புதன், 13 ஜூன், 2018

கவிதை மொழியின் அழகியலும் அறமும் அரசியலும். :- மகாராசன்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளோடும் கவிதைகள் குறித்தும் நிறையப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் . ஆனாலும், ஆற்று மணலில் சின்னதாய் வீடு செய்து மகிழ்ந்து பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்போதுதான் சின்னதாய் ஒரு கவிதைத் தொகுப்பைச் சொல் நிலம் வழியாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது . 

தமிழ்ச் சமுகம் , பண்பாடு , அரசியல் , மொழி , இலக்கியம் , வரலாறு போன்றவை குறித்தெல்லாம் மிக காத்திரமான எழுத்துகளையே புலப்படுத்திக் கொண்டிருந்த நான் , இளைப்பாறிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் சொற்களோடு பயணிக்கவும், கவிதை மொழிதான் எனக்கு வசமாய் வந்து நிற்கிறது . 

வாழ்க்கையின் இயங்கு தளத்தின் ஊடாகக் கடந்து செல்லும் போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதை விட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்தும் வெளிவந்தும் மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது தான் கவிதைத்தளம். சுருக்கமாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள் உணர்வுகளைக்
கிளர்த்துவதுதான் கவிதை .

தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் , உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணைசேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாய்ப் பிறக்கிறது . இத்தகையக் கவிதைகள் தமக்கான வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை . மரபுக் கவிதை , புதுக்கவிதை , நவீனக் கவிதை என்றெல்லாம் கவிதையின் வடிவங்கள் பலவாறாக இருந்தாலும் , எல்லாக் காலத்தியக் கவிதைக்குள்ளும் அந்தந்த காலத்திய மனித சமூக வாழ்வியலின் பாடுகளையும் அழகியலையும் அரசியலையும் ஏதோ ஒரு வகையில் புலப்படுத்துவதாகத்தான் திகழ்கின்றன . 

மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல, இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும் , அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழும்பும் கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து , அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தத்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன . அதுமட்டும் இல்லாமல், புதிய உணர்வு ஓட்டங்களையும் , நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. 

ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் என்னும் வாசனையைத் தாண்டி, ஒரு கவிதைப் பனுவலுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது இன்றைய கவிதை மொழி. 

ஒரு கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டடோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல்காப்பியம் . ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் அரசியல் மறைந்து கிடக்கிறது என்கிறது மார்க்சியம் . ஆக, எத்தகையக் கவிதை மொழியாக இருந்தாலும், யாருடைய கவிதை மொழியாக இருந்தாலும், அவை வெறும் அழகியல் மொழி என்பதாக மட்டுமல்ல; தெரிந்தோ தெரியாமலோ அரசியலையும் உள்ளீடாக அவை கொண்டிருக்கக் கூடும். இந்நிலையில், யாருக்கான அரசியலை அழகியலோடு வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. எதன் பக்கம் நிற்கிறோம்; யாரின் பக்கம் நிற்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில், கவிதை மொழி என்பது மனித இருப்பின் சாட்சிக் கிடங்காய்க் காலம் காலமாக நிலைத்திருக்கக்கூடியது. ஆகவே, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்தச் சமூகத்தை மொழிவழி சாட்சியங்களாய்ப் பதிவு செய்ய வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் இருக்கின்றன. அந்தப் பொறுப்பும் கடமையும் எனக்கும் இருக்கிறது என்பதன் சாட்சி மொழியாய் வெளிவந்திருப்பதுதான் சொல் நிலம் .

புளுதித் தூசுகள் தோய்ந்த எனது பாடுகளையும் , உருமாறிக் கிடக்கும் எனது நிலத்தின் பாடுகளையும் , வாழ்வு இழந்து தவிக்கும் சம்சாரிகளின் துயரப் படலங்களையும், ஒடுக்குண்டு உரிமைகள் இழந்து தவிக்கும் இனத்தின் அழுகுரலையும்தான் எனது கவிதைகளின் பாடுபொருளாய் ஆக்கி இருக்கிறேன்.

நிலத்தைப் பாடுதல் என்னும் பெரு மரபு தமிழில் நிறைய உண்டு . நிலத்தைப் பாடுவதே தமிழின் முதன்மைப் பொருள் எனக் குறிக்கிறது தமிழ் இலக்கண மரபு . நிலம் என்னும் முதன்மைப் பொருளே கருப்பொருள் வளர்ச்சிக்கும் உரிப்பொருள் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது . பச்சையம் போர்த்திக்கிடந்த இந்த மரபு மீட்சி பெறாமல் ஒரு கட்டத்தில் தேக்கப்பட்டது. இந்நிலையில்தான், மரபிற்கும் நவீனத்திற்குமான சொல் முடிச்சுகளை மொழி நிலத்தில் விதைக்கும் முயற்சியாகச் சொல் நிலத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். 

சிறு சிறு சுள்ளிகளைக் கவ்விக்கொண்டு கூட்டைக் கட்டும் ஒரு காக்கையைப் போல, நானும் கவிதைகள் செய்திருக்கிறேன் . 

வாழும் காலத்தின் பாடுகளையும், நினைவுகளையும் சொற்களின் வழியாக மொழியில் பதியும் எனது கவிதைகளின் ஆத்மா என்பதெல்லாம், நிலத்தின் தவிப்பை , நிலத்தின் வலியை , சிதைந்து கொண்டிருக்கும் அதன் கோலங்களைப் பேசுவது தான் . கவிதையின் இத்தகைய தொனி, பிரச்சாரத் தொனியாகக் கூட சுருக்கிப் பார்ப்பது கூட நிகழ வாய்ப்புண்டு . 

வாழும் காலத்தின் சாட்சியாய் விரியும் மொழி என்பதெல்லாம் பிரச்சாரம்தான். அந்த வகையில், எனது கவிதைகள் முழுக்க முழுக்க கவித்துவ அழகியல் நிரம்பியது எனப் பொய் உரைக்க மாட்டேன். ஏனெனில், பிரச்சாரம் செய்வதற்கென்றே எனது கவிதை மொழியை எனக்குத் தோதான தொனியில் புலப்படுத்திருக்கிறேன். ஆனால், சொல் நிலத்தைக் குறித்து வெளியான தோழர்களின் விமர்சனங்கள், சொல் நிலத்தின் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் இணையாகவே அடையாளப்படுத்தி வருகின்றன. நிலத்தின் தவிப்பை வாசகருக்கும் முடிந்தளவு கொண்டு சேர்த்திருக்கிறேன் . ஆனாலும், கவிதைகள் குறித்து இன்னும் பக்குவப்பட வேண்டும்; அவற்றின் நுட்பங்கள் குறித்துப் பயணிக்க வேண்டும் என்கிற தேடல் மன நிலையோடுதான் கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன். 

தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், எனது மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.

சொல் நிலத்தைப் பரவலாக்கும் முயற்சியில், நூல் அறிமுக மதிப்பாய்வுக் கூட்டத்தை நிகழ்த்திய கும்பகோணம் தாழ்வாரம் நிகழ்வில் நான் ஆற்றிய ஏற்புரை.

நன்றி:   தோழர்கள் பாரதிமோகன், இலக்கியன், செருகுடி செந்தில் ஆகியோருக்கும், மகள் அங்கவை யாழிசை அவர்களுக்கும்.

மகாராசன்.


சொல் நிலத்தில் விழுந்த வீரிய விதைகள் : கோ. பாரதிமோகன்.

மலை எது - நதி எது?
கடல் எது - உடல் எது? - எனும் பேதமற்று எல்லாவற்றையும்
கட்புலனாகாது உள்துளைத்து ஊடுருவி
பிரபஞ்சப் பெருவெளியினை கடந்துகொண்டேயிருக்கும் பிசாசுத்துகள்களைப் பிடிக்கப் பித்து கொண்டலையும் அந்நியப் பேய்களுக்கு அதிகார வர்க்கத்தால் ஏலம்விடப்பட்ட  நிலத்திலிருந்து தம் சீர்மைமிகு 'சொல் நில'த்தோடு வந்திக்கிருகிறார், கவிஞர் மகாராசன்.

ஆனால், 'தமிழ்ப் பாட்டன்' கம்பன் காட்டிய
'மண்மகள் அருந்தினள்' எனும் சுவடுகள் காணா சொர்க்கபுரிச் சொற்களையல்ல...

வெற்றுக்கால்கள் கழனி பாவிய நிஜத்தில், காற்குருதி சுவைத்தக் களிப்பில் இதயங்கனிந்து செந்நெல் பூத்த பூமியை, 'சொல் நிலம்' கவிதைத் தொகுப்பாய் மலர்த்தியிருக்கிறார் கவிஞர் மகாராசன்.

பழுத்துக் கனிந்த சொற்தெரிவில் உழுது
பண்படுத்தியிருக்கிற சொல்நிலம் முழுக்க உயிர்வரிகள் பூத்துக் கனிந்திருக்கின்றன.
*
பூமி எப்போதும் தாய்மனம் தரித்தது.
தன்னில் விதையென விழுந்தவைகளை  காலங்கடந்தும்  விளைவிக்கும் ஈரங்கொண்டது.
அதன் பொருட்டே, விழுகிற விதைகள் வீணாவதில்லை.

'விளைந்தால் வரம்; விளையேல் உரம்' என பண்படு நிலத்தைச் சுட்டி

      "எப்போதோ விழுந்திருந்தாலும்
        மேகத்தின்
        உயிர்த்துளி குடித்து
        மீண்டெழுகின்றன
        புதைத்திருந்த விதைகள்" என்கிறார்.

கவிஞனைப் பொருத்தவரை
விதையும் சொல்லும் வேறு வேறு அல்ல.
அதனால்தான் சொல்லை விதைத்து அவன் கவிதையை அருவடை செய்கிறான்.
*
'நீ ஒரு பூவைப் பறித்தால்
வானத்தில் நட்சத்திரம் ஒன்று
உதிர்ந்து போகிறது' என்கிறது ஜென் கவிதை.

பிரபஞ்சம் முழுக்க கட்புலனாகா கண்ணிகளால் ஆனது.
பூதங்கள் ஐந்தும் ஒன்றோடொன்று உறவுடையவை.

இதை வேறொரு வார்த்தைகளாலும் இப்படிச் சொல்கிறது ஜென்:

'சிலந்தி வலையின்
ஓர் இழையை தொட்டால்
மொத்த பிரபஞ்சமும் நடுங்குகிறது'.

அஃகுதொப்பவே கவிஞரும் நிலத்தை, பொருளை, உயிரைப் பிணைத்து
கவிதையில் படிமம், குறியீடு என விவரிக்கையில் அச்சொல்லோடு பிறப்பொக்கிய எல்லா உயிரும் இசைந்திருப்பதை இதயம் வரித்துக் கொள்கிறது:

     "கிளை பரப்பி
      நிழல் விரித்த நெடுமரம்
      சாய்ந்து போனதில்
      கூடுகள் நாசம்'
எனவும் அதைத் தொடர்ந்து -
     "பறவைகளின் ஒப்பாரி
      ஒலித்துக் கொண்டே இருக்கிறது
      கூடு தேடி' எனவும் சொல்கிறார்.

இங்கே மரமும் பறவைகளும் படிமமும் குறியீடுமாகி ஓர் அரசியலை உளவியலை உள்வாங்கச் செய்வதை உணரமுடிகிறது.

கூடு வீடாவதையும் மரம் நாடாவதையும்
நாடு உலகாவதையும் விரித்து நோக்கவேண்டியிருக்கிறது.

மரம் வெட்டியக் கோடரி யார் கையில் எதன் பொருட்டு என்பதே கவிதை பேசும் அரசியல்.
*

எல்லாவற்றையும் கழுவிக் களையும் நீர்,
மனித மூளையில் படிந்த அழுக்கை மட்டும் கழுவாமல் போகுமா?

இங்கே அலைகழுவிய சொல்லில்
கடற்கர்ப்பத்துக் கோபமாய் கவிஞர் வழி பொங்குகின்றன, பேரலைகள்..

    " ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
       அகலப் பரப்பிச்
       சேரிக்குள் இழுத்து வந்தன"
என்கிற சொல்லில் பேரலை புரிந்தது மட்டுமல்ல, புறந்தள்ளபட்ட நாமும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இயற்செயல் வழி சுட்டுகிறார் கவிஞர்.


ஒடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வாழ்வும் மனமும் ஆற்றாமையில் வெம்முவதை
பயனறுத்து ஒதுக்கப்பட்ட உழவுக்கருவி வழி,

     "பாழ் நிலம் நினைத்து
      தவித்துக் கிடக்கும்
      கலப்பை போல்
      தனித்துப் போனது யாவும்"
என துயர் பேசும் வரிகள் சொல்ல விழைவது இதுதான்..
நிலம் பாழ் பட்டதா? பாழாக்கப் பட்டதா?

அரசியல் புரிந்தோர்க்கு பொருள் பாதகமில்லை.

இதயவறல் பாலை வெளியில் ஒற்றைத்துளி ஈரமாய் மனித மனங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.
அத்தகையோரின் முகம் பார்க்க முடியாவிடினும் அந்த இதயங்களின் ஈரச் செவிகளில் இசை வார்க்கும் காட்சியற்ற கண்களின் வேய்ங்குழல் வழி கசிகிற நன்றி,

     "விரித்திருக்கும் துணியில்
      விழுந்த காசுகள்
      சிதறிய கோலங்களா"கையில்,

     "குழல் தடவிய விரல்கள்
      காசு முகங்களைத்
      தடவுகையில் தெரிந்தன
      மனிதர்களின் நிறங்கள்" என்கிறபோது
வேரற்ற குழல் கனிந்த வாழ்வு இதயத்தில் இனிப்பதை தவிற்பதற்கில்லை.
*
ஒரே ஒரு சொல், கல்லை கனி'த்துவிடும்.
ஒரே ஒரு சொல் கடலை சுண்டி'த்துவிடும்.
மகிழ்விக்கவோ துயர்விக்கவோ சொல்லொன்று போதும்.
கவிஞரும் கண்ட காட்சியொன்றைக்
சொற்களாக்குகிறார்
அவ்வளவுதான்..
செஞ்சு பதறி உயிர்க் கூடு நழுவ நடுங்குகிறது.

காட்சி இதுதான்..

     "நாகமெனப் படமெடுத்த
      வனப்பின் அடியில்
      முளைத்த கிளையில்
      சருகுகள் வேய்ந்திருந்தது
       கூடு" என்கிறார்.
கூடுதானே..?
அது கிளையிருப்பதில் என்ன அச்சமிருக்கிறது?

நியாயம்தான்... ஆனால், இந்த சுட்டிக்காட்டுதலில்தான்'வலி மிகு'வாகிறது, மொழி.

ஏனேனில் இது நிகழ் காட்சியன்று, கடந்த காட்சி.
வேய்ந்திருந்தது என்பதை வேய்ந்திருக்கிறது என வாசித்தால், பொய்த்த இந்தியத்தின் கீழிருக்கும் தமிழ்நிலக்காட்சியைக் கண்ணுறக்கூடும்.

மேலும் 'உயிர்க்கூடு' கவிதையை இப்படி முடிக்கிறார், கவிஞர்:

     "இப்போதும்
      கூடு அதேதான்
      அடைகாக்கும் பறவை மட்டும் வேறு"

'கூடு அதேதான்' என்பதில் பெரும்பாதகம் ஒன்றுமில்லை. ஆனால், 'பறவை வேறு' என்பதில்தான் கவிதை கனம் பொருந்துகிறது.

வேறு பறவை யார் - எது அல்லது,
யார் யார் - எது எது என்பதை மொழிவிரிப்போர் பொருள்படுவர்.

எழுதி மேற்செல்லும் பணிமட்டுமே தம்முடயது என வலியுணர்தலை சொற்களில் கசியவிடுகிறார் கவிஞர். ஆனால்,  அச்சொற்களோ உறங்கவிடாமல் உள்ளம் உறுத்துவதை, வேறு வேறு வடிவெடுத்து வதைப்பதை, உண்மையின் நிழலாகி இதயம் சுடுவதை புறக்கணிப்பதற்கில்லை.

'மனங்கொத்தி' வரிகளில் கவிஞர் ஒன்று சொல்ல , சொற்களில் தற்கால அனலடிப்பதைத் தவிற்பதக்கும் இல்லை.

   "வண்ணங்களைத் தொலைத்த
    கனவுகளாய் கரைகின்றன இரவுகள்"
உண்மை தான் இரவெனில் வண்ணம் தொலையத்தான் வேண்டும். ஆனால் விடியல், ஓராயிரம் வண்ணங்களை ஒளிர்த்தவேண்டும் அல்லவா?

நம்பிக்கைகளை மடித்து தலையணைத்து உறங்கி எழுகையில் கண்களையும் குருடாக்கி விடும் ஓர் ஊமை விடியல் ஊர்வலம் வந்தால் என்ன செய்வது?

     "கண்களைக் கேட்காமலும்
      கால்களைத் தேடாமலும்
      ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு
      தலை கவிழத் திரும்புகிறது மனம்"
என்கிற போது ஓர் அரசியல் ஏமாற்றத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது மனம்.

வேறு என்னதான் செய்வது இக்கையறு நிலையில்..?

     "கவித்தனம் காட்டவே
      எழுதி  எழுதித் தீர்க்கின்றன சொற்கள்" -
எழுதிய சொற்களில் ஏமாற்றத் தீ ஆத்திரங்கொள்கிறது.

இங்கே எல்லாம் நிகழ்கிறது; எவருக்கும் நிகழ்கிறது. சாமானியத் தன்மை இருந்தால் சற்றென்ன..முற்றுமே மோசமாய் நிகழ்ந்துவிடுகிறது. கொலைப் பாதகத்திற்கும் தீ வல்லமை அஞ்சுவதில்லை. அப்போக்கை விளிக்கும்
கவிஞர் எச்சரிக்கைத் தொனியில்,

     "ஆணவப் படுகொலைகளுக்கு
      காரணங்கள் தேவையில்லை.
      சாமானியராய் இருத்தலே போதுமானது

     "அந்தப் படுகளத்திற்கு
      நாளை நாமும் அழைத்துவரப் படலாம்"
என்கிறபோது நம் 'இருத்தல்' நிமித்தம் பல ஐய வினாக்களை எழுப்புகிறது. மேலும்,
      "செத்ததற்குப் பிறகு
        நீதி வழங்கப்படலாம்
        அது
       அநீதியைக் காட்டிலும்
       கோரமாய்க்கூட இருக்கலாம்" என்கையில்
இந்தச் சீழ்ப்பிடித்த அரசியல் அமைப்பின் கீழ்
ஒரு சாமானிய வாழ்வின் கதியின் விதியை
நெஞ்சு நடுங்க வரித்துச் செல்கிறார், கவிஞர்.

மொழியும் நிலமும் உயிர் போன்றது.
இவைதான் உயிர்த்திருத்தலின் தணல் தகிக்கும் அடையாளம்.
இவ்வடையாளம் அற்றிருப்பதென்பது நீர்த்துப்போன உயிர்த்திரவத்தில் நெளியும் செத்தப் புழுக்களுக்கு ஒப்பானது.

இந்த உயிர்த்திருத்தலின் அடையாளத்தை மெய்ப்பித்திருக்க எத்தனை எத்தனை ஈகைகள் இங்கே அரங்கேறியிருக்கின்றன!

ஆனால் அந்த 'தியாக வேளைகளில்' நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?:

     "உசுப்பேத்தி உணர்வேத்தி
      தட்டேத்தி பாடையிலேற்றியதாய்
      சொற்புணற்சிப் பகர்வோரெல்லாம்
      வாய்ப்பொத்தி நிற்காமல்
      பெருங்களம் கண்டிருந்தால்
      நீங்கள் செத்திருக்க மாட்டீர்கள்தான்" -
     
கவிஞரின் இந்தக் கூற்று அனைவருக்குமான, அனைத்துக்குமான ஒரு குறியீடு.

கவிஞர் இப்படிக் கூறிமுடித்ததும்  வாய்ச்சவடாலிகளான நம்மை ஒரு குற்ற உணர்வு வந்து  குறுக்கிச் செல்வதை அத்தனை எளிதில் கடந்துவிட இயலவில்லை.

நாளை நம்மவர் சாக வேடிக்கை பார்த்து நிற்போம் நாம் என்பதும் நிஜம்தானே..


ஒரு மொழி கருவாகி உருவானபோதே
அறத்தை தன் இதயத்துடிப்பானதாகவும் இயல்பானதாகவும் வைத்திருக்கிற நிலம் நாசமாய்ப் போனதன் வரலாறு ஒன்று உண்டு.

இருக்கும் எல்லாவற்றையும் ஈந்துவிட்டபின்
சுரண்டப்பட வலியை நெஞ்சில் நிறுத்திய வரலாறு விளிக்கும் இனத்தை அடையாளப் படுத்தும் கவிஞர், இப்படிச் சொல்கிறார்.

     "ஆற்றின் அளவறிந்து
      ஈக மறந்து
      ஆறுகளையெல்லாம் ஈந்து
      கையேந்தி வாய்ப்பொத்தி நிற்கிறது
      தென்கோடியில் தொங்கிக் கிடக்கும்
      ஓர் இனம்"
அந்த இனம் எந்த இனம்...
சொல்லவும் வேண்டுமோ...?


சொல்லித் தீருமோ செம்மொழிச் சொல்லும்
சொல் ஊறும் நிலமும்..?!

கவிஞன் முக்காலமறிந்த தீர்க்கதரிசி.
அவன் குரல் ஓர் அறிவிப்புப் பலகை.
அலட்சியம் செய்தல் பின்விளைவில் மாளா வலி மிகும்

உயிர் வார்த்த நிலம் காக்க
ஆக்கிரமிப்பை வெளியேறச் சொல்லிச் சொல் விதைத்த நெஞ்சுக்கு தோட்டாக்களை பரிசளிக்கும் இவ்வதிகாரப் பொழுதில்
கவிஞர் மகாராசனின் 'சொல் நிலம்' பற்றிச் சொல்வதற்கு நிறைய உண்டு.

ஆனால் மனம் அழுகிற கண்ணீரை முற்றாய் சொல்லாய்த் திரித்துவிடுகிற திராணிச்சொற்கள் எட்டுத்திக்கு எங்கினும் இல்லை.

ஆனால் சொல்வதற்கு சொல் ஒன்று உண்டு;

கவிஞர் மகாராசனின்
'சொல் நிலம்' இதய வரி!
*
'சொல் நிலம்'
(கவிதைகள்)
ஆசிரியர்: மகாராசன்
தொடர்புக்கு: 94436 76082
maharasan1978@gmail.com
பக்கம்: 88
வெளியீடு: ஏர்
28, காந்தி நகர்,
செயமங்களம், பெரியகுளம்.
தேனி மாவட்டம் - 625603
பேச: 94436 76082