செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மகாராசன் எழுத்துழவு: தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள்.



தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள்.

/1/
* கீழிருந்து எழுகின்ற வரலாறு *


வரலாறு என்று நமக்குச் சொல்லப்பட்டவை எல்லாம் மேலிருந்து சொல்லப்பட்டவைதான். சாதி, சமயம், மொழி, இனம், நிறம், பாலினம், பொருளாதாரம், பண்பாடு, நிலம் அடிப்படையிலான ஒடுக்குதலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிக் கிடக்கும் பெருவாரி மக்களின் வரலாறுகள் பொதுவெளியில் முன்னெடுக்கப்படவில்லை. அண்மைக் காலமாகத் தான் அவை குறித்த உரையாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், ஒடுக்குண்டு கிடக்கும் தமிழ் நிலம், இனம், மக்கள், பண்பாடு, கலை இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் நூலாய் வெளி வந்திருக்கிறது. 
பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.


/2/
* அரவாணிகள்: 
உடலியல் - உளவியல் -  வாழ்வியல் *


சமூகத்தின் அக வெளியிலும் பொதுவெளியிலும் குறை மனிதர்கள், இழி மனிதர்கள் என்றெல்லாம் நிராகரிக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மனிதர்கள் தான் அரவாணிகள் எனப் பொது வெளியில் அழைக்கப்படுகிற திருநங்கையர்கள்.

ஆணிலிருந்து பெண்ணாகவும், பெண்ணிலிருந்து ஆணாகவும் மாறுகிற மனிதர்களின் உடலியல், உளவியல், வாழ்வியல் குறித்துப் பொது வெளிச் சமூகம் முழுமையாய் அறிந்திருக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த புரிதலை நேர்படுத்த உதவும் வகையில், திருநங்கையர் குறித்த விரிவான ஆவணப் பதிவாய் எனது தொகுப்பில் வெளிவந்த நூல்
"அரவாணிகள்: உடலியல் - உளவியல் - வாழ்வியல்" ஆகும்.

இந்நூல் திருநங்கையர் பதிவுகள், திருநங்கையர் அல்லாதவர்களின் பதிவுகள், கூட்டுப்பதிகள் என விரிவான தரவுகளைக் கொண்டது.
தோழமை வெளியீடு இந்நூலை வெளியிட்டது.


/3 /
* ஒரு கோப்பைத் 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும் *
பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்.


சமூக விடுதலையின் அங்கமாகத் திகழும் பெண் பாலின விடுதலை குறித்த உரையாடல்கள் தீவிரம் பெற்று வருகின்றன. 

பெண்ணியம், பெண் உடல் அரசியல், பாலியல் சுதந்திரம், பெண் மொழி என்றெல்லாம் அதன் தளம் விரிந்து கிடக்கிறது. இந்நிலையில், பெண் விடுதலை குறித்த விரிவான உரையாடல்களை இலெனினும் கிளாரா செட்கினும் முன்னெடுத்தனர். 

பெண் விடுதலை பேசுவோரும் , மார்க்சியம் பேசுவோரும் கூட இந்த உரையாடல்கள் குறித்துப் பேசுவதில்லை.

பெண்ணைக் குறித்து ஆணும் , ஆணைக் குறித்துப் பெண்ணும் புரிந்து கொள்ளவும், பாலின மற்றும் சமூகச் சமத்துவம் காணவும் வெளிப்பட்ட அவ்வுரையாடல்களைத் தொகுத்து ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறேன். எனது தொகுப்பில் வெளிவந்த இந்நூலைத் தோழமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது


/4/
* ஈழத்தில் சாதியம்:
இருப்பும் தகர்ப்பும் *


ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஊடாகச் சாதியம் எப்படி மெல்ல மெல்லக் கரைகிறது? 
ஈழத்தில் அது சாத்தியப்பட்டதா? 

தேசிய இனத்தின் விடுதலைக்கும் சாதியத் தகர்வுக்கும் உள்ள முன்நிபந்தனைகள் என்ன? தமிழ் ஈழ மண்ணில் நிலவியிருந்த சாதியத்தின் வேர்கள் யாவை? தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சாதியத்தை எவ்வாறு பின்னுக்குத் தள்ளியது?என்பதையெல்லாம் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் விவரிக்கும் வகையில் ஈழத்தில் சாதியம் - இருப்பும் தகர்ப்பும் எனும் நூல் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. 

ஈழத்து ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தமிழ் ஈழ நிழல் அரசு நடந்து கொண்டிருந்த, தமிழின அழித்தொழிப்புப் போருக்கு முந்திய கால கட்டத்தில் வெளிவந்த இந்நூல், போராளிகளின் வாசிப்புக் கவனத்தையும் பெற்றிருந்தது. ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறது என அவதூறு பரப்பிக் கொண்டிருந்த ஒரு சூழலில், தமிழீழ விடுதலைப் போராட்டம் அங்கு நிலவிய சாதியத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தகர்த்தும் முன் நகர்ந்ததை வரலாற்றுச் சாட்சியமாய் இந்நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது. இனியும் அந்தச் சூழல் வருமென்ற நம்பிக்கை இருக்கிறது.
கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீடு இந்நூல்.


/5/
* மொழி இயங்கியல் *


மொழியின் தோற்றுவாய்ப் பின்புலங்களைக் குறித்து கருத்து முதல்வாதக் கற்பிதங்களும், கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டங்களும் நிரம்பி வழியும் எடுத்துரைப்புச் சூழலில், மொழியை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கும் வகையில் மொழி இயல்பையும் அதன் இயங்கு தளத்தையும், பெண் மொழி எனும் கருத்தாடல்கள் குறித்தும் விளக்கப்படுத்தும் முயற்சியாக வெளிவந்த நூலே மொழி இயங்கியல் எனும் நூலாகும். இதனைத் தோழமை வெளியீடு வெளிக்கொண்டு வந்தது.


/6/
*  தமிழில் பெண் மொழி மரபு *


தமிழ் இலக்கிய மரபில் பெண் புலவர்களின் எழுத்தும் தொனியும் ஆண் புலவர்களின் எழுத்துப் பாணியிலிருந்து தனித்த வகையிலான அறிவையும் பாடுகளையும் பதிவு செய்திருக்கும். 

பெண் புலவர்களின் இத்தகைய கவிதை மொழி பெண் நோக்கிலான பெண் மொழி எனும் தனித்த வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கும் மரபை வெளிக்கொணரும் நூலே தமிழில் பெண் மொழி மரபு என்பதாகும். தோழமை வெளியீடாக வந்திருக்கிறது.


/7/
* மார்க்சியமும்
மொழியியல் - தேசிய இனப்
பிரச்சினைகளும் *


தாய் மொழி என்பது கற்பனை என்கிறார்கள் சிலர். தாய் மொழி என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்றும் சொல்கிறார்கள் சிலர். அதே போல, தேசிய இனம் என்பதும் கற்பிதம் என்கிறார்கள் சிலர். 

மொழி என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகிற ஊடகம் மட்டும்தானா? மொழிக்கும் மனிதர்களுக்கும் என்ன உறவு? மொழிக்கும் சமூகத்திற்கும் என்ன உறவு? மனித அறிவும் அனுபவமும் புதைந்து கிடக்கும் கிடங்கு எது? தேசிய இனத்தின் அடையாளம் எது? சமூகக் கட்டுமானத்தில் மொழியின் பங்கு என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் மார்க்சியத்தில் விளக்கம் இருக்கிறதா ? 

ஆம், மொழி குறித்து மார்க்சியம் அறிவியல்பூர்வமான விளக்கத்தை மிக விரிவாக முன்வைத்துள்ளது. 
சமூகத்தின் இயங்குதலுக்கு மொழியின் இயங்கியல் குறித்து ஜே.வி.ஸ்டாலின் எழுதிய "மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்" எனும் நூல் முதன்மையானது.
மொழியைக் குறித்து விவரித்த ஸ்டாலின் எழுதிய மற்றொரு நூல் "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும் " என்பதாகும். 

மார்க்சியம் குறித்துப் பேசக்கூடியவர்களும் அறிவுலகத் தடத்தில் இயங்கக்கூடியவர்களும் திட்டமிட்டே கண்டு கொள்ளப்படாத அல்லது புறக்கணித்த நூல்கள் தான் மேற்குறித்த நூல்கள்.
ஸ்டாலின் எழுதிய மேற் சுட்டிய இரண்டு  நூல்களும் மீள் பதிப்பு பெறாமலே இருந்தன.

 மொழி குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையிலான விளக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய அந்நூல்களை விரிவான முன்னுரைக் குறிப்புகளுடன் தெளிவான உட் தலைப்புகளுடன் ஒரு சேரத் தொகுத்து 
"மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும்" எனும் தலைப்பிலான நூல் எனது தொகுப்பில் தோழமை  வெளியீடாய் வெளி வந்திருக்கிறது.


/8 /
* பெண் மொழி இயங்கியல் *


மொழியில் பெண் மொழி, ஆண் மொழி இருக்கிறதா? 
ஆம், இருக்கிறது. 
மொழியில் படிந்திருக்கும் ஆண் நோக்குக் கருத்தாடல்களையும், பெண் நோக்குக் கருத்தாடல்களையும் அடையாளம் காண்பது எப்படி? தமிழில் பெண் மொழி இயங்க முடியுமா? அதற்கான பதிவுகள் உண்டா? 
தமிழில் பெண் மொழியும் இருக்கிறது. 
பெண் மொழி குறித்த கோட்பாட்டுப் புரிதல்களோடு சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையிலும் பெண் மொழி இயங்கிக் கொண்டிருப்பதை மிக விரிவாகவும் ஆழமாகவும் விளக்கப்படுத்தும் வகையில், நான் எழுதிய " பெண் மொழி இயங்கியல் " எனும் நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூல் தோழமை வெளியீடாக வந்தது


/9/
* தமிழ் நிலமும்
புது வன்குடியாதிக்க
எதிர் மரபும் *


ஆங்கிலேய வன்குடியாதிக்க அரசமைப்பைக் காலனியம் என்றும், 1947க்குப் பின்பான இந்திய வல்லாதிக்கச் சமூகச் சூழலைப் பின் காலனியம் அல்லது புதுக்காலனியம் எனவும் பொதுவெளி மரபில் குறிப்பர்.

முன் காலனியமோ பின்காலனியமோ, காலனிய எதிர்ப்பைப் பெரும்பாலோர் எழுதவும் பேசவும் செய்கின்றனர். காலனிய எதிர்ப்பைப் பேசும் போதெல்லாம் காலனியம் எனும் ஆங்கிலச் சொல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தான் பேசுகிறார்கள்.

காலனியத்தை எதிர்க்க வேண்டுமானால், நம் அடையாளத்தையும் மரபையும் முன்னெடுக்க வேண்டும். முதலில் சொல்லிலிருந்தே தொடங்க வேண்டும். ஆம், சொல்லில் இருந்தே தொடங்க வேண்டும் என்று தான், நான் எழுதிய நூலுக்கு " தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" எனத் தலைப்பிட்டேன்.

தமிழ்ச் சமூகம் உலகமய - தனியார்மய - தாராளமயச் சமூகமாய் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் பார்ப்பனிய வல்லாதிக்கமும் தமிழ் நிலத்தின் மொழி, இனம், நிலப்பரப்பு, வளம், பண்பாடு, அதிகாரம் போன்ற யாவற்றையும் சுரண்டியும் ஒடுக்கியும் வருகின்றன.

தமிழ்ச் சமூகமும் நிலமும் புதியதான அடிமைக் கூடாரமாய் மாறிக் கொண்டு வருகின்றன. தமிழ் நிலத்தின் மீது புதியதான வன்குடியாதிக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதேவேளையில், அதிகாரத்திற்கு எதிரான ஓர் எதிர் மரபு தமிழ் மரபில் தொடர்ச்சியாக வெளிப்பட்டும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்ச் சமூகப் புலப்பாடுகளைக் குறித்தும் மீள் கருத்தாடல்களைக் குறித்தும் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளி வந்த நூல் தான் "தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" எனும் நூலாகும். தோழமை வெளியீடாக இந்நூல் வந்தது.

/10/
* முல்லைப்பாட்டு : 
உரைப் பனுவல் *


சங்க காலத்தியத் திணை மரபில் வெளிவந்திருந்த முல்லைப்பாட்டு எனும் நூலானது பெண் ஆண் இருத்தல் உளவியல் குறித்துப் பேசக்கூடியது. நப்பூதனார் இயற்றிய இந்நூலுக்குப் பலரும் உரையெழுதியிருந்தாலும் கூட , நவீன காலத்திய உரையாடல்களைப் பொருத்தியும் இணைத்தும் பார்க்கிற வகையில் உரை நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், முல்லைப்பாட்டுக்கு நவீனத்துவ நோக்கிலான உரையொன்றை முல்லைப்பாட்டு - உரைப் பனுவல் எனும் நூல் வழியாக வெளிக்கொணர்ந்துள்ளேன். மரபையும் நவீனத்தையும் இணைத்துப் பார்க்கும் முயற்சியாய் வெளி வந்த இந்நூலை மதுரை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.


/11/
* மொழியில் நிமிரும் வரலாறு *


தமிழ்ச் சமூகப் புலப்பாடுகள் குறித்த கருத்தாடல்களை முன்வைக்கும் முகமாய் 
நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளி வந்திருக்கிறது  
'மொழியில் நிமிரும் வரலாறு' எனும் நூல். 

தமிழ் மொழி, இலக்கியம், கலை, நிலம், பெண், வேளாண் மனிதர்கள், தொல்லியல் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  கருத்து = பட்டறை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது . 


/12/
* அவதூறுகளை முறியடிப்போம் : தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் *


தமிழ் ஈழத்திற்கான அரை நூற்றாண்டு காலப் போராட்டம் கோரமாய் ஒடுக்கப்பட்ட போது , தமிழ் ஈழக் கோரிக்கையே தவறானது , போராளிகளே தோல்விக்குக் காரணம், இனி ஈழ விடுதலையே சாத்தியமில்லை என்றெல்லாம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் , தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் , அவதூறுகளுக்குப் பின் மறைந்திருக்கும் வன்மம் குறித்தும் நேர்மையான உரையாடல்களை முன்வைக்கும் வகையில் எனது தொகுப்பில் வெளிவந்த நூல் தான் அவதூறுகளை முறியடிப்போம் என்கிற நூல்.

சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கோர முகங்களையும், அவற்றுக்கெல்லாம் துணை போன துரோக சக்திகளையும், இவைகளோடு கைகோர்த்து அவதூறுகளைப் பரப்பி வந்த அறிவு சீவிகளையும் எதிர்ப்புரட்சியாளர்களையும் அம்பலப்படுத்தியதோடு, அவதூறுகளுக்கான மறுப்புகளையும் விரிவாகப் பேசியிருக்கிறது இந்நூல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வுக்குப் பின்பாகப் பெருஞ்சோகமும் பேச முடியாப் பேரமைதியும் கையறு நிலையும் கவ்விக் கொண்டிருந்த அந்தச் சூழலில், தமிழ் ஈழத்தின் குரலை உரத்துப் பேசியது இந்நூல். இதனை மதுரை பாலை _ கருத்து = பட்டறை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


/13/
* ஏறு தழுவுதல்:
வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்*

மாடு தழுவல் பண்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் வெளிவந்த உரையாடல்கள் அனைத்தும், மாடு தழுவல் பண்பாட்டைப் புரிந்து கொண்டதில் போதாமைகள் இருந்ததையே காட்டின. உற்பத்திக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு, பண்பாட்டுக்கும் மாட்டுக்கும் உள்ள பிணைப்பு, மனித சமூக வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மாடுகளின் பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்தியில் மாடுகளின் பங்கேற்பு, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் இருக்கிற பண்பாட்டு உயிர்ப்புகள், நிலத்திற்கும் பண்பாட்டிற்குமான உறவு போன்றவற்றைக் குறித்து வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான எடுத்துரைப்புகள் மிகக் குறைந்தளவிலேயே வெளிவந்துள்ளன. இந்நிலையில்தான், வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாட்டு வடிவமாய்த் திகழும் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் பண்பாட்டின் வரலாற்றை முக நூல் மற்றும் வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இது தொடர்பான தேடலும் பகிர்வும் தொடர்ந்தன. அதுவே நெடுங்கட்டுரையாய் விரிந்து போனது. 

பசு மாடுகளோடும், உழவு மாடுகளோடும், மஞ்சு விரட்டுக் காளைகளோடும் தான் என் இளவயதுக் காலங்கள். 
மாடுகளே எனது முதல் தோழனும் தோழியுமாய் உறவாடிக் கிடந்தவை. நிலத்தின் மண் வாசம் மட்டுமல்ல; மாடுகளின் கவுச்சி வாசமும் நினைவுகளிலும் எழுத்துகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை.

மாடுகளோடு எனக்கிருந்த நட்பின் கைம்மாறு தான் நான் எழுதிய ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூல். இதனை ஆதி பதிப்பகம் வெளியிட்டது.


/14/
* நா.வானமாமலையின்
பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி *


பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத் தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தியுள்ளார். இந்நூல்
ஆதி பதிப்பத்தின் வெளியீடு.


/15/
* சொல் நிலம் *


தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், மகாராசனின்  கவிதைமொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது. ஏர் பதிப்பு நிலம் வெளியீடு இந்நூல்.


/16/
* பண்பாட்டு அழகியலும் அரசியலும் *



பட்ட பாடுகளும் படுகின்ற பாடுகளுமான வாழ்க்கைப் பாடுகளையே மனித சமூகம் பண்பாட்டு வெளியாய்க் கட்டமைத்திருக்கிறது. தமிழர் வாழ்வியலோடு பிணைந்திருக்கிற பண்பாட்டுக் கூறுகள் தனித்த அழகியலோடும் அறத்தோடும் அரசியலோடும் புலப்படக் கூடியவை. 

 ஒற்றைப் பண்பாடு அல்லது ஒருமுகப் பண்பாடு என்பதெல்லாம் அதிகாரத்தோடும் அடக்குமுறைகளோடும் தொடர்புடைய சாயலைக் கொண்டிருப்பவை.

தமிழ் நிலப் பெருவெளியில் காணலாகும் பண்பாடு என்பதெல்லாம் பன்மைப் பண்பாடுகளின் கூட்டுத் தொகுப்புதான்.

பண்பாட்டு வெளிகளை அறிதலும் புரிதலும்கூட, மக்கள் வாழ்வியலைக் கற்பதுதான். ஏனெனில், மக்கள்தான் பண்பாட்டை வாழ வைக்கிறார்கள்; தம் வாழ்வையே பண்பாடாய் வடிவமைத்திருக்கிறார்கள்.

 பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் சற்றுக் குறைவாய் நிலவிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தமிழரின் பண்பாட்டுத் தனித்துவங்களைக் குறித்த எடுத்துரைப்புகளை முன்வைத்திருக்கிறது இந்நூல்.
ஆதி பதிப்பகத்தின் வெளியீடாய் வந்துள்ளது இந்நூல்.


/17/
* தமிழர் 
எழுத்துப் பண்பாட்டு மரபு *


தமிழ் எழுத்துகள் வெறுமனே ஒலி வடிவங்களையும் வரி வடிவங்களையும் மட்டுமே கொண்ட மொழியாலான ஊடகம் மட்டுமல்ல; 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் வாழ்வையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் ஒவ்வொரு கீறலுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் சொல்லுக்குள்ளும் அடைகாக்கும் தாய்க் கோழிக்கு நிகரானது.



தமிழர்களின் பண்பாட்டு மரபுகள் தமிழ் எழுத்துகளின் வரிகளிலும் ஒலிகளிலும் புதைந்திருக்கும் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் பண்பாட்டு ஆவணமாக வெளிக்கொணரும் சிறு முயற்சியே தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்னும் நூலாக வெளிப்பட்டிருக்கிறது.



தமிழ் எழுத்தின் வரலாறு என்பது மொழியியல் வரலாறு மட்டுமல்ல. அது, மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பின்புலங்களோடும் உறவாடிக் கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும்போதுதான் தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான உரையாடல் திறப்புகளைக் கொண்டிருப்பதோடு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபானது தனித்துவமான அறத்தையும் அழகியலையும் அரசியலையும் உள்ளீடாகக் கொண்டிருப்பதை அடையாளப்படுத்துகிறது தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு எனும்

இந்நூல். இது ஆதி பதிப்பகத்தின் வெளியீடு.


/18/
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்.



இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம். 

ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப் பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. 

குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக - பண்பாட்டுப் பகையாக - இனப் பகையாக - சமயப் பகையாக நீடித்து வந்திருக்கிறது. 
அவ்வகையில், வேளாண் மக்களின் சமூக வகிபாகத்தையும் பண்பாட்டு வரலாற்றையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

நூல் தலைப்பு: 
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: 
உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்: மகாராசன்.

வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு: முதல் பதிப்பு, அக்டோபர் 2021.
*


/19/
அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்.


தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும் தமதாக்க முயன்றதோடு, அதிகாரப் பீடங்களைக் கைப்பற்றுவதற்கும் உரிய சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கின்றனர். ஆரியப் பிராமணர்களின் சூழ்ச்சியில் தமிழரின் அதிகாரப் பீடங்கள் பலியாகிப்போனது அந்தந்தக் காலங்களில் நிகழ்ந்திருந்தாலும், ஆரியப் பிராமணர்கள் கட்டமைத்து வந்த பிராமணியக் கருத்தாக்கத்தை எதிர்ப்பதும் மறுப்பதுமான கருத்தியல் போர் மரபைத் தமிழர்கள் தமது அறிவுச் செயல்பாடுகளின் வழியே வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றனர். 

‘பிராமணிய எதிர்ப்பு’ எனவும், ‘ஆரிய எதிர்ப்பு’ எனவுமான ஓர் ‘எதிர்மரபு’ தமிழரின் அறிவு மரபிலும் அறிவுச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆரியப் பிராமணிய மரபுக்கெதிரான குரலும் அதனையொட்டிய செயல்பாடுகளும் தமிழர் வரலாற்றில் நடந்தேறியிருக்கின்றன. இத்தகைய ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் வரலாற்று நீட்சியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் குரல் தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், அரசியல் வடிவமும் பெறத்தொடங்கியிருக்கிறது. 

அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழர் அடையாள அரசியலானது, அக்காலத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட மற்ற அடையாள அரசியல்களிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முன்பான காலகட்டத்தில் - பல்வேறு அடையாள அரசியல்கள் முன்னெடுக்கப்பட்ட அதே அரசியல் சமூகச் சூழலில்தான் அயோத்திதாசரும் தமது அடையாள அரசியலை முன்வைத்திருக்கிறார். 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகிற அடையாள அரசியல்களுள், ‘பிராமண மேலாதிக்க எதிர்ப்பு’ அரசியலும் ஒன்றாகும். அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்திருக்கிறது. அவருக்குப் பிந்தைய திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலிலிருந்து முற்றிலும் முரண்பட்டதான - வேறுபட்டதான அடையாள அரசியலையே அயோத்திதாசர் முன்வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிவுச் செயல்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது. 

பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் உருவான அயோத்திதாசரின் அடையாள அரசியலையும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் நிலைகொண்டிருந்த அவற்றின் வகிபாகத்தையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போதுதான் இருவேறு அடையாள அரசியலின் முரண்கள் - வேறுபாடுகள் இன்னதென்று தெளிவாகும்.
*
அயோத்திதாசரின் 
தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு, 
முதல் பதிப்பு: டிசம்பர் 2021.





திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் சிலை உடைப்பும் அதன் பின்னாலான சமூகப் பின்புலமும் : மகாராசன்

அறிவர் அம்பேத்கரை அவமதிப்பதற்காக அந்தச் சிலையை உடைத்து நொறுக்கவில்லை என்பது அந்தச் சாதிவெறி மன நோயாளிகளுக்கும் தெரியும். அந்தச் சாதிய வெறியர்கள் வேறொன்றை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

 கடந்த காலத்திலும் இப்போதும்கூட அண்ணல் அம்பேத்கரை ஓர் அடையாளமாகவும் குறியீடாகவும் வழிகாட்டியாகவும் முன்னெடுத்துக் கொண்டிருப்பது தாழ்த்தப்பட்டோர் எனப் பொதுச் சமூகத்தால் அடையாளப்படுத்தப்படும் பட்டியல் சாதியினர்தான்.

அம்பேத்கர் பட்டியல் சாதிப் பிரிவில் பிறந்தவர் என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, பட்டியல் சாதியினர் அம்பேத்கரை தமது அடையாளமாகக் கொண்டிருக்கவில்லை. கல்வி, வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகப் பெருந்திரளினருக்குக் கல்வி கற்கவும் வேலை வாய்ப்புகளில் பங்கேற்கவுமான இடஒதுக்கீடு அம்பேத்கரால் கிடைக்கப்பெற்றது என்பதை பட்டியல் சமூகப் பிரிவினர் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருப்பதும் போற்றுவதும் இயல்பான ஒன்று.

அதே வேளையில், அம்பேத்கரின் நோக்கமோ அல்லது அரசியல் சட்ட வரைவுகள் உருவாக்கப் பணிகளோ பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகப் பிரிவினரை மட்டுமே மய்யமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகத்தின் பெரும் பிரிவினராக இருந்து கொண்டிருக்கும் உயர்த்திக் கொண்ட சாதியினர் என உள்ளூரப் பெருமிதத்தில் இருந்து கொண்டிருக்கும் இதரப் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமயப் பிரிவினர், பெண்கள் எனச் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டுதான் - அவர்களது சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில்தான் அரசியல் சட்ட வரைவுகள் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்டன.

1950களுக்குப் பிறகு கல்வி வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மைச் சமூகப் பிரிவினர் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனில், அது அம்பேத்கரால் கிடைக்கப்பெற்ற சமூக நீதியால்தான். குறிப்பாக, அம்பேத்கர் வடிவமைத்த சட்ட வரைவுகளால் அதிகமும் பயனடைந்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர் தான்.

இன்றைக்கும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலமாகவே பி.சி., எம்.பி.சி பிரிவினர் கல்வி வேலைவாய்ப்புகளில் அதிகமான பயன்களை அடைந்திருக்கின்றனர்.
உண்மையாகவே, பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினர் எனப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர்தான் அம்பேத்கரைக் கொண்டாடி இருக்க வேண்டும்.

ஆனால், மேட்டிமைச் சாதியினர் எனத் தாம் கருதிக் கொண்டிருக்கிற உயர்த்திக் கொண்ட சாதியினர், அம்பேத்கார் பிறந்த சாதிப் பின்புலம் என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் தமது சாதிக்காரர் அல்லது சாதிப் பிரிவினர் அல்ல; அதனால் அவர் தமக்கானவர் அல்ல என்கிற சாதியக் கண்ணோட்டத்திலேயே அம்பேத்கரை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அம்பேத்கர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானவர் அல்லர் என்கிற பொதுப்புத்தியை - சாதியக் கண்ணோட்டத்தை - குறுகிய மனப்பான்மையை - சாதிய வன்மத்தை அந்தச் சமூகப் பிரிவின் பெருவாரியான மக்கள் அனைவருமே கொண்டிருந்தவர்களாகவோ அல்லது இப்போதும் கொண்டிருப்பவர்களாகவோ பொத்தாம் பொதுவாக அந்த மக்கள் அனைவரின் மீதும் குற்றம் சுமத்திவிட முடியாது;கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் அம்பேத்கரைக் குறித்த சாதியப் பிம்பத்தைக் கொண்டு சென்றதில் பெருவாரியான அந்த மக்களைக் காட்டிலும், அந்த மக்களை முன்வைத்து அரசியல் செய்திருக்கிற, இப்போதும் செய்து கொண்டிருக்கிற வாக்கு அரசியல் கட்சிகளான காங்கிரசு, திராவிட மற்றும் இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் ஒட்டுண்ணிக் கட்சிகள், அவற்றுக்கெல்லாம் ஆதரவளிக்கும் இயக்கங்கள், வர்க்க அரசியல் பேசுகிற - புரட்சிகர அரசியல் பேசுகிற இந்திய மற்றும் தமிழ்த் தேசிய அளவிலான புரட்சிகரக் கட்சிகள், தமிழ் அடையாள அரசியலை முன்னெடுக்கிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் பெரும் பங்குண்டு.

அம்பேத்கர், பட்டியல் சமூகப் பிரிவினில் பிறந்த ஒருவர் என்றாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி வேலைவாய்ப்புக்குமான இடஒதுக்கீட்டைப் பெற்றுத்
தந்ததற்கும் அவரே காரணம் என்பதால் அவரை அந்தச் சமூகப் பிரிவினர் தூக்கி வைத்துக் கொண்டாடும்படியான மனநிலைக்கு மேற்குறித்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் யாவும் முனைந்திருக்க வேண்டும். மாறாக, அம்பேத்கர் பட்டியல் சமூகப் பிரிவினருக்கானவர் என்கிற அரசியல் பிம்பத்தையே பிற்படுத்தப்பட்ட மக்களிடமும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் விதைத்திருக்கின்றன. அதோடு சேர்த்து, அம்பேத்கர் பட்டியல் சமூகத்திற்காகவே பாத்தியப்பட்டவர் என்பதைப் பட்டியல் சமூகத்தவர் மட்டுமே முன்னெடுக்கும்படியான அரசியல் சூழலையும் மேற்குறித்த கட்சிகளும் இயக்கங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன.

அம்பேத்கர், அனைவருக்குமான தலைவர் என்கிற புரிதலுக்குப் பதிலாக, அம்பேத்கர் பட்டியல் சமூகத்திற்கானவர் என்கிற சாதிய மனநோய் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினரிடம் அண்மைக்காலமாகப் பரவி வருகிற சமூக நோயாய் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமூக நோயைத் தீர்ப்பதிலும், அம்பேத்கர் நம் அனைவருக்குமானவராகக் கட்டமைப்பதிலும் பட்டியல் சமூகப் பிரிவு மக்கள் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைக் காட்டிலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் அரசியல் வேலை செய்கிற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கே பெரும் பங்குண்டு.

உண்மையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை முன்வைத்து அல்லது அவர்களிடம் வேலை செய்கிற கட்சிகளும் இயக்கங்களும் உண்மையுடனும் நேர்மையுடனும் சனநாயகப் பண்புடனும் சமூக அக்கறையுடனும் இருக்கின்றன எனில், அவை யாவும் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க முன்வர வேண்டும். அந்த மக்களிடம் அம்பேத்கரைக் குறித்து நேர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும். அம்பேத்கரை அந்தச் சமூகப் பிரிவினர் புரிந்து கொண்டாலே - ஏற்றுக் கொண்டாலே இதரப் பட்டியல் சமூகப் பிரிவு மக்களையும் சமூக சமத்துவத்தோடு அணுகவும் உறவாடவுமான நிலைமைகள் ஏற்படும்.

ஆகவே, திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் யாவும் அம்பேத்கரைப் பட்டியல் பிரிவு மக்களிடம் கொண்டு செல்வதையும் தாண்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் முதலில் கொண்டு செல்ல வேண்டியது உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்தே, சாதி வெறித் தாக்குதல்கள், இது போன்ற சிலை உடைப்புகளைச் செய்யும் உயர்த்திக் கொண்ட சாதியினரின் சாதிய மேலாதிக்கச் செயல்பாடுகளைத் துணிவுடன் கண்டிக்கவும் எதிர்க்கவும் முன்வர வேண்டும். பெயரளவுக்கான கண்துடைப்பு அறிக்கையாக இருந்து விடக் கூடாது. பொதுவாகவே, ஒரு சில பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் மீது காழ்ப்புணர்வோடு அணுகுவதும், வேறு சில பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினரைக் கண்டிக்கவும் எதிர்க்கத் தயங்குவதுமான போக்கும் மேற்குறித்த கட்சிகளிடமும் இயக்கங்களிடமும் இன்னும் இருக்கின்ற. சாதிய மேலாதிக்கமும் சாதியத் தாக்குதல்களும் சிலை உடைப்புகளும் எந்தச் சாதிப் பின்புலத்தில் நடந்தேறினாலும் அதைக் கண்டிக்கவும் எதிர்க்கவும் முன்வர வேண்டும். இது தாமதமானால், இன்னும் பல அம்பேத்கர் சிலைகள் உடைபடும்; அம்பேத்கரை அடையாளமாகக் கொண்டிருக்கும் பட்டியல் சமூகப் பிரிவினர் பலரும் கொல்லப்படுவார்கள்.

ஏர் மகாராசன்
26.08. 2019

ஓவியம்:
தோழர் இரவி பேலட்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

செம்பச்சை நூலகம்: அறிவிப்பும் வேண்டுகோளும்.

எம் வாழ்வின் பெருங்கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறோம். ஓர் இல்லறத்தின் ஒரு பாதியாய் நிமிர்வகத்தையும், இன்னொரு பாதியாய் செம்பச்சை நூலகத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

கால் நூற்றாண்டாய் எம் சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தும் நூலகத்தில் இருக்கின்றன. இன்னும் புதிய, இதற்கும் முந்தியப் பழைய நூல்களையெல்லாம் நூலகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற பெருந்தாகம் இருக்கின்றது.

நாங்கள் உருவாக்கி இருக்கும் இந்த நூலகம் எமது பயன்பாட்டுக்கு மட்டுமல்ல. அறிவுத் தாகமும் வாசிப்புப் பழக்கமும் உள்ள யாவரும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, ஆய்வு மாணவர்கள், படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், போட்டித் தேர்வர்கள் போன்றோர் காரி(சனி)க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

குளிர்மை அரங்கு, கணினி, இணையம், அச்சுப்பொறி, தங்குவதற்கான விருந்தினர் அறை உள்ளிட்ட வசதிகள் எழுத்துச் செயல்பாட்டினருக்கு உதவும். வயது மூப்பு கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் படைப்பாளிகள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கியிருந்து எழுத்துப் பணிகளை மேற்கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 50 பேர் வரை அமரக்கூடிய வகையில் சிற்றரங்கமாகவும் செம்பச்சை நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர், தமிழ் நிலம், தமிழ்க் கலை இலக்கியம், பண்பாடு சார்ந்த செயல்பாடுகளை அக்கறையோடு மேற்கொள்ளும் அமைப்புகளின் கருத்தரங்கம் மற்றும் கூடுகை நிகழ்வுகளை நடத்திக் கொள்ளவும் நூலக அரங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆய்வாளர்கள், படைப்பாளிகள், இதழாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் நூல் வாசிப்பாளர்கள் செம்பச்சை நூலகத்திற்குப் புதிய நூல்களையோ அல்லது பழைய நூல்களையோ கொடையாக வழங்கினால் நூலகம் இன்னும் பல வகையில் பயன்படக்கூடும். அன்பர்களிடமிருந்து நூல்கொடையை எதிர்பார்த்து நிற்கிறது செம்பச்சை நூலகம்.

முன்னோர்களின் சேகரிப்பில் உள்ள பழைய புத்தகங்கள் பராமரிக்க இயலாமலும் பயன்பாடு இன்றியும் தங்கள் வசம் இருப்பின் நூலகத்திற்குக் கொடையளிக்கலாம். அஞ்சலிலோ தூதஞ்சலிலோ அனுப்பலாம். நிறைய புத்தகங்களாக இருப்பின் நேரிலே வந்து பெற்றுக் கொள்ளவும் காத்திருக்கிறோம்.

நம் சேகரிப்பில் உருவாகும் இந்த நூலகம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும்.

எழுத்துச் செயல்பாட்டிற்குத் தம் கையளவு கைம்மாறைச் செய்திடக் காத்திருக்கிறது செம்பச்சை நூலகம்.

தொடர்புக்கும்
நூல் அனுப்புவதற்குமான
முகவரி :

முனைவர் மகாராசன்,
செம்பச்சை நூலகம்,
208, நிமிர்வகம்,
வைகை அணை முதன்மைச் சாலை, காந்தி நகர்,
செயமங்கலம் - 625 603,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்.
பேச 9443676082.
மின்னஞ்சல் :
maharasan1978@gmail.com

முந்நிறத்துக் கயிறு : மகாராசன்

வயிற்றுக்குச் சோறிடும்
உழவரையெல்லாம் சாகடித்து,
கையளவு காணியவும்
பறித்துக் கொண்டு,
கம்பத்தில் பறக்கின்ற கொடியில்
மூவண்ணங்களில்
எக்காளமிட்டுச் சிரிக்கிறது
இந்தியம்.

பழுப்பேறிய உழைப்பும்
வெள்ளந்தி வாழ்க்கையும்
பச்சையம் போர்த்திய நிலமும்
நைந்து கிடக்கிறது எங்கும்.

கொடிக் கயிறுகளை
ஏற்றும் கைகளே
தூக்குக் கயிறுகளையும்
தந்து கொண்டிருக்கின்றன
இப்போது.

நாடு நலம் பெறட்டும்.

ஏர் மகாராசன்

ஓவியம்:
இரவி பேலட்


வாழ்வெச்சம் : மகாராசன்

இன்னும் மிச்சமிருக்கும்
புழுதிக் காடுகளின்
பனையோலைத்
தூர் இடுக்குகளில்
எச்சங்களை விதைத்துச் சென்ற
ஒரு பறவையின் நம்பிக்கை
ஆலமாய் இறுகப் பற்றி வளர்ந்திருக்கிறது.

குஞ்சுகளோடு தூரியாட
உயிர் நீட்டித்
தொங்கிக் கிடக்கின்றன விழுதுகள்.

வெளிறிய வானத்தின்
திசைகள் தேடிய பறவைகள்
கூடு திரும்பும் நாட்களில்
மனிதர்கள் யாருமேயில்லை.

நாதியற்றுக் கிடந்தாள்
நிலத்தாள் மட்டும்.

ஏர் மகாராசன்.
19.08.2019.

நன்றி:
ஒளிப்படம்
தோழர் டி.அருள் எழிலன்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதையக் குரல் ஆரியத்திற்குத் துணை செய்யும் குரலே: மகாராசன்


திருக்குறளை ஆரியத்தின் குரலாகச் சுட்டும் காட்டாறு பதிவு பின்வருமாறு:

//..தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள்.

1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார். இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள்.

...வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

...தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் - இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன்.
- தோழர் பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர் .

குறளைத் தூக்கி எறிய வேண்டியது தான்!
...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். - தோழர் பெரியார் - விடுதலை, 15.06.1968

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!
...நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனைவிடக் கொஞ்சம் பரவாயில்லை என்பதுதானே யொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதி தாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதி தாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். - தோழர் பெரியார் - விடுதலை - 06.08.1968

...நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்ன கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக் கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தையது குறள். அதை அப்படியே இப்பவும் ஏத்துக்கணும்னா?
- தோழர் பெரியார், கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973 //.

இப்பதிவைக் குறித்த எம் கண்ணோட்டம் வருமாறு:

ஆரிய மரபுகள் அரசியல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், குறளைக் குறித்த பெரியாரியத்தின் குரலாக இப்போது உயர்த்திப் பிடிப்பதன் நோக்கம் என்ன? இந்தக் குரல் யாருக்குச் சேவகம் செய்யப் போகிறது?

தமிழரின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மரபையும் ஆரியத்திற்கு எதிராகக் கட்டமைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ் மரபுகளில் காணலாகும் ஆரியத்திற்கு எதிரான குரலையும் கலகத் தன்மைகளையும் முன்னெடுப்பதை விடுத்துவிட்டு, ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழர் மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கமே தள்ளி விடுவது என்பது, தமிழர் மரபுகளைத் தன்வயப்படுத்தத் துடித்தும் காத்தும் கொண்டிருக்கிற ஆரியத்திற்கு வலு சேர்க்கும் நோக்கத்தையே உள்ளீடாகக் கொண்டிருப்பதாகும்.

தமிழர் வரலாறு, பண்பாடு, அறம், அரசியல், அறிவு, கலை, இலக்கிய மரபுகளைக் குறித்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே பகுத்தறிவு ஆய்வு முறையியல் ஆகும்.

ஆரியத்திற்கான எதிர்மரபையே குறள் கட்டமைத்திருக்கிறது. திருக்குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளி விடுகிற சூழ்ச்சி இது. வைதீகத்திற்கு எதிராக இருந்த நாட்டுப்புற மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கம் தள்ளி விட்டது போல, குறளையும் ஆரியம் தன்வயப்படுத்த உதவும் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இது.

குறளை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. விமர்சனத்தோடு நம் வசப்படுத்தி வைக்க வேண்டியது தமிழர் கடமை.

பெரியாருமே 'நான் சொன்னதையே இன்னும் 50 வருடம் கழித்தும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் இன்னும் முன்னேறவில்லை என்று பொருள். எனது கருத்தையே தூக்கிச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். தேவையானதை ஏற்று தேவையற்றதை ஒதுக்கிவிட்டுச் செல்லுங்கள்' என்றார்.

"நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
- "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - "
என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்."
"ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." பெரியார் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளைப் பெரியாரியவாதிகளாகக் கருதுபவர்கள் கவனிக்க மறந்து போவது மட்டுமல்ல; கவனிக்கவும் மறுக்கிறார்கள்.

குறளைக் குறித்துப் பெரியார் அன்று சொன்னதையே இப்போதும் சொல்ல வேண்டியதில்லை. அவரது கருத்துமேகூட மீள் வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. வள்ளுவமும் விதிவிலக்கல்ல.

குறளை விமர்சியுங்கள். பெரியாரும் விமர்சித்திருக்கிறார். விமர்சனம் எனும் பேரில் குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளுவதுதான் ஆரியத்திற்கு மறைமுகமாக உதவும் போக்காகப் படுகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் தமிழ் மரபுகளை அணுகுங்கள் என்பதே எம் வேண்டுகோள். கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வை முன்வைப்பது பகுத்தறிவு அல்ல. நட்பு முரண்களைப் பகை முரணாகக் காட்டுவதும் அறமும் அல்ல.

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதைய குரல் அறமற்றது மட்டுமல்ல; இப்போதைய அவசியமும் அற்றது.