திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.

இத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.

கடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.

ஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும்  வெளிவந்திருக்கிறது 'பெருங்கடல் வேட்டத்து' எனும் ஆவணப்படம்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்)  இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.

கடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

இந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.

மீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.

கடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

ஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.

இன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.

அதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளாகும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.   மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.

இழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.

ஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்

மீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள்  அருள் எழிலன், ஜெயக்கொடி மற்றும் குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.

பெருங்கடல் வேட்டத்து:
கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.

தேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.

ஏர் மகாராசன்

புதன், 22 ஆகஸ்ட், 2018

எம்மூர் நிலத்தாள்

மழை நீர்
கோதிக் கசிந்திருந்த
ஈரப்பால் சப்பி,
வேர்க்கால் ஊன்றி
முளைகட்டித் தவழ்ந்து
முகம் காட்டிய
பசுந்தளிர்களுக்கெல்லாம்
தாயாய் இருந்தவள்,
கருப்பம்
கலைந்து கிடக்கிறாள்
வெஞ்சூட்டில்.

தூமையாய்க் கசிந்த
அரத்தப் பிசுபிசுப்பை
முகத்தில் பூசியபடி
மழைக் கஞ்சி
ஏங்கித் தவிக்கிறாள்
நிலத்தாள்.

ஆத்தாளின் வலியை
இப்போது
நிலத்தாளும்
சுமந்து கிடக்கிறாள்.


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்தது. கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்.

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:




புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.

அவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை - உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.

வைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும். 

வைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெளிப்பதும் கூட ஒரு சடங்குதான்.

நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.

இறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.

பால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.

நாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை  எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .

ஆனால்,திராவிடர்க்கும்,  பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம்.  அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.

முதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை,    இளநீர் தேங்காய் வாழைப்பழம்  வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.இரண்டாம் நாள் , தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி  அல்லது வெல்லமும்  சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச்  செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும்.இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.

முளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில்  நடக்கும்  இறப்புச் சடங்கு ஆன்மா,  சொர்க்கம் தொடர்புடையதில்லை.  இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும்  மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும். 

கவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.

ஏர் மகாராசன்