வியாழன், 15 அக்டோபர், 2020

தமிழர் அரசியலைச் சிதைக்கும் குறுக்குச் சால் அரசியல்: மகாராசன்

தமிழர் ஒற்றுமை குறித்தோ, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் குறித்தோ, தமிழர் அடையாளம் குறித்தோ, ஈழ ஆதரவு குறித்தோ தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக ஆகும்போதெல்லாம், 

இதைப் பேசுபொருளாக்கும் தமிழ்த் தேசியர்கள் மீதும், தமிழ்த் தேசிய மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மீதும், தமிழர் ஓர்மை பேசுவோர் மீதும் பல்வேறு அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு.

தமிழர்களுக்கான அரசியலைப் பேசுபொருளாகக் கொண்டிருப்போரெல்லாம், ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரானவர்கள் என்பதைப்போலவும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் தமிழர் தேசிய அரசியலைப் பேசுவோர்தான் காரணம் என்பதைப்போலவும் கருதிக் கொண்டு, தமிழர் அரசியலுக்கு எதிரான - தமிழர் ஓர்மைக்கு எதிரான மடைமாற்ற நுண்ணரசியலைப் பலதரப்பினரும் முன்னெடுக்கின்றனர். அந்தவகையில்தான், தமிழர் பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசாமல், கண்டுகொள்ளாமல், போராடாமல் தமிழர் பிரச்சினைகளைப் பேசுவது ஏன்? என்பதான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் நியாயமானவைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் பேசுபொருளாக ஆக்கப்பட வேண்டும் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும் தான். சாதியாதிக்க சக்திகளை மற்றும் சுரண்டும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும் தான். இதில் துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. தமிழர் அரசியல் பேசுகிற இயக்கங்களும் நபர்களும் இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தக் குறைபாடும் இயலாமையும் சரிசெய்யப்பட வேண்டும்.

அதேவேளையில், தமிழர் அரசியல் பேசுவோரின் இந்தக் குறைபாடுகள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடும் அரசியல் போக்கும் அல்ல.

ஆனால், தமிழர் பிரச்சினைகள் தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக முன்னெடுக்கப்படுகிறபோது ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான கிளர்ச்சிபோல பாவிப்பது சரியல்ல.

ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற சமூகக் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் சாதியாதிக்கவாதிகளும், அவர்கள் நிரம்பியிருக்கும் சமூக அமைப்புகளும், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் அரசியல் மற்றும் அதிகார நிறுவனங்களும்தான் காரணம்.

ஆனால், அரசியலிலும் அதிகாரத்திலும் பங்குபெறாவிட்டாலும் தமிழர் நலன்களையும் தமிழ்நாட்டு நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழர் அனைவருக்குமான பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கிற - போராடுகிற போதெல்லாம் அதிலிருந்து விலகியும் வேறுபட்டும் நின்றுகொண்டிருப்பது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாவதே ஆகும்.

தமிழ்த் தேசிய எழுச்சியும் தமிழர் அடையாள எழுச்சியும் வரும்போது மட்டுமே தமிழர் ஒற்றுமை பற்றிய கேள்விகள் வருகின்றன.

ஆனால், திராவிட ஒற்றுமை, இந்திய ஒற்றுமை, பாட்டாளி ஒற்றுமை, தலித் ஒற்றுமை பற்றிய அரசியல் பேசும்போதோ, திராவிடர், இந்தியர், தலித், பாட்டாளி என்கிற அடையாள அரசியல் பேசும்போதோ எந்தக் கேள்விகளும் முன்வைக்கப்படுவதில்லை.

தமிழர் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் பலரும், திராவிடர், இந்தியர், பாட்டாளி, தலித் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதில்லை; கேட்கவும் மாட்டார்கள்.

ஏனெனில், ஒடுக்கப்பட்ட சாதியினர் நலன்களைக் காட்டிலும், தமிழர் அரசியலை - தமிழர் அடையாளத்தை - தமிழர் ஒற்றுமையைச் சிதைப்பதுதான் முதன்மையான நோக்கம். இதுவே குறுக்குச் சால் அரசியல் என்பது.

ஏர் மகாராசன்

மக்கள் தமிழ் ஆய்வரண்.

15.10.2020.

புதன், 14 அக்டோபர், 2020

பட்டியல் மாற்றக் கோரிக்கை சுயமரியாதைக் கோரிக்கையே! : மகாராசன்

எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் வேளாண் மரபின் சமூகப் பிரிவான தேவேந்திர குல வேளாளர்கள், தங்களை எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றி வேறு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையைப் பலகாலமாக முன்வைத்திருந்தாலும், அண்மைக்காலத்தில் அந்தக் கோரிக்கை மிகத்தீவிரமான வடிவத்தைப் பெற்று வருகின்றது. 

அம்மக்களின் பட்டியல் மாற்ற/வெளியேற்றக் கோரிக்கை பலதரப்பினரின் பேசுபொருளாக ஆகிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், அம்மக்களின் பட்டியல் மாற்றக் கோரிக்கையானது ஆரிய முகாம்களின் அரசியல் கோரிக்கை போலப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

அண்மையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையைச் சுயமரியாதைக் கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்; அதனோடு பகுத்தறிவு மற்றும் சமத்துவம் சார்ந்த கோரிக்கையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனப் பேராசிரியர் டி.தர்மராஜ் அவர்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதிய தமிழக மனித உரிமைகள் கழகத் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் ஒரு கருத்தைச் சுட்டி இருக்கிறார். 

அந்தக் கருத்தும் எமது மறுப்பும் வருமாறு:

அரங்க குணசேகரன் கருத்து:

/மோடி அமித்சா ஆதரவோடு மோகன்பகவத் ஆசியோடு டாக்டர் கிருட்டிணசாமி இந்துமதச் சாக்கடையில் முக்கி எடுத்தாவது பள்ளர்களை தேவ இந்திரர்களாக மாற்றிவிடுவார்! கவலையே படாதீர்கள் வருங்காலக் காவிப் பள்ளர்களே!/

எமது மறுப்பு:

பட்டியல் மாற்றக் கோரிக்கை மோடி, அமித்சா, மருத்துவர் கிருசுண சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல. பொத்தாம் பொதுவாக அப்படிச் சுருக்கிப் பார்ப்பது நேர்மையல்ல.

ஒரு நூற்றாண்டு காலமாக அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கையே அது. 

மோடி வகையறாக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அந்த மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நியாயமற்றது என்றாகிவிடாது. இது அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கை. 

தமிழ்த் தேசிய, இடதுசாரிய, திராவிட முகாம்கள் அந்த சுயமரியாதைக் கோரிக்கையை ஆதரிக்காததன் விளைவாக, அதை ஆரிய முகாம்கள் தமது சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கையை மற்றவர்கள் முன்னெடுக்கிறபோது அந்த முகாமை நோக்கி அம்மக்கள் அணிதிரளுவார்கள். அவர்களைப் பொறுத்தளவில் அவர்களது சுயமரியாதை அங்கீகரிக்கப்பட வேண்டும் அவ்வளவே.

அந்தச் சமூகத்தின் ஒரு சில அரசியல் கட்சித் தலைமைகள் ஆரிய முகாமில் இருப்பதாலேயே அந்தச் சமூகத்தினர் அனைவரும் காவிக் கும்பலாகச் சித்தரிக்கும் தங்களது கருத்து ஏற்புடையது அல்ல; உண்மையும் அல்ல. 

திரு எல்.முருகன் பாசகவின் தலைவர் என்ற நிலையில் இருக்கும்போது, அருந்ததிய மக்கள் அனைவருமே காவிக் கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டுவதும் அடையாளப்படுத்துவதும் நேர்மையும் உண்மையும் அல்ல.

அதேபோல, ஆதிதிராவிடச் சமூகத் தலைவர்கள் ஒரு சிலர் பாசகவில் அய்க்கியம் காட்டிக் கொண்டிருக்கும் சூழலில், ஆதிதிராவிடர்கள் அனைவரும் காவிக்கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டக் கூடாது; சுட்டவும் முடியாது.

இந்நிலையில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஆரிய முகாம்கள் ஆதரிப்பதாலோ அல்லது அந்தச் சமூகத்தின் ஒருசில தலைவர்கள் அந்த முகாமில் இருப்பதாலோ அந்த மக்கள் அனைவரும் ஆரியக் காவிக் கும்பலாக மாறுகிறார்கள்; மாறப்போகிறார்கள் எனக் கருதுவதும் கருத்துரைப்பதும் சரியல்ல; அதுவே உண்மையும் அல்ல.

அந்த மக்களின் கோரிக்கையை அவர்களின் சுயமரியாதைக் கோரிக்கையாக, அந்த மக்களின் சனநாயகக் கோரிக்கையாகப் பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும், சமூக இயக்கங்களும் ஆதரிக்கவே செய்கின்றன.

ஆரிய முகாம்களைச் சாராத மற்ற அரசியல் முகாம்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்ற நிலையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையை, அதை முன்னெடுக்கும் சமூகத்தினரை ஆரிய முகாமைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்துவது சமூகக் கண்ணோட்டக் குறைபாடு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களின் சனநாயகக் குரலுக்கும் எதிரானதும் ஆகும்.

ஏர் மகாராசன்

13.10.2020.

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

நவீன வர்ணாசிரமப் பாகுபாடும் பட்டியல் மாற்றக் கோரிக்கையும்: மகாராசன்

ஓர் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவரும் மேல்சட்டைகூடப் போடாதவருமான ஆடு மேய்க்கும் ஒருவர்,  இன்னொரு இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மேல் சட்டை அணிந்திருக்கும் ஆடு மேய்ப்பவரைக் காலில் விழ வைத்திருக்கிறார். 

பார்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவு பொருளாதார  வாழ்நிலை உள்ளவர்கள் போலத் தெரிகிறது. 

தனியாகச் சிக்கிய ஒருவரைக் கூட்டமாக உள்ளவர்கள் அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை எல்லாச் சாதியிலும் மட்டுமல்ல; ஒரே சாதிக்குள்ளும் இருக்கிறது.

ஆனால், ஒத்த வாழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு ஆதிக்க உணர்வும் ஒருவனுக்கு அடிமை உணர்வும் எப்படி வந்திருக்கிறது அல்லது வருகிறது? 

உயர்சாதி ஒரு தரப்பினராகவும் என்றும், கீழ்ச்சாதி இன்னொரு தரப்பினராகவும் வகைப்படுத்தி வைத்திருப்பது சாதி வர்ணாசிரமம் மட்டுமல்ல; இட ஒதுக்கீடுக்கென வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஓ.சி; பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் பட்டியல்களும்கூட நவீன சாதிய வர்ணாசிரமக் கட்டமைப்பாக உருமாறிக்கொண்டிருக்கின்றன.

ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள சாதியினர் எல்லோருமே உயர்சாதி என நினைத்துக்கொள்ளும்படியான சமூக உளவியல் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றது. 

சமூகப் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பினும் ஓ.சி / பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் இருக்கும் சாதியினர் தங்களை உயர்சாதி அல்லது உயர்த்திக்கொண்ட சாதி என நினைத்துக்கொண்டு தம்மளவிலான சமூக மதிப்பையும் சுயமரியாதையையும் பெற்றதான சாதிகளாகக் கருதிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், எஸ்.சி எனும் பட்டியலில் உள்ள சாதியினர் அனைவரையும் தீண்டாச் சாதிகள்; இழி சாதிகள் என ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள மற்ற சாதியினர் இழிவாகக் கருதுவதும், இழி நடத்தையால் சமூக ஒதுக்கம் செய்வதும், அவர்களது சுயமரியாதையை அவமதிப்பதும் உயர்த்திக்கொண்ட சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரிய வர்ணாசிரமம் கட்டமைத்திருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இப்போதைய ஓ.சி/பி.சி/எம்.பி.சி இடஒதுக்கீட்டுப் பட்டியல்களில் உள்ளவர்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடைபிடிக்கும்  சாதிவாதிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அதாவது, எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதியினரை மற்ற ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியலில் இருக்கும் சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதும், இழிவாகக் கருதுவதும், சுய மரியாதையைப் பறிப்பதும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வகைப்பாட்டின் அய்ம்பதாண்டு கால சமூக விளைவு, அது நவீன வர்ணாசிரமக் கட்டமைப்பாக மாறிப்போயிருக்கிறது.

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இடஒதுக்கீட்டுப் பட்டியல்களும் அவற்றின் சாதிகளும் மாற்றியும் மறுசீரமைப்பும் செய்யப்பட வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கர் கூறியதைப் புறந்தள்ளியதன் விளைவே, இடஒதுக்கீட்டுப் பட்டியல்கள் நவீன வகையிலான சாதியக் கட்டமைப்பைப் பாதுகாப்பதாக மாறிப்போயிருக்கிறது.

அதனால்தான், எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இருக்கின்ற காரணத்தாலேயே சமூக ஒதுக்கல்களையும், சமூக அவமதிப்பையும், சுயமரியாதை இழிவையும் எதிர்கொண்டிருக்கும் ஒரு சமூகப்பிரிவினரான தேவேந்திரகுல வேளாளர்கள் தாங்கள் எஸ்.சி பட்டியலில் இருப்பதாலேயே இதுபோன்று நடத்தப்படுவதாகவும், அத்தகையச் சமூக இழிவிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையாகவே எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேறி, வேறு பட்டியலுக்கு மாறுவதான பட்டியல் மாற்றக் கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், பட்டியல் மாற்றக் கோரிக்கை என்பது, நவீன வர்ணாசிரம சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான கோரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஏர் மகாராசன்

13.10. 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

உள் ஒதுக்கீடும் இனவாரிச் சுழற்சிமுறையும் - நீதியும் அநீதியும் :- மகாராசன்

உள் ஒதுக்கீடு வேறு; இனவாரிச் சுழற்சி முறை வேறு என்பதை, இன்னும் இந்தச் சமூகம் விளங்கிக் கொள்ளவே இல்லை.

*

அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூக நீதிதான். 

அதேபோல, இசுலாமியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூகநீதிதான்.

இன்னும் சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய இதர சமூகங்களுக்கும் உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். 

தமிழக இடஒதுக்கீட்டுப் பிரிவில் பி.சி பட்டியலும், எஸ்.சி பட்டியலும் உள்ஒதுக்கீடு கொண்ட பட்டியல்களாக இருக்கின்றன. ஆனால், இரண்டு பிரிவுகளிலும் பின்பற்றப்படுகிற இன வாரிச் சுழற்சிமுறைதான் வேறுவேறாக இருக்கின்றன.

அதாவது, ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்பும்போது இனவாரிச் சுழற்சிமுறை (Roster system) என்கிற முறை பின்பற்றப்படும். 

இந்த இனவாரிச் சுழற்சிமுறை பி.சி பட்டியலுக்கு ஒரு மாதிரியாகவும், எஸ்.சி பட்டியலுக்கு வேறு ஒரு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது.

100 புள்ளிகள் கொண்ட சுழற்சிமுறைதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்புவது வழக்கம். 

அதாவது, இப்போது ஐந்து பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது என்று சொன்னால், முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு இப்படித்தான் தேர்வு நடைபெறும். இந்த முறைதான் இனவாரிச் சுழற்சிமுறை எனப்படுகிறது.

பி.சியில் இருந்து பி.சி.எம் உள்ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. பி.சி இடஒதுக்கீட்டில் இனவாரிச் சுழற்சிமுறை ஒன்று இருக்கிறது. அதில் பி.சி - பொது (BC - GT) என்றுதான் இருக்கிறது. பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர், பி.சி ஒதுக்கீட்டுக்குள் பங்கு கோர முடியாது. அதேவேளையில், பி.சி -  பொது எனும் சுழற்சி முறையில் பி.சி பிரிவினரும் பி.சி.எம் பிரிவினரும் பங்குபெறலாம். 

எனினும், பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சி இடத்தில் பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடமாக மாற்றி அமைக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த பி.சி பிரிவினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சிமுறையே அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால், எஸ்.சி பொதுப் பிரிவிலிருந்து எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கிய பிறகு, மீதமுள்ள 15% எஸ்.சி - பொதுவிலும் எஸ்.சி.ஏ பிரிவினருக்கு இடமளிக்கப்படுகிறது. இது போக, இனவாரிச் சுழற்சிமுறையில் இதுவரை இருந்து வந்த எஸ்.சி -  பொது (SC - GT) எனும் இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி இதரப் பிரிவினரும், எஸ்.சி.ஏ பிரிவினரும் பங்குபெறலாம் என்றிருக்க வேண்டும். ஆனால், எஸ்.சி - பொது என்ற இடத்தில் உள்ள இனவாரிச் சுழற்சிமுறை இடத்தில் எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது அவர்களுக்கான சமூக நீதிதான். அந்த நீதி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

ஆனால், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கியதுபோக, எஸ்.சி - பொதுப் பிரிவிலும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர் பங்கு பெறுவதுமான இடமளிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டு வைத்திருப்பதும்தான், எஸ்.சி பொதுப் பிரிவில் இருக்கும் இதர சாதிகளுக்கான அநீதியாக இருக்கிறது. 

இனவாரிச் சுழற்சிமுறையில் முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு. இப்படித்தான் இனவாரிச் சுழற்சிமுறையில் இடஒதுக்கிட்டுத் தேர்வு முறை நடைபெறும்.

இனவாரிச் சுழற்சிமுறையில், பொதுப்பிரிவினருக்கு அடுத்த இடம் எஸ்.சி எனும் பட்டியல் பிரிவினர் தான் வர வேண்டும். அதில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகப்பிரிவினர் உள்ளிட்ட 77 சாதிகளும் போட்டியிடலாம். 

எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இடம் பெற்ற 77 சாதிகளுக்கான அந்த வாய்ப்பை, எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான வாய்ப்பாக மாற்றி அமைத்திருப்பதுதான், எஸ்.சி பிரிவில் இருக்கும் பிற சாதியினருக்கான அநீதியாக இருக்கிறது. 

எஸ்.சி பிரிவில் எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, இனவாரிச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது என்று இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான இடமாக மாற்றி அமைத்த காலத்திலிருந்துதான், எஸ்.சி - பொது எனும் இனச்சுழற்சிமுறையில் பணிவாய்ப்பு அடைந்து கொண்டிருந்த இதர சாதியினர், எஸ்.சி இடஒதுக்கீட்டில் பணிவாய்ப்பு பெறுவதில் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர். 

எஸ்.சி எனும் இடஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இனவாரிச் சுழற்சிமுறையால் எஸ்.சி இடஒதுக்கீட்டில் கூட பயன்பெற முடியாமல் போயிருக்கும் சூழலில்தான், எஸ்.சி பிரிவில் இருக்கும் குறிப்பிட்ட சாதியினர் அந்தப் பிரிவிலிருந்து வேறுபட்டியலுக்கு மாறவேண்டும்; மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.

எஸ்.சி பிரிவில் தங்களுக்கான இடம் மறுக்கப்படுவதாலேதான், தங்களை எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அதேவேளையில், எஸ்.சி பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் பின்பற்றப்படும்

இனவாரிச் சுழற்சிமுறை அமைப்பை எதிர்கவும் வேண்டும். அதுவே, எஸ்.சி பிரிவில் இருக்கும் எல்லாச் சாதியினருக்குமான நீதியாக இருக்கும்.

இட ஒதுக்கீட்டைக் குறித்தும், உள் இட ஒதுக்கீட்டைக் குறித்தும், இனவாரிச் சுழற்சி முறை குறித்தும் தமிழ்ச் சமூகம் இன்னும் விளங்கிக்கொள்ளவே இல்லை.

எஸ்சி பிரிவில் இருக்கும் இதர சாதியினருக்கான நீதியைக் கோருவதைக் கூட சமூக அநீதியாகப் பார்க்கப்படும்; சாதிவெறியாகக் கருதப்படும் என்பதுதான் வேதனை.

ஏர் மகாராசன்

28/8/2020