வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:




புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.

அவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை - உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.

வைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும். 

வைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெளிப்பதும் கூட ஒரு சடங்குதான்.

நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.

இறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.

பால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.

நாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை  எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .

ஆனால்,திராவிடர்க்கும்,  பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம்.  அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.

முதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை,    இளநீர் தேங்காய் வாழைப்பழம்  வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.இரண்டாம் நாள் , தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி  அல்லது வெல்லமும்  சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச்  செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும்.இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.

முளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில்  நடக்கும்  இறப்புச் சடங்கு ஆன்மா,  சொர்க்கம் தொடர்புடையதில்லை.  இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும்  மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும். 

கவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக