வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பிள்ளையார் சுழியும் எழுத்துப் பண்பாட்டு மரபும்.

எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.
குறளும் கூட உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களும் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் உ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர். அதாவது உலகைக் குறிக்க உ எனப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு. இதற்கும் பிள்ளையார் சுழி என்பதற்கும் தொடர்பு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் , உ என்பது பிள்ளையார் சுழி அல்ல , உலகம் என்பதன் சுருக்கக் குறி ஆகும்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது , பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
( உ என்பதைக் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்தில் பதிவான "பிள்ளையார் சுழி வந்த கதை" கட்டுரை குறித்த எமது பதிவு இது.)
பிற்சேர்க்கை .
‘பிள்ளையார் சுழி’ வந்த கதை !
பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச்சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின்
மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும்இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள்
என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.
அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே,
இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா?
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.
கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது. எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும்
தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி!
- பெரியார் முழக்கம்.(01.09.2016.)


இதுவும் ஓர் ஆணவப் படுகொலை - கவிதை

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை .

சாதியத்திற்கு
அதிகாரக் குணமும்,
அதிகாரத்திற்குச்
சாதிய முகமும்
இருப்பதென்பதும் ,
காலங்காலமாய்
இந்த இரண்டையும்
இணைத்திருப்பது
பூநூல் தானென்பதையும்
இந்தச் சாவும்
உலகுக்குக் காட்டியிருக்கிறது.

மறைந்திருந்து கொல்லும்
இராமன் காலத்து
மநு நீதியே,
கழுத்தறுத்தும்
அடைத்து வைத்தும்
கொன்று போட்டது.

மநுவின் சாயம்
பூசிக் கொண்ட நீதியால்
இன்றுமொரு படுகொலையில்
செத்துப் போனான்
ஒரு சாமானியன்.

ஒருவர்
பேசாவிட்டாலும்,
பேச விடாவிட்டாலும்,
பேசி விடுகிறது
அவரது சாவு
பல உண்மைகளை.

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை தான்.
அதிகாரப் படுகொலையும் கூட.

அதிகாரத்தின் ஆணவத்தால்
கொல்லப்பட்டான் கோவலன்.
கள்வன் அவனில்லையென
வழக்குரைத்து,
அதிகாரத்தைச்
சாகடித்தாள் கண்ணகி.
கண்ணகியே கொல்லப்பட்ட
கொடு நிலத்தில் நாம்.

ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருத்தலே
போதுமானது.

அந்தப் படுகளத்திற்கு
நாளை
நாமும்
அழைத்து வரப்படலாம்.

செத்ததற்குப் பிறகு
நீதி வழங்கப்படலாம்.

அது
அநீதியைக் காட்டிலும்
கோரமாய்க் கூட இருக்கலாம்.

நீரின்றி அமையாது தமிழகம் - கவிதை

நீரின்றி அமையாது தமிழகம்.

மேடாய் இருந்தாலென்ன,
குளமாய் இருந்தாலென்ன,
வேங்கடமாய் இருந்தாலென்ன,
குடகாய் இருந்தாலென்ன?

எல்லாமே இந்தியாவுக்குள்ள
இருக்குதுன்னு சொன்னதைப்
பச்சையாய் நம்பி,
விட்டுக் கொடுத்துக்
கெட்டுப் போனதற்கு
எல்லா
காலத்திற்குமான சான்று,
ஏழரைக் கோடித்
தமிழர்களைத் தவிர
யாராக இருக்க முடியும் ?

ஆற்றின் அளவறிந்து ஈக
என்பதெல்லாம் மறந்து
ஆறுகளையெல்லாம் ஈந்து
கையேந்தும் மடயர்களாய்
வாய்பொத்தி நிற்கிறோம்
இந்தியராய்.

பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.

நாம் எல்லோருமே
இந்தியர்கள் இல்லை
தமிழர்கள் தானென்று
கன்னடர்களும்
மலையாளிகளும்
தெலுங்கர்களும்
சொல்லிக் கொண்டேதான்
இருக்கிறார்கள்
பொட்டில் அறைந்தபடி.

முல்லைக்குத்
தேர் கொடுத்த
பாரிகள் நாம்.
மயிலுக்குப்
போர்வை கொடுத்த
பேகன்கள் நாம்.
நாமும்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்.

நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
மிச்சமிருக்கும் மானம் என
அனைத்தும் கொடுத்து
அம்மணமாய்க் கத்துவோம்
நாம் இந்தியர் என்று.

நீரின்றி
அமையாது தமிழகம்.

நீரும் இல்லையென்றால்
இந்தியமும் அப்படித்தானா ?

படுகளம் - கவிதை

படுகளம்.

சாதியும் காவியும்
காக்கியும் நீதியும்
கூடவே பூநூலும் சேர்ந்து 
இன்னொரு படுகொலையை 
நிகழ்த்தியிருக்கிறது.

அதிகாரம் 
இந்த முறையும்
மனிதத்தைத்
தின்று விட்டது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நீர்த்தீ அறம் விதைத்தவன்.


நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களைச் சுமக்கும் 
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம் நீ.
கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வைச்
சுவைத்திருக்கலாம் நீ.
சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளோடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம் நீ.
பொழுது சாய்ந்தால்
கொஞ்சம் அரட்டை
பொக்கைச் சவடால் எனப்
போதை கரையக் கரையக்
குடித்தும் படுத்தும்
கவலைகள் இன்றி
களித்து மகிழ்ந்திருக்கலாம் நீ.
அதிகாரக் குத்தகை
வகையறாக்களின்
உடன்பிறப்பாகவோ
இரத்தத்தின் இரத்தமாகவோ
பல்லக்குத் தூக்கியும்,
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம் நீ.
இந்தியம் பேச
நேர்ந்துவிட்ட இடதுகளின்
தோழனாய் இருந்தாலாவது,
பன்றிகளின்
தொழுவத்தில் நுழைந்து,
வாக்குப் பொறுக்கிப் புரட்சியில்
அலுங்காமல்
அய்க்கியமாகி இருக்கலாம் நீ.
இதுவும் இல்லையென்றால்,
உரிமைகள் இழந்து
கொடுமைகள் சகித்து
அடையாளம் மறந்து
மனிதம் பேசியே
வாழ்ந்து நொந்து
மெல்லச் செத்திருக்கலாம் நீ.
ஆனாலும்,
சிறுமை கண்டு பொங்கினாய்,
கொடுமை கண்டு கொதித்தாய்.
விடலையின் உணர்வெல்லாம்
தலைதூக்கும் வயதில்
இன மானத்தை
நீ நுகர்ந்தாய்.
சாதி சாதியாய்ச்
சகதியாய்க் கிடக்கும் நிலத்தில்
எளிதாய்ச் சாதி கடந்து
தமிழரெனும்
பேருரு காட்டினாய்.
வாழத் தெரியாத
வாழ முடியாத கோழை எனத்
தூற்றுவோர் முகத்தில்
எச்சிலுக்குப் பதிலாகச்
சாவைக் காரி உமிழ்ந்தாய்.
இனத்தின்
நீர்த் தாகம் தணியவே
நெருப்பை நீ அள்ளிக் குடித்தாய்.
நீருக்கு அழுத கண்ணீர்
நீரிலே கரையுமென்றா
நீரிலே
நெருப்பெழுதிப் போனாய் ?
உணர்வற்று
இருளில் தவிக்கும்
இனத்தின் மீது
வெளிச்சம் படரத்தானா
நெஞ்சில் மூண்ட நெருப்பை
உன்னுடலில்
ஏந்திக் கொண்டாய் ?
உசுப்பேத்தி
உணர்வேத்தி
தட்டேத்திப் பாடையிலேற்றியதாய்ச்
சொற்புணர்ச்சிப் பகர்வோரெல்லாம்
வாய்பொத்தி நிற்காமல்
பெருங்களம்
கண்டிருந்தால்,
நீ
செத்திருக்க மாட்டாய் தான்.
உனக்கென்று
உடலும் உயிரும்
உணர்வும் அறிவும்
ஆசையும் கனவும் மனமும்
இருக்கத்தானே செய்தன?
அத்தனையும்
துச்சமாய் எரித்து
நீர்த் தீ அறமாய்
தமிழ் நிலத்தில்
நீ படர்ந்தாய்.
சிறு நிலத்தில்
பெருங்கொலையே நடக்க
வேடிக்கை பார்த்த பேரினம்,
உன் உயிர்க்கொடையை
ஏந்தவா போகிறது ?
அப்துல் இரவூப்
முத்துக்குமார்
பள்ளபட்டி இரவி
செங்கொடி என
உயிர்த் தீ விதைத்து
அறம் வளர்ந்த மண்ணில்
நீயும்
நீர்த் தீ
ஆகிப் போனாய்.
தன்னை அழித்து
முளைக்கும் விதை போல்
உம்மைக் கொளுத்தி
அறத் தீ
முளைக்கச் செய்தாய்.
உனது சாவில்
இனத்தின் விழிப்பை
உயிர்ப்பித்திருக்கிறாய்.
ஆனாலும்
தம்பி விக்னேசு ,
தீ விழுங்கி
நீ செத்திருக்கக் கூடாது தான்.
உன்
தீச் சாவு தந்த
வலியைக் காட்டிலும்,
உன் சாவுமேல் எறிந்த
சொல்லடிகளே
எம்மைக்
காயப்படுத்துகின்றன.
கூடவே,
உனது சாவு மறக்கப்படவே
இராம்குமாரின் சாவையும்
தந்திருக்கிறது அதிகாரம் .
நீர் குடித்து
விதைகள் முளைக்கும்.
நெருப்பைக் குடித்து
அறமாய் நீ முளைத்தாய்.
உயிர்த் துளிக்காய்
துளி உயிரைத்
தீக்குத் தந்து
உயிர்ப்பாய் மடிந்த உமக்கு
எம் வீர வணக்கம்.

சனி, 10 செப்டம்பர், 2016

இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி .


இம்மானுவேல் சேகரனைப்
போலச் செய்திருந்த கபாலி .
திரை மொழியில் விரியும் சமூக ஆளுமை.


 அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமராசு ( Dharmaraj Thamburaj )அவர்களின் முகநூல் பதிவுகள் குறித்துக் காட்டமான பதிவுகள் இரு தரப்பிலும் வெளிப்பட்டன. போதாக்குறைக்கு நானும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.
கபாலி படம் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசவில்லை , தலித் அரசியலையும் பேசவில்லை. இரஞ்சித் இயக்கத்திலும் தாணு தயாரிப்பிலும் இரசினி நடித்த ஒரு வணிகப் படம் அவ்வளவே. ஆயினும் , தமிழ்த் திரையில் காட்டப்படாத காட்சிகளும் பேசப்படாத உரையாடல்களும் பதிவு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில் ஏன் இத்தனைத் தயக்கம் ? என்பதான பதிவை இட்டதோடு நான் நிறைவடைந்து விட்டேன்.

இப்போது தான், த.தருமராசு அவர்களின் "நான் ஏன் தலித்தும் அல்ல?" நூலைப் படித்து முடித்திருக்கிற நிலையில், கபாலி படம் குறித்து வேறு விதமான உரையாடல்கள் தோன்றுகின்றன. பொதுவெளியில் இவை விவாதிக்கப்பட வேண்டியவை என்றே கருதுகிறேன்.

கபாலி படம் வணிகப் படம் தான். ஆனால், அது கற்பனையான கதை மட்டும் அல்ல. சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுதான் வேறு மாதிரியாய் வணிகப் படமாய்த் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 கபாலி படத்தின் கதைக் களம் மலேசியா என்பதற்குப் பதிலாகத் தமிழ் நாடாய் இருந்திருந்தால் கபாலி கதைப் பாத்திரம் யாராக அடையாளப்பட்டிருக்கும் ? சாதிய ஆணவத் திமிர்க் கதைப் பாத்திரங்களை எதிர்க்கும் கபாலி  பாத்திரமானது இமானுவேல் சேகரனைப் போலச் செய்தல் பாத்திரமாகத் தான் அமைந்திருக்கும்.

கல்வியின் வாசம் நுகர்ந்து, தான் சார்ந்த மக்கள் கூட்டத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதை வாழ்க்கை இலக்காக அமைத்துக் கொண்ட அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்ட கபாலி பாத்திர உருவாக்கமும் உரையாடல்களும் இமானுவேல் சேகரனை உருவகப்படுத்தக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் , நான் முன்னுக்கு வருவது தான் உனக்குப் பிரச்சினையின்னா உழைப்பேன்டா, கோட் சூட் போடுவேன்டா, கால் மேல் கால் போடுவேன்டா என்பது போன்ற உரையாடலை இந்தச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டிய மனிதப் பனுவலாய் வரலாற்றில் பதிவாகி இருப்பது இம்மானுவேல் சேகரன் தான்.

தமிழ்நாட்டின் பதற்ற நிலமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முகவை மாவட்டம், சாதிய மேலாதிக்கச் சீண்டல்களைத் தொடுப்பதும், அதே சாதிய மேலாதிக்கச் சீண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்து களம் காண்பதுவுமாகக் கலகம் பூசிக் கிடந்தது. இந்நிலையில், உயர்த்திக் கொண்ட சாதிய மேலாதிக்கத்தை அசைத்தும் எதிர்த்தும் பார்த்த ஒரு நிகழ்வு தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.

எடுப்பு வேலைகளும் ஏவல் வேலைகளும் செய்ய வேண்டும், காடு கழனிகளில் பண்ணை வேலை செய்திட வேண்டும், அந்த வட்டாரத்தில் ஆளுமை செய்திடத் துடித்த ஒரு குறிப்பான சாதியினருக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பவை போன்ற சாதிய ஒடுக்குமுறை நினைப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிராக இம்மானுவேல் சேகரன் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றி இருக்கிறார். அதாவது, சாதிய மேலாண்மைக்கு முன்பாக இருந்த ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறார்.

இரு தரப்பின் முற்றிய முரண்பாடு ஒரு கட்டத்தில் வெடித்திருக்கிறது. 1957 இல் முதுகுளத்தூரில் நடைபெற்ற அமைதிக்கான பல சமூகப் பேச்சுவார்த்தை நிகழ்விற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இம்மானுவேல் சேகரன் அழைக்கப்பட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை அரங்கினுள் இன்னொரு தரப்பினரின் ஆளுமை உள்நுழைந்த போது, அங்கிருந்த எல்லோருமே எழுந்து நின்று மரியாதை செய்ததாகவும், இம்மானுவேல் சேகரன் மட்டும் எழுந்திருக்காமல் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், இன்னொரு தரப்பினரின் ஆளுமைக்கு முன்பாகவே கால் மேல் கால் போட்டும் உட்கார்ந்திருக்கிறார். அதோடு, அங்கேயே அவர் முன்பே புகையும் பிடித்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னாலேதான் சாதிய ஆதிக்கத்தினரால் பரமக்குடியில்  படுகொலை செய்யப்படுகிறார் என்றே இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
இம்மானுவேல் சேகரனின் இந்தச் செய்கையைப் போலச் செய்தலாகவும் திரும்பச் செய்தலாகவும் தான் இந்தச் சமூகம் பார்த்தது.

சாதியம் அப்பிக்கிடந்த களத்தில் நிகழ்ந்த இம்மானுவேல் சேகரன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தைத் தான் கபாலியாகப் போலச் செய்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

இம்மானுவேல் சேகரன் குறித்த அண்மைக்கால நிகழ்வுகள் திருப்பிச் செய்யும் நிகழ்வாகச் சாதியச் சமூகம் புரிந்து வைத்திருப்பதனால் தான் இருதரப்பினரிடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் தான், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்த கபாலியின் களம் மலேசியாவாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவராக(கேங் லீடராக) இருந்த இம்மானுவேல் சேகரனைத் தான் மலேசியத் தோட்டத் தொழிலாளர் தலைவராக (கேங் லீடராக)ப் போலச் செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட போலச் செய்தல் தான். ஆனால், இதைக் குறித்துப் பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

கபாலி படத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரையாடல்கள் இயக்குநர் இரஞ்சித்தை மய்யமாகவே வைத்தே நகர்ந்தன. படைப்பின் வழியிலான போலச் செய்தலாய் வெளி வந்த கபாலி, இம்மானுவேல் சேகரனை நினைவுபடுத்தும் திரை மொழி என்பதான உரையாடல் வெளிப்பட்டிருந்தால் இரஞ்சித், இரசினி ஆதரவாளர்களால் மட்டுமல்ல, இன்னொரு தரப்பினராலும் கூட இன்னும் அதிகமாகவே தூக்கிக் கொண்டாடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதே வேளையில், மிகக் கடுமையான எதிர்ப்பையும் கபாலி சந்தித்திருக்கும். ஏனெனில், இம்மானுவேல் சேகரன் எனும் குறியீடு சாதியத்திற்கு எதிரான திருப்பிச் செய்தல் குறியீடாய் இன்னும் இருப்பதனால், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலியும் திருப்பிச் செய்த கலைப் படைப்பாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அதனால் தான், கபாலி -போலச் செய்தல் படம் தான் என்பதையே இரஞ்சித்தும் அவரது ஆதரவாளர்களும் நிறுவ முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது அதன் வணிகத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

 பொதுவாகவே, போலச் செய்தல் நிகழ்வும் படைப்பும் சாதியச் சமூகத்தின் எதிர்ப்பைப் பெறுவதில்லை. அதேவேளையில், திருப்பிச் செய்யும் நிகழ்வும் படைப்பும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்பவை என்பதைச் சமூக ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்தப் பின்னணியில் கபாலி படம் குறித்து உரையாடல்கள் தொடர வேண்டும்.

போலச் செய்தல் - திரும்பச் செய்தல் குறித்து த.தருமராசு (நூலாசிரியர் தம்மை டி. தருமராஜ் என்றே பதிவு செய்கிறார்)அவர்களின் நான் ஏன் தலித்தும் அல்ல ? எனும் நூலில் மேலதிகத் தரவுகளும் உரையாடல்களும் உள்ளன.

மாறுதிணை - கவிதை



பெரு மரம்
துப்பிய எச்சிலாய்
நிழலடியில்
முளைத்துக் கிடந்தன
செடிகள்.

கிளைகளில் துளிர்த்து
மண்ணில் இறங்கிய
விழுதுகளைப்
பற்றிப் படர்ந்தன
கொடிகள்.

உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித் தின்று
முனை காட்டின
புற்கள்.

இதழ் விரித்த
பூக்களின்
மகரந்தத் தடம் பிடித்து
வந்து சேர்ந்தன
பூச்சிகளும் வண்டுகளும் .

முற்றிய
கிளைச் செதில்களுக்குள்
வேர் விட்டு
கீழ் மண் பார்த்துத்
தாவியாடின
தொத்துக் கொடிகள்.

கிளை விரித்த
இடுக்குகளில்
கூடுகள் வேய்ந்தன
பறவைகள்.

நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.

எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.

அறம் மறந்த கல்வி முறை

அறம் மறந்த கல்வி முறையும்
மனம் பிறழும்
இளம் தலைமுறையும்.

அண்மைக்கால  இளந்தலைமுறையினரின் வாழ்வுப் போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. மேட்டிமை மற்றும் நடுத்தர வர்க்க வாழ் நிலைப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நுகர்வுவெறிப் பண்பாடே இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பண்பாட்டு வெளியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஆங்கில மேலாதிக்க மோகமும் நுகர்வுவெறிப் பண்பாடும் எளிய மக்களிடம் கூட திணிக்கப்படுவதை அண்மைக்காலச் சமூக நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
கல்வி தான் ஒரு சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாய்ப் பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழலில் கல்வி வணிகமயமாகிப் போனது. உலக வல்லாதிக்க நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை விசுவாசிகளை உற்பத்தி செய்யும் கூடாரங்களாய் இன்றைய கல்வி நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இருப்பதை மனப்பாடம் செய், கேள்விகள் கேட்காதே, தானாய்ச் சிந்திக்காதே, மதிப்பெண் மட்டுமே இலக்கு, பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற குறுகிய மனவெளியை இன்றைய கல்வி முறை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வி என்பது வெறும் அறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. சமூக வெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையின் தனி மனிதருக்கான அறத்தையும் கல்வி தான் தந்து கொண்டிருந்தது. மனித வாழ்வின் இலக்கு இன்பம் தான். அந்த இன்பம் பொருள் சார்ந்ததுதான். ஆயின், அந்த இன்பமும் பொருளும் அறம்சார்ந்ததாய் இருத்தல் வேண்டும். அதைத்தான் தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் காணப்படுகிற இலக்கியங்கள் அந்தந்த நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த அறத்தையே பேசுகின்றன.
அறிவு வளத்தையும் அறவாழ்வையும் ஒருங்கே செதுக்கும் கல்வி முறையே இந்தச் சமூகத்தை வளப்படுத்தும். ஆனால் , இங்குள்ள கல்விச் சூழலோ அறிவாளிகளைத் தான் உற்பத்தி செய்கின்றன. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம்சார் வகுப்புகளும் பாடத்திட்டங்களும் இப்போது இல்லை. அறம்சார் வாழ்வியலை எடுத்துரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மை இல்லை. அவை வெறும் மொழிப் பாடங்களாக மட்டுமே சுருக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கல்வியில் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே போதுமானது , மற்ற பாடங்களில் தான் உயர் மதிப்பெண் தேவை என்ற நிலையில் , உயர் கல்வி பயில்வதற்கு மொழிப் பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலை , உயர் கல்விப் பாடத்திட்டங்களில் மொழிப் பாடங்களே இல்லாத ஒரு நிலை என அறத்தை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஒதுக்கி வைத்த பின்னால் , அறத்தை எங்கிருந்து தான் கற்றுக் கொள்வது?
அறத்தைப் புறந்தள்ளுகிற இன்றைய கல்வி முறையில் பயில்கிற இளந்தலைமுறை சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பிறழக் காரணமாய் இருப்பது இன்றையக் கல்வி முறை தரும் பாடம் தான் காரணம்.
நட்பையும் காதலையும் வாழ்வையும் உறவுகளையும் சமூகத்தையும் ஒழுக்கத்தையும்  தன்னம்பிக்கையையும் தருகிற அறம்சார் கல்வியைப் பெறுவதற்கான சூழல் இல்லாமையே பெருங்குற்றங்கள், சீரழிவுகள், தற்கொலைகள், பாலியல் வன்முறைகள், சாதியக் கொடுமைகள், மனிதப் படுகொலைகள் நிகழக் காரணமாய் இருக்கின்றது.
மனதைப் பக்குவப்படுத்தாத கல்வி முறைதான் இளந்தலைமுறை தடம் பிறழக் காரணம். இது மாற்றப்படாத வரை  சமூகக் குற்றவாளிகள் உருவாகிக் கொண்டே தான் வருவார்கள் .