கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளோடும் கவிதைகள் குறித்தும் நிறையப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் . ஆனாலும், ஆற்று மணலில் சின்னதாய் வீடு செய்து மகிழ்ந்து பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்போதுதான் சின்னதாய் ஒரு கவிதைத் தொகுப்பைச் சொல் நிலம் வழியாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது .
தமிழ்ச் சமுகம் , பண்பாடு , அரசியல் , மொழி , இலக்கியம் , வரலாறு போன்றவை குறித்தெல்லாம் மிக காத்திரமான எழுத்துகளையே புலப்படுத்திக் கொண்டிருந்த நான் , இளைப்பாறிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் சொற்களோடு பயணிக்கவும், கவிதை மொழிதான் எனக்கு வசமாய் வந்து நிற்கிறது .
வாழ்க்கையின் இயங்கு தளத்தின் ஊடாகக் கடந்து செல்லும் போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதை விட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்தும் வெளிவந்தும் மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது தான் கவிதைத்தளம். சுருக்கமாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள் உணர்வுகளைக்
கிளர்த்துவதுதான் கவிதை .
தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் , உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணைசேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாய்ப் பிறக்கிறது . இத்தகையக் கவிதைகள் தமக்கான வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை . மரபுக் கவிதை , புதுக்கவிதை , நவீனக் கவிதை என்றெல்லாம் கவிதையின் வடிவங்கள் பலவாறாக இருந்தாலும் , எல்லாக் காலத்தியக் கவிதைக்குள்ளும் அந்தந்த காலத்திய மனித சமூக வாழ்வியலின் பாடுகளையும் அழகியலையும் அரசியலையும் ஏதோ ஒரு வகையில் புலப்படுத்துவதாகத்தான் திகழ்கின்றன .
மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல, இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும் , அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழும்பும் கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து , அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தத்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன . அதுமட்டும் இல்லாமல், புதிய உணர்வு ஓட்டங்களையும் , நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன.
ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் என்னும் வாசனையைத் தாண்டி, ஒரு கவிதைப் பனுவலுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது இன்றைய கவிதை மொழி.
ஒரு கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டடோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல்காப்பியம் . ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் அரசியல் மறைந்து கிடக்கிறது என்கிறது மார்க்சியம் . ஆக, எத்தகையக் கவிதை மொழியாக இருந்தாலும், யாருடைய கவிதை மொழியாக இருந்தாலும், அவை வெறும் அழகியல் மொழி என்பதாக மட்டுமல்ல; தெரிந்தோ தெரியாமலோ அரசியலையும் உள்ளீடாக அவை கொண்டிருக்கக் கூடும். இந்நிலையில், யாருக்கான அரசியலை அழகியலோடு வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. எதன் பக்கம் நிற்கிறோம்; யாரின் பக்கம் நிற்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில், கவிதை மொழி என்பது மனித இருப்பின் சாட்சிக் கிடங்காய்க் காலம் காலமாக நிலைத்திருக்கக்கூடியது. ஆகவே, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்தச் சமூகத்தை மொழிவழி சாட்சியங்களாய்ப் பதிவு செய்ய வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் இருக்கின்றன. அந்தப் பொறுப்பும் கடமையும் எனக்கும் இருக்கிறது என்பதன் சாட்சி மொழியாய் வெளிவந்திருப்பதுதான் சொல் நிலம் .
புளுதித் தூசுகள் தோய்ந்த எனது பாடுகளையும் , உருமாறிக் கிடக்கும் எனது நிலத்தின் பாடுகளையும் , வாழ்வு இழந்து தவிக்கும் சம்சாரிகளின் துயரப் படலங்களையும், ஒடுக்குண்டு உரிமைகள் இழந்து தவிக்கும் இனத்தின் அழுகுரலையும்தான் எனது கவிதைகளின் பாடுபொருளாய் ஆக்கி இருக்கிறேன்.
நிலத்தைப் பாடுதல் என்னும் பெரு மரபு தமிழில் நிறைய உண்டு . நிலத்தைப் பாடுவதே தமிழின் முதன்மைப் பொருள் எனக் குறிக்கிறது தமிழ் இலக்கண மரபு . நிலம் என்னும் முதன்மைப் பொருளே கருப்பொருள் வளர்ச்சிக்கும் உரிப்பொருள் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது . பச்சையம் போர்த்திக்கிடந்த இந்த மரபு மீட்சி பெறாமல் ஒரு கட்டத்தில் தேக்கப்பட்டது. இந்நிலையில்தான், மரபிற்கும் நவீனத்திற்குமான சொல் முடிச்சுகளை மொழி நிலத்தில் விதைக்கும் முயற்சியாகச் சொல் நிலத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்.
சிறு சிறு சுள்ளிகளைக் கவ்விக்கொண்டு கூட்டைக் கட்டும் ஒரு காக்கையைப் போல, நானும் கவிதைகள் செய்திருக்கிறேன் .
வாழும் காலத்தின் பாடுகளையும், நினைவுகளையும் சொற்களின் வழியாக மொழியில் பதியும் எனது கவிதைகளின் ஆத்மா என்பதெல்லாம், நிலத்தின் தவிப்பை , நிலத்தின் வலியை , சிதைந்து கொண்டிருக்கும் அதன் கோலங்களைப் பேசுவது தான் . கவிதையின் இத்தகைய தொனி, பிரச்சாரத் தொனியாகக் கூட சுருக்கிப் பார்ப்பது கூட நிகழ வாய்ப்புண்டு .
வாழும் காலத்தின் சாட்சியாய் விரியும் மொழி என்பதெல்லாம் பிரச்சாரம்தான். அந்த வகையில், எனது கவிதைகள் முழுக்க முழுக்க கவித்துவ அழகியல் நிரம்பியது எனப் பொய் உரைக்க மாட்டேன். ஏனெனில், பிரச்சாரம் செய்வதற்கென்றே எனது கவிதை மொழியை எனக்குத் தோதான தொனியில் புலப்படுத்திருக்கிறேன். ஆனால், சொல் நிலத்தைக் குறித்து வெளியான தோழர்களின் விமர்சனங்கள், சொல் நிலத்தின் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் இணையாகவே அடையாளப்படுத்தி வருகின்றன. நிலத்தின் தவிப்பை வாசகருக்கும் முடிந்தளவு கொண்டு சேர்த்திருக்கிறேன் . ஆனாலும், கவிதைகள் குறித்து இன்னும் பக்குவப்பட வேண்டும்; அவற்றின் நுட்பங்கள் குறித்துப் பயணிக்க வேண்டும் என்கிற தேடல் மன நிலையோடுதான் கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன்.
தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், எனது மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.
சொல் நிலத்தைப் பரவலாக்கும் முயற்சியில், நூல் அறிமுக மதிப்பாய்வுக் கூட்டத்தை நிகழ்த்திய கும்பகோணம் தாழ்வாரம் நிகழ்வில் நான் ஆற்றிய ஏற்புரை.
நன்றி: தோழர்கள் பாரதிமோகன், இலக்கியன், செருகுடி செந்தில் ஆகியோருக்கும், மகள் அங்கவை யாழிசை அவர்களுக்கும்.
சொல் நிலத்தைப் பரவலாக்கும் முயற்சியில், நூல் அறிமுக மதிப்பாய்வுக் கூட்டத்தை நிகழ்த்திய கும்பகோணம் தாழ்வாரம் நிகழ்வில் நான் ஆற்றிய ஏற்புரை.
நன்றி: தோழர்கள் பாரதிமோகன், இலக்கியன், செருகுடி செந்தில் ஆகியோருக்கும், மகள் அங்கவை யாழிசை அவர்களுக்கும்.
மகாராசன்.