வியாழன், 13 ஜனவரி, 2022

வேளாண் அறுவடையும் போலச்செய்தல் சடங்கும் - மகாராசன்

 



அறுவடையை மய்யமிட்டுப் புலப்படுத்தப்படும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டு நடத்தைகள், வழிபாட்டுச் சடங்கியல் மரபிலும் காணப்படுகின்றன. அதாவது, உழவுத் தொழில் மரபினரின் அறுவடைச் செயல்பாட்டைப் போலச்செய்து காட்டும் சடங்கியல் நிகழ்வுகள் பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தில், தைப்பூசத்திற்கு முதல்நாள் நெல்கதிர் அறுவடைத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலிருந்து புறப்பட்டு, மதுரை அருகே அனுப்பானடி - சிந்தாமணியைச் சுற்றியிருக்கும் வயல் பகுதிக்கு அறுவடைக்காக வருகை தருவதான சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அறுவடைச் சடங்கு நடக்கும் இந்த நிலப்பகுதியானது, கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை ஆற்றின் கிளை ஆறாக, இந்தக் கிருதுமால் ஆற்றின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாக நடந்திருக்கிறது.

மீனாட்சி அறுவடை செய்யும் வயல், அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டதாகவும், இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம் எனவும் கூறப்படுகிறது. தற்காலத்தில், அந்த இடத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றித் தற்காலிக வயலாக மாற்றி, வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிர்களைத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு, மீனாட்சி அம்மன் கதிர் அறுப்பதைப் போன்ற அறுவடைப் பாவனைச் சடங்கு நடைபெறுகிறது.

மருத நிலத்தின் வேளாண்மை உழவுத் தொழில் மரபைக் குறிக்கும் பாண்டியம் எனும் சொல்லால் அடையாளப்படுத்திக் கொண்ட பாண்டியர்களின் வழிமரபினராகவே மீனாட்சி கருதப்படுகிறார். பாண்டிய வேந்தர்களின் காலத்திலிருந்து இத்தகைய அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதன் நீட்சியாகத்தான், உழவுத் தொழிலின் வேளாண் மரபினராக மீனாட்சி - சுந்தரேசுவரர் நெல் கதிர் அறுவடை செய்யும் அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

நெல் கதிர் அறுவடைச் சடங்கு நடந்து முடிந்த மறுநாளில்தான், அனுப்பானடி அருகிலிருக்கும் மாரியம்மன் கோயில் வண்டியூர்த் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கின்றது. மீனாட்சி - சுந்தரேசுவரர் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்குக் காட்சி அளிக்கும் வகையில் அமையும் இவ்விழா, ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெற்று வருகின்றது.

அறுவடைச் சடங்கிலும், தெப்பத் திருவிழாச் சடங்கிலும் உழவுத் தொழில் வேளாண் மரபினர்களான அனுப்பானடி ஊர்க் குடும்பர்களே பெருவாரியாகப் பங்கேற்பதோடு, அங்கு நடைபெறும் சடங்கியல் பண்பாட்டுக்கு உரித்தான நிகழ்த்து உரிமைகளையும் வழிவழியாகப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நடைபெறும் நெல் அறுவடைச் சடங்கைப் போலவே, திருக்குற்றாலீசுவரர் கோயிலிலும் அறுவடைச் சடங்கு நிகழ்ந்து வருகின்றது. அங்கு நடைபெறும் அறுவடைச் சடங்கையும் உழவுத் தொழில் வேளாண் மரபினரான குடும்பர்களே நடத்தி வருகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது.

இவ்வாறாக, வேளாண்மை உழவுத் தொழிலின் உற்பத்திச் செயல்பாடுகளைப் பண்பாட்டு வடிவத்தில் புலப்படுத்தப்படுகிற மழை, உழவு, விதைப்பு, நடவு, அறுவடை சார்ந்த வளமைச் சடங்குகள் யாவும், உழவுத் தொழில் வேளாண் மரபினரின் வேர்த் தடங்களைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளன.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


அறுவடையும் பொங்கல் பண்பாட்டுத் தளுகையும் - மகாராசன்


அறுவடைக் காலத்தின் மகிழ்வைக் குறித்துப் பழந்தமிழ் இலக்கியங்கள் நிரம்பவே பதிவு செய்திருக்கின்றன. உழவுத் தொழிலின் நிறைவாய் அமையும் அறுவடை நிகழ்வில் உழவர் யாவரும் மனமகிழ்ச்சி கொள்வார்கள். உழவர்கள் மகிழ்ச்சி அடையும் நிலத்தை ஆளும் அரசரே நல்லரசின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கிறார்.

அவ்வகையில், அறுவடை நாளில் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று, பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுவதைப் புறநானூறு பதிவு செய்யும்போது, 

நும்கோ யார் என வினவின், எம்கோ 

களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் 

யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,

ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,

வைகு தொழில் மடியும் மடியா விழவின் 

யாணர் நன்னாட்டுள்ளும், பாணர் 

பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகி 

கோழியோனே கொப்பெருஞ் சோழன் 

என்கிறது. 

உழவர்களைக் களமர்கள் எனக் குறிக்கும் இப்பாடல் குறித்து நா.வானமாமலை கூறும்போது, ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாக வெளியிடுகிறார். உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். 

இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும் என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்தரிக்கிறது என்கிறார்.

அதேபோல, அறுவடைக்கு வேண்டிய நிலமும், மேழியும், எருதுகளும், உழவர்களும்தான் வேளாண் தொழிலுக்கு வேண்டியவை. இவற்றால்தான் அறுவடை நடைபெற முடியும். இவற்றை ஒருங்கே கொண்டிருந்தவர்களே புகழப்பட்டிருக்கிறார்கள். 

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் எனும் புலவர், சிறுகுடிக் கிழான் பண்ணனைப் புகழ்ந்து பாடும்பொழுது, விளைநிலங்களை அளிக்கும் எம் பண்ணனைக் குறித்துக் கேட்டீர்கள். அவனுடைய உழவு எருதுகளையும் உயர்வினையும் பொருளாகக் கொண்டு, கிணை கொட்டி நாடோறும் யான் பாடுவேன். பாடேனாயின், மணி விளங்கும் முற்றத்துத் தென்னவன் வழியினன், முரசு முழங்கும் தானையன் ஆகிய பெருமைமிக்க வழுதியும், என் சுற்றத்தைப் புரந்து அருள் செய்யாது போவானாகுக என்கிறார். இதனை,

வெல்லும் வாய்மொழிப் புல்லுடைவி

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ; அவன்

வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா, 

நாடொறும் பாடேன் ஆயின், ஆனா 

மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன், 

பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை

அண்ணல் யானை வழுதி,

கண்மாறிலியர்என் பெருங்கிளைப் புரவே!

என, உழவுத் தொழில் மரபினர்களையும், அவர் வழிமரபினரான பாண்டியர்களையும் மேற்காணும் புறப்பாடல் பதிவு செய்திருக்கிறது. 

இந்நிலையில், அறுவடைக் காலத்தில் உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையிடும் சடங்கானது, மாட்டுப் பொங்கலன்றுதான் நிகழ்த்தப்படுகிறது. ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில்தான், மாட்டுப் பொங்கல் பண்பாட்டுத் தளுகையை வளப்படுத்தியிருக்கிறார்கள். மாட்டுப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சியாக மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகளையும் நிகழ்த்துவது மரபாக இருந்திருக்கிறது. 

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல். அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும். 

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும். 

உழவுத் தொழில் புரியும் அவரவர் வீடுகளில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகளுக்கும் தளுகைப் பொங்கலும் வாழைப் பழங்களும் ஊட்டி விட்டதற்குப் பிறகு, அம்மாடுகளின் மீது கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கு நடைபெறும். பொங்கல் வைக்கும்போது பானையில் பொங்கி வழியும் பால் நீரை எடுத்து வைத்திருந்து, கும்பாவில் ஊற்றிய அப்பொங்கல் நீரை, வாழை இலையால் மாடுகளின் மீது அள்ளித் தெளித்தபடியே,

பொங்கலோ பொங்கல்!

பால் பானைப் பொங்கல்!

பட்டி பல்க! பார்த்த கண்ணு வெடிக்க!

பிணியும் நோவும் தெருவோடு போக!

எனப் பாடி, கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கை நிகழ்த்துவர் உழவு மரபினர்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது. 

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனனப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்றுகூடி நடத்தப்பட்டிருக்கிறது. 

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும், உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர். 

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்ளும் இச்சடங்கு, வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. சடங்கியல் சார்ந்த இந்த நேர்த்திக்கடன், வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது. 

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர். 

மாட்டுப் பொங்கல் தளுகையை மாடுகளுக்கு ஊட்டிவிட்டும், நீர்த் தெளிப்புச் சடங்கு முடிந்ததன் பிறகும், அலங்கரிக்கப்பட்ட அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொள்ளும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு, தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனேதான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை, ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர். 

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன. 

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும்தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும். 

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் - உழவுத் தொழில் மரபினரின்  நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அவ்வகையில், மாட்டுப் பொங்கல் தளுகையும், பொங்கல் சார்ந்த நடத்தைகளும் வேளாண்மைத் தொழிலுக்கான வளமைச் சடங்காகவே பயிலப்பட்டு வழமையாக்கப்பட்டு வந்திருக்கின்றன. 

காளை மாடுகள் தழுவும் சடங்கியல் நிகழ்த்தல்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் நிறையவே பதிவு செய்திருக்கின்றன. 

மள்ளர் கட்டிய வெள்ளைக் காளையைப் 

பேய்த்தண்ணீர் வெறியாலே 

கொம்பை உயர்த்திப் பிடிப்பாராம், 

குருமலைதனில் வாழும் கெச்சிலாக்

குடும்பன் கட்டிய இடும்புக் காளையை

மருவில்லாத தென்னிசைக் குடும்பன் வளைத்துப் பிடிக்கவே

என, உழவுத் தொழில் மரபினரின் ஏறு தழுவல் சடங்கை எட்டையபுரப் பள்ளு சுட்டியிருக்கிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


திங்கள், 10 ஜனவரி, 2022

ஆரிய வைதீகத்தைக் கட்டுடைத்திருக்கும் மிக முக்கியமான நூல்: மா.ஜெயச்சந்திரன்



நீரின்றி அமையாது உலகு என்பார் திருவள்ளுவர். மாமழைப்போற்றுதும்! மாமழைபோற்றுதும்! திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்! என்கிறது சிலப்பதிகாரம். அவ்வகையில், திங்கள் எனும் 'நிலா' வணக்கமும், மழை வழிபாடும்

தமிழர்களிடையே பண்டையக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதை நாம் அறியமுடியும்.

   

இறை வணக்கத்திற்கு அடுத்து 'வான் சிறப்பு' அதிகாரத்தை வைத்து நீரின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர் வள்ளுவர். 'நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' என்கிறார் வள்ளுவர். இந்தக் குறளில் திருவள்ளுவர் 'ஒழுக்கு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மழை இல்லையென்றால் நாட்டில் ஒழுக்கம் கெட்டு விடும் என்கிறார். மேலும், 'நீரின்றி அமையாது உலகு' எனும் வரியில் 'அமைத்தல்' என்பது செயற்கையானது;  'அமைந்திருத்தல்' தான் இயற்கையானது! இந்த பூமி நீரைக்கொண்டே விரிவடைகிறது என்றும் எழுதுகிறார் வள்ளுவர். அதனால்தான், விரிநீர் வியன் உலகு! என்று எழுதினார் வள்ளுவர். 


"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று" என்று, சாவா மருந்து எனக் கூறப்படும் அமிர்தத்திற்கு நிகரானது  'மழை!' என்றும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். 


உழவர்களின் உழைப்பைப் பயனுள்ளதாக்குவது மழையே!

அந்த மழை வேண்டி உழவர்களால்  செய்யப்படும் சடங்கே  மழைச்சடங்காகும். 


மழைச் சடங்கு, வேளாண் மக்களால் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் முதன்மையானது. 

இந்த மழைச்சடங்கு சமூக நன்மை கருதிச்  செய்யப்படும் கூட்டுச்சடங்கே! 


மழைச்சடங்கும், முளைப்பாரிச் சடங்கும் தானியங்களின் செழிப்பையும், மனித வாழ்வின் செழிப்பையும் தூண்டச் செய்யும் வளமைச் சடங்குகளே! 


உழவர்கள் மழை வளமில்லாத நிலையில், தங்களது துன்பத்தையெல்லாம் தீர்க்கவேண்டும் என்று இரங்கி மழைத்தெய்வத்தை வேண்டுகிறார்கள் என்பதை, 


ஏர் பிடிக்குந் தம்பியெல்லாம் பின்னப்பட்டு நிக்கிறாங்க!அந்தக்குறை கேட்டு வந்திறங்கு இந்திர தேவா! 


மேழிபிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ்சோந்து நிக்கிறாங்க! 

அந்தக்  குறை கேட்டு வந்திறங்கு 

இந்திர தேவா ! 


பூமி செழிப்பதெப்போ? 

எங்க புள்ளைப் பஞ்சம் தீர்ப்பதெப்போ? 

ஓடி வெதச்ச கம்பு 

ஐயோ இந்திரதேவா!

ஊடு வந்து சேரலையே!

பாடி வெதச்ச கம்பு ஐயோ இந்திரதேவா!

பானை வந்து சேரலையே! என்று பாடுகிறார்கள். 


உழவர்களின் வேண்டுதலுக்கிணங்க இந்திரன் அருள் கிடைக்கப்பெற்று 'ஈசானிமூலை' கருத்து, மழை கொட்டுகிறது. அப்போது பாடும் பாடலாக, 


"நாடு செழிச்சிருச்சு

நல்ல மழை பெஞ்சிருச்சு!

ஊரு செழிச்சிருச்சு

ஒத்த மழை பெஞ்சிருச்சு!

கொல்ல செழிச்சிருச்சு

கொள்ள மழை பெஞ்சிருச்சு!

கோடு திரிஞ்சிருச்சு

கோடைமழை பெஞ்சிருச்சு!

காலம் செழிச்சிருச்சு

காரிமழை பெஞ்சிருச்சு" என்று உழவர்கள் மழை பெய்த  மகிழ்ச்சிப்பெருக்கில் பாடுகிறார்கள். ஆக, நீரின்றி அமையாது உழவு! 


நீரே கடவுள்! தேவேந்திரனே நீரே

என் கடவுள்! என்று மழைத்தெய்வமான இந்திரனை வழிபடு தெய்வமாகக் கொண்ட மருதநில மள்ளர்கள் தமது வேந்தனாகிய இந்திரனுக்கு

இந்திரவிழாவின்போது மழைச்சடங்கை  நிகழ்த்தி 

"மள்ளர் எல்லாம் கூடி மழைக்குறி பார்த்துக் காத்திருக்கிறார்கள்". அப்போது காவுக் இறைவனாகும் இந்திரன், கற்பகப்பூங்காவின் தலைவனாகிய இந்திரனின் ஏவற்கட்டளையை ஏற்று மழை பொழிந்தது என்பதை,

காவுக்கு இறைவனாகும் இந்திரன்

எவற் பணி கொண்டெழுந்த கார் என்று பதிவுசெய்கிறது முக்கூடற்பள்ளு. ஆக, மருதநில வேளாண் மக்களால் மழைக்கடவுளாக வணங்கப்படுகிறவன் இந்திரனே!வேளாண் மரபினரால் செல்வத் திருமகனாகச்  சங்க காலத்திலிருந்தே

கொண்டாடப்பட்டவன்

இந்திரன். இந்திரனுக்கு வச்சிரமே  படைக்கலம்! ஆதலால், அவனை 

"வச்சிரத்தடக்கை நெடியுயோன்" என்கிறது புறநானுறு. 


இந்திரனும் முருகனும் 'கோட்டங்களில்தான்' வாழ்ந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்! 


கோயிலுக்கு முந்தைய வடிவம் கோட்டமல்லவா?! ஆதலால்தான், அவர்கள் பக்தி இயக்கத்திற்கும் முந்தியவர்கள்; மூத்த தொல்குடிமக்களின் தொன்ம வழிபாட்டுச்சடங்கில் நிலைகொண்டவர்கள். 


முருகனும், இந்திரனைப்போலவே மழைக்கடவுளாக, வளமை வழிபாட்டுக்குரியவனாகவே வணங்கப்பட்டிருக்கிறான். 


இந்திரனுக்கு மழைச்சடங்கு, என்றால் முருகனுக்கு மழைவேண்டி "வயந்தன் கம்பாட்டம்!" முருகனுக்குக் காவடிஆட்டம் என்றால்?! இந்திரனுக்கு இந்திராணியோடு வயலில் ஆடிய கடையஆட்டம்!

இந்திரனுக்கு இந்திர விழா! என்றால், முருகனுக்குக் கார்த்திகைத் தீபத் திருநாள்! 


கார்த்திகை விழா! என்பது ஒரு பண்பாட்டுவிழா! பெய்த மழை போதும் என்று நன்றிகூறி மழையை வழியனுப்ப ஆகாயத்தைநோக்கி நெருப்பைக்காட்டுகிற இந்த விழாவே தமிழர்கள் கொண்டாடும்

திருக்கார்த்திகை எனும்

தீபத் திருநாளாகும். 


மழையை வழியனுப்பும் விழாவைப்போல மழையை வரவேற்கும் ஒருவிழாதான் ஆடி-18;

ஆடிமாதம் 18ஆம் நாள். ஆடிமாதம் நல்ல மழைபெய்து ஆற்றில் வரும் புதுப்புனல் வருகையை வரவேற்றுக் கொண்டாடும் விழாதான் ஆடி 18.

இது மருதநில வேளாண்குடிகளும் அவர்களது உழவோடு தொடர்புடையை 18 தொழிற் குடிகளும் இணைந்து கொண்டாடும் விழாவாகும். 


மழையை வரவேற்கும் விழா! மழையை வழியனுப்பும் விழாவைப்போல, மழைத்தெய்வமான வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றிகூறும் விழா வேண்டுமல்லவா?!அதுதான் இந்திரவிழா! 


"தீவகசாந்தி செய்தரு நன்னாள் " என்று பண்டையக் காலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தில் நடடைபெற்றுவந்த இந்திரவிழாவைப் பற்றி மணிமேகலை கூறுகிறது. 


அந்த விழாவின்போது, இந்திரவிழாவிற்கு வரும் மகளிர் எல்லாம் பல்வேறு வகையான பூக்களை, மலர்களைச் சூடியிருந்தனர் என்கிறது ஐங்குறுநூறு! 


"இந்திர விழவின் பூவின் அன்ன

புன்தலைப் பேடை" என்கிறது ஐங்குறுநூறு! 


இந்திரன் அறத்தின் தெய்வம்/ஆற்றலின் குறியீடு/ வளமைக்கான தெய்வம்/ பஞ்சபூதங்களின் தலைவன்/ முதல் வேந்தன்/ மருதநில மள்ளர்களின் குல முதல்வன்/அதனால்தான், இந்திரனைப் புலியெனக் கொடியில் வைத்தான் சோழன் என்கிறது இந்நூல். 


உழத்தியர் வணங்கும் முதல்நாற்று முடியை இந்திரமுடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபு! 


தீம்புனல் உலகின் வேந்தனான  பாண்டியன் முடிக்கு(கிரீடம்)ம் 'இந்திர முடி 'என்றே பெயர். 


இந்திரன் உயர்ந்தவன்/ஆற்றலில் சிறந்தவன். ஆகையால்தான் குஞ்சர மல்லன் தென்குடும்பன் இராச இராச சோழன் தன்னை "இந்திர சமானன்" என்று  கூறி இந்திரனோடு தம்மை ஒப்புமைக் காட்டி சிலிர்த்துக்கொண்டான்.... 


'மங்கலம்' என்ற சொல்லுக்கும் இந்திரனுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆம், அவன் மங்கலன்தான். 


இந்திரனை அமங்கலனாக்க அகலிகைக் கதையைப் புனைந்து  வீழ்த்த நினைத்த ஆரிய வைதீகச் சூழ்ச்சியைக்  கட்டுடைத்து போடுகிறது வேளாண் மரபின் தமிழ்அடையாளம் எனும் இந்நூல்! 


வேளாண் மக்களின் வளமைச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டதாகும். மழைத்தெய்வம் இந்திரனே, தேவேந்திரனே! இந்திர குலத்தார் எனும் உழவுத்தொழில் மரபினரே இந்தச் சடங்கை முன்னெடுக்கிறார்கள். மழை இல்லாத காலங்களில்  மழைவேண்டி

மழைச் சோறு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 


மழைச்சோறு எடுக்கும் போது எல்லா வீடுகளிலும் கூட மறக்காமல் மழைச்சோறு சடங்கு நடத்துவதற்காக சோறு வாங்குகிறார்கள் பகை வீடுகளிலும்கூட... இந்நிகழ்வின் மூலம் பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இதில் மங்குகிறது என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் ஏர் மகாராசன். 


பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான் நிலத்தின் மழை ஏக்கத்தை, நிலத்தின் மழைத் தவிப்பை, நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள் என்றும்,  இந்திர வழிபாட்டின் நீட்சியாகத்தான் பல்வேறு வளமைச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவை பெண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்றும், சோறு வாங்கும்போது கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பாடல் பாடுவது எனப் பெண்களே இந்தச் சடங்கில் மையம் கொள்கிறார்கள் என்கிறார் மகாராசன் 


இந்திரனை வைதீக அடையாளமாக நுழைத்தது முதல் சித்திரை முதல் நாளை ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்தது வரை தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வைதீகமானது தன்வயப்படுத்திக் கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பல காலமாக ஈடுபட்டு வருகிறது. 


தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையை இழிவான தொழில்; பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரியம்.

உழவுத்தொழிலை இழிவானது என்கிறது மனு சாஸ்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவமாகக் கருதிய வைதீக மரபு, அதனுடைய சமஸ்கிருத மொழியில் ஏர் எனும் சொல்லே இல்லை என்றும், அதே வேளையில், வேளாண்மைத் தொழிலே தமிழர் வாழ்விலும் தலையாயத் தொழிலாக இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார் மகாராசன். 


உழவைப் பாவமாகக் கருதிய ஆரிய மரபின் சடங்குகள், மரபுகள் நெருப்போடும் வானத்தோடும் தொடர்புடையவை. அதற்கு மாறாக, வேளாண் பண்பாட்டு மரபு என்பது மண் சார்ந்தது. அதன் சடங்குகள், மரபுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆரிய வைதீகத்துக்கு எதிரானது. 


மழைச்சோறு சடங்கு எனும் வேளாண் பண்பாட்டுச் சடங்கானது வைதீக மரபுக்கு எதிரானது! 


தமிழர் பண்பாட்டு மரபுச் சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளும் நீரில்லாமல் அமைவது இல்லை. ஆகையால், வேளாண் பண்பாட்டு மரபு என்பது, வேளாண் பண்பாடு என்பது இயல்பாகவே நீர் சார்ந்தும் மண் சார்ந்தும்  இயங்கக் கூடியது என்கிறார் மகாராசன். 


ஆகவே, ஆரிய  வைதீகச் சடங்கு உடன் கூடிய ஆரிய மரபு இந்திரனுக்கும், 


இந்திர அடையாளத்துடன் கூடிய மருதநில உழவர்கள் முன்னெடுக்கும் வேளாண்மைச் சடங்குகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இயல்பிலேயே வேளாண் பண்பாடும், அவர்தம் வழிபாட்டு மரபும், ஆரியர் வழிபாட்டு மரபும் வேறுவேறாகும். இதையேதான் அம்பேத்கரும் ஆரிய வைதீக வேதங்களில் இந்திரன் பாதியிலேயே வந்து பாதியிலேயே காணாமல் போய்விடுகிறான் என்றும், ஆரிய இந்திரன் என்பதும் புனைவே என்கிறார். 


இயற்கை உற்பத்தியும், மானிட உற்பத்தியும் செழிப்பை நோக்கியே நகருகின்றன. பொங்கல், பூ, சந்தனம், குங்குமம், தேங்காய், வாழை இவையெல்லாம் செழிப்பின் அடையாளங்கள்தான். பெரிய வயிறும், நிறைந்த மார்பும் செழிப்பின் அடையாளம்தான். உரத்தின் கடவுளான ஜேஷ்டாதேவி என்கிற 'தவ்வை' வளமையைக் குறிக்கிற விதமாகவே பெரிய, பருத்த மார்புகளோடு காணப்படுகிறாள். 


அதேபோலத்தான், இந்திரனும் முருகனும் தாந்திரீக மரபின் வளமை வழிபாட்டின் நீட்சியேயாகும். 


முருகன் 'செய்யோன்' என்று அழைக்கப்பட்டான்! இந்திரன் 'செங்கண்மால்' என்று அழைக்கப்பட்டான். இரண்டுமே செம்மையோடு, செந்நிறத்தோடு தொடர்புடைய பெயர்களே ஆகும். 


செம்மை என்பது மகப்பேறு காலக் குருதி! பூப்பு எய்தல் குறியீடுதான் செம்மை என்பதாகும். 


பரிபாடலில் முருகனை வர்ணிக்கும்போது, முருகன் உடல் எல்லாம் குங்குமம் பூசியுள்ளார்கள்.

அவனது யானைக்கும் குங்குமம் இடப்பட்டது. தந்தத்தில் குங்குமம், பிடரியில் குங்குமம், அவனது 'கொடி ' உட்பட எல்லாவற்றையுமே செம்மையாகக் காட்டப்படுகிறது. 


செம்மை என்பது குருதியின் குறியீடே!

செய்யோனாகிய முருகனும் வளமைக்கான கடவுள்தான் என்பதையே இது உணர்த்துகிறது. 


வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூலின் அட்டைப் படத்தில் நெல்நாற்றுமுடியில் குங்குமம் இடப்பட்ட காட்சியை நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பதுகூட விதை, நாற்று என்பதெல்லாம் விளைச்சலை, போகத்தை, வளமையையே குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகத்தான்!

'நெல் நாற்றுமுடி'க்குக் குங்குமம் வைத்திருப்பதே  தாந்திரீக மரபின் வளமைக்கான குறியீட்டு மரபு வடிவம்தான். 


மேலும், நாற்றுமுடி, 'இந்திரமுடி' என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது. அதில் குங்குமம் இடுவது என்பது, வளைமை வழிபாட்டின் குறியீட்டு மரபின் நீட்சியேயாகும்! 


விதையிடுதல், நாற்றுநடுதல்,

மழைபெய்வித்தல், மழைநீரைக்காத்தல், ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைக்

காத்தல் என்ற வளமை சார்ந்த வழிபாட்டுக் குறியீட்டு மரபைச் சார்ந்தவர்களாகத்தான்  ஐயனாரும்/இந்திரனும் காணப்படுகிறார்கள். 


இந்த போதிசத்துவர்களின் நினைவாகத்தான் போகிப்பண்டிகையன்று நெல்லோடு சிறுபூளைப் பூவையும் கலந்து  தூவுதல், வேப்பிலை, மாவிலை, கூழைப்பூ எனும் கண்ணுப்பீளை தோரணங்களையெல்லாம் குளக்கரையிலும்,

வீட்டின் முகப்புகளிலும் வைத்துக்கட்டி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதுவே காப்புக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. 


அறுவடைக்கான வேளாண் உற்பத்தியைப் போகம் எனும் சொல்லால் குறிப்பது வழக்கம். போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான் போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் 'போகி' என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்கள். அதாவது, போகத்தைத் தருவதால் 'போகி' என  மழையைக் குறித்துள்ளார்கள். மேலும், வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாக இருப்பவை  இந்த மழையும் மாடுகளும்தான்.

அந்தவகையில், உழவுத்தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

மழையைத் தெய்வமெனத்

தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்கிறார்கள் உழவுமரபினர் என்றும், அத்தகைய மழைத்தெய்வமானது 'போகி' என்னும் இந்திரனே என்கிறது இந்நூல்! 


இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிச்சொல்லே.

வருணன்(நீர்)/ வாயு(காற்று)/ சூரியன்/ அக்னி மற்றும் பிறதெய்வங்கள் /தேவர்கள் இந்திரனுக்குக் கீழே இருப்பவைகளாகும். 


இந்த ஐம்பூதங்களே பலபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரம்.

அந்த உற்பத்திக்குக் காரணமான இந்திரனே பஞ்சபூதங்களின் தலைவனுமாவான். 


வேளாண்மரபின் மழைநீர்த்தெய்வம் இந்திரனே! அவனே முதல்வேந்தன்/காப்புக்குரியவன். காப்புக்கட்டுதல் என்பது ஒரு வளமைச்சடங்காகும். 


பொங்கலுக்கு முதல்நாள் மழைத்தெய்வத்துக்கு நன்றி பாராட்டுதல் எனும் வளமைச்சடங்குதான் இந்தக் காப்புக் கட்டுதல். 


காப்புக்கட்டுதலில் வேப்பிலை /மாவிலை/ கண்ணுப்பூவிலை அல்லது கூழைப்பூ!/ஆவாரம் பூ போன்றவை வீட்டுமுகப்புகளிலும் குளக்கரையிலும் வைத்து காப்புக்கட்டப்படுகிறது. இந்தக் கண்ணுப்பூவிலையைப் பற்றி அதன் பல பெயர்களாக கண்ணிப்பிள்ளை/ கூழைப்பூ/கண்ணுப்பூளை/ கூரைப்பூ என்றெல்லாம் விவரிக்கும் இந்நூல், எதற்காக இந்திரனுக்கு இந்தப்பூவை வைத்துக் காப்புக் கட்டுகிறார்கள் என்றால்?! ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திர அடையாளத்தை-

போகியைக் குறிக்கவே பொங்கலுக்கு முதல்நாளான காப்புக்கட்டுதலில் இந்தப்பூவானது பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஏர் மகாராசன். 


மேலும், போகி என்பது நீருக்கு நன்றிசெலுத்தும் நாள்;

பொங்கல் என்பது 'போகி' யாகிய இந்திரனுக்கும் மாடுகளுக்கும் நன்றிசெலுத்தும் நாளே என்றும் குறிப்பிடுகிறார் மகாராசன். 


சிந்து என்பதற்கு நீர்ப்பொருள்தான்.

நீர் என்று சொல்லப்படவேண்டிய இடங்களிலெல்லாம் 'சிந்து' என்றே நூற்றுக்கணக்கான பாடல்களில் ரிக்வேதம் கூறுகிறது. 


சிந்து+அரன்=சிந்திரன்.

சிந்திரன் என்பதே இந்திரன் என்று மருவியது. ஆகையால், இந்திரன் தமிழ்ச்சொல்லே என்று இந்திரனுக்குச் சொல்லாய்வுகளின் வழி விளக்கம்காட்டி சிலிர்க்க வைக்கிறது இந்நூல்.... 


நீர் திரவ வடிவம்!

திட வடிவம்! என இரு வடிவங்களையுடையது என்பது அறிவியல் மரபு! 


அந்த மரபை உடைத்து?!

நீருக்கு ஒரே வடிவம்தான். அது, இந்திரன்தான் என்கிறது  இந்நூல்! 


நீரியல் சிந்தனையறிவு வேளாண் மக்களுக்கு மட்டுமல்ல, இந்நூலாசிரியக்கும் மிகஅதிகம் என்ற உணர்வு இந்நூலை வாசிக்கும்போதே நமக்கு ஏற்பட்டு விடுகிறது. 


'நீரின்றி அமையாது உலகு'-என்பது

எவ்வளவு உண்மையோ?! அவ்வளவு உண்மை!   இந்நூலின்றி இனி அமையாது  வேளாண் மரபு! 


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! என்கிறான் பாரதி!

'வந்தனை' செய்திருக்கிறார்

ஏர் மகாராசன். 


வாழ்த்துக்கள்! 


கட்டுரையாளர்:

கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,

மாவட்டச் செயலாளர்,

நாம் தமிழர் கட்சி. 


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


ஞாயிறு, 9 ஜனவரி, 2022

போகிப் பண்டிகை: மழைத் தெய்வ - இந்திர வழிபாட்டின் பண்பாட்டு வடிவம் : மகாராசன்


ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.  இத்தகையப் பொங்கல் விழாவைப் போகி வழிபாட்டுச் சடங்குடன் தொடங்குவதுதான் உழவுத் தொழில் மரபினரின் வழக்கமாய் இருந்திருக்கிறது. வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும். மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு. போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர். 

வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை - இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது. 

கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர். எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது. 

ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

போகி என்னும் மழைத் தெய்வத்திற்கான வளமைச் சடங்கின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் ம.சோ.விக்டர் இதுகுறித்துக் கூறும்போது, கதிரவனுக்கும், மழைக்கும், இயற்கைக்கும், வேளாண் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழா கருதப்படுகிறது. உலக நாகரிகங்களில் இதனை அறுவடை விழா எனக் கொண்டாடினர். சங்ககாலத்தில் தொடர்ந்து ஒரு மாதம் நிகழ்வுற்ற  இந்திர விழாவின் தொடர்ச்சியாக அல்லது அந்த விழாவை மீண்டும் புதுப்பிக்கும் விழாவாகப் பொங்கலைக் கருத இடம் உண்டு. 

போகிப் பொங்கல் என்ற முதல் நாள் விழா, பழையன போக்கி புதியன ஏற்றல் என்ற பொருளில் அறியப்படுகிறது. போகி - போக்கி என்ற சொற்சுருக்கமாகக் கூறுவர். போகி என்ற பெயர் இந்திரனுக்கு உரியது. போகுதல் என்பது நுழைதல், புணர்தல் என்ற பொருளிலும் விரியும். பொங்கல் விழாவின் முதல் நாள் விழா, இந்திரனை நினைவுகூறும் விழாவாகவும் கருத இடமுண்டு என்கிறார். 

மேலும், சங்ககாலத்தில் இந்திரவிழா ஒன்றே தமிழகத்தின் பெருவிழாவாக இருந்தது. சங்கம் மருவிய பின் அயலாருடைய ஆட்சி தமிழகத்தில் தோன்றிய பிறகு இந்திர விழா கைவிடப்பட்டது. பொங்கல் விழா சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவும் காளைகளுக்கும், உரம் முதலியவற்றை அளிக்கும் மாட்டுக்கும் நன்றி கூறும் விழா என்று சொல்லப்படுகிறது. 

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாளில் கொண்டாடப்படும் விழா வேளாண்மையை மையப்படுத்துகிறது. வேளாண்மைக்கு அடிப்படையான நீரைப் பற்றிய செய்திகளும் நீரை வழிபடுவதும் பொங்கல் விழாவில் காணப்படவில்லை. போகி என்ற சொல் பழையவற்றைப் போக்கி அழித்தல் என்றும், அதனால் பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவது என்றும் சொல்லப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்று சொல்லப்படுவதற்கும் தீயிடல் போன்ற நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

போகி என்ற சொல் இந்திரனைக் குறிப்பது (போகி தமிழ்ச் சொல்லே). பொங்கல் விழாவின் முதல் நாளில் போகி நாள் என அறியப்படுவது இந்திரனை நினைவு கூறுவதே எனக் கருத இடமுண்டு. எனவே, போகி நாள் நீருக்கு நன்றி சொல்லும் நாளாகக் கருதலாம். எனவே, கைவிடப்பட்ட இந்திர விழாவின் மறு விழாவாக இந்திரனை முதல் நாள் வாழ்த்தித் தொடங்கும் விழாவாகப் பொங்கல் விழாவை கருத இயலும் என்கிறார் ம.சோ.விக்டர். ஆகவே, உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் பண்பாட்டுப் புலப்பாட்டு நடத்தைகள், மழைத் தெய்வமான போகியை  - இந்திரனைத் தொழுத பிறகே நடைபெறுகின்றன எனலாம். 

தை மாத வேளாண்மைப் போகத்தின் அறுவடை என்பது, மருத நிலத்தின் வயல்வெளி சார்ந்த நெல் அறுவடையை மட்டும் குறிப்பதல்ல. மருத நிலத்தில் பெருவாரியாக நெல் விளைவிக்கப்பட்டாலும், கரும்பு, மஞ்சள், வாழை போன்றவையும் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, குறிஞ்சி, முல்லை நிலங்களிலும், நெய்தல் நிலத்தின் அருகமைப் பகுதிகளிலும், மிக அரிதாகப் பாலை நிலத்திலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தந்த நிலத்தின் வாகுக்கும் மழைப் பொழிவுக்கும் ஏற்ற வகையில் வேளாண் பயிர்கள் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. 

மேற்குறித்த நிலங்களிலும் வேளாண் போகம் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நில மக்கள் யாவருக்குமான உணவின் பெருந்தேவையையும் பெருமகிழ்வையும் தந்திருப்பது நெல்லின் அறுவடைதான். அதனால்தான், அய்ந்து வகைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர் யாவரும், நெல்லரிசிப் பொங்கலிட்டு அறுவடைப் பண்பாட்டைப் புலப்படுத்தியிருக்கின்றனர். 

பொங்கல் தளுகையில் மருத நிலத்தின் நெல்லரிசி மட்டுமே இடம்பெறுவதில்லை. மருத நிலத்தில் விளைந்த கரும்பும் மஞ்சளும் வெற்றிலையும், குறிஞ்சி நிலத்தின் கிழங்குகளும் பாக்கும், முல்லை நிலத்தின் பூசனி, சுரை, புடலை போன்ற காய்களும் மொச்சை போன்ற பயறுகளும், நெய்தல் நிலத்தின் உப்பும் பனங்கிழங்கும் என, எல்லா நிலப்பகுதியிலும் விளைவிக்கப்பட்ட உணவு மற்றும் உணவு சார்ந்த அறுவடைப் பொருட்கள் யாவும் பொங்கல் தளுகையில் இடம்பெற வைப்பது பொங்கல் வழிபாட்டு மரபில் இருந்திருக்கிறது. 

இவ்வாறு, பொங்கல் தளுகையில் மற்ற அறுவடைப் பொருட்கள் இடம்பெற வைத்ததன் நோக்கம் என்பது, அய்ந்து வகைத் திணைநிலப் பரப்புகளில் விளைவிக்கப்பட்ட வேளாண் போகத்தைச் சமமாகப் பாவித்தலை அடிப்படையாகக் கொண்டதாகும். 

அய்வகை நிலப்பரப்பிலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருப்பதையும், பண்டமாற்று மட்டுமல்லாமல், உணர்வுப் பறிமாற்றங்களும் நடைபெற்று வந்திருப்பதையும்தான் இத்தகையப் பண்பாட்டு நடத்தைகள் காட்டுகின்றன. அதனால்தான், அய்வகைத் திணை நிலம் சார்ந்த தமிழர் யாவருக்குமான பண்பாட்டுப் புழங்கு வெளியாகப் பொங்கல் தளுகைச் சடங்கு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506



பொங்கல் பண்டிகை: அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடு - மகாராசன்


மழை வளம் கருதிய நீர்ச் சடங்கு, நிலம் வளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி வளம் - உணவு வளம் கருதிய அறுவடைச் சடங்கும் வேளாண்மை உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய்த் தமிழ்ச் சமூகத்தில் பன்னெடும் காலமாய் இருந்து வருகின்றது. அவ்வகையில்,  தை என்னும் சுறவம் மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. 

சூரியன், மழை, கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகிற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடைதான். 

இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான். 

தமிழரின் பொங்கல் விழாவானது, அறுவடைத் துய்ப்பின் உணவுப் பண்பாடு சார்ந்த சடங்கியல் கூறுகளை மட்டும் கொண்டதல்ல. பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாட்டில் பல பொருண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும் சொல்லே பொங்கு என்பதாகும். பொங்குவதால் பொங்கல் என்றாயிருத்தல் வேண்டும். 

பொங்கல் என்பது வெறும் உணவுப் பொருள் சமைத்தலை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பொங்கல் எனும் சொல்லானது, பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல் எனப் பல பொருண்மைகளைத் தருகின்ற குறியீட்டுச் சொல்லாகவும் இருக்கின்றது. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடாகவே பொங்கல் அமைந்திருக்கிறது. அவ்வகையில், பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடுகளும் நடத்தைச் செயல்பாடுகளும் வளமை சார்ந்த சடங்கியல் பின்புலத்தையும் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன எனலாம். 

தை மாத அறுவடைக் காலத்தில் வளமை சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடாக வழமையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற பொங்கல் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகி இருக்கின்றன. குறுங்கோழியூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலானது, நெல் களத்தை வருணித்துக் கூறும்போது போர்க்களத்துக்கு உவமையாகச் சுட்டுகிறது. 

வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த 

வாய்க் கரும்பின் கொடிக் கூரை 

சாறு கொண்ட களம் போல, 

வேறு வேறு பொலிவு தோன்ற 

குற்றானா வுலக்கையால் 

கலிச் சும்மை வியாலங் கண் 

என, அறுவடை விழாவானது சாறு கொண்ட களம் போல இருப்பதாகப் புலவர் கூறுகிறார். 

சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச்செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன என்பார் நா.வானமாமலை. இதுகுறித்து அவர் கூறும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது. நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. 

தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளைக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து; நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது என்கிறார்.

சங்ககாலத் தமிழ் நூல்கள் பலவும் அறுவடைக் காலமான தை மாதத்தைச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்)

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறு)

தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறம்)

தைஇத் திங்கள் தண்கயம் போது (ஐங்குறு)

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலி)

எனப் பலவாறாகத் தையின் சிறப்பியல்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. 

இதன் பின்புலத்தில் இருப்பது, அறுவடைக் காலத்தின் பொங்கல் விழாவே ஆகும். 

இதனையே, சீவக சிந்தாமணி குறிப்பிடும்போது, 

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

என, பொங்கலினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் ஓர் அங்கமாக அமையும் அறுவடைச் செயல்பாடானது காலம், இடம், சூழல், தேவை, நோக்கம், நிலம், பயிர் போன்றவற்றால் வேறு வேறான வடிவங்களையும் துய்ப்புகளையும் பண்பாட்டு உள்ளீடுகளையும் கொண்டதாகும். 

தமிழர்களின் பண்பாட்டு மரபில் காணலாகும் பொங்கல் விழாவும் சடங்கியல் கூறுகள் நிறைந்த அறுவடைத் துய்ப்பின் புலப்பாடுதான். அதிலும் குறிப்பாக, நெல் அறுவடையை மய்யமிட்டுத்தான் பொங்கல் விழாச் சடங்குகள் அமைந்திருக்கின்றன. நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் அதேவேளையில், உழைப்பிற்கும் உற்பத்திக்கும் உதவி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிக்கடன் செலுத்தும் தளுகை விழாவாகவே கொண்டாடப்படுகிறது. 

மழைப் பொழிவைப் பொருத்தும், நீர் ஆதாரங்களைப் பொருத்தும்தான் வேளாண்மை உற்பத்தித் தொழில் நடபெற்று வந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற பழமொழிகள் ஒருபோக வேளாண்மைச் சாகுபடியைத்தான் குறிக்கின்றன. அதேவேளையில், ஆற்றுப்படுகையோரங்களில் இருபோகச் சாகுபடிகள் நடந்திருக்கின்றன. மழை நீரை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில், தேக்கி வைத்திருக்கும் மழை நீரைக்கொண்டு ஒருபோக வேளாண்மைதான் விளைவிக்க முடியும். 

ஒரு போகமாகவோ அல்லது இரு போகமாகவோ மேற்கொள்ளப்பட்டு வந்த வேளாண்மை உற்பத்தியானது, தை மாதத்தில்தான் ஏகபோகமாக அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் முடிவையும் - கூட்டுழைப்பின் மகிழ்வையும் - உணவுத் தேவையின் நிறைவையும் தருவது அறுவடைக் களமும் காலமும்தான். அதனால்தான், அறுவடைச் செயல்பாடுகளைச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் உழவுத் தொழில் மரபினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 

உழவுத் தொழில் மரபினரும், உழவுக்குத் துணை புரிந்த இதரத் தொழில் மரபினரும் ஒருங்கிணைந்த கூட்டுறவாலும் உழைப்பாலும்தான் வேளாண் உற்பத்தியின் அறுவடையைத் துய்க்க முடிந்திருக்கிறது - துய்க்கவும் முடிகிறது. வேளாண்மை உற்பத்தியில் பங்கெடுத்த அனைத்துவகைத் தொழில் மரபினர்கள் மட்டுமல்லாமல், உணவுப் பொருள் வேண்டி நின்ற - நிற்கும் யாவருமே வேளாண்மை அறுவடையை மகிழ்வுடனும் நிறைவுடனும் கொண்டாடி வந்திருக்கின்றனர்; கொண்டாடியும் வருகின்றனர்.

அறுவடைத் துய்ப்பின் பண்பாட்டுச் செயல்பாட்டில் இரண்டு வகையான புலப்பாட்டு நிலைகள் அமைந்திருக்கின்றன. முதலாவதாக, வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டில் நேரிடையாக உழைப்பைச் செலுத்தும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. இரண்டாவது, உழவுத் தொழிலுக்குப் பக்கத்துணையாய் இருந்த இதரத் தொழில் மரபினரும் மற்றவர்களும் புலப்படுத்தும் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. 

அறுவடைத் துய்ப்பும் மகிழ்வும் இரண்டு தரப்பினருக்கும் பொதுவான ஒன்று; புலப்பாட்டு நோக்கங்களும் ஒன்றுதான். தளுகையிடும் பண்பாட்டு நோக்கங்கள்தான் வேறு வேறாகும். மிக நுட்பமாகத்தான் இந்த வேறுபாடுகளை அறிய முடியும். போகிப் பொங்கல், மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனும் நால்வகைப் பொங்கல் சார்ந்த பண்பாட்டு நடத்தைகளும் தளுகைச் செயல்பாடுகளும் புலப்படுத்தப்படும் பாங்கும் நோக்கமும் வேறு வேறானவை.

உழவுத் தொழிலில் நேரிடையாகப் பங்கேற்காத இதரத் தொழில் மரபினரும் மற்ற தரப்பினரும் பழையன கழிதலாகவும் புதியன புகுதலாகவும் போகி நாளைக் கருதுவர். மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கலிட்டுப் பண்பாட்டுத் தளுகையை அவர்கள் படைப்பர். மேலும், காணும் பொங்கலன்று உறவுகள் சூழ விருந்துண்டு மகிழ்ந்திருப்பர். இந்தத் தரப்பினரைப் பொருத்தளவில், வேளாண்மை அறுவடைத் துய்ப்பும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும், வேளாண்மை செய்வித்த உழவர்க்கும் பொங்கல் தளுகையிட்டுத் தொழுவதுதான் பொங்கல் பண்பாட்டுச் சடங்கின் உள்ளீடாக அமைந்திருக்கின்றன.

வேளாண்மை உற்பத்தியில் நேரிடையாகப் பங்கேற்கும் உழவுத் தொழில் மரபினர் புலப்படுத்தும் பொங்கல் பண்பாட்டுத் தளுகைச் சடங்கியலானது, அறுவடைத் துய்ப்பைக் கொண்டிருக்கும் அதேவேளையில், வேளாண்மை உற்பத்தியோடு நேரடித் தொடர்பு கொண்ட யாவற்றுக்கும் நன்றிப் பெறுக்கைக் காட்டி, பொங்கல் படையலிட்டுத் தொழுவதாகும். 

வேளாண்மைக்கு அடிப்படையானதும் துணையானதுமான நிலம், மழை, சூரியன், உழவு மாடுகள், பசு மாடுகள், வித்துகள் போன்ற யாவற்றுக்கும் பொங்கல் தளுகைப் படையலிட்டுத் தொழுது வழிபடும் சடங்கியல் மரபு வேளாண் உழவுத் தொழில் மரபினரிடம் தனித்துவமாகக் காணப்படுவதுண்டு. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506