ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஏறு தழுவுதல்: தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் :- இரா.முத்துநாகு.

ஏறு தழுவுதல், மாடுதழுவுதல், மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு திராவிட மரபில் உள்ள தமிழ் குடிகளிடம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதற்குத் தமிழ் இலக்கியங்களில் பல நூறு சான்றுகள் இருந்தாலும், மஞ்சுவிரட்டைப் பன்னாட்டு முதலாளித்துவ முகம் கொண்ட பானுமதி என்ற நீதிபதி தடை போட்ட பின்பே இது குறித்துத் தமிழ் அறிஞர்களிடம் தனிக்கவனம் போனது. அதுவரை மஞ்சுவிரட்டு என்ற வேளாண்குடிகளின் தொன்மம் சிறுகதைகளில், புதினங்களில், பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாகவே இருந்தவை தனித்த நூலுக்கான அடித்தளத்தை இட்டது.

(மஞ்சுவிரட்டு வழக்கில் ப்பிரேம் ஆப் பேஸ் இல்லை என்று தெரிந்தும் வழக்கை நீதி மன்றம் ஏற்றதிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் இயங்கும் நீதி மன்றங்களுக்குப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் தாக்கம் நீதிமன்ற முதலாளிகளாகவே நீதிபதிகள் மூளைக்குள் முளைத்திருப்பதை பாண்பாட்டு அசைவுத் தளத்தில் இயங்குப்வர்களுக்கு புரிந்தது.)

மஞ்சுவிரட்டு தொடர்பாக வந்த தனிநூல்களில் ஏறுதழுவுதல் என்ற தலைப்பில் வந்த முனைவர் ஏர் மகாராசனின் நூல் சிறந்த நூலுக்கான இடத்தைப் பிடிக்கிறது. (ஏர் மகாராசன், வேர்ச் சொல்லகராதி கண்ட பெரும் தமிழ்ப் புலமான அறிஞர் அருளியின் வார்ப்பு).

மானுட சமூகம் உணவுத் தேடுதலுக்காக வனத்திற்குள் செல்லும் போது விலங்குகளை எளிதில் வேட்டையாட கூட்டு தேவைப்படுகிறது. இங்கிருந்து தான் கூட்டு வாழ்க்கை துவங்குகிறது. இது தான் மனிதனை வேளாண்மை உற்பத்திச் சமூகமாக மாற்றியது . குறிஞ்சி நிலத்தின் விலங்கான மாடு எப்படி மருத, முல்லை நிலத்திற்குரியதானது எனத் துவங்கும் ஆய்வு, பல நூறு தரவுகளை அடுக்கடுக்காகக் கொடுத்துப் படிப்பவர்கள் மூளை வேறு சிந்தனைக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

மருத நிலத்தில் மாடுகள் வேளாண்மைக்குப் பயன்பட்டாலும், கடந்த தலைமுறைவரை குறிஞ்சி நில மக்கள் மாடுகளை வளர்த்து அதை மருத,குறிஞ்சி நில மக்களுக்கு வழங்கினார்கள். தமிழ்ச் சமூகத்தில் திணைகளாகப் பிரிந்து இருந்தாலும், எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புடைதாக இருந்தது? முதல் தொடர்பே மாடுதான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளை நெருக்கமாகக் கொடுத்துப் பிரமிக்க வைத்துள்ளார் நூலாசிரியர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வந்த பள்ளு இலக்கியத்தில் மாடுகளின் வகைகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
மஞ்சுவிரட்டு மனிதனை விட வலிய விலங்கான மாட்டை அடக்குவது அல்லது கேளிக்கை அல்ல. மானுட சமூகத்தின் தனி மனிதங்கள் குழுக்கள் சேர்த்து வைத்துள்ள நினைவுகளைத் தனது சந்ததிக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுகளே விழாக்கள். அந்த விழாக்களில் மய்யமானது மஞ்சுவிரட்டு.இதன் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என அறிஞர்களின் வாதத்தை எடுத்து வைத்து நூலினைச் செழுமைப்படுத்தியுள்ளார்.

 மருத, முல்லை நிலமே அரசர்களுக்கான கருவூல கேந்திரமாக இருந்தது. இந்தக் கேந்திரத்தின் நிலமும் மாடுகள் மட்டுமே உற்பத்தி செய்திடும் எந்திரம். இந்த எந்திரத்தை எப்படியெல்லாம் ஆண்ட அரசுகள் வேளாண்மை செய்தால் பாவம் என்று தங்களது மநு நூலினைத் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களுக்கும், வேளாண்மை உற்பத்தியை வியாபாரம் செய்திடும் வணிகர்களும் உழு குடி மக்களிடமிருந்து பிடிங்கிக் கொடுத்தனர். வேளாண்மைக் குடிகள் மீது ஏவப்பட்ட வன்முறையால் இவர்கள் வெகுண்டு எழாமல் இருக்க, மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் திசைதிருப்பவே அரசர்கள் பெருங்கோயில்களை உருவாக்கினார்கள். அகரம் மருத நிலத்தின் ஊரின் பெயர். இது எப்படி பார்ப்பனர்களின் அக்ராகாரமானது என்ற நுண்ணிய பார்வையைச் சான்றுகளோடு நிறுவியுள்ளார்.   
         
  தமிழகத்தில் துல்லிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் மஞ்சுவிரட்டு நடத்திய தமிழ்க் குடிகளின் நிலம் எப்படிப் பறிபோனது என்பதைப் போகிற போக்கில் சுட்டிக்காட்டும் இந்த நூலில், நாயக்கர் ஆட்சியில் வந்து குடியேறிய வடுக கன்னடம் பேசும் குலத்தினரிடம் மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு,  சலகெருது என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. இவைகளுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதேபோல் தமிழ் நிலத்தில் விலங்குகள் குறிப்புப் பண்டுவம் (மருத்துவம்) அறிய 'வாகடம்' நூல் இருப்பது போல், தெலுங்கு மக்களிடம் காடமராசா, ஆவுலராசா கதைகள் வாகட நூலுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நூலைக் காமராசர் பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அது குறித்த குறிப்புகள் கொடுத்திருக்கலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உழுகுடிகள் கையிலிருந்த மஞ்சுவிரட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதைச் சான்று உரைக்கும் நூல்.

 மஞ்சுவிரட்டுக்கு நீதிமன்றம் தடையைத் தற்காலியமாக நீக்கினாலும் மேலாதிக்கத்தை அரசு எந்திரம் மூலம் ஆழமாகச் செழுத்தி வருவதைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

''எதிர்க் குரலும் கலகமும் புரட்சியும் உழுகுடிகளிலிருந்தே துவங்கும். அதனால் தான் தமிழகத்தை ஆண்ட தமிழ அரசர்கள் நிலங்களைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி உழு குடிகளை அடிப்படை நம்பிக்கையில் வீழ்த்தியது.

இந்த உழுகுடிகள் மஞ்சுவிரட்டில் மாட்டுடன் நேருக்கு நேராக மோதும் திறன் படைத்தவர்கள். தமது உயிரை மாய்த்துகொள்ள தமக்குத்தானே துறவறம் கொண்டவர்கள். இவர்கள் அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டால்,காவல் துறையும் ராணுவத்தையும் தமது துறவறத்தால் உயிர்த்தியாகம் செய்து புரட்சியைக் கொண்டு செழுத்துவார்கள். இதை ஆழமாகப் புரிந்து வைத்துள்ள முதலாளிகள் நீதிமன்றங்கள் மூலமாக மஞ்சுவிரட்டுக்குத் தடை, நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். அதிகாரத்திற்கு ஆகம விதிகள் அடங்கி, பெருமாள் கோயிலும் சிவனும், சிவ ஆலயத்தில் பெருமாளும் இருப்பார். ஆனால் உழுகுடிகளை அதிகாரம் அடக்கியே வைத்திட முடியாது? என மானுடவியலர் ஆய்வில் சொல்லி வருவதை அறுபது பக்கங்களே கொண்ட இச்சிறுநூல், ஏங்கல்ஸின் பொதுவுடமைப் பண்பாட்டு  நூலான குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல் அளவுக்குத் தரவுகளாகக் குவித்து வைத்துள்ளது. தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் என்று அறுதியிட்டு நான் சொல்லுகிறேன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குடியானச்சி காவியம்.



எப்போதாவது வந்து போகும் அயலான் எனத் தெரிந்திருந்த
ஊர் நாய்கள்
நாலைந்து கூடிக்கொண்டு
ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்ததில்,
நெடுந்தூக்கத்திலிருந்த இரவு குலைந்து போயிருந்தது.

ஊரடங்கிய யாமத்தில் வழிந்தோடிய
குடுகுடுப்பையின் மிடுக்கொலி,
வெள்ளாமை நினைப்பில்
தூங்கிப் போனவளின்
காதுகளில் நுழைந்து
உசுப்பி விட்டுக் கரைந்து போனது.

சீ நாயே தூரப் போவென
அதட்டிக் கொண்டே
வந்தவனை விட்டு
நாய்களும் விலகிப் போவதாய்த் தெரியவில்லை.
தெரு முகனைக்கு வந்துவிட்ட
யாமத்துக் குறிகாரன்
குடுகுடுப்பையை ஊரதிர
உலுக்கி உலுக்கி அடித்தான்.

திறந்தே கிடந்த கதவை
மெதுவாய்ச் சாத்தி வைத்து
கதவிடுக்கின் ஓரத்தில்
தலை சாய்த்துக் காது கொடுத்து
குறிகாரன் மொழி கேட்க
செவக்கி உட்கார்ந்திருந்தாள் குடியானச்சி.

காடு வெளஞ்சிருக்கு;
வீடு நெறஞ்சிருக்கு.
மக்களப் பெத்த மகராசிக்கு
மனசுல கொறயில்ல.
சாமி காக்காட்டியும்
பூமி காப்பாத்தும்.
செத்துப் போன பெண்புள்ள
சாமியாட்டம் துணையிருக்கா;
மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்
ஒன்னோட மருவாதய
விட்டுத் தர மாட்ட.
ஆக்கித்தான் போடுவ
அடுத்த வசுறு பசியாத்த.
ஒன்னோட கை நனைக்க
ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.
ஒக்காந்து சோறு திங்க
ஓம்புள்ள அழைச்சாலும்
ஒரு போதும் போக மாட்ட.

காடு கழனி வெள்ளாமைன்னு
ஆடு மாடு கோழியின்னு
மனுச மக்க புள்ளைகன்னு
ஒன்னோட சீவனெல்லாம்
ஒழச்சுத்தான் வாழுமம்மா.
மழ தண்ணி கொறஞ்சாலும்
மனச மட்டும் விட்றாத;
நெலத்த சும்மா போட்றாத.

சொன்னதுல்ல பொய்யிருந்தா
நாளைக்கி வருகையில
நாலு சொல்லு நீ கேளு.
குறியளந்து சொன்னதெல்லாம்
மனச நெறச்சிருந்தா
மறக்காம நெல்லளந்து போடுதாயி.

வாசல் தெளிக்கும்
சாணித் தண்ணியைப் போல,
வாசலெங்கும்
ஈரம் கோதிக் கிடந்தன
குடுகுடுப்பைக்காரனின்
யாமத்துச் சொற்கள்.

குடியானச்சியின் மனக்குறியை அச்சு பிசகாமல் இந்த முறையும்
அப்படியே
சொல்லிப் போனான்.

மறுநாள் காலையில்
வீடு வீடாய்க்
குறிக்கூலி வாங்கியாந்தவன்
தோள் பை கனக்காது
கிடந்ததைப் பார்த்துப் பதைபதைத்தவள்,
மரக்கால் நிறைய நிறைய
நெல்லளந்து போட்டாள்.

சுருக்குப் பைக்குள்ளிருந்து
எருச் சாம்பல் துண்ணூறை
வெறும் மரக்காலில்
கை நிறைய அள்ளிப் போட்டவன்,
ஒனக்கு மட்டும்
எப்புடி தாயி இந்த மனசு என்று
கண்களில் நீர் கசியக்
கேட்டே விட்டான்.

சொல்லளந்து போட்டவனுக்கும் நெல்லளந்து போடுறது தானப்பா
சம்சாரிக வாழ்க்க.
குடியானச்சியின் சொற்கள்
குடுகுடுப்பைக்குள்
தாயொலியாய்
இசைத்துக் கிடந்தன.

நெல்லுக்குள்ளும் சொல்லுக்குள்ளும் நிறைந்திருந்து
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
குடியானச்சி,
தரிசாய்க் கிடக்கும்
நிலத்தை நினைத்தழுது
மனதை விட்டிருப்பாள்.

ஏர் மகாராசன்

சனி, 14 ஏப்ரல், 2018

சொல் நிலம்: முற்போக்கும் நவீனத்துவத்தில் தன்னியல்பான நில மொழியழகும் :- பாரதி நிவேதன்(பா.செல்வ குமார்).

'வெயில் பொழியும்
ஒரு முகத்தைச்
சிதைக்க நினைத்துத்
தனித் தனியாகவே விழுகிறது
மழை முகம்' (ப.78)

 மகாராசன் - களமும் தர்க்கமும் நிரம்பக்கூடியவர். அரசியல் ஆய்வுகளில் அதிக அக்கறைச்  செலுத்தியவர். கவிதை ஆய்வினில் நுழைந்தபின்னர் அவரின் இலக்கிய முகமும் அவருக்கு தெரிந்தது. இதை அவரின் அருகில்  இருந்து கவனித்தவன் நான். ஆனால் அதனை எழுத்தாக முன் வைக்காமல் பேசிக்கொண்டே இருந்த மகாராசன் எழுத்தாக சிச்சிறிதாக எழுதியதும் உண்டு. தொகுப்பாகக் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. அனுபவங்கள் - அனுபவத்தையொட்டி எதிர்பார்க்கப்படும் கனவுகள் என்னும் யதார்த்த வாழ்வியலை எழுதுபவரிடம்  கச்சிதமான புனைவின் தந்திரங்களையும் இத்தொகுப்பில் அடையாளம் காணுகின்றேன்.

 தமிழிய  மார்க்சியம் என்பது இவ்வெழுத்தின் மணம். வானம்பாடியின் தொடர்ச்சியை நா.காமராசனுடனும் தேனரசனுடனும் தன் எழுத்தோட்டத்தில் எண்ணச் செய்பவர் மகாராசன். 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்' ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாலே - பெயர்ச்சொற்கள் மூலமாகவே கவிதை என்பதை உணர்வு லயங்களின் குறியீடாக நா.காமராசனை இனம் காணமுடியும். காதலும் சமூகமும் மார்கிசியமும் காந்தியமும் கூட அதனொழுங்கில் வந்து விழும். தேனரசனோ பாறையில் பனி வழுக்கிப்போகும் உணர்வுகளைத் தரக்கூடியவர். இதற்கு எடுத்துக்காட்டு 'வெள்ளைரோஜா'.

 மகாராசன், உழைப்பாளிகளின் குரலாக யதார்த்தப் பிரச்சினைகளிலிருந்து அன்றாடம் தப்பிக்க முடியாத அபலைத்தனத்தைக் காட்சிகளில் விரித்தும் அதற்காக மொழியை வரித்தும் எழுதுகிறார். மனிதத் துயருக்கான இயற்கையின் மொழியும் கனம் பெற்றிருக்கிறது. தன் சின்னஞ்சிறிய கிராமத்தின் பாதையை உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதற்குப் படிப்பினைகளை அவரின் பயணங்களும் களங்களும் வாசிப்புகளும் சொல்லக்கூடியது எழுத்தாகியிருக்கிறது. அடர்த்தியான மொழியில் கூக்குரலை தனியழகுப்படுத்துகிறார். இந்த அடர்த்தி என்பதற்கு கவிதைகளைக் குறித்த அவரது ஆய்வும் வாசிப்பும் உதவியிருக்கிறது. தனது ஆக்கங்களுக்குள் சுற்றுச்சூழல் கவனத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறார். நிலம் வெடித்துப்போய் வெப்பத்தைக் கொள்கலனாக்கிவிட்ட இருப்பிலும் வாழ்வின் மீதான பற்றே அவரை முற்போக்கு எழுத்தாளராக அழைத்துச் செல்கிறது. நிலத்தைச் சார்ந்தே காமத்தையும் காதலையும் சொல்ல முடிகிறது. மொழியின் வனப்பு இங்கு இன்றைய கவிதையின் இயங்கு தளத்தின் மீதான சந்தேகம் கொண்ட தன்னியல்பான மொழி ஒன்றைக் கட்டமைக்கிறது. வானம்பாடிகளை மீறுவதும் நவீனத்துவத்தை உரசிச் செல்வதும் இதனால் ஆகிறது. நாட்டுப் புற வாழ்வியலின் மொழியை இயல்பு மொழிக்குள் பூட்டப்படுவதும் நடக்கிறது.

'நீங்கள்

சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளொடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம்' (39)

 யதார்த்தச் சிக்கல்களை நேரடியாகச் சொற்களை அடுக்கி, கவிதையின் குணாதிசயத்தில் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவமளிக்கும் பட்டவர்த்தனத் தன்மையிலிருந்து விலக முயற்சிச் செய்வது கவிதைத் தனத்திற்கு ஒப்புவிக்கக் கூடிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம். சொற்களால் ஆவது என்? என்ற கவனக் குவிப்பிற்கும் 'சொல் நிலம்' தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தமிழ் நில வாழ்வியலை அதன் மையத்திலிருந்து வரித்துக் கொள்வதையும் முதன்மையாக்குகிறது. நிலமிங்கு எழுந்து காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிறது. சொற்கள் போகும் திசைக்குத் தன்னைக் கரையவிடாமல் தன் அனுபவம் கொண்ட உழல்வையே வரித்துக் கொள்கிறது இத்தொகுப்பு. இது தொழில் முறை மற்றும் பயில் முறைக் கனவுகளைத் தவிர்த்து மனப் பிராந்தியங்களின் ஊடுருவல்களைக் கண்காணித்து  நிலம், மொழி, வாழ்வியல் என்பது பிரக்ஞைக்குரியதாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்துகிறது. இதனால் முற்போக்குக் கலைப்படைப்பின்  முத்திரையாக இருப்பதில் நம்பிக்கையும் அது அப்படித்தானா என்ற சந்தேகத்தையும் உடைக்கும் விதமாக நவீனத்துவ பாய்ச்சலையும் உள்ள கவிதைகளின் சாட்சியமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

 கண்கள் வாசித்து மனதில் உழன்று அசைபோட வைக்கும் நவீனத்துவமும் , உதடுகள் வழி காதுகள் வழி மனதிற்குள் சென்று சட்டென உணர்ச்சியைத் தூக்கலாக்கும் அரங்குத் தன்மை வாய்ந்த கவிதைகளுமாக இத்தொகுப்பு முதன்மையாக அடையாளப்படுகிறது. இதை இன்னும் விளக்கினால் அகக் கவிதைகள் நவீனத்துவ சாயலையும் புறக் கவிதைகள் வானம்பாடிகளின் மொழியை இன்னும் மேலதிகமாக சமைத்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

'கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு' (77)

 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்' என்னும் சங்க மரபை 'செம்புலம்' கவிதையில் நிறைந்து கிடக்கிறது. அசலான தமிழ் வாசிப்பை மிகக் கச்சிதமாகக் கொடுத்துவிடும் இக்கவிதையில்தான் மகாராசன் தனக்கான அடையாளத்தை நுழைந்து தேடி வந்தடைய முடியும் என நம்புகிறேன். காதலை - காமத்தை - ஈன்றலை முதல்,கரு,உரிப்பொருளென நவீன கவிதையில் இனம் பிரிக்க முடியாமல் இழைத்துத் தந்து விடுகிறது இக்கவிதை.

 துளிகள், பயணங்கள், ஆலங்கள், வன்மங்கள், உடல்கள், கண்கள், முகங்கள், விதைகள், செடிகள், கொடிகள், புற்கள், வண்டுகள், பறவைகள், வேர்கள், விரிசல்கள், கூடுகள், சொற்கள், அலைகள், மகரந்தங்கள், சீவன்கள், மனிதர்கள் என்று இக்கள் விகுதிகள் நவீனத்துவத்தின் ஒவ்வாமை வானம்பாடிகளின் தவிர்க்க முடியாமை என்பதை இத்தொகுப்பை வைத்துச் சொல்லக்கூடியதும் ஆகிறது. உடனடி வினைகளுக்கப்பால் இக்கள் விகுதிகள் கடும்பாறையாகச் சமைந்துவிடுவது இன்றைய இழப்பு  நேற்றைய விருப்பு என்பதை மகா அறிந்தவர் என்றாலும் அதனிலிருந்து அவர் விலகுவது கவிதைக்குத் தேவையானது.

 கவிதையில் சொல்லவரும் ஓர் ஓர்மைப்புள்ளியை மீண்டும் மீண்டும் விளக்கிச் செல்லும் மரபான பாண்டியத்தத்தை தாண்டுவதும் தேவையானது. இத்தொகுப்பில் மகாராசனின் தன் தந்தை தாய் உறவுகளை அதனதன் வலியுடன் மகரந்த நினைவுகளுடன் பதிவாக்கியுள்ளார். இங்கு நிறைந்திருக்கும் ஈரம் ஈழமாக இன்றைய அரசியல் பிரச்சினையாக, சமூகப்பார்வைகளாக மாறும்பொழுது அதற்கே உரிய எரிமலையாக வெடித்தெழுகிறது. அன்றாட பிரச்சினைகள், இயற்கையின் வஞ்சனை, இழப்புகள் என அவரின் சமகாலப் பார்வையை அதே உரத்த குரலாய் நாம் கடந்து போய்விடுவது நல்லது. காரணம் அது களம். அவரின் மெல்லிய மனதில் உள்ள கவிதை குணங்களைக் கடந்து போகாமல் அதோடு விடாமல் அசை போடலாம்.

'ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்' (76)

 மழைநேரத்து வ.உ.சி விடுதியின் வாசலில் மகாராசன் உட்கார்ந்தால்,   ஈசலைப் பற்றிய அருமையான பேச்சின் அடவுக்கு யாரும் சொக்கிப்போகலாம். நம்மால் இன்னொருவருக்கு அதை விளக்க முடியாது. சில அனுபவங்கள் அடவுகளின் சுவையிலேயே மினுங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறுவழியில்லை. 'ஈசப்பால்' எழுத்தின் அடவு.

'காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன' (28)

 எங்கோ சிக்க வைத்திடும் கவிதைகளைக் குறித்து அச்சப்படுதல் இக்கண மட்டிலோ இன்று மட்டிலோ கழிந்துவிட வேண்டும். நாளை யாரையாவது கொண்டாடும் முகமாக அல்லது தாண்டும் முகமாக அல்லது பாய்ந்து சென்று விடும் முகமாக அமைந்து விட வேண்டும். தாளாத சுமைக்கும் தஞ்சமடைந்து தூங்கிப்போவதற்கும் சிலர் இருக்கிறார்கள். இது ரகசியமில்லை..அவை புத்திசாலித்தனமில்லாதவை. வாழ்வை ஊடறுப்பதை உணர்த்துபவை. இதையெல்லாம் அமிழ்ந்ததால் எழுத வாய்த்தது. எதையும் தூக்கி நிறுத்தல்ல..வலியின் கொண்டாட்டங்களாக. உண்மையில் அதுவே ஆகக்கூடியது. இத்தகைய என்னுடைய போக்கில் இக்கவிதைகளும் உடனிருப்பதில் மகிழ்ச்சி.

புதன், 4 ஏப்ரல், 2018

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி - நூல் மதிப்புரை :- இரா.முத்துநாகு, இதழியலாளர்.



         தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் மன்னனை பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடி வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.

             பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேரா.கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற சிற்றிதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.

             ''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய ராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம். பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி சீமையே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.''                         'பள்ளு இலக்கியம் உருவாக காரணம், 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம்   போன போக்கில் கம்பன் எழுதிய ராமாயாணம் போல் பள்ளுப் பாடலை தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.

                'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான கருவே இந்த பள்ளுப்பாடல் தான். சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.

              சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.

                 'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை   கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.

                     அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் பெரும்பேராசியர் வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.   

பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீர்முலைத் தாய்ச்சி.

மணல் உடுத்திய பாதைகள்
வெறும் ஆறுகள் மட்டுமல்ல;
கருந்தோல் மேனிகளில்
உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்
அரத்த நாளங்களைப் போல,
நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்
நீர் நாளங்கள்.

கடைமடை நிலத்தாளின்
மானம் போர்த்திய
நீர்ச் சேலைத் துணிகள்.

மழையாள் வகுந்தெடுத்த
உச்சந்தலை நீர்க்கோடுகள்.

பசுந்தாள்
வேர் நாவுகளை நனைக்கும்
உமிழ் நீர்ச் சுரப்பிகள்.

தொடை விரித்து ஈனும்
தாயவள் போல்,
உழவும் குடியும்
நெல்லும் சொல்லும் ஈன்ற
நீர்முலைத் தாய்ச்சிகள்.

பச்சிளம் பிள்ளையைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளைப்
புணரத் துடிக்கும்
இனப் பகைக் குறிகளின்
விதைகளை அறுத்தெறிந்து
அரற்றுகிறாள் காவிரித் தாய்ச்சி.

நீதி மறைத்த அதிகாரத்தை
ஒற்றைச் சிலம்பால் எறிந்து
ஒரு முலை திருகி எரிந்தாள்
திருமாவுண்ணி.

அதிகாரம் மறுத்த நீதியை
நீர்ச் சிலம்பால்
உடைத்தெறிந்தாள்
நிலத் தாய்ச்சி.

காவிரி!
நீர்முலைத் தாய்ச்சியவள்
தீயும் மூட்டுவாள்.