உழவு மாடுகளோடும் மஞ்சு விரட்டுக் காளைகளோடும் பசு மாடுகளோடும்தான் என் இளவயதுக் காலங்கள். மாடுகளின் கவுச்சி வாசமும் மண்வாசமும் வாழ்வோடும் நினைவின் ஈரத்தோடும் பிணைந்து கிடக்கின்றவை. அதனால் தான் ஏறு தழுவுதல் நூலைக் கூட என்னால் எழுத முடிந்தது.
மாடுகள் சார்ந்த பண்பாட்டு உணர்வெழுச்சிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு சாதியினருக்கும், வட்டாரத்தினருக்கும் சமயத்தினருக்கும் ஒவ்வொரு தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்கள் நிரம்ப உண்டு.
இன்னும் சொல்லப் போனால், சரியோ தவறோ, நிறையோ குறையோ, இங்குள்ள சமூகக் குடிகள் குறித்த பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை முன்வைத்திருக்கவில்லை. இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும் தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களைக் குறித்து வெறுமனே மொன்னையாகவே புரிந்து கொள்ளும் நிலையே இப்போதும் வரையில் நீடிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பண்பாடு என்பதை ஒற்றைத் தன்மையதாகப் புரிந்து கொள்ளும் போக்கே நிலவுகின்றது.
பன்மை வட்டாரம், சாதி, சமயம், தொழில், வாழ்க்கை, பாடுகள், பழக்கங்கள் நிறைந்த ஒரு நிலப்பரப்பில் பன்மைப் பண்பாடுகளே முகம் காட்டும். இதில் தனித்த பண்பாடுகள், தோழமைப் பண்பாடுகள், பொதுப் பண்பாடுகள், எதிர்ப் பண்பாடுகள், மாற்றுப் பண்பாடுகள், ஆதிக்கப் பண்பாடுகள் எனப் பல தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பண்பாடு என்பதற்குள் உள்ளிருக்கிற இத்தகையத் தன்மைகளைக் கண்டறிவதிலும் வரையறுப்பதிலும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையிலான புரிதலும் எடுத்துரைப்புகளும் மிக மிகக் குறைவு.
ஒரு சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களையும் அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக் கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் நட்பையும் முரணையும், அப் பண்பாடு கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அப்பண்பாடு நிலவக் கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அப்பண்பாட்டு வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள் என நீளுகிற ஒரு பண்பாடு சார்ந்த அத்தனை விவரிப்புகளையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப் படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.
சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள் கூட மக்களின் பண்பாட்டுத் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியே தான் இருக்கின்றன. இப்படிக் கூறுவதால், மக்களிடம் காணக்கூடிய அத்துணை வகையான பண்பாட்டுக் கூறுகளையும் அச்சு அசலாக அப்படியே ஏற்றுக் கொண்டு உச்சி முகர்ந்து பார்த்தும் பாதுகாத்தும் வர வேண்டும் என்பது பொருளல்ல.
மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் இன்னொரு வகையில் சமூகக் கல்வி தான். ஒரு சமூகத்தில் அரசியல் பொருளியல் அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு உருவாக்கத்திற்கு முன்பாக, அச்சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் குறித்த புரிதல் அடிப்படைத் தேவை.
தமிழ் நிலத்தில் காலூன்றி இருந்த வேற்றின அதிகாரப் பிரிவினர் இதை நன்கு உணர்ந்திருந்தனர். குறிப்பாக ஆங்கிலேயர்கள் இங்குள்ள பண்பாட்டுக் கோலங்கள் வழியாகவே இங்குள்ள சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இன்றைக்கும் கூட தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்விப் புலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஆய்வுகள் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குப் பண்பாட்டுத் திறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சமூகத்தைப் பற்றியப் பண்பாட்டு ஆய்வுகள் இந்தச் சமூகத்தின் பார்வைக்கு வராமலே கமுக்கமாய் மேற்கொள்ளப்படுகின்றன இன்றளவிலும்.
ஆனால், இந்தியப் புரட்சியோ தமிழ்த் தேசப் புரட்சியோ, ஆயுதப் புரட்சியோ அறப் புரட்சியோ, வர்க்கப் புரட்சியோ தேர்தல் புரட்சியோ, சாதியொழிப்போ பெண் விடுதலையோ எத்தகைய சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும் அச்சமூகத்தின் நிலவுகிற பண்பாட்டுக் கோலங்கள் என்ன? சமூக மாற்றத்திற்குப் பின்பான பண்பாட்டுத் தகவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் எந்த வரைவுகளையும் இதுவரை முன்வைக்க வில்லை. அமைப்புகளின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்குப் பண்பாட்டு வரைவுகள் உருவாக்கப்படவில்லை.
இதற்கு அண்மைய சான்று மாடுகளைக் குறித்த இரண்டு நிகழ்வுப் போக்குகள். முதலாவதாக, ஏறு தழுவுதல். இரண்டாவது மாட்டுக்கறி உணவுப் பழக்கம்.
மாடு சார்ந்த இவ்விரு பண்பாடுகளைக் குறித்தும் இரண்டு விதமான போக்கைக் காண முடியும். அதாவது, இது நம்முடையது என்கிற நிலையிலிருந்து மொட்டையாய் ஆதரிப்பது. அதே போல, இது நமக்குத் தொடர்பில்லை என்பதால் முற்றாக எதிர்ப்பது. இந்த இரண்டையும் சாராமல் விமர்சனம் எனும் பேரில் கொச்சைப் பொருள் முதல்வாத அடிப்படையில் நிராகரிக்கும் தொனியில் எதிர்த்து நிற்பது.
இத்தகைய ஆதரவுப் போக்கும் எதிர்ப்புப் போக்கும் விமர்சனப் போக்கும் பண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடுகள் தான்.
ஏறு தழுவல் பண்பாட்டை விமர்ச்சித்த அல்லது எதிர்த்தவை அனைத்தும் கொச்சைப் பொருள் முதல்வாத எடுத்துரைப்பு தான்.
இப்போதும் மாட்டுக் கறி ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கொச்சைப்படுத்தும் பாணியிலேயே வெளிப்படுகின்றன.
ஒரு மாடு சார்ந்த பண்பாடு தமிழர்களாய் இணைத்தது. அதே மாடு சார்ந்த உணவுப் பழக்கப்பண்பாடு தமிழர்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி உருவாக்கப்படுகிறது.
மாட்டிறைச்சி உண்போர் இழிவானவர்கள், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் புனிதர்கள் என்பதைப் போலவும் ஒரு சாரார் எடுத்துரைப்பதும், அதே போல மாட்டிறைச்சி உண்போரே சமூக அக்கறையுடையோர் போலவும், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதும் இன்னொரு சாரார் முன்னெடுக்கின்றனர்.
பண்பாட்டுத் தனித்தன்மைகளை வேறுபாடுகளாகவும் முரண்பாடுகளாகவும் பிளவுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளே தீவிரம் பெற்று வருகின்றன. இது போன்ற போக்குகள் சமூகத்தில் இணக்கத்தையோ ஒற்றுமையையோ ஏற்படுத்தப் போவதில்லை.
சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ள யாவரும் பண்பாட்டுப் பன்மை வெளிகளைக் குறித்த உரையாடல்களை முன்னெடுத்தாக வேண்டிய காலமும் இதுதான்.
ஏறு தழுவுதல் நூலை எழுதிக் கொண்டிருந்த போது கள ஆய்வுக்கொன்று சென்றிருந்த போது பெறப்பட்ட சேதியொன்றைப் பகிரலாம் என நினைக்கிறேன்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆண்டிபட்டிக் கணவாய் அருகே மலையடிவாரத்தை ஒட்டி இருக்கிறது மேல் கிழார் பட்டி எனும் சிற்றூர். அந்த ஊரிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் மலைச்சரிவுப் பரப்பில் மலை வெள்ளாமை செய்து கொண்டு ஒரு பெரிய தொழுவத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் பழனியாண்டி எனும் பெரியவர். அவருக்கு ஊரோடு எந்த ஒட்டுறவும் இல்லை. அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே ஊருக்குள் வந்து போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே இந்த மலையும் இந்தத் தொழுவமும் இந்த மண்ணுமே கிடையாய்க் கிடக்கிறார்.
இதற்குப் பின்னால் அவர் சொன்ன காரணம்,
மலையில மேயப் போன மாடுக எப்ப கீழ எறங்கி வருமுனு தெரியாது. அதுக கீழ எறங்கி வாரது அதுக தோதப் பொறுத்து. ஒரு மாசமாகலாம். மூணு நாலு மாசமாக்கூட ஆகலாம். அந்த மலயில எங்க வேணாலும் மேஞ்சு திரிஞ்சாலும் கீழ எறங்குச்சுனா அது நேரா இந்தத் தொழுவத்துக்குத்தான் வரும். கன்னு ஈனப் போற பசு மாடுக அதுகளா தனியா வந்துரும். அதே மாதிரி கன்னுகுட்டிய மலையிலேயே ஈன்ட பசுகளும் கன்னுகள கூட்டியாந்திரும். சில பசு மாடுக அதுக கன்னுகள மலையிலேயே ஒளிச்சு வச்சிட்டும் வரும். அதுக பாட்டுக்கு வரும். அதுக பாட்டுக்குப் போகும். இந்த வரவும் போக்கும் அன்றாடங் கெடயாது. இதுகள யாரும் மேய்க்கிறதும் இல்ல. இதுக கெட மாடுகளுமில்ல. மல மாடுகளுமில்ல. ரெண்டுமில்லாத நாட்டு மாடுக. கிட்டத்தட்ட நூறிலிருந்து இருநூறு வரைக்குமான இந்த மாடுக எனக்கு ஒரு ஆளுக்கு மட்டுந்தான் அகப்படும். இப்ப என்னோட மூத்த மகன் வேலுமணி கொஞ்சமாப் பழகிக்கிட்டு வரான் என மாடுகளைக் குறித்தும் தம் வாழ்வைக் குறித்தும் விவரித்துக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.
அது குறவர் வாழ்வாகவும் இல்லை. இடையர் வாழ்வாகவும் இல்லை. எனக்கு அந்த விவரிப்பும் வாழ்வும் புதுமாதிரியாகவே தெரிந்தது.
இந்த மாடுகள வச்சு என்னத்தப் பண்ணப் போறீங்கய்யான்னு கேட்டப்போ, ஒரு மாசத்துக்கு ஒன்னோட சம்பாத்தியம் எவ்வளவு இருக்குமோ அதக் காட்டியும் கூடத்தான் வருமானந் தம்பி என்று பொட்டென்று சொன்னது பிடித்திருந்தது.
இந்த வட்டாரமில்லாம பல வட்டாரத்திலிருந்தும் உழவு மாடுகளுக்கும், மஞ்சு விரட்டுக் காளைகளுக்கும், மாட்டுக்கறிக்கும் தோலுக்கும் இங்க வந்து தான் வாங்கிட்டுப் போவாக என்றவரிடம், மாட்டுக்கறிக்காக மாடுகளக் கொடுக்கிற நீங்க மாட்டுக்கறி சாப்புடுவீங்களா எனக் கேட்டபோது, மாடுகள நாங்க சாப்புட மாட்டோம்யா. இது எங்க வழக்கம். மாடுகளச் சாப்புடறது அவுக வழக்கம். எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி என்று பண்பாட்டு அதிகாரத்தைப் போட்டுடைத்தார்.
ஒரு பண்பாட்டைக் குறித்து இவர் வைத்திருக்கும் புரிதல் சரியாகவே இருக்கிறது.
நாம் அவரிடமிருந்து இப்போதைக்கு வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது.