செவ்வாய், 9 ஜனவரி, 2024

ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் படிக்க வேண்டிய புத்தகம் - வாசுகி தேவராஜ்


கற்றல் அல்லது கல்வி என்பது ஒரு மாணவனின் மனநிலையைச் சார்ந்தது. குறிப்பாக, அவன் விருப்பு வெறுப்புகளை, புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவற்றைக் கட்டமைக்கும் அடிப்படைக் கல்வி (Basic Education) தான் பள்ளிக் கல்வி.

பள்ளிக்கல்வியில் மாணவர்களை நேரடியாகப் பாதிப்பது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகம்.

ஆசிரியர் என்பவர் கல்வி உயர் அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால், பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் எந்த வரைமுறையும் இல்லை. பிரச்சனை என்று ஒன்று எல்லை மீறும்போதுதான் சட்டத்தின் பார்வைக்கு வரும். 

பெற்றோர் மற்றும் சமூகத்தைவிட ஒரு ஆசிரியர் மாணவனை அதிகம் பாதிப்பவராக இருக்க வேண்டும். பாடங்களை எளிதாகவும் சுவையுள்ளதாகவும் தருவதன் மூலமும், மாணவர்களிடம் மரியாதையுடனும் நடப்புணர்வுடனும் நேசிப்பதாலும் சிறப்பாகச் செய்ய முடியும். 

மாணவர்களிடம் நட்புணர்வு கொள்ள, நேசிக்க பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால், எளிதாக்க,  சுவையாக்க உயர்நிலைக் கல்விவரை செய்யலாம். உயர்நிலைக் கல்வியின் பாடங்களை எளிதாக்குவது அத்தனை சுலபமில்லை என்றே நினைக்கிறேன். 

மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கடினமாக உள்ள பாடங்களைத் தவிர்த்து, எளிதாக உள்ள பாடங்களைப் படிக்க வைத்து பாஸ் மார்க் எடுக்க வைக்க வேண்டும். வேறு வழியில்லை. 

மெல்லக் கற்கும் மாணவனிடம் 'இந்தப் பாடம் வேண்டாம். வேறு பாடம் படித்தால் போதும்' என்று சொல்வது அவன் மனநிலையை எவ்வளவு பாதிக்கும் என்று யாரும் யோசிப்பதில்லை. 
'Am I not fit to learn that lesson' எனக் கேட்பவனிடம் பதில் அற்று தோற்று நிற்கும் நிலைதான் இன்றைய ஆசிரியர்களுக்கு.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து - மகாராசன்
*
"பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறி தேரிய மாணவர்கள், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சி பெறுவதற்குக்கூட வழியின்மை போன்றவற்றைத் தெரிந்து கொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு, கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது" என்கிறார் மகாராசன். ஆசிரியர் - மாணவர்களின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்ட இந்தப் பத்தி ஒரு சோறு பதம்.

நாங்குநேரி சம்பவம் ஏற்படுத்திய ஆழமான  அழுத்தமான பாதிப்பின் விளைவுதான் மகாராசனின் "மாணவர்கள் சமூக உதிறிகளாகும் பேராபத்து" நூல். இத்தகைய துர் சம்பவங்களின் வேர் எதுவென ஆராயும் ஒரு அலசல் கட்டுரையே இந்நூல். 

குற்றம் செய்தவனும் மாணவன், பாதிக்கப்பட்டவனும் மாணவன் எனில், தவறு எங்கு நடந்திருக்கிறது என ஆழ்ந்து யோசிக்க வைக்கிறார் ஆசிரியர். 

மாணவர்களின் கல்வி இடை நிற்றல், அவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. மூத்த தலைமுறையினரின் தாக்கம் பெரும் பங்காக இருக்கும் பட்சத்தில், இவனும் அடுத்த தலைமுறையின் இடைநிற்றல் மாணவர்களுக்குச் சமூக உதிரியாய் இருந்து தன்னைப் போல் மாற வழிகாட்டுவான் என்பது நிதர்சனம். 

மாணவர்களின் கல்வி இடை நிற்றல், விலகல் போன்ற செயல்களுக்குப் பல காரணிகள் இருந்தாலும், நூல் ஆசிரியர் அடிக்கோடிட்டுக் காண்பிப்பது பாடப்பொருன்மையைத்தான். அது நூறு சதவீதம் உண்மை!

பொருளாதாரப் பலம் ஏதுமற்றவர்கள் ஒரே பலமாகக் கருதுவது கல்வியை மட்டும்தான். அந்தக் கல்வியில் பின் தங்குவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஆசிரியர் குறிப்பிடுவது போல, பாடப்பொருன்மை என்பது முதன்மையான அழுத்தமான காரணியாகும். மாணவர்கள் மனதைப் பக்குவப்படுத்தாத கல்விமுறைதான் இன்றைய தலைமுறையினர் தடம் பிறழக் காரணம்.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ப  பாடப்பொருன்மைத் திட்டமிடல், கலைத் திட்டத் திட்டமிடல் போன்றவை இலகுவாக இருந்தால் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் (drop out percentage) வெகுவாகக் குறையும். இதுவே நல்ல சமூகம் உருவாக ஒரு நல் மாற்றமாக அமையும்.

"பெருவாரியான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது கட்டாயமாகும்" என்கிறார் மகாராசன். ஒரு சமூக அக்கறையுள்ள ஆசிரியரின் ஆதங்கக் கூற்று இது. 

ஆசிரியர்களும், கல்வி உயர் அதிகாரிகளும் கண்டிப்பாக இந்நூலைப் படித்தல் நலம்.

வாழ்த்துகள் மகாராசன்!!

கட்டுரையாளர்:
வாசுகி தேவராஜ்,
ஆசிரியை,
வேலூர்.