மொழியில் நிமிரும்
வரலாறு :
நூலுக்கான முன்னுரை
..............................................................................................................................
முன்னத்தி ஏர்
அழுதுக்கிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனுமுடா
என்று எம்மிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. ஒழைக்காம ஒக்காந்து சாப்பிடறது
ஒடம்புல ஒட்டாது; ஒட்டவும் கூடாதுடா என எப்போதோ எம்மிடம் சொல்லி வைத்தார் அம்மா. அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது
வெளிப்பட்ட வாழ்க்கைப்பாடுகள் சுமந்த சொற்கள் எமக்குள் விதையாய்ப் புதைந்திருந்து இப்போதும்
முளைத்துக் கொண்டிருப்பதாகவே படுகிறது.
நிலம் - உழைப்பு - எளிய வாழ்நிலை சார்ந்த குடும்பச்
சூழ்நிலையில் கடைக்குட்டியாய்ப் பிறந்த எம்மை, படிப்பின் உச்சம்வரை ஏற வைத்தவர்கள்;
அதையே தம் வாழ்க்கைக் கனவாய்த் தூக்கிச் சுமந்தவர்கள்; அதற்காகவே சலிக்காமல் உழைத்தவர்கள்
எம் அம்மாவும் அப்பாவும்தான். அவர்களின் வியர்வையும் அரத்தமும்தான் கல்விக்கான திசைவெளிகளில்
எம்மைப் பயணிக்க வைத்தன.
கல்வித் தேடல்களுக்கும் அவை சார்ந்த செயன்மைகளுக்கும்
உந்து சக்தியாய் அவர்கள் இருந்ததினால்தான், சமூகம் சார்ந்த எமது பங்கேற்பும் செயன்மைகளும்
ஆய்வுகளும் எழுத்துப் பணிகளும் இலகுவாய்த் தொடர்கின்றன. எதிர்ப்போ மறுப்போ காட்டாது எமது இயங்குதலுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும்
ஊக்கமும் தந்த அவர்கள் நினைவில் வாழும் மனிதர்களாகிப் போனார்கள். ஆனாலும், எமது இயங்குதல் நின்றுவிடவில்லைதான்.
கல்வி, சமூகம், ஆய்வு, எழுத்து என நீள்கிற எமது
அனைத்துச் செயன்மைகளும் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கின்றன. அலைதலும் தொலைதலும் நிரம்பிய வாழ்க்கைச்சுழல் பயணத்தில் தவிப்புகள் இல்லாமல்,
முன்னைக் காட்டிலும் கூடுதலாய்ச் செயலாற்றுவதற்கான நல்வெளியை - மனவெளியை உருவாக்கிக்
கொடுப்பதோடு, எண்ணம், எழுத்து, செயல் யாவற்றிலும் உயிர்ப்பிக்கும் ஆற்றலைத் தரும்படியான
வாழ்வைத் தந்துகொண்டிருப்பவர் வாழ்க்கைத் துணைவி அம்சம் அவர்கள்தான். இதுபோன்ற சமூகப்
பங்கேற்புகளையும் கடமைகளையும் அன்னாரின் பெரும்பகுதி உதவியோடுதான் செய்துகொண்டிருக்கிறேன்.
மேலும், இல்லறத்தின் நல்லறமாய்த் திகழும் எம் குழந்தைகளும் பேருதவி புரிந்திருக்கிறார்கள்.
அவர்களது புழங்குவெளியில் எமக்கான இயங்குவெளியை ஒதுக்கிக் கொடுப்பதோடு, எல்லாவற்றிலும்
தோள்கொடுக்க முனைகிற மகள் அங்கவை யாழிசை, மகன் அகரன் தமிழீழன் ஆகியோர் வாழ்வின் மகிழ்வான
பக்கங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, குடும்பவெளியின் அரவணைப்பாய் இருந்து
தோள் கொடுக்கும் அண்ணன் பாலன், மைத்துனர் சுந்தர் சூரியன் ஆகியோரின் உதவிகளும் நினைக்கத்
தக்கவை.
நிலம் சார்ந்த வாழ்வியல் சூழலோடு பினைந்து கிடந்ததால்
பதின்பருவக் காலத்திலேயே இயல்பாய் முளைவிட்டிருந்த தமிழ் மொழி - இனம் - சமூகம் மீதான
பற்றுதலை வளர்த்தெடுத்தவர்கள் எமது ஊர்மக்களும் சேக்காளிகளும்தான். ஊரில் நடக்கும்
அத்தனை நிகழ்வுகளிலும் எம்மைப் பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் பெரியவர்கள்
உட்பட. அந்தவகையில், எமது ஊரும் மக்களுமே சமூகப்
பங்கேற்புக்கான முதல் களம். கல்விக்கான தேடல்களில் படிப்பின் பொருட்டு யான் பயின்ற
கல்விப் புலங்களின் பங்கு மகத்தானது. பள்ளி
ஆசிரியர்களும், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் மரபார்ந்த திசைவெளிகளில்
பயணிக்கத் துணை புரிந்திருக்கிறார்கள். இந்நிலையில், எமது பார்வை, வாசிப்பு, புரிதல்,
புலப்பாடு, பங்கேற்பு போன்றவற்றில் புதியதான வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பெரியாரிய -
அம்பேத்கரிய - மார்க்சிய - தமிழ்த்தேசிய இயக்கங்கள் சார்ந்த தோழர்கள்தான். குறிப்பாக,
மார்க்சியப் படிப்பு வட்டத் தோழர்கள்தான் சமூகப் புரிதலையும் புலப்பாடுகளையும் ஆழமாகக்
கற்பதற்கும் புலப்படுத்துவதற்கும் உதவியவர்கள்.
கற்றதையும் பெற்றதையும் எழுத்து வழியிலான ஊடகத்தில்
புலப்படுத்துவதற்கு ‘ஏர்’ இதழை நடத்தியபோதுதான் இன்னும் கூடுதலான பக்குவத்தைப் பெற
முடிந்தது. இதழைத் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியாவிட்டாலும் எழுத்துப் புலப்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை.
கல்விப்புலப் பங்கேற்புகளிலும் சமூக மாற்றச் செயன்மைகளிலும் சமூகப் புலப்பாடுகள் குறித்த
கருத்தாடல்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தபோது, எழுத்து வெளியீட்டுப்
பணிகளுக்குத் தோள் கொடுத்தவர்கள் மாற்று இதழாளர்களும் பதிப்பாளர்களும்தான். இவர்களின்
உதவியினால் தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்களைக் கொண்டுவர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும்
இன்றி எம் எழுத்துகளின் மீது நம்பிக்கை வைத்து நூல்களை வெளியிடுவதைத் தமது சமூகக் கடமையாகக்
கொண்டுள்ள பதிப்பாளர்களின் ஒத்துழைப்பு போற்றத் தக்கது.
கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் பயின்ற - பணியாற்றிய
காலங்களில் வாசிக்கவும் எழுதவும் கற்கவும் பகிரவுமான சூழலும், மாணவ ஆசிரிய நட்பு வட்டங்களும்
தோதாய் வாய்த்தன. கற்றல் கற்பித்தல் பணிச்சூழலுக்குள் இப்போது இருக்க நேர்ந்தாலும்கூட,
பள்ளிப் பணிச்சூழல் வேறுமாதிரியான படிப்பினைகளைத்
தந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், பள்ளிச்சூழலுக்குள்ளும் எமக்கான இயங்குவெளியைத் தலைமை
ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை எனும் பழமொழியை
வாழ்வின் பல பொழுதுகளில் உயிர்ப்பாய் உணர்ந்திருக்கிறேன். புலவர்களுக்குக் கிடைத்த
புரவலர்களைப்போன்ற நட்புள்ளங்கள், யான் எழுதுகிற தீவிரத்தைக் குறையாமல் பார்த்துக்
கொள்கின்றன. நல் மேய்ப்பரைப் போலப் பின்தொடரும் அய்யா கோவிந்தராசு போன்ற தோழமை உறவுகள்,
இதுபோன்று இன்னும் எழுத வேண்டும் என்கிற உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கின்றன.
பகட்டும் பூடகமும் புனைவுகளும் இல்லாத எளிய மனிதர்களின்
வாழ்வியல் கோலங்களைப் போலத்தான் எமது எழுத்துகளும். எளிய மனிதர்களின் அழகியல், கோபம்,
திடம், மானுட நேசிப்பு போன்றே எமது எழுத்துகளும் எளிமையானவை; எளிய மக்களுக்கானவை; எளிய
மக்களின் பார்வையில் அமைந்தவை. வாழ்விலும் எழுத்திலும் எமக்குச் சரியென்று பட்டதையே
வெளிப்படுத்துகிறேன். வெளிவந்திருக்கிற எமது பல்வேறு நூல்களும் கற்றலின் வெளிப்பாடுதான்;
புதிய புதிய தேடல்களின் புலப்பாடுகள்தான். சமூகத்திடமிருந்து யான் கற்றுக்கொண்டதையே
சமூகவெளியில் நூலாக ஒப்பளிக்கிறேன்.
தமிழ்ச் சமூகப் புலப்பாடுகளுள் கலை, இலக்கியம்,
அரசியல், வரலாறு, பண்பாடு போன்றவற்றைக் குறித்துக் கல்விப்புலங்கள் மற்றும் சமூகப்புலக்
கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்ட கருத்தாடல்களைக்
கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறேன். தமிழ்ச் சமூக நிமிர்வுக்கான உரையாடல் புள்ளிகளை
மொழியில் விரியும் கருத்தாடல்கள் தொடங்கி வைக்கும்
என நம்புகிறேன். சமூக மாற்றச் செயன்மைகளுக்குப் பங்காற்றும் பெரும்பயணத்தில் தாகம்
தணிக்கும் துளிகளாய் எமது நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்வகையில், ‘மொழியில் நிமிரும்
வரலாறு’ என்கிற இந்நூலும் திகழும் என நம்புகிறேன்.
தீவிர
வாசிப்பும் எழுத்துமாய்க் கிடந்தாலும் எம்மைக் குறித்தும் எழுத்தின் மீதும் அக்கறையும்
மதிப்பும் கொண்டுள்ள தம்பி முனைவர் அரிபாபு அவர்கள் வாஞ்சையோடு அணிந்துரை வழங்கியுள்ளார்.
களப்பணியினூடே பதிப்பின்வழியும் சமூகக் கடமையாற்றும்
தோழர் பரமன் அவர்கள், கைமாறு கருதாது பெருமகிழ்வோடு
இந்நூலையும் வெளியிடுகிறார். இந்நூல் மட்டுமல்லாது, எமது எல்லா நூல்களுக்கும் முதல்
வாசகராய் இருந்து ஒளியச்சு மெய்ப்புகளில் திருத்தங்கள் செய்தும் மதிப்பீடுகள் தந்தும்
கொண்டிருக்கிற தோழர் கிட்டு, நூலைச் சிறப்பிக்கும் வகையில் நேர்த்தியான வடிவமைப்புச்
செய்து கொடுத்த தோழர் குப்புசாமி ஆகியோரின் உதவிகள் இந்நூலின் சிறப்புக்குக் காரணமானவை.
இதுபோன்ற முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து உதவிய
- உதவுகிற யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நூலைக் குறித்த நேர்மையான மதிப்பாய்வைத்
திறந்த மனதுடனே வரவேற்கிறேன். தொடர்ந்து பயணிப்போம்; பயணத்தில் இணைவோம்.