வியாழன், 17 டிசம்பர், 2020

வேளாண் மரபினரின் பெயர் மாற்றம் & பட்டியல் மாற்றம்: பொது சமூக மனசாட்சியின் கேள்விகளுக்கான பதில்கள். :- மகாராசன்.

 


அண்மையில் உழவர் போராட்ட ஆதரவும் இரட்டைவேட நிலைப்பாடும் எனும் கட்டுரையை எழுதி இருந்தேன்.

பார்க்க: 

https://maharasan.blogspot.com/2020/12/blog-post.html

வேளாண் தொழில் மரபினர், தங்களை வேளாளர் என்று அரசாணையால் அங்கீகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சமூக சனநாயக சக்திகள் எவ்வாறு அணுக வேண்டும்; பார்க்க வேண்டும் என்ற புரிதலையும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கட்டுரை இந்தது. 

ஆயினும், அந்தக் கட்டுரை பேசுயிருக்கும் பேசு பொருளுக்குள்ளேயே வராமல், பொத்தாம் பொதுவாக எதிர்ப்பதும் சாடுவதுமாகத் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் அவரது தோழமை வட்டத்தினர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். 

இன்னொரு தோழர் திருநாவுக்கரசு நாடிமுத்து என்பார், இதைக் குறித்து விளங்கிக்கொள்வதற்காக எம்மிடம் 18 கேள்விகளை முகநூலில் முன்வைத்துப் பகிர்ந்திருந்தார். 

அவரது கேள்விகளும் எமது பதில்களும் வருமாறு:

கேள்வி 1.

நீங்கள் இந்து சமூக அமைப்பை ஒப்புக் கொள்கிறீர்கள், இல்லையா?

பதில்:

வைதீக பிராமணிய இந்துமதம் வேறு; தமிழர் சமய மரபு வேறு. சைவ, வைணவ, நாட்டுப்புற வழிபாட்டு முறைகள் என இந்துமதத்திற்கு அப்பாற்பட்ட சமய வழிபாட்டு மரபு ஒன்று இருக்கிறது. எனினும், அவை இந்து சமய மரபாக அரசியல் சட்ட வடிவம் பெற்றதாக ஆக்கப்பட்டு விட்டது. இதை ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்து என்கிற சமூகமாகத்தான் சட்டப்படியாகவும் சமூகப்படியாகவும் பார்க்கப்படுகிறது.

கேள்வி 2.

அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இப்போது உள்ள பள்ளர் முதலான ஏழு சாதிகளின் சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டன? யார் சூட்டியது?'

பதில்:

பள்ளர் முதலான ஏழு சாதிகளும் பண்டைக் காலத்தில் இருந்து வழங்கிவரும் காரணப்பெயர்கள். சமூக வாழ்வியல் போக்கில் சமூகம் வழங்கிய பெயர்கள்.

1. குடும்பர்- குடும்பம்-குடும்பு நிர்வாகத்தைத் தோற்றுவித்தமையால் அமைந்த பெயர்.

2. பள்ளர்- பள்ளமான வயல் பகுதி உழவு செய்தமையால் அமைந்த பெயர்.

3. காலாடி- காலாட்படைப் போர்ப் பிரிவால் அமைந்த பெயர்.

4. வாரியான்- நீர் வாரியான்/ஏரி வாரியான் என நீர் வாரியம் மேலாண்மையால் அமைந்த பெயர்.

5. மூப்பர்- குடிகளில் மூப்பானது என்பதால் அமைந்த பெயர்.

6. தேவேந்திரகுலத்தான்- வேளாண்மைக்கு உகந்த மழைக் கடவுளான இந்திரரை வழிபடும் குலத்தைச் சார்ந்ததால் அமைந்த பெயர்.

7. பண்ணாடி- பண்ணையம் உருவாக்கி வேளாண்மை செய்தமையால் அமைந்த பெயர்.

மேற்குறித்த பெயர்கள் யாவும் சமூகப் பங்கேற்பு, தொழில், குலம் தொடர்பான காரணப்பெயர்கள். 

(இவை தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் பண்பாட்டுத் தரவுகளும் நிறைய நூல்களில் பரவிக் கிடக்கின்றன).

கேள்வி 3. 

இப்போதுள்ள சாதிப் பெயர்கள், அந்த 7 சாதிகளுக்கும் உள்ளவை எவ்வகையில் இழிவான பெயர்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்:

அந்த ஏழு சாதிப் பெயர்களும் இழிவான பெயர்கள் கிடையாது. மிகச்சிறப்பான காரணப்பெயர்கள்.

கேள்வி 4. 

பெருந்திரள் மக்கள் இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளீர்கள். அப்படியெனில், நீங்கள் உயர்ந்த சாதி! அதில் ஒன்றும் உங்களுக்கு அய்யப்பாடு இல்லையே?அப்படியெனில் தம்மை மஹர் என்றும், தீண்டப்படாதன் என்றும் அறிவித்துக் கொண்ட அம்பேட்கரின் இயக்கங்கள் உங்களை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:

ஒருவரைப் பலரும் நாயே என்று அழைக்கிறார்கள்; அவ்வாறே பாவிக்கிறார்கள் எனும் சூழலில், தான் நாய் இல்லை; நான் மனிதர் என்று அவர் அறிவித்துக்கொள்வதும், அதன்படியாக அவர் மனிதராகப் பாவித்துக் கொள்வதும் எப்படிச் சரியானதோ, அதே போல, ஒரு மக்கள் திரளை இழி சாதி; கீழ்ச்சாதி என மற்றவர் பாவிக்கிறபோது, தான் கீழ்ச்சாதி-இழிசாதி இல்லை என்று சொல்வது எப்படிப் பிழையாகும்? 

கீழ்ச்சாதி இல்லை என்று சொல்வது மேல்சாதி எனும் உணர்வால் அல்ல; தம்மை எந்தவொரு தரப்பும் சாதியால் கீழ்மைப்படுத்தக்கூடாது எனும் எதிர்ப்புணர்வில் இருந்து வருவதுதான். கீழ்ச் சாதி என ஒத்துக்கொண்டால், கீழ்ச்சாதியாகவே இருக்க வேண்டும் எனும் சமூக உளவியலை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்.

சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எல்லா இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியல் மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறி உள்ளார். அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொண்ட இயக்கங்கள் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் இதை ஆதரிப்பதுதான் நியாயமும் கூட.

கேள்வி 5. 

சாதியின் பெயரை மாற்றிவிட்டால், சாதி இழிவு நீங்கிவிடும் என்பதற்கு அடிப்படை ஏதேனும் உள்ளதா?

பதில்:

மதம் மாறிவிட்டால் சமூக இழிவு நீங்கும் என்று அம்பேத்கரே கூறி இருக்கிறார்.

குருடர், செவிடர், முடவர், ஊமை என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றோர் எனப்பட்டனர், அதுவும்கூட சரியில்லை என்று மாற்றுத் திறனாளி என்று அழைக்கப்பட்டனர்.

அலி, ஒம்போது, அரவாணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் திருநங்கை என்று மதிப்புமிக்க மனிதர்களாக அடையாளப்பட்டுள்ளனர்.

சூத்திரர், நீசர் என்ற பெயரில் குறிக்கப்பட்டதற்கு எதிராகத்தானே சுயமரியாதை இயக்கம் திராவிட அரசியலை முன்னெடுத்தது.

அரிசன், பஞ்சமன் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆதி திராவிடர்கள், தலித்துகள் என்று குறிக்கவும் அடையாளப்படுத்தப்படுகிறார்களே. 

மாதாரி சக்கிலி, பகடை என்று குறிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் என்று குறிக்கப்படுகிறார்கள்.

சின்னமேளம், பெரியமேளம் என இருந்த சாதிகள் இசை வேளாளர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெயர் மாற்றம் செய்த உடனே திடீர்மாற்றங்கள் எதிலும் ஏற்படப்போவதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு அதுவும் ஒரு அடிப்படை.

கேள்வி 6.

ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் உள்ள உட்சாதிப் பிரிவுகளில், ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருடன் உறவுமுறைக் கொள்வதில்லை. நீங்கள் எப்படி?அந்த ஏழு சாதிகளுக்குள்ளுமாவது உறவு கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகிவிடுமா?

பதில்:

அந்த ஏழு சாதிகளுக்குள் திருமண உறவு உண்டு. அகமணமுறையும் உண்டு. புறமண முறையும் உண்டு. அந்த ஏழு சாதிகளும் ஒரே சாதியாகத்தான் அவர்களுக்குள் பாவித்துக்கொள்கிறார்கள். அந்த ஏழு சாதிகளும் கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகக் காலப்போக்கில் மாறும்.

கேள்வி 7.

நீங்கள் உயர்ந்த சாதியாகி விட்டால், உங்களுக்கு கீழ்ச்சாதிகள் யார் யார்? உங்களுக்கும் உயர்வான சாதிகள் எவை?

பதில்:

கீழ்ச்சாதி இல்லை எனும் எதிர்ப்பும் குரலும் நகர்வுமானது உயர்சாதி எனும் இலக்கைக் கொண்டதல்ல; சாதி சமத்துவத்துக்கான - சமூக சமத்துவத்துக்கான நகர்வே அது. தமக்கு மேல் என்று எந்தச் சாதியுமில்லை; தமக்குக் கீழ் என்று எந்தச் சாதியுமில்லை.

கேள்வி 8.

சரி, அட்டவணைச் சாதியிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா இல்லையா?

பதில்:

எஸ்.சி எனும் அட்டவணைப் பிரிவிலிருந்து விடுவித்து/ வேறு அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. 

கேள்வி 9.

அவ்வாறு விரும்பினால், எந்த இனப் பட்டியலில் சேரப் போகிறீர்கள்? அல்லது என்ன இனப் பெயரில் உங்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்:

இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (OBC). அது பிசியாகவோ எம்பிசியாகவோ இருக்கலாம்.

கேள்வி 10.

சலுகைகள், குறிப்பாக இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இட ஒதுக்கீடு கேட்டால் எந்த இனத்தின் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்பீர்கள்?

பதில்:

எஸ்.சி எனும் பட்டியலில் இருந்துதான் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். எஸ்.சி பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாற்றம் கோருவது இடஒதுக்கீடு வேண்டும் எனும் பொருள் கொண்டது. எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேறுவதால் இடஒதுக்கீடே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டாம்; ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

கேள்வி 11. 

அட்டவணைச் சாதியில் இடம் பெற்று இவ்வளவு நாள் சலுகைகளைப் பெற்றுள்ளதால், அந்த இனத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டின் விழுக்காட்டில் பெறுவதுதான் நியாயம். அவ்வாறு பெற்றால் அது உள் ஒதுக்கீடு ஆகும்.உங்கள் மாணவர்களை அதன் பின் ஆதிக்க சாதி மாணவர்கள் 'சுக்கு'என்று அழைக்கமாட்டார்களா?

பதில்:

எஸ்.சி பிரிவில் இதுவரைகாலம் வைத்திருந்தமையால் எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒருவேளை, ஓபிசியில் வைத்திருந்தால் அந்தப் பிரிவில் இடஒதுக்கீடு பெற்று இருப்பர். இடஒதுக்கீட்டுச் சலுகைகள் எல்லாப் பிரிவினருக்கும் இருக்கிறது. எஸ்.சி பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறுவது இல்லை. ஓபிசியினரும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறவே செய்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்கும்போது யாரும் எவரும் சுக்கு என்று கூறிட முடியாது. எல்லோருமே சுக்குதான்.

கேள்வி 12. 

இட ஒதுக்கீடே தேவையில்லை என்றால், கால் சட்டை இல்லாமல் அம்மணமாக நிற்கும் பள்ளர் சாதிக் குழந்தைகளை நீங்கள் பார்த்ததுண்டா?அவர்கள் எவ்வாறு கல்வி பெறுவது?

பதில்:

இடஒதுக்கீடு தேவை இல்லை என்று யாரும் கூறவில்லை.

கால்சட்டை இல்லாத பள்ளர் குழந்தைகள் மட்டுமல்ல, ஓபிசி பிரிவில் இருக்கும் அத்தனை சாதியிலும் உள்ள வறுமையில் உள்ள குழந்தைகளும் அம்மணமாக இருப்பதை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாச் சாதியினருக்கும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்போது, எல்லாச் சாதியிலும் அம்மணமாகக் குழந்தைகள் திரிவது ஏன்? இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்புக்கான பிரதிநிதித்துவமே தவிர, அது வறுமையை ஏழ்மையை பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணும் ஒரே தீர்வாகக் கருத இயலாது.

எந்தச் சாதிக் குழந்தையானாலும் கல்விக்கு இடஒதுக்கீடு உண்டு.

கேள்வி 13. 

சாதிப் பெயர் மாறியதும் அதே கிராமங்களில் வசிக்கப் போகிறீர்களா? அல்லது வேறு பகுதிக்குக் குடிபெயரப் போகிறீர்களா? அதே பகுதியில் வசித்தால் உங்கள் மீதான இழிசாதிப் பார்வையை எவ்வாறு ஆதிக்கச் சாதியினர் மாற்றிக் கொள்வர்?

பதில்:

அரிசனர், பஞ்சமர் என்போர் ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றிக்கொண்டு வேறுவேறு ஊர்களுக்குக் குடிபெயரவில்லையே. சூத்திரர் என்று குறிக்கப்பட்டவர்கள் திராவிடர் என்று கூறிக்கொண்டு அயலகம் போய்விடவில்லை. நாடார் சமூகத்தினரும் வேறு புலம் நோக்கிப்போய்விடவில்லை.

பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றும் கிடைக்கும் தருவாயில் அதே பூர்வீக ஊரில்தான் வாழ முடியும். கல்வி வேலை தொழில் சார்ந்து இடம்பெயரவோ குடிபெயரவோ என்பது தேவையின் பொருட்டு அமைவது. பெயர் மற்றும் பட்டியல் மாற்றத்திற்காக ஊர் விட்டுப் புலம்பெயவர்வது தேவையில்லாத ஒன்று. அப்படிப் புலம்பெயர மாட்டார்கள். உயர்த்திக்கொண்ட சாதியினர் உடனடியாக இல்லாவிட்டாலும், படிப்படியாக மெல்லமெல்ல தங்களது பார்வையை அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நடக்கும். அதற்கு நிறைய சமூக உதாரணங்கள் இருக்கின்றன.

கேள்வி 13.

டாக்டர் கிருஷ்ணசாமி தான் பட்டியல் சாதி வெளியேற்றத்தை முன் வைக்கிறார்! நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு அவர் ஆதரவானவரில்லை. அவர் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஆதரவானவர். அவர்களிடம் தானே நீங்கள் ஆதரவு கோர முடியும்? மற்ற இயக்கங்கள் ஆதரவளிக்கவில்லை என்றால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! அதற்கு காரணம் கிருஷ்ணசாமியா இல்லையா?

பதில்:

1923லிருந்து பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றக் கோரிக்கை அந்தச் சமூகத்தால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேக்கம்பட்டி பாலசுந்தராசு, தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் உள்ளிட்டவர்களின் இது சார்ந்த கருத்தாடல்கள் அந்தச் சமூகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நிலவி வருகின்றன. அந்தச் சமூகத்தின் பெரும்பான்மைக் கோரிக்கையாக அந்தச் சமூகத்திடம் நிலவுகிறபோது, அந்தக் கோரிக்கையை மரு.கிருசுணசாமியும் இதரத் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அவ்வளவே.

இந்தக் கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகவே பாசகவும் அதிமுகவும் இதரக் கட்சிகளும் அணுகுகின்றன. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மற்ற இயக்கங்கள் அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை ஆதரித்து இருந்தால், மதவாத சக்திகள் அந்த மக்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே ஆதரிக்காத பட்சத்தில் இதைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் அந்த மக்களிடம் ஊடுறுவி உள்ளனர். அதன் வெளிப்பாடே அந்தச் சமூகத்தின் ஒரு சில தலைமைகள் மதவாத சக்திகளுடன் கூட்டு வைத்திருப்பதாகும்.

அந்த மக்களின் கோரிக்கையை மதவாத சக்திகள் ஆதரிப்பதைக் காட்டிலும், சமூக சனநாயக சக்திகள் ஆதரிப்பதே அந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

கேள்வி 14. 

இப்படித் தெருவில் வந்து எங்கள் சாதிப் பெயரை வைத்துக் கொண்டுள்ள நாய்கள் குரைக்கின்றன.இது நியாயமா என்று ஆளும் பாஜக,அதிமுக விடம்,"ஏன் அந்த பொது சமூக மனசாட்சியைக் கொன்று போட்டு விட்டீர்கள்?" என்று நீங்கள் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்கூட கேட்கலாம்; கேட்க வேண்டும். சமூக பொது மனசாட்சியைக் கொல்வதும் தூண்டுவதும்கூட நீங்கள் குறிப்பிட்ட அவர்களாகக் கூட இருக்கலாம்தானே. நான் கேட்பது, பொதுமனசாட்சியான நீங்கள் கேட்டீர்களா? ஏன் ஒரு சமூகத்திற்கு வேளாளர் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அவர்களது கோரிக்கை நியாயம்தானே என்று சாதியவாதிகளைப் பார்த்து அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சேர்ந்து கேளுங்கள்.

கேள்வி 15.

கடந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி என்னடா ஆயிற்று? என்று மோடியின் சட்டை முன் பகுதியை இழுத்து ஏன் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அப்படிக் கேட்க வேண்டும் என்றுதான் சமூக சனநாயக சக்திகளையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

கேள்வி16.

நீங்களும் இந்துக்கள் என்பதாலா அவ்வாறு கேள்வி கேட்க முடியவில்லை?

பதில் :

அப்படிக் கேள்வி கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.

கேள்வி 17.

மதத்தையும், சாதியையும் உதறித் தள்ளவில்லை என்றாலும், மதம் மற்றும் சாதியை ஏற்கவில்லை என்று கொள்கையளவில் உள்ள கட்சிகள் ஒரு சாதியை உருவாக்கத் துணைபுரியும் என்று எதிர்பார்பது வேடிக்கை இல்லையா?

பதில்:

தலித் அரசியல் என்பது குறிப்பிட்ட சாதிகளை மய்யப்படுத்திய சாதி அரசியல் உருவாக்கம்தானே. அண்மையில் அருந்ததியர் பெயர் மாற்றம் என்பது சாதியை உருவாக்கும் ஒன்றாக யாரும் பார்க்கவில்லை. இதை மட்டும் சாதியை உருவாக்கத் துணைபுரிவதாகக் கருதுவதுதான் வேடிக்கை.

கேள்வி 18.

அட்டவணை சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் இனி கிருஷ்ணசாமியோ அல்லது அந்த ஏழு சாதியினரோ தேர்தலில் நிற்கப் போவதில்லை என முடிவு செய்துவிட்டீர்களா?

பதில்:

ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும்போது, அந்த வீடு பிடிக்காமலோ அல்லது வீட்டு உரிமையாளர் வெளியேறச் சொன்னாலோ உடனே நடுத்தெருவுக்கு வந்துவிட முடியாது. வேறு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கும்போதுதான் அந்தப் பழைய வீட்டிலிருந்து காலி செய்ய முடியும். 

எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றிவிட்டால், விரும்பினால்கூட தனித் தொகுதியில் நிற்க முடியாதுதானே. அதுவரை, தனித் தொகுதியிலோ பொதுத் தொகுதியிலோ நிற்பதுதானே சரியானது. 

ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால், வேறு வேலை கிடைக்கின்ற வரையில் ஏற்கனவே இருக்கும் அந்த வேலையில் நீடிப்பதுதான் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல; சரியான முறையும் கூட. புதிய வேலை கிடைத்த பிறகு பழைய வேலையை உதறிப்போவதில் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.


ஏர் மகாராசன்

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

17.12.2020

புதன், 16 டிசம்பர், 2020

பண்பாட்டு அழகியலும் அரசியலும்: மிகுந்த ஆழமான தேடுதலோடும் எளிதாகப் புரியும் வண்ணமும் விளக்குகிற நூல்:- கவிஞர் கண்மணிராசா



ஓர் அருமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது தோழர் ஏர் மகாராசன் அவர்களின் 'பண்பாட்டு அழகியலும் அரசியலும்' என்கிற நூல். அதுவும் விவசாயிகளின் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இத்தருணத்தில் இந்நூலை வாசிக்க வாசிக்கப் பிரமிப்பாக இருந்தது. 

மூன்று கட்டுரைகள் தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னிட்டு எழுதியவை.  ஏன் சல்லிக்கட்டு வேண்டும்...? என்பதற்கான விரிவான பதிலாக மட்டுமல்லாது, சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் தமிழரின் குறிப்பாக, நிலத்தோடு நெருங்கிய தொடர்புடைய விவசாயிகளின் பண்பாட்டு உரிமையும்கூட என்பதைப் பல்வேறு தொல்தரவுகள் மூலமும் சங்க இலக்கியங்களின் ஆதாரங்கள் மூலமாகவும், சல்லிக்கட்டுத் தடை என்பதற்குப் பின்னுள்ள பார்ப்பனிய அரசியல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளது சிறப்பு. 

ஆய்வாக மட்டுமல்லாது நேரடியாக மதுரையில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற பட்டறிவையும், போராட்ட வழியெங்கும் நிறைந்து ததும்பிய உழைக்கும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.

பேராசான் நா. வானமாமலையின் உழவுக்குடிகள் தொடர்பான ஆய்வுகள் பற்றிய கட்டுரையொன்றும், கீழடி ஆய்வுக்கட்டுரையும், கார்த்திகை எனப்படும் மா ஒளித் திருநாள் பற்றிய ஆழமான கட்டுரையும் உள்ளன.

ஏனைய கட்டுரைகள் சாதி... காட்சிமொழி... கவிதையின் அழகியல் அரசியல்... புதிய கல்விக் கொள்கை.. பெண் அரசியல் எனப் பேசுகின்றன. 

எடுத்துக்கொண்ட விசயத்தை மிகுந்த ஆழமான தேடுதலோடு.. ஆனால், எளிதாகப் புரியும் வண்ணம் விளக்குகிற ஆசிரியரின் எழுத்து அபாரம். 

எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்விலும் உழைக்கும் மக்களின் மீதும்,  தமிழ் மண்ணின் மீதும்

தீராத காதல் கொண்ட 

ஏர் மகாராசன் தோழருக்கு அன்பும் நன்றியும். 

அவரின் பிறநூல்கள்:

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு... 

நா. வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி... 

ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும்... காதலற்ற முத்தங்களும்... 

(பெண்விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்) 

சொல்நிலம்... கவிதை நூல் 

உட்பட பல நூல்களின் ஆசிரியர். 


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கண்மணி ராசா அவர்களது அறிமுக மதிப்புரை.

*

பண்பாட்டு அழகியலும் அரசியலும்... 

ஆதி பதிப்பகம். 

ரூ. 120.


நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

அடவி முரளி

9994880005

திங்கள், 14 டிசம்பர், 2020

உழவர் போராட்ட ஆதரவும் இரட்டை வேட நிலைப்பாடும்: மகாராசன்

அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உழவர்களின் வேளாண் உற்பத்தி வாழ்வியலைப் பாதுகாக்கும் நோக்கிலும், சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேளாண் துறையைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்தியாவின் வடபகுதி உழவர்கள் பெருந்திரளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. போராடிக் கொண்டிருக்கும் உழவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், உழவர்களின் வாழ்வியலுக்கு எதிராகச் சட்டங்களை இயற்றிக் கொண்டும், உழவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலும் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு தரப்பினர் தமது உழவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதித் தரப்பினரின் ஆதரவைப் பெற்றதாக வடக்கத்தி உழவர்களின் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கிறது.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தெரியப்படுத்தி வருகின்றனர். வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்ச் சமூகத்தின் பொது மனசாட்சி தமது ஆதரவைத் தார்மீகமாகத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. உழவர் இயக்கங்கள், சமூக சனநாயக சக்திகள், பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் போன்றவை வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை தார்மீகமாக ஆதரித்தும், பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நடத்தியும் வருகின்றன.

சுவரொட்டி, துண்டறிக்கை, தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பரப்புரை போன்ற பல்வேறு வகையில் வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தத்தமது அரசியல் களங்களில் செயலாற்றி வருவதோடு, சமூக ஊடகங்கள் பலவற்றிலும் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்திலும் பரப்புரையிலும் செயலாற்றும் தமிழகத்தின் அனைத்துச் சனநாயக சக்திகள், உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை. போராடுகிற உழவர்களின் பக்கம் அனைவரும் நிற்பதே நியாயமும் கூட.

உழவர்களின் பக்கம் நிற்பதாகக் கருதும் அல்லது சொல்லிக்கொள்ளும் அல்லது களம் காணும் அனைத்துத் தரப்பினரும் வடக்கத்தி உழவர்களின் நியாயத்தைத்தான் உணர்ந்திருக்கிறார்களே ஒழிய, தெக்கத்தி உழவர்களின், குறிப்பாகத் தமிழகத்துப் பெருந்திரள் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து கொள்ளவுமில்லை; புரிந்துகொள்ளவுமில்லை. 

பெருந்திரள் உழவர்களின் அடையாளப் போராட்டங்களையும் தன்மானப் போராட்டங்களையும் கண்டும் காணாமல் இருப்பதும், அவர்களது கோரிக்கையில் இருக்கும் உண்மைத் தன்மைகளையோ அல்லது நியாயத்தையோகூட காதுகொடுத்துக் கேட்கவும் பொது சமூக மனசாட்சி மறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. வடக்கத்தி உழவர்களின் நியாயத்தை உணர்ந்த பொது சமூக மனசாட்சியானது, தமிழக உழவர்களின் பெருந்திரள் கோரிக்கையின் நியாயத்தை உணர மறுக்கிறது; கள்ள மவுனம் காக்கிறது. கூடவே, உள்ளுக்குள் இருக்கும் சாதியாதிக்க உணர்வுக்கும், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியாதிக்கக் கருத்தியலுக்கும் அதன் பிழைப்புவாத சக்திகளுக்கும் ஏதோ ஒருவகையில் பலியாகிக் கிடக்கிறது; அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது; ஒத்தூதிக் கிடக்கிறது.
ஆனால், வடக்கில் போராடும் உழவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக வேடம் கட்டிக்கொள்கிறது.

வடக்கில் போராடும் உழவர்கள் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் தங்களை உழவர்களாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளனர். பல்வேறு மொழி பேசக்கூடியவர்களாக இருந்தாலும், பல்வேறு தேசிய இனங்களாக இருந்தாலும், பல்வேறு வட்டாரத்தினராக இருந்தாலும், பல்வேறு சாதி மதத்தினராக இருந்தாலும், வேளாண்மை செய்கிற அவர்கள் தங்களை உழவர்கள் என்றும், வேளாண்மை செய்கின்ற அவர்களை உழவர்கள் என்றே இந்தியாவின் வடபகுதி உழவர்கள் அடையாளப்படுகின்றனர். 

புரிதலுக்காகச் சொல்வதெனில், இந்தியாவின் வட பகுதியில் வேளாண்மை செய்கிற அவர்கள் வடக்கத்தி வேளாளர்கள்/ உழவர்கள். தாங்கள் செய்து வருகிற வேளாண் தொழில்சார்ந்த அடையாளப் பெயரோடுதான் அவர்கள் அடையாளப்படுகின்றனர். வேளாண் தொழில்சார்ந்த அடையாளத்தைப் பெற்றிருப்பதிலோ அல்லது பெறுவதிலோ வடக்கத்தி உழவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதனால்தான், அவர்கள் நேரிடையாகவே வேளாண் சட்டங்களை எதிர்த்துக் குறிப்பான பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்து உழவர்களின் பிரச்சினைப்பாடுகள் வேறு மாதிரியானவை. ஆதி காலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண் தொழிலைச் செய்து வருகிற பல்வேறு வேளாண் தொழில் மரபினர் தமிழகத்துப் பூர்வக்குடிகளாக இருக்கின்றனர். வேளாண்மை செய்கிற தொழில் மரபினரைத் தொழிற்பெயரால் பல்வேறு வகையில் அடையாளப்படுத்துகிற வழக்கம் தமிழகத்தில் இன்றுவரையிலும் இருக்கின்றது. உழவுத்தொழில் செய்வதால் உழவர் என்றும், வேளாண்மை செய்வதால் வேளாளர் என்றும் குறிப்பதே தமிழரின் பெருவழக்காக இருந்திருக்கிறது. இத்தகைய வேளாண் தொழிலைப் பல்வேறு குலங்களும் குடிகளும் குழுக்களும் செய்து வந்திருக்கின்றன. இதில் பல்வேறு மறைந்துபோயின; வேறு தொழிலுக்கு மாறிக்கொண்டன; புதியதாகவும் வந்துசேர்ந்தன. ஆனாலும், ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் பிண்ணிப் பிணைந்து வருகின்றவை மிகச்சில குலங்களும் குடிகளும் மட்டுமே.

அதிலும் குறிப்பாக, இன்றளவிலும் வேளாண் தொழில் மரபினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொல்லியல் அகழாய்வு, கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, பிற நாட்டார் குறிப்புகள் போன்ற வரலாற்று ஆவணங்களிலும், இலக்கணம், இலக்கியம் போன்ற தமிழ்மொழிசார் பதிவுகளிலும், நாட்டுப்புற வழக்காறுகள், வழிபாடு, சடங்கு உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகளிலும் வேளாண் மரபினராகவே அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர்கள் மிகச்சில குலங்கள் மட்டுமே. குலத்தாலும் குடியாலும் வட்டாரத்தாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் வேளாண் தொழில் செய்துவந்த தொழில் மரபினரை வேளாளர் என்ற தொழிற்பெயர் அடையாளத்தால்தான் குறிக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நுழைந்துவிட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள்/படையெடுப்புகள்/வன் குடியேற்றங்கள் போன்றவற்றால், தமிழகப் பூர்வீக வேளாண்மைக் குடிகளின் பெரும்பகுதி வேளாண் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன; பூர்வீக நிலங்களிலிருந்து பெரும்பகுதி வேளாண் குலங்கள் துரத்தப்பட்டுள்ளன. பூர்வீக வேளாண் தொழில் மரபினரோடு இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. பூர்வீக வேளாண் குலங்களிடம் இருந்து வந்த குடும்பு ஆட்சிமுறை எனும் நிர்வாக முறைகள்கூட மாற்றியமைக்கப்பட்டன. பூர்வீகக் குடிகளின் ஆட்சி, அதிகார, உற்பத்தி முறையோடு அவர்களுக்கிருந்த உறவு முற்றாக அழித்தொழிக்கப்பட்டன. கூடவே, பன்னெடும் காலமாக வேளாளராகவும், வேளாண் குலங்களாகவும் திகழ்ந்துவந்த பெருந்திரள் சமூகத்தை இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிப்பு செய்து, வேளாளர் எனும் அவர்களது தொழிற்பெயர் அடையாளங்களை வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாத பிற குலங்களுக்கும் குடிகளுக்கும் வழங்பட்டுவிட்டன அல்லது அபகரித்துக்கொண்டன. 

பெயரளவில் வேளாளர் என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டிருக்கும் எந்தவொரு குலமும் குடியும்கூட வேளாண் தொழில் மரபினருக்கான வரலாற்றுத் தொடர்ச்சியும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்டவை கிடையாது.

அதேவேளையில், வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் தம்மை அடையாளப்படுத்தி வருகின்ற பெருந்திரள் சமூகமானது, வரலாற்றுத் தொடர்ச்சியையும் பண்பாட்டுத் தொடர்பையும் முன்வைத்து, வேளாளர் எனும் தொழிற்பெயருக்கும் தங்களுக்கும் இருக்கிற தொன்மைச் சான்றாதாரங்களை அகச்சான்றுகளாகவும் புறச்சான்றுகளாகவும் முன்வைத்துத் தம்மை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழில் பெயரால் அடையாளப்படுத்த வேண்டும் எனவும், வேளாண்மை செய்கிற தொழில் மரபினரான தங்களை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழிற்பெயரால் அரசும் பொது சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி வருகிறது உழவர் சமூகத்தின் ஒரு பகுதி.

ஆனால், வேளாண் தொழில் மரபினரின் தொழிற்பெயர் அடையாளக் கோரிக்கையான வேளாளர் எனும் பின்னொட்டுப் பெயர் அடையாளத்தை, குறிப்பிட்ட சில பல சாதியினருக்கான அடையாளம் போலவும், சாதிப் பட்டம் போலவும் கருதிக் கொண்டு, வேளாளர் எனும் தொழிற்பெயர் அடையாளத்தை வேளாண் தொழில் மரபினராகத் தொடரும் பெருந்திரள் சமூகத்திற்கு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வேளாளர் என்பது சாதிப்பெயரோ குலப்பட்டமோ அல்ல. வேளாளர் என்னும் சொல்லானது, வேளாண்மைத் தொழில் செய்வதால் உருவான தொழிற்பெயர்ச் சொல். வேளாண்மை செய்கிற தொழில் மரபினர் யாவருக்கும் பொதுவான தொழிற்பெயர் அடையாளச் சொல். வேளாண்மை செய்கிற எந்தக் குலமும் குடியும் அடையாளப்படுத்திக் கொள்கிற தொழிற்பெயர் அடையாளமே வேளாளர் எனும் சொல்லாகும். இந்தத் தொழிற்பெயர் அடையாளச் சொல்லைப் பல குலங்களும் குடிகளும் தங்களது அடையாளப் பெயர்களோடு முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் இணைத்துக் கொண்டுள்ளன.

முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வேளாளர் எனும் சொல்லைக் கொண்டிருக்கிற பல குலங்களும் உண்மையில் வேளாண்மையோடு தொடர்பு கொண்டவை கிடையாது. அவ்வாறு, வேளாளர் எனும் பெயரை ஒட்டாகக் கொண்ட பல குலங்களும் ஒரே சாதியினரும் கிடையாது. பல சாதியினரும் வேளாளர் எனும் ஒட்டுச் சொல்லால் குறிக்கப்படுகின்றனர். வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாதவர்களே தங்களை ஏதோ ஒருவகையில் வேளாளர் என அழைத்துக்கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிற வேளாளச் சாதியினர், உண்மையாகவே காலங்காலமாக வேளாண்மையோடு தொடர்பு கொண்டிருக்கிற வேளாண் தொழில் மரபினர் தங்களையும் வேளாளர் என்று அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்று கேட்கும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வேளாண்மையோடு தொடர்பில்லாத போலி வேளாளர்கள்தான், வேளாண்மையோடு உண்மையாகவே தொடர்பு கொண்ட பெருந்திரள் சமூகத்தை வேளாளர் என அடையாளப்படுத்துவதை மறுக்கிறது; எதிர்க்கிறது; போராடுகிறது.

உண்மையாகவே வேளாளர் என்ற தகுதிக்கும் அடையாளத்திற்கும் உரியவர்களான பெருந்திரள் வேளாண் சமூத்தினரின் பெயர் மாற்றக் கோரிக்கையானது பண்பாட்டு அடையாள மீட்பும் தன்மதிப்புக்கான போராட்டமும் நிறைந்த ஒன்றாகும்.

வேளாண் தொழில் பெயர் அடையாளத்திற்காகப் போராடும் வேளாண் தொழில் மரபினரின் கோரிக்கையையும் பொது சமூக மனசாட்சி தார்மீகமாக ஆதரிப்பதுதானே நியாயம். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் இருப்பதும்கூட ஒரு பக்கம் இருக்கட்டும்.

வேளாண்மையே செய்யத் தெரியாத, ஆணும் பெண்ணுமாய்ச் சேறு சகதியில் இறங்காத, வேளாண் தொழில்திறமும் நுட்பமும் இல்லாத, வேளாண்மையோடு பண்பாட்டு ஒட்டுறவு இல்லாத பல சாதியினர் தங்களை வேளாளர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் யாவரும் போலியான வேளாளர்கள்தான்.

வேளாண் தொழில் மரபோடு தொடர்பில்லாத பல சாதியினரும் தங்களை வேளாளர் என அழைத்துக்கொண்டும் அடையாளப்படுத்திக் கொண்டும் இருப்பதோடு மட்டுமல்லாமல், வேளாண் தொழிலை உண்மையாகச் செய்து வருகிற தொழில் மரபினரை வேளாளர் என அடையாளப்படுத்தக் கூடாது எனப் போலி வேளாளர்கள் எதிர்ப்புக் காட்டுவதும், மறுப்புக் காட்டுவதும், போராட்டம் செய்வதுமாகத் தீவிரம் காட்டுகின்றனர்.

யார் யாருக்கோ, எந்தெந்தக் குலங்களுக்கோ சாதியினருக்கோ வேளாளர் எனும் அடையாளப் பெயர் இருக்கும்போதும் வழங்கும்போதும் எதிர்ப்பும் மறுப்பும் போராட்டமும் செய்திடாத போலி வேளாளர்கள், உண்மையான வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் அடையாளப் பெயரை வழங்குவதற்கு எதிர்ப்பும் மறுப்பும் காட்டுகிறார்கள். அண்மைக்காலமாகப் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். போலி வேளாளர்களின் இத்தகையப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான சாதியாதிக்க வெறியும் காழ்ப்பும் வன்மமும் அன்றி வேறில்லைதான்.

உண்மையான வேளாண் மரபினரின் அடையாளமான வேளாளர் என்னும் தொழிற்பெயரை அவர்களுக்கானதாக ஏற்கவும் அல்லது அவர்களுக்கு வழங்கவும் அங்கீகரிக்கவும் செய்வதுதான் நியாயம்.

அதேபோல, வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் பெயர் கொண்டு அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்புக் காட்டுகிற
போலி வேளாளர்களின் சாதிய வெறியை, சாதியக் காழ்ப்பை, சாதிய வன்மத்தை எதிர்ப்பதும்தானே நியாயமானது.

ஆனால், போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியை, சாதிய வன்மத்தை, சாதியக் காழ்ப்பைப் பொது சமூக மனசாட்சி மட்டுமல்ல, சாதியொழிப்பு பேசுகிற - தீண்டாமை ஒழிப்பு பேசுகிற - பாட்டாளி வர்க்க விடுதலை பேசுகிற - ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசுகிற - தமிழ்த் தேச விடுதலை பேசுகிற - சமூக சனநாயகம் பேசுகிற - சமூகநீதி பேசுகிற எந்தவோர் சமூக இயக்கங்களும் எதிர்க்கவோ கண்டிக்கவோகூட முன்வரவில்லை.

போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியோடும், சாதியக் காழ்ப்போடும், சாதிய வன்மத்தோடும் நடைபெற்று வருகிற சிற்சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் காட்டும் வேலைகளைத்தான் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் செய்து வருகின்றன.

வடக்கத்தி வேளாளர்கள் தங்கள் வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் பெரிதும் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தெக்கத்தி வேளாளர்களோ தங்களை வேளாளர் என்று அடையாளப்படுத்துங்கள்; அங்கீகரியுங்கள் என்று பெயர் அடையாளத்திற்கே போராடும் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம், வேளாளர் என்று போலியாகச் சொல்லிக்கொள்ளும் போலி வேளாளர்களோ, உண்மையான வேளாளர்களுக்கு வேளாளர் என்று அடையாளம் வந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தில்லியிலும் வடக்கிலும் நடக்கின்ற உழவர்களின் போராட்டத்தின் பக்கம் நிற்பது உண்மையென்றால், வடக்கத்தி வேளாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பது உண்மையென்றால், தமிழ்நாட்டின் தெக்கத்தி உழவர்களின் பெயர் அடையாளப் போராட்டத்தின் பக்கமும் நில்லுங்கள்; தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையின் நியாயத்தை ஆதரியுங்கள். போலி வேளாளர்களின் சாதியவெறி, சாதியக்காழ்ப்பு, சாதிய வன்மத்தைக் கண்டியுங்கள்.

உழவர்களின் பக்கம் நிற்பது உண்மையானால், வடக்கத்தி வேளாளர்களின் பக்கம் நிற்பதைப்போல, தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். வடக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையை ஆதரிப்பதுபோல, தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையையும் ஆதரியுங்கள்.

உழவர்களின் பக்கம் நின்று, வடக்கத்தி உழவர்களுக்கு/வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி சனநாயக அரசை அம்பலப்படுத்துவதுபோல, தெக்கத்தி உழவர்களுக்கு / வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி வேளாளர்களின் சாதி விரோதத்தையும் அம்பலப்படுத்துங்கள். இதுவும்தான் உழவர் பக்கம் நிற்பதன் உண்மையான நிலைப்பாடு.

மாறாக, வடக்கத்தி வேளாளர்களை மட்டுமே ஆதரிப்பதும்; வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தெக்கத்தி வேளாளர்களின் அடையாளப் போராட்டத்தை ஆதரிக்காமலும், போலி வேளாளர்களின் சாதியாதிக்கத் திமிர்த்தனத்தை எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையான நிலைப்பாடாகக் கருதமுடியாது. இரட்டை வேடம் போடும் இத்தகைய நிலைப்பாடு என்பது சாதி ஆதிக்கத்தின் பக்கமே நிற்பதாகும்.

இதைக் குறித்து, திராவிட இயக்கங்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் மட்டுமல்ல, புரட்சிகர மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கூட இன்னும் விளங்கிக்கொள்ளவும் இல்லை; அறிந்து கொள்ளக்கூட முன்வரவுமில்லை. அதனால்தான், அந்த மக்களிடமிருந்து மெல்லமெல்ல அவை அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மத பயங்கரவாத சக்திகள் ஊடுறுவிக் கொண்டிருக்கின்றன.

பாவம் அவர்கள். எவரது துணையுமின்றி ஒண்டியாய் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். உழவர்களின் பக்கம் நிற்பது உண்மை எனில், பெயர் அடையாளத்துக்காகவும் வேளாண்மைத் தொழிலுக்காகவும் போராடுகிற உண்மையான வேளாளர் பக்கம் நில்லுங்கள்; அவர்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுங்கள். இதுவே சமூக நீதியும் சமத்துவ நீதியும்கூட.

ஏர் மகாராசன்
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
14.12.2020.
*
ஒளிப்படம் உதவி:
ஊடகவியலாளர் 
இரா.சிவக்குமார், மதுரை.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தமிழீழ மாவீரர் நாள்: உணர்வும் வரலாறும்.

 


தமிழீழ மாவீரர் நாள் வாரம்.

அதிகாரப்பூர்வ பெயர்: 

மாவீரர் நாள்.

மாவீரர் நாள் அடையாளம்: காந்தள்.

கடைபிடிப்போர்: தமிழர்.

நாள்: நவம்பர் 27.

காலம்: 1 நாள் நிகழ்வு.

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, 

தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் 

அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

வரலாறு:

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

கடைப்பிடிப்பு:

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

கொடியேற்றுதல்:

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற 

ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உறுதிமொழி:

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

"மொழியாகி,

எங்கள் மூச்சாகி - நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை

உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு

துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்

தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈகைச்சுடரேற்றுதல்:

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.

மாவீரர் நாள் பாடல்:

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.

 இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

மாவீரர் குடும்ப கௌரவிப்பு:

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.

அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவீரர் நாள் உரை:

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.

கார்த்திகைப் பூ:

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மேற்கோள்கள்:

மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்.தமிழீழ மாவீரர் நாள் அனுபவம் ஒன்று - த. அகிலன்.

நன்றி:

தமிழ் விக்கிப்பீடியா.

தமிழீழ மாவீரர்களுக்கு

வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

20.11.2020

செவ்வாய், 10 நவம்பர், 2020

தமிழ் கற்றல் - வேர் அறியும் தடம்:- மகாராசன்

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான மொழியின் இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில்தான் மொழியின் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது. 

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை. 

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது. 

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடியது - எனும் குறிப்பில் உள்ள 'தமிழ்' எனும் சொல்லானது, வெறும் மொழியை மட்டுமே குறிக்கவில்லை. 

தமிழ் எனும் சொல்லானது, மொழி எனும் அடையாளத்தோடு களவு, கற்பு எனும் வாழ்நெறியைக் குறிக்கும் அறத்தையும், அதன் மறத்தையும், அறத்தோடும் மறத்தோடும் கூடிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனத்தையும், தமிழ் மொழியும் தமிழ் இனமும் வாழ்கிற தமிழர் நிலத்தையும் குறிக்கிறது. 

மேலும், இவற்றையெல்லாம் எண்ணத்திலும் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துகிற அறிவு மரபையும் கலை மரபையும் தொழில் மரபையும் குறிக்கிற ஒரு குறியீட்டுச் சொல்லாகத்தான் பன்மைப் பொருண்மையை அடைகாத்து வைத்திருக்கிறது தமிழ் எனும் சொல்.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது. 

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

*

ஏர் மகாராசன்

10.11.2020

செவ்வாய், 3 நவம்பர், 2020

பெண்ணைக் குறித்த கற்பிதங்களும் மதங்களின் ஐக்கியப்பாடும் : மகாராசன்


பெரும்பாலான மதங்களும் சாதியமும் ஆண் வழிச் சமூக மதிப்பீடுகளையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் மதங்களும் சாதியமும் ஒன்றுக்கொன்று பிணைப்பு கொண்டிருப்பவை. சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளை வழிமொழிவதாகவே இந்தியச் சூழலில் நிலவுகிற பெரும்பாலான மதவாதச் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. 


இவ்வாறான சாதிய மதவாத அடிப்படைக் கருத்தாக்கங்கள் யாவும் பெண்ணைப் பற்றிய நிலைப்பாடுகளில் மிகக் குறுகலானதும் குறிப்பானதுமான நெறிமுறைகளை முன்வைத்தும், கட்டுப்பாடுகளை இயற்றியும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிய மதவாதப் படைப்புகளை வெளிப்படுத்துவதாகவே ஆண் வழிச் சமூக அதிகார மையங்களும் அவை வழிப்பட்ட மரபுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லா மதங்களுமே பெண்ணை அடிமைப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கின்றன. இந்தியச் சமூகச் சூழலில் நிலவுகிற வைதீக, கிறித்துவ, இசுலாமிய, பௌத்த, சமண மதங்களும் தத்தமது வழிகளில் பெண்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்தி இருக்கின்றன.

ஆரிய வைதீக மதத்தின் அடிப்படை ஆதார நூலாகக் கருதப்படும் மனுதர்ம சாத்திரம், பெண்களுக்கு உரிய கடமைகளாகப் பின்வருவனவற்றைச் குறிப்பிட்டிருக்கிறது.

"எந்தப் பருவத்தினள் ஆயினும், தனது இல்லத்திலேகூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றல் ஆகாது (அத். 5:147); இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள், இவர்கள் காவல் அன்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்கல் ஆகாது(அத்.5:148); தகப்பன், கணவன், மக்கள் இவர்களைத் தவிர்த்துத் தனித்து இருக்க விரும்புதல் கூடாது. அப்படித் தனித்து இருப்பின் பிறந்தகம் புக்ககம் ஆகிய இரு குலங்களுக்கும் நிந்தை உண்டாக்குவாள்(அத்.5:149); இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணம் இன்மை இவற்றை உடையனவன்ஆயினும், கற்பினால் ஆன பெண், தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக(அத்.5:149); கைம்மையில் காய், கனி, கிழங்கு இவற்றால் சிற்றுணவு கொண்டு காலம் தள்ளலும், மற்றொருவன் பெயரை நாவால் கூற விரும்பாமையும் வேண்டும்(அத்.5:157); கைம்மையினள் தன் காலம் உள்ளளவும் பொறுமை, தூய்மை, உடல் கலப்பின்மை, கள் புலால் கொள்ளாமை, மேன்மையான கற்பிலக்கணம் இவை பொருந்தக் கடவள்(அத்.5:158); மனம், சொல், புலன் இவற்றை அடக்கி நெறி தவறாமல் இருப்பவள், கணவன் இருக்கும் லோகத்தை அடைவதுடன், கற்பரசி என்றும் கொண்டாடப்படுவாள்(அத்.5:165)." மேற்கண்டவாறு மனுதர்ம சாத்திரம் பெண்ணின் கடமைகளாக வரையறுத்துள்ளது.

கிறித்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எபெ.5.22இல், "மனைவிகளே! கர்த்தருக்குள் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்". எபெ.5.23இல், "கிறிஸ்து தலையாய் இருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்". எபெ.5.24இல், "சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்". எபெ.5.23இல், "மனைவியும் புருஷன் இடத்தில் பயபக்தியாக இருக்கக் கடவது" என்ற கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாக, பெண் ஆணுக்குக் கீழ்ப்படிந்து, ஆணைச் சார்ந்து வாழ வேண்டும் என்கிறது கிறித்துவ மதம்.

இசுலாமிய மத நூலான திருக்குர்ஆனும், பெண்ணை ஆணின் உடமையாகப் பார்க்கிறது. திருக்குர்ஆன் அத்.2 .222.223இல், "மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள் ஆவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும், உங்களுடைய வருங்காலத்திற்காக முன்கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்".
அத் 4.34.35இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம், அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதும் ஆகும். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப் பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தன் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று அஞ்சுகின்றீர்களோ, அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள். மேலும், அவர்களை அடியுங்கள்" என்கிறது திருக்குர்ஆன். பெண் மீதான வன்முறையை ஆண் நிகழ்த்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தைத்தான் இசுலாமிய மதம் வழங்கியிருக்கிறது.

அவைதீக மதங்களான பௌத்தம், சமணமும் துறவறத்தை வலியுறுத்துவதன் மூலம், பெண்கள் மீதான வெறுப்புணர்வையே வெளிப்படுத்தியுள்ளன. "ஆண் மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப்படும் புருஷர் எனப்படுவான். பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக்கூடிய ஸ்திரீ எனப்படுவாள்" என்கிறது அதிவேத சங்கங்களின் ஸ்தாபன உரை. பௌத்த, சமண மதங்கள்கூட பெண்ணை வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கின்றன.

இவ்வாறாக, எல்லா மதங்களுமே பெண்ணுக்கு எதிரான கருத்துக்களையே முன் வைத்திருக்கின்றன. இத்தகைய மதவழிபட்ட கருத்துகளே ஆண் வழிச் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆண் வழிச் சமூகக் கலாச்சாரமும், அதனை ஒட்டிய அதிகாரமும் நிலைநிறுத்துவதற்கு இவ்வகைப்பட்ட மதக் கருத்துக்களே முக்கியக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எனவே, இன்றைய சமூகத்தின் எல்லாத் துறையிலும் தங்கள் கால் பதிக்கவும் சாதிக்கவும் வந்துவிட்ட பெண்களுக்கு எதிராகவும், சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கருத்து ரீதியான - கலாசார ரீதியான - உடல் ரீதியான வன்முறை, நாம் பார்த்த வகையில் வரலாற்றுவழி வந்ததால், இந்த மதத்தை - அதன் ஆணிவேரை அசைக்காமல், இதற்கு எதிரான வலுவான மாற்றுக் கலாச்சாரக் கருத்துத் தளத்தை - சனநாயகப் பண்பாட்டை வளர்க்காமல், தனித் தனி நபர்களைச் சாடுவதும் சாத்தியமற்ற ஒன்று.

எல்லா மதங்களுமே தம்மளவில் மாறுபட்டுக் கொண்டாலும், பெண்களை ஒடுக்குவதில் மட்டும் ஐக்கியப்பட்டுக் கொண்டுள்ளன. இவற்றுள் சில மதங்கள் சில சீர்திருத்தங்களைக் குறைந்த அளவேனும் தம்முள் கொண்டுள்ளன. அதே வேளையில், வேறு சில மதங்கள் மிகக் கடுமையான ஒழுக்க விதிகளைப் பெண் மேல் திணித்து வருகின்றன. ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்குக் குறைந்த அளவிலேனும் இளைப்பாறுதல் தருகிற வகையில் சில சீர்திருத்தங்களைச் சில மதங்கள் நடைமுறைப்படுத்துகையில், அவற்றை அடிப்படை மதவாதிகள் தமக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதுகின்றனர். இதனால் அவர்களுக்குள்ளும் மதங்களின் மோதலாக வலுக்கத் தொடங்குகின்றன.

ஒட்டுமொத்த சமூகத்தையே பழமை வாதத்துக்குள் தள்ளுவதைத்தான் எல்லா மதங்களும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. 

நவீன சமூகமானது மதங்களைக் குறித்த புரிதலை உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும். மதங்களோ, வழிபாட்டு முறைகளோ, வழிபடு தெய்வங்களோ, மத வழிப்பட்ட நூல்களோ யாதாயினும், அவை ஒரு காலத்திய சமூக மனிதர்களின் நம்பிக்கை அல்லது கற்பிதம் அல்லது வாழ்முறை அவ்வளவே. ஆயினும், அவற்றை முற்றாகவே நிராகரிப்பதோ அல்லது அப்படியே கொண்டாடுவதோ அவரவர் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், சக மனிதரை, சக மனிதருள் பாதியான பெண்ணை ஒடுக்கவோ, இழிவுபடுத்தவோ, அடிமைப்படுத்தவோ, இரண்டாம்தர உயிரியாகப் பாவிப்பதற்கோ எந்த மதத்திற்கும் அல்லது மதவாதிகளுக்கும் அல்லது மத நூல்களுக்கும் உரிமை இல்லைதான் என்பதை நவீன சமூகம் உணரத் தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, நாட்டுப்புற வழிபாட்டு மரபில் பெண்களின் புழங்கு வெளி பற்றியும் மீளாய்வு செய்யவும் வேண்டி இருக்கிறது. 

எதுவாயினும், ஏற்பனவற்றை ஏற்றும், எதிர்ப்பனவற்றை எதிர்த்தும் பயணிப்பதே நவீன சமூகத்தின் படிப்பினையாகும்.

மகாராசன் எழுதிய 'தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்' எனும் நூலில் இருந்து...


ஏர் மகாராசன்
03.11.2020.

வியாழன், 15 அக்டோபர், 2020

தமிழர் அரசியலைச் சிதைக்கும் குறுக்குச் சால் அரசியல்: மகாராசன்

தமிழர் ஒற்றுமை குறித்தோ, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் குறித்தோ, தமிழர் அடையாளம் குறித்தோ, ஈழ ஆதரவு குறித்தோ தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக ஆகும்போதெல்லாம், 

இதைப் பேசுபொருளாக்கும் தமிழ்த் தேசியர்கள் மீதும், தமிழ்த் தேசிய மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மீதும், தமிழர் ஓர்மை பேசுவோர் மீதும் பல்வேறு அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு.

தமிழர்களுக்கான அரசியலைப் பேசுபொருளாகக் கொண்டிருப்போரெல்லாம், ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரானவர்கள் என்பதைப்போலவும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் தமிழர் தேசிய அரசியலைப் பேசுவோர்தான் காரணம் என்பதைப்போலவும் கருதிக் கொண்டு, தமிழர் அரசியலுக்கு எதிரான - தமிழர் ஓர்மைக்கு எதிரான மடைமாற்ற நுண்ணரசியலைப் பலதரப்பினரும் முன்னெடுக்கின்றனர். அந்தவகையில்தான், தமிழர் பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசாமல், கண்டுகொள்ளாமல், போராடாமல் தமிழர் பிரச்சினைகளைப் பேசுவது ஏன்? என்பதான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் நியாயமானவைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் பேசுபொருளாக ஆக்கப்பட வேண்டும் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும் தான். சாதியாதிக்க சக்திகளை மற்றும் சுரண்டும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும் தான். இதில் துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. தமிழர் அரசியல் பேசுகிற இயக்கங்களும் நபர்களும் இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தக் குறைபாடும் இயலாமையும் சரிசெய்யப்பட வேண்டும்.

அதேவேளையில், தமிழர் அரசியல் பேசுவோரின் இந்தக் குறைபாடுகள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடும் அரசியல் போக்கும் அல்ல.

ஆனால், தமிழர் பிரச்சினைகள் தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக முன்னெடுக்கப்படுகிறபோது ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான கிளர்ச்சிபோல பாவிப்பது சரியல்ல.

ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற சமூகக் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் சாதியாதிக்கவாதிகளும், அவர்கள் நிரம்பியிருக்கும் சமூக அமைப்புகளும், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் அரசியல் மற்றும் அதிகார நிறுவனங்களும்தான் காரணம்.

ஆனால், அரசியலிலும் அதிகாரத்திலும் பங்குபெறாவிட்டாலும் தமிழர் நலன்களையும் தமிழ்நாட்டு நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழர் அனைவருக்குமான பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கிற - போராடுகிற போதெல்லாம் அதிலிருந்து விலகியும் வேறுபட்டும் நின்றுகொண்டிருப்பது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாவதே ஆகும்.

தமிழ்த் தேசிய எழுச்சியும் தமிழர் அடையாள எழுச்சியும் வரும்போது மட்டுமே தமிழர் ஒற்றுமை பற்றிய கேள்விகள் வருகின்றன.

ஆனால், திராவிட ஒற்றுமை, இந்திய ஒற்றுமை, பாட்டாளி ஒற்றுமை, தலித் ஒற்றுமை பற்றிய அரசியல் பேசும்போதோ, திராவிடர், இந்தியர், தலித், பாட்டாளி என்கிற அடையாள அரசியல் பேசும்போதோ எந்தக் கேள்விகளும் முன்வைக்கப்படுவதில்லை.

தமிழர் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் பலரும், திராவிடர், இந்தியர், பாட்டாளி, தலித் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதில்லை; கேட்கவும் மாட்டார்கள்.

ஏனெனில், ஒடுக்கப்பட்ட சாதியினர் நலன்களைக் காட்டிலும், தமிழர் அரசியலை - தமிழர் அடையாளத்தை - தமிழர் ஒற்றுமையைச் சிதைப்பதுதான் முதன்மையான நோக்கம். இதுவே குறுக்குச் சால் அரசியல் என்பது.

ஏர் மகாராசன்

மக்கள் தமிழ் ஆய்வரண்.

15.10.2020.

புதன், 14 அக்டோபர், 2020

பட்டியல் மாற்றக் கோரிக்கை சுயமரியாதைக் கோரிக்கையே! : மகாராசன்

எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் வேளாண் மரபின் சமூகப் பிரிவான தேவேந்திர குல வேளாளர்கள், தங்களை எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றி வேறு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையைப் பலகாலமாக முன்வைத்திருந்தாலும், அண்மைக்காலத்தில் அந்தக் கோரிக்கை மிகத்தீவிரமான வடிவத்தைப் பெற்று வருகின்றது. 

அம்மக்களின் பட்டியல் மாற்ற/வெளியேற்றக் கோரிக்கை பலதரப்பினரின் பேசுபொருளாக ஆகிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், அம்மக்களின் பட்டியல் மாற்றக் கோரிக்கையானது ஆரிய முகாம்களின் அரசியல் கோரிக்கை போலப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

அண்மையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையைச் சுயமரியாதைக் கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும்; அதனோடு பகுத்தறிவு மற்றும் சமத்துவம் சார்ந்த கோரிக்கையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனப் பேராசிரியர் டி.தர்மராஜ் அவர்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதிய தமிழக மனித உரிமைகள் கழகத் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் ஒரு கருத்தைச் சுட்டி இருக்கிறார். 

அந்தக் கருத்தும் எமது மறுப்பும் வருமாறு:

அரங்க குணசேகரன் கருத்து:

/மோடி அமித்சா ஆதரவோடு மோகன்பகவத் ஆசியோடு டாக்டர் கிருட்டிணசாமி இந்துமதச் சாக்கடையில் முக்கி எடுத்தாவது பள்ளர்களை தேவ இந்திரர்களாக மாற்றிவிடுவார்! கவலையே படாதீர்கள் வருங்காலக் காவிப் பள்ளர்களே!/

எமது மறுப்பு:

பட்டியல் மாற்றக் கோரிக்கை மோடி, அமித்சா, மருத்துவர் கிருசுண சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல. பொத்தாம் பொதுவாக அப்படிச் சுருக்கிப் பார்ப்பது நேர்மையல்ல.

ஒரு நூற்றாண்டு காலமாக அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கையே அது. 

மோடி வகையறாக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அந்த மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நியாயமற்றது என்றாகிவிடாது. இது அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கை. 

தமிழ்த் தேசிய, இடதுசாரிய, திராவிட முகாம்கள் அந்த சுயமரியாதைக் கோரிக்கையை ஆதரிக்காததன் விளைவாக, அதை ஆரிய முகாம்கள் தமது சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அம்மக்களின் சுயமரியாதைக் கோரிக்கையை மற்றவர்கள் முன்னெடுக்கிறபோது அந்த முகாமை நோக்கி அம்மக்கள் அணிதிரளுவார்கள். அவர்களைப் பொறுத்தளவில் அவர்களது சுயமரியாதை அங்கீகரிக்கப்பட வேண்டும் அவ்வளவே.

அந்தச் சமூகத்தின் ஒரு சில அரசியல் கட்சித் தலைமைகள் ஆரிய முகாமில் இருப்பதாலேயே அந்தச் சமூகத்தினர் அனைவரும் காவிக் கும்பலாகச் சித்தரிக்கும் தங்களது கருத்து ஏற்புடையது அல்ல; உண்மையும் அல்ல. 

திரு எல்.முருகன் பாசகவின் தலைவர் என்ற நிலையில் இருக்கும்போது, அருந்ததிய மக்கள் அனைவருமே காவிக் கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டுவதும் அடையாளப்படுத்துவதும் நேர்மையும் உண்மையும் அல்ல.

அதேபோல, ஆதிதிராவிடச் சமூகத் தலைவர்கள் ஒரு சிலர் பாசகவில் அய்க்கியம் காட்டிக் கொண்டிருக்கும் சூழலில், ஆதிதிராவிடர்கள் அனைவரும் காவிக்கும்பல் எனச் சுட்டுவீர்களா? அவ்வாறு சுட்டக் கூடாது; சுட்டவும் முடியாது.

இந்நிலையில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை ஆரிய முகாம்கள் ஆதரிப்பதாலோ அல்லது அந்தச் சமூகத்தின் ஒருசில தலைவர்கள் அந்த முகாமில் இருப்பதாலோ அந்த மக்கள் அனைவரும் ஆரியக் காவிக் கும்பலாக மாறுகிறார்கள்; மாறப்போகிறார்கள் எனக் கருதுவதும் கருத்துரைப்பதும் சரியல்ல; அதுவே உண்மையும் அல்ல.

அந்த மக்களின் கோரிக்கையை அவர்களின் சுயமரியாதைக் கோரிக்கையாக, அந்த மக்களின் சனநாயகக் கோரிக்கையாகப் பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும், சமூக இயக்கங்களும் ஆதரிக்கவே செய்கின்றன.

ஆரிய முகாம்களைச் சாராத மற்ற அரசியல் முகாம்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்ற நிலையில், பட்டியல் மாற்றக் கோரிக்கையை, அதை முன்னெடுக்கும் சமூகத்தினரை ஆரிய முகாமைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்துவது சமூகக் கண்ணோட்டக் குறைபாடு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களின் சனநாயகக் குரலுக்கும் எதிரானதும் ஆகும்.

ஏர் மகாராசன்

13.10.2020.

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

நவீன வர்ணாசிரமப் பாகுபாடும் பட்டியல் மாற்றக் கோரிக்கையும்: மகாராசன்

ஓர் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவரும் மேல்சட்டைகூடப் போடாதவருமான ஆடு மேய்க்கும் ஒருவர்,  இன்னொரு இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மேல் சட்டை அணிந்திருக்கும் ஆடு மேய்ப்பவரைக் காலில் விழ வைத்திருக்கிறார். 

பார்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவு பொருளாதார  வாழ்நிலை உள்ளவர்கள் போலத் தெரிகிறது. 

தனியாகச் சிக்கிய ஒருவரைக் கூட்டமாக உள்ளவர்கள் அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை எல்லாச் சாதியிலும் மட்டுமல்ல; ஒரே சாதிக்குள்ளும் இருக்கிறது.

ஆனால், ஒத்த வாழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு ஆதிக்க உணர்வும் ஒருவனுக்கு அடிமை உணர்வும் எப்படி வந்திருக்கிறது அல்லது வருகிறது? 

உயர்சாதி ஒரு தரப்பினராகவும் என்றும், கீழ்ச்சாதி இன்னொரு தரப்பினராகவும் வகைப்படுத்தி வைத்திருப்பது சாதி வர்ணாசிரமம் மட்டுமல்ல; இட ஒதுக்கீடுக்கென வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஓ.சி; பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் பட்டியல்களும்கூட நவீன சாதிய வர்ணாசிரமக் கட்டமைப்பாக உருமாறிக்கொண்டிருக்கின்றன.

ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள சாதியினர் எல்லோருமே உயர்சாதி என நினைத்துக்கொள்ளும்படியான சமூக உளவியல் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றது. 

சமூகப் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பினும் ஓ.சி / பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் இருக்கும் சாதியினர் தங்களை உயர்சாதி அல்லது உயர்த்திக்கொண்ட சாதி என நினைத்துக்கொண்டு தம்மளவிலான சமூக மதிப்பையும் சுயமரியாதையையும் பெற்றதான சாதிகளாகக் கருதிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், எஸ்.சி எனும் பட்டியலில் உள்ள சாதியினர் அனைவரையும் தீண்டாச் சாதிகள்; இழி சாதிகள் என ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள மற்ற சாதியினர் இழிவாகக் கருதுவதும், இழி நடத்தையால் சமூக ஒதுக்கம் செய்வதும், அவர்களது சுயமரியாதையை அவமதிப்பதும் உயர்த்திக்கொண்ட சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரிய வர்ணாசிரமம் கட்டமைத்திருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இப்போதைய ஓ.சி/பி.சி/எம்.பி.சி இடஒதுக்கீட்டுப் பட்டியல்களில் உள்ளவர்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடைபிடிக்கும்  சாதிவாதிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அதாவது, எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதியினரை மற்ற ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியலில் இருக்கும் சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதும், இழிவாகக் கருதுவதும், சுய மரியாதையைப் பறிப்பதும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வகைப்பாட்டின் அய்ம்பதாண்டு கால சமூக விளைவு, அது நவீன வர்ணாசிரமக் கட்டமைப்பாக மாறிப்போயிருக்கிறது.

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இடஒதுக்கீட்டுப் பட்டியல்களும் அவற்றின் சாதிகளும் மாற்றியும் மறுசீரமைப்பும் செய்யப்பட வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கர் கூறியதைப் புறந்தள்ளியதன் விளைவே, இடஒதுக்கீட்டுப் பட்டியல்கள் நவீன வகையிலான சாதியக் கட்டமைப்பைப் பாதுகாப்பதாக மாறிப்போயிருக்கிறது.

அதனால்தான், எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இருக்கின்ற காரணத்தாலேயே சமூக ஒதுக்கல்களையும், சமூக அவமதிப்பையும், சுயமரியாதை இழிவையும் எதிர்கொண்டிருக்கும் ஒரு சமூகப்பிரிவினரான தேவேந்திரகுல வேளாளர்கள் தாங்கள் எஸ்.சி பட்டியலில் இருப்பதாலேயே இதுபோன்று நடத்தப்படுவதாகவும், அத்தகையச் சமூக இழிவிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையாகவே எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேறி, வேறு பட்டியலுக்கு மாறுவதான பட்டியல் மாற்றக் கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், பட்டியல் மாற்றக் கோரிக்கை என்பது, நவீன வர்ணாசிரம சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான கோரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஏர் மகாராசன்

13.10. 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

உள் ஒதுக்கீடும் இனவாரிச் சுழற்சிமுறையும் - நீதியும் அநீதியும் :- மகாராசன்

உள் ஒதுக்கீடு வேறு; இனவாரிச் சுழற்சி முறை வேறு என்பதை, இன்னும் இந்தச் சமூகம் விளங்கிக் கொள்ளவே இல்லை.

*

அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூக நீதிதான். 

அதேபோல, இசுலாமியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதும், கல்வி வேலைவாய்ப்புகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதும் சமூகநீதிதான்.

இன்னும் சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய இதர சமூகங்களுக்கும் உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். 

தமிழக இடஒதுக்கீட்டுப் பிரிவில் பி.சி பட்டியலும், எஸ்.சி பட்டியலும் உள்ஒதுக்கீடு கொண்ட பட்டியல்களாக இருக்கின்றன. ஆனால், இரண்டு பிரிவுகளிலும் பின்பற்றப்படுகிற இன வாரிச் சுழற்சிமுறைதான் வேறுவேறாக இருக்கின்றன.

அதாவது, ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்பும்போது இனவாரிச் சுழற்சிமுறை (Roster system) என்கிற முறை பின்பற்றப்படும். 

இந்த இனவாரிச் சுழற்சிமுறை பி.சி பட்டியலுக்கு ஒரு மாதிரியாகவும், எஸ்.சி பட்டியலுக்கு வேறு ஒரு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிறது.

100 புள்ளிகள் கொண்ட சுழற்சிமுறைதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்புவது வழக்கம். 

அதாவது, இப்போது ஐந்து பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது என்று சொன்னால், முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு இப்படித்தான் தேர்வு நடைபெறும். இந்த முறைதான் இனவாரிச் சுழற்சிமுறை எனப்படுகிறது.

பி.சியில் இருந்து பி.சி.எம் உள்ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. பி.சி இடஒதுக்கீட்டில் இனவாரிச் சுழற்சிமுறை ஒன்று இருக்கிறது. அதில் பி.சி - பொது (BC - GT) என்றுதான் இருக்கிறது. பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர், பி.சி ஒதுக்கீட்டுக்குள் பங்கு கோர முடியாது. அதேவேளையில், பி.சி -  பொது எனும் சுழற்சி முறையில் பி.சி பிரிவினரும் பி.சி.எம் பிரிவினரும் பங்குபெறலாம். 

எனினும், பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சி இடத்தில் பி.சி.எம் என்ற உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடமாக மாற்றி அமைக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு மாற்றி அமைத்தால் ஒட்டுமொத்த பி.சி பிரிவினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, பி.சி - பொது என்ற இனவாரிச் சுழற்சிமுறையே அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால், எஸ்.சி பொதுப் பிரிவிலிருந்து எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கிய பிறகு, மீதமுள்ள 15% எஸ்.சி - பொதுவிலும் எஸ்.சி.ஏ பிரிவினருக்கு இடமளிக்கப்படுகிறது. இது போக, இனவாரிச் சுழற்சிமுறையில் இதுவரை இருந்து வந்த எஸ்.சி -  பொது (SC - GT) எனும் இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி இதரப் பிரிவினரும், எஸ்.சி.ஏ பிரிவினரும் பங்குபெறலாம் என்றிருக்க வேண்டும். ஆனால், எஸ்.சி - பொது என்ற இடத்தில் உள்ள இனவாரிச் சுழற்சிமுறை இடத்தில் எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது அவர்களுக்கான சமூக நீதிதான். அந்த நீதி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

ஆனால், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கியதுபோக, எஸ்.சி - பொதுப் பிரிவிலும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவினர் பங்கு பெறுவதுமான இடமளிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, இனச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ பிரிவைக் கொண்டு வைத்திருப்பதும்தான், எஸ்.சி பொதுப் பிரிவில் இருக்கும் இதர சாதிகளுக்கான அநீதியாக இருக்கிறது. 

இனவாரிச் சுழற்சிமுறையில் முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு. இப்படித்தான் இனவாரிச் சுழற்சிமுறையில் இடஒதுக்கிட்டுத் தேர்வு முறை நடைபெறும்.

இனவாரிச் சுழற்சிமுறையில், பொதுப்பிரிவினருக்கு அடுத்த இடம் எஸ்.சி எனும் பட்டியல் பிரிவினர் தான் வர வேண்டும். அதில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகப்பிரிவினர் உள்ளிட்ட 77 சாதிகளும் போட்டியிடலாம். 

எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இடம் பெற்ற 77 சாதிகளுக்கான அந்த வாய்ப்பை, எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான வாய்ப்பாக மாற்றி அமைத்திருப்பதுதான், எஸ்.சி பிரிவில் இருக்கும் பிற சாதியினருக்கான அநீதியாக இருக்கிறது. 

எஸ்.சி பிரிவில் எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, இனவாரிச் சுழற்சிமுறையில் எஸ்.சி - பொது என்று இருந்த இடத்தில், எஸ்.சி.ஏ எனும் உள்ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான இடமாக மாற்றி அமைத்த காலத்திலிருந்துதான், எஸ்.சி - பொது எனும் இனச்சுழற்சிமுறையில் பணிவாய்ப்பு அடைந்து கொண்டிருந்த இதர சாதியினர், எஸ்.சி இடஒதுக்கீட்டில் பணிவாய்ப்பு பெறுவதில் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர். 

எஸ்.சி எனும் இடஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இனவாரிச் சுழற்சிமுறையால் எஸ்.சி இடஒதுக்கீட்டில் கூட பயன்பெற முடியாமல் போயிருக்கும் சூழலில்தான், எஸ்.சி பிரிவில் இருக்கும் குறிப்பிட்ட சாதியினர் அந்தப் பிரிவிலிருந்து வேறுபட்டியலுக்கு மாறவேண்டும்; மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.

எஸ்.சி பிரிவில் தங்களுக்கான இடம் மறுக்கப்படுவதாலேதான், தங்களை எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அதேவேளையில், எஸ்.சி பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் பின்பற்றப்படும்

இனவாரிச் சுழற்சிமுறை அமைப்பை எதிர்கவும் வேண்டும். அதுவே, எஸ்.சி பிரிவில் இருக்கும் எல்லாச் சாதியினருக்குமான நீதியாக இருக்கும்.

இட ஒதுக்கீட்டைக் குறித்தும், உள் இட ஒதுக்கீட்டைக் குறித்தும், இனவாரிச் சுழற்சி முறை குறித்தும் தமிழ்ச் சமூகம் இன்னும் விளங்கிக்கொள்ளவே இல்லை.

எஸ்சி பிரிவில் இருக்கும் இதர சாதியினருக்கான நீதியைக் கோருவதைக் கூட சமூக அநீதியாகப் பார்க்கப்படும்; சாதிவெறியாகக் கருதப்படும் என்பதுதான் வேதனை.

ஏர் மகாராசன்

28/8/2020

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

முல்லைக்குத் தேர் ஈந்ததைத் திரும்ப எழுதுதல்: மகாராசன்

வெக்கையில் காய்ந்தும் விரிப்போடியும் கிடந்த நிலமெல்லாம், குளிரக் குளிரப் பெய்த மழையால் பசப்புமேனிப் பூப்பெய்திக் கிடந்தது. காடெல்லாம் கம்மென்று மணத்துப் பரவியது. கடுக்கை, தோன்றி, இல், எள், துவரை, அவரை, குல்லை, முல்லைச் செடிகொடிகள் சூல்பிடித்து ஈனுகையில், வனத்தில் வானம் முட்ட எழுந்திருந்த மரங்களின் நிழல், வெயில் முகத்தான் பார்த்திடாதபடி மறைத்துக்கொண்டிருந்தது.

காட்டு வனத்தாள் நாள்தோறும் வகைவகையாய் ஈன்று கொண்டிருந்தாள். பிள்ளைத் தாய்ச்சியாய்த் தனித்திருந்த காட்டுவனத்தாள் சில்லெனக் கோதி இருந்தாள். சிலிர்த்திருக்கும் புற்கள், பூத்துக் குலுங்கும் செடிகள், காய்த்துத் தொங்கும் மரங்கள் தோரணங்களாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன.

சலசலவெனக் கேட்கும் காட்டாறும், பூச்சிகளும் பறவைகளும் இசைக் கோலத்தை வனத்தின் பக்கமெங்கும் வரைந்து கொண்டிருந்தன.

கோல், கொடி, கோட்டை, அரண், வாயில் என நாட்டுக்குள் அரசாளும்
மன்னவனாக இருந்தாலும், சூரியன் கூட உள்புக முடியாத பச்சை மரகதக் கோட்டையாம் காட்டுக்குள் நுழைந்து விட்டால் அவனும் ஒரு பிள்ளைதான் வனத்தாளுக்கு.

வளமேறிய காட்டின் அழகையெல்லாம் அவ்வப்போது பார்த்துவிட்டுத்தான் வருவான் அவன். போரும் பகையுமாய்க் கிடந்ததால், கொஞ்ச நாளாய்க் காட்டுக்குள் போய்வர முடியாமல் போயிற்று.

போர்க் காயங்கள் ஆறிக்கொண்டிருந்த நிலையில், மனதில் உரசிய சிராய்ப்புக் காயங்கள் மட்டும் இன்னும் ஆறிய பாடில்லை. கோட்டைக்குள்ளிருக்கும் பொழுதுகள் புழுத்துப்போயின.

எங்காவது போய் வரவேண்டும் என உள்மனம் கெஞ்சிக்கொண்டே இருந்தது. பிள்ளைகள் இருவரையும் அழைத்துப்போகலாம் என நினைத்தவன், சட்டென்று கிளம்பி முற்றத்துக்கு வந்தான்.

வயதொத்த பிள்ளைகளோடு பாண்டியம் விளையாடிக் கொண்டிருந்தனர். சில்லுகளைக் கட்டங்களில் போட்டு நொண்டி அடித்துத் தாண்டி விளையாடிய மகள்களின் குதூகலத்தைக் குலைத்துப்போட மனமில்லாமல் தேர் அருகே வந்து நின்றான்.

கொள்ளு தின்று முடித்திருந்த குதிரைகளை இழுத்து வந்து தேரில் பூட்டிக்கொண்டிருந்தான். தேர்ப்பாகன் பதைபதைத்து அருகே ஓடிவந்தான். தான் மட்டுமே தேரில் போய் வருகிறேன் ஓய்வெடு என்று பாகனிடம் சொல்லிவிட்டு, எட்டியிருக்கும் காடு நோக்கிப் புறப்பட்டான்.

வெளியூர் போயிருந்த தன் மகன், வீடு நோக்கி வருகையில் மனதெல்லாம் பூரிப்பாகி உச்சி முகரும் தாய்ச்சிகள் போலவே, காட்டுக்குள் நுழைந்த அவனுக்கு வனத்தாய்ச்சியின் காட்டு மணம் நாசிக்குள் நுழைந்து மனதை முத்தமிட்டு வந்தது.

வெக்கையில் காய்ந்து காயம்பட்டுக் கிடந்த காட்டுக்கு, மழையாள் வந்து மருந்திட்டுப் போயிருக்கிறாள். காட்டின் காயங்கள் ஆறிப்போனதும், பசுந்தோல் படர்ந்து விரிந்ததும், செடிகொடிகளும் பூக்களுமாகப் பயிர்க்கால்கள் முளைத்து எழுந்ததும் பார்த்த அவனின் மனக்காயங்களும் மெல்ல ஆறத் தொடங்கின.

வெறுங்கால்களில் நடக்கையில் பாசிப்புற்களின் ஈரக் கோதல் பாதங்களைச் சிலிர்க்கச் செய்தன. வனப் பூக்களின் மணத்தையெல்லாம் மூச்சிழுத்து மனக்காயத்திற்குத் தடவிக் கொடுத்தான். ஒவ்வொரு பூஞ்செடிகளின் இலைகளையும் இதழ்களையும் தடவித் தடவி அழகையெல்லாம் கண்ணுக்குள் சொருகி மனதுக்குள் நீவிக்கொண்டிருந்தான். வெகுநாளைக்குப் பிறகு இன்று புதிதாய்ப் பிறந்தது போலவும் உணர்ந்தான். அவனது மனமும் உடலும் அறிவும் சிலிர்ப்படைந்திருந்தன.

உச்சிப்பொழுது மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் நினைப்பும் வந்துவிட்டது. வந்த தடம் பிடித்து அதன் வழியே திரும்பிக் கொண்டிருந்தான். எல்லாச் செடிகொடிகளும் துணையாகவும் இணையாவும் பிணையாகவும் இருந்து கொண்டிருந்த தோழமை அழகை மனதால் அள்ளிப் பருகியபடி காட்டிலிருந்து காலாற நடந்தபடி தேர் அருகே வந்து சேர்ந்தான்.

நிறுத்தியிருந்த தேரின் அருகே ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்குப் பற்றுக் கம்பு இல்லாது காற்றில் அல்லாடிக் கொண்டிந்தது.

காட்டின் அடையாளமும் காதல் இருந்தலின் அடையாளமும் இந்த முல்லைதானே.

முல்லை அல்லாடுவது இவன் மனம் அல்லாடுவது போலவே இருந்தது. அது அல்லாடாமல் தாங்கி நிற்க ஏதாவது செய்திட வேண்டும் என நினைத்தான். அது பற்றிப் படர்வதற்குக் காய்ந்து முறிந்து போன சிறு சிறு சுள்ளிகளைக் கொண்டும் குச்சிகளைக் கொண்டும் பந்தல் போன்ற படர் அமைத்தான். அந்தப் படரில் கொடியை ஏறவிட்டான். இனி முல்லை அல்லாடாது. அதுபற்றிப் படர்ந்து சிம்படித்துப் பூத்துக் குலுங்கும் என்ற குதூகலப் பூ அவன் மனதுக்குள்ளும் மணத்தது.

தேர் மேல் ஏறிப் புறப்பட நினைத்தவன், முல்லைப் படரைத் திரும்பப் பார்த்தான். முல்லைக் கொடிக்கு அவன் அமைத்திருந்த அந்தப் பந்தல் படரே தேர் போன்ற தோற்றத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.

ஓட்டி வந்த அவனது தேர் உயிரில்லாமல் இருப்பதையும், அவன் அமைத்திருந்த  பந்தல் படர் உயிர் படர்ந்து சிரித்திருப்பதையும் பார்த்த அவன், ஓட்டி வந்த தேரை இழுத்து வந்து, படர் அருகே நிறுத்தியும் விட்டான்.

இந்தத் தேரும் இந்த முல்லைக்கொடியால் படர்ந்து உயிர்பெறட்டும் என உள்ளுக்குள் நினைத்தபடி, குதிரைகளை அவிழ்த்துக்கொண்டு காலாற ஊர்நோக்கி நடந்து வந்தான்.

வருகின்ற வழியிலெல்லாம் படர்வதற்கு அல்லாடும் முல்லைக்கொடிகள் கண்ணில் படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். எது எது அப்படிக் கண்ணில் படுகிறதோ அவற்றுக்கெல்லாம் படர் அமைக்கச் சொல்லவேண்டும் என்று குறித்தபடி அரண்மனை வந்து சேர்ந்தான்.

தேரில்லாமல் வெறும் குதிரைகளுடன் மட்டுமே திரும்பிவந்த அப்பனிடம் மகள்கள் இருவரும் அக்கறையாய் ஓடிப்போய் என்ன ஏதுவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இருவரையும் கக்கத்தில் அணைத்தபடி முல்லைக்கொடித் தேர்ப் படரைப் பற்றி கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்பனின் தேரையும் முல்லையின் தேரையும், அப்பனின் தேரானது முல்லைக்குத் தேரானதையும் பார்க்க வேண்டும் என மகள்கள் இருவரும் அப்பனிடம் இரவு முழுக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலை விடிவதற்குள் கண்கள் விழித்துக் கிடந்தனர் மகள்கள்.
மகள்களை இன்னொரு தேரில் அழைத்துக்கொண்டு போனான்.

முல்லைப் படரையும் தேரில் படர்ந்திருந்த முல்லைக் கொடியையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே  முல்லையோடு எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்தத் தேரையும் இங்கு நிறுத்திவிட்டுப் போவோமா எனப் பிள்ளைகள் கேட்க, இப்போதைக்கு இதற்கு இது போதும் மகள்களே! இன்னொரு தேரும் இதற்கு வேண்டாம் மகள்களே! இதையும் கொடுத்துவிட்டால் தேர்ப்பாகன் நமை வைதுவிடுவான் என மெல்லச் சிரித்துக்கொண்டான்.

முல்லை அல்லாடாமல் தேர் அமைத்த அப்பனின் அந்த அக்கறை உணர்வு அன்றிலிருந்து மகள்களுக்கும் வந்துவிட்டது. காட்டில் மட்டுமல்ல, அரண்மனை வீட்டு முற்றத்திலும் ஒரு முல்லைச் செடியை நட்டுவைத்து, அம்முல்லைக் கொடி சிம்படித்துப் படர முயலும்போது குச்சிகளால் படர் அமைத்தனர் பெண் பிள்ளைகள். அந்தப் படரும் பார்ப்பதற்குத் தேர் போலவே இருந்தது. முல்லைக்கு அப்பன் மட்டுமல்ல; பிள்ளைகளும் தேர் ஈந்தனர்.

அன்றிலிருந்து, முல்லைகள் படர்ந்த அந்தக்காடும், காட்டின் மகுடமான அந்தப் பறம்புமலையும் பெண்பிள்ளைகளின் தோழிகளாயிற்று. விழிகள் பார்த்த பறம்புமலை, பெண் பிள்ளைகளின் மொழியிலும் பரவிக் கிடந்தது.

முந்நூறு ஊர்கள் சூழ்ந்திருந்த பறம்புமலை நாட்டின் இயற்கை வளங்கள் மீது பேரரசுகளின் கண்கள் குறி பார்த்துக்கொண்டே இருந்தன.

தங்களுக்குள் மோதிக்கொண்ட பேரரசுகள் பறம்புமலைநாட்டின் மீது போர்தொடுக்கும்போது மட்டும் கூட்டாகச் சேர்ந்து கொண்டன. ஈழத்தில் கொத்துக்கொத்தாய்க் கொன்றழிக்கக் கூட்டுச் சேர்ந்தாற்போல், பறம்புமலை வளங்களைச் சூறையாட மூவேந்தப் படைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து பறம்புமலையைத் தாக்க முனைந்தன.

தன் குடிகளையும் நிலத்தையும் பறம்புமலையையும் காக்கத் தம்மால் முடிந்தளவு போராடிப் பார்த்தான் பறம்புமலைத் தலைமகன். ஆனாலும், போர்க்களத்தில் தானும் ஒரு வீரனாகவே மடிந்துபோனான் அவன். பறம்புமலையும் இப்போது பேரரசுகளின் கையில்.

அப்பனை இழந்த பெண் பிள்ளைகள் அநாதைகளாகவும் அகதிகளாகவும் தனித்து நின்று அழுது கொண்டிருந்தனர்.

பற்றுக்கோடு இல்லாது அல்லாடிய முல்லைக்குத் தேர் ஈந்த அப்பன் கொல்லப்பட்டான். அம்முல்லைக்குத் தேர் ஈந்த அந்தப் பெண் பிள்ளைகள் அரவணைப்பார் எவருமின்றி அகதிகளாக நின்று கொண்டிருந்தனர். முல்லைக்குத் துணை நின்றவர்களுக்கு இப்போது யாருமே துணையில்லை.

அப்பனை இழந்து, மக்களை இழந்து, நாடிழந்து அகதியாய் அழுது தவித்தனர் பெண் பிள்ளைகள்.

போன மாத நிறைமதி நாளில் நாங்கள் தந்தையுடன் மகிழ்ந்திருந்தோம். இந்த மாத நிறைமதி நாளில் எம் குன்றையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். எம் தந்தை எங்களுடன் இல்லை. என்ன செய்வோம்? என அழுத பெண் பிள்ளைகளின் நினைப்பில் அப்பனும் பறம்புமலையும்தான் திரும்பத் திரும்ப வருகின்றன.

*
“அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்
எந்தையும் உடையேம்;
எம்குன்றும் பிறர் கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்
எம்குன்றும் கொண்டார்!
யாம் எந்தையும் இலமே?”

முல்லைக்குத் தேர் ஈந்த பாரி மகள்களான அங்கவையும் சங்கவையும் பாடிய இந்தப் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கிறது.

அங்கவையும் சங்கவையும் பாடிய அந்தப் பறம்புமலை வெறும் மலையல்ல. பல்லுயிர்களின் தாய்மடி. இயற்கையின் வரம். பழந்தமிழர் வரலாற்றின் தொன்மை. பாரி, அங்கவை, சங்கவை மட்டுமல்ல; பல்லாயிரம் மக்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் ஆத்மா.

அந்தப் பறம்புமலையைத் தான், முதலாளிகளும் அரசியல்வாதிகளும் சுரண்டல்வாதிகளும் இப்போது சிதைக்கவும் அழிக்கவும் சுரண்டவும் தொடங்கி இருக்கிறார்கள்.

பறம்புமலை பாரிக்கு மட்டுமல்ல;
அங்கவை சங்கவைக்கு மட்டும் உரியதல்ல; அது நமக்கும் உரியது; தமிழர்க்கு உரியது.

*
பறம்புமலை மீட்போம்.
இயற்கை வளம் காப்போம்.
பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கத்தோடு துணை நிற்போம்.

*
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
04.08.2020

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் (Agrarian Studies) முன்னெடுப்பு: மகாராசன்.

நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைய உயிரை உருவாக்க முடியும் என்று கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும்.

ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள்.  அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் என்று படர்ந்து விரிந்தது.  தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு.  எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும் தொடர்புகள் உண்டு.  அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன.

வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும்.  சொல்லப்போனால், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில தமிழ்ச் சிந்தனையை நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது.  அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். 
அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது. 

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும் ஆய்வுகளும் படைப்புகளும் கலைகளும் மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது.

காலங்காலமாகவே, ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத்தொழிலும் அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர்.

எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற, சுரண்டப்படுகிற, ஒடுக்கப்படுகிற, இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள், கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள், அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை.

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை, வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண்மை மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் பேரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றன. தமிழ்ச் சமூகத்தில்தான் வேளாண்மை குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கிறது.

வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies)
முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும்.

பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான் வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism)
எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும்.

அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies)
முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர்.

'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் இச்செயல்பாடுகளில் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து கொள்ளலாம்.

மக்கள் தமிழ் ஆய்வரண் உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளின் வழியே வேளாண் மக்கள் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக இணைவோரும் இணையலாம்.

இன்றைய கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுச் சூழலில், நிலமும் நீரும் காற்றும் மட்டுமல்ல, சக மனிதருமேகூட நஞ்சு என்று கருதுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  முற்றிலும் புதிய வாழ்க்கையொன்றிற்கு வலுக்கட்டாயமாகப் பழக்கப்படுத்தப்படுகிறோம்.  இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே வேளாண் மக்கள் ஆய்வுகளின் இப்போதைய மய்யப்பொருள். 

இன்றைய சமூகம் கொண்டு வரும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது?  நமது நிலப்பரப்பை மாற்றியமைக்கப் போகிறோமா?  சமூகக் கட்டுமானங்கள் உருக்குலையத் தொடங்குகின்றனவா?  கலை வடிவங்கள் திரியத் தொடங்குகின்றனவா?  அறம், புதிய விளக்கங்களுக்கு உட்படுகிறதா?  ஒழுக்க வரையறைகளை மறுபரிசீலனை செய்கிறோமா?  அரசு, அதிகாரம், அறிவு போன்றவை எவ்வாறு உருமாற்றம் அடைகின்றன?  இத்தனைக்கும் நடுவில் பெரும்பான்மை வேளாண் மக்களின் நிலை என்னவாகப் போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘வேளாண் மக்கள் ஆய்வுகள்’ வழியாக உரையாடலைத் தொடங்க இருக்கிறது மக்கள் தமிழ் ஆய்வரண்.

இணைவோம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
30.06.2020

நீர் அறுவடைப் பண்பாடும் பள்ளு இலக்கியச் சித்திரமும் : மகாராசன்.


தென்மேற்குப் பருவ காலத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வந்திருக்கிறது. ஆடி மாதக் காலங்களில்  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன. அதனையே ஆற்றுப்பெருக்கு எனக் குறித்திருக்கின்றனர். ஆற்றுப் பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்றழைத்திருக்கின்றனர்.

மழைநீரையும் ஆற்று நீரையும் நீர் ஆதார நிலைகளுக்குக் கொண்டு சேர்த்து, முதலில் நீரை அறுவடை செய்து, அறுவடை செய்த நீரைக்கொண்டு வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தயாராகி இருக்கின்றன  நீர்ச் சமூகம் உள்ளிட்ட உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும்.

குடி மராமத்துப் பணிகளில் நீர்ச் சமூகத்தின் பெருந்துணையோடு வேளாண் உற்பத்தியின் தலைக் குடியும், அதற்குத் துணையான 18 குடிகளும் கூடி உழைத்ததால் / கூடிச் செயலாற்றியதால் / உழைத்து முடித்ததால் நீரை அறுவடை செய்வதற்கும், பயிர் விளைவிப்புக்கான உற்பத்திச் செயல்பாட்டின் முன் தயாரிப்புமாக  ஆற்று நீரை வரவேற்க உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும் ஆற்றங்கரைகளில் களிப்புடன் கூடி இருக்கின்றனர்.
நீர் அறுவடைக்கான அந்தக் கூடுகையே ஆற்றுப் பெருக்கும் ஆடிப்பெருக்குமான உற்பத்திப் பண்பாடாய் நிகழ்த்து வடிவம் பெற்றிருக்கின்றது.

நிலம், நீர், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும், உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்ட வேளாண்குடிகள், நீர்ச் சமூகத்தின் பேருதவியோடு தமது உற்பத்திச் செயல்பாடுகளுள் ஒன்றாக நீரை அறுவடை செய்வதும் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில், நீர் அறுவடைக் களிப்பின் வெளிப்பாடுதான் ஆடிப்பெருக்கின்  கூடுகை அமைந்திருக்கின்றது.

ஆடி மாதத்து ஆற்றுப் பெருக்கை வைத்தே உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடிப் பட்டம் தேடி விதைக்க, ஆற்றின் புது வெள்ளத்தை வேளாண் குடிகள் மகிழ்வுடன் அறுவடை செய்து வரவேற்கும் பண்பாட்டியல் நிகழ்வுதான் ஆடிப் பெருக்கின் கூடுகை. வேளாண்மை சார்ந்த பண்பாட்டுக் கூடல் விழாவாகத்தான் ஆடிப் பெருக்கு இருந்திருக்கின்றது.

நீர் அறுவடைப் பண்பாட்டைத் தம்மகத்தே கொண்டிருக்கும் வேளாண் உழவுத்தொழில் மரபினரைக் குறித்த பள்ளு இலக்கியங்கள் நீர் அறுவடை நிகழ்வுகள் பற்றி நிறையவே பதிவு செய்திருக்கின்றன.

தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றான முக்கூடல் பள்ளு இலக்கியமானது நீர் அறுவடைச் செயல்பாட்டு நிகழ்வைக் காட்சியாக விவரிக்கும் பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டுக்கான மிக முக்கியமான இலக்கியச் சான்றுகளாகும்.

மழைமேகம் சூழ்ந்து மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின. குடி மராமத்து செய்து நீர்நிலைகளைத் தயார் நிலையில் வைத்திருந்த வேளாண் உழவுக்குடிகள், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வரவேற்ற நிகழ்வை,
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
     மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே!
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே
     கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே!
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே
     மழை தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே!
போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச்
    சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே!
என, முக்கூடல் பள்ளு நூல் பதிவு செய்திருக்கிறது.

மழைக் குறி பற்றிய இந்தப்  பாடல், நீர் அறுவடைக்கு தயாரான நிகழ்வைச் சுட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.
தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு, மழைக்குறி கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்  என்பதனையே அப்பாடல்  விவரித்திருக்கின்றது.

மழைநீரைப் பாதுகாக்கப் புறப்படத் தயாராகும் அவர்கள், மழையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயாரானதைப் பற்றிக் கூறும்போது,
இக்கரைக் காலிற்பொருநை அக்கரைக் காலின்
     மழைக்கு ஏமமென்றுஞ் சாமமென்றும் நாமல்லோ போவோம்!
தக்க தோணியைத்துறையிற் சிக்கெனக் கட்டும்;
     படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும்.
பக்கமே யூசிக்காம்பு சுழுக்கு வாய்க்கிடும்
     சீலைப் பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும்.
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில்
     பள்ளர் முழுதுங் குரவையிட்ட எழுதின மாடீர்.
என்கிறது பள்ளுப் பாடல்.

அதாவது, மழை நீரைப் பாதுகாத்துக்கொள்ள ஆற்று வாய்க்காலுக்குச் சாமம் என்றும் ஏமம் என்றும் பார்க்காமல் நாமல்லவோ செல்கிறாம். துறையைக் கடக்க உதவும் தோணியைக் கட்டி வையுங்கள். மழையில் நனையாமல் செல்ல தாழங்குடை கொங்காணி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.  ஊசிக் காம்பில் சீலைத்துணி சுற்றிப் பந்தம் செய்து எண்ணெய் ஊற்றி எரிய விடத் தயாராகப் பொருள்களை வைத்திக்கொள்ளுங்கள் என, மழைப் பாதுகாப்பையும் மழைக்குப் பாதுகாப்பையும் பற்றி எடுத்துரைத்துள்ளது அப்பாடல்.
கரு உண்டானால் குழந்தை பிறக்காமல் போகாது. அதுபோலத்தான், கடலில் மேய்ந்த மேகங்கள் காற்றில் உந்தப்பட்டுக் காலூன்றிப் பெய்தன.

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு! செங்கண்
மால்ஆசூர் நன்னாட்டில் மழையுமந்த வண்ணமன்றோ!
வேலா வலயம் முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில்
காலான தூன்றி யந்தக் காலமுறை காட்டியதே.
என, காலூன்றி மழை பெய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

மழையை இந்திரன் என்பதாக உருவகம் செய்து, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபடும் வழக்கம் தமிழ் மரபில் இருந்திருக்கின்றது. பண்டைக் காலத்தில் இந்திர விழா மழைவேண்டி நடத்தப்பட்ட வழிபாடாகச் சிலப்பதிகாரம் குறித்திருக்கின்றது. அந்தவகையில், மழைத் தெய்வமாகக் கருதப்படும் இந்திரன் ஆணையின் பேரில்தான் மழை பொழிவதாக வேளாண் மக்கள் கருதினர்.

இந்திரன் ஆணையின் பேரில் மேகங்கள் சென்றன. கடலில் படிந்து நீரை அள்ளிக்கொண்டன; வானவில் தோன்றியது; மேகம் கரிய உருவம் கொண்டது; பொன்னிறத்தில் மின்னல்கள்மின்னின; மேகம் நீரைச் சுமந்து உலாவிக் கருத்து மழையாகப் பொழிந்தன. மழையில் குளிர்ந்து, மழைக்குப் பின்பு வானம் வெளிறியது என்பதை,
காவுக் கிறைவனாகும் இந்திரன் ஏவற்பணி கொண்டெழுந்த கார்
      கடலிற் படிந்து; திருவிற் கொட்டி; அடல்முக் கூடல் அரியுமாய்
பூவுக் குயர்ந்த கலை மின்னோடு மேவிக் கமலத் தயனுமாய்ப்
      புனலைத் தரித்து; வரையிலேறிக் கனலைத் தரித்த சிவனுமாய்த்
தாவிப் பறந்து; பணிகள் பதுங்கக் கோவித்தெழுந்த கருடனும்
      தானேயாகி உலகுக் குரிமை ஊனேயாகி உயிருமாய்க்
கோவிற் பெரிய வட மலேந்திரன் மாவிற் கறுத்துப் பொழிந்தபின்
      குளிருகின்றது; கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே.
என்கிறது பள்ளுப் பாடல்.

மழையானது எல்லா நிலத்திலும் பெய்திருக்கிறது. குறிஞ்சி நிலத்திலும் ஆற்று வெள்ளம் வந்தது.  வான அரசன் வள்ளலாகிப் பொழிய, மலை மன்னன் பரிசு பெற, மழை வெள்ளம் முழங்கிக் கொண்டு பாய்ந்தது.
யானைகள் நீராடின; பன்றிகள் உருண்டன; வெள்ளம் சந்தன மரத்தை உருட்டிக்கொண்டு வந்தது; மூங்கில் மரங்கள் சாய்ந்தன; குளவிப் பூச்சிகள் அலைந்தன; தேன் கூடுகள் கலைந்தன; காட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன; குறவர் ஊரில் வெள்ளம் புகுந்தது. தினை உதிரவும் பாலை நிலத்தை மாற்றவும் குறிஞ்சி நிலத்தில் ஆற்று வெள்ளம் வந்ததாகப் பள்ளுப்பாடல் கூறும்போது,
வானக் குருசில் வள்ளலாய் வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய்
      வழங்கு மாறும் புறப்பட்டே புனல்முழங்கு மாறுந் திறப்பட்டே
தானக் களிறு படிந்திடக் கொலை ஏனக் களிறு மடிந்திடத்
      தழையின் ஆரம் உந்தியும் பசுங் கழையின் ஆரம் சிந்தியும்
கானக் குளவி அலையவே மதுபானக் குளவி கலையவே
      காட்டுச் சாதி வேரிற்போய்க் குறமோட்டுச் சாதி ஊரிற்போய்ச்
சேனைப் புரவி அழகனார் மருகோனைப் பரவி அழகுபூந்
      தினையை வனத்தில் உதிர்த்துப் பாலையனைய வனத்தை எதிர்ந்ததே.
எனப் பதிகின்றது.

குறிஞ்சியை அடுத்த முல்லை நிலத்திலும் மழைநீர் ஆற்று வெள்ளம் பாய்ந்தோடியதைப் பள்ளுப்பாடல் எடுத்துரைத்துள்ளது.
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும்
      இருப்பை ஈந்து கள்ளியுங் கரைப் பொருப்பை ஈர்ந்து தள்ளியும்,
முதிரும் பாறு முறையிடக் கழுகுதிரும் பாறு சிறையிட
      முள்வேலெயினக் கிடைஎழப் பதி வெள்வேலெயினப் படைஎழப்
பிதிருங் காளை விழியுடன் குடல் அதிருங் காளை மொழியுடன்
      பெரு மறத்திய ரல்லவே எனுங் கருமறத்தியர் செல்லவே
கதிருங் காலும் போலவே சென்றுதிரங் காலுஞ் சூலவேற்
      கன்னி முலையிற் சுரந்தபால் எனமுன்னி முலையிற் பரந்ததே.
என்கிறது அப்பாடல்.

பாலை, மரவம், மூங்கில், குரவம், இரும்பை, ஈந்து மரங்களை ஆறு அடித்துக்கொண்டு வந்தது. பழைய பாறையிட்ட சிறைக்கு இடையில் வந்தது. எயினர் இட்ட வேல், முள், வேலிகளை அடித்துக்கொண்டு வந்தது. காளையரோடு பேசிக்கொண்டு கருமறத்தியர் சென்று அந்த முல்லை நிலத்தில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் நீராடினர் என்பதாக அப்பாடல் குறிப்பிடுகின்றது.
மலையில் மின்னலிட்டுக்கொண்டு வந்த ஆறு, வாய்கால் வழியே ஓடி வயலில் பாய்ந்து மருத நில வளத்தையும், நானில வளத்தையும் உண்டாக்கிற்று. குறிஞ்சியிலும் முல்லையிலும் பெருக்கெடுத்து வந்திட்ட ஆறுகள் மருத நிலத்திற்கு நீர் வளத்தை அள்ளித் தந்திருக்கின்றன. அதனை,
முந்நீ ரடுங்கணையார் முக்கூடல் மால்வரையின்
மின்னீர் வரக்கான் விளங்கிநின்ற வாறேயோ
நன்னீர் மருதமென நால்வளமுண் டாயதுவே
உன்னீர் அவைகண்டு உவந்துமெல்லச் சொல்லீரே
என்கிறது பள்ளுப்பாடல்.

முல்லை நிலத்தில் வெள்ளம் உருட்டிக்கொண்டு வந்தது. முல்லை நிலத்திலிருந்த முல்லை, கடுக்கை, தோன்றி, எண்ணெய் தரும் இல், எள், துவரை, அவரை, குல்லை ஆகிய செடியினங்களை அடித்துக்கொண்டு வெள்ளம் வந்து மருத நிலத்தின் குளத்தில் பாய்ந்திருக்கிறது. இதனை,
முல்லைக் கோடி யடுக்கையின்-மலி
கொல்லைக் கோடி கடுக்கையின் முட்டித் தோன்றி மவ்வலை-மது
      கொட்டித் தோன்றி வெவ்வலை இல்லைச் சாடி எண்ணெயும்-அயல்
எல்லைச் சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும்-உறை
      கொள்ளும் அவரை எவரையும் தொல்லைப் பாடு பண்ணியும்-துறு
கல்லைப் பாடு நண்ணியும் தொடுத்துப் பூவை நெற்றியைத்-தொட
      மடுத்துப் பூவை எற்றியே குல்லைத் தானந் தேக்கி-மாலுக்
கெல்லைத் தான மாக்கிமால் கொள்ளுங் கயத்தை நிகர்த்து-மருதந்
      துள்ளுங் கயத்தில் பாய்ந்ததே.
எனப் புலப்படுத்தி இருக்கிறது பள்ளுப் பாடல்.

மருத மரம் செழிக்க, நீர் நிலையில் தாமரை மலர, எருமை குளிக்க, புழுதி குளிர, கரும்பு செழிக்க, வாழை அடுக்கடுக்காய் வளம் பெற, முதலை மேய; தவள வாரணம் (அன்னப்பறவை) நீந்த மருத நிலத்தைச் செழிப்பாக்கி இருக்கின்றன ஆறுகள். அதனை,
பாயும் மருதஞ் செழிக்கவே-பணைதோயும் மருதந் தளிர்க்கவே
      பகட்டுக் கமலை வட்டத்தில்-புனல் தகட்டுக் கமலக் குட்டத்தில்
போயும் எருமை பதறவே-உர மீயும் எருமை சிதறவே
      புழுதிச் சாலை நனைத்துமே-குளிர் கொழுதிச் சாலை யனைத்துமே
சாயும் உரலுங் கரும்புந்தான்-அதில் பாயும் முரலுஞ் சுரும்புந்தான்
      சரிய முதலை முடுக்கியும்-வாழைப் பெரியமுதலை அடுக்கியும்
காயுந் தவள வாரணம்-எதிர் ஆயுந் தவள வாரணம்
      கழனிக் குடிலைத் தொகுத்து-நெய்தலந் துழனிக் குடிலிற் புகுந்ததே.
எனச் சொல்கிறது அப்பாடல்.

முல்லை நிலத்தைச் செழிக்கச் செய்த ஆறு மருத நிலத்தில் பாய்ந்து செழிப்பாக்கிய பின்னர் நெய்தல் நிலத்தில் பாய்ந்திருக்கிறது. நெய்தல் நிலத்தில் பாய்ந்த வெள்ளம், நெய்தல் மலர்களைக் கசக்கிற்று. புள்ளினங்கள் பறந்தோடின; வெள்ளம் பட்டினத்தில் நுழைந்ததால் மக்களால் நிலைகொள்ள முடியவில்லை. வெள்ளம் சோலையை விட்டு வந்து உப்பளத்தில் ஓடிற்று. கடலில் நுழைந்து தன் கடமையை நிறைவேற்றின ஆறுகள். இதை,
புகுந்த நெய்தலை மயக்கியே-மலர் மிகுந்த நெய்தலைக் கயக்கியே
      புடையிற் புளினஞ் சரியவே-அதன் இடையிற் புளினம் இரியவே
பகுந்து நுழையப் பட்டினம்-திரைமுகந்து நுழையப் பட்டினம்
      படைத்தி டாமை நிகழவே-நிலைகிடைத்தி டாமை யிகலவே
உகுந்த தண்டலை நீக்கியே-புனல் வகுந்து தண்டலை தாக்கியே
      உப்பளத் தாரை யோட்டியும்-புனல் அப்பளத்தாரை யீட்டியும்
தகுந்த டங்கடல் இறைவனைத்-தொழ மகிழ்ந்தி டுங்கடன் முறையினிற்
      சார்ந்து சுறவு நேர்ந்து-குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே.
என்கிறது அப்பாடல்.

ஆற்று வெள்ளம் கடலில் புகுந்தது. கடல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஆறு உள்ளே நுழைந்தபோது மூக்கன், சாளை, எண்ணெய்மீன், பசலி, திருக்கை, கசலி, கெளுத்தி, பண்ணாங்கு, பாசிமீன், மகரம், சள்ளை, மத்தி, உல்லம், பொத்திமீன், மடந்தை, கடந்தை, செம்பொன் நொறுக்கி, மலங்கு, பஞ்சலை, கருங்கண்ணி முதலான மீன்கள் ஆற்று மணலில் புதைந்து ஒளிந்து கொண்டன என்பதை,
உதைத்து விசைகொண் டெதிர்த்துக் கடலின் உதரங் கீறி யதிரும்நீர்
     உதயவரைக்கும் பொதிய வரைக்கும் ஒத்துப் போகும்படி முற்றும்போய்
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன்
     பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங் கும்பழம் பாசிமீன்
வதைக்கும் மகரங் குதிக்குஞ் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன்
  மடந்தைகடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும்பஞ்சலை கருங்கண்ணி
புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலைப் பொருநம் அழகர் கருணைபோல்
     பொருநை யாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே.
என்கிறது பாடல்.

ஆற்று மணலில் புதைந்திருந்த பரவை, குரவை, வாளை, கோளை, தேளிமீன், மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி, மணலி, ஆரால், ஓராமீன், அயிரை, கெண்டை, கெளிறு, வரால் ஆகிய மீன்கள் அணையிலும், வாய்க்காலிலும், குளத்திலும், வயலிலும் வந்து பாய்ந்ததை,
வற்றா மடுவிற் பரவை குரவை வாளை கோளை தேளிமீன்
     மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன்
பற்றா அயிரை கெண்டை கெளிறு பருவ ராலும் அணையிலே
     பாயக் காலிற் பாயக் குளத்தில் பாய வயலிற் பாயவே
என்கிறது அப் பள்ளுப்பாடல்.
இவ்வாறாக, நீர் அறுவடை நிகழ்வைக் காட்சிகளாய் விவரித்த பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டிற்கான உயிர்ப்பான சான்றுகளாகும்.

ஆக, வேளாண் குடியும் வேளாண் தொழில் சார்ந்த குடிகள் என 18 குடிகள் ஒன்றாகக் கூடிய நிகழ்வு என்பதாலே ஆற்றுப் பெருக்கை ஆடி 18ஆம் பெருக்கு என்றும் குறித்துள்ளனர்.

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு உயிராக இருக்கும் நீர் ஆதார நிலைகள் மீதான நீர் மேலாண்மைத் தொழிலும் அறிவும் உழைப்புமே வேளாண்மை உழவுத் தொழிலுக்கு அடிப்படையாகும்.
நீர் மேலாண்மையும் பயிர் வேளாண்மையும் ஒருங்கே பிணைந்திருக்கும் அறிவையும், உழைப்பையும், ஈகைப் பண்பையும் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், வேளாண்மை உழவுத்தொழில் மரபினரின் ஒரு பிரிவினரே நீர் மேலாண்மைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். ஆகையினால், ஆற்றுப் பெருக்கும் ஆடிப் பெருக்கும் நீர் அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடே எனலாம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
02.08.2020