வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஜெயமோகனின் புறப்பாடு - பயணங்களும் படிப்பினைகளும்: அ.ம.அங்கவை யாழிசை




நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த 'யானை டாக்டர்' எனும் கதையைப் படித்தபோதுதான் 'ஜெயமோகன்' எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது.

இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும்  இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது 'செம்பச்சை' நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா. 


எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் 'எழுதுக' எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய 'புறப்பாடு' எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார்.


புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார். 


புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். "அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…" என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.


பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா. 


போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் 'இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்' என்றார்.


புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.


நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.


அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார்.


அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.


இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார்.


எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.


முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.


அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. 


இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.


இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.


இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் "புறப்பாடு எப்படிப் போகுது?" என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் "போய்க்கிட்டே இருக்குப்பா''. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.


இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.


சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.


என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே 'படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்' என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.


உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.


உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன். 


ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.


புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, "அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது" என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.


ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக - பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன். 


சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு. 


அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு,  "இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்" என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.


காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன. 


ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.


ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.


அ.ம.அங்கவை யாழிசை

15.12.2022


புதன், 14 டிசம்பர், 2022

தமிழ் எழுத்து மரபின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் நூல்: மா.அருணாச்சலம்



அண்மையில், மகாராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு'' நூலைப் படித்தேன். நல்ல ஆய்வு நூலாக இருந்தது. நூலின் முதல் பகுதி மொழி, எவ்வாறு உருவானது என்பதைக் குறித்து மிக விரிவாக விளக்குகிறது. "வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிக்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது. மொழி என்பதற்கு அடுப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லா பேச்சொலிகளும் மொழி என்றாகி வருவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது" என்ற தெளிவான பார்வையை முன்வைகிறார் நூலாசிரியர்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை என்பதை தொல்லெழுத்தியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியத் தரவுகளைக் கொண்டு மிக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் மகாராசன்.

பிள்ளையார் சுழி என்பதைக் குறித்துப் பண்பாட்டு நோக்கிலும் புதிய கண்ணோட்டத்திலும் மிக ஆழமான விரிவான ஆய்வுத் தரவுகளை இந்நூல் தந்திருக்கிறது.

பாட்டியல் நூல்கள் தமிழ் எழுத்துகளின் மீது பாகுபாடுகளையும் மேல்கீழ் / உயர்வு தாழ்வுப் பேதங்களையும் கொண்ட கற்பிதங்களை எவ்வாறு கட்டமைத்திருக்கின்றன என்பதைக் குறித்து விவரிக்கும் நூலின் பகுதிகள், நான் அறிந்திராத புதுமையான செய்திகளாக இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் அவற்றின் எழுத்துகளும் கடவுளோடும் சமயத்தோடும் அல்லது ஏதாவது ஓர் அதிகார மட்டத்தோடும் தொடர்புடையவைகளாக இருக்கின்றன. அதாவது, உலகின் மொழிகள் யாவும் ஏதாவது ஒன்றினோடு சார்புத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதேவேளை, தமிழ் மொழிக்கும் தமிழ் எழுத்து மரபிற்கும் அரசதிகாரம்/சமயம்/சாதி/வர்க்கம்/பாலினம்/வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது என்பதைத் தெளிவுபட நிறுவுகிறார் மகாராசன்.

தமிழ் வரி வடிவங்களை எழுதும் வழக்கம், இடமிருந்து ஆரம்பமாகி வலப்பக்கமாக முடிகிறது.. இது மாதிரியாக எழுதும் வழக்கம் தமிழைத் தவிர வேறு மொழிகளில் உள்ளனவா? தமிழுக்கு முன்னதாக வேறு மொழிகளில் ஏதேனும் உள்ளனவா? இது தமிழ் மொழிக்கு மட்டுமே இயல்பாக அமைந்த ஒன்றா? அப்படி அமைந்திருந்தால் அதற்கான காரணங்கள் எதுவும் உண்டா? என, இந்நூலைப் படித்து முடித்தவுடன் கேள்விகள் எழுகின்றன. அதற்கான தேடலை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற தமிழ் ஆய்வு நூல்களை மகாராசன் அவர்களால் தொடர்ந்து எழுதப்படவேண்டும். 

ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல், தமிழர்களின் எழுத்துகளுக்கு ஒரு பண்பாட்டு மரபு இருக்கின்றது என்பதையும், அதன் பின்புலத்தையும் ஆழமாக விவரித்திருக்கிறது.



சனி, 3 டிசம்பர், 2022

வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச்சிறந்த நூல்: அஜீத கேச கம்பளன்


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  :    உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்!

இதன் ஆசிரியர் முனைவர் மகாராசன், சமூக மாற்றத்திற்கான ஏர் எனப்படும் சிற்றிதழை நடத்தி, பரவலான கவனம் பெற்றவர்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது. அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது…. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும், அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு எனத் தொடக்கத்திலேயே அழகாகச் சொல்லிவிடும் ஆசிரியர், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசு பொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை என்பதால், தானே அதை முன் எடுத்துள்ளார், இந்த நூலின் வாயிலாக! அந்த வகையில் வேளாண் மக்களின் வேட்கையையும் கோரிக்கைகளையும் சிறப்பாகவே கவனப்படுத்தி உள்ளார்.

வேளாண்மை உழவுத் தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல் தான் தனித்துவம் வாய்ந்ததாகும் என அதில் உள்ள சிறப்புகளைக் குறிப்பிடுகிறார்.

நெல்லும் உயிரன்றே 

நீரும் உயிரன்றே

மன்னர் தானே மலர் தலை உலகம்

என்ற புற நானூற்றுப் பாடலையும்,

வரப்பு உயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

என்ற அவ்வையின் பாடலையும் கூறி, உழவர்க்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். 

தமிழ் நிலத்தின் வேளாண் மரபினரைக் குறித்தும், வேளாண் மரபினரின் தொழில் மரபுகள் குறித்தும், இதன் தொழில் நுட்பங்கள், பண்பாட்டு மரபியல் குறித்துப் பள்ளு இலக்கியங்கள் மிக அதிகமாகவே பதிவு செய்துள்ளதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள் என்ற தலைப்பில் சில அபூர்வச் செய்திகளையும் தருகிறார். மூவேந்தர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் என்கிறார். வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபடு தெய்வமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதைப் போலவே வேளாண் மரபில் பவுத்த அடையாளமாக விளங்குவது பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கு என்கிறார்.

வேளாண் மரபினருக்கும், ஆரியர்களுக்குமான பகையும் முரணும் என்ற தலைப்பில் சுவையான செய்திகளைச் சொல்கிறார். முதன்முதலாக நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்களே. கால் நடைகள் மேய்ப்பதைக் குலத் தொழிலாய்ச் கொண்டிருந்த பிராமணர்கள் புதிய சமூக அமைப்பில் தங்கள் இருப்பு கேள்விக்கு உள்ளாவதாகக் கோபம் அடைந்தனர்! தங்கள் வேள்விகள், யாகங்கள் போன்ற சடங்குகளில் பல்லாயிரக்கணக்கில் கால் நடைகளை வானோர்க்குப் பலியிட்டு, தாங்களும் உண்டு வந்த பிராமணர்களை வேளாண் குடிகள் தடுத்ததோடு, கால் நடைகளை உழவுத் தொழிலின் நண்பனாக, பங்காளனாக, தெய்வமாகத் தாங்கள் கருதி வணங்குவதால் முரண்பட்டனர். இந்தப் பகை காலப் போக்கில் பிராமணர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை சொல்லும் போது, உழவுத் தொழில் மரபினரின் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளப்படுத்தலானது, வேளாண் தொழில் அடையாளத்தையும் – வேளாண் தொழிலின் பண்பாட்டு அடையாளத்தையுமே உள்ளீடாகக் கொண்டுள்ளது. இது ஆரிய வைதீகத்தில் இருந்து உருவானதில்லை. மருத நிலத்தின் மரபில் இருந்தும், மழைத் தெய்வ வழிபாட்டில் இருந்தும் உருவானது என்கிறார்.

வேளாண்மைத் தொழில் மரபின் நீட்சியாக இருக்கும் உழவுக்குடிகள் யாவரும் வேளாளர்கள் தான்! அவ் வகையில், வரலாற்றிலும், வாழ்வியலிலும், பண்பாட்டு வழக்கங்களிலும் உழவுத் தொழில் மரபினராகப் பல குலத்தினரும் பன்னெடுங்காலமாக அடையளப்பட்டு வருகின்றனர் என்கிறார்.

வேளாண் மரபினரின் நீர் மேலாண்மை குறித்த செய்திகளும் நூலில் நிறைந்துள்ளன! மழைப் பொழிவில் வழிகின்ற வழி நீரையும், மழைப் பொழிவுக்குப் பின்பாகத் தன் போக்கில் செல்லும் ஆற்று நீரையும் பயன்பாடு கருதியும், வேளாண் தொழில் கருதியும் தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். இந்த வகையில் உருவாக்கப்பட்டதே அகழி, இலஞ்சி, ஊருணி, ஏரி, கம்மாய், கலிங்கு, குட்டை,கேணி, தாங்கல், மடை, மறுகால்.. போன்றவை! இப்படியாகப் பலவற்றைக் குறித்தும் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அழகாகக் குறிப்பிட்டு உள்ளார்.

நீர் மேளாண்மையின் அங்கமான குடிமராமத்து பற்றியும், அதை அன்றைய தமிழ்ச் சமூகம் எவ்வளவு சிரத்தையுடன் பேணிப் பாதுகாத்தது என்பது குறித்தும் நல்ல தகவல்களைத் தந்துள்ளார். மன்னர் காலங்களில் நீர் நிலைகளின் மேலாண்மை அனைத்தும் கிராமப் பொதுச் சொத்தாகவே இருந்தன! அதில் அக்கால மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளதையும் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இந்த நூல் வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச் சிறந்த தகவல்களை தருவதோடு, இன்றைய நமது பின்னடைவுகள் குறித்த புரிதலையும், அதில் இருந்து மீள்வதற்கான உந்துதலையும் தருகிறது.

நூல் விமர்சனம்: அஜீத கேச கம்பளன்

நூல் ஆசிரியர்: ஏர்.மகாராசன்

யாப்பு வெளியீடு,

விலை;ரு250

கொரட்டூர், சென்னை.

பேச; 9080514506.

நன்றி: அறம் இணைய இதழ்.