறது' எனச் சொன்னார் ஒருவர். 

"ஐயா, ஒன்று தமிழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அல்லது பிராமியில் இருக்கிறது என்று சொல்லுங்கள். அதென்ன இப்பொழுதும் கூட தமிழ்ப்பிராமி?" என்று கேட்டபோது சினங்கொண்டார் அவர். எமக்குள் தருக்கம் தொடங்கியது. "எங்கள் குழுத்தலைவரிடம் வந்து கேளுங்கள்" என நெகிழிப்பாய் வேய்ந்த குடிலுக்கு அழைத்துச் சென்றார். தலைவர் (திரு அமர்நாத்) அங்கில்லை. கோவையானத் தரவுகள் இல்லாமல் மாணவர்களிடம் தெளிவுபடுத்த இயலாத நிலையில் நண்பரும் நானும் திரும்பிவிட்டோம். இந்த நூல் அன்றே கிடைத்திருந்தால் வேலை எளிதாக முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அத்தனை பெறுதியானது இந்நூல்.

எனக்கு நூல் கிடைத்த கதையும் நூலைப் போன்றே பெறுமதியும் சுவையும் கொண்டதுதான். மகாராசன் அவர்களின் 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' மற்றும் 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' எனும் இரு நூற்களும் வேண்டுமென்றும், விலை விவரம் அனுப்புங்கள் எனவும் ஆதி பதிப்பகத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

"ஐயா பணம் எதுவும் அனுப்ப வேண்டாம் முகவரி மட்டும் அனுப்புங்கள். நூற்களை அனுப்பிவைக்கிறேன் - செந்தில் வரதவேல்." என்றொரு மாற்றச் செய்தி வந்தது. பிற்பாடு நூற்களும் வந்தன. அருமையான நூற்களை அனுப்பிவைத்த செந்திலுக்கு மிக்க நன்றி. (காலந்தாழ்ந்து எழுதுகிறேன் பொறுத்தருள்க).

தமிழும் தமிழரும் பலகாலும் பலவாறான வினாக்களை, தெளிவுபடுத்த இயலாத கருத்தாக்கங்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தரவுகளைத் தேட பல நூற்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்கவேண்டியது கட்டாயமாகிறது. பேரறிஞர் பலரால் ஆய்வு செய்து எழுதப்பெற்றக் கட்டுரைகள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் எழுதப் பெற்ற ஆய்வு முடிவுகள், அகழாய்வுச் செய்திகள், செவ்விலக்கியச் செய்திகள் என பலவற்றையும் படித்தால் மட்டுமே பல வினாக்களுக்கும், வலிந்து செய்யப்பெறும் திரிபுகளுக்கும் விளக்கமளித்து ஏற்கவோ மறுக்கவோ இயலும்.

இப்படி பல்துறைத் தரவுகள் இன்றைய காலகட்டத்தில் பெருந்தேவையாக இருக்கின்றன. அவற்றை நோக்கி நகர்வதற்கான நுழைவாயில்கள், அறிமுகங்கள் கட்டாயமாகின்றன. எளிமையாகவும் அதே வேளையில் செறிவாகவும் தொகுக்கப் பெறும் ஆய்வு நூற்கள் இந்தத் தேவையை முழுமையடையச் செய்யும்.

அப்படியொரு ஆய்வு நூல்தான் முனைவர் திரு மகாராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு". பரந்துபட்ட பெருவேலையின் சிறுவிளைச்சலாக அருமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது நூல்.

"தமிழி"க்குச் சாதி சமய அடையாளங்கள் இல்லையென்பதை அடிக்கூறாகக் கொண்டு, பெருநகரொன்றின் கையடக்க வரைபடம்போல, பெருங்கோட்டையொன்றின் நுழைவாயில் அறிவிப்புப் பலகைபோல விரிகின்றன பக்கங்கள்.

"சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது" எனத் தொடங்கி, மொழியின் பிறப்பியல் குறித்து விவரிக்கையில் ஒலி, சைகை, ஓசை, பேச்சு என எல்லாவற்றையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகின்றபோது தமிழ் போன்ற இயன்மொழியின்; உழைப்புக்காலத்திற்கு முந்தைய காரணிகள், மொழிக்கூறுகள் மொழியியல் அறிஞர்களால் முகாமையானதாகப் பார்க்கப்படவேண்டுமென்ற உரையாடலொன்று உள்ளுறையாகத் தொடங்குகின்றது, சிறப்பு.

நூலின் அளவும் படிப்போரின் எண்ணவோட்டங்கள் குறித்தானச் சிந்தனையும் மாந்த வரலாற்றின் பல பக்கங்களை விரைந்து கடக்கவேண்டிய கட்டாயத்தை ஆசிரியருக்கு ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணம் எமக்குள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. காட்டு வாழ்வியலின் பெரும்பகுதியிலிருந்து சட்டென்று கூட்டுழைப்பின் காலத்திற்குள் அடியெடுத்து நடக்கிறது நூல்.  

தமிழி, பிராமி குறித்தான சிறப்பான விவரிப்பு, சீராய்வு நூலை மிக்கச் செழுமையுடைதாகச் செய்கின்றது. அசோகப் பிராமியின் காலம் குறித்தச் செய்திகள் மற்றும் ஒப்பாய்வு தமிழியின் காலத்தை முன்னிறுத்துவதோடு தமிழுக்கு உற்றார் மற்றும் உறார் யாரென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. (இத்தனைக்குப் பின்னும் 'தமிழ்ப்பிராமி' என்பாரும் உளர் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு).

"தமிழி எழுத்து வடிவம் அசோகரின் காலத்திற்கு முன்பான காலகட்டத்தைச் சார்ந்தது. அசோகர் காலத்திற்கு முன்பு பிராமி என்பதான எழுத்து வடிவமே கிடையாது. அசோகர் காலத்தியப் பிராமி எழுத்து வடிவம் வேறு; தமிழி எழுத்து வடிவம் வேறு. தமிழி எழுத்து வடிவம் தனித்து வளர்ச்சி அடைந்தும் பரவலாக்கம் பெற்றும் வந்துள்ளது. சிந்துவெளி எழுத்துக் குறிகளோடு தொடர்புடைய எழுத்துக் குறியீடுகள் தமிழி எழுத்து வடிவத்தோடும் பொருந்திப் போகின்றன எனலாம்.தமிழி எழுத்து வடிவமானது அரசதிகார மரபின் உருவாக்கம் அல்ல; அக்காலத்தியத் தமிழ் மக்களின் பாடுகளையும் அறிவையும் புலப்படுத்துவதற்கான பண்பாட்டு மரபின் உருவாக்கம் ஆகும்.

 தமிழி எழுத்து வடிவங்களின் தொல்லியல் புழங்கு வெளிகளை வைத்து நோக்கும்போது, மக்கள் மொழியாகத் தமிழி எழுத்து வடிவம் உயிர்ப்பாக இருந்திருக்கிறது என உறுதியாகக் கருத முடிகிறது" என்ற வரிகளில் காணக்கிடைக்கும் ஆசிரியரின் ஆய்வுநோக்கும், உறுதியும் நூலெங்கும் விரவிக்கிடக்கிறது.

எழுத்தின் வடிவங்கள், வகைகள் குறித்தான விவரிப்பு மற்றும் வரலாற்றுத் தொகுப்பு செறிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஓவிய எழுத்து, கருத்தெழுத்து, ஒலியெழுத்து போன்ற எழுத்துநிலைகளை விளக்க, ஏராளமான காட்டுகளை தொல் இலக்கியங்களிலிருந்தும் தொல்லியல் ஆய்வு முடிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருப்பது தமிழ் குறித்தான உரையாடல்களில் பங்கேற்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

"பாண்டிய நாட்டை வென்ற பிற்காலச் சோழ மன்னர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச் சோழன், முதலாம் இராசராசன் காலம்வரை ஆண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட பிராமியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும்தான் வழக்காறு பெற்றன. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டியர் பகுதிகளில் வட்டெழுத்துப் பயன்பாடு குறைந்து விட்டது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து முறை மங்கி, கிரந்தத் தமிழ் எழுத்துமுறை மேலோங்கியது. இது, சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டதால், வட்டெழுத்துகள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது" என்பன போன்ற பலவிடங்களில்; வரலாற்றுச் செய்திகள் காய்தல் உவத்தலின்றி படிப்போரை வந்தடைகின்றன.

அதனாலேயே, "தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம், பிராமி) தமிழகம் புக்கனர் எனப் பர்நெல் கூறுவதிலிருந்து, தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பாலும் வடமொழித் தொடர்பாலும் நாளடைவில் கிரந்தத் தமிழாகத் திரிபடைந்தது எனலாம். தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி / சமய / பாலின / வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்." என்ற ஆசிரியரின் முடிபு இயல்பாக இருக்கிறது.

'உ'வில் தொடங்கும் உலகு தழுவிய தமிழின் எழுத்துப் பண்பாட்டியல் குறித்தான நூலின் பகுதி முகாமையானது. தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் பற்றியச் செய்திகள் சீராகத் தொகுக்கப்பெற்றுள்ளன.

தமிழும் அதன் எழுத்துகளும் அதிகார, சமய, சாதி, பாலின மற்றும் வட்டாரச் சார்புகளின்றி மக்கள் மொழியாகவும் பொது எழுத்துக்களோடும் பன்னெடுங்காலமாகவே நிலவிவருகின்றது என்பதை அறுதியாக உறுதி செய்கிறார் முனைவர் மகாராசன் என்பதே நூலின் பெருஞ்சிறப்பு. 

இளையோர் பலர் பங்கெடுக்கத் தொடங்கியிருக்கும் அறிவுக்களத்தில் இஃதோர் ஆய்தமாகும் என்பது உறுதி. இன்னும் விரித்துப் பேசியிருந்தால் பேராய்தமாயிருக்கும் என்பது எமது கருத்து. அப்படிப் பல நூற்களைப் படைக்கவேண்டுமென்று திரு மகாராசனை வாழ்த்துகிறேன்.

*

ஆதி பதிப்பகம் வெளியீடு,

விலை: உரூ 120/-

தொடர்புக்கு:

+91 99948 80005.

அஞ்சலில் நூலைப்பெற:

செந்தில் வரதவேல்

90805 14506

*

என்றென்றும் அன்புடன்,

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

14-12-2023

https://www.chirappallimathevan.com/2023/12/blog-post.html


திங்கள், 11 டிசம்பர், 2023

கனகர் விசயரைத் தோற்கடித்த செங்குட்டுவனின் வெற்றிக்கு யார் காரணம்? - மகாராசன்



கண்ணகிக் கோட்டம்.

கனக விசயர்தம் முடித்தலை நெறித்து...

சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்குக் காரணம் யார்?

*

சிலப்பதிகாரத்தில் வரும் எல்லாத் திருப்பங்களுக்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் மாதவிதான். மாதவி எனும் கதாப்பாத்திரத்தால்தான் கோவலன் கண்ணகி பிரிவு, கோவலன் மாதவி பிரிவு, கோவலன் கண்ணகி மதுரைப் பயணம், கோவலன் கொலை, கண்ணகி நீதி கேட்டல், பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவு, மதுரை தீப்பற்றி எரிதல், கண்ணகி பெருஞ்சாபம், கண்ணகியின் மலைப் பயணம், கண்ணகியைத் தெய்வமாய்ப் பழங்குடி மக்கள் வழிபடல், சேரன் செங்குட்டுவன் படையெடுப்பு, கனகன் விசயன் தோற்கடிப்பு, இமயத்தில் கல்லெடுப்பு, கண்ணகிக் கோட்டம் அமைத்தல் என அத்தனை நிகழ்வும் மாதவியால்தான் நடந்தன என்பார் இளங்கோவடிகள்.

சேரன் செங்குட்டுவன், கனகர் விசயனைத் தோற்கடித்த நிகழ்வுக்கு மாதவிதான் காரணம் என்கிறார் அவர். அதாவது, மாதவி எனும் ஒருவர் இல்லையென்றால், கோவலன் கண்ணகி பிரிவு நிகழ்ந்திருக்காது. அதனால், கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கண்ணகிக்குக் கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் வடவர் மீது படை தொடுத்திருக்கவும் மாட்டார்.

 ஆகையால்தான், சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கனக விசயரைத் தோற்கடித்து, போரில் வெற்றி அடைந்திருப்பதற்குக் காரணம் மாதவிதான். மாதவி எனும் ஒருவர் இருந்திருக்காவிட்டால், கனகர் விசயரைத் தோற்கடிக்கும் சூழல் எழுந்திருக்காது எனும் வகையில் இளங்கோவடிகள் பதிவு செய்திருப்பார். இதுகுறித்துப் பேசும்போது, சேரன் செங்குட்டுவன் வெற்றிக்கு மாதவிக்கு வாழ்த்துச் சொல்வார் இளங்கோவடிகள்.

அதைத்தான்,

"வாழிய எங்கோ மாதவி மடந்தை       காதற் பாணி கனக விசயர்தம்     முடித்தலை நெறித்து " 

என்கிறார் இளங்கோவடிகள்.

தமிழ், தமிழர், தமிழ் நிலம் என்றாலே ஒவ்வாமை கொள்பவர்களுக்கு, சிலம்பின் மொழி தெரிய வாய்ப்பில்லைதான்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒரு புத்தகம் அப்படி என்னதான் செய்துவிடப் போகிறது? - மகாராசன்

ஒரு புத்தகம் என்ன செய்துவிடப் போகிறது? எனப் பலரும் நினைக்கலாம். நான் எழுதிய புத்தகங்களும்கூட என்ன செய்துவிடப் போகின்றன? என நானும் நினைத்திருக்கிறேன்தான். ஆனாலும், நாம் சொல்ல வருவதையெல்லாம் எழுத்துகளின் மூலமாகப் புத்தகமாக வெளிக்கொண்டு வருவதே எம் கடமையென எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 

அண்மையில் நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலினை, சாதியப் பாகுபாட்டு உணர்வைத் தமது மாணவர் ஒருவரிடம் ஓர் ஆசிரியர் திணித்தபோது, 'எல்லோரும் சமம்தானே டீச்சர்' என, சமத்துவக் குரலை வெளிப்படுத்திய மாணவத் தம்பி முனீசுவரன் அவர்களுக்குத்தான் தளுகையாகப் படைத்திருந்தேன். அந்த மாணவத் தம்பியை முன்பின் பார்த்ததில்லை; இதுவரையிலும் எந்த அறிமுகமும் இல்லை. ஆனாலும், அந்த மாணவரின் சமத்துவக் குரல் எமக்குப் பிடித்திருந்தது. அதனால்தான், மாணவர்கள் தொடர்பான இந்நூலை அம்மாணவருக்கே படையலாகப் படைத்திருந்தேன். 

அந்த மாணவரின் சமத்துவக் குரல்போல பொதுசமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதையும் நூலின் இறுதிப் பகுதியில் விவரித்திருந்தேன். எனினும், இந்தத் தகவல் அம்மாணவருக்குத் தெரியாது. தொடர்பு விவரங்கள் ஏதும் இன்மையால், இதைத் தெரியப்படுத்த நானும் மெனக்கெடுக்கவில்லை. 

சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த நூல் சமூகத்தின் கவனிப்பைப் பரவலாகப் பெற்றிருக்கிறது. பல்வேறுபட்ட சமூகத் தரப்பினரும் இந்நூலினைப் பல தளங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நூலைப் படித்த பலரும் எம்மோடு தொடர்பு கொண்டு பேசினார்கள். வேறெந்த நூலுக்கும் இப்படியான சமூக உரையாடல்களும் வரவேற்பும் இருந்ததில்லை. 

அண்மையில், தூத்துக்குடியைச் சார்ந்த மீனவர் திரு டேவிட் அவர்கள் இந்நூலைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரும் எனக்கு முன்பின் அறிமுகமில்லை. ஆயினும், இந்நூலைப் பலருக்கும் வாங்கிக் கொடுத்திருப்பதோடு, இந்நூல் யாருக்குப் படையலாகப் படைத்திருக்கிறதோ அந்த முனீசுவரன் தம்பியிடமே அந்நூலைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் திரு டேவிட். 

தம்பி முனீசுவரன் படித்த பள்ளிக்குச் சென்று, அவரைப்பற்றி விசாரித்து, அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் முனீசுவரனின் தங்கையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தப் புத்தகத்துல உங்க அண்ணனைப் பத்தி எழுதியிருக்கு. அண்ணன்கிட்ட கொடுத்துக் காண்பிக்க வேண்டும். இந்தப் புத்தகத்த எழுதுனவருக்கிட்ட அண்ணனப் பேசச்சொல்லு பாப்பா எனச் சொல்லி அனுப்பி உள்ளார். கடந்த வாரம் தம்பி முனீசுவரன் தொலைபேசியில் வைகுநேரம் பேசினார். மிக நெகிழ்ச்சியான உரையாடல் அது.

இப்ப என்ன செய்யிற தம்பி? என்றேன் நான். குட்டி யானை வண்டி ஒன்னு லோன் போட்டு வாங்கியிருக்கேன் சார். வீட்டு வீட்டுக்கு அதுல தண்ணீர் சப்ள பண்ணிக்கிட்டு இருக்கேன் சார் என்றார். மேக்கொண்டு எதுவும் படிக்கலயா தம்பி என்றேன். எந்தக் காலேஜ்லயும் சேத்துக்க முடியாதுன்னுட்டாங்க. சேத்தாக்க, வேற எதுவும் பிரச்சனை வந்துரும்னு பயந்துக்கிட்டு யாரும் சேக்கல சார். அப்புறமாத்தான், ஐ.டி.ஐல சேந்து படிச்சேன். அம்மா அப்பாவுக்கு முடியல. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. குடும்பத்தப் பாக்க வேண்டி இருந்ததால, தண்ணீர் சப்ளை வேல பாக்க வேண்டியதாப் போச்சு சார் என்றார். 

நான் எழுதிய புத்தகத்த ஒனக்குதான் படையலாகக் குறிப்பிட்டு இருக்கேன் தம்பி. புத்தகத்துல ஒன்னையப் பத்திதான் பெருமையாப் பாராட்டி எழுதி இருக்கேன். பாரு தம்பி என்றேன். ஆமா சார். தங்கச்சி காட்டுனா. நானும் பாத்தேன் சார் என்றார் நெகிழ்ச்சியாக. 

வீட்டுல இருந்தேகூட படிக்கிறதுக்கான வாய்ப்புலாம் இருக்கு தம்பி. தொலைதூரக் கல்வி மூலமாக்கூட கல்லூரிப் படிப்பு படிக்கலாம். படிக்க விருப்பம் இருந்தா சொல்லு தம்பி. அதுக்கான செலவ நானே பாத்துக்கிறேன்; எந்த உதவியா இருந்தாலும் கேளு; அடிக்கடி பேசுவோம் தம்பி என்றேன். சரிங்க சார் என்றார் முனீசுவரன்.

இன்று, தம்பி முனீசுவரனிடமிருந்து அழைப்பு வந்தது. வணக்கம் சார். நல்லா இருக்கீகளா? எங்களப் பாக்க டேவிட் அய்யா வந்திருக்காரு என்றார். டேவிட் அய்யாவிடம் செல்பேசியைக் கொடுத்தார். வணக்கம் சார். இன்னிக்கி கடலுக்குள்ள போகல. அதனாலதான், முனீசுவரன் வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம்னு புளியங்குளத்துக்கு வந்தேன் என்றார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசச்சொல்லி அலைபேசியைக் கொடுத்தார். நானும் எல்லோரிடமும் பேசினேன். முனீசுவரன் குடும்பத்தையும், பிள்ளைகளோட படிப்பையும் நாமதான் சார் பாத்துக்கனும் என்றார். நானும் அவ்வாறே உறுதி அளித்திருக்கிறேன். தம்பி முனீசுவரன் குடும்பத்திற்கு உதவ விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.

தம்பி முனீசுவரனையோ, அய்யா டேவிட் அவர்களையோ முன்பின் பார்த்தது இல்லை. ஆனாலும், ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது. புதிய உறவுகளை இணைத்திருக்கிறது. 

டேவிட் அய்யாவுடன் தமது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை தம்பி முனீசுவரன் அனுப்பி வைத்திருந்தார். எனினும், சில பல காரணங்களுக்காகப் படத்தைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என அவர் வேண்டிக்கொண்டார்.

தம்பி முனீசுவரனுக்கும், அய்யா டேவிட் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல், பலரது மனங்களோடு மிக நெருக்கமாக உரையாடிக்கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சிதான்.

வாய்ப்புள்ளோர் இந்நூலை வாசியுங்கள்.

ஏர் மகாராசன்

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

சனி, 9 டிசம்பர், 2023

நீர் மேலாண்மையின் படுதோல்வியும், பெருவெள்ளப் பாதிப்புகளும்: மகாராசன்


அவரவர் வாழ்ந்த ஊர்களில் வேலைவாய்ப்புகளும், வாழ்வதற்கு உகந்த சூழல்களும் இருந்திருந்தால் சென்னையில் வந்து இப்படி மொத்தம் மொத்தமாய்க் குவிந்திருக்க மாட்டார்கள்தான். அவரவர் பூர்வீக ஊர்களையும் சொந்த உறவுகளையும் விட்டுவிட்டு நகரத்தில் அல்லல்பட ஆசைப்பட்டு எவரும் சென்னைக்குக் குடியேறவில்லை.

 சென்னையை மய்யப்படுத்தியேதான் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழில்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிகங்கள், நகர உருவாக்கங்கள் என அத்தனையும் உருவாக்கப்படுகின்றன. இதனால், நீர் ஆதாரப் பகுதிகள் யாவும் மக்கள் வாழிடப் பகுதிகளாகவும் கட்டிடங்களாகவும் மாறிக் கிடக்கின்றன. இதுபோன்ற மழை வெள்ளப் பாதிப்புகள் அடுத்தடுத்து வரத்தான் போகின்றன.

ஒவ்வொரு தலைமுறையும் மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தம்மைத் தற்காத்து மீண்டு வந்திருக்கின்றன. கடந்த காலத் தலைமுறையின் தற்காப்பு முறைதான் நீர் மேலாண்மை. இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு நிலத்தையும் நீரையும் மக்களையும் காத்து வந்திருக்கின்றனர். இதைத் தனி மனிதர்களால் செய்திட இயலாது. ஒட்டுமொத்த சமூகமும் நீர் மேலாண்மையில் தத்தமது அளவில் பங்கெடுத்திருக்கின்றன. அன்றைய ஆட்சியாளர்களும் நீர் மேலாண்மை தொடர்பாகப் பல்வேறு வகையில் அக்கறையோடும் அறத்தோடும் செயலாற்றி வந்திருக்கின்றன. அதனால்தான், நீர் மேலாண்மை என்பது மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

அத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்கள் அடுத்தடுத்து வளப்படுத்தியும் வலுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் பாதுகாத்தும் பராமரித்தும் வந்திருக்க வேண்டும். ஆனால், விடுதலைக்குப் பிந்தைய அரசுகளிடம் நீர் மேலாண்மை குறித்தத் தெளிவான தொலைநோக்கான எந்தத் திட்டங்களும் இல்லாமல் போயின. 

மாறாக, நீர் ஆதாரப் பகுதிகளும் நீர்த்தடங்களும் முற்றாகச் சிதைக்கப்பட்டன. நீர் மேலாண்மை குறித்த எந்தப் புரிதலும் அரசுகளிடமும் இல்லை; அதிகாரிகளிடமும் இல்லை. நீர் மேலாண்மையின் படுதோல்விதான் இது போன்ற வெள்ளப் பாதிப்புகளுக்கு முழுமுதல் காரணமாகும். 

இனி வரும் காலங்களிலாவது நீர் மேலாண்மைத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும். நீரையும் மக்களையும் மண்ணையும் உளமார நேசிக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரும்போது வெகுமக்களும் கைகள் கோர்ப்பார்கள். அப்படித்தான் கடந்த தலைமுறையின் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மக்களின் பெருந்துணையோடு செய்து முடிக்கப்பட்டன. நம் முன்னோர்களிடமிருந்து இந்தத் தலைமுறை மக்கள் மட்டுமல்ல, அரசுகளும் அதிகாரிகளும் பாடம் படிக்க வேண்டும். 

மேலும் பார்க்க:

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_13.html

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_11.html

பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீள வேண்டும். 

ஏர் மகாராசன் 

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.