ஞாயிறு, 12 மே, 2019

ஆரிய மரபின் பிள்ளையார் சுழி வேறு; தமிழ் மரபின் பிள்ளையார் சுழி வேறு : மகாராசன்





பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.
மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே
என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே
என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.
வடக்கே தெற்கே ஒட்டி
வலதுபுறம் மூரிவச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணிப் பிள்ளையாருக்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!
என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக