வெள்ளி, 21 ஏப்ரல், 2023

உழைப்பும் ஓய்வும் உறக்கமும் - மகாராசன்


உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் தேவைப்படுகிறது. இதில், ஓய்வு என்பதும், உறக்கம் என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறுவேறானது.

8 மணிநேரம் உழைப்பில் ஈடுபடும் ஒரு மனிதருக்கு 8 மணிநேர ஓய்வும், 8 மணிநேர உறக்கமும் இருந்தால் மட்டுமே, உற்பத்தியிலும் உழைப்பிலும் நிறைவாகவும் நீடித்தும் ஈடுபட முடியும்.

12 மணிநேர வேலை என்பது, உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல; உழைப்பில் ஈடுபடும் மனிதர்களின் ஓய்வையும் உறக்கத்தையும் பறிக்கின்ற கொத்தடிமை முறைக்கு வழிவகுக்கும். அந்தக் கொத்தடிமை உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்ததுதான் மேநாள் புரட்சி.

உலகப் பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்றுத்தந்த 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் படுபாதகச் செயலை மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தச் சட்ட மசோதாவை, தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

அறிஞர் அண்ணாவின் ஓய்வு எனும் கட்டுரையை, அண்ணாவின் வாரிசுகள் படித்திருந்தால், 12 மணிநேர வேலைக்கான சட்ட மசோதாவை இயற்றியிருக்க மாட்டார்கள்.

ஏர் மகாராசன்
21.04.2023.
*
பிற்சேர்க்கை:

அறிஞர் அண்ணா எழுதிய 'ஓய்வு' எனும் கட்டுரை.

"ஓய்வு நேரம்' கிடைத்தால்தான் உழைத்து அலுத்தவன், தனது அலுப்பைப் போக்கிக் கொள்ள முடியும்; மறுபடியும் பாடுபட, அலுப்புப் போக வேண்டும்.

வேலையே இல்லை, நாளெல்லாம் வாளாயிருக்கிறான், ஓய்வு அல்ல அது - பயன்படுத்தப்படவில்லை; கொடுமை! வேலை இருக்கிறது - வேலை செய்யாமல் வாளாயிருக்கிறான் - ஓய்வு அல்ல - சோம்பல்!

வேலை இருக்கிறது - வேலை செய்த அலுப்பினால் வேலை நேரம் முடிந்ததும், கட்டை போலக் கீழே விழுகிறான் - தூங்கி விடுகிறான் - ஓய்வு அல்ல இதுவும்: சோர்வு.

ஒரு வேலையும் செய்ய வேண்டிய நிலையில் இல்லை, எப்போதும் சும்மா இருக்கிறான்; இதுவும் ஓய்வு அல்ல, இது ஒய்யாரம்!

ஓய்வு என்பது ஒரு உரிமை; வேலை செய்தவன், தன் அலுப்பைப் போக்கிக் கொண்டு, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்று, மறுபடியும் வேலையிலே ஈடுபடுவதற்கான மாமருந்து.

ஓய்வு நேரம் என்பது வேலை செய்யாதிருக்கும் வேளை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடியதல்ல. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வசதியைக் கொள்வதிலே ஈடுபடுவதே வேலை. அந்த வேலை முடிந்த பிறகு அவன் மனம் ஒரு நிம்மதி பெற்று, தெம்பு பெற வேண்டும். அந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதே ஓய்வு. காலை முதல் மாலை வரை பாடுபட்ட தொழிலாளி, இரவு பிறந்ததும் அயர்ந்து தூங்குகிறான், அதனால் அவனுடைய உடல் அலுப்பு நிச்சயம் குறையும்; ஆனால் உள்ளத்திலே ஏறிவிட்டுள்ள பாரம், சோர்வு - குறையுமா? குறைந்திட வழி இல்லை; ஏனெனில், அதற்கான வழி தேடிடவில்லை அவன், செயலற்றுக் கிடக்கிறான்; தூக்கம். ஆனால், ஒய்வு என்பது தூக்கத்தால் உடல் அலுப்பைப் போக்கிக் கொள்வது மட்டுமல்ல; உள்ளத்திலே உள்ள சோர்வினைப் போக்கிக் கொள்ள அவன் உலவுவது, உரையாடுவது, பாடுவது, ஆடுவது, ஆடல் காண்பது, பாடல் கேட்பது, குழந்தைகளுடன் கொஞ்சுவது, இவ்விதமான ஏதாவதோர் செயலில் ஈடுபாடு கொண்டாக வேண்டும்.

வேலை செய்த அலுப்புப் போக அவன் தூங்கி எழுந்திருப்பது பல மணி நேரம் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தைச் சில மணி நேரம் நிறுத்திவைப்பது போன்றதே.

இயந்திரத்துக்குக் கூடத் தூக்க நேரம் இருக்கிறது. வேலை செய்யாத நேரம் மனிதன் உழைத்த அலுப்பினால் தூங்குவது, இயந்திரம் சில நேரம் வேலை செய்யாமல் இருப்பது போன்றதே.

தூக்கத்தால் மட்டும் பாட்டாளியின் மனத்திலே உள்ள சோர்வு போய்விடுவதில்லை.

சிறிது நேரம் உறங்கிக் கிடப்பதால் மட்டும் இயந்திரம் வேலை செய்ததால் ஏற்பட்ட "தேய்வு' இருக்கிறதே, அது போய்விடாது, புது வலிவு வந்திடாது.

உழைப்பினால் ஏற்பட்டுவிடும் உள்ளத்துத் தேய்வு இருக்கிறதே, அதனைத் தூக்கத்தினால் மட்டும் போக்கிட முடியாது - மனத்துக்குத் தெம்பு தரத்தக்க விதமாக அவன் சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும்; ஓய்வாக!!

உழைத்த அலுப்பினால் வீடு வந்ததும் படுத்து உறங்கி விடும் பாட்டாளி விடிந்ததும் மீண்டும் இயந்திரமாகிறான் - மனத்திலே "தேய்வு' வளர்ந்தபடி இருக்கிறது; குறைந்திட வழி இல்லை. அங்ஙனமின்றி உழைத்தலுத்தவன், உடனடியாக உறக்கத்தை மட்டுமே தேடிக் கொள்ளாமல், நண்பர்களுடன் பேசி மகிழ்வது, குழந்தைகளுடன் விளையாடுவது என்ற ஏதேனும் ஓர் பொழுதுபோக்கிலே ஈடுபட்டால், உடல் அலுப்பு மட்டுமல்ல, உள்ளத்திலே மூண்டுவிட்ட அலுப்பும் குறையும், அப்போது அவன் புதிய உற்சாகம் பெறுகிறான்.

மாலை ஆறு மணி வரையில் மாடாக உழைத்தாச்சே, பேசாம போய்ப் படுத்துத் தூங்குவதை விட்டுவிட்டு, விடிய விடியக் கண் விழித்துக் கொண்டு தெருக்கூத்துப் பார்த்துவிட்டு வந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்?

என்று கனிவுடன்தான் கேட்கிறாள் மனைவி. ஆனால் பகலெல்லாம் பாடுபட்டவன், இரவு கண்விழிப்பது உடலுக்குச் சிறிதளவு கெடுதலைக் கூடத் தரக்கூடும் என்றாலும், கூத்துப் பார்த்ததில், கண்ணுக்கும் காதுக்கும் விருந்து பெற்றான், மகிழ்ச்சி பெற்றான், மற்றவர்கள் மகிழ்ந்திருக்கக் காண்கிறான்; சிரித்தான், மற்றவர்கள் சிரித்திடக் கண்டான், இதிலே அவனுக்குக் கிடைத்த களிப்பு இருக்கிறதே, அது அவனுடைய மனத்திலே மூண்டு கிடந்த சோர்வுச் சுமையைக் குறைத்துவிட்டது. மனம் துள்ளிடுகிறது.

இதுதான் தம்பி! ஓய்வு. இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துத் தூங்குவது மட்டும் அல்ல,

கூத்துப் பார்ப்பதிலேதான் இந்த விருந்து கிடைத்திடும் என்பதில்லை. இரைச்சல் மிகுந்த தொழிற்சாலையையும் அதிலே பரபரப்புடன் சுழன்று கொண்டிருக்கும் ஆட்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன கண்களுக்கு, ஒரு சிங்கார ஓடை, அதிலே பூத்துக் கிடக்கும் மலர், கரையினிலே ஓங்கி வளர்ந்த மரம், அதிலே குலுங்கிடும் கனி, அந்தக் கனியைக் கொத்திடும் கிளி, அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அணில், இத்தகைய காட்சியைக் கண்டால், கண்ணும் கருத்தும் விருந்து பெறும், சோர்வு பெருமளவு நீங்கிடும்.

கவலை தோய்ந்த முகத்துடன், தொழிற் கூடத்தில் தன்னோடு இருந்திடும் பாட்டாளிகளைக் கண்டு கண்டு அவன் மனத்திலே குடிகொண்டு விடுகிறதே ஒரு கவலை, அது அவன் வெண்ணிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றொன்றுக்கு ஊர்ந்து செல்வது போன்ற காட்சியைக் கண்டால் சிறிதளவேனும் கலையத்தான் செய்யும். காது குடைந்திடும் ஒலியைப் பொறிகளிலிருந்து அதனைக் கேட்டதால், உள்ளத்துக்கு ஓர் அலுப்பு; அந்த அலுப்பு, ஒரு தெம்மாங்கு கேட்டிடப் பெருமளவு குறைந்து போகும்! இந்தவிதமான வாய்ப்புகளைப் பெற்றிடுவதே ஓய்வு - வேலை செய்யாமலிருப்பது, அல்லது தூங்கிக் கொண்டிருப்பது அல்ல.

வயிற்றுக்காகப் பாடுபடுவதைவிடக் கடினமானதுதான், மலை உச்சி ஏறுவது, ஆற்றிலே நீந்துவது போன்றவை; ஆனால், அவை மனத்திலே உள்ள சோர்வைப் போக்கிடும் மாமருந்து; மிக மிகத் தேவை.

வேறு வேலையே செய்யாமல், பொழுதினை ஓட்டிட வேட்டையாடுவது ஓய்வு அல்ல; வேலை செய்தான பிறகு, மனத்துக்குத் தெம்பு பெற, புறாவினைப் பறக்கவிட்டுப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறானே அது ஓய்வு!

உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை; உழைப்பு, கடமை! ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லை என்றால், அது சமூகத்தில் உள்ள கொடுமையைக் காட்டுகிறது. வாழ்வதற்கு உழைக்கிறான், பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால், அந்த உழைப்பே அவனை உருக்குலையச் செய்து, வாழ்வை நுகரவே முடியாதபடி ஆக்கிவிடுமானால், அவன் உழைத்து என்ன பயன்?

தண்டவாளத்தின் மீது சென்றிடும் இரயில், போகும் போதே தண்டவாளத்தையே தேய்த்துவிடுமானால், பிறகு பயணம் எப்படி நடந்திடும்? அதுபோலவே, உழைத்து உருக்குலைந்து போனால், வாழ்க்கையிலே இன்பம் பெற முடியாத நிலையினனானால், உழைப்பு அவனைப் பொறுத்த மட்டில், உயிர் குடிக்கும் நஞ்சாகியது, உழைத்த பிறகு அவன் வாழ்வை அனுபவிக்கும் நிலையினனாகவும் இருந்திட வேண்டும்.

ஓவியத்தைத் தீட்டி முடித்ததும், அவன் கண்கள் அவிந்து போய்விடும் என்றோர் விபரீத முறை இருப்பின் ஓவியக் கலையிலே எவர் ஈடுவடுவர்?

உழைத்தோம், பிழைத்தோம், உறுதிப்பாடும் இல்லை யெனில், உழைத்திடும் உள்ளம் எங்ஙனம் ஏற்பட முடியும்?

உழைப்பு, தம்பி! உள்ளத்தையும் உடலையும் ஒரே அடியாக முறித்துவிடக் கூடியதாக இருந்துவிடின், உலகப் பெருங்கதை சோகச் சிறுகதையாகிப் போகும் அல்லது பயங்கரப் படுகொலைக் கதையாக முடிந்திடும்.

உழைத்ததால் ஏற்பட்ட உடற் சோர்வு போக, உண்டி, உறையுள், உறக்கம் தேவை; உழைத்ததால் ஏற்பட்ட உள்ளச் சோர்வு போக ஓய்வு, பொழுதுபோக்குத் தேவை.

உழைத்ததால் செலவானது போக, ஓய்வினை அனுப விக்கத்தக்க அளவுக்கு வலிவு மிச்சம் கைவசம் இருக்க வேண்டும். வாழ வழி தேடுவதிலேயே கால முழுவதும், வலிவு முழுவதும் செலவாகிப் போய்விடுமானால், உருக்குலைவு ஏற்பட்டு விடுமானால், தோகை விரித்ததும் செத்துவிடும் மயிலாவான்; அரும்பு மலர்ந்ததும் அறுந்துபடும் கொடியாவான்; பயன் காணான், பயனளித்திடவும் மாட்டான்.

ஆகவே பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று; அடிப்படை நீதி.

ஆகவே அண்ணா! ஓய்வுபெற அங்கெல்லாம் போகின்றாய், அப்படித்தானே! என்று கேட்கிறாய் தம்பி; உணருகிறேன். ஆனால், நான் என் மனத்துக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்ள அல்ல, உழைத்திட வாய்ப்புப் பெற்று, வாழ்ந்திட உரிமை பெற்று ஓய்வும் சமூக நீதியும் பெற்று எங்கெங்கு உள்ளவர்கள் இன்புற்று வாழ்கின்றார்கள் என்பதனைக் கண்டறிந்து வந்து உன்னிடம் கூறிடும் நோக்குடனேயே பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

ஓய்வு நேரம் - ஒய்வின் தன்மை ஆகியவற்றினைக் கொண்டு, ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிடுகிறார்கள், அறிவாளர். பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கும் "ஓய்வு' இருக்கிறதே, அதனை நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள், நல்லறிவாளர்.

ஒய்வு நேரம் ஒவ்வோர் நாட்டில் ஒவ்வோர் காலத்தில் ஆங்கு அமைந்திருந்த இயல்புக்கு ஏற்றவிதமான வடிவமெடுத்திருந்தது.

வெற்றிமேல் வெற்றி பெற்றிட வீரப்போர் புரிந்து வந்த ரோம் நாட்டவர் உடற்கட்டுள்ளவர்கள். ஒருவருடன் ஒருவர் மறப்போர், வாட்போர் செய்து, ஆற்றலைக் காட்டிடும் வீர விளையாட்டுகளைக் காண்பதிலே மட்டுமல்ல, வீரர்கள் மிருகங்களுடன் போரிட்டு அவைகளைக் கொல்வது அல்லது அவைகளால் கொல்லப்படுவது என்ற "இரக்கமற்ற' விளையாட்டுக்களைக் காண்பதனை உல்லாசமளித்திடும் ஓய்வாகக் கருதினர்.

அறிவுச் செல்வத்தைப் பெற்றுத் திகழ்ந்த கிரேக்கர்கள், ஓய்வு நேரத்தைக் காப்பியம் என்ற தரம்பெற்ற புதிய நாடகங்களைக் காண்பதிலே, களிப்பதிலே, கருத்துப் பெறுவதிலே ஓய்வு நேரத்தைச் செலவிட்டனர்.

முரட்டுக் காளையுடன் போரிடுவது, ஸ்பெயின் நாட்டவர்க்கு வீரவிளையாட்டு; ஓய்வு நேரம் அதற்கே பெரும் பகுதி செலவிடப்பட்டது.

பழந்தமிழகத்தார் தமது ஓய்வு நேரத்தில், ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீர விளையாட்டிலே செலவிட்டனர் என்று அறிகிறோம்.

கோழிச் சண்டை, கரடிச் சண்டை இவைகளை நடத்தி ஓய்வு நேரத்தில் பொழுது போக்கினர் இங்கிலாந்து நாட்டவர், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில்.

ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவதில், ஒரு நல்ல முறை அமைக்காவிட்டால், களியாட்டம், வெறியாட்டம், வீணாட்டமாகி, புதிய தெம்பு பிறப்பதற்குப் பதிலாக மனத்திலே போதையும், காட்டுணர்ச்சியும் கொந்தளிக்கச் செய்துவிடும்.

மேனாடுகள் பலவற்றிலே ஓய்வு நேரத்துக்காக என்று அமைக்கப்பட்டுள்ள நாட்டியக் கூடங்களும், சூதாட்டச் சாலைகளும், நல்லியல்பை வளர்ப்பனவாக உள்ளன என்ற உணர்வு இப்போது வலுபெற்று வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இவைகளிலே ஈடுபடுவோர் பெரும்பாலும் உல்லாசம் தேடிடும் பணம் படைத்தோரே - பெரும்பாலான நடுத்தர நிலையினர், காற்பந்து, கிரிக்கட், ஆக்கி போன்ற வீர விளையாட்டுக்களைக் காண்பதிலேயே பெரு விருப்பம் கொண்டுள்ளனர்.

குத்துச்சண்டை கண்டு களிப்பதனை, எழுச்சி தரத்தக்க பொழுது போக்காகக் கொண்டுள்ள அமெரிக்காவில் இதற்கெனப் பெரும்பணம் செலவிடப்பட்டு வருகிறது.

சென்ற திங்கள் க்ளே எனும் குத்துச்சண்டை வீரன், தன்னுடன் போட்டிக்கு நின்ற லிஸ்டன் என்பானை, ஒரே ஒரு குத்து கொடுத்துக் கீழே வீழ்த்தினான், விழுந்தவன் குறிப்பிடப் பட்ட நேரத்திற்குள் எழுந்திருக்கவில்லை. எனவே க்ளே வெற்றி வீரன் என்ற விருது அளிக்கப் பெற்றான். இலட்சக்கணக்கான டாலர்கள் குவிந்தன இந்தக் குத்துச்சண்டையின்போது. ஒரே விநாடி! ஒரே குத்து! குத்துச்சண்டை முடிந்தது! க்ளே பெரும்பொருள் பெற்றான் பரிசுத் தொகையாக.

க்ளே - லிஸ்டன் இருவருமே நீக்ரோக்கள்.

இவை போன்ற விளையாட்டுக்கள், காண்போருக்குக் களிப்பூட்டும்; வீர உணர்ச்சி தரும், அய்யமில்லை. ஆனால், புதிய கருத்துத் தந்திடுமா, கருத்துக்கு விருந்தாக அமையுமா என்ற கேள்வி பலமாக எழுந்து விட்டிருக்கிறது.

மற்ற நாடுகளிலே, ஓய்வு நேரத்தை எந்த வகையிலே செலவிட்டால், கருத்துக்கு இன்பம் கிடைக்கும் என்பது பற்றிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இங்கோ, தம்பி! ஓய்வு நேரம் என்பது, வாழ்வின் இயல்பை, தொழிலின் இயல்பைத் தரமுள்ளதாக்கிடும் என்ற உணர்வே பெறவில்லை. ஓய்வு என்பது வேலை செய்யாத நேரம் என்ற அளவிலேதான் அதற்கான இலக்கணம் இருந்து வருகிறது. ஓய்வு என்பது கருத்துக்கு விருந்து பெறும் ஓர் வாய்ப்பு என்ற நிலை அமையவில்லை; அமைத்திடுதல் வேண்டும்.

வறுமை மிகுந்த நாட்டிலே ஓய்வு நேரம் கிடைப்பதும் அதனை உள்ளத்துக்கு மகிழ்ச்சி தரத்தக்க விதமாகச் செலவிடுவதும் எங்ஙனம் முடியும் - வீண் பேச்சு - என்று கூறுவர், பலர்.

நீர்வீழ்ச்சி - சித்திரச் சோலை - ஆறு உற்பத்தியாகும் இடம் - மலை உச்சி - சிற்றாறு - புள்ளினம் எழுப்பிடும் பண் - மானினம் துள்ளிடும் எழில் - இவை பற்றிக் கூறிப் பொழுதுபோக்குக்காக இவைகளைக் கண்டு களித்திடுவது உண்டா என்று கேட்டால், கோபித்துக்
கொண்டு, தமது இயலாமையைக் காரணம் காட்டும் அதே அன்பர்களை, தம்பி! காஞ்சியில் காணலாம் கருடோற் சவத்தின்போது, தில்லை. திருவரங்கம், திருப்பதி. காளத்தி இங்கெல்லாம், காணலாம். பணம் கிடைக்கிறது செலவிட, கடனாகப் பெற்றதாகக் கூட இருக்கக் கூடும் அந்தப் பணம். இஃது ஓய்வுக்காக மேற்கொள்ளப்படுவது அல்ல, "புண்ணியம்' தேடிட!

இராமர் பல்லாங்குழி ஆடிய இடமும், சீதை மஞ்சள் அரைத்த இடமும், ஜடாயு வீழ்ந்த பள்ளமும், பீமன் சமையல் செய்த இடமும், காண்டீபம் பெற்ற இடமும், கல்லானை உயிர் பெற்ற இடமும் கருங்குருவிக்கு மோட்சமளித்த இடமும் இப்படிப்பட்டவைகளைக் காண்கின்றனர்.

இவைகளிலே இருந்துவந்த நம்பிக்கையின் அழுத்தம் போய்விட்டதாலும் இவைகள் என்ன அற்புதங்கள்! சந்திர மண்டலமே செல்லப் போகிறார்களாமே என்று அவர்களையு மறியாமல் வியப்பு அவர்களைக் குலுக்கி விடுவதாலும், இந்தப் புண்ணியம் தந்திடும் இடங்களைப் பார்ப்பதனால் முந்தைய சந்ததியினர் பெற்றதுபோன்ற உணர்ச்சியையும் இவர்களால் இன்று பெற முடிவதில்லை.

புண்ணியம் தேடிடும் பயணம் என்ற கருத்து இவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பதால், இயற்கையின் எழிலைக் கண்டு களித்திடவும் இவர்களால் முடிவதில்லை. தில்லையையும், திருப்பதியையும் கண்டுவிட்டு, சாத்தனூர் அணையையும் நெய்வேலியையும் பார்த்துவிட்டு, மாமல்ல புரத்தையும், மந்திரி வீட்டையும் கண்டுவிட்டு, "கதம்ப' உணர்ச்சி பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

மிகச் சிலரால் மட்டுமே, தம்பி! இந்த விதமான பயணத்தையாகிலும் மேற்கொள்ள முடிகிறது. மிகப் பெரும்பாலோர் ஓய்வு நேரத்தின் அருமையினை உணர்ந்திடவும் வாய்ப்பின்றி, உழைத்து உருக்குலைந்து போகின்றனர், இங்கு.

பிற இடங்களில் உழைப்பு எந்த அளவு உருப்படியான வடிவம் கொள்ளுகிறது, வாழ்வை எந்த முறையில் செம்மைப் படுத்துகிறது, உள்ளத்திற்கு ஏற்படும் சோர்வு போக்கிக் கொள்ள ஓய்வு நேரத்தை எம்முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு மிகுதியாக. என் பயணம், எனது இந்த விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.

கண்டறிந்து கொள்பவைகளில் கருத்துக்கு விருந்தாகத் தக்கவைகளைப் பிறகு கூறிட முற்படுவேன்.

எனவே, தம்பி! நான் ஓய்வாகச் சென்றிருக்கிறேன் என்று கூடச் சொல்வதற்கில்லை, உனக்குக் கூறிடத்தக்க சுவையான சேதிகளைத் தேடிப்பெற்றிடவே சென்றிருக்கிறேன்.

நெடுந்தொலைவு என்கிறாயோ தம்பி! எத்தனை தொலைவானால் என்ன, என் கண்களில் உன் உருவம் தெரிந்த படிதான் இருக்கிறது.

அண்ணன்,
அண்ணாதுரை
8-8-65.

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

விடுதலை: கலை நுகர்வும் அரசியல் நுகர்வும் - மகாராசன்


தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்த - முன்னெடுக்கும் சமூக இயங்கியலைக் கற்பித்த வாத்தியார்களான தோழர்களுடன் கடந்த கால் நூற்றாண்டு காலமாய்ப் பயணித்து வந்திருக்கிறேன்.

விடுதலை வேட்கையோடும், அதிகார நிறுவனங்களின் கொடிய சித்திரவதைகளை எதிர்கொண்டும், பொதுவாழ்வுக்கென தம் வாழ்வை ஈகம் செய்தும் தமது சமூகப் பங்களிப்பைக் கொடுத்த 'தோழர்கள்' என்போரின் பொதுவாழ்வை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

சமூக அறிவை மக்களிடமிருந்து கற்றுக்கொடுத்தும்/கற்றுக்கொள்ளவும் வழிகாட்டிய ஆசான்களாகப் பல தோழர்கள் எம்மை வளப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்பேற்பட்ட தோழர்களின் பொதுவாழ்வுப் பங்களிப்பையும் வரலாற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்குக் கடத்துவதிலும் பரவலாக்குவதிலும் வெறும் வரலாற்று நூல்களும் ஆவணங்களும் பேச்சுகளும் மட்டும் போதாது. வெகுசனக் கலை ஊடகங்களின் வழியாகவும் அத்தகைய வரலாற்றுத் தேடலையும் சமூகப் பங்களிப்பையும் ஓரளவு விதைத்திட முடியும். 

அண்மையில் வெளிவந்திருக்கும் வெற்றிமாறனின் விடுதலை எனும் வணிகத் திரைப்படம், தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்த தோழர்களைப் பற்றிய வரலாற்றுத் தேடலை இன்றைய இளைய தலைமுறையிடம் உருவாக்கி இருக்கிறது. காட்சிமொழி எனும் கலை மற்றும் வணிகத் திரை ஊடகத்தின்வழி அரசதிகாரத்தின் அத்துமீறலும், அப்பாவி மக்களின் அல்லல் வாழ்வும், மக்களுக்காகப் போராடிய போராளிகளின் அரசியல் செயல்பாடுகளையும் பொதுவெளி உரையாடலுக்குள் பேசுபொருளாக்கி இருக்கின்றது விடுதலை எனும் படம்.

 ஒரு சமூக அமைப்பின் அரசியல் போக்கு எதுவாக முன்னெழும்புகிறதோ, அதையொட்டியே அச்சமூகத்தின் கலை வடிவங்களும், கலை வணிகமும் பேசுபொருளாகும் அல்லது பேசுபொருளாக்கும். அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களும் செயல்பாடுகளும் தீவிரம் பெறும் இவ்வேளையில், அத்தகைய தமிழ்த் தேசிய அரசியலுக்கான சார்புக் குரலை விடுதலை திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது. விடுதலை படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த ஆதரவும் அதைத்தான் உணர்த்தியிருக்கிறது. 

கலை நுகர்விலும் அரசியல் நுகர்வைக் கடத்த முடியும் என்பதற்கு விடுதலை திரைப்படமும் சான்றாகும். குறிப்பாக, தமிழ்த் தேசியப் போராளிகள் பற்றிய வரலாற்றுத் தேடலைக் குறியீடுகள் மூலம் விதைத்திருக்கிறது படம். 

விடுதலை திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள்.

அசுரன், கர்ணன் போன்ற படங்களின் வரிசையில் விடுதலை திரைப்படமும் தமிழ்ச் சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும்.


ஏர் மகாராசன்

04.04.2023.