மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை:
பா.ச. அரிபாபு
தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களும் மதிப்பீடுகளும்
எக்காலத்தின் முன்னும் நிலைத்து நிற்கக் கூடியவைதான். எனினும், நவீன காலச் சமூக வெளியில்
தமிழ் நிலத்தில் நடந்தேறிய பல்வேறு மாற்றங்களில் மொழி, நிலம், விவசாயம், உணவு, கல்வி,
சிந்தனைப்போக்கு போன்றவை உருமாறத் தொடங்கி விட்டன. இன்று தமிழ்ச் சமூகம் வந்தடைந்திருக்கும் காலத்தையும்
போக்கையும் மதிப்பிட்டால், அதாவது தனி மனித நடத்தை தொடங்கி சமூக அரசியல் செயல்பாடுகளையும்
சேர்த்துப் பார்த்தால் ஏமாற்றமும் வெறுமையும்தான் மிஞ்சக்கூடும்.
எவற்றையெல்லாம் நவீன காலத்தில் பேச எத்தனிக்கிறோமோ
அவையெல்லாம் அழித்தொழிக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் இக்காலத்தில்தான் நடக்கின்றன. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முன்வைத்து
இதுவரையிலும் உருவாகியுள்ள கலை, இலக்கியம், சமூக அரசியல் சார்ந்த அத்தனை நடவடிக்கைகளையும்
மாற்றுத் தளத்தில் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அவ்வகையில் ‘ஏர்’ மகாராசனின் ‘மொழியில் நிமிரும்
வரலாறு’ பேசுவதற்குத் தயாராகிறது.
இப்பிரதி 12 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக
வெளிப்பட்டாலும், உள்வாங்கியுள்ள பாடுபொருள்கள் மிகக் கூர்மையானவை. மிகக் கராரான விசயங்களைக் கொண்டவர்களால்தான் இம்மாதிரியான
விசயங்களை உண்மையிலேயே எழுத முடியும். மகாராசனின்
இப்பிரதிக்குள் பொதிந்திருப்பது நிலம், மனிதர்கள், கலை, இலக்கியம், தமிழ்ச் சமூகத்தின்
தற்காலப் போக்குகள் குறித்தான மதிப்பீடுகளே.
இதனை இந்நூலை வாசிக்கத் தயாராகும் அனைவரும் உணர்ந்துகொள்ள இயலும்.
பெண்ணைக் கொண்டாடுகிற தமிழ்ச் சமூகம்
பெண்ணுக்கான வரையறைகளை உற்பத்தி செய்து உறுதி செய்வதிலிருந்தே தொடங்குகிறது அதனுடைய உள் அரசியல். என்றுமே கலை இலக்கியப் பிரதிகளில்
பெண்ணின் இருப்பு தடை செய்யப்பட்டே வந்துள்ளது.
ஆனால், ஆண்களின் பாடுபொருளாக அவர்கள் வெவ்வேறு விதங்களில் சமைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் மன உலகங்களின் நுண்ணிய அடுக்குகள்
பதிவு செய்யப்படாமல் தனித்தே கிடக்கின்றன.
இதனை, தொடர்ந்து எழுதப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வடிவப் போக்கை மதிப்பிடும் எந்தச்
சாதாரண வாசகரும் மிக எளிதாக அவதானிக்க இயலும்.
நவீன காலம் பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும்
வழங்கியிருக்கிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களின்
இடம் நீண்டு கிடக்கிறது என்றாலும், வெவ்வேறு வடிவங்களில் பெண்களின் சுயம் அழிக்கப்படுதல்
நடந்து கொண்டேயிருக்கிறது. ஆக, பெண்கள் தங்களை
உணர்ந்து கேள்வி கேட்பதிலிருந்தே துவங்குகிறது அவர்களுக்கான அரசியல், கலை, இலக்கியம்
எல்லாமே. அவ்வகையில், தொண்ணூறுகளுக்குப்பின் எழுச்சியாய் எழுத வந்த பெண் படைப்பாளிகளின்
பட்டியல் அதிகம். அவர்கள் எடுத்தாண்ட கருப்பொருள்களை எதிர்கொள்ளத் திராணியற்ற தமிழ்ச்
சமூகம்தான் ஒழுக்கம் குறித்தான அதே பழைய பாணியிலான தடுப்பரண்களைக் கட்டி எழுப்பியது. எனினும், அரண்கள் எல்லாம் காணாமல் போனதுதானே வரலாறு.
இங்கு, ஒரு விசயத்தைக் குறிப்பிட வேண்டும்.
பெண் கவிஞர்களை மதிப்பிடத் துணிகிறேன் என்று பலர் வம்புக்கிழுப்பார்கள்; துதிபாடுவார்கள்.
வம்புக்கிழுப்பதும் துதிபாடுவதும் எவ்வகையிலும் திறனாய்வு நேர்த்தி என்று சொல்லிவிட
முடியுமா என்ன? பெண்ணைப் பற்றிய சுயமான மதிப்பும், இயங்கியல் குணமும் கொண்ட வாசகரால்தான்
பெண்களையோ அவர்களின் படைப்பின் வீரியத்தையோ மதிப்பிடுவது சரியாக இருக்க முடியும். அவ்வகையில் மிகச் சரியானவர் இப்பிரதியாளர். பெண்மொழி குறித்தான காத்திரமான ஆய்வை நிகழ்த்தியவரும்
இவரே. ஆகையால் இப்பிரதிக்குள் பெண் படைப்பாளிகளைக்
குறித்தும், அவர்களது படைப்புக்கள் குறித்தும் அணுகும் முறையானது மிகச் சரியானதாக வெளிப்படுகிறது.
இப்பிரதியின் பிற்பகுதி தமிழ் நிலத்தின்
ஆன்மா சம்பந்தப்பட்ட விசயங்களைப் பேசுகிறது. இரண்டு கட்டுரைகள் நவீன நாடகத்தின் மிக
முக்கிய முகமான ச.முருக பூபதியின் ‘குற்றம் பற்றிய உடல்’, ‘மிருக விதூசகம்’ குறித்துப்
பேசுகின்றன. பொதுவாக, தமிழ் நாடகப் பார்வையாளர்கள்
முருக பூபதியின் நாடகம் புரியவில்லை என்றே வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். வசனங்களால்
நிறைந்திருக்க வேண்டும் என்றே ஆசைப்படுபவர்கள்தானே இங்கு அதிகம். ஆனால், அவர் படைப்பாக்கத்தில் உருவாக்கியுள்ள கருப்பொருட்கள்
அனைத்துமே தொல்குடிகளின் மரபுகளை, இழப்புகளைக் காத்திரமாகக் குறியீட்டு மொழியில், இசைகளோடு
நடிகர்களின் உடல்மொழியின் துணையினால் படைத்தளிக்கிறார். தமிழ்த் திறனாய்வு உலகில் நாடகத்திற்கு விமர்சனம்
எழுதுவது பெரும்பாலும் இல்லை. ஆனால், முருக
பூபதியின் நாடகங்களுக்குக் கட்டுரையாளர் தந்துள்ள வாசிப்பு கூரானது. மகாராசனிடம் இயல்பாகத் தங்கியுள்ள நிலம், மனிதர்கள்,
பண்பாட்டு வேர்கள் பற்றியான தெளிவான பார்வையோடே
இப்பிரதியை வாசித்திருக்கிறார். குறிப்பாக,
‘கோமாளி’ பற்றிய விளக்கத்தை இவ்வளவு நுட்பமாகவும் விரிவாகவும் எழுதியிருப்பது சிறப்பானதாகும்.
நகத்தைக் கடித்து மிகச் சாதாரணமாகத் துப்புவது போல, எல்லாவற்றையும் மிக இயல்பாகக்
கடந்து போகப் பழக்கப்பட்டு விட்டோம். அதனால்தான் சமகாலத்தில் கண்முன்னே நடந்த ஈழப்படுகொலைகளை
- வன் குடியாதிக்கத்தைக் கடக்கத் துணிந்து விட்டோம். இதனை யார் பேசுவது? அரசியல்வாதிகளா? அவர்களின் புகைமூட்ட
அரசியலைத்தான் நாம் பார்த்து விட்டோமே. பிறகு
எப்படித்தான் இந்தத் துயரத்தைக் கடத்துவது? படைப்பின் வழியாகத்தான்.
போர் என்றால் வன்முறை; உடல் அழிப்பு.
எந்த உடல் ஆணுடலா? பெண்ணுடலா? அதிகம் சிதைக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் பெண்ணுடலே.
அதிக விதவைகள் வாழும் நிலமாக ஈழநிலம் ஏன் மாறிப்போனது? விதைகளை விருட்சங்களாக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப்
போனது எவ்வளவு பெரிய சோகம். கடத்த முடியாத பெரிய வலியை முருகபூபதி தன் படைப்புவழி கடத்துகிறார்
என்றால், மகாராசன் அவருக்கே உரிய அரசியல் புரிதலோடு இன்னும் வலியோடே அணுகுகிறார்.
இதனை ஒட்டியே இன்னுமொரு கட்டுரை ‘புதைகுழி
மேட்டிலிருந்து வேளாண் குடிகளின் ஒப்பாரி’. தன் ஆதிமையின் வேரும், பண்பாட்டுப் புழங்கு
வெளியும் அழியப்போகிறது நியாயமாரே.. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார் சொந்த
மண்ணிலிருந்து. சமூக அரசியலைப் பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும் இயக்குகிறார்கள்.
அவர்களுக்கு மண்ணைப் பற்றி கவலை என்ன? நவீன
நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம், சந்தை விரிவாக்கம் போன்றவை யாரின் தலையை முதலில்
கொய்கிறது? விவசாயிகளையும் விவசாயிகளின் விளை நிலங்களையும்தான்.
நமது சமூகம் அகதிகளின் வலியை ஏறா முகத்தோடு
எப்படி அணுகுகிறதோ அதே போலத்தான் விவசாய மக்களின் துயரத்தையும் அணுகும். யோசித்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் பெரும்பாலான விவசாய
நிலப்பகுதிகள் முழுக்க பாழாகப் போகிறது. இவர்கள் எங்கோ துரத்தப்படுவார்கள். சிறு கோழிக் குஞ்சுகளைத் தூக்குவதற்குக் கழுகுகள்
வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. கழுகு இறங்கி கூர் நகங்களால் தூக்கும் வேளையில்
குஞ்சின் கதறல் கேட்கும்; பின் அடங்கும்.
நிலத்தை இழக்கும் வலியை நிலத்தோடு பிணைந்திருப்பவரால்தான்
மொழிப்படுத்த முடியும். நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு
கொண்டிருப்பதால்தான், நிலம் பற்றிய தவிப்பை மகாராசனால் புலப்படுத்த முடிகிறது. நிலம்
பற்றிய பதிவுகளைத் திரும்பவும் வாசிக்கும் போது ஒட்டுமொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை
நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன.
இப்பிரதியில் காணலாகும் இன்னொரு பகுதி
இலக்கியம் தொடர்பானது. தமிழின் மரபிலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலுமான வாசிப்பு
மகாராசனின் எழுத்தை வலுப்படுத்துகிறது. பிரதியினுள்ளே இலக்கண இலக்கிய மரபுகள் குறித்த
கட்டவிழ்ப்புகளும், பொருள்கோடல்களும், எடுத்துரைப்புகளும் புதிய வாசிப்பு அனுபவத்தைத்
தருகின்றன. குறிப்பாக, இருத்தல் உளவியல், திணைமொழி, தொல்லியல் குறித்தான கட்டுரைகள்
புதிய கருத்துப் படிமங்களைத் தருகின்றன.
பிரதியில் சில இடைவெளிகள் இல்லாமல் இல்லை. கட்டுரைகளின் சில இடங்கள் மாற்று உரையாடலுக்குத்
தயாராவதுபோலத் துவங்கி, தகவலாக நின்று விடுகின்றன. சில கட்டுரைகளின் நீட்சியைக் குறைத்திருக்கலாமோ
என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும், அனைத்துமே
காத்திரமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். குறிப்பாக, நிமிர்ந்தெழும் உணர்வுப்
புலப்பாடுகளை உரக்கப் பேசும் இன்னொரு நூலாக ‘மொழியில் நிமிரும் வரலாறு’ வருவதில் மகிழ்ச்சி.
நூலாசிரியர் தொடர்ந்து இயங்குவார் என்று
பொத்தாம் பொதுவாய் நம்பிக்கையளிக்கும் முகமாகச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், ‘ஏர்’
மகாராசனின் உழைப்பு, வாசிப்பு, எழுத்து, இயங்குதல் திட்டமிட்டு நகர்ந்து கொண்டே இருக்கும்
என்று முழுமையாக நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
பா.ச. அரிபாபு
arivusallo@gmail.com
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அமெரிக்கன் கல்லூரி
மதுரை.