வியாழன், 8 ஜூன், 2017

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் : தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி.


தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்போ, மக்களோ, மொழியோ, பண்பாடோ, தொழிலோ, வாழ்வியலோ ஒரே தன்மை கொண்டவை அல்ல. தமிழக நிலப்பரப்பும் தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பரப்பும் கூட பன்மையின் இருப்பிடமாகவே இருக்கின்றது. இங்கே இருக்கிற ஒவ்வொரு சமூகக் குழுவினருக்கும் ஒரு தனித்த பண்பாட்டு அடையாளமும் இருக்கத்தான் செய்கின்றது.

பசி என்கிற உயிரியல் தேவை தான் அனைத்து உயிரினங்களின் இருப்பை உறுதி செய்கின்றது. ஒவ்வோர் உயிரினமும் தத்தமது புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தான் தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. மனித வாழ்வும் அவ்வாறு தான்.

வட்டாரம், தொழில், பொருளாதாரம், உடலியல், உளவியல், பண்பாடு, வாழ்நிலை சார்ந்து ஒவ்வொருவரும் ஒரு வகையான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாகி இருப்பது இயற்கை. அந்த வகையில், அந்த உணவுப் பழக்கம் சைவம் எனும் காய்கறி உணவாக இருக்கலாம் அல்லது அசைவம் என்கிற புலால் கறி உணவாக இருக்கலாம். புலால் கறியிலேயே கோழியாகவோ ஆடாகவோ மாடாகவோ மீனாகவோ கூட இருக்கலாம்.

ஒருவரின் உணவுப் பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்று. மனிதரில் மேல் கீழ் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு உயர்த்திக் கொண்ட சாதிகள், மதங்கள் மேலானதாகவும், அச்சாதிய, மத  வட்டத்திற்கு வெளியிலிருக்கிற அனைத்தும் கீழான சாதிகளாகவும் மதங்களாகவும் கருதப்படுகிற பொதுப்புத்தி எனும் மேலாதிக்கச் சிந்தனை தான் வெகுகாலமாகத் தம் அதிகாரத்தைப் பரப்பிக் கொண்டு வந்திருக்கிறது. அத்தகைய காவி பயங்கரவாதம் தான் பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் விலங்கு வதைத் தடுப்பு குறித்த இந்திய அரசின் அறிவிப்பு.

விலங்கு வதை இருக்கிறது எனச் சொல்லித்தான் ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பல வகைகளில் முயன்று பார்த்துத் தோற்றுப் போனவர்கள் தான், அதே விலங்கு வதை எனும் பேரில் மாடு உள்ளிட்ட சில விலங்குகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள்.

ஏறு தழுவுதல் தமிழ் இனத்தின் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று. அதே போல கோழி ஆடு மீன் போன்ற இறைச்சி உணவும் தமிழ் இனத்தின் உணவுப் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று என்பதைப் போலவே, மாட்டிறைச்சியும் தமிழர் உணவுப் பண்பாடுகளுள் ஒன்றே.

தமிழர் பண்பாட்டு மரபு பன்மைப் பண்பாடுகளின் தொகுப்பு தான்.இதில் உயர்ந்தவை எதுவுமில்லை, தாழ்ந்தவை எதுவுமில்லை.

மாடு தழுவுதல் அவரவர் உரிமை. உணவைத் தெரிவு செய்வதும் அவரவர் உரிமை.  மாட்டுக்கறி உண்பதும் அவரவர் உரிமை. இந்த உரிமை பறிக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் மேலாதிக்கமன்றி வேறில்லை.

தமிழர்களாய் அணி திரளத் தடையாய் இருக்கும் சாதிய முரண்களைக் கூர் தீட்டிப் பிரித்தாளுவதைப் போலவே, தமிழர்களிடம் பண்பாட்டுப் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராகத் தமிழர்களாய் இணைய வேண்டியது கட்டாயம்.

ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்த போது அது பண்பாட்டு மேலாதிக்கமே. இன்று மாட்டிறைச்சிக்கான தடையும் பண்பாட்டு மேலாதிக்கமே.

மாட்டுக்கறி விலக்கு உடையவர்களும், மாட்டுக்கறிப் பழக்கம் உடையவர்களும் இணைய வேண்டும்.

மாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்குப் போராடியபோது மாட்டுக்கும் எனக்கும் தொடர்பில்லை என ஒதுங்கி இருந்தவர்களைப் போல, மாட்டுக்கறி உணவுப் பழக்கத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என எவரும் ஒதுங்கி இருப்பதும் கூட பண்பாட்டு மேலாதிக்கத்திற்குத் துணை போவதற்குச் சமம்.

மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் மீதும் பாய்ந்தாலும் அதற்கு எதிராக நிற்பதே நேர்மையான மனிதராக இருக்க முடியும்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை ஆதரிப்பதற்காக மாட்டுக்கறி உண்டாக வேண்டும் என்பதில்லை. எனக்கு மாட்டுக்கறி உணவுப் பழக்கமில்லை. அதே வேளையில், மாட்டுக்கறி உண்போரின் உணவுப் பண்பாட்டை நான் ஆதரிக்கவே செய்கிறேன். இது பண்பாட்டை மதிப்பது மட்டுமல்ல, மனிதர்களை மதிப்பதும் அவர்களது உரிமைகளை மதிப்பதும் ஆகும்.

பண்பாட்டுப் பிளவுகளுக்கான சூழ்ச்சி வலைகளை முறியடிக்கப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சியாய் அணி திரள்வோம்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று சான்று தருவது குறிப்பிடத்தக்கது.

"வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை...."
அகநானூறு - 309

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக